தனிமையின் வெறுமை
அன்றைய காலைப்பொழுதில் யாழினி வீட்டுத்தோட்டத்தில் மாதுளைமரத்தின் மீதிருந்த தேன்சிட்டுக்கள் கீச்சிட்டு கொண்டிருந்தன அதை தன் அடுக்களையில் காபி போட்டவாறு பார்த்து ரசித்துக கொண்டிருந்தவள் தன் மொபைல் ஃபோனில் அந்த எண்ணை ஒருமுறை டயல் செய்தாள்.
ஏனோ அந்த நபரிடமிருந்து பதிலில்லை,இதோ மேலும் இரண்டு மூன்று முறை முயற்சி செய்தபொழுதிலும் பயனில்லை ,தன்னையே நெந்துகொண்டவளாய் அந்த சுவற்றை வெறித்து நோக்கியவள் காய்ந்த பால் பொங்கிவழிவதை கண்டுகொள்ள மறந்தாள்.
சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்தவளாய் அடுப்பை அணைத்துவிட்டு அந்த இடத்தை சுத்தம்செய்தாள்.
அதற்குள் நிலவன் தன் அறையிலிருந்து எழுந்துவந்ததைக்கண்டதும் சூடான ஃபில்டர் காபியை தன் கணவரிடம் நீட்டினாள்.
காபியை அருந்தியவர் அதில் சர்க்கரை குறைவாயிருப்பதிலேயே தன் மனைவியின் கவலையை கண்டுகொண்டார்.
"என்னம்மா என்ன ஆச்சு ஏன் இப்படி முகவாட்டமாகவே இரண்டு மூன்று நாளாய் இருக்கிறாய் உடல்நிலை சரியில்லையா?"என வினயவாறே மனைவியின் தோள்களில் தட்டிக்கொடுத்து ஆறுதலாய் கேட்டார் நிலவன்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை நீங்க ஆபிஸ்க்கு கிளம்புங்க நான் டிபன்,லஞ்ச் தயார் செய்கிறேன்"என்ற யாழினி அவர் பேச்சிற்கு பதில் கூறாது அடுத்தகட்ட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தாள்.
காலை உணவுக்கு இட்லியுடன் கொத்தமல்லி சட்னியும் மதியத்திற்கு சாதம்,மிளகு ரசம்,பருப்பு,புடலங்காய்கூட்டு,உருளை பொரியல் எஅறு அனைத்தையும் தயார் செய்தவள் கணவருக்கு காலை உணவை பரிமாறிவிட்டு மதிய உணவை லஞ்ச் பாக்ஸில் பேக் செய்துவைத்து வழியனுப்பிவைத்தாள்.
தனிமை அமைதியை அவளுக்கு அன்று தரவில்லை வறுமையை தந்தது.
இதோ இன்று மூன்றாவது முறையாக அந்த எண்ணிற்கு டயல் செய்தாள் பதிலில்லை.சரியென்று நினைத்தவள் சிறியதொரு குறுஞ்செய்தியை அனுப்பிப்பார்த்தாள் அதற்கும் பதிலில்லை.மனதெல்லாம் கனத்துக்கிடந்தது எதையோ பிரிந்த வலி அவளுக்குள்ளே தென்பட்டது.
'என்னவாயிற்று?ஏன் எடுக்கவில்லை?உடல்நிலை சரியில்லையா? ஏதேனும் பிரச்சனையா?'இப்படி யாழினியின் மனம் பலவாறாக கோலம் போட்டது.
இப்படியே யோசித்தவள் தன் கைகளில் மொபைலோடு அமர்ந்திருந்தாள் அந்த குரலை ஒருநொடியேனும் கேட்கமாட்டோமா என்ற ஆவலுடன்.
அந்த நொடி மனம்கனத்து கண்ணீர் கரைபுரண்டது.அந்த கண்ணீரின் காரணம் படபடப்பான சூழல் மற்றும் பிரிவின் வலியும்தான்.நேராக அந்த வெங்கடேசப்பெருமாளின் உருவப்படத்தின் அருகேயமர்ந்து அழுதுவிட்டாள்.
மாலை வேளையில் தன் அலுவலகப்பணி முடித்து வந்த நிலவன் யாழினிக்கு பிடித்த ரசகுல்லா வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் நீட்டினார்.
ரசகுல்லா என்றால் நிலவனுக்கு கொடுக்க மறுத்து பிரியத்துடன் அத்தனையும் உண்பவள் அதனை ஏற்க மறுத்தாள்.
"எனக்கு தலைவலியா இருக்குது நீங்களே சாப்பிடுங்கள்" என்றாள்.
நிலவனால் ஒருநிமிடம் தன் கண்ணையே நம்ப இயலவில்லை.
"என்மீது எதுவும் கோபமா?"என்று தன் அன்புமனைவியிடம் வினவினார் நிலவன்.
"இல்லைங்க அதெல்லாம் ஒன்றுமில்லை சாப்பாடு டேபிளில் எடுத்து வைத்திருக்கின்றேன் சாப்பிடுங்கள் நான் சற்று ஓய்வெடுக்கின்றேன்"என்றவள் சட்டென்று தன் அறைக்குள் சென்று
கட்டிலில் படுத்தாள்.அவள் கண்களில் ஈரம் கசிந்தது.
குழப்பமான மனநிலையோடு இரவு உணவை உண்ட நிலவன் பலவாறு யோசித்தவண்ணம் அவளருகில் சென்று தன்னவளின் கலக்கம் கண்டு தலைகோதி அவரும் உறங்கினார்.
இன்று நிலவன்_யாழினியின் திருமணநாள் .ஒவ்வொரு திருமணநாளிலும் மகிழ்ச்சியின் உச்சத தில் இருப்பவள் முகத்தில் சிறிய கவலை தொற்றியிருந்தது அதனை மறைத்து நிலவனுக்கு பிடித்தவற்றை சமைத்து முடித்தாள்.நிலவனோடு கோவிலுக்கு சென்று வந்தாள்.அவர் அலுவலகத்திற்கு சென்ற பின்னர் மற்றொரு எண்ணை டயல் செய்தாள்.
"ஆங்ங்...யாழினி சொல்லுங்க எப்படியிருக்கீங்க?"என நலம் விசாரித்தார் கபிலன்.
"நல்லாயிருக்கிறேன் கயல் உங்களிடம் பேசினாளா?"என வினவினாள் யாழினி.
"இல்லைப்பா அவள் பேசி ஒருவாரத்திற்கு மேல ஆகிவிட்டது"என்றார் கபிலன்.
சிறிது நேரம் கபிலனிடம் பேசியவள் கயலின் மற்ற நட்புக்களுக்கும் அழைப்பு விடுத்து விசாரிக்கலானாள்.அவள் மனம் ஏங்கியது யாரிடமேனும் பேசியிருக்கமாட்டாளா? என்றவண்ணம்.
"ஆழமான நட்பில் சிறுவிலகலும்
மனதை ரணமாக்கும் வலியைத்தந்திடும்
பிரியாத வரம்வேண்டும் உற்ற தோழியாய் நீ வேண்டும்
கண்கள் கலங்கியே அதன் இமைதேடிடுதே காலம் சென்றாலும் மாறாத நட்பதிகாரம் நோக்கியே!"
இந்த வரிகளை தன் நாட்குறிப்பில் கண்ணீரோடு எழுதிவைத்தாள் யாழினி.
கயல்விழி,யாழினி இருவரும் இணைபிரியா தோழிகள்.இருவரையும் இணைத்ததென்னவோ எழுத்துதான்.கயல்,யாழினி இருவருக்கும் கதை எழுதுவது மிகவும் பிடிக்கும் அப்படித்தான் ஒருவரையொருவர் பாராட்டி ஆரம்பித்த நட்பு எழுத்தோடு நின்றிடாமல் உற்றதோழமையில் முடிந்தது.
பலர் இருவரையும் கல்லூரித்தோழிகளா?பள்ளித்தோழிகளா? என்று கேட்ட காலங்களும் உண்டு.இருவருக்குள்ளும் ஒளிவோ மறைவோ கிடையாது.
சின்ன சின்ன பாராட்டில் ஆரம்பித்த நட்பு பல தளங்களில் பரிசுகளை குவிக்க ஒற்றுமையாய் வலம்வந்தது.
அந்த நட்பின் வலிமைதான் யாழினியின் பெயருக்கும் புகழுக்கும் காரணமாய் திகழ்ந்தது.
யாழினிக்கும் நிலவனுக்கு திருமணமாகி மூன்றுவருடமாகியும் குழந்தைபேறில்லை அந்த கவலையை போக்கிக்கொள்ள தன் கற்பனைசிறகினில் வாழத்தொடங்கினாள்.அதற்காக அவர் வள் எடுத்துக்கொண்ட ஆயுதம் எழுத்து.
கயலின் நட்பு கிடைத்ததிலிருந்து யாழினியின் மனதில் தனக்கு குழந்தையில்லை என்ற குறையிலிருந்து சற்று விலகி தன்னை முழுமையாய் நம்பிடும் பழக்கத்தை உருவாக்கினாள்.
தனக்காக தன்
தோழியிருக்கின்றாள் என்ற திடமான நம்பிக்கை வைத்திருந்தாள்.
தினந்தோறும் சிறிய குறுஞ்செய்தியேனும் கயலிடமிருந்து வந்துவிடும் ஆனால் இந்த ஒருவாரமாக அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
தன்னுடன் பேசாவிட்டாலும் மற்ற நட்புக்களுக்கு அழைப்பு விடுத்தாளா என்ற எதிர்பார்ப்பில்தான் யாழினி மற்றவர்களுக்கும் அழைப்பு விடுத்தாள் அங்கும் சரியான பதிலில்லை.
அவளுடைய துக்கமான நேரங்களில் தோள்கொடுத்த தோழி அவளுக்கு மகிழ்ச்சிகிட்டிய தருணத்தில் அருகிலில்லாது தவித்தாள்.
அவளுடைய மகிழ்ச்சியை கணவனிடமும் கூறவில்லை.அவள் கண்கள் தேடியது தோழியைதான்.
........ஒரு வாத்திற்கு முன்னர் மொபைலில் அழைப்பு வந்திட அதனை எடுத்தவளுக்கு இன்பபேரதிர்ச்சி காத்திருந்தது.
"ஹலோ யாழினிமேடம் இருக்காங்களா?"என்றார் மறுமுனையில் பேசியவர்.
"நான் யாழினிதான் பேசறேன் சொல்லுங்க சார்"என்றாள் யாழினி.
"மின்மினி இதழ் போட்டிக்கு நீங்கள் எழுதிய திறம்படபேசிடு கதை முதல்இடத்தை பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள்"என்று அவர்கூறிட யாழினி முகத்தில் அத்தனை பிரகாசம்.
நேராக தன் தோழி எண்ணிற்கு டயல் செய்தாள் பதிலில்லை இப்படியே ஒரு வாரமும் சென்றது.
முதல்முறையாக யாழினி,கயல் இணையத்தில் எழுதிய எழுத்தை மெருகேற்ற வார இதழ் ஒன்றில் போட்டிக்கு பதிந்திருந்தனர் இருவரும் தங்கள் கதையை எழுதியிருந்தனர் அதற்கான முடிவுதான் முதல்பரிசு.
பரிசு கிடைத்தாலும் தோழியிடம் பகிர்ந்திட இயலாமல் கையற்றவளாய் தவித்தாள் யாழினி.
அவளின் வளர்ச்சிக்கு தோழிதான் உற்றதுணை.அவளுக்கு தூண்டுகோலாய் நின்றிருந்தாள்.
இப்படியே ஒருவாரமாக தன் தோழியைத்தேடியவள் அன்று மாலையில் அலுவலகம் முடித்து வந்த கணவரிடம் கண்ணீர்விட்டு அழத்தொடங்கினாள்.
'குழந்தை இல்லை என்று ஊரார் பேசியபோது திடமாக நின்றவள் இன்று தன் தோழி பேசவில்லையென்று கண்ணீர் வடிக்கின்றாளே இதுதான் ஆழமான நட்பா 'என வியந்தார் நிலவன்.
"என்னங்க அவளுக்கு எதுவும் பிரச்சினை இருக்காதே...நல்லாதானே இருப பா?"என குழந்தைத்தனமாய் கேட்கும் தன் மனைவியை விழியிலாது பார்த்தான் நிலவன்.
"ஒரு பிரச்சனையும் இருக்காது நீ
பயப்படாம இரு யாழுமா...கல்யாண நாள் அதுவுமா அழலாமா?"என்று மனைவியை அமைதிபடுத்தினான் நிலவன்.
"ஒரு சந்தோஷமான விஷயமும் இருக்குது நான் அந்த வாரிதழில் முதல் பரிசாக பநத்தாயிரம் ரொக்கப்பணத்தை வென்றிருக்கின்றேன்"என்றாள் யாழினி.
"ஹே சூப்பர் சூப்பர்டா கங்கிராட்ஸ்"என்று தன் மனைவியை ஊக்கப்படுத்தினான் நிலவன்.
மனதில் பாரம் பாதியாய் குறைந்ததாய் எண்ணிய யாழினி.கயலின் கல்லூரித்தோழன் விக்னேஷிற்கு கால் செய்து கேட்டவாறு அவளையறியாது கண்ணீர் வடித்தாள்.
"ஐயோ அழாதீங்கப்பா அவள் ஏதாவது ஆபிஸ் ஸ்டஃப்ல இருந்திருப்பாள்...
கண்டிப்பா கூப்பிடுவாள்"என்று மனதைரியம் தந்தான் விக்னேஷ்.
ஒருவாரமாக தனிமையில் தோழியின் நினைவுகளை சுமந்தவள் அவளின்றி தவித்தாள்.அவளின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள தோழியில்லை என்ற கவலை ஒருபுறம்.அவளுக்கு ஏதேனும் சிக்கலான சூழலா என்று மனம் தவித்தது மறுபுறம்.
அன்றிரவு வான்நிலவு தன் பௌர்ணமி கதிர்களை அழகாய் பால்போன்று மொட்டைமாடியில் காட்டியது.அந்த மகிழ்ச்சியில் யாழினியின் மனம் லயிக்கவில்லை.
அன்றிரவு அவள் உடல்நிலையில் ஏதோ மாற்றம் வேறு அப்படியே நிலவை பார்த்தவள் கீழே சரிந்து விழுந்தாள்.
மறுநாள் காலையில் கயலிடமிருந்து கால் வந்தது அதனை நிலவன் எடுத்தான்.
"ஹே மாப்பிள்ளை பார்த்துட்டாங்கடி உனக்குதான் முதலில் சொல்றேன்"என்று தன் தோழியென நினைத்து நிலவனிடம் பேசிய கயலிடம் நடந்தவற்றை கூறினான் நிலவன்.அத்தோடு இரண்டு இனிப்பான செய்தி இருப்பதாய் கூறியவன்.
"இந்தாமா நீயே உன் தோழியிடம் கேட்டு தெரிஞ்சுக்கோ"என யாழினியிடம் மொபைலை நீட்டினான்.
"போடி நீ என்கிட்ட பேசாத...நீ என் ஃபிரெண்டே இல்லை"என திட்டிதீர்த்தவளிடம் அர்ச்சனைகளை அமைதியாக வாங்கினாள் கயல்விழி.
யாழினியின் கண்ணீரில் அவள் நட்பின் ஆழமும் தனிமையின் ஏக்கமும் விளங்கியது.
கடைசியாக இரண்டு நல்ல செய்தியில்லை மூன்று நற்செய்திகள் கிடைத்தன
"ஒன்று யாழினியின் முதற்பரிசு வெற்றி,இரண்டாவது கயலின் திருமணமுடிவு
மூன்றாவது யாழினியின் தாய்மை"
"அடடா கேட்கவே சந்தோஷமா இருக குதுடி யாழினி.இரண்டு நாளில் நான் அங்கே நிச்சயதார்த்த பத்திரிக்கை வைக்க வர்றேன் அப்படியே குட்டி மருமகனை என் மகளுக்கு புக் பண்ணிடறேன்"என்ற கயலின் பேச்சில் கண்ணீர் கலந்த மகிழ்ச்சியில் துள்ளினாள் யாழினி.
"முகநகநட்பது நட்பல்ல
அகநகநட்பதே நட்பு"
அன்பான தோழமை என்றென்றும் வாழ்ந்திடும் காலங்கள் தாண்டி இதுவே ஆழமான நட்பதிகாரம்.