கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-24

Nilaa

Moderator
Staff member
24
காற்றும்
நம்மிடையே வர
அனுமதிக்க மாட்டாய் நீ!
முள்ளொன்று இடையிட
நம்முறவில் துளையிட
அனுமதிப்பாயோ அன்பே?

திவதனன் பேச்சைக் கேட்ட
மதுராவின் இதழ்களில் ஒரு
வருத்தமானப் புன்னகை.

மதுராவின் அந்தப் புன்னகை,
மதிவதனனைப் பலமாகத்
தாக்கியது.

“வேண்டாம் மது.நீ இப்படி
வருத்தப் பட்டா...என்னால
தாங்க முடியாது.எங்களைப்
புரிஞ்சுக்கோ மது.எங்கனால
உன்னை இழக்க முடியாது”

“நீங்க தான் என்னைப்
புரிஞ்சுக்கணும் மதி.
கொஞ்சம் கூட யோசிக்காம,
நீயும் அம்மா மாதிரியே
பேசறே.எனக்கு என் மேல
அக்கறை இல்லாம
இருக்குமா?என் உயிர் மேல
ஆசை இல்லாம இருக்குமா?”

“மெதுவா மெதுவா.யாராவது
வந்துடப் போறாங்க”மதிவதனன்
எச்சரித்ததும்,தன் குரலைத்
தணித்தாள் மதுரா.

“நீ என்னைப் புரிஞ்சுக்குவே...
என்னை சப்போர்ட் பண்ணுவே...
எனக்காக அம்மா கிட்டப்
பேசுவேன்னு நினைச்சேன் மதி.
ம்ஹூம்”

“என்ன குட்டி,நீ ஆபத்தைத்
தேடிப் போறேன்னு சொல்றே.
அதை எப்படி என்னால
ஏத்துக்க முடியும்?”

“எந்த வேலையில ஆபத்தில்லை
மதி?வேண்டாம் மதி.நான்
அம்மா கிட்டப் பேசியே
நொந்து போயிட்டேன்.நாம
இதைப் பத்திப் பேச
வேண்டாம்.நான்
உன்கிட்டக் கோபமா பேச
விரும்பலை”

மதிவதனனுடன் விவாதத்தை
விரும்பாமல்,எழுந்து சென்று
ஜன்னலோரம் நின்றாள் மதுரா.

மதுவின் வேதனையைப்
புரிந்து கொள்ளாமல் பேசி
விட்டேனே.நான் இவ்வாறு
உடனே மறுப்பு தெரிவித்திருக்கக்
கூடாது.

மது தன் வேலையை மிகவும்
நேசிப்பதாகத் தெரிகிறது.தன்
பணியைத் தொடர வேண்டுமென்று
ஆசைப் படுகிறாள்.

ஆபத்துகள் சூழ்ந்த பாதையை,
என் மது தேர்ந்தெடுத்து விட்டாள்.
ஆனால்,என்னால் எப்படி
ஆபத்தென்று தெரிந்தே
அவளை அப்பாதையில்
செல்ல அனுமதிக்க முடியும்?

அதே சமயம்,மது வேதனையில்
வாடுவதையும் என்னால் பார்க்க
முடியாது.இது போன்ற
வருத்தத்தை மது முகத்தில்
இன்று வரை நான் கண்டதில்லை.

மதுராவை சமாதானம் செய்ய,
எழுந்து அவளருகில் சென்றான்
மதிவதனன்.

“எனக்குக் கொஞ்சம் டைம்
கொடு மது.நான் யோசிச்சு
சொல்றேன்”

முகம் மலர மதிவதனனிடம்
திரும்பிய மதுரா,“இது
நியாயமான பேச்சு.தேங்க்ஸ்
மதி”என்று புன்னகைத்தாள்.

“உனக்குக் கால் வலிக்கும் மதி.
உட்கார்ந்து பேசலாம்”

அருகருகே அமர்ந்து கொண்டு
பேச்சைத் தொடர்ந்தனர் இருவரும்.

“ரிப்போர்ட்டர் எப்ப இந்த
டிடெக்டிவ் அவதாரம்
எடுத்தாங்கன்னு
தெரிஞ்சுக்கலாமா மது”

“கண்டிப்பா மதி.நானும்,
வசந்த்தும் பத்திரிக்கையில
வேலை பார்த்துட்டு
இருந்தப்ப,பேப்பர்ல வந்த
விளம்பரம் பார்த்து,ஒரு
ஆசையில இன்டர்வியூவுக்குப்
போனோம்.செலக்ட் ஆவோம்னு
நினைக்கவே இல்லை மதி.
அப்ப இருந்து நாலு வருஷமா
நாங்க சன்லைட் டிடெக்டிவ்
ஏஜென்சிக்காகத் தான் வேலைப்
பார்த்துட்டு இருக்கோம் மதி”

உனக்கிருக்கும் திறமைக்கு
நீ தேர்வாகவில்லை என்றால்
தான் ஆச்சர்யம் மது.என்
மதுவிற்கு இருக்கும் புத்திக்
கூர்மைக்கும்,தைரியத்திற்கும்,
இது அவளுக்கான
பொருத்தமான வேலை தான்.

“வசந்த்தும்,நானும் தனி
டீம்னே சொல்லலாம் மதி.
தினுவும் அப்பப்ப எங்க கூட
சேர்ந்துக்குவான்.சின்னப்
பிரச்சனைகள்ல இருந்து,
கொலை மாதிரி பயங்கரக்
குற்றங்களும் எங்ககிட்ட
வந்திருக்கு.ஒவ்வொரு
நாளும் புதுப் புது
சவால்களை சந்திக்க
வேண்டியதா இருக்கும்.
பல பேர்ல,பல வேஷங்கள்ல
போய் உண்மையை
வெளியில கொண்டு
வந்திருக்கோம்.எங்க
பாஸ் ரிட்டயர்டு போலீஸ்
ஆபிசர் மதி. செல்வாக்கானவர்.
நேர்மையானவர்.போலீஸ்
எங்களுக்கு உதவிப்
பண்றதுக்கு,எங்க பாஸ்
தான் காரணம் மதி.
அதே மாதிரி,வசந்த்தோட
ரிலேடிவ்ஸ் சில பேரும்
போலீஸ் டிபார்ட்மென்ட்டில
இருக்காங்க.அவங்களும்
எங்களுக்கு உதவிப் பண்ணுவாங்க”

அன்று நான் கண்ட அந்தக்
காவல்துறை அதிகாரி,மது,
வசந்த்திற்கு உதவியவரா?

ரெஜீஸ்ஸிடம் மேற் கொண்ட
விசாரணையைப் பற்றி எதாவது
சொல்ல வந்திருக்கலாம்.நான்
என்னமாக பயந்து...

“எதுக்கு சிரிக்கறே மதி”

மதிவதனன் காரணத்தைச்
சொல்லவும்,“நாங்க எவ்வளவு
பேரை பாலோ பண்ணி
இருக்கோம்.நீ எங்களை
பாலோ பண்றயா”என்று
சிரித்தாள் மதுரா.

“அந்த போலீஸ் ஆபிசர்,
ரெஜீஸ்ஸை அரெஸ்ட்
பண்ணினவர் மதி.
ரெஜீஸ்ஸைப் பத்தி
பேச வந்திருந்தார்”

“அவர் தான் வசந்த்தை
வர சொன்னாரா”

“ஆமாம் மதி.வீட்டுக்குள்ள
வரும் போதே,வசந்த் கிட்டப்
பேசிட்டே தான் வந்தார்.
ரெஜீஸ் என்ன சொன்னான்னு
தெரிஞ்சுக்கிறதுக்காக
வசந்த் விழுந்தடிச்சு ஓடி
வந்திருப்பான்னு நினைக்கிறேன்”

“ம்.ரெஜீஸ்ஸோட பேக்கைப்
பார்க்கணும்னு கூட விடாம
சொல்லிட்டு இருந்தார் மது.
வசந்த் கூலான கேரக்டர்னு நான்
நினைச்சுட்டு இருந்தேன் மது”

“ரெஜீஸ் கேஸ்ல தான்
இப்படி டென்சனா,
பொறுமை இல்லாம
இருக்கான் மதி.மத்தபடி
கூலா தான் இருப்பான்.
ரெஜீஸ் வெளியில
வந்துட்டா,பட்டக்
கஷ்டமெல்லாம் வீணாப்
போயிடும்.பேக்கில
ட்ரக்ஸ் இருந்தா,அது ஒரு
எக்ஸ்ட்ரா வேலைன்னு
நினைச்சுப் புலம்பி
இருப்பான் மதி”

“ம்”

“ரெஜீஸ் தந்திரசாலியா
இருக்கான்,வாயே திறக்க
மாட்டீங்கறான்.அவன்
மொபைல் இருந்திருந்தா,
எங்களுக்கு உதவியா
இருந்திருக்கும்னு
சொல்லிட்டு இருந்தார்.
மர்டர்ஆயிடுச்சுன்னு
போன் வந்துச்சு,உடனே
கிளம்பிப் போயிட்டார் மதி”

“ரெஜீஸ் மொபைல்ல இருந்த
போட்டோஸை டெலிட்
பண்ணிட்டு,கொடுத்திருக்கலாமே
மது”

“அவன் மொபைல்ல இருந்த
போட்டோஸை நான் டெலிட்
பண்ணிட்டேன் மதி.ஆனா
அந்த போட்டோஸை ரொம்ப
சுலபமா திரும்ப எடுக்க
முடியுமே.அதான் நான்
அவன் மொபைல்லை
ஒரேயடியா அழிச்சுட்டேன்”

அழித்தவற்றைத் திரும்பக்
கொண்டு வரத்தான்,இன்று
ஏராளமான வழிகள்
இருக்கிறதே.இதை மறந்து
விட்டேனே.

“இந்த மொபைல் வரமா,
சாபமான்னே புரியலை மது”

“அது நாம உபயோகிக்கிறதுல
தான் இருக்கு மதி”

“உண்மை தான் மது”

தன் அழகிய விழிகளில்
காதல் மின்ன,மதிவதனனின்
காயம் பட்டத் தோளை வருடினாள்
மதுரா.

“வசந்த் பின்னாடி வந்து,
என்னைத் தேடிப் போலீஸ்
வந்துடுச்சுன்னு நினைச்சு,
நான் மாட்டிக்குவேன்னு
பயந்து கல்யாணம் பண்ணிட்டு,
வெளிநாட்டுக்குப்
பறந்துடலாம்னு முடிவு
பண்ணி இருக்கு என் செல்லம்”

“ம்.போலீஸ் எப்படி உன்
வீட்டுக்கு வந்துச்சு,
எப்படி சந்தேகம் வந்திருக்கும்னு
யோசிச்சு யோசிச்சு...நான்
ரொம்பப் பயந்துட்டேன் மது.
உனக்கு எதிரா எதாவது
ஆதாரம் கிடைச்சுட்டா
என்ன பண்றது...அந்த
வீட்டுக்குப் போய் பார்க்கலாமா...
எதாவது இருந்தா எடுத்துட்டு
வந்துடலாம்னு நினைச்சேன்
மது.உன்னோட ஸ்லிப்பர்,
போர்டிகோவில பார்த்தேன்.
அதை விட்டுட்டு வந்துட்டியோன்னு
தோணுச்சு.யோசிச்சுப் பார்த்ததுல
கார்ல உன் கால்ல ஸ்லிப்பரைப்
பார்த்தது ஞாபகம் வந்துச்சு.
அப்புறம் தான் அமைதியானேன்”

“பிரென்ச் வின்டோவைத்
திறந்து வைச்சப்பவே,
நான் என்னோட ஸ்லிப்பரைப்
போட்டுட்டேன் மதி”

“ம்”

“கொஞ்ச நேரம் பேசாம
இரு மதி”சொல்லிய மதுரா,
அவன் மார்பில் முகம்
புதைத்துக் கொண்டாள்.

என்னை மன்னித்து விடு
மதி.உன்னை எப்படியெல்லாம்
துடிக்கச் செய்திருக்கிறேன்.

பொங்கி வந்த கண்ணீரை
முயன்று உள்ளிழுத்தாள்
மதுரா.கூடாது.நான் அழக்
கூடாது.என் கண்ணீரைக்
காட்டி மேலும் உன்னை
நோகடிக்க மாட்டேன்.என்
கண்ணீரை மதியால் தாங்கிக்
கொள்ளவே முடியாது.நான்
என்றுமே என் கண்ணீரை
உனக்குக் காட்ட மாட்டேன் மதி.

“மது குட்டி,இங்க பாரு”

“ம்ஹூம்.சொல்லு,
இப்படியே கேட்கறேன்”

மதுராவின் தலையை
வருடியபடியே,சில நிமிடங்கள்
அமைதியாக அமர்ந்திருந்தான்
மதிவதனன்.

“முதல்ல போலீஸ் எதுக்கு
வந்தாங்கன்னு தெரிஞ்சுக்குவோம்னு...
உன்கிட்ட கேட்லாம்னு போன்
பண்ணப்ப,நீ போனை எடுக்கலை.
வசந்த் கிட்டக் கேட்க மனசு
வரலை.நீ எப்படியிருக்கேன்னு
மட்டும் கேட்டேன்.
ஐஸ்கிரீம் சாப்பிட்டு
நல்லாயிருக்கான்னு சொன்னான்.
எப்படி இப்படி பயமே இல்லாம
இருக்கீங்கன்னு ஆச்சர்யப்பட்டு...
யோசிச்சப்ப...பவிக்காக நாடகம்
ஆடறீங்கன்னு நினைச்சேன்.
நான் எதையுமே சரியா
யோசிக்கலை மது.நான்
ஒரு சரியான மு...”

“உஷ்!!”நிமிர்ந்து அவன்
வாய் பொத்திய மதுரா
விழிகள் கண்டிப்பைக் காட்டியது.

“நீ இது மாதிரி பேசினா...
அப்புறம் நான் உன்கிட்டப்
பேசவே மாட்டேன் மதி.
ஞாபகம் வைச்சுக்கோ”

சில விநாடிகள் கழித்துத்
தன் கரத்தை விலக்கிய
மதுரா,தன் வருத்தத்தைக்
காட்டாது அவன் மார்பில்
முகம் புதைத்துக் கொண்டாள்.

என் நலன் அறியவே அன்று
அத்தனை முறை
அழைத்திருக்கிறான்.

“மயூ நம்ம கல்யாணத்தைப்
பத்திப் பேசினதும்,
உடனே கல்யாணத்தை முடிச்சு
உன் பக்கத்திலயே இருந்து...
உனக்கு எந்தப் பிரச்சனையும்
வராம பார்த்துக்கணும்னு மட்டும்
தான் நினைச்சேன் மது.
ஆனா...உன் வீட்டில அந்த
போலீஸ் ஆபிசரைப் பார்த்ததும்,
இங்க இருக்கிறது நல்லதில்லை,
உடனே வெளிநாட்டுக்குப்
போயிடணும்னு முடிவு
பண்ணேன்.என் முடிவுக்கு
உன்னை சம்மதிக்க
வைக்கிறதுக்காக உன்கிட்ட
சத்தியமும் வாங்கினேன்”

“நான்...நான் உன்னை
ரொம்பக் கஷ்டப் படுத்திட்டேன்
இல்லே மதி?நீ என்னை நினைச்சு
கவலைப்பட்டே இருந்திருப்பே
இல்லே?சாரி மதி.ரெஜீஸ் பத்தி
உன்கிட்டப் பேசிடணும்னு
நினைச்சேன்.ஆனா...நீ இப்படி
எல்லாம் யோசிச்சு
வேதனைப் பட்டுட்டு
இருப்பேன்னு நான்
நினைக்கலை மதி.ஐயம்
சாரி மதி”

“நான் வீட்டுக்கு வந்ததுமே
ரெஜீஸ்ஸைப் பத்தி
சொல்லாம...மதி ரெஸ்ட்
எடுக்கட்டும்,ரெண்டு நாள்
கழிச்சு பேசிக்கலாம்னு நினைச்சு...
உன்னை ரொம்ப வேதனைப்
படுத்திட்டேன்.
நீ...நான் கஷ்டப் படக்
கூடாதுன்னு நினைச்சிருக்கே.
ஆனா நான்...நான் உனக்கு
எல்லா வலியையும்
கொடுத்திருக்கேன்.
ரெஜீஸ் கிட்டப் பேசி...
அவ்வளவு ரத்தம் சிந்த
வைச்சு...மூணு நாளா
நிம்மதி இல்லாம...
உன்னை நான் ரொம்பவே
நோகடிச்சிருக்கேன் மதி.
ஐயம் சாரி மதீ...”

மதுராவிடம் கேவல் ஒன்று
வெடித்துச் சிதற,அதை
மதிவதனன் கொஞ்சமும்
எதிர்பார்க்கவில்லை!

“இல்லைடா...மது குட்டி...
நானா ஏதேதோ கற்பனை
பண்ணிக்கிட்டதுக்கு நீ
எப்படிடா பொறுப்பாவே?சாரி
சொல்ல வேண்டிய அவசியமே
இல்லை மது.நான் உன்கிட்டப்
பேசி இருக்கணும்.ஆனா,பேச
நமக்கு சந்தர்ப்பமே கிடைக்கலை.
தப்பெல்லாம் என் மேல தான்
மதூ...இங்க பாருடா”

மதுராவின் முகத்தை நிமிர்த்த
முடியாமல் தன் மார்பில்
புதைந்திருந்தவளை
அப்படியே அணைத்துக்
கொண்டான் மதிவதனன்.

“நான் உன்கிட்ட முதல்லயே
உண்மையை சொல்லி
இருக்கணும்.என்னால தான்
எல்லா குழப்பமும்.உனக்கு
இவ்வளவு வேதனையும்”

“இல்லைடா.அப்படி எல்லாம்
இல்லை”ஆறுதலாய் மதுரா
முதுகை வருடிய மதிவதனன்
நெஞ்சத்தில் வேதனையின்
கனம் கூடியது.

என் மரணத்திலும் நீ கண்ணீர்
சிந்தக் கூடாது என்று
நினைப்பவன் நான்.இன்று
என் முட்டாள்தனத்தால்
கண்ணீர் சிந்தி அறியாத
உன்னைக் கண்ணீர் விடச்
செய்து விட்டேன்.

இன்று மட்டுமா?கடந்து
மூன்று நாட்களும் என்னை
நோகடித்து விட்டதாக,காயப்
படுத்தி விட்டதாக நினைத்து
எத்தனை கண்ணீர் வடித்தாயோ?
உன் மனதின் வேதனையை
யோசிக்காமல் என் பயத்திலேயே
நான் மூழ்கி இருந்திருக்கிறேன்.
என்னை மன்னித்து விடு மது.

“ப்ளீஸ் மதூ...உன் மதியை
மன்னிச்சுடு.உன் கண்ணீரை
விட ஒரு கொடிய தண்டனை...
உன் மதிக்கு வேற எதுவும்
இருக்காது.போதும்.
இதுக்கு மேல அழுகாதே.
தப்பெல்லாம் என் மேல
தான்.நீ உன்னைக் குற்றம்
சொல்லிக்காதே”

“சாரி மதி.நான் அழக்
கூடாதுன்னு தான் நினைச்சேன்...
இனி அழுக மாட்டேன்.ஆனா
உன் மேல தப்புன்னு
சொல்லாதே.நான் உண்மையைச்
சொல்லாதது தான் எல்லா
குழப்பத்துக்கும் காரணம்.
உண்மையை ஒத்துக்கோ மதி”

“சரிசரி.நீ உண்மையைச்
சொல்லலை,நானும் பார்த்ததை
சரியா புரிஞ்சுக்கலை.ரெண்டு
பேர் மேலயும் தப்பிருக்கு.
ரெண்டு பேருக்குமே வேதனை
தான்.ரெண்டு பேருமே சாரி
சொல்லியாச்சு.இதுக்கு மேல
இதைப் பத்தி பேச
வேண்டாம்.சரியா?”

“ம்”

“என்னைப் பாரு குட்டி”

மதுரா நிமிர்ந்து அவன்
முகம் பார்க்க,அவள் இமை
முடிகளில் மின்னிய
நீர்த்துளிகளைக் கண்ணுற்ற
மதிவதனன்,அவள்
முகத்தைக் கைகளில்
ஏந்த,மதுராவின்
இமைகள் மூடியது.

தன் காதல் தேவதையின்
இமைகளில்,தன் இதழ்களை
மெல்ல ஒற்றி எடுத்தான்
மதிவதனன்.கண்ணீர் இறங்கி
இருந்த கன்னங்களையும்
அவன் இதழ்கள் தொட்டு,
காதலின் கண்ணீர்
சுவையை அறிந்தது.



கண்ணீரும் தித்திக்கும்
மாய உலகமிது!
காலம் பாராது
உருகிக் கரைந்திடும்
விந்தை உணர்விது!
விழிகள் காணும்
காதலென்ற கனவிது!



தித்திக்கும்❤️❤️❤️
 
Top