கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 1

Latha S

Administrator
Staff member
பொம்மலாட்டம்

ஸ்ரீலக்ஷ்மி





அத்தியாயம் 1



'காஞ்சனா திருமண மண்டபம்'... அருண்குமார் வெட்ஸ் வேதவல்லி'..



விதவிதமான பூக்களாலும், சீரியல் பல்புகளின் அலங்காரத்தினாலும் அந்தக் கல்யாண மண்டபம் ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்தது.



பட்டுப்புடவைகளின் பளபளப்பும், பட்டு வேட்டிகளின் சரசரப்பும் இணைந்து களைகட்டிக் கொண்டிருந்தது..



வாசலில் நின்றிருந்த இளம் வயது கன்னிகைகள், பட்டுப் பாவாடை தாவணி தரையில் புரள, கழுத்து, கை காதணிகள் உடைக்குப் பொருத்தமாக அலங்கரிக்க, வாசனைப் பூச்சரங்கள் சுற்றப்பட்ட குஞ்சலமும், தலை அலங்கார சாமான்களுடன் நீண்ட ஜடை முடி முன்னால் சதிராட, என்னவோ அவர்களே வானத்துத் தேவதைகள் பூலோகத்தில் இறங்கி வந்தவர்களோ என்ற மிதப்புடன், அந்தத் திருமணத்தில் பங்குபெற வந்தவர்கள் மேல் பன்னீர் தெளித்து ஆராவாரம் செய்து கொண்டிருந்தனர்.



"ஏய்.. கயலு.. என்னடி பராக்கு பார்க்கறே?.. அந்த அம்மா சேலைக்குப் பொருத்தமா ஆரஞ்சு ரோஜாவை எடுத்துக் கொடுடி.. அப்புறம் உன் மாமனை சைட் அடிப்பியாம்.." என்று காதருகில் கிசுகிசுத்த மல்லியை முறைத்தபடி ரோஜாவை நீட்டினாள் கயல்விழி.



நக்கலாகச் சிரித்தபடி சென்ற பெரிசுகள் பார்த்த பார்வையில் மற்ற தோழி பெண்கள் கொல்லெனச் சிரிக்க.. அதில் அந்தத் திருமண விழா மண்டபம் இன்னும் கலகலக்க..



இதெல்லாம் போதாதற்கு..



'மணமகளே மணமகளே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா'



எங்கிருந்தோ வாசல் பக்கத்தில் வைத்திருந்த ஒலிப் பெருக்கி வேறு நானும் இங்கே இருக்கிறேன், என்று தன்னுடைய பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தது.



"கயலக்கா.. உன்னை வேதாக்கா உள்ளார கூப்பிடுது.. சடுதியில் வருவியாம்.."



அன்று வரை அரை நிஜார் இடுப்பில் நிற்க, அரணாக்கயிறை சுற்றிக் கொண்டு சைக்கிள் டயரை விரட்டும் அந்தப் பொடியன் இன்றோ.. முழு

நிஜாரும், பொருத்தமான பளபளக்கும் சட்டையும் அணிந்து, பெரிய மனிதத் தோரணையில் சுற்றிக் கொண்டிருந்தான்.



இந்த மாற்றம் கூட அவன் அக்கா வேதவல்லியின் தயவால்..



வந்த வேலை முடிந்தது போல அக்கா சொன்ன செய்தியை ஒலிபரப்பி விட்டு, என்னவோ அந்தத் திருமணமே அவனைச் சார்திருப்பது போலப் பரபரப்பாய் ஓடியவன், எதிரே நுழைந்து கொண்டிருந்தவனைப் பார்த்து, சட்டெனப் பம்மி பதுங்கினான்.



பின்னே எதிரில் வருபவன் சாதாரணப் பட்டவன் இல்லையே?..



அந்த ஊரே கண்டு பயப்படும் சண்டியன் அல்லவா?.. அவன் தோற்றம் ஒன்றே போதும் ஆள் எப்படிப்பட்டவன் என்று எடுத்துச் சொல்ல..



பார்ப்பதற்கு அஜானுபாகுவாய், ஆறடிக்கும் மேல் சற்று கூடிய உயரமும், வாட்ட சாட்டமாய்ப் பரந்து விரிந்த அகண்ட தோள்களும், தலை கொள்ளா சுருண்ட கருமுடியும், அகன்ற நெற்றியும், எப்பொழுதும் எதற்காகவோ சிவந்திருக்கும் பெரிய கூர் விழிகளும், கட்டையான பெரிய மீசையும், அழுத்தமான கருமையான உதடுகளும் அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் கட்டியம் கூறும்.



இதெல்லாம் போதாதென்று சற்று ஆகிருதியான உடல் அமைப்பையும் கொண்டவன்.. அவன் உயரத்திற்கு அந்த உடலமைப்பு கூட பொருத்தம் தான்.. ஆனாலும் அவனை பயில்வான் என்று கிண்டலடிப்பவர்களும், ஊரில் உண்டுதான்.



அப்படிப்பட்டவன் கையைத் தூக்கினாலே நான்கு பேர் பறந்து விழுவர்.. அவன் நீண்ட கால்களினால் பந்தாடப்பட்டவர்கள் ஏராளம்.. தேவையில்லாமல் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான்.. ஆனால் வீணாக அவனை வம்பிழுத்தால் அவர்கள் கதி அதோகதிதான்..



மொத்தத்தில் ஊரே அவனைக் கண்டு மரியாதையாய்க் கை கூப்பும் அந்தஸ்தில் உயர்ந்து நிற்பவன்..



என்ன ஒன்று.. சற்றுக் கருமை நிறமுடையவன்.. சற்று என்ன நல்ல கருத்த நிறமுடையவன் தான்.. அதில் அவனுக்கும் சற்றுக் குறைதான்.



“கண்ணன் என்ன கலரா.. என் கண்ணப்பன் எங்க வீட்டு கண்ணன்தான்.. கலரு என்னடி வேண்டி கிடக்கு ஆம்பளைக்கு.. கேணக் கிறுக்கிங்களா.. அவனை மாதிரி ஒரு ஆம்பளைச் சிங்கத்தைக் காண்பிங்கடி களுதைகளா..”



கருப்பு என்று சீண்டி வம்பிழுக்கும் பெண்களை கண்ணாத்தா கிழவி.., அதான் அவன் அப்பத்தா, அவனுக்காகப் பரிந்து கொண்டு தன் கண்டாங்கி சேலையை வரிந்து கட்டுவது, அங்கே அடிக்கடி வழக்கம் தான்.



கிழவியைச் சீண்டி வம்பிழுக்கும் பெண் சிட்டுக்கள், ஆள் எப்படி இருந்தாலும்.. அந்தக் கருப்பழகன், கண்ணபிரான் தங்களை ஏறெடுத்து பார்க்க மாட்டானா என உள்ளுக்குள் ஏங்குவது வேறு கதை.



"டேய் கண்ணப்பா.. நில்லுடா.. பின்னாலே வாரக் கிழவியைக் கையைப் பிடிச்சி அளச்சிட்டு போவாம எதுக்கு இப்படி விரசா நடக்கற?.. உங்கப்பன் விடியலிலேயே நடையைக் கட்டிட்டு என்னய உன்னோடு வரச் சொல்லிப்புட்டான்.. இப்படிச் சிங்க நடை போட்டா இந்தக் கிழவி எப்படி ஈடு கொடுப்பேன்.. டேய் நில்லுடா பேராண்டி.. நானும் வாறேன்.."



அந்தக் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்டவனோ.. அவன் அப்பத்தாவை லட்சியமே செய்யாமல் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக யாரையும் கண்டு கொள்ளாமல் அந்தக் கல்யாண மண்டபத்திற்குள் விரைந்து கொண்டிருந்தான்.



அவன் மனமோ அத்தனை நாளாகத் தனக்கெனப் படைக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவள், இன்று வேறு ஒருவனுக்கு மாலையிடப் போகும் அவலத்தை எண்ணி பொங்கிக் கொண்டிருந்தது.



விட்டுக் கொடுத்து விட்டுப் போகும் அளவிற்கு அவன் ஒன்றும் கேணக் கிறுக்கன் அல்ல.. அவன் நினைத்திருந்தால் என்றோ அந்த மனதிற்கினியவள், அவன் மனைவியாய் உடைமையாயிருப்பாள்.



என்ன செய்வது.. எத்தனைகெத்தனை வீரபாண்டியனோ அத்தனைகத்தனை அவன் பாசமான குழந்தை மனமும் படைத்தவன்.. தன்னால் பிறர் துன்பப் படுவதைச் சகித்துக் கொள்ளாதவன்.



அன்று அவன் தந்தை சொன்ன ஒற்றைச் சொல்லுக்காக ஒதுங்கிக் கொண்டவன்.. இன்றோ நேரம் நெருங்க நெருங்க தன் அலை பாயும் மனதை தனக்குள் புதைத்துக் கொண்டு இன்று இந்தத் திருமண விழாவை சிறப்பிக்கக் கம்பீரமாக வந்து கொண்டிருந்தான்.



"என்ன கதிரு.. நல்லா இருக்கியா.. உன் வீட்டுக் கிழவி ஏன் பரபரக்கிறது.." யாரோ ஒரு பெரிசு வாய் திறக்க.. கண்டு கொள்ளாமல் முன்னேறியவன் சட்டெனத் தடுமாறி நின்றான்.



ஒரு கணம்.. ஒரு ஷணம்.. யாரோ அவன் மேல் மோதியது போல ஒரு உணர்வு.. ஆகிருதியானவன் மேல் சின்னச் சிற்றெறும்பு ஊர்ந்தது போன்ற பிரமை.. சட்டெனச் சுதாரித்துக் கொண்டு தன் கால்களை அகல ஊன்றி நின்றான்.



தன் மேல் தட்டுடன் விழுந்தவளைத் தடுத்து பிடித்து ஒரே கையால் நிறுத்தி.. அப்பொழுதான் நன்றாக உற்றுப் பார்த்தவனுக்குத் தெரிந்தது.. அது சிற்றெறும்பு அல்ல.. அவள் சில்வண்டு என்று..



பால் வண்ண சருமத்தை அவள் அணிந்திருந்த ரோஜா வண்ண பட்டு இன்னும் எடுப்பாய் காட்ட.. 'இவள் பெண்ணா இல்லை பேரழகு ரதியா என அவன் கண் அகல.. யாரிவள்??..' சித்தம் சற்று தடுமாற..



அவள் விழாமலிருக்க, அவன் கைபிடித்திருந்த அவள் இடையை அவனறியாமல் அழுத்திப் பிடித்துச் சேர்த்தணைக்க.. பாவையவளோ.. சட்டென அந்தக் கை அழுத்தத்தில் அவனிடமிருந்து நகர முயன்று.. அவன் அதிக எடையைத் தாங்க முடியாமல் திணறி தள்ள முடியாமல்.. கடுப்பானவள்.. ..



"டிஸ்கஸ்டிங்க்.. சே.. சரியான காட்டான்.." என்றவள்.. "ஹலோ மிஸ்டர்.. கேன் யூ ஜஸ்ட் ரிமூவ் யுவர் ஹான்ட்ஸ்.. கொஞ்சம் கையை எடுக்கிறிங்களா?.. என்ன பார்க்கிறீங்க.. இதுக்கு முன்ன பின்னே பொண்ணைப் பார்த்ததில்லையா.. ஆளும் மூஞ்சியையும் பாரு.. நல்லா வந்துட்டாரு கட்டிப்பிடிக்க.. குஸ்தி பயில்வான் மாதிரி.. இடியட்.." வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.



அவள் வார்த்தைகளில் சட்டென முகம் கருத்தவன் கண் சிவக்க நிமிர்ந்தான்.. என்ன தோன்றியதோ..



"சாரி.. மன்னிச்சிக்கங்க.. தெரியாமல் பிடிக்க வேண்டியதாயிடுச்சு.. கீழே விழுந்திடுவீங்களோன்னு.." என்று அவளை விட்டு விலகித் திரும்பியவன் மண்டபத்தை நோக்கி நடக்க யத்தணித்தான்.



முன்னால் ஒரு அடி எடுத்து வைத்தவன், சட்டென மீண்டும் அவளருகில் வந்து, "ஹலோ மிஸ்.. கண்ணை முன்னால வைச்சி பார்த்து நடங்க.. காணாததைக் கண்டா போலப் பராக்கு பார்த்திட்டு வந்தா கவுந்தடிச்சி விழத்தான் நேரும்.. திரும்பி வந்து தாங்கிப் பிடிக்க இன்னொரு முறை நான் வர மாட்டேன்.. பல்லை பேத்துக்காம ஒழுங்கா நடந்து போங்க.." என்றவன்..



அவள் திகைத்த முகத்தைக் கண்டு விட்டு.. "ஊர் உலகத்துல என்னவோ நீங்கதான் ஒரே பொண்ணு போல.. நாங்க ஏங்கிக் கிடக்கிறோம் உங்களைப் பார்க்காம??.. ஆளும்.. மூஞ்சியுமா??.. போய் முதல்ல கண்ணாடியில உங்க மூஞ்சியைப் பாரு.. நல்லா சோளை கொல்ல பொம்ம மாதிரி அலங்கரிச்சிட்டு வந்துட்டாங்க.. என்ன பொண்ணுகளோ.. கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமில்லாம?.. எவன் கிடைப்பான்னு அலையுதுங்க.." மேலும் அவளை நன்றாகக் குத்தி விட்டு.. வாயைப் பிளந்து நின்றவளை அலட்சியமாக பார்த்து விட்டு அங்கிருந்து விரைந்து நகர்ந்தான்.



'எல்லாம் இந்த அப்பாவை சொல்லணும்.. பெரிய இவரு.. விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போக மாட்டாங்கன்னு என் கையைக் கட்டி வைச்சிட்டு.. நான் இருக்க வேண்டிய இடத்தில இன்னிக்கு எவனோ ஒருத்தன்.. அப்படி என்ன அந்த ஆம்பிள்ளையாகப் பட்டவன் என்னைய விட உசத்தியா போயிட்டானோ??.. ஏன் தான் இந்த மாமாவுக்கும் புத்தி இப்படிப் போகுதோ.. இப்போ கண்டவளும் பேசும்படியா இருக்கு நம்ம நிலமை..'



தனக்குள் பொருமியபடி முன்னேறியவன் கைகளைப் பிடித்து நிறுத்தினாள் அவனுடைய அருமை அப்பத்தா கண்ணாத்தாள்.



"கண்ணப்பா கதிரு.. எதுக்குடா இந்த வேகம்.. கொஞ்சம் நிதானமா போ ராஜா.. முதல்ல வேதா குட்டியை போய் வாழ்த்திட்டு வந்திருவோம்.. நீ மனசார வாழ்த்தினாதான் அவ நல்லா வாழுவாப்பா.. இன்னும் கொஞ்சம் நேரத்துல அவளை மேடைக்கு அழைச்சிடுவாக.. அது சரி அது ஆரு உன் மேல அப்படி விழுந்தவ.."



அவனுடன் பேசியபடியே வந்து இணைந்து கொண்டார் அவன் தந்தையைப் பெற்ற அந்த மூதாட்டி.



"அப்பத்தா.. நீ போவியாம்.. நான் அங்கன அப்பாரு நிக்கிறாரு.. அவர் கிட்ட போய் நிக்கிறேன்.." என்று அவன் அப்பத்தாவை எரிச்சலுடன் அப்போதைக்குக் கத்தரித்தவன் அவன் தந்தையை நோக்கி நடந்தான்.



இல்லையென்றால் அவனைச் சும்மா விட மாட்டாரே அவர்.. அந்தப் பெண்ணின் குலம் கோத்திரத்தை அலசி, ஆராய்ந்து.. விட்டால் மொத்தமாகப் பிராய்ந்து எப்படித் தன் கண்ணப்பனுக்கு ஜோடி சேர்க்கலாம் என்று பார்த்து விட மாட்டாரா??



பின் அவர் மட்டும் என்ன செய்ய முடியும்.. என்று வேதவல்லிக்கு அமெரிக்க

மாப்பிள்ளையை நிச்சயித்தார்களோ அன்றிலிருந்தே கண்ணாத்தா தன் பேரனுக்குப் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கி விட்டார்.



சேலம் மாவட்டத்தில் இருக்கும் சங்ககிரி மிகப் பெரிய டவுனும் இல்லாமல், சின்னக் கிராமமும் இல்லாமல் இருக்கும் ஒரு நடுத்தரமான ஊர்.. மலையடிவாரத்தில் இருக்கும் அந்தச் சின்ன டவுன் எல்லா வசதிகளையும் கொண்டது.



சக்திவேல் அந்த ஊர் பெரிய தனக்காரர்களில் ஒருவர்.. ஊரில் பாதி நிலம், நீச்சுகள் அவர்களுடையது.. அவர் மனைவி காஞ்சனா.. அருமையான இரண்டு பிள்ளைகள். மூத்தவன் கதிர்வேல் இருபத்தெட்டு வயதினன்.. இளையவன் வெற்றி வேல் இருபத்தி மூன்று வயது இளம் காளை.. இருவருக்கும் ஐந்து வருட இடைவெளி.



காஞ்சனா கதிர்வேலுக்குப் பதினைந்து வயது இருக்கும் பொழுதே, பெயர் தெரியா காய்ச்சல் கண்டு மருத்துவம் பயனின்றிப் போக, பாசமான இரு பிள்ளைகளையும், காதல் கணவனையும் தனியாக விட்டு விட்டு உயிரை விட்டார்.



அன்றிலிருந்து அவர்களைக் கண்ணும், கருத்துமாய், மற்றொரு தாயாய் பார்த்துக் கொள்வது சக்திவேலின் அன்னை கண்ணாத்தாள் தான்.. தாயில்லா குழந்தைகளிடம் அளவுக்கரிய பாசத்தைக் கொட்டி வளர்த்து வருபவர்.



தாயைப் பிரிந்த ஏக்கத்தில் கதிர்வேல் சோர்ந்துப் போய்ப் படிப்பில் பின்னடைந்தான்.. பணிரெண்டு வகுப்புகள் முடித்த பின், படிப்பில் அவ்வளவு நாட்டமில்லாமல் போனாலும், அவனுடைய தந்தையின் விருப்பத்துக்கிணங்கி தட்டுத் தடுமாறி இஞ்சினியரிங்க் படிப்பில் சேர்ந்தவன், முதல் வருடப் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு ஊருக்குத் திரும்பி விட்டான்.. தந்தை வழியைப் பின்பற்றி விவசாயத்தில் அந்தச் சின்ன வயதிலேயே இறங்கி விட்டான்.



சக்திவேலுக்குக் கழுத்து மட்டும் அதில் குறைதான்.. தன் மகனைப் பெரிய இஞ்சினியர் ஆக்கி, அவனை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தவர், அவன் படிப்பில் ஆர்வம் காட்டாமல் வானம் பார்க்கும் இந்த விவசாயத்தை நம்பிக் கலப்பை பிடிக்கப் போவதாகச் சொல்லி விட்டதில்.



கண்ணாத்தாவின் ஆதரவில் அவன் விவசாயத்தைக் கையில் எடுத்ததோடு நிற்காமல், அதனையொட்டி வேறு பல தொழில்களிலும் உள் நுழைந்தான்.. இதோ இந்தப் பத்து வருடங்களில் அவன் பின்னால் பலவித தொழில்கள் கட்டியம் கூறின.



சங்ககிரியை ஒட்டி இரண்டு ஜவ்வரிசி ஆலைகள், கரும்பு மில்கள், செங்கல் சூளைகள், நான்கு அரிசி மில்கள்.. ஊரைச் சுற்றி நஞ்சை, பூஞ்சை நிலங்கள்.. போதாதற்கு அவன் தந்தையின் ஆசைக்காக இன்று ஒரு கலைக்கல்லூரியையும் சேலம் டவுனில் அவன் பெயரை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.



இன்று நடக்கும் இந்தத் திருமண மண்டபமும் அவர்களதுதான்.. ஊரிலேயே இருக்கும் ஒரேயொரு பெரிய திருமண மண்டபமும் அதுதான்.



அவர்களை ஒத்த அடுத்தப் பெரிய தனக்காரர் அந்த ஊரில் இருக்கும் குமரேசன்.. அவரது மனைவி கல்யாணி.. அவர்களது செல்ல மகள்தான் வேதவல்லி.



குமரேசனது ஒன்று விட்ட தங்கைதான் காஞ்சனா.. குமரசனுக்குத் தன் தங்கை மேல் அளவுக்கு அதிகமான பாசம்..ஒன்றாக வளர்ந்தவர்கள்.. தன் தங்கையைப் பெரிய கோடீஸ்வரனுக்கு டவுனில் , சீமை பட்டிணத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.



அதற்கேற்றார் போல அவருடன் சின்ன வயதில் உடன் பயின்ற பட்டிணத்தில் வசிக்கும் ராஜேந்திரன் ஒரு திருவிழா சமயம் ஊருக்கு வந்திருந்த போது காஞ்சனாவின் குறும்பு தனத்திலும், கிராமிய மனம் மாற அவள் பழக்க வழக்கங்களில் கவரப்பட்டு ஆசைப்பட்டுப் பெண் கேட்க.. அங்கே ஆரம்பமானது பிரச்சனை.



குமரேசன் தன் நண்பனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டுப் பெரியவர்களிடம் விவரம் தெரிவிக்க, காஞ்சனாவோ தன்னைப் பெற்றவர்களிடம் ஒரே அழுகை.. தான் காதலிக்கும் சக்திவேலைத் தவிர வேறு ஒருவருக்குக் கழுத்தை நீட்ட மாட்டேன் என்று.



பட்டிணத்து ராஜேந்திரன் விஷயமிறிந்து நாசூக்காக ஒதுங்கிவிட, காஞ்சனாவுக்கும்.. சக்திவேலுக்கும் திருமணம் முடிந்தது.. பெண்ணின் மனதை அறிந்த பெற்றவர்களுக்கோ அவரை மறுக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லையே.. ஊரில் அவர்களும் நல்ல பெயர்பட்டவர்கள் தானே.



அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்கிய வேளையில்..இங்கே குமரேசனோ உள்ளுக்குள் வன்மத்திலேயே இருந்தார்.. தன் பேச்சை கேட்காமல் பட்டிணத்து வளமான வாழ்க்கையைத் தொலைத்து, பட்டிக் காட்டிலேயே உழலும் தன் தங்கையின் விதியை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர்களிடம் உள்ளுக்குள் பகை வளர்த்து ஒதுங்கிப் போனார்.



அதற்குள் ராஜேந்திரன் தன்னுடைய இரண்டு தங்கைகளில் மூத்தவள் கல்யாணியைக் குமரேசனுக்கு மணமுடித்துத் தங்கள் நட்பைப் பலப்படுத்தினார்..



தன்னுடைய இன்னொரு தங்கை ரேவதியை தன்னுடைய பட்டிணத்து நண்பன் ராஜ்குமாருக்கு மணமுடித்து மகிழ்ந்து போனவர்.. ராஜ்குமாரின் தங்கை ருக்மணியை தான் மணந்து கொண்டார்.



குமரேசனுக்கு மட்டும் இன்னும் பட்டிணத்து மோகம் தீர்ந்த பாடில்லை.. தன் நண்பன் ராஜேந்திரனின் தங்கை கல்யாணியை மணந்தவர் எப்படியாவது பட்டிணத்தில் குடி புகுந்து தொழில் தொடங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், ஒரே மகனானதால் அவரது பெற்றோர் விருப்பத்திற்கிணங்க அந்தச் சின்ன டவுனிலேயே கடைசி வரைக் குப்பை கொட்ட வேண்டியதாகி விட்டது..



இதில் கல்யாணி பட்டிண வாசத்தை வெறுத்தது அவர் கையைக் கட்டிப் போட்டது போல ஆகி விட்டதால் தன் உள்ளக் கிடக்கை அடக்கி வாழ பழகிக் கொண்டார்.



இதோ இன்று கூடத் தன் ஒரே மகளான வேதவல்லிக்கு அமெரிக்காவில் மெத்தப் படித்த மேதாவியை மாப்பிள்ளையாக்க தயாராகிக் கொண்டிருந்தார்.



அதில் கல்யாணிக்கு மன வருத்தமே.. அருமை பெருமையாய் வளர்த்த ஒற்றை மகளை வெளி இடத்தில் கொடுப்பதில் அவளுக்கு இஷ்டமேயில்லை.. அருகிலேயே குமரேசனின் தங்கை மகன் கதிர்வேல் காத்திருக்க அவனை லட்சியம் செய்யாமல் எங்கிருந்தோ வந்த இந்த அமெரிக்க வரனுக்கு மகளை மணமுடிப்பதில் அவருக்கு வருத்தமே.



ஆனாலும் தன் கணவனின் குணத்தை அறிந்திருந்தவள், பேசாமல் சம்மதித்துத் தலையாட்ட வேண்டியதாகி விட்டது.. பெற்றவர்கள் சொல்லை அதுவும், தந்தை சொல்லை தட்டாத வேதாவின் குணத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அவளையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டவரை மீற முடியாமல் இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டார்.



தன் நாத்தனார் உயிருடன் இருந்தால் இவர்கள் பந்தம் நிலைத்திருக்குமோ என்று எண்ணாமலும் இருக்க முடியவில்லை.. அதோ, இதோ என்று இன்று திருமணம் வரை வந்து ஆகிவிட்டது.. இனி நல்லபடியாகத் தன் மகள் திருமணம் நடக்கட்டும் என்று இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறார்.



"பொண்ணுக்கு நாத்தனார் யாரும்மா.. போங்கோ போய் முறையாய் பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ.. ஏற்கனவே மாப்பிள்ளை இன்னும் எவ்வளவு நேரம் இந்த மந்திரங்களைச் சொல்லுவது அய்யரேன்னு என்னை முறைசிண்டு இருக்கார்.. போங்கோ.. மாங்கல்ய தாரணம் ஆரம்பிக்கணும்.. நேரமாச்சு.. முஹுர்த்தம் தவறக் கூடாது.."



அத்தனை நேரமாக அந்த மாப்பிள்ளையாகப்பட்ட மகானுபாவனை மந்திரங்களைச் சொல்லி டிரில் எடுத்துக் கொண்டிருந்த அய்யர் இப்பொழுது பரபரத்தார்.



"சத்யா.. நீயும் அவளோடு போம்மா.. வேதாவை அழைச்சிட்டு வா.." தனனருகே நின்று கொண்டிருந்த தன் அண்ணன் மகள் சத்யாவை தன் மகளுக்கு வரப் போகும் நாத்தனாருடன் அனுப்பி வைத்தார் கல்யாணி.



அங்கே மேடைக்கு வலது பக்கத்தில் ஒதுங்கி நின்றிருந்த கதிர்வேல் அவர் அத்தையின் குரலில் சட்டெனத் திரும்ப..



வேகமாக மேடையில் இருந்து இறங்கிய சத்யா அங்கே ஒதுங்கி நின்றிருந்த கதிர்வேல் மேல் காலிடறி மீண்டும் அவன் மேல் விழப் பார்த்தவள்.. சட்டெனச் சுதாரித்துக் கொண்டு தனனருகே நின்றிருந்த தன் மாமன் மகன் பிரகாஷின் மேல் சாய்ந்தாள்.



"ஹேய் சத்தி டியர்.. என்னாச்சு.. பார்த்து.." பதறினான் பிரகாஷ்.



"ப்ச்.. ஒண்ணுமில்லை பிரகாஷ்.. ஜஸ்ட் அந்தப் படிகட்டு ஸ்லிப் ஆயிடுச்சு.."



"ஹேய் பார்த்தும்மா.. ஒண்ணும் அடி கிடி படலையே?.. சிலசமயம் இப்படி கால் ஸ்லிப் ஆகும் போது ஃப்ராக்ச்சர் கூட ஆகிறதுக்குச் சான்ஸ் இருக்கு.. டேக் கேர்.."



"ம்.. என்ன செய்யறது?.. காலை இடறி விடறதுக்குன்னே சில ஜென்மங்கள் இங்கே காத்திட்டு இருக்கு.. கிராமத்து காட்டான்கள்.." முணுமுணுத்து நகர்ந்தாள் சத்யா.



"என்ன சொல்லறே.. ஒண்ணும் காதுல விழலை.. ஒரே இரைச்சல்.." தன் காதுகளைத் தடவிய பிரகாஷை கண்டு கொள்ளாமல்,



"கேட்க வேண்டியவனுக்கு நல்லா கேட்கும்.." கதிர்வேலை முறைத்தபடி நகர்ந்தாள் சத்யா.



கதிர்வேல் காதில் அவள் சொன்ன வார்த்தைகள் விழுந்தாலும் அவன் கருத்தில் பதியவில்லை.. அவளை லட்சியம் செய்யாமல் மணமகள் அறையை வைத்த கண் வாங்காமல் வழி மேல் விழி வைத்து வேதா வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்..



திருமணத்திற்கு முன்பு அவளைக் கண்டு பேசி அவள் நல்லபடியாக வாழ வாழ்த்திட வேண்டும் என்ற அவன் எண்ணம் கடைசி வரை ஈடேறவில்லை..



எங்கே அவன் ஏதாவது தலையிட்டு தன் மகள் மனதை மாற்றி, அவர் தங்கை அவர் முகத்தில் கரியை பூசியது போல மகள் செய்து விடுவாளோ என்று எண்ணி, இந்தத் திருமணம் நிச்சயம் ஆனது முதல், தன் மகளை, பூதம் காக்கும் புதையல் போலக் காத்துக் கொண்டிருந்தார் குமரேசன்.



அவரை மீறி கதிர்வேலும் வேதாவை சந்திக்க முயலவில்லை.. தனக்கு இல்லை என்றவுடன், அவளாவது அவள் பெற்றவர் விருப்பப்படி வாழட்டும் என்று ஒதுங்கித்தான் போனான்.



அங்கே மணமகள் அறையிலோ..



"அண்ணி வாங்க.. உங்களை அய்யரு கூப்பிட்டு வரச் சொன்னாரு.." என்றபடி உள்ளே நுழைந்தாள் திலகா.. அருண்குமாரின் தங்கை.. மணமகளுக்கு நாத்தனார் முடிச்சைப் போடப் போகிறவள்..



"போம்மா.. பெரியவர்கள் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க.." என்ற தன் மாமி ருக்மணிக்குப் புன்னகை சிந்தியபடி அவர் சொல்லுக்கிணங்க அங்கே மணமகள் அறையில் சூழ்ந்திருந்த பெரியவர்கள் கால்களில் விழுந்து பணிந்து எழுந்தாள் வேதவல்லி என்கிற வேதா.



"உம்.. நல்லா தொங்க தொங்கத் தாலி கட்டி நல்லா இருக்கணும் வேதா கண்ணு.. என் ராசாத்தி என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. என் வீட்டு மருமவளா வர வேண்டியவ.. என்ன செய்ய??.. இன்னிக்கு எங்கேயோ சீமையில இருக்கிற அமெரிக்காவுக்குப் போவப் போறியாம்.. உங்கப்பனுக்கு எதிரில் இருக்கிற என் பேரன் கண்ணுக்குத் தெரியலே.. என் பேரன் மெத்த படிக்கலையாம்.. போவட்டும்.. யாருக்கு யாருன்னு இன்னிக்கு நேத்தா முடிச்சி போட்டான் அந்தக் கடவுள்.. பொறக்கும் போதே எழுதி வச்சிருப்பான்.."



"ஏய் கண்ணாத்தா.. எதுக்கு இப்படிப் பேசறவ??.. புள்ளை மணமேடைக்குப் போவுற நேரம் வந்தாச்சு.. இப்போ போய் இப்படிச் சலிச்சிக்கறே.. நல்லா இருன்னு வாழ்த்துவியாம்.."



இன்னொரு பெரிசு எடுத்துக் கொடுக்க..



"என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பத்தா.." என வேதா அவர் கால்களில் விழப் போனாள்.. கதிர்வேலை போலவே அவளுமே அவரை அப்பத்தா என்று சின்ன வயதிலிருந்து அழைத்துப் பழகி இருந்தாள்.



"ம்.. நல்லா இரு தாயி.. எங்க வாழப் போனாலும் நம்ம ஊரு பேரும், உன் பிறந்த வீட்டுப் பேரும் கெடாமல் அருமையா, பேர் சொல்லறாப்போல வாழணும் ராசாத்தி.." என்றவர்,



"என்னதான் இருந்தாலும், நீ அதிர்ஷ்டசாலின்னு சொல்லணும்.. இல்லைன்னா நீ படிச்ச பண்ணெண்டாம் கிளாசுக்கு.. அதுவும் மூணுதரம் பெயிலாகி தோத்துபுட்டு முக்கி முணகி படிச்ச உனக்கு, இப்படிப்பட்ட படிச்ச சீமை துரை கிடைக்கணும்னா நீ போன ஜென்மத்துல இல்ல, இந்த ஜென்மத்திலேயும் ஏதோ புண்ணியம் பண்ணி வரம் வாங்கி வந்திருக்கணும் தாயி.. நல்லபடியா உங்கப்பன் பேர் விளங்கச் சூதானமா உன் வாழ்க்கையைக் காப்பாதிக்கோ ராசாத்தி.." என்றவர்..



தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, சேலை மடிப்பில் சொருகி வைத்திருந்த சுருக்குப் பையிலிருந்து நல்ல தடிமனான காசு மாலையை எடுத்து அவள் கழுத்தில் போட்டார்.



"உங்கத்தை இருந்திருந்தா தன்னோடு மருமவளுக்குன்னு இன்னும் என்னென்னவோ சீர் செய்திருப்பா.. இது அவ போட்டு வந்த பொறந்த வீட்டு சீரு.. முறைப்படி உன்னையைச் சேரணும்.. உனக்காக எடுத்து வைச்சிருந்தா.. நீ எங்க வீட்டுக்கு வாழ வரலைன்னாலும், உன் பிறந்த வீட்டு அத்தை சீதனமா இதை உனக்கே கொடுக்கச் சொல்லிபுட்டான் என் மவன் சக்திவேலு.. நல்ல தீர்க்காயுசோடு, தீர்க்க சுமங்கலியா இருக்கணும் தாயி.."



அவள் கன்னத்தை வருடினார் கண்ணாத்தா.. வேதாவின் கண்களும் கலங்கின.



"பெரியாத்தா என்ன பேசினாலும் அது மனசு தங்கம் தான்.. இல்லைன்னா இருபது பவுனு காசு மாலையை அப்படியே கொடுக்க மனசு வருமா சொல்லு.." கூடி இருந்தவர்கள் கருத்துகளை அள்ளி வீச..



"வாம்மா வேதா.. மண மேடைக்குப் போகலாம்.." அவளது மாமனின் மனைவி ருக்மணி அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.



கால்கள் நடுங்க, கைகள் வியர்வையைப் பொழிய, முகம் வெட்கத்தில் சிவக்க, மெல்ல எங்கே அடுத்த அடி எடுத்து வைத்தாலும் கால் நோகுமோ என எண்ணும்படி, மெல்ல அடி மேல் அடி வைத்து மண மேடையை நோக்கி நகர்ந்தாள் வேதா.



"பொண்ணுக்கு மாமா.. மாலையை மணப்பெண் கழுத்தில போட்டு அழைச்சிட்டு வாங்கோ.." என்ற அய்யர்,



"அம்மாடி.. எல்லாரையும் பொதுவா விழுந்து நமஸ்கரிச்சிட்டு வந்து மணையில உட்காரு.. மாங்கல்ய தாரணம் ஆரம்பிக்க நேரமாச்சு.." எனக் கட்டளைகளை இட்டுக் கொண்டிருந்தார்.



அவர் சொன்னபடியே செய்து கொண்டிருந்த வேதாவுக்கோ உடல் நடுங்கியது.. மெல்லக் குனிந்து வணங்கி மணையில் உட்காரப் போனவள் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மணமகனை ஏறிட்டாள் இல்லை..



மணமகனோ, பெண்ணோ இவள் தேவ லோக ரம்பையோ என அழகு சுந்தரியாகத் தன்னருகே அமர்ந்தவளைக் கண்டு, தன் அதிர்ஷ்டத்தை எண்ணிப் பூரித்து அவளை நேரடியாகப் பார்த்து ஜொல்லு விடத் தயாரானான்.



பின்னே சென்னையில் இரண்டு பங்களாக்கள், ஒரு வெளி நாட்டுக் கார், அத்துடன் கிராமத்தில் நிலம், நீச்சுக்கள்.. போதாதற்கு இரு நூறு பவுன் நகைகள், ரொக்க பணம்.. அவன் கேட்க வில்லையென்றாலும் அவர்களாகத் தருவதாக வாக்கு அளித்திருந்தனர்.. இவற்றுடன் கூட அழகு ரதியெனப் பெண்ணொருத்தி அமைந்தால் எவன் தான் ஜொல்லு விட மாட்டான்.



"மாப்பிள்ளை சார்.. நான் சொல்லுகிற மந்திரத்தை அட்சரம் பிசுகாமல் அழகா சொல்லுங்கோ.. அப்புறம் உங்க ஆம்படையாளாப் போறவளை ஜொல்லுவீங்களாம்.. அம்மாடி நமஸ்கரிச்சாச்சுன்னா மணையில் வந்து உட்காரும்மா.."



அய்யரின் வார்த்தைகளில் அசடு வழியத் திரும்பினான் அருண்குமார்.. வேதாவுக்குள் வெட்க புன்னகை.. மெல்ல அவன் அருகே அமரப் போனாள்.



"டேய் அருண்.. எழுந்திருடா.. இந்தக் கல்யாணம் நடக்காது.. முதல்ல மண மேடையை விட்டு இறங்கு.."



அதிர்ந்த குரலில் சொன்ன தந்தையை அதிர்ச்சியுடன் பார்த்தான் அருண்.



அதிர்ந்தது அவன் மட்டுமல்ல.. மொத்த மண்டபமே அங்கே அதிர்ந்து நிசப்தமானது.



*******************************************************************************


முதல் அத்தியாயம் உங்களுக்காக பதிவிட்டாகிவிட்டது. படித்து, உங்கள் மேலான கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள். ... ஸ்ரீலக்ஷ்மி.
 

VPR

Member
அப்படியே ஒரு நிஜ கல்யாணத்தை பார்ப்பது போல இருந்தது. அப்பத்தா மாதிரியான பெரியவர்கள், மனதுக்குள் எத்தனை சுணக்கம் இருந்தாலும் வாயார வாழ்த்தி நெஞ்சு நிறைய சீர் செய்வது இயல்பு தான்.

கதிர் மேலே விழுந்த சத்ய சுந்தரியே - நீ
மனதுக்குள் வந்து விழுந்திடும் நாள் எந்நாளோ
 
Top