அத்தியாயம் 2
"நிறுத்துங்க.. டேய் இன்னும் எதுக்குடா உட்கார்ந்திருக்க.. எழுந்திருடா..",
ஒரு கணம் அந்த மண்டபம் ஒன்றும் புரியாமல் ஸ்தம்பித்தது.. இதென்னடாயிது.. மணமகனின் தந்தை தாலி கட்டும் வேலையில் குண்டைப் போடுகிறார் என்று.
"என்னங்க என்ன இது.." என்று பதறினாள் மணமகனைப் பெற்ற மங்கையர்க்கரசி.
"அப்பா.. வாட இஸ் திஸ்.. கடைசி நிமிஷத்தில் இதென்ன கலாட்டா.. பொண்ணு மேடை ஏறியாயிற்று.. தாலி கட்டணும்.. இப்ப போயி ஏதோ உளருறீங்க..", என்றான் அருண குமார்.
எல்லோரும் என்னவோ ஏதோ என்று பதறியடித்தபடி மேடையை நெருங்கி நின்று கொண்டனர்.. எங்கே தங்களுக்கு, நடக்கும் வம்பு புரியாமல் போய் விடப் போகிறதோ என்று.
"சில கணங்களுக்குப் பின் சுதாரித்த வேதாவின் தந்தை குமரேசன், மெல்ல தொண்டையைக் கனைத்து..
"என்ன சம்பந்தி என்ன சொல்லுறீங்க.. இதென்ன புதுக் கலாட்டா ..முகூர்த்தத்துக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு.. இப்ப என்ன.. என்ன சம்பந்தியம்மா.. இதெல்லாம் என்ன .. நீங்களும் பெண்ணைப் பெத்தவங்க தானே.. எதில் விளையாட்டு என்று கிடையாது?.." என்று கூச்சலிட்டார்..
மேடையில் ஏறி மணமகன் அருகில் அமரப் போன வேதாவோ அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றது நின்றபடி இருந்தாள்.
வேதாவின் தாயின் நிலையோ அதை விட மோசம்.. தன் அருமை மகளுக்கு ராஜகுமாரனாய் மாப்பிள்ளை கிடைத்து விட்டான் என்று இருந்தவளுக்கு..இப்போது ஒன்றும் புரியவில்லை..ஆனால் ஏதோ பயம் தொண்டையை அடைக்க.. கண்களில் நீர் பெருகத் தொடங்கியது..
"ம்ம்.. சொல்லுறேன் சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு.. மனுஷனா பொறந்தவனுக்கு வாக்குச் சுத்தம் வேணும்.. அது உங்க கிட்ட நிச்சயம் இல்லை குமாரு..", என்று முகத்தில் கோபம் தாண்டவமாட வார்த்தைகளைத் துப்பினார் சுந்தரம்.. அருணின் தந்தை..
"என்ன வேய் வார்த்தை தடிக்குது.. அப்படி நான் என்ன செஞ்சுபுட்டேன் நீர் இப்படிக் கூப்பாடு போடுகிறதுக்கு.. உம்ம பெஞ்சாதி குடுத்த பட்டியல் எல்லாம் சரியாத்தான் செஞ்சிருக்கேன்.. நீர் என்ன பெருசா இப்போது எதையாவது எதிர் பார்க்கிறீரோ?"
"எதிரும் பார்க்கவில்லை ஒண்ணும் இல்லை.. இல்லாததை இருக்குன்னு பேசுறவர் தானே நீங்க.. இப்போது செஞ்சேன்னு சொன்னதுக்குக் கூட அதுக்கு உத்தரவாதம் யாரு?.. இது எதுவும் எங்களுக்கு வேண்டாம்.."
"அப்பா என்ன இது.. இரண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி இஷ்டத்துக்குப் பேசினா.. எங்களுக்கு என்னத்தை விளங்கும்.. கம் ஆன்.. என்னதான் பிரச்சனை உங்களுக்கு..
“எனக்கு எந்த வித வரதட்சணையோ கொடுக்கல் வாங்கலோ வேண்டாம்னு நான் முன்னமே சொல்லிட்டேனே.. உங்களுக்கே தெரியும் நான் நல்லா சம்பாதிக்கிறேன்னு.. இப்போது வேதாவும் அங்கே வந்த பின்னே வேலைக்குப் போனா இன்னமும் ராஜ வாழ்க்கை தான்.. இன்னும் வேறு என்னத்தை எதிர்ப்பார்க்கறீங்க..", என்று கேட்ட அருணைப் பார்த்த சுந்தரம்..
"டேய் வெளக்கெண்ணை.. இப்போ என்ன சொன்ன.. வேதாவும் வேலைக்குப் போனா.. அது அத்தைக்கு மீசை முளைத்துச் சித்தப்பனானாத் தான் நடக்குமடா.. எந்த ஊருலேடா பண்ணெண்டாம் கிளாஸ் மூன்று முறை கோட் அடிச்சவளுக்கு வேலைக் கிடைக்கும்.. களு.. முட்டாப் பயலே.. மொதல்லே எந்துரிச்சு வாடா.. இந்த விளங்காத குடும்பத்திலே போயி மாட்டின அம்புட்டுத்தேன்.."
அவ்வளவுதான்.. பூனைக்குட்டி பையிலிருந்து வந்து விட்டது..
குமரேசனுக்கு முகம் வியர்க்கத் தொடங்கி விட்டது....
கைகளைப் பிசைந்தபடி.."சம்பந்தியம்மா.. என்ன இது.. இப்படிப் பேசுறார் சம்பந்தி.. நீங்க எடுத்து சொல்லப் படாதா?.."
அவ்வளவு நேரம் சுமமாயிருந்த மங்கையர்க்கரசி எங்கே இன்னமும் தான் பேசாமல் இருந்தால், தான் பெண் படிக்காத விஷயத்தை மறைக்க குமரேசனுடமிருந்து யாருக்கும் தெரியாமல் வரதட்சணையாய் வாங்கிய பத்து லட்சத்தைப் பற்றிப் போட்டு கொடுத்துவிடுவாரோ என்று பயந்தவள்.. தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு..
"என்ன சம்பந்தி நான் செய்ய முடியும் இதில்.. நான் என்ன கண்டேன்.. நீங்க வில்லங்கம் பண்ணி வெப்பீங்கன்னு.. ஏதோ பொண்ணு சுமாரா படிச்சிருக்குன்னீங்க.. நானும் அதை அப்படியே நம்பினேன்.. என் பிள்ளைகிட்டையும்..
“ஏதோ பெரிய ஐ. ஐ. டி படிப்பு படிக்கலைன்னாலும் சுமாரா நல்ல படிச்சிருக்கான்னு சொன்னேன்.. நான் கூட ஏதோ லோக்கல் இஞ்சினீரிங் காலேஜுலே படிச்சதாத்தான் நினைத்தேன்.. இப்போத்தான் தெரிகிறது.. இது பண்னெண்டை தாண்டலைன்னு.. அதுவும் மூன்று அட்டெம்ப்டுன்னு..", என்று நைச்சியமாய்க் கை கழுவினாள்..
அதற்கு மேல் சம்பந்தியம்மா சப்போர்ட் கிடைக்காது என்று புரிபட்டுப் போனது குமரேசனுக்கு.
இப்போது என்ன செய்வது என்று தவித்தவர்..மேடையை விட்டு எழுந்து விட்ட அருண குமாரைப் பார்த்தவர் அவன் அருகில் சென்று கைகளைப் பிடித்து,
"தம்பி.. நான் உங்க கையைக் காலா நினைத்துக் கேட்கிறேன்.. என் பெண்ணை வேண்டாமென்று சொல்லாதீர்கள்.. அவ ரொம்பப் பாவம்.. படிப்புத்தான் ஏறலையே தவிர மத்த காரியங்கள் நிறைய நல்லா செய்வாப்பா.. நல்லா சமைப்பா.. கைவேலை நல்லா வரும்.. ஒரு குறை சொல்ல முடியாதுப்பா.. கொஞ்சம் தயவு பண்ணு..", என்று அவன் காலில் விழப் போனார்..
சுற்றியிருந்தவர்கள் பதறினர்.. பிரகாஷ் சத்யாவின் பெற்றோர், கதிர், கண்ணாத்தா ஆச்சி, எவருக்கும் என்ன பேசுவதென்று புரியவில்லை..
தன் சகோதரி கண்ணீர் வடித்தபடி நிற்பதைக் கண்ட ராஜேந்திரன் தாங்க முடியாமல் சட்டென்று குமரேசனைப் பிடித்துத் தூக்கினார்,,
"மச்சான் என்ன இது.. இப்படி மாப்பிள்ளை காலில் விழுறீங்க.. கொஞ்சம் இருங்கள் நாங்கல்லாம் எதுக்கு இருக்கிறோம் பேசுறோம்", என்றவர்,
அருண்குமாரிடம், "தம்பி.. ஏதோ தெரியாத்தனமா செஞ்சிட்டார்.. பெற்றவரா தன் பெண் நல்ல நிலையிலே வாழ்க்கைப் படணும்னு நினைச்சிருக்கார்.. அதான் சின்னதா ஒரு விஷயத்தை மறைச்சிருக்கார்.. பெரியமனசுப் பண்ணி இதை மறந்துடுங்க.. தயவுசெய்து மற்றபடி எங்க வேதாவுக்கு ஒரு குறையுமில்லை..", என்று சமாதானம் பேசிய ராஜேந்திரனை, ஒரு கணம் ஏளனமாகப் பார்த்த அருண்குமார்..
"சார்.. உங்களைப் பார்த்த படித்தவரா டீசண்டா தெரிகிறது.. நீங்களே இப்படி யோசித்துப் பாருங்களேன்.. எனக்கு வேதாவைக் கல்யாணம் செய்ய எந்த ஒரு தடையுமில்லை..
“ஆனா நான் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினீயர்.. இருப்பது அமெரிக்கா.. அங்கே இந்தப் படிக்காத பெண்ணைக் கூட்டிட்டு போயி என்ன செய்ய முடியும்.. ஏதோ கொஞ்சம் படிச்சிருந்தா கூடப் பரவாயில்லை ஏதாவது ஒரு வேலையில் உட்கார வைத்து விட முடியும்..
“இப்படி ஸ்கூல் ஃபைனல் கூட முடிக்காதவளை வெச்சு நான் என்ன வீட்டு வேலைக்கு ஆள் அனுப்பப்படுமென்றா போர்டா போட முடியும் அங்கே.." என்றவன்..
“கொஞ்சம் பிராக்டிகலாய் யோசியுங்கள் சார்.. எங்க அம்மா என் கிட்ட பொண்ணு படிச்சிருக்குன்னு சொன்னாங்க.. பாஸ்போர்ட் இருக்குன்னாங்க...அப்புறம் நான் கேட்டதுக்கு ஏதோ இஞ்சினீரிங்க் போலன்னு சொன்னாங்க.. சரி.. ஓ. கே.. பத்து நாள் டைமில் வரேன் ஏற்பாடு செய்யுங்கன்னு சொன்னேன்.. ஆனா இப்படி ஆகும்னு நான் நினைக்கவில்லை.. இன்ஃபாக்ட் நான் வேதாகிட்ட பேசட்டான்னு கேட்டதுக்குக் கூட அவங்கப்பா எங்க கிராமத்திலே இதெல்லாம் சரிப்படாதென்று சொல்லிட்டார்.." என்று கூறினான்.
"எல்லாம் சரி தம்பி.. இது ஒரு பொண்ணு வாழ்க்கையாச்சே.. இந்த விஷயம் கல்யாணத்துக்கு அப்புறம் தெரிய வந்திருந்தால்..", என்ற ராஜேந்திரனை முறைத்த அருண்..,
"இங்கே பாருங்கள் சார்.. கடவுள் எனக்குத் தப்பிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறாரென்று தான் நான் நினைக்கிறேன்.. இப்பவும் சொல்றேன் உங்க பொண்ணுகிட்ட எனக்கு எந்தக் குறையும் தோணலை..
“ஆனா என்னோட காலிபருக்கு இவ சரிப்பட மாட்டா..அமெரிக்கன் லைஃப் வேற இங்கே கிராமத்தில் பிறந்து வளர்ந்த படிக்காத வேதாவால் எப்படி அங்கே ஈடு கொடுக்க முடியும்.. சாரி.. என்னை விட்டுடுங்க.. என்னோட இந்த டிரிப் அட்டர் வேஸ்ட்.. இதிலே எல்லோருக்கும் எனக்குக் கல்யாணமின்னு வேற சொல்லித் தொலைச்சிட்டேன்..", என்று கடுகடுத்தான்.
"தம்பி ப்ளீஸ்.. அப்படியெல்லாம் பேசாதீங்க.. இப்ப என்ன ஆகிப்போச்சு.. கொஞ்சம் பெரிய மனசு.." என்று அவர் முடிக்கவில்லை, அதற்குள் அதுவரை கண்ணீர் விட்டவண்ணம் இருந்த கல்யாணி,
"அண்ணா யார் கிட்டயும் நீ கெஞ்ச வேணாம்.. விட்டுடுங்க.. ஏய் வேதா இன்னமும் என்ன அங்கே நிக்கிறே.. போடி.. போ.. அதிர்ஷ்டக்கட்டை.. உன்னைப் பெற்றதுக்கு நான் அரளி விதையைத்தான் அரைச்சு சாப்பிடணும்.. போடி.. போய்ச் செத்துத் தொலை..” என்றவள், துக்கம் தாளாமல் தலையில் மடேல் மடேல் அடித்துக் கொண்டு 'ஓ'. என்று அழத் தொடங்கினாள்..
அப்போது அங்கே பதறியபடி ஓடி வந்தான் பிரகாஷ்.. அவன் அதுவரை நடந்தது எதையும் அறியாமல் கீழே விருந்தினர்களை வரவேற்ற வண்ணம் இருந்தவன், முகூர்த்தம் நெருங்குவதால் மாடிக்கு வந்தவன் அங்கே நடந்து கொண்டிருந்த கலாட்டாவைப் பார்த்து அதிர்ந்து நின்றான்..
"அப்பா.. அத்தை என்னாச்சு.. ", என்று நெருங்கியவனுக்கு அடுத்தச் சில நொடிகளில் விஷயம் புலப்பட்டுப் போனது..
கண்களில் நீர் வழிய மாலையும் கழுத்துமாய் மணக்கோலத்தில் இருந்த வேதாவைப் பார்த்தவனுக்குக் கஷ்டமாக இருந்தது.. ஆனால் அவனால் மட்டும் என்ன செய்ய முடியும்..
மெல்ல யாரோ தன் கையைப் பற்றுவதைக் கண்டவன் திரும்பிப் பார்க்க சத்யா அவன் கைகளைப் பிடித்து அழுத்தி விட்டு தலையை மெல்ல ஆட்டி 'நீ இதில் தலையிடாதே’ என்பது போல் பார்த்தாள்.
அவனும் புரிந்து கொண்டு வாயை மூடி பார்வையாளனானான்.
ஒரு கணம் தன் அண்ணன் மகன் பரிவு காட்டியதைப் பார்த்த கல்யாணிக்குள் சிறு சலனம்.. ஆனால் இந்தப் பார்வைப் பரிமாற்றத்தை பார்த்தபின் தன் மனதை இழுத்துப் பிடித்துக் கடிவாளமிட்டபடி..
"இல்லைப்பா.. அவள் விதிப்படி நடக்கட்டும்.. நான் அப்பவே அடிச்சிகிட்டேன் இந்த மனுசன் கிட்ட.. இதெல்லாம் நமக்குத் தோது படாது.. பெரிய இடம் அதுவும் வெளிநாடு வேண்டாமென்று தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்.. கேட்டாத்தானே.. நான் பாத்துக்கறேன் நான் பார்த்துக்கறேன்னு சொல்லிச் சொல்லியே என் உயிரை எடுத்துட்டார்.. இப்ப பாரு என் பொண்ணு இப்படிக் கேள்விக்குறியா மாறிட்டா..", என்று மீண்டும் அழத் தொடங்கினாள் கல்யாணி.
யாரோ ஒரு பெருசு, "யோவ் இப்போது என்னத்தான் சொல்லுறே.. இந்தக் கல்யாணம் நடக்குமா இல்லையா?..சொல்லிப்புட்டீங்கன்னா வசதியாய் இருக்கும்.. நீங்க இல்லாவிட்டால் போனா என்ன எங்க பாப்பாவுக்கு மாப்பிள்ளையா கிடைக்காது.... சீக்கிரம் சடுதியா சொன்ன.. நாங்க வேற பாக்குறதுக்கு வசதியா இருக்கும்..
“என்ன குமரேசா.. இதுக்குப் போயி இப்படி இடிந்து உக்காந்துட்டே.. இங்கே இல்லாத ஆள் சனமா.. பெரிய பாரீன்னு மாப்பிள்ளையை நல்லாத்தான் பார்த்தே போ..சரியா போயி எது போட்டுக் கொடுத்துச்சோ.. விளங்குமா அது..",
என்று அங்கலாய்த்துக் கொண்டது..
"இல்லே பெரியப்பூ.. நான் தப்புப் பண்ணிட்டேன்.. ஏதோ என் ஃப்ரெண்டு தன்னோட பொண்ணைச் சீமையிலே குடுத்தான்.. அங்கிட்டு அது நல்லா சந்தோஷ வாழுகிறதென்று நினைத்து.. என் பொண்ணும் அப்படி இருந்த எனக்குப் பெருமைன்னு நினைத்தேன்.. போதாததுக்கு.. படிக்காத ஒம் பொண்ணை ஏதாவது கிராமத்திலே கட்டிக் கொடுத்துடுன்னு என்னைச் சீண்டுறமாதிரி பேசிபுட்டான்..
“அந்த வெறியிலே நான் நல்ல படித்த பாரீன் மாப்பிளையா.. கட்டிகுடுக்கிறேன்னு சொன்னேன்ப்பூ.. ஆனா இப்படிக் கொரங்க புடிச்ச கதையாயிடிச்சே.. என் பொண்ணு கதி இனி என்னாகுமோ..", என்று குமரேசனும் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டார்..
"யோவ் யாரை கொரங்குங்கிறே?.. ஃப்ராடு பயலே.. நல்லா மக்கு மந்தியா பொண்ணை வச்சிட்டு பேசுகிறதைப் பாரு..", என்று எகிறினார் அருணின் தந்தை..
குமரேசனின் சித்தப்பன் முறையில் இருந்த ஒருவர்.. "ஓய் போதும்லே.. அதான் நீங்க பொண்ண கட்ட மாட்டேன்னுட்ட இல்லே.. இனி என்ன பேச்சு உன் கூட.. எடத்தைக் காலி பண்ணு.. ஏலேய் குமாரு.. போனது போகட்டும்லே.. இப்பவும் கெட்டு போகலை.. நம்ம ஜாதி ஜனத்திலே இல்லாத மாப்பிள்ளையா.. இங்கனயே யாராவது இருந்தாக்கா பேசி முடிவு எடுத்துடலாம்..", என்றவர்,
"என்ன ஜனங்களே.. நம்ம பொண்ணு கதை இப்படி ஆகிடுச்சே.. இத்தினி பேரு இருக்கிறோம்.. யாராவது இந்தப் பெண்ணைக் கட்டிட்டு கரையேத்த சம்மதமா?.. சொல்லுங்கவே.. பாவம் நம்ம குமரேசு.. நொடித்துப் போயிட்டான்.. வேதாவுக்கு என்ன குறைச்சல்..", என்றபடி கூட்டத்தைச் சுற்றிப் பார்த்தவர் கண்களில் பட்டாள் கண்ணாத்தா கிழவி..
"ஆத்தா.. உனக்கு இரண்டு பேரப் புள்ளைகளாச்சே.. அதிலே ஒருத்தனுக்கு நம்ம பிள்ளையைக் கட்டிக்கறியா.. லேய் சத்திவேலு.. உன் மூத்த புள்ள கதிருக்கு வேதாவை கட்டிக்கச் சம்மதமா?..", என்று நேரடியாகவே கேட்டது பெருசு..
ஒரு கணம் கதிரால் தன் அதிர்ஷ்டத்தை நம்பவே முடியவில்லை.. 'நமக்கு வேதா கிடைத்தால் நன்றாய் இருக்கும்.. நல்ல பெண்.. எனக்கேற்றவள்..', என்று நினைத்தவன் சந்தோஷமாய்த் தன் தந்தையைப் பார்த்து முறுவலித்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்..
பழைய பகையை மனதில் வைத்துக் கொள்ளாமல் சக்திவேல் தன் சம்மதத்தைச் சொன்னவுடன் குமரேசனுக்கு இன்னமும் மனதில் ஆத்திரம் துளிர் விட்டது..
‘படுபாவி.. இவன் பையனுக்கு நான் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னதாலே தானே இந்தக் கிழவி குட்டையைக் குழப்பிடிச்சு.. இப்ப பெரிசா பெரியமனுசன் மாதிரி சம்மதம் சொல்லுறான்..
"இவனும் இவன் பையனும்.. கிளி மாதிரி இருக்குற வேதாக்கு நல்லா அரிசி மூட்டைக் கணக்கா பிள்ளையைத் தலையில கட்டுகிறதாவது.. அதுக்கு என் பொண்ணு இப்படியே இருந்துடலாம்..’ என்று நினைத்து..
"அதெல்லாம் சரிப்படாது சின்னப்பூ.. அது வேண்டான்னு ஏற்கனவே முடிவு செஞ்சது தானே இது.. இப்ப சரி வராது..", என்று முறுக்கிக் கொண்டார் குமரேசன்..
"மாப்பிள்ளை என்ன இது.. அதான் அவங்களே ஆசைப்பட்டுக் கேக்குறாங்க இல்லை.. நல்ல சம்மந்தம்.. இப்படி நீங்க பேசுகிறது சரி கிடையாது..", என்று அவரைச் சாந்தப் படுத்த முயன்றான் ராஜேந்திரன்.
"இல்லை மச்சான் இதெல்லாம் சரிவராது.. நான் துணிந்து ஒரு உண்மையை மறைத்தேன்.. ஏன்.. என் பொண்ணுக்கு நல்ல படித்த மாப்பிள்ளையா வெளிநாடு போனவரோ.. இருக்குறவரோ வேணுமின்னு தானே.. இப்போது போய் ஒண்ணும் இல்லேன்னதும் இப்படி அதிகம் படிக்காதவனுக்குக் கட்டிக் கொடுக்க என் மனசு ஒப்பலை.."
"குமரேசா.. இதென்ன பிதற்றல்.. படிக்கலேன்னாலும் என் பையன் எதுலையும் குறைந்தவன் இல்லை.. நீ இப்படிப் பேசுகிறது சரியில்லை.." எனக் கோபமாகத் தொடங்கிய சக்திவேலை பார்த்து..
நக்கலாகச் சிரித்த குமரேசன், “அதான் எல்லாத்துக்கும் தெரியுமே.. எதுவும் குறைச்சல் இல்லைன்னு.. ஒன்னைத் தவிர..", என்று திமிராகப் பேசத் தொடங்கினார்..
தன் உருவத்தைக் கிண்டலடிப்பதை புரிந்து கொண்ட கதிர்.. ஒரு கணம் வேதனைப் பட்டாலும் அடுத்தக் கணம் சுதாரித்து,
"ஏன் மாமா இப்படிப் பேசறீங்க.. ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு கண்கலங்காமல் பாதுகாக்கிற அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கு.... நீங்க என்ன வெள்ளையும் சொள்ளையுமா டிரெஸ் போட்டுகிட்டு ஸ்டைலா இங்கிலிஷ் பேசிட்டுத் திரிஞ்சாதான் தகுதியானவனென்று சொல்லுறீங்களா.."
"ஆமாம்டா மாப்பிள்ளை.. அப்படித்தான்.. இந்த ஊரிலே வெயிலிலே வாடி வதங்கி விவசாயம் செஞ்சு.. ரைஸ் மில்லு அது இதுன்னு உனக்குச் சொத்து இருந்தாலும் கூட.. உனக்கும் வராத ஓண்ணு இருக்கில்ல.. அதாண்டா படிப்பு.. அத உன்னாலே வாங்கிட முடியுமா?.. இல்லை அது கொடுக்கிற மரியாதையைத்தான் நீ எதிர் பார்க்க முடியுமா? சொல்லுப்பா..", என்று நேரடியாய் தாக்கத் தொடங்கினார் குமரேசன்..
"செ.. இதெல்லாம் மீறி மனுஷத்தனம்னு ஒண்ணு இருக்கு மாமா.. அது இருந்தாப் போதும் எல்லாப் பதவியும் பட்டமும் தானா வந்து சேரும்.. படிப்பு நம்ம வாழ்க்கையை மேம்படுத்தும் தான்.. இல்லேன்னு சொல்லலை.. ஆனா படிக்காத எல்லோரும் வீணா போனதும் இல்லை.. நம்ம தலைவர்களே பாதிப் பேருக்கு ஒழுங்கான கல்வி இல்லை அது தெரியுமா உங்களுக்கு.. இப்படிப் பேசுறீங்களே.."
"அதெல்லாம் எனக்கும் தெரியும் மாப்பிள்ளை.. நீ இங்க சந்திலே சிந்து பாடத் தேவையில்லை.. என் பொண்ணை எப்படிக் கரையேத்தறதுன்னு நான் பாத்துக்கறேன்.. நீ கவலைப்படாதே.. சித்தப்பா இதெல்லாம் சரிவராது.. கல்யாணம் நின்னுடுச்சுன்னு ஒரு போர்டு போட்டுடலாம்..", என்று அவர் பேசிக் கொண்டு இருக்கும் போதே..
ஒருவன் ஓடி வந்தான்..
"ஐயா.. அம்மா அரளி விதையை அரைச்சு முழுங்கிடுச்சு.. ரூமுக்குள்ளே தாப்பா போட்டுகிட்டாங்க.. கதவை உடைக்கவேண்டும் வாங்கய்யா..", என்று கூவினான்..
"அய்யோ அம்மா..", என்று கழுத்திலிருந்த மாலையைக் கழட்டி வீசிவிட்டு வேதா ஓடத் தொடங்கினாள்..
"அய்யோ கல்யாணி..", என்று ராஜேந்திரன் அவள் பின்னே ஓட.. அனைவரும் பின் தொடர்ந்தனர்..