aas2022-writer
Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-14
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-14
கிணற்றைச் சுற்றி மீரஜாவுடன் விளையாடிய சிறுவனின் கையிலிருந்த பொம்மை கிணற்றுக்குள் விழுந்தது…
இருவரும் கிணற்றுக்குள் எட்டிப் பார்க்க, பொம்மை கிணற்றின் அடியில் இருந்த ஒரு சிறு திண்டில் விழுந்திருந்தது.
"அச்சச்சோ… இப்ப என்ன பண்றது?" என்ற மீரஜாவைப் பார்த்துச் சிரித்த சிறுவன்,
"விடுக்கா… அப்புறமா வந்து எடுத்துக்கிறேன்." என்று கூறி விட்டு ஓடிவிட்டான்.
மீரஜா கிணற்றை எட்டிப் பார்ப்பதை பார்த்த அப்பத்தா, வேகமாக மீரஜாவின் அருகில் வந்து,
. "இங்க எல்லாம் எட்டிப் பார்க்கக் கூடாது மீராக்குட்டி! ஆமா எங்கே உங்கூட விளையாடிட்டிருந்த பையன்?" என்று கேட்டார்.
அதற்கு மீரஜா, "அவனோட பொம்மை இதுக்குள்ள விழுந்திருச்சு அப்பத்தா" என்று கிணற்றைக் காட்ட,
அப்பத்தா கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தால் ஒரு பொம்மை இருந்தது.
பொம்மையை எடுப்பது கடினம் என்று உணர்ந்த அப்பத்தா, "இத எடுக்க முடியாது டா. அவன் திரும்பி வந்தா சொல்லு. வேற பொம்மை வாங்கிக் குடுத்துடுவோம்." என்று கூற, தலையாட்டிக்கொண்டு அப்பத்தாவைப் பின் தொடர்ந்து சென்றாள்.
சாமியை வணங்கி விட்டு மதிய உணவுக்காக எடுத்து வந்திருந்த உணவைக் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
முதலில் சாப்பிட்டு முடித்த மீரேஜா, அந்த மண்டபத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும்போது அந்தச் சிறுவன் ஈரம் சொட்ட மறுபடியும் வந்து நின்றான்.
அவன் கையில் இருந்த (கிணற்றுக்குள் விழுந்த) பொம்மையை மீரஜாவிடம் ஆட்டிக் காட்டினான்.
உடனே தன் அப்பத்தாவை கூப்பிட்டு, "அப்பத்தா அந்தக் கிணத்தில் இருந்த பொம்மையை அந்தத் தம்பி எடுத்துட்டான். அங்க பாருங்க." என்று அந்தச் சிறுவன் இருந்த பக்கம் மீரஜா கையைக் காட்டினாள்.
அப்பத்தா திரும்பிப் பார்த்தால், அங்கே யாருமே இல்லை!
மீரஜாவும் திரும்பிப்பார்த்தாள்.
அப்பத்தா மீரஜாவிடம், "அங்கே யாருமே இல்லையே மீரா? நீ யார சொல்ற? எங்க பாத்த?" கேட்க,
"ஆமா! அங்க யாருமே இல்லை! அவன் ஓடிப் போயிட்டான் போலிருக்கு." என்று கூறினாள்.
அப்பத்தா மீரஜாவிடம், "கழுதை! சும்மா சொல்லி விளையாடுறியா?" என்று சிரித்தபடி கேட்க,
"இல்லை அப்பத்தா. நிஜமாலுமே அவன் பொம்மையை எடுத்துட்டான்." என்ற மீரஜாவின் கண்களில் தெரிந்த உண்மையைக் கண்டவர், அவளை அழைத்துக்கொண்டு கிணற்றடிக்குச் சென்று பார்த்தார்.
கிணற்றுக்குள் முன்பு பார்த்த திண்டில் பொம்மை இல்லை!
அதைப் பார்த்தவருக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. இருந்தாலும்,
'தண்ணீருக்குள் விழுந்திருக்குமோ?' என்று உற்றுப் பார்த்தவர்,
"பொம்மையைக் காணமே?" என்று மீரஜாவும், அப்பத்தாவும் ஒரே குரலில் கூறிக் கொண்டிருக்கும்போது,
அந்த வழியாகச் சென்ற ஒரு மனிதர், "கிணத்துக்குள்ள எட்டிப் பார்க்கிறேன்னு விழுந்துடாதீங்க. கிணறு ரொம்ப ஆழம்." என்று கூறினார்.
அதைக்கேட்டுத் திரும்பிய அப்பத்தா, அந்த மனிதனிடம், "கிணத்துக்குள்ள ஒரு பொம்மை விழுந்துடுச்சு. அத எடுத்துத் தர முடியுமா?" என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதன் சிரித்துவிட்டு, "ஏம்மா உங்களுக்கு விளையாட்டா இருக்கா? கிணத்துல பாசி பிடிச்சு இருக்கு பாருங்க. அதுக்குள்ள எப்படி இறங்க முடியும்? இறங்கினாலும் எப்படி ஏற முடியும்?"
"இதுக்குன்னு இருக்கிற வேற யாரையாவது கூட்டிட்டு வந்தா எடுக்க முடியுமா?" என்று அப்பத்தா கேட்க,
"இதுக்குள்ள நாங்கள்லாம் இறங்கி ரொம்ப வருஷம் ஆச்சும்மா… இப்ப தண்ணிய மட்டும் வாளிய வச்சு எடுக்கிறதோடு சரி."
"அப்பப் பொம்மய எடுக்கமுடியாதா? ரொம்ப விலைப்பா, அதான்…" என்ற கூறிய அப்பத்தாவை,
'இந்தம்மா என்ன சின்னப் புள்ள மாதிரி அடம்பிடிச்சுக்கிட்டிருக்கு!' என்று நினைத்தவன்,
"எதையாவது பண்ணி வம்ப இழுத்து விட்டுடாதீங்க. கிணத்துக்குள்ள விழுந்துட்டா தூக்கக் கூட ஆள் கிடையாது." என்று கூறிவிட்டுச் சென்றான்.
'பிறகு எப்படி அந்தச் சிறுவன் எடுத்திருக்க முடியும்?' என்று யோசித்த அப்பாத்தா, மீரஜாவிடம், "நீ அந்தப் பையனப் பார்த்தியா?" என்று மறுபடியும் கேட்டார்.
"ஆமாம்! அவன் கையில் பொம்மையும் இருந்துச்சு அப்பத்தா!" என்று சொன்னாள்.
அப்பத்தாவிற்கு, 'என்ன நடந்திருக்கும்?' என்று எதுவும் புரியவில்லை.
"சரி வா!" என்று மீரஜாவைக் கூட்டிக் கொண்டு கோயிலுக்குள் சென்று,
கோவில் மண்டபத்திற்குள் இருந்த திருநீறை, மீரஜாவின் நெற்றியில் பூசி,
"நாகநாதா! அந்தப் பொம்மையைக் கிணத்துக்குள்ள நானும் பார்த்தேன். மீரா கூட விளையாண்ட பையனையும் பார்த்தேன். ஆனா, அந்தக் கிணத்துக்குள்ள யாரும் இறங்க முடியாதுன்னு சொல்றாங்க. இவ, அந்தச் சின்னப் பையன் பொம்மைய எடுத்துட்டு வந்ததா சொல்றா! என்ன நடந்துச்சுன்னு தெரியல. எனக்கென்னமோ கொஞ்சம் பயமாயிருக்கு… பிள்ளைய காத்துகருப்பு அண்டாம காப்பாத்துப்பா." என்று மனமுருக வேண்டினார்...
பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியெங்கும் அந்தப் பையனைத் தேடினாள் மீரஜா. 'அவன் பொம்மையை எடுத்து விட்டான்' என்று காட்ட விரும்பினாள்.
பஸ் நிலையத்திற்குச் சென்று பஸ் ஏறினர்.
ஏதோ ஒரு குறுகுறுப்பு இருத்ததால், மீரஜா அருகில் அமர்ந்தார் அப்பத்தா.
பஸ் புறப்படும் நேரம், "அக்கா!" என்ற குரல் கேட்டு ஐன்னலோரம், அமர்ந்திருந்த மீரஜா திரும்பிப் பார்க்க,
ஒரு மண்திட்டில் கையில் பொம்மையுடன் அமர்ந்தபடி "டாட்டா" காட்டிக் கொண்டிருந்தான் மீரஜாவுடன் விளையாடிய சிறுவன்.
"அப்பத்தா தம்பி கைல பொம்ம!" என்று குதூகலமாகக் கத்திய மீரஜாவின் இதழ்களை மென்மையாக மூடிய, அப்பத்தா, பஸ்சில் திரும்பிப் பார்த்தவர்களை அசடு வலிய பார்த்துச் சிரித்தார்.
ஆனாலும் பஸ் நகர ஆரம்பிக்கவும், மீரஜா காட்டிய திசையில் அப்பாத்தா பார்க்க,
அங்கே அதே சிறுவன், பொம்மையுடன் அமர்ந்து மீரஜாவைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டிருந்தான்.
அப்பத்தாவால் தன் கண்களை நம்ப முடியவில்லை.
அந்தச் சிறுவன் கையில் கிணற்றின் திட்டில் இருந்த அதே பொம்மை இருந்தது.
'இது எப்படிச் சாத்தியம்?' என்று நினைத்தார்.
பேருந்து, அடுத்து வந்த திருப்பத்தில் திரும்பும் வரை சிறுவனும், மீரஜாவும் கையசைக்க, அப்பத்தாவிற்குத்தான் எதுவும் புரியவில்லை…
புன்னைவனத்திற்கு வந்ததும் மீண்டும் மீரஜாவைத் தனியே அழைத்த அப்பத்தா, "அந்தப் பொம்மைப் பையனை இதற்கு முன்னாடி எங்கயாவது பார்த்திருக்கியா?" என்று கேட்டார்.
"இல்லப்பத்தா."
"தாமரக்குளத்துல இருக்கிற நம்ம வீட்டுக்கு, ஒரு பையன் வருவானே, அவன்தான் இவனா?" என்று அப்பத்தா கேட்க,
"இல்லை! இல்லை! அவன் நந்தன்… இவன் தம்பி…"
"இது என்ன? இவளோட விளையாடுற பசங்கதான் வித்யாசமா இருக்கிறாங்களா? இல்ல... எனக்குத்தான் அப்படித் தெரியுதா?" என்று யோசித்தவர் மீரஜாவிடம்,
"தாமரைக்குளத்து பையனையோ இன்னைக்குப் பார்த்த பையனையோ மறுபடியும் பார்த்தா அப்பத்தாட்ட கூட்டிட்டு வா… ம்ம்ம்? அவங்களுக்கும் ரவா லட்டு தர்றேன்." என்றதும்,
"சரிங்கப்பத்தா… தினமும் ஸ்கூல்ல லன்ச் டைமுக்கு நந்தா வருவான்... நாளைக்கு வரும்போது கூட்டிட்டு வர்றேன்."
"நந்தா ங்கிறது தாமரைக்குளத்துல இருந்த பையன்தானே?"
"ஆமா"
"அவன் எப்படி லன்ச் டைமுக்கு ஸ்கூலுக்கு வர்றான்?"
"நடந்துதான்."
"அது இல்லடா… அவன் தாமரைக்குளத்துலதானே இருந்தான்? அப்புறம் எப்படி இங்க வந்தான்?"
"நான் வந்தமாதிரிதான்"
"கடவுளே! தலைய பிச்சுக்க வக்கிறாளே" என்ற அப்பத்தா, சற்றுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, "சரி! நாளைக்கு அவன நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வா. சரியா?"
"ம்ம்ம்…"
தொடர்ந்து மதிய உணவு நேரத்தில் வந்த நந்தன், அடுத்து வந்த நாட்களில் மதிய உணவு நேரத்தில் பள்ளிக்கு வரவில்லை…
காலையில் பள்ளிக்கு மீரஜா செல்லும்போது வந்து, அவளுடன் சேர்ந்து பள்ளிவரை பேசியபடி நடந்து சென்றான் அல்லது கேம்ஸ் பீரியட்டில் வந்து, விளையாடிவிட்டு சென்றுவிடுவான்…
அப்பொழுதும், அப்பத்தா அவனை வீட்டுக்குக் கூட்டிட்டு வரச் சொன்னதைச் சொல்ல மறந்துவிடுவாள் மீரஜா.
இதை அப்பத்தாவிடம் மீரஜா சொல்ல,
மீரஜாவுடன் விளையாடும் இரு சிறுவர்களின் வித்யாசமான நடவடிக்கைகளை அப்பத்தா, தாத்தாவிடம் கூறினார்.
"நந்தன்ட்ட, அவன, நான் வீட்டிற்குக் கூட்டிட்டு வரச்சொன்னதையே மீராக்குட்டி சொல்லல, ஆனா, அவன் இப்பலாம் லஞ்ச் டைமுக்கு வர்றதில்லையாங்க…"
"எதார்த்தமா கூட நடந்திருக்கலாம் முத்துரா."
"அப்போ... நயினார் கோயில்ல பார்த்த பையன்?... இதுல ஏதோ இருக்குங்க…" என்று அப்பத்தா கலங்கியதைப் பார்த்த தாத்தா,
"நீ பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்லைனுதான் நினைக்கிறேன்… இருந்தாலும் உனக்காக இதப் பத்தி தெரிஞ்சுட்டு வந்து சொல்றேன். சரியா?"
"ம்ம் சரிங்க!"
"அந்தப் பசங்களப் பத்தி நாம எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னு? உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?"
"இல்ல… நாம ஏன் மீராக்குட்டியோட ஜாதகத்த பார்க்கக் கூடாது?"
"ஹாஹ்ஹஹா… அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் முத்துரா?"
"அந்தப் பசங்களப் பத்தி தெரிஞ்சுக்க எந்த வழியும் இல்லன்றப்ப, அவ ஜாதகத்துல ஏதாவது இருக்கான்னு பார்க்கலாம்ல?" என்ற அப்பத்தாவின் தவிப்பைப் பார்த்தவருக்கு மறுக்கத்தோன்றவில்லை.
"சரி! நாளைக்கே மீராக்குட்டிக்குப் புண்ணியானம் பண்ணிப் பேர் வச்சார்ல அவரப் போய்ப் பார்க்கிறேன். "
"இந்த ஊர்க்காரர் வேண்டாங்க… விசயம் ஊர் முழுசும் பரவிடும்…"
"இதுல என்ன இருக்கு முத்துரா?"
"மீராக்குட்டி, பொம்பளப் பிள்ளைங்க… எதுக்கு ரிஸ்க்கு?"
"அப்போ… பாபநாசத்துல இருக்கிற நம்ம காலகணித சித்தர்ட்ட, நம்ம மீராக்குட்டியோட ஜாதகத்தக் கொண்டுபோய்க் காட்டி, விபரம் கேட்டுவர்றேன். ம்ம்?"
"அவர், இஷ்டப்பட்டாத்தானே அவரப் பார்க்க முடியும்?"
"பரவாயில்ல… ரெண்டு நாள் இருந்து கூடப் பார்த்துட்டு வர்றேன். அவ ஜாதகத்துல ஒன்னும் இருக்காது... நீ நிம்மதியா இரு." என்று கூறியவருக்கே ஆழ்மனதில் 'ஏதோ இருக்குமோ?' என்று தோன்றியது.
அடுத்தநாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் புன்னைவனத்திலிருந்து பாபநாசத்தை நோக்கி, மெரூன் கலர் செவரலட் டவேரா, சுப்பையா பிள்ளையைச் சுமந்து கொண்டு சென்றது.
டிரைவர் நல்லசிவம் வண்டி ஓட்ட, அவனுக்கருகில், சுப்பையாபிள்ளையின் ஃபினான்ஸ் கம்பனியான, சுபத்ரஜாவில் பணிபுரியும் கடைநிலை ஊழியர், முத்து அமர்நதிருந்தான்.
நல்லசிவத்திற்குப் பேச்சுத்துணைக்காக முத்துவை அழைத்துச் சென்றார். இருவரும் மெல்லிய தொனியில் பேசிக்கொண்டே வர,
அவர்களுக்குப் பின்புறம் சீட்களை இணைத்து வடிமைத்திருந்த பெர்த் பொலிருக்கும் படுக்கையில் சுப்பையாபிள்ளை உறங்கிக்கொண்டு சென்றார்.
காலை ஏழு மணிக்கெல்லாம் திருநெல்வேலியை அடைந்தவர்கள், வண்டியைத் தாமிரபரணி ஆற்றங்கரையில் நிறுத்தி,
காலைக்கடன்களை முடித்துவிட்டு, அப்பத்தா கொடுத்து அனுப்பிய இட்லி, காரச்சட்னியை சாப்பிட்டதும், பாபநாசத்தை நோக்கி, செவரலட் டவேரா ஓடியது.
"பாபநாசத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் போகனும்? எத்தன மணிக்குப் போவோம்?" என்று முத்து கேட்க,
"நாற்பத்து இரண்டு கிலோமீட்டர் இருக்கும்… இன்னும் ஒருமணிநேரத்துல போயிடலாம்" என்றான் நல்லசிவம்.
"இன்னும் ஒரு மணிநேரத்துலயா? நாம ரெண்டு பேராவது, அங்கபோய்ச் சாப்பிட்டிருக்கலாமே?"
"அங்க இருக்குற பாபநாச அருவில நீங்க குளிக்கப்போறதில்லயா?"
"அருவிக்கா போறோம்?"
"ஐயா பார்க்கப்போற சித்தர், அருவிக்குப் பக்கத்துலதான் இருக்காரு. அதனால எப்ப பாபநாசம் போனாலும் அருவில குளிச்சிட்டுதான் சித்தர பார்க்கப் போவாங்க."
பாபநாசம் வந்ததும்,
"இங்கயா அருவி இருக்கு?" என்று வெளிப்புறம் 'அருவி தெரிகிறதா?' என்று ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு வந்த முத்துவிடம்,
'இன்னும் கொஞ்ச தூரம் போனா பழைய பாபநாசம் வந்துடும். அங்கதான் அருவி இருக்கு. அந்த அருவி ரொம்ப விசேசமானதுன்னு ஐயா சொல்வார்." என்றவன்,
ரியர்வியூ கண்ணாடி வழியே படுக்கைசீட்டில் சம்மணம் இட்டு அமர்ந்து, திருநெல்வேலியில் வாங்கிய பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த சுப்பையாபிள்ளையிடம்,
"பாபநாச அருவீல குளிச்சா நல்லதுதானங்கய்யா?" என்று கேட்டான்.
பேப்பரை மடித்து, வைத்துவிட்டு, முத்துவை நோக்கி, "நீ பாபநாசம் வந்ததில்லையா முத்து?" என்று கேட்டார்.
"இல்லைங்க ஐயா!"
"ஒவ்வொரு மனுசனும் வாழ்க்கை யில வரவேண்டிய இடம் இது… பொதிகைமலை கேள்விப்பட்டிருக்கியா?"
"ம்ம் பாடபுத்தகத்துல, சினிமால லாம் சொல்லக் கேட்டிருக்கேங்க."
"அந்தப் பொதிகைமலையில இருந்துதான் அகத்தியர் அருவி கொட்டுது."
"நீ பாபநாச அருவின்ன?" என்று நல்லசிவத்திடம் முத்து கேட்டான்.
"ரெண்டும் ஒன்னுதான்." என்று நல்லசிவம்சிரித்தான்.
"ஓ… நீங்க சொல்லுங்க ய்யா!"
"பொதிகைமலையில சந்தனச் சோலைகளும், பலவகை அரிய மூலிகைகளும் நிறைஞ்சிருக்கு… அங்க வீசுற தென்றல் காத்துக்கே மணம் இருக்குன்னா பார்த்துக்கோயேன்."
"அப்படியா?"
"ம்ம்… அங்கிருந்துதான் தாமிரபரணி ஆறு உருவாகி, இந்த முலிகையோட சத்தெல்லாம் சுமந்துகிட்டு அருவியா கொட்டி, ஆறா ஓடுது…"
"இப்ப நாம பல்லு விளக்கி, முகம் கைகால் கழுவுனோமே அந்த ஆத்தையா சொல்றீங்க? எவ்வ்வளவு தண்ணி ஓடுது… ம்ஹூம்... நம்ம வைகை ஆறும் இருக்கே... சீசனுக்குத்தான வருது"
"ஹாஹ்ஹஹா… அதுசரி!"
"வழக்கம்போலப் பேச்ச மாத்திட்டேனா? நீங்க இந்த அருவிய பத்தி சொல்லுங்கய்யா."
"அதான் சொன்னேனே? பாபநாச அருவி, மூலிகையில இருக்குற நல்லதையெல்லாம் எடுத்துக்கிட்டு விழுதுன்னு, அந்த அருவீல குளிச்சா மனசுக்கும் உடம்புக்கும் ரொம்ப நல்லது." என்று கூறும்போதே, அகத்தியர் அருவி கண்ணுக்கு எட்டியது.
மூவரும் அங்கு சென்று அருவியில் நீராட ஆயத்தமானர்.
அருவியில் குளித்துவிட்டு, அங்கிருந்து நடைதூரத்திலிருந்த குடிலுக்குச் சென்று காலகணிதசித்தரின் சீடரிடம்,
"சித்தர பார்க்கப் புன்னைவனத்துலருந்து வந்திருக்கேன்…" என்று கூறினார்.
"ஸ்வாமி வெளிய போயிருக்கார்."
"சரி! நான் காத்திருக்கேன்…" என்று கூறிவிட்டு, சித்தரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார்.
மதிய உணவு முடிந்தபிறகு சுப்பையாபிள்ளை, குடிலைச் சுற்றியிருந்த பிருந்தாவனத்திற்குச் சென்று அங்குள்ள பன்னீர்பூ மர கல்மேடையில், போர்வையை விரித்து, படுத்து உறங்கி விட்டார்.
அதேவேளையில், மலைமேலுள்ள மூலிகை அடர்ந்த பகுதியில் இருந்த சிறிய பாறைத்திட்டின் மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார், காலகணித சித்தர்.
ஆழ்நிலை தியானத்தின் அரைமயக்க நிலையில் இருந்த சித்தரின் எதிரிலிருந்து, யாரோ குறகுறுவெனப் பார்ப்பது போன்ற உணர்வு வந்தும், கண்டுகொள்ளாமல் தியானம் செய்தவருக்கு,
மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல், யாரோ தொடர்ந்து பார்ப்பது போன்ற ஒருவிதமான குறுகுறுப்பு மிகவும் தொந்தரவு செய்தது.
தானாக, தியானம் கலைய, இரு உள்ளங்கைகளையும் உரசி முகத்தை மூடி மெல்ல கண்களைத் திறந்தார்.
வார்த்தைகளின் எண்ணிக்கை -1283
கண்ணன் வருவான்!




