கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆயிரம் காலத்துப் பயிர் 2

Rajalakshmi Narayanasamy

Moderator
Staff member
ஒரு சிறு பெண்ணிடம் பல்பு வாங்கிய தன் தந்தையைக் கண்டு வாயை மூடி நமட்டுச் சிரிப்பு உதிர்த்தான் சிவா.


"டேய் நீ வேற மானத்தை வாங்காதே ஏன் இப்படி சிரிக்கிற?" என்று தனது அருந்தவப் புதல்வனைப் பார்த்து முறைத்தார் தந்தையானவர்.


"பின்ன என்னப்பா? நான் தான் முதலிலேயே சொன்னேனே, இப்படி காலங்காத்தால அடுத்தவங்க வீட்டு முன்னாடி போய் நிற்க வேண்டாம் அப்படின்னு. நீங்க கேட்டாத்தானே? இப்போ இப்படி பல்பு வாங்கிட்டீங்களே" என மீண்டும் சிரித்தான்.


"தோட்டம்தொரவு என்று காட்டு வேலை பார்க்கறவங்க அவங்க, நேரம் போய் வந்தா பார்க்க முடியாதுன்னு அவங்க காட்டுக்கு கிளம்பும் முன்னாடி பிடிச்சுடலாம் என்று இந்நேரம் உன்னைக் கூட்டிட்டு வந்தேன். இல்ல எனக்கு மட்டும் இப்படி காலங்காத்தால வந்து நிக்கணும்னு ஆசையா சொல்லு" என சலித்துக் கொண்டார் ராமர்.


"நீங்க சொல்ற வியாக்கியானம் எல்லாம் சரி தான். ஆனா ஒன்னு, முன்னாடியே சொல்லிட்டு வந்து இருக்கணும். இல்ல, இருந்து சாயங்காலமா பார்த்துட்டுப் போகணும். அப்படி இல்லையா அவங்க காட்டுக்கே போய் பார்க்கலாம். இவ்வளவு வழிகள் இருக்கும் போது அதையெல்லாம் விட்டுட்டு பிரம்ம முகூர்த்தத்தில் வந்து நின்னா , இப்ப இருக்கிற நேரம் காலத்துக்கு அந்த பொண்ணு ஏதோ நீங்க கடத்திட்டு போக வந்த மாதிரி பேசிட்டு போறாங்க" என்றான்.


"இப்ப இருக்கிற பிள்ளைக கடத்திக்கிட்டு போனாக் கூட கவலைப்படமாட்டாங்க போல, தப்பிச்சி ஓடி வந்துருவாங்க. ஆனாக்க, கல்யாணம் என்று சொன்னா தான் கடுகு வெடிக்குது முகத்தில். யாரோ காலங்காத்தால பொண்ணு பார்க்க வரோம்னு கடுப்பேத்தி இருப்பாங்க போல, அதான் இவ்வளவு கோபப்படுது குழந்தை" என்று தன்னிடம் முகம் கூட கொடுத்து பேசாத அந்தப் பெண்ணிற்காக பரிந்து பேசினார் ராமர்.


"சரி வாங்க இன்னொரு தடவை கதவை தட்டினா மிளகாப்பொடிய கொண்டு வந்து முகத்தில் போட்டாலும் போட்டுடுவாங்க. நாம அக்கம்பக்கம் எங்கேயாவது விசாரிச்சு அவங்க காட்டுக்குப் போயி பார்த்துட்டு கிளம்பலாம் நேரமாகுது" என மகன் கூறவும் தந்தையும் மகனும் திரும்பி தங்களது வாகனத்தை நோக்கி நகர்ந்தார்கள்.


சரியாக அதே நேரம் தனது டிவிஎஸ் 50 இல் அங்கு வந்து சேர்ந்தார் ராகவன். ராமரைக் கண்டதும் முகத்தில் பிரகாசமான வெளிச்சத்தை படர விட்டவர், "டேய் வாடா வாடா என்ன வந்துட்டு உடனே திரும்பிப் போற? எப்போ வந்த?" என்று வாய் நிறைய அழைத்துக்கொண்டு வாகனத்தை நிறுத்தி விட்டு வந்து தனது பால்ய கால நண்பரை அணைத்துக் கொண்டார்.


"இங்க பக்கத்துல குருவிகுளத்துக்கு ஒரு வேலை விஷயமா நேத்து வந்தோம். வேலை முடிய பாதி ஜாமம் ஆகிடுச்சு, அந்நேரம் வந்து உன்னை தொல்லை செய்யக் கூடாதுல்ல, அதான் காலைல நீ காட்டுக்குப் போக முன்னாடி வந்துடலாம்னு வந்தேன்.. நீ நான் வரதுக்கு முன்னவே போய்ட்ட போல.. பாப்பா சொன்னா.. அதான் காட்டுக்கே வந்து பார்த்துடலாம்னு கிளம்புனோம், நீயே வந்துட்ட" என நீளமாகப் பேசி முடித்தார் ராமர்.


தனது மகளைப் பற்றி கேட்டதும், அவள் இவர்களிடம் என்ன வாய்த்துடுக்காக பேசினாளோ என்று கவலை கொண்டார் ராகவன். எனவே மன்னிப்புக் கோரும் வகையில், "அது ஏதோ சின்னப் பொண்ணு, ஏதாவது துடுக்குத்தனமா பேசியிருந்தா மனசுல வச்சிக்காத" என்று தன் நண்பனிடம் சங்கடமாகப் பேசினார்.


"அட நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் பேசல, கூப்பிட்டு உட்கார வெச்சு டீ கூட போட்டுக் கொடுத்துச்சு, அத குடிச்சிட்டு தான் கிளம்புனோம்" என்று சூழலை சமாளிக்கப் பார்த்தார் ராமர்.


ஆனால் தன் மகளுக்கு சுடுதண்ணீர் கூட வைக்கத் தெரியாது என்பதை நன்கு அறிந்திருந்த ராகவன் அவள் டீ போட்டுக் கொடுத்தாள் என்று கூறியதிலிருந்து 'ஏதோ வில்லங்கமாக தன் மகள் பேசி இருக்கிறாள்' என்பதை உறுதி செய்து கொண்டார்.


"சரி சரி வாங்க, உள்ள வாங்க" என விருந்தாளிகளை வரவேற்று வீட்டுக் கதவைத் தட்டினார்.


" செண்பா.. கதவ திற" என்ற குரலில் விரைந்து வந்து கதவைத் திறந்தவள், தான் இப்போது தான் பேசி அனுப்பிய பெரியவரோடு தன் தந்தை நிற்கவும் குற்றவுணர்வோடு திருதிருவென விழித்தாள்.


தரையைப் பார்ப்பதும், தந்தையைப் பார்ப்பதுமாக இருந்தவளைக் கண்டு வேடிக்கையாக இருந்தது சிவாவிற்கு.


"வந்தவங்கள வாங்கன்னு கூப்பிட மாட்டியா?" என தன் மகளிடம் மெலிதாக உறுமினார் ராகவன். அவரது கண்டிக்கும் கண்களைக் கண்டே வாட்டமுற்றவள், "வாங்க வாங்க" என கரம் கூப்பி வரவேற்று விரைந்து சென்று நீர் கொண்டு வந்தாள்.


அதற்குள் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து உட்கார வைத்த ராகவன், "போய் பெரியப்பா கடைல டீயும் நாலு வடையும் வாங்கிட்டு வா டா" என்றார்.


வேகவேகமாய் தலையாட்டி விட்டு சிட்டென பறந்தாள் செண்பா. எப்படியும் பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பார், அப்பா மிகவும் கோபமாக இருப்பார், அதனால் அப்பாவின் கோபத்தைக் குறைக்க அவர் எள் எனும் முன் எண்ணையாய் மாறி நிற்பதென முடிவெடுத்துக் கொண்டு கடையை நோக்கி விரைந்தாள்.


"ஏன் டா, வயசுப்புள்ளைய போயி கடைக்கு அனுப்புற?" எனக் கேட்டார் ராமர்.


"அதுக்கென்ன இப்ப? சின்ன கிராமந்தான இது? சுத்தி சுத்தி ஒரு ஐம்பது வீடுக இருக்கும், ரெண்டே ரெண்டு தெரு, பூராம் நம்ம சொந்தபந்தம் தான? அதுவுமில்லாம ரெண்டு வீடு தள்ளி இருக்கு கட, அதுக்கு கூட அனுப்பாம பூட்டி வைக்க இதென்ன டவுனா?" என்றவர் சிறிது தயங்கி பின், "அவ படிப்ப முடிச்சதுல இருந்து தினம் மூனு நாலு பேரு வாராக, பொண்ணு பாக்கன்னு, ஒவ்வொருத்தங்க காலைல வாசத்தொளிக்க முன்ன வந்து நிக்காக, அந்நேரம் பிள்ள தூக்கத்தோட வந்து நின்னா செரியா இருக்காதுன்னு அவங்கம்மா காலைலயே எழுப்பி கெளப்பி விட்ருதா.. அந்த எரிச்சல்ல தான் எதாவது பேசிருப்பா தப்பா நெனச்சிக்காத டா, தம்பி நீங்களும் மன்னிச்சிருங்க" என்றார் ராகவன்.


"அட நீ என்னப்பா மன்னிப்பு கின்னிப்புண்ணு கேட்டுகிட்டு, அதுவும் நம்ம பிள்ளை தானே, பெறவு காலங்காத்தால கண்ணு முழிக்க முன்ன வந்து பொண்ணு பார்க்கோம் அப்டின்னு நின்னா அது தான் என்ன செய்யும்? பாவம், படிச்ச புள்ள வேற, எங்கேயாவது வேலைக்கு போகணும்னு நினைப்பு இருக்கும் இல்ல" என்று செண்பாவிற்கு பரிந்து பேசினார் ராமர்.


"ஆமா ஆனா வர்றவங்களையும் வராதனு தடுக்க முடியல, பாவம் பொண்ணு கிடைக்காமல் ஒவ்வொருத்தரும் லோ லோன்னு அலையறாங்க, ஆம்பள புள்ள வச்சிருக்கிறவங்க பாடு பெரும் திண்டாட்டமாக தான் இருக்கு" என்றார் ராகவன்.


இப்படி மாப்பிள்ளை வீட்டார் பெண் தேடி அலைவது தொடர்பாக நடக்கும் வேடிக்கைகளும் சுவாரசியமாக அவர்களது பேச்சு நீண்டது


செண்பா டீயும் வடையும் கொண்டு வந்து அனைவருக்கும் பரிமாறிவிட்டு ஓரமாய் நின்றவள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏதோ பெண் பார்க்க வந்தவர்கள் தான் என்பது போலவே அவளது எண்ணம் சுழன்றதால் தனது விருப்பமின்மையை காட்டிக் கொள்வதற்காகவே அவர்களை நிமிர்ந்து பார்க்கவில்லை. பெரியவரோடு உடன் வந்தவர் முகத்தைக் கூட கண்டிருக்கவில்லை அவள்.


சிவாவிற்கு செண்பாவின் செய்கைகள் அனைத்தும் பெரும் வேடிக்கையாக இருந்தன. அவளது சூழல், மனநிலை என்பதை எல்லாம் யோசித்துப் பார்த்தவனுக்கு சிறிது பரிதாபமாக கூட இருந்தது. ஆனாலும் பரிதாபத்தை விட அவளது செய்கைகளின் விளைவால் எழுந்த சிரிப்பே அவன் முகமெங்கும் விரவிக் கிடந்தது.


நீண்ட காலங்களுக்குப் பின் சந்தித்த தன் நண்பனிடம் அவரது சொந்த வாழ்வு குடும்பம் தொழில் பொருளாதாரம் என பேச பல விஷயங்கள் இருந்தன ராகவனுக்கு. தங்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் தன் மகளுக்கு நண்பரை அறிமுகப்படுத்த மறந்து போனவர் பின் ஏதோ ஞாபகம் வந்தவராக, "இது என்னோட சினேகிதன் ராமர். பார்த்து பல வருஷம் ஆச்சு, நீ குட்டி குழந்தையா இருக்குறப்போ நம்ம வீட்டுக்கு வந்து இருக்கான். அப்புறம் அவங்க வேலை பாடுன்னு சந்திக்க வாய்ப்பே அமையல. இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கான், இது அவனோட மகன் பேரு சிவா" என்று முறையாக அறிமுகப் படுத்தி வைத்தார்.


அதுவரை கடுப்பும் வெடிப்புமாக பொங்கிக் கொண்டிருந்தவளின் மனதுக்குள் மழைச்சாரலாய் வந்து விழுந்த தந்தையின் வார்த்தைகளில் நிம்மதிப் பெருமூச்சு விட்டவளுக்கு, அதன் பின்பே நீண்ட நெடிய காலம் கழித்து தனது நண்பரை பார்க்க வந்த ஒரு பெரியவரை தான் அவமதித்து விட்டோம் என்பது புரிந்தது.


'இதனால் அவர்களது ஆத்மார்த்தமான நட்பு முறிந்து போயிருக்கும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா? அப்பாவின் நண்பர் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்? அவருக்கு மன சங்கடம் ஏற்படும்படி தாம் நடந்து விட்டோமே! பெண் பார்க்க வந்திருந்தாலும் கூட வயதில் முதிய பெரியவரிடம் அவ்வாறு பேசி கதவை அடைத்து இருக்கக்கூடாது தானே? வர வர ஏன்தான் இப்படி புத்தி கெட்டுப் போய் நடக்கிறோமோ' என்று தன்னைத்தானே மானசீகமாக தலையில் குட்டிக் கொண்டு சிறு தயக்கத்திற்குப் பின், "அது வந்து... என்னைய மன்னிச்சிடுங்க ஐயா, ஏதோ நான் இருந்த பதட்டத்தில் பேச தெரியாம பேசிட்டேன்" என்று கைகூப்பி மன்னிப்பு வேண்டினாள்.


தன் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டும் மகளைக் கண்டு நிம்மதியாக இருந்தது ராகவனுக்கு. ராமரும் பதறிப்போனவராக "அடடா, என்னடா இப்படி கையெல்லாம் கூப்பிகிட்டு.. ராகவன் பிள்ளை என்றால் என்ன? என் பிள்ளை என்றால் என்ன? நீயும் என் பிள்ளை மாதிரி தானே, நான் எதுவும் தப்பா நினைச்சுக்கல. அப்புறம் இந்த அய்யா சாரு எல்லாம் விற்று வாய் நிறைய மாமானு கூப்பிடு" என்று அவர் எழுந்து அவள் தலையில் கை வைத்தார் ஆசீர்வதிக்கும் விதமாக.


'இக்காலத்தில் சிறு வாண்டு கூட மன்னிப்பு கேட்கச் சொன்னால் முறைத்துப் பார்த்துக் கொண்டு ஒரு மணி நேரம் கூட அடம் பிடித்துக் கொண்டு அப்படியே நிற்கிறது. சாரி என்று ஒரு வார்த்தை உதிர்க்க மனம் வரமாட்டேன் என்கிறது. ஆனால் இந்த இளம்பெண் சற்றும் யோசிக்காமல் உடனே மன்னிப்பு கேட்டு விட்டாளே என்று அவள் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றியது சிவாவிற்கு.


அதன் பின் தான், நண்பனின் மகன் என தந்தை அறிமுகம் செய்தது நினைவு வந்து அவன் புறம் திரும்பினாள். அந்த பெரியவரோடு வந்து இருந்தது தான் நினைத்தது போல இன்னொரு பெரியவர் அல்ல, மிகவும் இளமையான அதிலும் அழகான ஓர் இளைஞன் என்பது புத்தியில் உரைத்தது செண்பாவிற்கு.


இப்படி ஓர் 'கைசில' முன் தான் என்ன மடத்தனம் செய்திருக்கிறோம் என்று சங்கோஜமாக உணர்ந்தவள், அவன் முகத்தைப் பார்த்த, அதில் தெரிந்த சிறு கேலியைக் கண்ட அடுத்த நொடி வீட்டின் உள்ளறைக்குள் சென்று நுழைந்து கொண்டாள்.


பெரியவர்கள் இருவரும் அவர்களது பேச்சு சுவாரஸ்யத்தில் அவளை கவனிக்கவில்லை என்றாலும் ,சிவா அவளைக் கவனிப்பதை மட்டுமே அல்லவா வேலையாக வைத்திருந்தான். எல்லாம் இளமை செய்யும் சேட்டை.


வெட்கம் கொண்டு ஓடும் அவளை கொண்டு மலைச்சாரல் வீசியது அவன் நெஞ்சுக்குள்.


"எங்க பரம்பர நிலம் ஒன்று தாத்தா காலத்துல கைய விட்டு போயிருச்சு, அது இப்ப விற்பனைக்கு வருதுன்னு நாமலே வாங்கிடலாம்னு வந்தோம். அந்த வேலை தான் போய்க்கிட்டு இருக்கு, அது விஷயமா அடிக்கடி வர வேண்டியது இருக்கும். பாப்போம் நீயும் எதோ வேலை இருக்க போய் தானே வீட்டுக்கு வந்து இருப்ப" என்று கேட்டார் ராமர்.


"அட, உன்ன பாத்த சந்தோசத்துல வந்த வேலையை மறந்துட்டேன் பாரு" என்று அப்போது தான் ஞாபகம் வந்தவராக, "செண்பா ஒரு குடத்துல குடிக்க தண்ணி கொண்டு போய் காட்டுல குடுத்துட்டு வாம்மா. தண்ணி எடுத்துட்டு போகத் தான் வந்தேன், மறந்து போயிட்டேன். வார ஆளுகளுக்கு குடிக்க தண்ணி வேணும் இல்ல" என்று மகளை ஏவினார் ராகவன்.


"நீயே கொண்டு போய் குடுடா நாங்க வேணா கிளம்புறோம். அது தான் அடிக்கடி வருவோம் இல்ல அப்ப பார்த்துக்கலாம். நீ என்ன வயசுப் பிள்ளையை ஏவிக் கிட்டு இருக்க?" என்று சங்கடமாக கூறினார் ராமர்.


"எலே ஊர்ல இருக்க எல்லா பிள்ளைகளும் பட்டப் படிப்பு படிச்சிருந்தாலும் லீவு நாள்ல மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டு போகுது, சாணம் அள்ளி குப்பைக் குழியில் போட்டு வருதுக, மாட்டுக்கு ரெண்டு கட்டு புல்லு அறுத்து தலையில் வைத்து கொண்டு வந்துடுதுங்க, நாங்க தான் இவள அப்படி எல்லாம் எதுவும் செய்ய விடாமல் வச்சிருக்கோம். அதுக்காக ஒரு வேலையும் செய்யாமல் வச்சிருக்க முடியுமா? இந்த மாதிரி சின்ன சின்ன வேலைகள் செஞ்சாதான் அதுக்கும் பொழுது போகும். நாலு விசயம் கத்துக்கிட வேண்டாமா? மனுச மக்களோட புழங்க வேண்டாமா?


வீட்டுக்குள்ளேயே போட்டு அடைச்சு வச்சா, அதுக்கு எப்படிப்பா தைரியம் வரும்? நாளைக்கு வாழ்க்கையில என்னெல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ? கைக்குள்ளேயே பொத்தி பொத்தி வச்சு அதுக்கு கொஞ்சம் கூட தன்னம்பிக்கை இல்லாமல் செஞ்சுடக் கூடாது இல்ல. ஆம்பள பிள்ளையை விட பெண் பிள்ளைகளுக்குத் தான் தைரியமும் தன்னம்பிக்கையும் ரொம்ப வேணும்" என்றார் ராகவன்.


"அதுவும் சரி தான்" என்று ஒத்துக்கொண்ட ராமர் பின் மீண்டும் வேறு பல விஷயங்களை பேசிக்கொண்டு இருந்துவிட்டு நீண்ட நேரம் கழித்தே விடைபெற்றார்.
 
Top