கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 1

Akhilanda bharati

Moderator
Staff member
ஹாய் ஹலோ புது கதைக்குள்ள போகலாமா.. திடீர்னு ஒரு ஆசை.. கதையின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தலைப்பு தரணும்.. கடைசில நல்லதா நாலு வரி பாட்டு தரணும்.. ட்ரை பண்ணுவோம் னு இறங்கிட்டேன்..

வாங்க வாசிங்க கருத்திடுங்க😊😊😊

1. ஃபோர் ஸ்டார்



அந்த கார்டன் ரெஸ்டாரண்டின் உள்நுழைந்த அஸ்வின் தன் கண்களால் தனக்கு மிகவும் பழக்கமான அந்த இரண்டு முகங்களையும் தேடினான். முதுகிலிருந்த லேப்டாப் பையை இறக்கிக் கையில் பிடித்தவன், 'எங்க போய் தொலைஞ்சா இந்த மாதாஜி?' என்று அவன் பார்த்துக் கொண்டிருக்கையில்,

"அச்சு மாமா! இங்கே வாங்க!" என்ற குரல் அவன் காதில் விழுந்தது. முன்னால் இருந்த அனைத்து மேஜைகளிலும் அவன் பார்வை ஓட, சறுக்குமரம் ஊஞ்சல், சீசா, சிறிய merry-go-round நான்கும் அமைக்கப்பட்டிருந்த சிறிய பார்க்கின் அருகிலுள்ள டேபிளில் ஜெயந்தியின் குடும்பம் அமர்ந்திருந்தது கண்ணில்பட்டது.

"ஹே வால் நம்பர் ஒன்! நீ என்ன குட்டிப் பிள்ளைங்க மாதிரி சறுக்கு ஊஞ்சல் பக்கத்துல உட்கார்ந்துருக்க.. இன்னும் சறுக்கைப் பார்த்த உடனே வண்டியிலிருந்து கீழே குதிக்கிற பழக்கம் உனக்குப் போகலையா?" என்றவாறு அவனை வரவேற்க வந்த ஜெயந்தியின் மகன் சாய் பிரகாஷின் கழுத்தில் கை போட்டு கொண்டே வந்தான் அஸ்வின். அதற்குள் அவன் பையை வாங்கி ஜிப்பைத் திறந்து அதில் இருந்த நான்கு சாக்லேட்டுகளையும் தன் சட்டைப் பாக்கெட்டில் மாற்றிக்கொண்ட சாய் பிரகாஷ்,

"நீங்க இன்னும் சின்னப் புள்ளைங்க கிட்ட இருந்து சாக்லேட் புடுங்கித் திங்கிற பழக்கத்தை விடலையா?" என்றான் ஒரு கிளுக் சிரிப்புடன்.

"அடேய்! அது நான் காசு குடுத்து வாங்கினதுடா.. நீ தாண்டா இப்ப அதைப் புடுங்கி உன் பாக்கெட்டில் போட்டு இருக்க.."

"எனக்கு சாக்லேட் சாப்பிடற வயசு.. உங்களுக்கு சுகர் மாத்திரை சாப்பிடற வயசு.. கம்முனு வாங்க. அம்மா அங்கே புளியோதரை கொண்டு வந்திருக்காங்க.. அதை சாப்பிடுங்க"

"இந்த வாய் மட்டும் இல்லன்னா நாய் வந்து கவ்விட்டுப் போயிரும்டா உன்னைய.. எப்படித் தான் சமாளிக்கிறாளோ எங்க மாதாஜி" என்று அஸ்வின் சலித்துக் கொள்வதற்குள் அவர்களது டேபிள் வந்திருந்தது.

"எங்கே குருவைக் காணோம்?"என்று சுற்றிலும் கண்ணை உருட்டி சற்றுத் தள்ளி அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஜெயந்தியின் கணவர் தியாகராஜனைக் கண்டுபிடித்துக் கையசைத்து விட்டு, "பெரிய வாலு வழக்கம் போல வாயாடுது.. சின்ன வாலு வழக்கத்துக்கு மாறா உம்முன்னு உக்காந்திருக்கு. ஏன்?" என்று ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான் அஸ்வின்.

"சிந்துவுக்கு ஐஸ்கிரீம் வேணுமாம்.. லேசா மூக்கு ஒழுகுது.. இன்னிக்கு வேண்டாம்னு சொன்னேன். அதான் கோவத்துல இருக்கா.. என்னடா அஸ்வின்! என்னை விட உனக்கு நாலஞ்சு முடி அதிகமா நரைச்சுடுச்சு?" என்றாள் ஜெயந்தி.

"இது ஸ்டைல் நரை. உனக்குத் தான் நிறைய நரைச்சிருக்கு.. இன்னுமே நாலு முடி அதிகமா நரைச்சா தான் 'அதாவது.. வாழ்க்கைல…' அப்படின்னு நீ ஆரம்பிக்கிற அட்வைஸ்கள் கேட்கிறவங்களைப் போய் சூப்பரா ரீச்சாகும். மாதாஜி அப்படிங்கற பேரும் ரொம்ப சூட்டாகும்.. ட்ரெஸ்ஸு இந்த ஆரஞ்சு கலர் சுடிதாரே போதும்.. ஒரு சின்ன சைஸ் ருத்ராட்ச மாலை நானே அமேசான்ல ஆர்டர் போட்டு வாங்கித் தரேன்.. நெத்தி நிறைய பட்டை மட்டும் அடிச்சா.. அப்படியே மாதா ஜெயந்தியானந்தா தான்!" என்றான். அன்று பேச விரும்பாத சிந்து என்ற சின்ட்ரெல்லா அஸ்வின் அம்மாவைக் கலாய்ப்பது பிடிக்காமல் நறுக்கென்று அவன் கையைக் கிள்ளி வைத்து விட்டு மறுபடியும் தன் உம்மணாமூஞ்சி அவதாரத்தைத் தொடர்ந்தாள்.

"பிசாசு.. நல்லா கிள்ளிடுச்சு.. பிள்ளை வளத்து வச்சிருக்கதைப் பாரு" என்று ஜெயந்தியை கடிந்தவன், "சாய்! நீ சொல்லுடா இன்னும் கொஞ்சம் நரைச்சா தானே உங்க அப்பாவுக்கு மேட்சா வருவாங்க உங்க அம்மா.. இந்தத் தலையோட அட்வைஸ் பண்ணா யாராவது கேப்பாங்களா?" என்று கேட்டான்.

இன்னுமே போனில் பேசிக்கொண்டிருந்த தியாகராஜனைப் பார்த்த சாய், "அப்பாவும் சேர்ந்து வந்து உங்களை அடி மொத்தப் போறாங்க.. ஏன் மாமா.. இந்த வாயால நீங்க எத்தனை தடவை அடி வாங்கியிருப்பீங்க?" என்று பேட்டியில் கேள்வி கேட்கும் தொனியில் கேட்டான்.

"அது இருக்கட்டும்.. எதோ புளியோதரை கொண்டு வந்திருக்கியாமே.. அதைக் குடு மாதாஜி.. தேங்காய்த் துவையல் இருக்கா இல்லையா?" என்று சாப்பிட ஆயத்தமானான்.

"கையைக் கூடக் கழுவாம.. இந்தா.. முடி" என்று சலித்தாலும் ஜெயந்தி தன் கையிலிருந்த புளியோதரையை எடுத்து டேபிளில் வைத்தாள்.

"நீ ஸ்பூன் கொண்டு வந்திருப்பியே மாதாஜி.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியுமே.. அது இருக்கட்டும் இந்த ஹோட்டல்ல வீட்டு சாப்பாடு சாப்பிடலாம் தானே.. அப்புறம் நான் ரசிச்சு சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது எந்தப் பன்னாடையாவது வந்து, "சாரி சார்! அவுட் சைட் ஃபுட் நாட் அலவ்ட் அப்படின்னு சொல்லிட்டு இருக்கப் போறான்" என்றபடி புளியோதரையை ருசி பார்க்க ஆரம்பித்தான் அஸ்வின்.

அவனுக்குப் பக்கத்து இருக்கையில் ஒரு அழகான கைப்பை வைக்கப்பட்டிருக்க, அதை விட அழகாக பொம்மை போல் நடந்து வந்து ஒரு பெண் குழந்தை அதைத் திறந்து ஒரு மொபைலை எடுத்தது. "ஆன்ட்டி! அம்மா மொபைல் எடுத்துட்டு வர சொன்னாங்க" என்று ஆங்கில வாடை அடித்த தமிழில் அவ்வளவு ஸ்டைலிஷாகக் கூறியது.

"இது யாரு இந்த பொம்மைக் குட்டி?" என்று அஸ்வின் கேட்க,

"நம்ம கிளாஸ்மேட் ப்ரீத்தி ஞாபகம் இருக்கா? அவளோட பொண்ணு வைதேகி இது. அதோ நிக்கிறா பாரு ப்ரீத்தி!" என்று ஊஞ்சலுக்கு அருகே மகளுக்காகக் காத்திருந்த ப்ரீத்தியை சுட்டிக் காட்டினாள் ஜெயந்தி.

சாப்பிட்டுக்கொண்டே அந்தப் பெண்ணை அஸ்வின் நிமிர்ந்து பார்க்க, ஆண்கள் அணியும் சட்டை போல் ஒன்றை அணிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு ஒரு பேன்ட்டையும் அணிந்திருந்த ப்ரீத்தி கண்ணில் பட்டாள்.

"ஏ குட்டி பாப்பா! வொய் யுவர் மாம் இஸ் வியரிங் யுவர் டாட்ஸ்' ஷர்ட்?(Why your mom is wearing your dad's shirt)" என்று அஸ்வின் அவளிடம் கேட்க, இப்பொழுது இன்னொரு முறை நறுக்கென்று கிள்ளினாள் சின்ட்ரெல்லா.

"தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ்! அது எங்க அம்மாவோட ஷர்ட். எனக்கு அப்பா கிடையாது. இப்படி எல்லாம் பேசக் கூடாதுன்னு உங்க அம்மா உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலையா" என்று அஸ்வினுக்கு ஒரு முறைப்பைத் தந்துவிட்டு அம்மாவை நோக்கி நடந்தாள் வைதேகி.

"இந்த அஞ்சலிப் பாப்பா மாதிரி செல்லம் கொஞ்சி கிட்டே பேசுவாளே அவதானே ப்ரீத்தி.. அது என்ன மாதாஜி.. அம்மாவுக்கு வைக்கிற பெயரை பொண்ணுக்கும், பொண்ணுக்கு வைக்கிற பேரை அம்மாக்கும் மாத்தி வச்சுட்டாங்களா?" என்று அஸ்வின் கேட்க,

அவன் பேச்சைப் பொறுக்க முடியாமல் தன் மவுன விரதத்தை முடித்துக் கொண்ட சின்ட்ரெல்லா, "ஏன் மாமா.. அந்தப் பொண்ணு மூஞ்சில எச்சில் துப்பாத குறையா உங்களைத் திட்டிட்டுப் போகுது.. அது கூட உங்களுக்கு உரைக்கலியா? அடுத்த கேள்விக்கு வந்துட்டீங்க?" என்றாள். இவர்கள் சாப்பிட்டுவிட்டு வைத்திருந்த தட்டுக்களை எடுக்க வந்த வெயிட்டர் இவர்களின் உரையாடலின் ஒரு பகுதியைக் கேட்டுவிட்டு, யார் இவர்கள் இவர்களுக்குள் என்ன உறவு முறை என்று யோசித்துத் தலையை சொரிந்து கொண்டே போனான்.

ஜெயந்தியும் அஸ்வினும் கல்லூரித் தோழர்கள். இப்போது குடும்பமாக நெருங்கி விட்டார்கள். நட்புக்கு மேல் வேறு எந்த உறவும் இவர்களுக்கிடையில் இல்லை என்று அடித்துக் கூறினாலும் நம்பியிருக்க மாட்டான் அந்த வெயிட்டர். ஏன் நீங்களும் நம்ப மாட்டீர்கள். அப்படிப்பட்ட நட்பு இவர்களுடையது. உறவுக்கும் மேலான ஒரு பிணைப்பு. சுமார் இருபது வருடங்களாக பட்டுப் பாரம்பரியத்தைப் போல் தொட்டுத் தொடர்கிறது.

தன் அலைபேசி உரையாடலை முடித்துக் கொண்டு வந்து அமர்ந்த தியாகராஜன் அஸ்வினின் முதுகில் இரண்டு தட்டு தட்டி, "அப்புறம் அச்சு! எப்படி இருந்தது ஃபிளைட் ஜர்னி? எப்படி படிச்சிக்கிட்டு இருக்க? பாஸாயிடுவியா? ஃபெயிலா?" என்று கேட்டார்.

"எனக்கு என்ன தோணுதுன்னா.. இன்னும் பத்து வருஷம் கழிச்சும் நீங்க இதே கேள்வியைத் தான் இவன் கிட்ட கேப்பீங்கன்னு தோணுது" என்றாள் ஜெயந்தி.

"இன்னும் எவ்வளவு நாள் தான் மாமா படிச்சிக்கிட்டே இருப்பீங்க?" என்று சாய் பிரகாஷ் கேட்க,

"இதோ இன்னும் ஒரு வருஷம் தாண்டா அதுக்கப்புறம் மாமாவோட ரேஞ்சே வேற.. நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு அவ்வளவு கம்பெனில கூப்பிடுவாங்க.. வேணா பாரேன்" அஸ்வினின் குரலில் பெருமை பெரிதாக ஒலித்தது.

"கூப்பிட்டா சரிதான்.. அதுக்கப்புறமாவது இந்த கோர்ஸ் அந்த கோர்ஸ்னு இங்கே அங்கே போய் நிக்காதே.. சரியா?" என்று தியாகராஜன் சொன்னார்.

"நீங்க சொன்னா சரி தான். குரு சொன்னா சிஷ்யன் கேட்காமலா போயிடப் போறேன்" என்றபடி இதற்கு மேல் வழிக்க ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன் டிபன் பாக்ஸை மூடி ஜெயந்தியிடம் தந்தான்.

"அஸ்வின்.. ப்ரீத்தி வருவா.. அவ இப்ப டைவர்சி.. ஏகப்பட்ட பிரச்சனைல சிக்கி இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கா.. கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷம் கழிச்சி இந்தியாவுக்கு வந்துருக்கா.. எதையாவது பேசி ஹர்ட் பண்ணிடாத சரியா? இவர்தான் அவளோட லீகல் அட்வைசர். அதான் அவரை மீட் பண்ண வந்திருக்கா.. குட்டையைக் குழப்பிடாதே தெய்வமே!" என்று ஜெயந்தி அஸ்வினிடம் கெஞ்சினாள்.

"கில்லாடி மாதாஜி நீ! ஃப்ரண்ட்ஸ் கிளாஸ் மேட்ஸ் எல்லாத்தையும் கிளையன்டா மாத்தி உன் கணவருக்கு பிசினஸை டெவலப் பண்ணிக் கொடுக்கற பாத்தியா.. மாதாஜி என்று இதுவரை அழைக்கப்பட்ட நீ சிறந்த பத்தினி என்று இன்றுமுதல் அழைக்கப்படுவாய்!" என்று கூறியபடி அரை பாட்டில் தண்ணீரைக் காலி செய்து ஒரு பெரிய ஏப்பத்தையும் விட்டு முடித்தான்.

ப்ரீத்தியும் வைதேகியும் தங்கள் விளையாட்டை முடித்து விட்டு அவர்களை நோக்கி வந்தனர். 'அச்சச்சோ இந்த பய என்ன பேசி வைக்கப் போறானோ' என்று ஜெயந்தி பதற,

"பிரீத்தி தானே நீ? எனக்கு அடையாளமே தெரியல பாரேன்.. ஜெயந்தி சொல்லித்தான் தெரிஞ்சுச்சு. வா வா! உட்காரு. நல்லா இருக்கியா? டெல்லியில இருக்கேனா.. நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட்டு ஆறு மாசம் ஆச்சு. அதான் மாதாஜி கொண்டு வந்த புளியோதரையை உனக்கு மிச்சம் வைக்காம சாப்பிட்டுட்டேன்.. வேற என்ன வேணும் சொல்லு. ஆர்டர் பண்ணலாம். நீ ஒன்னும் ஒர்ரி பண்ணிக்காதே.. நம்ம குரு பே பண்ணிப்பாரு.. ஊர்ல டாப் லாயர்.. நிறைய காசு வைச்சிருக்கார். அடுக்கி வைக்க இடமில்லையாம்" என்று தியாகராஜனைக் காட்டினான்.

"இப்பதான் சாப்பிட்டு முடிச்சோம் அஸ்வின். இதோ ஃப்ரூட் சாலட் மட்டும் தான் பாக்கி. நைஸ் மீட்டிங் யூ! நீ வருவேன்னு ஜெயந்தி சொன்னா" என்று அமெரிக்கையாகக் கூறிவிட்டு தான் எழுந்து சென்ற இடத்தில் மீண்டும் அமர்ந்தாள் பிரீத்தி.

ஜெயந்தி, அஸ்வின், ப்ரீத்தி மூவரும் இருபது வருடங்களுக்கு முன்பு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படித்தவர்கள். அப்போது அந்தத் துறையில் பெண்கள் மிகக் குறைவு. ப்ரீத்தி ஹாய் ஹலோ என்னும் அளவிற்கே அஸ்வினுக்குப் பழக்கம். ஆனால் ஜெயந்தியும் அஸ்வினும் ரொம்பவும் நெருக்கமானவர்கள். இவர்களுடன் நெருக்கமானவர்கள் இன்னும் இருவரும் உண்டு. ராஜ்குமார், ராஜலட்சுமி. இவர்களது நட்பு கல்லூரி வட்டத்தில் மிகப்பிரபலம். ஃபைவ் ஸ்டார் என்ற ஒரு படம் வந்திருந்த புதிது அது. அதனால் இவர்களை ஃபோர் ஸ்டார் என்று பட்டப் பெயரிட்டு தான் மற்றவர்கள் அழைப்பார்கள்; கலாய்ப்பார்கள்.

"டேய் சும்மா இருங்கடா.. அந்தப் படத்துல வர்ற மாதிரி எங்க நட்பு பிரிஞ்சிடப் போகுது" என்று அவ்வப்போது சொல்வான் அஸ்வின். விதிவசமா இல்லை அவனது வாய் முகூர்த்தமா தெரியவில்லை அப்படியே நடந்துவிட்டது. நால்வரில் ஒருவனான ராஜ்குமார் இப்போது இவர்களுடன் பேசுவதில்லை.

"கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து.. பறந்து போய்டுத்தூ…" என்பான் அஸ்வின் அதற்கும். ராஜலட்சுமி இன்னும் தொடர்பில் தான் இருக்கிறாள். ஜெயந்தியுடன் அவள் வெகு நெருக்கம் என்றாலும் அஸ்வினுடன் இப்போது பட்டும்படாமலும் தான் பேசுகிறாள்.

"மாதாஜி கூட பேசாம இருக்க முடியுமா? எல்லாத்துக்கும் ஆறுதல் கொடுக்கிறவ அவ தானே.. யாரைக் கேட்டாலும் மாதாஜி எனக்கு தான் க்ளோஸ், எனக்குதான் க்ளோஸ்னு சொல்லுவாங்க.. ஆனா உண்மையிலேயே அவ எனக்கு தான் க்ளோஸ். தெரியுமா குரு?" என்று ஜெயந்தியின் கணவரிடமே பெருமை பேசுவான் அஸ்வின்.

"டேய்! அவ என் பொண்டாட்டிடா.. எனக்குத் தான் டா க்ளோஸு.. " என்று கண்ணீர் வராத குறையாக பதில் கூறுவார் தியாகராஜன். எந்த விஷயமானாலும் ஆய்ந்து அலசி உளவியல் கவனத்துடன் அணுகுபவள் ஜெயந்தி. யார் மேலும் அவளுக்குக் கோபமே வராது. இருவர் சண்டை போட்டுக்கொண்டு அதில் ஒருவன் கோபத்தில் பேசாமல் இருந்தால், அதற்கு என்ன காரணம், இந்த சூழ்நிலையில் அவன் இப்படி நடந்து கொண்டான் அதனால் அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடு என்று பேசி இருவரையும் சமாதானம் செய்து வைப்பாள்.

"எங்க வீட்டுல பிரன்ஸ்னு ஒரு நாய் இருந்துச்சு மாதாஜி. அது இப்படித்தான் யாராவது சத்தமா பேசினால் பிடிக்காது. சண்டை போடறோம்னு நினைச்சு பக்கத்துல வந்து நக்கி, மேலே ஏறி சமாதானம் செஞ்சு, பாசத்தைக் கொட்டி சமாதானம் செஞ்சு விடும். அதனால உன்னை பார்க்கும் போதெல்லாம் பிரின்ஸ் ஞாபகம் தான் எனக்கு வரும்" என்பான் அஸ்வின்.

ஜெயந்தி முறைத்தாள் என்றால், "சாரி சாரி பிரின்ஸை நெனச்சா உன் ஞாபகம் வருது மாதாஜி" என்பான்.

அவளது தாய் போன்ற குணத்தால் அவளுக்கு வந்த பெயர்தான் மாதாஜி. விதியின் போக்கில் இவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களால் பயங்கர வலியை சந்தித்திருக்கக்கூடும். ஜெயந்தி மாதாஜியாக இருப்பதால்தான் சுற்றியுள்ளவர்கள் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கிறார்கள், நானும் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று தியாகராஜன் அடிக்கடி நினைப்பார். அவரும் கல்லூரி நண்பர்களைப் போல், "மாதாஜி! ஒன் கன்சல்டேஷன்!" என்று பிரச்சனைகளுக்காக அவளிடம் போய் நிற்பார்.

தங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த சாலட்டை முடித்துவிட்டு ப்ரீத்தியும் வைதேகியும் கை கழுவப் போக சாய் பிரகாஷம் சின்ட்ரெல்லாவும் தன்னை கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு ஜெயந்தியின் அருகில் குனிந்த அஸ்வின்,

"மாதாஜி எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டைங்கிறதால என்னை இந்த ப்ரீத்தி கூட கோர்த்துவிட்டு மேட்ச் மேக்கிங் எதுவும் பண்ற ஐடியால தான் அவளையும் இன்னிக்கு வரச் சொன்னியா?" என்று கேட்டான்

அது சாய் பிரகாஷ் காதில் ஸ்பஷ்டமாக விழுந்துவிட, தன் போனை எடுத்து அஸ்வினின் மனைவிக்கு டயல் செய்வதாக பாவனை பண்ணிக்கொண்டு, "அஸ்வினி ஆன்ட்டி! இந்த அஸ்வின் அங்கிள் அவருக்கு வேற பொண்ணு பார்க்க சொல்றார் எங்க அம்மாவை" என்றான்.

"அடிங்க!" என்று அந்த ஃபோனைப் பாய்ந்து பிடுங்கிக் கீழே வைத்தவன்,

"விளையாட்டுக்கு ஒரு பேச்சு பேச விடுதுங்களா வில்லாதி வில்லனுங்க.. நீ பாவம் மாதாஜி! ரெண்டு டீன் ஏஜ் பசங்க வளக்கணும்னா ரொம்ப கஷ்டம் தான்.. என்ன குரு?" என்க, சாய் பிரகாஷ் சிரித்தான். ஜெயந்தியும் தியாகராஜனும் கூட குலுங்கிக் குலுங்கி சிரித்தனர்.

"அஸ்வின்! நீ பேசறதெல்லாம் நல்லாத்தாண்டா இருக்கு.. ஆனா கொஞ்சமே கொஞ்சம் சீரியஸா மாறுடா ப்ளீஸ்!" என்றார் தியாகராஜன்.

"நான் சீரியஸா ஆனா இந்த பூமி தாங்காது.. அதைவிட முக்கியமா நான் தாங்க மாட்டேன். டேய் உச்சா வருது.. ரெஸ்ட் ரூம் காட்டுடா!" என்றபடி சாய் பிரகாஷை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அஸ்வின். அவன் பேச்சிலும் நடையிலும் கலந்திருந்த நிரந்தர சோகம் ஜெயந்தி தியாகு இருவரின் மனங்களையும் எப்போதும் போல் அன்றும் வருத்தியது


கண் போன போக்கிலே
கால் போகலாமா

கால் போன போக்கிலே
மனம் போகலாமா

மனம் போன போக்கிலே
மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை
மறந்து போகலாமா
 

Kothaisuresh

Well-known member
நல்ல ஆரம்பம். வெளி பார்வைக்கு கலகலப்பா இருந்தாலும் ஏதோ சோகம் இருக்கு போல
 

Puvana Chandrasekaran

Moderator
Staff member
நல்ல ஆரம்பம். ப்ரீத்தி பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணுமே? நல்ல ஸ்டார்ட். வாழ்த்துகள்.
 
Top