கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 4

Latha S

Administrator
Staff member


அத்தியாயம் 4



“தம்பி, கட்டாயம் இந்த வீட்டுல பொண்ணு கேக்கப் போகணுமா?..”



“வேற வழி? இவனுக்கு இந்தப் பொண்ணு தான் வேணும்னு ஒத்தைக்கால்ல நிக்கறான்?..”



“அதென்னமா ஒத்தைக்காலு, ஏன் இரண்டு கால்ல நிக்க மாட்டானாமா?..”



“என்னங்க, போதும் உங்க அரதபழசு ஜோக்கு. இப்ப ரசிக்கிற மூடில்ல எனக்கு.. எதுக்கு இந்த விதண்டாவாதம்? பழசை நல்லா மறந்து போயிட்டாப் போல. கட்டினா என்னைத் தான் கட்டுவேன்னு அன்னிக்கு நீங்களும் தான் ஒத்தக்கால்ல நின்னீங்க?..”



“ஏய் நீ என் முறைப் பொண்ணுடி. உனக்கும் என் மேல விருப்பமிருந்தது. பின்ன எதுக்கு நான் விட்டுக்கொடுக்கணும்?..”



ஜீவானந்தின் பெற்றோர்கள் வடிவேலனும், சாந்தாவும் இங்கே அடித்துக் கொள்ள, ஜீவாவோ அந்த பங்களாவின் வாசல் முன்னால் தன் காரின் ஹாரனை பலமாக ஒலிக்க விட்டான்.



இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை வருமென்று அவன் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் வந்து விட்டதே!



என்ன செய்வது? மானம், ரோசம் பார்த்தால் அவன் மனதுக்குப் பிடித்த பெண் கை நழுவி விடுவாளே!



இரண்டு நாட்களுக்கு முன்னரே எடுத்த முடிவுதான் இது. அவள் தனக்கானவள் என்பது தான் அவளை உயிரும் மேலாக நேசிப்பது தான். கண்டதும் காதல் கொண்டு விட்டானே! விட்டு விட முடியாமல் முடிவெடுத்து இன்று அவள் வீட்டின் முன்னே நிற்கிறான்.



திரும்பிப் பார்த்துப் பெற்றவர்களை அமைதியாக இருக்கும்படி தன் தொண்டையைக் கனைத்து எச்சரித்தான்.



ஏனோ மனம் லேசாக நடுங்கியது. ஆனாலும், நெற்றியில் அரும்பிய வியர்வையை நாசூக்காகத் துடைத்துக்கொண்டான்.



அதற்குள் சுதாரித்த பெரியவர்கள், “தட்டை ரெடியா வைச்சிக்கோ சாந்தா, நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வைச்சிக்கலாம். விட்டா நம்ம பையன், நம்மள இங்கேயே விட்டுட்டு ஒத்தையாப் போய் அங்கே பொண்ணு கேட்கப் போனாலும் போயிடுவான்..”



மகன் அவன் நெற்றி வியர்வையைத் துடைப்பதில் அவனின் பதட்டத்தைக் கண்டு கொண்டவர், தானும் சுதாரித்து மனைவியையும் அமைதிப் படுத்தினார்.



“ஜீவா, எது நடந்தாலும், தைரியமா இருக்கணும். ஆனா, பிடிக்கலைன்னு சொல்லிட்டா வம்பு வழக்கில்லாமல் திரும்பிடணும். சரியா.. உனக்குத் தெரியாததுல்ல, காரியம் பெரிசு. முடிஞ்சவரை எப்படியும் அவுங்களை ஒப்புக்க வைச்சிடலாம்..”



முன்னுக்குப் பின் முரணாய்ப் பேசினார் வடிவேலன். “அந்தப் பொண்ணு வாழ்க்கையும் அடங்கியிருக்குப்பா. பார்த்துப் பதமாப் பேசணும்னு சொல்ல வந்தேன்..”



“நீங்க முதல்ல அவனைக் குழப்பாம வாங்க. காரியத்தை முடிச்சிடலாம்னு சொல்லறீங்க, பின்னோடு அந்த பொண்ணுக்கு விருப்பமில்லைன்னா விட்டுடணும்ன்னு அறிவுரை வேற. எதையும் சரியா யோசிச்சுப் பேச மாட்டீங்களா நீங்க?..”, சாந்தா, தன் கணவனை முறைத்தாள்.



“நிச்சயமாப்பா..”, என்று கூறிய மகனின் அமைதிச் சிரிப்பின் பின்னால் ஒளிந்திருந்த மர்மம் என்னவாயிருக்கும்? இவர்களால் அனுமானிக்க முடியவில்லை.



அதற்குள் எங்கிருந்தோ ஓடிவந்த கூர்க்கா அவர்களைத் தடுக்கப் பார்க்க, இவன் கை உயர்த்த, விலை உயர்ந்த காரைக் கண்டு என்ன நினைத்தானோ, சட்டெனப் பின்வாங்கி அவர்களை உள்ளே அனுப்பி வைத்தான்.



பிரமாண்டமாகத் தான் அவனவளின் வீடும் இருந்தது. ஊரில் பெரிய பிசினஸ்மேன் ஆயிற்றே அவளுடைய தந்தை! மனதுக்குள் சிரித்துக்கொண்டான். அவள் தானே அவனுக்கு இனி..



“சார், நீங்களா?..”, என்றபடி வீட்டுக்குள்ளிருந்து ஹரீஷ் வெளியே வந்தான்.



“உள்ள வாங்க சார்..”



விலை மதிப்புள்ள டீபாயில் அவர்கள் சுமந்து வந்த பொருட்களை வைத்துவிட்டு தங்களை வரவேற்ற ஹரீஷிடம் அமைதியாகப் புன்னகைத்து விட்டு நிற்க, சரியாக மாடிப்படியில் துள்ளி குதித்தபடி வந்து சேர்ந்தாள் காவேரியோ.



மகன் பெற்றவர்களைப் பார்த்து தலையசைக்க, புரிந்தாற்போல், “பொண்ணு அழகா இருக்குடா..”, சான்றிதழ் வழங்கினாள் சாந்தா.



“அறிவாளியும் கூட..”



ஹரீஷுக்கு ஏதோ புரிவது போலத் தோன்ற, காவேரியோ இவனைக் கண்டு திகைத்து நின்றாள்.



அதற்குள் வீட்டிலுள்ளவர்கள் ஒவ்வொருவராய் வரத் தொடங்க, அன்று நிதானமாய் ஞாயிறு பூசையை முடித்துவிட்டு வெளியே வந்தார் கமல்நாத், காவேரியின் தந்தை.



‘யார் இவர்கள்?’ தன்னைத் தொடர்ந்து வந்த மனைவியைக் கேள்வியுடன் நோக்கினார். சட்டென மூளையில் ஏதோ உறைக்க, கண்களைச் சுருக்கித் தலையாட்டியபின் அவர்களைப் புரிந்தவர்ப் போல் பார்த்துத் தலையசைத்து வரவேற்றார்.



“வாங்க சார், வாங்கம்மா, வாங்க தம்பி. எல்லோரும் உக்காருங்க..”, தன் கைகளைக் குவித்தார்.



“நான் ஜீவானந்தன். ‘வேலன் குழுமம்’ எங்களோடது. அம்மா சாந்தா, அப்பா வடிவேலன். உங்களுக்கும் நிச்சயமாகத் தெரிந்திருக்கலாம். தெ க்ரேட் பிசினஸ்மேன். இப்போ உங்க பொண்ணு காவேரியை மணக்கக் கேட்டு இங்க வந்திருக்கேன்..”



ஜீவா அலட்டிக்கொள்ளாமல் சொன்னவன், கைகளைக் கூப்பினான்.



அங்கிருந்த மற்றவர்களோ அதிர்ந்து போய் நின்றனர்.



முதலில் சுதாரித்த ஹேமா, கமல்நாத்தின் தங்கை, “என்னது? என் மருமகளைப் பொண்ணு கேட்டு வந்தியா?. அண்ணா?..”, அலறினாள்.



அதற்குள் கமல்நாத்தும் விழித்துக் கொண்டார்.



“இங்க பாருங்க தம்பி, உங்க குடும்பம், தொழில் எல்லாவற்றையும் பற்றி நானும் கேள்விபட்டிருக்கேன். உங்களைக் குடும்பமா திடீர்ன்னு பார்க்கவும் கொஞ்சம் குழம்பிப் போனேன். அவ்வளவு தான். உங்களை மாதிரிப் பெரிய மனுஷங்களைத் தெரியாது இருக்குமா?..”, என்றவர்..



“இருக்கட்டும். நீங்க காவேரியைப் பொண்ணு கேட்டு வந்தது எங்களுக்கு சந்தோஷம் தான். ஆனால், எங்க பதில் நோ தான். நீங்க தப்பான இடத்துக்கு வந்துட்டீங்க போல. எங்க பொண்ணு காவேரிக்கு ஏற்கனவே வரன் ஃபிக்ஸ் பண்ணி வைச்சிருக்கோம்..”, நாசூக்காய்க் கை குவித்தார்.



“தெரியும் மாமா. உங்கள் தங்கையவர்களின் மகனை. ஆனாலும், உங்களுக்குத் தெரியாதது சிலது இருக்கு. நான் சரியான இடத்துக்குத் தான் வந்திருக்கேன். காவேரியை எனக்கு முதல் பார்வையிலேயே பிடிச்சிப் போச்சு. ஏன் எதுக்குன்னு ஆராயத் தோணல. காவேரி எனக்கானவள் என்று விதி எழுதி வைச்சிருக்கு போல, அதான், கோடிகளில் புரளும் உங்க வீட்டுப்பெண் டொனேஷங்கிற பேரில் என் முன்னாடி வந்து நின்னாங்க போல..”



‘என்ன இது?’ என்று இப்பொழுது தன் மகளை முறைக்காது, தன் மனைவியை முறைத்தார். ‘இது கூடப் பார்க்காமல் நீ வெட்டியா உன் க்ளப்புல சுத்திட்டு இருந்தியா? மாமா என முறை வைத்து அழைப்பு வேறு? என்ன நடக்கிறது இங்கே..’



அமிர்தா வாயைத் திறப்பதற்குள்.



ஈஸ்வரின் அம்மா ஹேமா அதற்குள் முந்திக் கொண்டாள், எங்கே தன் அண்ணன் தன்னையும் எதாவது சொல்லி விடப் போகிறாரோ என்று.



“அண்ணா, வரவர நம்ம பொண்ணு எங்க போறா, வரான்னு எதுவும் சொல்லறதில்ல. எப்படியும் ஈஸ்வர் பார்த்துப்பான்னு நானும் கூட கொஞ்சம் அசட்டையா இருந்துட்டேன்.. பாருங்க உங்களை உரிமையா மாமா என்கிறான்..”, தன் மகனைப்பார்க்க அவனோ, இவர்கள் பார்வையை நாசூக்காகத் தவிர்த்து விட்டு, தன் ஃபோனைக் காதுக்குக் கொடுத்தவாறு அந்தப் பக்கமாய் அவசரமாய் நகர்ந்தான்.



ஜீவானந்தனும் ஈஸ்வரைக் கண்டு கொண்டான் போல. காவேரியைப் பார்த்துப் புன்னகைத்தவனைக் கணடவளுக்கோ, ஈஸ்வரின் இந்த ஒதுக்கம் இப்பொழுது எரிச்சல் மூண்டது.



அதிலும், ‘உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று சொல்’ என்று கட்டளை போடுவது போல் பார்வையை வீசியவனைக் கண்டு இவளுக்குக் கோபமும் எழுந்தது.



“அப்பா, சாரிப்பா நான் உங்க கிட்ட சொல்லியிருக்கணும். நீங்க பிசியா இருந்தீங்க. உங்களை டிஸ்டர்ப் பண்ண நினைக்கலை. நான் ஈஸ்வர் அத்தான் சொல்லி, இவரிடம் டொனேஷன் கேட்கப் போனது உண்மை தான். ஆனா, இவர் என்னைக் கல்யாண பண்ணிக்கக் கேட்ட போது முடியாதுன்னு சொல்லிட்டுத் தான் வந்தேன். ஈஸ்வர் அத்தானுக்கும் இது தெரியும்பா. அத்தான் சொல்லித் தான் நான் போனேன்பா.. அவர், தானே இதைப் பார்த்துக்கொள்வதாய் சொன்னார்ப்பா..”



காவேரியின் முகம் களையிழந்தது. கமல்நாத் மகளை யோசனையாய்ப் பார்த்தார். ‘ஈஸ்வர் எதற்குத் தங்களிடம் இதை சொல்லவில்லை? மகளிடம் எதற்குச் சொல்ல வேண்டாம் என்று சொன்னான்?’.



எரிகிற தீயில் இன்னும் எண்ணையை ஊற்றுவது போல ஜீவானந்தன், “சார் உங்க பையன் ஹரீஷ் கூட இப்போ எங்க கம்பனி இன்டர்ன்ஷிப்புக்காகச் சேர்ந்திருக்கிறார். உண்மையைச் சொன்னா, சிபாரிசின் பேரில் வரவங்களை நாங்க கன்சிடர் பண்ணறதில்லை. ஆனால், அவர் காலேஜ் டாப்பர், அதனால் நான் அவர் சி.வி. பார்த்து அப்ரூவல் செஞ்சேன். ஆனாலும் சிபாரிசே அவருக்குத் தேவையிருந்திருக்காது.. இப்போ எல்லாம் ஒண்ணாகிட்டோம், எனக்கு மாமா என்று அழைக்கும் உரிமையை இனி தரணும் சார்..”



அவ்வளவுதான், கமல்நாத்துக்கு இப்பொழுது கோபம் பொத்திக் கொண்டு வந்தது. மாமா என்றவன் இப்பொழுது சார் என்றதைக் கண்டு கொள்ளாமல்,



“அதுக்கெல்லாம் அவசியமேயில்ல தம்பி. எங்க பிசினசைப் பார்க்கவே இப்போ ஆளுங்க போறல. அதை எடுத்து நடத்த என்னிக்கோ நாங்க அவங்கிட்ட சொல்லியாச்சு. தனிச்சையா எதையாவது கத்துக்கறேன்னு வீண் ஆர்வத்துல அவன் டயத்தை வேஸ்ட் செய்யறான் போல. ஆனாலும், நான் இதுக்கெல்லாம் தடை விதிக்கறதில்லை. எப்படியும் அங்க சுத்தி, இங்க சுத்தி நம்ம கிட்டத் தான் வரப்போறாங்க. கொஞ்சம் எஞ்சாய் பண்ணிக்கட்டுமே!..”



“ஆனாலும், எடுத்த செயலை எங்க பசங்க நிச்சயம் சரியாத்தான் முடிப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு. காவேரி தனியா எதையாவது செய்யணும்னு துடிக்கிற ஆர்வமான பொண்ணு.. அதுக்காக..”, மிதப்பாய், தன் மீசையை முறுக்கினார்.



அவர் மேலே பேசுவதற்குள்,



“நல்லது, அந்த நம்பிக்கையில் தான் நானும் உங்க முன்னாடி இன்னிக்கு நிக்கறேன். உங்க மகளை எனக்கு மனைவியாத் தருவீங்களா? அவளின் தனித்தத்துவத்தை மதிச்சி நானும் போற்றுவேன். நல்லபடியா காலம் பூரா அவளைப் பார்த்துப்பேன். அவ சந்தோஷம் தான் எனக்கும் முக்கியம். மகிழ்ச்சியா அவ என்னோட இருப்பா. அந்த உறுதியை நான் கொடுக்கிறேன். என் வாழ்க்கைக்கு அவங்க தேவை சார். எங்க குடும்பத்துக்கும் பொருத்தமானவள்னு என் பேரண்ட்சும் கூட நினைக்கிறாங்க..”, வெகு நிதானமாகப் பேசித் தன் மனதை வெளியிட்டான்.



ஜீவாவின் பெற்றோர்களும் மகனை அடுத்துத் தங்கள் விருப்பத்தைச் சொல்ல..



அவர்கள் அனைவரின் முகத்தில் தெரிந்த சந்தோஷமும், ஆர்வமும் கமல்நாத்தை சற்று நிதானிக்க வைத்தது. அவர் முகமும் இப்போது யோசனையைப் பூசிக்கொண்டது. சட்டென எதையும் பேசத் தயங்கினார்.



‘சந்தோஷம்’ அந்த வார்த்தைக்குத் தான் எத்தனை விளக்கங்கள் கொடுக்கலாம். பசித்தவனுக்கு ஒரு பிடி சோறு தான் சந்தோஷம். ஐந்து ரூபாய், பத்துரூபாய் வரை பிச்சை கண்ட பிச்சைக்காரனுக்கு யாராவது நூறு ரூபாய் போட்டால் அவன் முகம் சந்தோஷத்தில் வாயெல்லாம் பல்லாய் மின்னும். விவசாயிக்கோ, வானம் பார்த்துக் காத்திருந்த தன் பயிர்களுக்கு திடீர்க் கொடையாய் அந்த வருண பகவான் தன் கொடையைப் பொழிந்தால் மகிழ்ச்சியில் துள்ளி சந்தோஷமாய்க் குதித்தாடுவான். தன்னைப் போல பணக்கார முதலாளிகளுக்கோ, கைநழுவிப் போன ஒப்பந்தம் தன் கை சேர்ந்தால், கிடைத்தால் சந்தோஷம் மிகையானது.



இப்படி சந்தோஷம், மகிழ்ச்சி இதெல்லாம் அவரவர் பார்வையில், எண்ணங்களில் தான் இருக்கிறது.



எங்கோ படித்த நினைவு அவருக்கு..



‘தன் மகளிடம் அந்த சந்தோஷம் இப்பொழுது இருக்கிறதா? முகம் விகசிக்க, தன் மகளை மணமுடிக்கக் கேட்கும் இந்த ஜீவாவிடம் தெரியும் சந்தோஷம் தன் மகளிடம் திருமணப் பேச்சை எடுத்தாலே ஏன் பிரதிபலிக்கவில்லை? சிறுவயதிலிருந்தே அத்தை மகன் தான் அவள் மணாளன் என்றிருக்கையில் திடீரென்று முளைத்தவனிடம் ஒருவேளை அவள் மனதைப் பறி கொடுத்து விட்டாளா?’



‘சில வினாடிகள் முன்பு, தன்னை மணக்க முடித்தவனை மறுத்து விட்டேன் என்று சொன்ன போது அவள் முகம் ஏன் சூரியனைக் காணும் தாமரையாய்க் கூம்பிப் போனது?’



‘பணத்தின் பின்னால் ஓடிய நான் என் மகளைக் கணிக்கத் தவறினேனா? நான் என்ன? ஒரு தாயாய் அமிர்தாவும் மகளை கவனிக்கவில்லையா?’



“அண்ணா, என்னங்கண்ணா யோசனை? நம்ம ஈஸ்வருக்குத் தான் காவேரின்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாச் சொல்லாம சும்மா நிக்கிறீங்க? கண்டவங்கள முதல்ல வீட்டுக்குள்ள விட்ட அந்தக் கூர்க்காவின் சீட்டை கிழிக்கணும்..”



“கமல்நாத் சார், சமுதாயத்தில் நாங்களும் ஒரு நல்ல நிலையில இருக்கிறவங்க. உங்களுக்கே தெரியும். என் மகனுக்குப் பிடிச்சிருக்குன்னு ஒரு காரணத்துக்காகத் தான் தட்டைத் தூக்கிட்டு உங்க முன்னாடி பெண் கேட்டு நிக்கறோம். உங்க வீட்டுப் பெண்கள் பேச்சு சரியில்ல. மரியாதையை எப்பவும் எதிர்பார்க்கறவங்க நாங்க..”



அதுவரை அங்கே நடப்பதை அமைதியாய் அவதானித்திருந்த வடிவேலன் இப்பொழுது சீறத் தொடங்கினார்.



“வடிவேலன், கொஞ்சம் அமைதியா இருங்கள். திடீர்னு இப்படி ஒரு நிகழ்வு நடக்கையில் வீட்டுப் பெண்களுக்கு கோபம் வருவது இயல்பு தான். அதுவும் என் தங்கச்சி மகனுக்குத் தான் காவேரின்னு சின்ன வயசுலேயே பேசி வைச்சாச்சு..”, என்றவர்.



“கல்யாணத்துக்குப் பொண்ணுன்னு இருந்தாத் திருமணத்துக்கு கேட்டுட்டு வரது வழக்கம் தானே? உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். சமுதாயத்தில் பெரிய மனுஷர். ஒரே சமூகம் வேறு. அதனால தான் உங்களை உட்கார வைச்சிப் பேசிட்டு இருக்கேன். போகட்டும், இந்தப் பேச்சை இத்தோடு விடுவோம். என் பொண்ணுக்குக் கல்யாணத் தேதி ஃபிக்ஸ் பண்ணிட்டுச் சொல்லி அனுப்பறேன். நிச்சயம் பெரியவங்க உங்க ஆசியும் அவளுக்கு வேணும்..”, என்று பெரிய கும்பிடாய்ப் போட்டு விட்டு எழுந்து கொண்டார்.



சற்றே நிதானித்த தன் மனதிற்கு இழுத்துக் கடிவாளமிட்டவர் தன் முடிவைச் சொன்னார்.



வீட்டுக்குள் கலவரம் ஏற்படுத்த விருப்பமில்லை அவருக்கு..



‘அவ்வளவு தான் பேச்சு முடிந்தது, நடையைக் கட்டு ராசா. இல்லை, மரியாதை போயிடும்.’ என்ற ரீதியில் இருந்த தன் வருங்கால மாமனார் கமல்நாத்தை காணக் காண ஜீவானந்துக்கோ சிரிப்பு வந்தது.



பெண்ணின் மனதைப் பார்ப்பதை விட மற்றவர்களுக்கு முக்கியம் கொடுப்பார் போலவே!



பொங்கி வந்த சிரிப்பை அரும்பாடுபட்டுத் தனக்குள் அடக்கியவன் தானும் மெல்ல எழுந்து கொண்டான். இவரை வேறு வகையில் தான் அணுக வேண்டும்..



அவனைத் தொடர்ந்து அவனைப் பெற்றவர்களும் எழுந்து கொள்ள,



“மாமா. உங்க பெர்மிஷன் இல்லாமல் உங்களை மாமான்னு கூப்பிடறேன். மன்னிச்சிக்கோங்க. ஆனாலும் அங்கிள்னு ஆங்கிலத்தில் சொன்னாலும், தமிழில் மாமான்னு தான் அர்த்தம் வரும். என்னைப் பொருத்தவரை என் மனைவியின் தகப்பனார், எனக்கு மாமானார் தான் என் மாமாவும்.. சார் சொன்னா ரொம்ப விலகிப் போற ஃபீல்..”



‘இவன் என்ன பைத்தியமா? நாசூக்காய்ச் சொன்னால் விளங்காதா?’, என கமல்நாத் தன் தாடையை சொறிய, காவேரியோ, தன் தந்தையின் கோபத்தை அறிந்திருந்தவள், அடுத்து என்ன நடக்கும் எனக் கையைப் பிசைந்தாள்.



‘டேய் கிராதகா, அன்னிக்கே சொன்னேன் தானே? புத்தியில்ல? எங்கப்பா போலீசை கூப்பிறதுக்கு முன்னாடி ஓடிப்போயிடு.’ ஜீவாவை முறைத்து எச்சரித்தாள்.



அவளுடைய ஜாடைப்பேச்சை ரசித்தவனோ, கூலாக,



“இங்க பாருங்க மாமா, போகட்டும், ஒரு சின்ன வேண்டுகோள். டீல்னு வேணா வைச்சுக்கோங்க. காவேரி நன்றாக மற்றவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் பேசுகிறாள். உங்க பொண்ணு என் கம்பனியில் மோட்டிவேஷனல் மேனேஜ்மெண்ட் ஸ்பீச் மாதிரி அப்படிக் கொடுக்கட்டும். ஜஸ்ட் ஒரு மாசம் தான். இந்த ஒரு மாசத்துல அவளை நான் எந்த விதத்திலும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ என்று தொந்தரவெல்லாம் செய்ய மாட்டேன். வரட்டும், பார்க்கட்டும், என்னைப் பத்தித்தானாத் தெரிஞ்சிக்கட்டும். ஒருவேளை அவ மனசுக்கு என்னைப் பிடிச்சிருந்தா, அவ சொல்லக் கூட வேண்டாம். நானாத் தெரிஞ்சிட்டுத் திரும்பி வந்து உங்க முன்னாடி அவளைத் திருமணம் செய்யக் கேட்டுட்டு நிப்பேன். அன்னிக்கு நீங்க மறுக்கக் கூடாது. இதுனால உங்க மகளுக்காக நீங்க எடுத்த திருமண முடிவும் சரிதானா என்றும் தெரிந்துவிடுமே!”



‘இது என்ன நிபந்தனை? எதற்காக? ஆனாலும் யோசித்தால் சரியாகவே தோன்றுகிறதே!’



கமல்நாத் மீண்டும் யோசிப்பதற்குள், கமல்நாத்தின் சகோதரி பாமா, “அண்ணா, இதெல்லாம் எதுக்கு தேவையில்லாம பிரச்சனை பண்ணிட்டு? எதுக்கு இவன் பேச்சை நாம் கேக்கணும்? நம்ம பொண்ணு மனசு நமக்கு தெரியாதா என்ன.. முதல்ல இவங்களை வெளியே அனுப்புங்க. நம்ம வீட்டுப் பொண்ணு எதுக்கு இவன் கம்பனிக்கு கிளாஸ் எடுக்கப் போகணும்? தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையா இருக்கு இதெல்லாம்.. வேணாம் அண்ணா இதுக்கு சம்மதிக்காதீங்க..”



“மேடம், நான் இவங்களைக் கூப்பிடலைங்க. இவங்க தான் எங்க கம்பனிக்கு நன்கொடைங்கிற பேருல முதல்ல வந்து நின்னாங்க. சுயமா யோசிக்கிறாங்க. எனக்குப் பிடிச்சுது. அதை நான் பாராட்டறேன். இந்த மோட்டிவேஷனல் ஸ்பீச் மூலம் எங்க கம்பனி ஸ்டாஃபுக்கு நல்ல அறிவுரைகள் கிடைக்கும். இவங்களுக்கும் இவங்க கேட்ட நன்கொடையும் தாராளமாக் கிடைக்கும். கிவ் அண்ட் டேக் பாலிசிங்க..”



“அது தான் எதுக்குத் தம்பி? எங்க கிட்ட இல்லாத பணமா? எதோ சின்னப் பொண்ணு தெரியாத்தனமா உங்க கிட்ட வந்து டொனேஷனுக்கு நின்னுடுச்சு. டேய் ஈஸ்வர், என்னடா பேசாம நிக்கற? அந்த ஃபோனை நோண்டறதை விட்டுட்டு என்னான்னு இங்க கேளு..”, இப்போது முதல் தங்கை ஹேமா மகனை அதட்ட, கோபாலோ தன் மனைவி சொன்னதற்குத் தலையாட்டியானார்.



கமல்நாத்தோ தனக்குள் எதையோ தீர்மானித்தவர், “தப்பில்லை தங்கச்சிங்களா. இந்தத் தம்பியோட அணுகுமுறை எனக்கும் பிடிச்சிருக்கு. காவேரி சுயமா நிக்க ஆசைப்படறா. நிச்சயம் பாராட்டணும். இவங்க கம்பனிக்குப் போறதால ஒண்ணும் அவ மனசு மாறிடாது. அவளுக்கு ஈஸ்வரைத் தான் பிடிக்கும் பாரு. அதான் ஜீவாத் தம்பி எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன்னு சொல்லி இருக்காரே. அதோட நம்ம ஹரீஷும் அங்க இன்டர்ன் போகப் போறான். இன்னும் என்ன? எதுக்கு பயப்படணும்? ஒரே மாசத்துல நம்ம பொண்ணை வேண்டாம்னு இவரே சொல்லிட்டுப் போயிடுவார் பாரு..”



“என்னங்க. எதுக்குத் தலையைச் சுத்தி மூக்கைத் தொடணும்?..”, கமல்நாத்தின் மனைவி அமிர்தா எதையோ தொடங்க, மனைவியைத் தன் ஒற்றைப் பார்வையில் அடக்கினார் அவரோ.



ஏனோ தன் மகளின் மகிழ்ச்சி, சந்தோஷம் எதில் என்று பார்க்க எண்ணி விட்டவர், துணிந்து தானாகவே ஜீவானந்த் விரித்த வலையில் சிக்கினார். தான் எடுத்த முடிவின் விபரீதம் புரியாமல் முடிவெடுத்து விட்டாரோ! விடாமல் வற்புறுத்துபவனின் அணுகுமுறை அவரையும் யோசிக்க தூண்டியதோ..



எது எப்படியோ ஜீவானந்தன் தான் நினைத்ததை சாதிக்க தொடங்கி விட்டான்..



“நல்லது தம்பி, என் பொண்ணும், பையனும் உங்க ஆபீசுக்கு வருவாங்க. ஆனா, அவளுக்கு எந்தவிதத் தேவையில்லா வற்புறுத்தலும் இருக்கக் கூடாது”



அந்த வீட்டுக்கு மூத்தவர்களான ரத்னாவுக்கும், ஹரிச்சந்திரநாத்துக்கும் தங்கள் மகனின் இந்த பதிலில், தன் பேத்திக்கும், பேரனுக்கும் திருமணம் நடக்குமா, நடக்காதா என்று அப்போதே கவலை எழுந்தது.



ஜீவானந்துக்கோ மனம் மகிழ்ச்சியில் துள்ளியது, தன் திட்டம் பலித்து விட்ட நம்பிக்கையில்..



காவேரிக்கோ பயப்பந்து உள்ளுக்குள் எழுந்தது, இனி வரப்போகும் விபரீதத்தை எண்ணிக் கலங்கினாள்.
 

Mohanapriya M

Well-known member
Jeeva vera level ah plan pana arampitchutan 🤔 kaveriyoda appa va ninachu tan pavama iruku thappana mudivu eduthutaru 😂
 
Top