கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 8

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 8

தன் அறையில் கண்மூடிப் படுத்திருந்தாள் காவேரி. செய்வதற்கு அடுக்கடுக்காய் எத்தனையோ வேலைகள் காத்திருந்தாலும், எதிலும் உற்சாகமில்லாமல் சோர்ந்திருந்தாள். அந்த அறையின் அந்தகார இருட்டைப் போல் அவள் வாழ்க்கையும் இருட்டாகி விடுமோ என்ற பயப்பந்து அவளுள் எழுந்தது.



ஏனோ அன்றைய நிகழ்வுகளை மனம் மீண்டும் மீண்டும் அசை போட்டுக் கொண்டிருந்தது. தன்னைக் கவர்வதற்காக ஜீவா தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தரணியைத் தனக்கு அறிமுகப்படுத்தி இருக்க மாட்டான் என்று அவளால் உறுதியாக எண்ண முடிந்தது. நிச்சயம் அவன் அப்படிப்பட்டவனில்லை என்று நம்பினாள். ஒருவேளை தங்களுக்குள் பின்னாளில் எந்தவித உறவும் ஏற்படவில்லையென்றாலும், தரணியோடு கழிந்த இந்நாளை அவளால் மறக்கத் தான் முடியுமா?



ஆனால், இதெல்லாம் சுத்த கயமைத் தனம் என்று சற்று நேரம் முன்பு வாதிட்ட ஈஸ்வரின் நியாயத்தைச் சுத்தமாக அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.



மனிதர்களை சகமனிதர்களாய்ப் பார்க்க மாட்டானா இவன்? எதற்கெடுத்தாலும் குத்தல் பேச்சும், சந்தேக புத்தியும்!! எப்படி இவனை வாழ்நாள் முழுவதும் சகித்துக் கொள்ள முடியும்?



ஜீவாவிடம் சரியாக விடைபெறக்கூட தோன்றாமல் அவன் சென்ற காரை வெறித்துக் கொண்டிருந்தவள், அவன் சொன்னதை யோசித்தபடி தன்னைறைக்குள் நுழைய, அவள் எதிரே வந்து நின்றான் ஈஸ்வரோ.



“காவி, அவன் பணத்தைக் கொடுத்தானா?..”



அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாத முட்டாளில்லையே காவேரி.



“ஈஸ்வர் அத்தான், சமுதாயத்துல பெரிய மனுஷர் அவங்க. மரியாதையில்லாமல் இதென்ன பேச்சு?”



‘ஓ கதை அப்படிப் போகுதா! அவராமே அவர். குட்டிச்சுவர்!. ம்ம். மரியாதை கொடுக்கணுமா நாங்க.’



“சரிங்க மேடம், அந்த ஜீவானந்தன் சார் நமக்கு பணவுதவி செய்வாராமா? ம். என்ன சொன்னாருங்க அவரு. சமுதாயத்துல பெரிய அந்தஸ்த்துல இருக்காருங்க பாருங்க. ஆனா, அந்த அவரு வேலைங்கிறப் பேருல, உன்னோட ஊரைச் சுத்திட்டு இருக்காருங்களோ? இன்னிக்கு முழுசா நீ ஆபிசுல இல்லையாமே. பட்சி சொல்லிச்சி..”



கோணலாக உதடுகளை வளைத்தவனைக் கண்டு இவளோ முகத்தை சுளித்தாள். மனமோ அவன் வார்த்தைகளில் வெறுத்துப் போனது. ஏன் இப்படிப் பேசுகிறான்?



“ஓ. என்னை வேவு பாக்கிறீங்களோ? இது சரியில்ல, சொல்லிட்டேன்..”



அவ்வளவு தான், அவன் பேச்சே வேறு மாதிரியாய் இருந்தது.



“எது சரி, எது தப்புன்னு எல்லாமே இந்த ஈஸ்வரனுக்குத் தெரியும் காவேரி மாதா. நீ போகும் பாதை தான் இப்பொழுது சரியில்லை. நீ இதைத் தெரிந்து செய்கிறாயா, தெரியாமல் நடக்கிறாயா என்று தான் என்னுள் ஐயம் இப்பொழுது. ஒவ்வொரு திருமணமாகாத இளம் பெண்ணும் பெற்றவர்கள் கண் பார்வையில் வளர வேண்டியவள். திருமணத்திற்குப் பின்னோ, அவளை ஆட்கொண்டவனின் கைப்பிடியில் இருக்க வேண்டியவர்கள். தெரியுமா உங்களுக்கு? அவ்வகையில் நீ பெற்றவர்களிடமும் தெரியப்படுத்தவில்லை, உரிமையுடையவனான என்னையும் மதிப்பதில்லை..”



காவேரிக்குக் குற்றவுணர்ச்சியில் பேச்சு எழவில்லை.



இவனிடம் சொல்லவில்லையென்றாலும், பெற்றவர்களிடம் தகவல் சொல்லி இருக்க வேண்டுமோ?



ஆனாலும் அவனின் பேச்சு அவளுக்கு ரசிக்கவில்லை. இவன் ஏன் மாற்றி மாற்றிப் பேசுகிறான்? ஒரு நிலையாய் இருக்க மாட்டானா? ஹரீஷ் சொல்வது சரிதான் போல்.. கார்ப்பரேட் சாமியார்! காசா.. மாற்றி மாற்றி பேசி வேஷம் போடுகிறான்..



கோபம் தலைக்கேறியது.



“இங்க பாருங்கத்தான், நான் எங்க போறேன், எங்க வரேன்னு இது நாள் வரை எங்கப்பா, அம்மா என்னைக் கேட்டதில்ல. நானும் சொன்னதில்லை. என் மேல அவங்களுக்கு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையை நானும் காப்பாத்துவேன்.. உங்களுக்கு இப்பவே என் மேல் நம்பிக்கை இல்லை.. பின்னர் எப்படி?..”, என்று படபடவெனப் பொரிந்து கொட்டியவள், மேலே பேச விரும்பாமல் அங்கிருந்து நகரப் போக..



“இருக்கட்டும் காவேரி மாதா. நம்பிக்கை தானே வாழ்க்கை? அந்த நம்பிக்கையில் தான் நானும் அந்தப் பெரிய மனிதனிடமிருந்து பணம் பெயர்ந்ததா என்று கேட்டுப் பார்த்தேன். பணத்தைக் கொடுக்கப் பெரிய மனிதர்கள் மனதில்லாமல் சிறியவர்களாகிறார்கள்.. என் மேல் கோபப்பட்டு என்ன பயன்?..”



“அய்யோ ஈஸ்வரத்தான், போதும் விடுங்க உங்க மொக்கையை. வரவர உங்க பேச்சு சாமியார் ரேஞ்சுக்குக் கூடிட்டே போகுது. திடீரென்று உங்க பேச்சு மாறி உங்க பெர்சசனாலிட்டியே மாறிடுது. இப்படியே போனா, ஒருநாள் இல்ல ஒருநாள் நான் உங்களை வேண்டாம்னு சொன்னாலும் சொல்லிடுவேன்..”, ஆத்திரத்தோடு ஆரம்பித்தவள், சொல்லி விட்டுச் சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டாள்.



‘அய்யோ இதை இப்பொழுது பேசுவது சரியில்லையே! ஒரே நாளில் அவன் வீட்டுக்குப் போய் வந்ததில் என் மனம் மாறிவிட்டதா?’



“அது உன்னால் முடியாது பெண்ணே! இந்த ஈஸ்வரனுக்கு காவேரிதான் என்றும் பொருத்தம். உன்னை என் நெஞ்சில் சுமக்கவில்லை தாயே, என் தலையில் சுமக்கிறேன், மறந்து விட்டதா காவேரி மாதா. நீ உலகத்தைக் காக்க வந்த ரட்சாம்பிகை. நானோ உன்னை ரட்சிக்க வந்த ஈஸ்வரன். நடுவில் வந்தவர்கள் அப்படியே நட்டாற்றில் போக வேண்டியதுதான் மாதா..”



“ஈஸ்வர். போதும் உங்க பிதற்றலைக் கொஞ்சம் நிப்பாட்டுங்க முதல்ல.. தாளமுடியல..”, அத்தானை ஒதுக்கி அவன் பெயரைச் சொல்லி அதட்டிய காவேரி அதற்கு மேல் பேசப் பிடிக்காமல் வேகமாகத் தன்னறைக்குள் அடைந்து கதவை வேகமாக அடித்து மூடினாள்.



“காவேரி மாதா. உன்னை விட மாட்டேன். அந்த ஜீவானந்தனை இனி நீ சந்திக்க முடியாமல் செய்கிறேன். முதலில் பணம் நம் கைக்கு வரட்டும். பிறகு பார் நான் யார் என்பதை.. என்னை ஒதுக்குவதா? முடியாது பெண்ணே!..”, தனக்குள் சூளுரைப்பதாக எண்ணியவன், வாய்விட்டுக் கோபமாய் மூடிய கதவைக் கண்டு கத்திக் கொண்டிருந்தான்.



“என்ன அத்தான், யாரைச் சந்திக்க விட மாட்டீங்க? அப்படியெல்லாம் செஞ்சிடாதீங்க? அப்புறம் விவகாரமாப் போயிடப் போகுது. பணம் வரணுமா? எங்கேருந்து? ம். அது சரி அக்கா எங்கே?.. யார் ஒதுக்கினாங்க?..”



“உன் அக்காவை நான் ஒண்ணும் என் இடுப்பு பாக்கெட்டுல வைச்சிருக்கல. வேலையைப் பாருடா சின்னப்பயலே..”, எரிந்து விழுந்த ஈஸ்வர், ஹரீஷை முறைத்தபடி அங்கிருந்து வேகமாகச் சென்றான்.



“நல்லதுக்குக் காலமில்ல போல. வரவர இவன் பேச்சும் சரியில்ல, ஆளும் சரியில்ல. இருக்கட்டும், இவனை வைச்சி செய்யறேன்.. முதல்ல அக்காவுக்குப் புரிய வைக்கணும்..”, தனக்குள் கறுவிக்கொண்டபடி,



“அக்கா. சாப்பிட வரலையா?..”, கேட்டபடி தமக்கையின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் ஹரீஷ்.



இருள் நிறைந்த அறைக்குள், கட்டிலில் குறுக்கு வாட்டாக கண்மூடிப் படுத்திருந்தாள் காவேரி. அவளின் சுடிதார் ஷால் ஒருபக்கம், ஹேண்ட் பேக் மறுபக்கம் என வீசி எறியப்பட்டிருந்தது அவன் கண்களுக்குத் தப்பவில்லை.



‘ஒரே அமைதியான நிலவரம்’



விளக்கைப் போட்டான் ஹரீஷ். பளீரென்று ஒளிபெற்ற அறையின் வெளிச்சத்தில் முகத்தைச் சுருக்கினாள் காவேரியோ.



“அக்கா, என்னாச்சுக்கா? எதாவது ப்ராப்ளமா? இன்னிக்கு நீ ஆபிசுக்கு வரலைன்னு சொன்னாங்க. ம். எதுவாயிருந்தாலும் நான் இருக்கேன் உனக்கு.. உடம்பு சரியில்லையா?.. ”



“அக்கா, ‘நாம் நினைத்ததை செய்வோம், எவன் பேச்சையும் கேட்க மாட்டோம். பட்டுத் திருந்திக்குவோம். ஆனா, ஒதுங்கிப் போகமாட்டோம்.’ நம்ம மோட்டோ மறந்து போச்சா? எதுக்குக் கலக்கம் சகோதரி?.. கமான், அவுட் வித் இட்..”



‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்பது இதுதானே!



நீச்சல் தெரியாதவன், தண்ணீருக்குள் மூச்சுக்குத் தவிக்கும் நிலையில் கிடைக்கும் உதவி போல் இருந்தது காவேரிக்கு, தம்பியின் வரவு.



அவளருகில் அமர்ந்தவன், பாசமாய் அவளுடைய தலையை வருடிக் கொடுத்தான்.



பெற்ற தாயிடம் எதிர்பார்த்த அன்பு தம்பியிடம் கிடைக்க, காவேரியின் கண்களிலோ கண்ணீர் மழை.



“யக்காவ், நம்மூரு இப்ப வருஷாவருஷம் வெள்ளக்காடா மாறிட்டு இருக்கு. இதுல நீ வேற டேமைத் திறக்காதே, சொல்லிட்டேன். ஏற்கனவே இடியுடன் கூடிய கனத்த மழை இன்னும் நாலு நாளுக்குன்னு வானிலை அறிக்கை விட்டிருக்காங்க. இப்பல்லாம் அவுங்க கணிப்பு ரொம்ப சரியா இருந்து தொலையுது வேற..”



சலித்துக் கொண்ட தம்பியின் அலப்பறையில் காவேரி மெல்லக் கண்களைத் துடைத்தபடி எழுந்து அமர்ந்தாள்.



அத்தோடு விட்டுவிட்டால் அவன் ஹரீஷ் இல்லையே!



“சிங்கப்பெண்ணே! ஏய் சிங்கப்பெண்ணே!

செண்டிமெண்ட்டுக்கு அம்மாவாம்,

மொறைக்கிறது நம்ம அப்பாவாம்,

கண்ணுல தண்ணி விட்டா தாத்தா, பாட்டியாம்

பாசமழைக்கு நம்ம ஹேமா,பாமா அத்தையாம்,

காமெடிக்கோ நம்ம ஈஸ்வரத்தானாம்!. இல்லயில்ல சொத்தானாம்.

ஆனாப்பாரு,! அடிதடிக்கோ இந்தத் தம்பியாம்.

அப்புறுமென்ன நிமிர்ந்து பாரு சிங்கப்பெண்ணே!

உடனே சீறி எழு சிங்கப் பெண்ணே!..”

“அக்காவ்.. எப்படி நம் புதுக்கவிதை?..”



அவ்வளவுதான் பொங்கிப் பொங்கிச் சிரிக்கத் தொடங்கினாள் காவேரி. அவள் கண்களில் இப்பொழுது ஊற்றெடுத்தது சோகத்தால் அல்ல, சகோதரனின் பாசத்தால் வந்த உப்பு நீர்.



ஹரீஷும் அவளுடன் இணைந்து சிரிக்கத் தொடங்கினான்.



‘எப்படி நம்ம புதுக்கவிதை’ என்று தன் இளமீசையை திருகிக் கொண்ட தம்பியை வெகுவாய் ரசித்தாள்.



மெல்ல மெல்ல நடந்தது அனைத்தையும் பகிர்ந்துகொண்டாள் தமக்கை. அவள் பேசியதைக் காது கொடுத்து கேட்ட சின்னவன், தன் அறிவுரையைத் தொடங்கினான்.



“இந்த காலத்துல நல்ல பசங்களை தேடிக் கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்க்கா. பேசாம வந்தவனை மடக்கிப் போடு..”



“டேய், அப்ப அம்மாப்பா பார்த்து வைக்கிற கல்யாணம் சிறந்ததுனு சொல்லறதெல்லாம் பொய்யா?..”



“பொய்யில்ல, எல்லாமே சரிதான். ஆனா, குருட்டுப்பாசத்துல கண்ணிருந்தும் குருடா நீ இருந்தா, எல்லாமே உன் தப்பு தான். உன் மனசுக்கு உண்மை எதுன்னு படுதோ அதை நீ தைரியமாச் செய்யணும். யோசிச்சு முடிவெடுக்கா, எப்பவும் இந்தத் தம்பி சப்போர்ட் உனக்கு உண்டு. ஞாபகம் இருக்கட்டும்..”



ஒரு சகோதரனாக ஆலோசனை சொன்னான் தம்பி.



முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதா தனக்குள் குழம்பிக்கொண்டாள் காவேரியோ.



அடுத்த நாளே அதற்கான அவகாசமும் அவளுக்குக் கிட்டியது. அவள் மனம் தெளிந்தது.
 
Top