கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 13

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 13



“ஹாய் ஜீவா, என்னோடு பேச மாட்டீங்களா?..”



டென்னீஸ் விளையாட, தன் ராக்கெட்டுடன் வெளியே வந்த ஜீவானந்தைத் தடுத்து நிறுத்தினாள் காவேரி.



“காவேரிக்கா, அண்ணா வெளையாடப் போவாங்க. நீங்க எனக்கு மண்டலா ஆர்ட் சொல்லுங்க..”, சிணுங்கினாள் தரணி.



தோட்டத்தில் அமர்ந்து அவளுக்கு அதுவரை மண்டலா ஆர்ட் பற்றி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள் காவேரி.



காரிலிருந்து இறங்கி வந்த ஜீவானந்தன் அவள் அன்னை, தங்கையுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்த காவேரியைக் கண்டு முதலில் திகைத்துத் தயங்கி நின்றவன், சட்டென வேகமாக அங்கே நிற்காமல் அங்கிருந்து வீட்டுக்குள் சென்று மறைந்தான்.



வாடிய காவேரியின் முகத்தைக் கண்ட பெரியவர், “தப்பா எடுத்துக்காதேம்மா. அவனுக்கு உன் மேல கோபங்கிறதை விட, அவன் மேலேயே வருத்தம். தனக்குப் பிடிச்ச பொண்ணு தனக்குக் கிடைக்கலைன்னு கல்யாணமே வேண்டாம்னு இன்னும் இருக்கான்..”



“ஆன்ட்டி, நான். எனக்கு. சாரி ஆன்ட்டி..”



“அய்யோ, தப்பா எடுத்துக்காத தங்கம். அவன் குணமே அப்படித் தான். தனக்குக் கிடைக்கலைன்னா, அதை நினைச்சியே தன் வாழ்க்கையை ஓட்டுற குணம். என்ன செய்ய? எவ்வளவோ நாங்க சொல்லிப் பார்த்தாச்சு. கல்யாணம்கிற பேச்சை எடுத்தாலே துர்வாசர் தான் போ..”, என்று சிரித்தவர்,



“எங்களுக்கு மட்டும் இருக்கிற ஒத்தைப் புள்ளைக்கு ஜாம்ஜாம்னு கல்யாணம் நடத்தணும்கிற ஆசை இருக்காதா சொல்லு. என்னவோ எங்க குலம் தழைக்க அந்த ஆண்டவந்தான் ஒரு வழி காட்டணும்.. நீயும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோடு உங்க அப்பாஅம்மாவுக்கு சந்தோஷத்தை கொடும்மா. பெரியவங்க எங்களுக்கு வேறு என்ன வேணும் சொல்லு?..”



“சரிம்மா, அவனுக்கு காப்பிக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரேன். நீ தாரு குட்டியோடு அவளுக்குப் பிடிச்ச பெயிண்டிங்க் பத்திச் சொல்லு..”, என்றபடி அங்கிருந்து அகன்று விட்டார்.



சிறிது நேரம் கழித்து விளையாட வெளியே வந்தவனை நிறுத்தினாள் காவேரி.



“தாரு, நீ போய் இன்னிக்கு புதுசா வாங்கின அந்த டிராயிங்க் கிட்ஸ் எல்லாம் எடுத்து வருவியா?..”, எனச் சட்டென அவளை அங்கிருந்து அகற்றினாள் காவேரி.



தரணியோ, குட்டிப்பெண் போல உள்ளே ஓடினாள்.



“புத்திசாலி, சின்னவளை உனக்கு இடஞ்சலா இருப்பான்னு அனுப்பி வைச்சிட்ட. ம். உன் வாழ்க்கையில் யார் இடைஞ்சலா வந்தாலும் இப்படித் தானா?..”



கோணலாய் உதடுகளை வளைத்தான் அவனோ..



காவேரியின் முகம் வெளிறியது அவனது குற்றச்சாட்டில். தனக்கு அவனைத் திருமண செய்யக் குழப்பமாக இருக்கிறது என்றது ஒரு தப்பா? அவனை ஒதுக்கி வைத்து விட்டேனா?



“இல்ல, அது அப்படியில்ல. தப்பாப் பேசாதீங்க ப்ளீஸ். உங்க கிட்ட பேச. சும்மாதான், ரொம்ப நாளச்சு பார்த்து. அது, தரணி சின்னப் பொண்ணு. இதெல்லாம் அவளுக்கு தெரிய வேண்டாமே. ஏன் என்னை அவாயிட் பண்ணிறீங்க ஜீவா..”



நேரடியாகவே இப்பொழுது கேள்விகளைத் தொடுத்தாள்.



“ம். அவாயிடா? நானா? நல்ல ஜோக்கு மா. வேண்டாம்னு சொல்லிட்டுப் போனவள் நீ. மறந்து போச்சா? அதுக்குப் பிறகு பேச என்ன இருக்கு? பார்த்துத் தான் என்ன ஆகப் போகுது? அப்படியே பாத்தாலும், இங்கி பிங்கி பாங்கி போடுவ நீ? அவனா? நானா? ஜெயிக்கப் போவது யார்?. ம். என்னால முடியாதும்மா இதெல்லாம். ஆம் உன் ஆட்டத்திலிருந்து ஒதுங்கிப் போனேன். ஆனா, மறந்து போகல. போதுமா? சரி இப்ப என்ன தெரியணும் உனக்கு? ஒவ்வொரு நாளும் என் வாழ்வில், என் மூச்சில், என் ஒவ்வொரு செய்கையிலும் நீ தான் இருக்க. போதுமா? இதைத் தானே கேட்க ஆசைப்பட்டு, என் வீடு தேடி ஓடி வந்திருக்க? ம். இன்னும் என்ன தெரியணும் சொல்லு?..”



“ஜீவா?..”, அதிர்ந்து நின்றாள் மங்கை.



“ஜீவாவுக்கு என்ன வைச்சிருக்க? இன்னொரு ஏமாத்தத்தைத் தாங்கிற சக்தி எனக்கில்லைம்மா. நான் உண்டு என் வேலை உண்டு, என் குடும்பம் உண்டுன்னு நிம்மதியா இருக்கேன் அதையும் கெடுக்க இங்க வந்து நின்னுட்டியா இப்ப? தீர்க்க முடியாத பிராப்ளம் வரும் போது அதையே நினைச்சி துவண்டு போவதற்கு பதில் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண நினைச்சேன். தீர்வு தெளிவில்லாத போது, ஏன் அந்தத் தீர்வே மற்றவர்களை பாதிக்கும் போது, பேசாமல் இந்தப் பிரச்சனையே நடக்கலன்னு ஒதுங்கி நிக்கப் பழகிட்டேன். அவ்வளவு தான்..”



அதிர்ந்து பேச்சற்று நின்றாள் காவேரி. ‘நான் இவனுக்கு மற்றவளா? அந்நியவள் ஆகிப்போய் விட்டேனா?’



“ம். எதுக்கு இந்த அதிர்ச்சி? வேண்டாம் என்று ஒதுங்கிப் போனவள் மற்றவள் இல்லாமல் உற்றவளா? நீ எனக்கு அந்நியவள் தான்.. சரி விடு.. ஓகே. இன்னும் என்ன தெரியணும்மா உனக்கு. எனக்கு கல்யாணமாகல. அதான் எங்கம்மாகிட்டேர்ந்து விஷயத்தை கறந்திருப்பியே.. நானும் விளக்கமா சொல்லறேன், நல்லா கேட்டுக்கோ.. நான் இன்னும் பைத்தியக்காரன் மாதிரி உன்னை நினைச்சிட்டு வாழ்ந்து கொண்டிருக்கேன். இப்படிச் சொன்னால் போதுமா? இன்னும் எதாவது விளக்கம் வேணுமா? ஆனா நீ? ஹாப்பியா சிங்கிளா இன்னும் சுத்திட்டுத் தான் இருக்கயில்ல, ரெண்டு பேரை முட்டாளாக்கிக்கொண்டு, சரிதானே?..”



பேசிக் கொண்டே போனான் ஜீவானந்தன். அவன் பேச்சில் அத்தனை நாட்களாக தனக்குள் தேக்கி வைத்துக்கொண்டிருந்த அனைத்து உணர்வுகளையும் கோபமாகக் கொட்டித் தீர்த்தான்.



காவேரிக்கும் கோபம் வந்தது. ஆனால், கோபம் இதற்கெல்லாம் வடிகாலாகாதே! தன்னை அடக்கிக் கொண்டாள்.



“போதும் ஜீவா. பேசிட்டே போகாதீங்க. கொஞ்சம் அடுத்தவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னும் கேளுங்க. தீர்வே வேண்டாம்னு ஒதுங்கிப் போக நினைக்காதீங்க. அப்படிக் கேட்டு இருந்தீங்கன்னா உங்க பிரச்சனைக்கும் அன்னிக்கே தீர்வு கிடைச்சிருக்கும். நீங்க ரொம்ப நல்லவர் ஜீவா. என்னைப் புரிந்து கொள்வீங்கன்னு அன்னிக்கு நினைச்சேன்..”, தழுதழுத்துச் சொன்னாள் காவேரி.



அவன் அவளை ஆச்சரியமாய் மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தான். அவன் பார்வையில் ஏளனம் தெரிந்ததா அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.



“தாங்க்ஸ் ஃபார் தெ காம்ப்ளிமெண்ட். ரொம்பவும் நல்லது. நிச்சயம் உன்னைப் புரிந்து கொண்டேன். ஆனா, ஒண்ணை நீ சுலபமா மறந்து போயிட்ட. உன்னைக் கண்டவுடன் காதலிச்சேன். உன்னையே மணக்க எண்ணி நேரடியாகவும் அணுகினேன். ஏன், நல்லவனா என் பெற்றவர்களோடு முறையா உங்கள் வீட்டுக்கும் வந்தும் அவமானப்பட்டேன்..”



அவள் இப்பொழுது நிமிர்ந்து நேரடியாக அவனைப் பார்த்தாள்.



“ஜீவா, எங்க வீட்டுல நிச்சயம் உங்களை யாரும் அவமானப்படுத்தல. விருப்பமில்லைன்னு நாசூக்காத் தான் சொன்னாங்க..”



“நான் யாரையும் தப்பாச் சொல்ல வரலை. மறுத்தல் என்பது என்னைப் பொருத்தவரை தோல்வி, அவமானம் தான். ஆனாலும் அதை வெற்றியாக்கத் தான் கொஞ்சம் நாட்கள் நான் அவகாசம் கேட்டேன். என்ன செய்து என்ன, உன் மனசு என்னவோ மாறவில்லையே. எல்லாமே வேஸ்ட்..”



அவள் இப்பொழுது மௌனித்தாள். இவனை நிறுத்திப் பேச வந்தது தவறோ என்று அவள் மனம் யோசித்தது.



ஆனால் அவனோ எதுவும் தவறில்லை என்றான்.



“எதுவுமே தப்பில்லைமா. என் மனதை நான் சொன்னேன். அதுக்குக் கூடவா எனக்கு உரிமையில்ல, நிச்சயம் அதுக்குப் பின்னால் இருந்த உண்மையான அன்பை நீ புரிந்து கொள்ளவில்லை, அவ்வளவு தான். காசு பணம் என எல்லாம் அளவுக்கதிகமாய் உனக்கிருக்கு. ஆனால், அன்பு? அது கிடைச்சுதா, அதுக்கான பதில் உங்கிட்ட இருக்கா எனக்குத் தெரியல. காசு பணத்தை வச்சி கார் வாங்கலாம், வீடு வாங்கலாம், சொத்துக்களைச் சேர்க்கலாம். காசு பணத்தை தேடி ஓடலாம். ஆனால் சந்தோஷம்? அந்த சந்தோஷத்துக்குப் பின்னாடி நீ தேடின அந்த தெளிவு?”



அவனது முகத்தில் உணர்ச்சிகளே இல்லை. ஆனால் வார்த்தைகளில் பழி போட்டுக் கொல்லும் உணர்வு.



இவள் முகம் கசங்கியது. ஆனாலும், அன்று கேட்க மறந்ததை இன்று கேட்கிறானே என்ற சிறு நிம்மதி.



மனதில் தோன்றியதெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தான். இவளும், அவன் எல்லாவற்றையும் பேசி தீர்க்கட்டும் என்று அமைதியாகக் கேட்டு நின்றிருந்தாள்.



“நீ தேடிப்போன தெளிவு உனக்கு இப்பவாது கிடைச்சுதா? என்னை ஃப்ரெண்டாக பார்ப்பதா அன்னிக்கு சொல்லிட்டுப் போனே. இப்ப உன் மனசுக்கு ஹஸ்பெண்டா அவனை. அந்த ஈஸ்… நினைக்கத் தோணுதா? அந்த சந்தோஷத்தை அவன் கொடுத்தானா? என்ன தெளிவுப்படுத்தினானா?..”



அவள் மௌனித்தாள். அவன் விடாமல் பேசிக் கொண்டே போனான்.



“ஒரு கார் சரியாக ஓட அதோட நாலு சக்கரமும் சரியா, காத்து அடிச்சி, பேலன்சோடு, சரியான கோ ஆர்டினேஷனோடு பக்கவா இருக்கணும். அந்த நாலு டயர் மாதிரி தான் நம் வாழ்க்கையும்.. நம் பெர்சனல் லைஃப், ரிலேஷன்ஷிப், ஒர்க் லைஃப், சோஷியல் காண்டரிபியுஷன்.. இதெல்லாம் சரிசமமாக இருக்கணும். இதெல்லாம் சரியா இருப்பதோடு அந்த காரை ஓட்ட ஸ்டியரிங்கும் சரியா இருக்கணும். அந்த ஸ்டியரிங்க் தான் ஸ்பிரிச்சுவாலிட்டின்னு சொல்லறாங்க.. அதை சரியா கோ ஆர்டினேட் பண்ணினாத் தான் வாழக்கை வண்டி ஸ்மூத்தாகப் போகுமாம்.. இதை நான் சொல்லலை மா, சுவாமி கோபால் தாஸ் கவுர் சொல்லி இருக்கார்.. அவரும் பெரிய ஞானி தான்.. உன் ஈஸ்வரை விடப் பெரிய ஞானி அவர்..”



“ஓ.. மொடிவேஷனல் டிவோஷனல் ஸ்பீச்.. தெரியும். ஆனா, நீங்க இதெல்லாம் கேட்க விரும்ப மாட்டீங்களே?..”



“வாழ்க்கையை அதன் போக்கில் நேர்மையாய் வாழ்ந்து பார்க்க நினைக்கிறவன் நான். எனக்கு நேரமில்லை இதுக்கெல்லாம்.. சமீபத்தில் தற்செயலாக் கேட்க நேர்ந்தது. அதை விடு. நான் எதுக்கு இதைச் சொன்னேன்னா, அவர் ஸ்பீச் என்னை உலுக்கியது . அந்த கார் ஸ்டியரிங் மாதிரி நான் சந்தோஷமா வாழக்கை வண்டியை உன்னோடு செலுத்த விரும்பினேன். பட்.. காவேரி, இப்ப சொல்லு, நீ தேடின சந்தோஷம் உனக்கு கிட்டியதா? அந்தத் தெளிவு கிடைத்ததா? ஈஸ்வர் அதைத் தெளிவு செய்தானா? அவன் தான் உனக்கானவனா?..”



நேரடியான கேள்வி. கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான். ஆனால் பதில்தான் எப்போதும் போல் இப்போதும் அவளிடமில்லை. எதையோ மீண்டும் இழந்த உணர்வு. ‘ஈஸ்வர்தான் தனக்கானவன் என்று இன்று வரை ஏன் தனக்குத் தோன்றவில்லை?’



“சாரி நான் கேட்டிருக்கக்கூடாது.. தர்மசங்கடமாக்க நான் விருப்பப்படலை. சரி போகட்டும், வாழ்க்கை எப்படிப் போகுது காவேரி. இப்ப சந்தோஷம்மாத் தானே இருக்க. உனக்குப் பிடிச்ச வாழ்வு. ஆஸ்ரமம், ஈஸ்வர் அத்தான். இப்போது காவேரி மாதாவாமே நீ? ஜெய் மாதாஜீ..”,



அவனுக்கே சிரிப்பு வந்ததோ? லேசாகச் சிரித்தான். அவன் மனநிலையை அவளால் யூகிக்க முடிந்தது.



“சாரி ஜீவா, என்னால தானே இதெல்லாம். கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டீங்களாம் வீட்டில். அம்மா ரொம்ப வருத்தப்படறாங்க..”



“நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே! கருப்பு இல்லை வெள்ளை. எனக்கு இந்த நடுவாந்தரம் எல்லாம் வேணாம். எதுக்கு தேவையில்லா வர்ணம் சொல்லு? ஒண்ணு நீ எனக்கு மனைவியாகணும். இல்லையா, நான் நித்திய பிரம்மச்சாரி தான்..”, என்றவன்..



“என்னால் எதுக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியாது. வாழக்கையில் நாம் நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் முதலில் இப்படி காம்ப்ரமைஸ் செய்யக் கூடாது. அப்பதான் நாம் நினைச்ச இடத்தை அடைய முடியும் காவேரி.. காம்ப்ரமைஸ் பண்ணி வாழறது எதுக்கும் தீர்வாகாது..”



தன் கைகளை விரித்துக் காண்பித்தான். அவன் செய்கையில் இவள் முகம் கடுகடுத்து. கொஞ்சம் பாவமாய் யோசித்துப் பேசினால் ஓவராகப் பண்ணுகிறானே! இவனை..



“இது உங்களுக்கே ஓவராயில்ல? பெரியவங்க எவ்வளவு வேதனைப்படறாங்க தெரியுமில்ல. ரொம்பவும் பண்ணறீங்க, அவங்களுக்கும் தங்களுக்குப் பின்னால் பெயர் சொல்ல வாரிசு வேணும்னு ஆசை இருக்காதா?..”



“ஏன் நீ ஏன் அதுக்கு அப்ளிக்கேஷன் போடப் போறியா? அது சரி அந்த ஆசை உங்கம்மாப்பாவுக்கும் இருக்கலாமே?..”, அவனோ அவளைக் கேட்டு மடக்கினான்.



“தாராளமா இருக்கு. நான் ஒண்ணும் கல்யாணம் வேண்டாம்னு அடம் பிடிக்கல. கொஞ்சம் காலம் அவகாசம் கேட்டிருக்கேன். எனக்கானவன் யார்னு என்னால் தீர்மானிக்க முடியல. இன்னுமே அந்த குழப்பம் தான். என் வாழ்க்கைக்கு யார்?..”, இவளோ மீண்டும் அவனை நன்றாகக் குழப்பினாள்.



அவளை முறைத்தான் ஜீவானந்தோ.



‘என்னை உனக்கு நன்றாகவே தெரியும். என் எண்ணங்கள், என் மனது, என் கொள்கை எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறாய். ஆனாலும், நான் வேண்டாம் உன் கணவனாக. ஏன்டி என்னை விட்டுப் போனாய்? போனவள் போனதாக இருந்திருக்கலாமே! மீண்டும் என் கண் முன்னால் வந்து சும்மாக் கதை பேசிக் கொண்டு, நான் ஏன் திருமணம் செய்யவில்லை என்ற வியாக்கியானம் வேறு!. இன்னும் தெரியலையாம் யார் வேண்டும் என்று. இவளை! இனி இப்படியே விட்டால் இவள் சரிப்பட மாட்டாள். இருக்கட்டும்.’



வெறுத்துப் போனது அவன் ஏமாந்த உள்ளம். தன் உணர்வுகளை அடக்க அரும்பாடு பட்டான்.



மனம் கனத்தாலும் தன்னவள் தனக்குப் பிடித்த வாழ்க்கையை தேடிக்கொள்ளட்டும் என்ற எண்ணமே அவனுக்கு ஒரு நிறைவைக் கொடுத்தது.



“ஜீவா”



“ம்..”



“போனது போகட்டும், இனியாவது திருமணத்தைப் பத்தி யோசிப்பீங்களா? நீங்க கல்யாணம் செய்யலைன்னா நான் எப்படி என் திருமணத்தைப் பத்தி யோசிக்க முடியும்? எனக்காகவாவது யோசிக்கலாமே?..”

அவளைக் கூர்ந்து பார்த்தான். அநியாத்துக்கு அழகாய் இருந்து தொலைந்தாள் அவள். ஆரஞ்சும், சிவப்பும் கலந்த காட்டன் புடவை அவள் நிற அழகை மேலும் எடுத்துக் காட்டி, அவள் புடவை அழகா, இல்லை புடவைக்கு அவளால் அழகா என அவனை ஆராய்ச்சி செய்யத் தூண்டியது. பெண்களே பொறாமைப்படும் பேரழகு. லேசாய்க் கண்களில் மை தீட்டி இருந்தாள். சுருட்டை முடியை குதிரை வால் போல் கிளிப்பில் அடக்கியிருந்தாள். அவ்வளவுதான் அவள் ஒப்பனை. உதட்டுக்குக் கூடச் சாயம் பூசவில்லை.



அவளைப் பார்க்கப் பார்க்க தன் இழப்பை அதிகமாய் இன்னும் உணர்ந்தான் ஜீவானந்த்..



அவன் பார்வையை உணராதவளோ, “ஜீவா..”, என மீண்டும் அழைக்க,



ஜீவாவுக்கு கோபம் தலைக்கேறியது. தன் மனதை உணர மறுக்கிறாள்..



“ம். யோசிக்கிறேன். ஏன் நான் கல்யாணம் செய்யக் கூடாதா? உன்னை நினைச்சி அப்படியே சாமியாரா போயிடுவேன்னு நினைச்சியோ! நிச்சயம் செய்வேன். உனக்காக இல்லை, எனக்காக, என்னைப் பெத்துட்டு எனக்காக வாழற என் பெற்றோர்களுக்காக. நிச்சயம் இதுக்கு ஒரு முடிவு கட்டப் போகிறேன்..”, என்றான் கோபமாக..



எதையோ முடிவு செய்தவன் போல் அவளுக்கு வாக்களித்தான்.



ஆனாலும், அவளை அப்படியே இலகுவாக விட மனமில்லை அவனுக்கு. அப்படி விட்டால் அவன் ஜீவானந்தன் இல்லையே! நிச்சயம் இனி வெற்றிக்கனி தனக்கு என்று ஏனோ மீண்டும் நம்பிக்கை எழுந்தது அவனுள். வாழக்கை வெற்றி அடைய ஸ்டியரிங்கை சரிப்படுத்த முடிவெடுத்தான். அந்த நம்பிக்கை தந்த இதத்தில் அவளை மீண்டும் வம்பிக்கிழுத்தான்.



காம்ப்ரமைஸ் செய்ய மாட்டேன் என்றவன், இப்பொழுது வேண்டுமென்றே தன் வார்த்தைகளை மாற்றிச் சுடும் வார்த்தைகளை திராவகமாய் அவள் பால் வீசினான்.



“அது சரி, உனக்காக நான் ஏன் யோசிக்கணும் சொல்லு. நீ யாரும்மா முதல்ல? இதோ இந்த நிமிஷம் வரை நான் உன் வாழ்வில் வேண்டாம்னு தானே இருக்கே? அப்புறம் எதுக்கு உனக்காக நான் யோசிக்கணும்? ஏற்கனவே சொல்லியாச்சு, எனக்கு ப்ளேக் ஆர் வௌயிட். இடைப்பட்டது எதுவும் வேணாம். சோ, இனி நாம் பார்க்காது இருப்பது நல்லது தான். முதல்ல கிளம்பு இங்கிருந்து.. எனக்கு வேணும்னா நான் கல்யாணம் செய்வேன். என் கல்யாணம் என் இஷ்டம். நடுவில நீ எதுக்கு ப்ரோக்கர் வேலை பார்க்கற.. தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்.. சொல்ல வேண்டியதை சொல்லியாச்சுன்னா நீ கிளம்பலாம்..”



வாசலை நோக்கி கையைக் காட்டினான்.



“வந்துட்டா வம்பிழுக்க. இதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு. ஜீவா என்ன ஏமாந்தவனா?..”



சுள்ளென்று எரிந்து விழுந்தான்.



அவனின் திமிர் பேச்சில் இவள் முகம் செத்துச் சுண்ணாம்பாகியது. கண்கள் பொலபொலவென ஊற்றெடுக்குமோ எனத் தோன்ற, மெல்ல அவன் முகம் பாராமல், கண்களை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்து, தலை குனிந்தபடி வீட்டை விட்டு வெளியேற முயன்றாள்.



“பை ஃபார் எவர். சும்மா என் தங்கச்சியைச் சாக்கிட்டு இந்தப் பக்கமெல்லாம் இனி வர வேண்டாம்..”, வேகமாய் வெளியேறும் அவளை மேலும் நொகடித்தான்.



தன் டென்னிஸ் ராக்கெட்டை அப்படியே சுழற்றியவன், என்ன தோன்றியதோ வெளியே விளையாடப் போகாமல் வேகமாய் வீட்டுக்குள் புகுந்து கொண்டான்.



சரியாக அந்த சமயத்தில் வீட்டிலிருந்து வெளியே வந்த தரணி , “அக்கா, உள்ள வாங்க, எங்க போறீங்க ? எனக்கு மண்டலா ஆர்ட் சொல்லித் தரேன்னு சொன்னீங்களே?..”, என அழைக்க அழைக்க, அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கத் தோன்றாமல் காவேரி உள்ளுள் கனன்ற கோபத்துடன் தன்னுடைய ஸ்கூட்டியைக் கிளப்பி வேகமாக செலுத்தத் தொடங்கினாள்.



“அம்மா, காவேரி அக்கா நான் கூப்பிடக் கூப்பிடப் பேசாமப் போயிட்டாங்க..” உதடு பிதுங்கியபடி தன் பெரிய அன்னையைத் தேடி ஓடினாள் சின்னவளோ..

 
Top