கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 15

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 15



அன்றைக்கு அதிகாலையிலேயே குறுஞ்செய்தி அனுப்பிவிட்டான் ஈஸ்வர்.. சீக்கிரம் தயாராகும்படி சொல்லியிருந்தான். ஏதோ ஒரு முக்கியமான மீட்டிங், கலந்தாலோசனை என்று சொல்லியிருந்தான்.



சில தினங்களுக்கு முன்னர் தான், வீட்டினர் காவேரியை, திருமணம் குறித்துக் கேட்டு அவள், அதற்கு ஒன்றும் சொல்லாமல் மழுப்பியிருந்தாள். இன்னமும் எத்தனை நாட்கள் இவ்வாறு தப்பிக்க முடியும் என்ற எண்ணமே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.



இதில் அவர்கள் இரண்டு மாத அவகாசத்தில் திருமணம் என்று வேறு முடிவெடுத்திருந்தனர். அந்தப் பெண் மணிமேகலை வரட்டும் என்றும் ஒதுக்கித் தள்ள முடியவில்லை.



என்னதான் ஈஸ்வர் தான் ஒன்றும் சாமியார் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட, மற்றவர்கள் அவனை அப்படி எண்ண விழையவில்லை என்பது தான் நிதர்சனம்.



இன்னமும் அவனை குருஜி என்று தான் அனைவரும் 'அன்போடு' அழைக்கின்றனர். அப்படியிருக்க, அவன் ஆசிரமத்தில் நேரடியாய் நிர்வாகத்தில் தொடர்புடைய அவள் அவனை மணக்க நேர்ந்தால்?, அவளை எப்படிக் கூப்பிடுவார்கள், ஏற்கனவே அவளை மாதாஜி என்று அழைக்கிறார்கள். இது ஒரு குடும்பத் தொழிலாக அல்லவா எண்ணத் தொடங்கிவிடுவார்கள்? தான் இதிலிருந்து இனி கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தாள் காவேரி.



அதை அமலாக்கத்தான் பாடுபட்டுக் கொண்டிருந்தாள்.



உணவு மேஜையில் ஈஸ்வரைச் சந்தித்தவள், ‘தான் எதற்கு அவன் ஆசிரம நிர்வாகிகள் கூட்டத்திற்கு?’, என்று கேள்வி எழுப்பினாள் அனைவர் முன்னிலையிலும்..



இட்டிலியை சாம்பாரோடு தொட்டு வாயிலிட்டுக் கொண்டிருந்த அவள் தந்தை கமல்நாத் தனக்கு அதில் சம்பந்தமில்லை என்பது போல் இருவரையும் மாறி மாறிப் பார்க்க,



ஹேமா தான், "அதெப்படி? நாளைக்கு நீதானே அவனோட எல்லாத்தையும் இழுத்துக்கிட்டுப் போகணும்.. நீ இல்லாட்டி எப்படிடா செல்லம்?..", என்று நைச்சியமாய் கொக்கி போட்டாள்.



சில தினங்களாகவே காவேரி சற்றே ஒதுங்கியிருப்பது போல் ஈஸ்வருக்கு ஏற்கனவே தோன்றத் தொடங்கியிருந்தது.



போதாதற்கு அவன் வலக்கரமாய் இருக்கும் சில ஆர்வலர்களான சிஷ்யகோடிகள் வேறு, "மாதா இதை ஒதுக்கிவிட்டார், அதைச் செய்யவில்லை. இந்தப்பக்கம் வரவில்லை..” என்று அரசல்புரசலாக குற்றப்பத்திரிக்கை வாசித்தபடி இருந்தனர்.



அவனுமே கேட்கவேண்டும் என்று தான் நினைத்திருந்தான். போதாதற்கு, மற்ற சில காட்சிகளும் அவன் கண்களில் சி.சி. டி.வி காணொளியில் பட்டு அவனைப் பாடுபடுத்திக் கொண்டிருந்தன.



சிலநாட்கள் முன்பு ஜீவா அவர்கள் ஆசிரமத்துக்கு மீண்டும் வந்திருந்தான். இருவரும் சில நிமிடத்துளிகள் பேசியவாறு இருந்தனர். அப்புறம் அவன் சென்றதையும் இவன் கவனித்திருந்தான்.



ஒன்றிரண்டு நாட்களில் அவன் வந்த காரியம் விளங்கியது ஈஸ்வருக்கு. ஜீவாவின், தங்கை தரணி, அங்கே ஏதோ கோர்ஸ் சேர்ந்திருந்தாள். ஆசிரமத்தைப் பொருத்தவரை, அவளுக்கு எந்த தொடர்பும் கிடையாது, ஆனால், காவேரியின், சிறப்புப் பள்ளியில் ஏதோ ஒரு குறுகிய காலப் பயிற்சிக்காக வந்திருந்தாள் என்பதைப் புரிந்து கொண்டான்.



வயதுக்கு மீறிய வளர்த்தியும், நல்ல அழகான முகவெட்டுடன் இருந்த தரணியைப் பார்த்தால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள், அவள் கவனக் குறைபாட்டுடன் பிறந்தவள் என்று.



தன்னுடைய வருங்கால மனைவியின் மாணாக்கள் என்பதோடு அந்தப் பக்கம் தன் கவனத்தை திருப்பவில்லை அவன்.



அதே போல் ஈஸ்வர் பெண்பித்தனும் அல்ல. அவனுக்கு வேண்டியது பணமும், புகழும் அவ்வளவே. அதனாலேயே ஆசிரம வளாகத்தில் அந்தப் பள்ளிக் கூடத்தை அனுமதித்திருந்தான், ஏனெனில் நிலம் காவேரியுடையதாயிற்றே?



"அத்தை. ஆசிரமம் அத்தானுடையது. நான் சும்மாப் பொழுது போகாமல் நிர்வாகத்தைப் பார்த்து கொண்டிருக்கிறேன். நம்பத் தகுந்த ஆள் என்று என்னை அதை செய்யச் சொல்லி அத்தான் கேட்டதால் செய்கிறேன். மற்றபடி என்னுடைய பள்ளிப் பயிற்சிக்கூட வேலைகளே எனக்குத் தலைக்கு மேல் இருக்கு. இதில் நான் போய் என்ன செய்ய? இன்னமும் சொல்லப்போனால் நான் என்னுடைய அந்த ஹானரரி பொறுப்பாளார் பதவியிலிருந்து விலக எண்ணியிருக்கிறேன்..", என்றாள் கண்டுகொள்ளாமல்.



ஹேமா முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது.



"பாப்பா.யோசிச்சுப் பேசுடா..", என்றார் ஹரிச்சந்திரன்.



அவளுடைய தாயின் முகத்தில் மட்டும் ஏதோ ஒரு நிம்மதி தெரிந்தது. அவள் தோழிகள் ஏற்கனவே அமிர்தாவை கன்னாபின்னாவென்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.



'வயசுப்பொண்ணை இப்படி சாமியாரோட கோர்த்து விட்டுருக்கியான்னு ஒருத்தி நேரடியாகவே கேட்டிருந்தாள். அவளுக்குமே தன் மகள் இப்படி அந்த வீணாப்போன ஈஸ்வரின் பிடியில் இருக்கிறாளே’ என்றே தோன்ற தொடங்கியிருந்தது.



"மாமா அவள் என்ன தப்பாச் சொல்லிட்டா? அவ விருப்பத்தைத் தானே சொன்னா? எனக்குமே அவள் இப்படி ஆசிரமம், அது இதுன்னு ஏதோ சாமியாரிணி மாதிரி சுத்தறது பிடிக்கலை. காலாகாலத்தில் கல்யாணம் காட்சின்னு செய்ய முடியாமல் இதென்ன தலைவலி?..", என்று நேரிடையாகவே தன் மனத்தாங்கலை சொல்லிவிட்டாள்.



"அண்ணி ஜாக்கிரத்தை. என் பையன் ஒன்னும் சாமியார் இல்லை..", என்ற ஹேமாவிடம் அலட்சியமாய் ஒரு முறுவலை சிந்திய அமிர்தா,



"ஓ.கே. பழங்கால டைப் சாமியார் இல்லை ஒத்துக்கறேன். இதெல்லாம் கார்பரேட் சாமியார். இப்படி கார்பரேட் கம்பனி மாதிரி ஆசிரமம் வச்சிருக்கான் ஈஸ்வர். எனக்கே உடன்பாடில்லை இதில். அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்க வாழ நீ என்ன நாட்டாமை? நீ இல்லாட்டி நாங்கல்லாம் வாழமுடியாம, ரோட்டிலயா நிக்கறோம்? நான் கேக்கலை! நிறைய பேர் கேக்கறாங்க. பதில் சொல்லிக்கோங்க. இதில் என் பொண்ணு எதுக்கு நடுவில்? எனக்குப் பிடிக்கலை. அவ்வளவு தான்..", என்று சொல்லிவிட்டு சேரை வெடுக்கென்று பின்னே தள்ளி எழுந்தவள், தன் மாமனாரைப் பார்த்து,



"நீங்க பெரியவரா இருக்கீங்கன்னு சும்மா இருக்கேன். இல்லாட்டி நடக்கறதே வேறயா இருக்கும் மாமா..", என்று பகிங்கரமாய் மிரட்டிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.



'ஓ'வென்று அழத் தொடங்கிவிட்டாள் ஹேமா.



"பாருங்கப்பா. என் மகனை ஏதோ ஃப்ராடு சாமியார் மாதிரி அண்ணி பேசிட்டுப் போறாங்க. இதெல்லாம் சரியில்லை..”, என்று ஆத்திரமும் அழுகையுமாய் உரைத்தாள்.



அனைத்தையும் சாந்தமாய் பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வர் மனதுள் எரிச்சல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அதை வெளிக்காட்டாமல் ஒரு லேசான புன்னகையுடன்,



"அம்மா ரிலாக்ஸ். மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னே எப்போதும் நாம நினைச்சிக்கிட்டு இருக்கமுடியாது. நான் என் கடமையை எனக்கு இடப்பட்டிருக்கும் பணிகளாய் என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்யறேன். இதில் நிறைய பேர் மனக்கசப்புகளை மூட்டையா முதுகில் சுமந்துகிட்டு இருப்பாங்க. அதை இறக்கி வைக்கற வழியைச் சொல்லறேன். அவ்வளவு தானே தவிர, அவங்க மூட்டையை நான் இறக்கி வைக்கமுடியாது. புரிஞ்சிதா. விடு, உன் கடமையை நீ செய். சிறப்பாச் செய். அதுக்கான பலன் தானாக வரும்..", என்று அறிவுரை வழங்கினான் தன் அன்னைக்கு.



கூடவே காவேரி பக்கம் திரும்பி, "காவேரி, நீ எடுத்துகொண்ட பணியை நிறைவாய்ச் செய்யணுமா வேண்டாமாங்கிறதை நீ தான் யோசிக்கணும். இருக்கட்டும். இன்னமும் நீ கமிட்டியிலே இருக்கறதுனாலே இந்த ஆசிரமத்தின் நல்லது கெட்டதுகளில் உனக்கும் பங்கு உண்டு. அதனால் தான் சொன்னேன் இன்னிக்கு முக்கியமான ஒரு கலந்தாலோசனை இருக்கு. பதினோரு மணிக்கு, மீட்டிங்க் ஹாலில் சந்திப்போம்..", என்று சொல்லிவிட்டுப் பேச்சு முடிந்தது என்பது போல் அங்கிருந்து அகன்று சென்றான்.



அனைவரும் கலைய, காவேரி மட்டும் ஒரு பெருமூச்சுடன், தன் பணிகளை எதிர்கொள்ளக் கிளம்பினாள்.



அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரமத்தின் பெரிய கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த நீளமான மேஜையின் இருபுறமும் கிட்டத்தட்ட ஒரு இருபது பேர்கள் அமர்ந்திருந்தனர்.



மேஜையின் ஒரு பக்கக்கோடியில் இரண்டு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஒன்றில் ஈஸ்வர் அமர மற்றொன்றில் காவேரி அமர்ந்து கொள்ளக் கூட்டம் தொடங்கியது.



கூட்டத்தில் பலதரப்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கடைசியில், ஈஸ்வர் ஒரு அறிக்கையைச் சொல்லி முடித்தான். விஷயம் இதுதான், அவர்கள் ஆசிரமத்தின் கொள்கைகளைப் பரப்பி மற்றவர்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டத்தில் ஒன்றாக அங்கே மிகப்பெரிய அனுபவமாய் கைலாஷ் மானசரோவர் யாத்ராவையும் கூடவே கங்கோத்ரி, யமுனோத்ரி என்று இயற்கையை அதன் உச்சத்தில் அனுபவிக்கும்படியான ஒரு உலாத் திட்டம். அங்கே செல்வதற்கு, மனதையும் உடலையும் தயார்படுத்திக்கொள்ள என்று ஆசிரமத்தில் பலவிதமான யோக நிலைகளை போதித்து அந்த இயற்கை உலாவுக்குத் தயார் படுத்துவதும் ஒரு பயிற்சிக்கூடமாக அங்கே போதிக்கப்படும் என்பதுதான்.



நிறைய இடங்களில் இது போல யாத்திரைகள் மேற்கொள்கிறார்கள் தான். அனைவரும் பங்கேற்க முடியாது. சில அரசாங்க விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு அங்கே செல்ல..



ஈஸ்வரின் வாழ்வியல் மையத்தில், முக்கியமாக கார்பரேட், தனியார்மயமாக்கப் பட்ட பலதரப்பட்ட நிறுவனங்களில் இருப்பவர்கள் தங்கள் நிறுவனங்களின் மூலம் அதில் பங்கேற்கலாம்.. அது ஒரு குழுவாகத் தான் செயல்படுத்த முடியும்.



சில அலுவலகங்களில் ஊழியர்களின் உழைப்பைப் பாராட்டும் விதமாக வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அனுப்புகிறார்கள் அல்லவா அது போலத்தான் இதுவும். ஊழியர்களின் மனநலத்தை முன்னிட்டு, அதுவும் இன்றைய விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பம், மற்றும் முக்கிய வேலைகளில் இருப்பவர்கள் பணியின் சுமை காரணமாக சீக்கிரமாகவே மன உளைச்சல், அசதி, மற்றும், பணித்திறன் பாதிப்பு என்று பலவித கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால், இந்த மாதிரி மனதைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி ரிலாக்ஸ் செய்து கொள்ள, இயற்கையின் உச்சமாகக் கருதப்படும் இந்தத் தளங்களுக்கு அழைத்துச் சென்றால், அங்கே எதைப்பற்றியும் யோசிக்காமல், இயற்கையை ஆராதித்து, மனசாந்தியும் ஆறுதலும் பெறும் வண்ணம் யோசித்திருந்தது தான் அந்த திட்டம். கூடவே திரும்பும் போது பலதரப்பட்ட, யோகாப்பியாசங்களையும் கற்றுக் கொண்டு தங்களை இலகுவாக்கிக் கொள்ளத் தான் இந்த திட்டம்.



காவேரி பிரமித்துப் போனாள். கைலாஷ் மானசரோவர் பயணம் என்பது அத்தனை சாமானியர்களால் மேற்கொள்ள முடியாத ஒன்றாயிற்றே!.



"குருஜி, இதற்கெல்லாம் அதிக செலவாகுமே. கம்பெனிகள் அந்த அளவுக்குப் பணம் முதலீடு செய்வார்களா?.."



மெல்ல ஒரு சிறுமுறுவல் தந்த ஈஸ்வர், "அதற்குத்தான் இதை எக்சிகியூடிவ் பேகேஜ் என்றேன். அவ்வளவு திறமை வாய்ந்தவர்களை மிகச் சுலபமாக எந்த நிறுவனமும் விட்டுவிடாது. அவர்கள் எவ்வளவு நாள் அந்த நிறுவனத்தில் இருக்கிறார்களோ, அவ்வளவு லாபம் அந்த நிறுவனத்தவர்களுக்கு. அதனால் அவர்களின் மனவலிமையும், நலமும் சந்தோஷமும், நிறுவனத்தாருக்கும் அதி முக்கியம். அதனால், நாம் கேட்கும் செலவுத் தொகையைப் பொருட்படுத்தமாட்டார்கள்.



இன்னொன்றும் செய்யலாம். இந்தமாதிரித் திட்டங்களில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, மூன்று அல்லது ஐந்து நாட்கள் நம் வாழ்வியல் கலையை இலவசமாகவும் கற்றுத் தரலாம். கவனக்குவிப்பு, மற்றும் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள உதவும் சிலவகை அப்பியாச யோகங்களையும், அறிவுரைகளையும் நடுத்தர ஊழியர்களுக்கு வழங்கலாம். ஒரு வாரத் திட்டத்தின் கீழ் பயிற்சி கொடுத்துவிட்டு, அடுத்த நிலையை, இங்கே வந்து வார இறுதித் திட்டத்தில் பங்கேற்றுக் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் சொல்லலாம்..", என்றான்.



அப்போது சர்வநிச்சயமாய், பணம் மட்டுமே அவன் குறி என்பது நன்றாகப் புரிந்தது காவேரிக்கு.



"இது சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது ஆகாதா? கொஞ்சம் பொது நலன் என்பதையும் யோசிக்கலாமே குருஜி?..", என்று கேட்டே விட்டாள்.



"எல்லாமே பொதுநலம் தான். நானுமே தான் பொது ஜனங்களில் ஒருத்தன். என்னுடைய தேவை ஒரு இடத்திற்கு இருக்கிறது என்றால், அங்கிருந்து என்னுடைய நலனுக்காக எனக்கு என்ன கிடைக்கும் என்பதையும் நான் யோசிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அதுதான் நம்முடைய வாழ்வியல் திட்டமான, வாழ்ந்து பார். வாழ், வாழவிடு. தியாகிகளாக நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள முக்கியத் தேவையான அனுபவம். அது கிடைத்தபின், மற்ற மாயைகள் தானாய் விலகும்.."



ஒன்றும் சொல்லாமல் அப்போதைக்குத் தலையை ஆட்டிய காவேரிக்கு, எதுவுமே அதிகமானால் திகட்டும் என்பதை இவன் ஏன் மறந்தான் என்றே யோசிக்கத் தோன்றியது.



‘அவ்வளவு பணத்தை இவன் என்ன செய்வான்? இவன் மாயை என்று எதைச் சொல்லுகிறான், ஆசைப்படுவதையா இல்லை அதன் மூலம் அடைந்த பொருளையா?’





எதையோ யோசித்தபடி வந்தவள், ஜீவாவின் மேல் மோதி நின்றாள்?



இவன் எங்கே இங்கே?

 
Top