அத்தியாயம் 10
"சொல்லுங்க விஸ்வா, சரி விஸ்வா, நீங்களே பாருங்க.. ஓகே விஸ்வா. ம்.. நாளைக்கு வண்டி பாத்துட்டு ரிப்ளை பண்றேன்" காலை முதல் ஃபோனிலேயே பரபரப்பாக இருந்தான் தமிழ்ச்செல்வன்.
"டேய்! அடங்குடா மவனே... நீ போற ரூட் ஒன்னும் சரி இல்ல. என்னடா புதுசா விஸ்வா விஸ்வான்னு உருகிக்கிட்டு இருக்க... நீ அவரு லவ்வுக்கு ஹெல்ப் பண்றியா, இல்ல அவரு உனக்கு ஹெல்ப் பண்றாரா ஒன்னும் தெரியல. ஆண்டவா என்னை இப்புடிப் புலம்ப விட்டுட்டியேப்பா.. இந்தப் படங்கள்ள எல்லாம் சொல்ற மாதிரி யாருக்கு வேணாலும் ஃப்ரண்டா இருக்கலாம். லவ் பண்றவனுக்கு, அதுவும் இப்பத்தான் புதுசா லவ் பண்றவனுக்கு மட்டும் ஃப்ரெண்டாவே இருக்கக் கூடாது" அஷோக்குக்கு இவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
"அப்போ அது உண்மையிலேயே லவ்வு தான்கிறியாடா?" அவன் அருகில் வந்து அமர்ந்து கேட்டான் தமிழ்ச்செல்வன்.
"நீ தான் சொல்லணும்"
"இருக்கான்னு தெரியல.. இருந்தா நல்லாத் தான் இருக்கும் போலத் தோணுது. இப்படித்தான் இருக்குமா டா?"
"எப்பா முடியலடா சாமி! நான் இந்த விளையாட்டுக்கு வரல"
"நாளைக்கு எங்க ஊருக்குப் போறதுக்கு ஏற்பாடு பண்ணனும். அங்கேயிருந்து இங்க கோவை வர்றப்ப பிரச்சனையில்லாம வந்தாச்சு. ஆனா அங்க திரும்பப் போனவுடனே ஊருக்குள்ள விடமாட்டாங்க. திரும்ப டெஸ்ட், தனிமை, அது இதுன்னு வீட்டுக்குப் போய்ச் சேர மூணு, நாலு நாளாயிடும் போல"
"திரும்ப டெஸ்ட்டா? முதல்ல எப்படா டெஸ்ட் பண்ண நீயி?"
"ஹி.. ஹி.. எனக்குப் பண்ணல... பார்கவி, அவங்க ஃப்ரெண்ட்ஸ், அவங்களுக்குப் பண்ணுச்சுல்ல... அதச் சொன்னேன்"
"அசடு வழியுது. தொடச்சுக்கோ" ஒரே ஒரு துண்டை எடுத்துத் தமிழ்ச்செல்வன் கையில் அஷோக் கொடுக்கையில் வாசற்கதவு மணியடித்தது. யார் என்று திறந்து பார்க்க, கையில் நிறைய சாக்லேட்டுகள் அடங்கிய பெட்டியுடன் நாகராஜன் வந்திருந்தார்.
"அண்ணே! எப்படி இருக்கீங்க. ஒய்ஃப், குழந்தை ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா?" தமிழ் விசாரிக்க,
"நல்லா இருக்காங்க… உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. உங்களுக்குப் பெரிய ஹோட்டல்ல சாப்பாடு வாங்கித் தரணும், இல்ல பெரிய ஸ்வீட் பாக்ஸாவது வாங்கித் தரணும்னு ஆசை. கடை எதுவும் இல்லாததால இது. இந்தாங்க" என்றபடி சாக்லேட் டப்பாவைத் தந்தார்.
"சதீஷ் தம்பி, எடுத்துக்கோங்க" என்றார் அஷோக்கைப் பார்த்து.
"என் பேர் அஷோக். மறந்துட்டீங்களா? ஒரு சாக்லேட் போதும்ணே. இத்தனை சாக்லேட் எதுக்கு?" மறுத்தான் அஷோக்.
"குழந்தைகள் யாருக்காவது குடுங்க. வச்சு வச்சு சாப்பிடலாமே தம்பி. உடனே கெட்டுப் போறப் பொருளா இது? ஊருக்குக் கூட கொண்டு போங்க. முழுசா வாங்கிக்கங்கப்பா, சதீஷ் தம்பி வாங்கி உள்ள வைங்க"
"அது என்ன அண்ணே..அவனை சதீஷ் சதீஷ்னு சொல்றீங்க?"
"ஓ! மறந்துட்டேன். வழக்கமா ஹீரோவுக்கு நண்பரா ஒருத்தர் நடிப்பாரு. அவரு பேரு சதீஷ் தானே? அவரு மாதிரி இருக்கறாரே தம்பி? அதனால என் மனசுல அப்படி பதிஞ்சுடுச்சு போல…"
"அண்ணே! அப்ப இந்த மூஞ்சி ஹீரோவா? அவமானப்படுத்திட்டீங்களே? ஒருத்தன் காதலிக்க ஆரம்பிச்சுட்டாலே அவனை ஹீரோன்னு சொல்லிடுவீங்களே... அப்ப காதல் வராதவன் காமெடியன். அப்படியா? எனக்கு உங்க பேச்சு 'கா'. போங்க" எடுத்த இரண்டாவது சாக்லேட்டை மீண்டும் டப்பாவுக்குள் போட்டான் அஷோக்.
"கோவிச்சுக்காதீங்க தம்பி, தமிழ் தம்பி காதலிக்கவா செய்றீங்க? சொல்லவே இல்லை?" என்று தமிழ்ச்செல்வனிடம் நாகராஜன் கேட்க, அசட்டுச் சிரிப்புடன் ஆமாவுக்கும் இல்லைக்கும் நடுப்பட்ட விதமாகத் தலையை ஆட்டினான் தமிழ்ச்செல்வன்.
"அப்படித் தெரியலையே தம்பி? ஏழு, ஏழரை மணி நேரம் ஒண்ணா டிராவல் பண்ணி வந்திருப்போம். உங்களுக்கு ஃபோன் எதுவும் வரலையே? காதலிக்கிறவங்க ஆல்வேஸ் ஃபோன்ல பிசியா இருப்பாங்களே?"
"இவன் சும்மா ஓட்டுறாங்க. அப்படி எதுவும் இருந்தா உங்க கிட்ட தான் முதல்ல சொல்லுவேன்"
"ஆமாண்ணே! ஓடிப்போய் கல்யாணம் பண்றதா இருந்தா, உங்கக் கிட்ட தான் வண்டி கேட்பான். டாக்ஸி பத்திரம்ணே!" கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் தமிழ்ச்செல்வனின் காலை வாரினான் அஷோக்.
"தெரிஞ்ச டாக்ஸி எதுவும் நாளைக்குக் கிடைக்குமா அண்ணே? ஊருக்குப் போகணும். இ- பாஸ் அப்ளை பண்ணனும். ஏற்பாடு பண்ணிட்டா டாக்ஸி நம்பர் கேட்டுச் சொல்லுங்க"
"இதோ தம்பி! என் ஃப்ரண்டு வண்டியை ஏற்பாடு பண்றேன். வேற என்ன உதவி வேணும்னாலும் சொல்லுங்க" என்றபடி அவனுக்கு வேண்டிய வேலைகளைச் செய்ய ஆயத்தமானார் நாகராஜன்.
**
தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து அப்பாவுடன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த பார்கவி அங்கு அவளது அம்மாவைப் பார்த்தவுடன் அதிர்ந்து போனாள்.
"என்னம்மா, இப்படி மெலிஞ்சு போய்ட்டீங்க? சரியா சாப்பிடுறதில்லையா?"
"சொன்னாக் கேட்டாத் தானே? சரியாவே சாப்பிட மாட்டேங்குறா.. அதுவும் இந்த மாசம் ரொம்ப மோசம். பழையது, மிச்சம் மீதி இதுதான் சாப்பிட்டு நேரத்தைக் கழிக்கிறா. கொஞ்சமாத்தான் சமைக்கிறா. நீ சொன்னாலாவது கேக்குறாளா பாப்போம்" அப்பா சொன்னார்.
"ஏன்மா இப்படி?"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல. நம்ம தெருவுல எல்லாருமே அப்படித்தான் சிக்கனமா செலவழிக்கிறாங்க. எனக்கும் தைக்கிறதுக்குத் துணியே வரல. வேலை செஞ்சாத் தானே பசிக்கும்?" அது என்னவோ சாதாரண விஷயம் என்பது போல இயல்பாக அம்மா சொல்லவும்,
"உங்களப் பத்தி எனக்கு தெரியும்மா. சிக்கனமா இருந்து எனக்கு நகை சேர்க்கிறேன்னு இருப்பீங்க… ஊர்ல மத்த எந்தத் தொழிலும் சரியா நடக்கலைன்னாலும் நல்லவேளையா அப்பா கடை திறந்துருக்கு. அதனால கொஞ்சம் வருமானமும் வருது. பலசரக்குக்கும் குறைவில்லை. என் சம்பளம் வேற இருக்கு. இப்படி உடம்பைக் கெடுத்துக்காதீங்க" என்றாள் பார்கவி.
"வந்ததும் வராததுமா ஆரம்பிக்காதடி. குளிச்சு டிரஸ் எல்லாம் சோப் தண்ணில முக்கி வச்சுட்டு சாப்பிட வா. இன்னிக்கி வகைவகையா செஞ்சி வச்சிருக்கேன் பாரு"
"இதே மாதிரி தினசரி செய்ங்கம்மா. முதல்ல உங்களத் தான் சாப்பிட வைக்கணும், இருங்க வர்றேன்" என்றவள் குளித்து உடை மாற்றி வந்து அம்மாவை உட்கார வைத்துப் பரிமாறினாள். போதும் போதும் என்று அம்மா சொல்லியும் கேட்காமல் அவளை சாப்பிட வைத்து விட்டுத்தான் தானும் உண்டாள்.
"அம்மா ஒன்னு தெரிஞ்சுக்கோங்க, வாழறதுக்காகத் தான் உழைக்கிறோம், உழைக்கிறதுக்காக வாழலை. சரியா? உடம்பை நல்லாப் பாத்துக்கணும். சத்து இல்லாம இருக்கிறவங்களைத் தான் கொரோனா கூட ரொம்ப பாதிக்குதாம் தெரியுமா?" என்று விடாமல் அறிவுரை கூறினாள்.
சரி சரி என்று தலையை ஆட்டிய அம்மா,
"ஒரு மாசமா தைக்குறதுக்குத் துணியே வரல பார்கவி. இப்பத்தான் கொஞ்சம் பழைய துணி, தையல் விட்டுப் போனது ஆல்ட்ரேஷன்க்கு குடுக்காங்க. எல்லாரும் வீட்டிலேயே இருக்காங்கல்ல, நைட்டியும் லுங்கியும் தான் நிறைய வருது"
"சரி சரி, ரிலாக்ஸ்டா இருங்கம்மா. அப்பாவுக்கும் மதியம் ஒரு மணியோட கடையை அடைக்கணுமாமே? எல்லாரும் கொஞ்சம் ஜாலியா உக்காந்து பேசி, டிவி பாத்து நிம்மதியா இருப்போம். எதுக்கும் பாதுகாப்புக்காக என்னை இன்னும் ஒரு வாரம் தனியா இருக்கச் சொன்னாங்க. நான் பாட்டி வீட்ல போய் இருந்துக்கறேன். பாட்டியை இங்கக் கூப்பிட்டு வச்சுக்கோங்க"
பார்கவியின் பாட்டி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தாள். அவ்வப்போது அம்மாவும் குழம்பு, காய் கொடுத்துவிடுவார். பார்கவியின் வீடு மிகச் சிறியது. பூர்வீக இடத்தில் பங்குபிரிக்கையில் ஒரு சென்ட்டுக்கும் குறைவான இடமே கிடைத்தது. ஒரு அறையும், ஒரு சமையலறையும் மட்டுமே உண்டு. இப்போது பார்கவியின் ஊதியத்தில் லோன் போட்டு மாடி கட்டி வருகிறார்கள்.
"மாடி ரெடியாயிடுச்சுன்னா இங்கேயே இருந்திருக்கலாம். அடுத்த தை மாசத்துக்குள்ள கட்டி முடிக்கலாம்னு நினைச்சேன். அப்பத்தான் உனக்குக் கல்யாணம் பண்றப்ப வசதியாயிருக்கும். அதுக்குள்ள இப்படி ஆயிருச்சு.."
"எப்படியும் ஆகல... உலகமே இப்ப சைலண்ட் மோட்ல தான் இருக்கு. டைம் டேபிள் போட்டு, அதுபடி வாழ்க்கையை நடத்த முடியாதும்மா... குழம்பாம இருங்கம்மா… இப்படிக் கல்யாணம் பண்றதுக்காகப் பணம் சேர்க்கிறது, நகை சேர்க்கிறது, வீடு கட்டுறதுன்னு எல்லாமே கல்யாணத்தை டார்கெட்டா வச்சே செய்றதால தான் பொம்பளப் பிள்ளைகளுக்கு இவ்வளவு ஸ்ட்ரெஸ். ரேணுவை இதுக்குத் தான் திட்டிட்டு வந்துருக்கேன். இதுக்கு வெளிநாடுகள் எவ்வளவோ பரவாயில்லை போல" என்று பார்கவி கோபத்துடன் கூறினாள்.
"என்னடி, வெளிநாடே பரவாயில்லைங்க? அங்க மாதிரி லவ் மேரேஜ், கல்யாணமே வேண்டாம் அப்படின்னு எதுவும் சொல்லிடாதடி"
"ஐயோ அம்மா! வந்ததுலருந்து உங்களுக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டும் விளக்கம் குடுத்துட்டும் இருக்கிற மாதிரியே இருக்கு. போரடிக்குது! வேற ஏதாவது விஷயம் பேசுங்கம்மா. இல்லன்னா, நான் பாட்டி வீட்டுக்குக் கிளம்புறேன்" என்றாள்.
"சரி பாரு, அப்புறம் அந்த ரேணு கூட்டிட்டு வந்த பொண்ணு.. அதை எங்க அனுப்பியிருக்கீங்க?" என்று அம்மா கேட்டதற்கு,
"அதுவா…?" சற்று யோசித்தவள், தான் ஏற்பாடு செய்ததாகச் சொன்னால் நன்றாக இருக்காது என்று நினைத்தாள். எனவே, "அவ கல்யாணம் பண்ணப் போற மாப்பிள்ளை, அவருக்குத் தெரிஞ்சவங்க வீட்டுக்கு அனுப்பிருக்காரு.. அவரும் ரெண்டு மூணு நாள்ல அங்கே வந்துடுவாராம்" என்றாள்.
**
முதலில் உற்சாகமாக பேசிக் கொண்டே ஆட்டோவில் பயணித்தாலும் போகப்போக பயமாக இருந்தது சுமித்ராவுக்கு. தமிழ்ச்செல்வன் தன் வீட்டில் என்ன சொல்லி வைத்திருக்கிறானோ, வரவேற்பு எப்படி இருக்குமோ.. எல்லாரும் சொல்வதைப் போல தனக்கு வால், வாய் எல்லாமே நீளம் தான். கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். காதலித்திருக்கக் கூடாதோ, அதுதான் தெரியாத வீட்டிற்குத் தனியாகப் போக வேண்டியதாக இருக்கிறது என்றெல்லாம் யோசித்தபடியே போனாள்.
அவளது திடீர் மௌனத்தைப் பார்த்த முருகன் என்ற அஜய் அவளிடம், "அக்கா! என்ன அமைதியா வரிங்க? நாங்க உங்களை நல்லா வச்சுக்குவோம். தமிழ் அண்ணன் சொல்லி இருக்காரு" என்று ஆறுதலாகக் கூறினான்.
'இந்த வாயாடிப் பொடியன் கிட்ட தமிழ் வாத்தியார் என்ன சொல்லி வச்சிருக்காரோ? எல்லாம் நேரம்.. நானே இன்னொருத்தனை வாயாடின்னு சொல்ற மாதிரி ஆயிடுச்சு' என்று நினைத்துக் கொண்டாள்.
நினைப்பதற்குள்ளாகவே தமிழ்ச்செல்வன் அஜய்க்கு அழைத்து சுமித்ராவிடம் ஃபோனைக் கொடுக்கச் செய்தான். "உன்னை என் ஃப்ரண்டுக்குப் பார்த்துருக்குற பொண்ணு, ஊருக்குப் போக வழி இல்ல, அதனால நம்ம வீட்டுக்கு வர்றா அப்படின்னு அம்மா கிட்ட சொல்லிருக்கேன்... அண்ணனுக்கு லைட்டா விஷயம் தெரியும். நீ ஒண்ணும் ஒர்ரி பண்ணிக்காதம்மா. சாதாரணமாய் இரு" என்றவன், "என் நம்பர் அஜய் கிட்ட வாங்கிக்கோ. எதுவானாலும் பேசு. என்றான். "அப்புறமா இ-பாஸ் ரிஜக்ட் ஆயிருச்சு. நாளைக்கு திரும்ப அப்ளை பண்றோம். சரியா?" என்றும் சேர்த்து சொன்னான்.
தமிழ்ச்செல்வனின் வீடு அமைதியாக இருந்தது. சமீபத்தில் துக்க சம்பவம் நடந்த வீடு என்பது தெரிந்தது.
"வாம்மா, பேரென்ன? சாப்பிடறியா?" என்பதோடு நிறுத்திக்கொண்டார் தமிழ்ச்செல்வனின் அம்மா.
"என்ன படிச்சிருக்க, கணக்கு வழக்கெல்லாம் பார்க்கத் தெரியுமா, வீட்டில் எத்தனை பேர்?" என்று மேலும் சில தகவல்களைக் கேட்டுக்கொண்டான் தமிழின் அண்ணன் அன்புச்செல்வன்.
அவன் காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தபடியால் வாக்கர் வைத்துக் கொண்டு வீட்டிற்குள்ளாகவே நடந்து கொண்டிருந்தான். பின் அம்மாவிடம் அவ்வப்போது அதற்கு எவ்வளவு செலவாகும், இதற்கு எவ்வளவு செலவாயிற்று என சத்தமாகக் கேட்டபடி உட்கார்ந்து கணக்கு எழுதினான். 'தமிழ் வாத்தியார் அண்ணன் கணக்கு வாத்தியார் போல. ஐயோ, நான் வச்ச பட்டப் பேரைச் சொல்றதுக்குப் பக்கத்துல யாரும் இல்லையே? இறைவா! இது என்ன சோதனை' என்று மனதினுள் புலம்பினாள்.
அவளை அதிக நேரம் மௌனமாக இருக்க விடாமல் பக்கத்து வீட்டிலிருந்து வம்பளக்கும் ஒரு பாட்டி வந்தார். "கற்பகம், கற்பகம்…" என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தவர், சுமித்ராவைப் பார்த்தவுடன், "இது யாரு? ரெண்டு வயசுப் பயலுக இருக்கிற வீட்ல சின்ன வயசுப் பொண்ணைக் கொண்டு வந்து வச்சுருக்கா இந்தக் கற்பகம்?" என்று இழுத்தார்.
கடுப்பாகிப் போன சுமித்ரா, "அன்பு அண்ணே! பெரியம்மாவைப் பாக்க யாரோ வந்திருக்காங்க" என்று அன்புச்செல்வனை நோக்கிக் குரல் கொடுத்தாள். 'ம்..அண்ணே, பெரியம்மா... இந்த பிள்ளை சூட்டிப்பு தான். இந்தப் பக்கத்து வீட்டுக் கிழவிக்கு வேற வேலையே இல்ல. ஆனா அதுக்கு இந்தப் பிள்ளை சரியான ஆள் தான் போல' என்று நினைத்துக் கொண்டான் அன்புச்செல்வன்.
"கற்பகத்தைப் பெரியம்மான்னா கூப்பிட்ட? அவ எப்படி உனக்கு பெரியம்மா? நீ யாரு மக?" என்று அந்தப் பாட்டி கேட்க,
"எங்க வீட்டுக்காரரோட பங்காளி முறையில தம்பி வேணும் ஒருத்தரு, அவரு மக தான் இது. ஊருக்குப் போக பஸ் இல்லாம இங்கே வந்திருக்கு. காலேஜ்ல படிக்கிற பொண்ணு" என்று சொன்னாள் கற்பகம்.
'பரவால்ல.. இந்த பெரியம்மா நம்மளை கற்பனைலன்னாலும் காலேஜ்ல எல்லாம் சேர்த்து விட்ருச்சு. நல்ல இடமாத் தான் பார்கவி அக்கா அனுப்பி வச்சிருக்காங்க. அவங்களுக்கு ஒரு ஃபோனப் போடுவோம்' என்று நினைத்த சுமித்ரா பார்கவிக்கு அழைத்து, "பார்கவி அக்கா, தமிழ் வாத்தியார் வீட்டுக்கு வந்துட்டேன்கா. எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்று கேட்டாள்.
"நல்லா இருக்காங்க. இப்பத்தான் தமிழ் சாரும் சொன்னார். நீ அங்க ரீச் ஆயிட்டேன்னு…" என்று பார்கவி பதில் கூறவும்,
"அடப்பாவி! அதுக்குள்ள சொல்லிட்டாரா? அவ்வளவு ஃபாஸ்ட்டா? நடக்கட்டும் நடக்கட்டும்…" என்று சுமித்ரா கிண்டலடித்தாள்.
"மெசேஜ் தான் டி போட்டார். நீ பத்திரமா இருக்கணும் அப்படிங்கிற பொறுப்புணர்வு தான்"
"ஆமா! பொறுப்பு தான். இப்படித்தான் எல்லாக் கதையும் ஆரம்பிக்கும்னு அனுபவஸ்தங்க சொன்னாக் கேக்கணும் கா. நீங்க அடிக்க வர முன்னாடி வச்சுடறேன். பை!"
உண்மையில் "சுமித்ரா ரீச்ட் சேஃப்லி. இ- பாஸ் ரிஜெக்டட் டுடே.. வில் அப்ளை அகைன் டுமாரோ" என்று குறுந்தகவல் அனுப்பியிருந்தான் தமிழ்ச்செல்வன். பார்கவி பதிலுக்கு "தேங்க்யூ வெரி மச்!" என்று அனுப்பிவிட்டு, சற்று நேரம் திரையையே பார்த்து விட்டுக்கொண்டிருந்தவள் கூடவே, "டேக் கேர்!" என்றும் சேர்த்து
அனுப்பியிருந்தாள்.
"ஓஹோ! இப்படித்தான் ஆரம்பிக்குமோ?" என்று யோசிக்க ஆரம்பித்தாள் தன் பாட்டி வீட்டில் தனிமையில் இருந்த பார்கவி.

Last edited: