கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அகநக நட்பது நட்பு - 5

தன்னை கட்டிக்கொண்ட இந்த பெண்ணை ஏன் தனக்கு இவ்ளோ பிடிக்கிறது என யோசித்தது சுமதியின் மனம். அதற்குள் ராகவ்

" ஓய்.. நகரு நீ.. என்ன பண்ற . அது எங்க அம்மா " என காதில் புகை வர கேட்டான். சட்டென அவள் முகம் சுருங்க, விலக எத்தனிக்கையில்
" ராகவ் ..." என்ற சுமதியின் குரலில்

" என்னமா.. நா நா தானே உன் பையன் "

" ஆமா .யாரு இல்லைன்னா . அதுக்காக இப்டி சொல்லுவியா . வா நீயும் " என கை நீட்டினார்.

" அப்போ நானு ??" என ராகினி கேட்க அழகாய் ஒரு கூட்டு அணைப்பு அங்கே அரங்கேறியது.
மஹல்சாவின் முகம் சற்று வாடியே இருக்க, ராகவ் அவளிடம் " சாரி " என கிசுகிசுத்தான்.

" உனக்கு சாரிலாம் சொல்ல தெரியுமா "

" ஏன் அப்டி கேக்குற . நான் செஞ்சது தப்புன்னு தோணிச்சுன்னா நானே சாரி கேட்டுருவேன். "

" ம்ம்ம். "
அதற்குள் மஹல்சாவை தேடிக்கொண்டு அங்கே கற்பகம் வர , அவரை பார்த்த சுமதிக்கோ அதிர்ச்சி . அவர் அருகில் வந்ததும்

" நீங்களா. என்ன தெரியுதா " - சுமதி

" தெரியலயே மா. எங்கயோ பாத்த முகம் மாறி தா இருக்கு. வயசாயிடுச்சுல்ல , கண்ணு அவ்ளோ பளிச்சுன்னு தெரியுறது இல்ல "

" ஓ.. நா சுமதி. சுகன்யா ஃப்ரெண்டு. என்ன நியாபகம் இருக்கா "

" ஓ. ஆமா. இப்போதா மா நியாபகம் வருது. நல்லா இருக்கியா மா "

" நா நல்லா இருக்கேன். நீங்க எப்படி இங்க. ஊர்லேந்து இங்க ? சுகன்யா ..." என இழுத்தார் அன்று மஹல்சா கூறியது நினைவு வர.

" அது ஒரு பெரிய கதை மா.. எல்லாம் என் தப்பு தா. அந்த தருதலய அவளுக்கு கட்டிவெச்சு அவ வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டேன்."
கற்பகம் உணர்ச்சிவசப்பட்டதில் அனைவரும் அவர்களையே பார்க்க

" அழதீங்க. எதுவாயிருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். இருங்க நானும் காய் வாங்கிடுறேன். அப்றம் கிளம்பலாம். எங்க வீடு பக்கத்துல தா இருக்கு சற்று யோசித்தவர் " சரி மா " என்றார். சுமதியும் தேவையானவற்றை வாங்கி கொண்டு வீட்டை நோக்கி நடையை கட்டினர்.

சுமதியும், கற்பகமும் கதைத்துக்கொண்டே வர, ரஜ்சனி மஹல்சாவிடம் ராகவை பென்சிலால் குத்தியகதையை கேட்டவண்ணம் வர, ராகவ் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே வந்தவன் , தங்கள் தெரு வந்ததும், தன் வண்டியை கிளப்பி ," டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என ஓட்டி சென்றுவிட்டான்.

அனைவரும் வீட்டிற்கு வர, பர்சில் இருந்து சாவியை எடுத்து திறந்துவிட்டார் சுமதி.உள்ளே சென்ற கற்பகம், அழகாய் அமைந்திருந்த அந்த வீட்டை பார்த்தார். கேட்டை தாண்டி உள்ளே நுழைந்ததும் நேரே போகும் ஒரு வராண்டா.நடக்க வசதியாக.வலப்பக்க கோடியில் வீடு. ப்ரம்மாண்டம் என்றெல்லாம் இல்லை. நடக்கும் வழியெங்கும் பூச்செடிகள் , மரங்கள் என சுத்தமாய் பராமரிக்கப்படும் ஒரு இடமாக காட்சியளித்தது. மரங்களுக்கு நடுவில் ஒரு தென்னங்கீத்து கொட்டகை. அது ராகவிற்கு மிகவும் பிடித்த இடம் என்று ரஞ்சனி மஹல்சாவிடம் கூறியபடி வந்தாள். இடது ஓரமாக ஒரு சிறிய வீடு பூட்டி இருந்தது. இருந்தது.அனைவரும் வீட்டிற்குள் நுழைய

" வாங்க மா. வா மஹல்சா " என வரவேற்றார் சுமதி. தண்ணீர் கொண்டு வந்துகொடுத்து அமர்ந்தனர். அமர்ந்தபடி வீட்டை பார்த்தனர் கற்பகமும் மஹல்சாவும். ஹால் , இடப்பக்கம் சமையல் அறை , எதிரே சாமி அறை ,நடுவில் ஒரு சிரிய பாசேஜ் போல உள்ளே சென்றது. மேலே மூன்று அறைகள் என வீடு அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

" சொல்லுங்க. சுகன்யாக்கு என்ன ஆச்சு "

" அது.." என அவர் தயங்குவதை பார்த்து சுமதி

" ரஞ்சனி, ராகவ் . மஹல்சாவ கூட்டிட்டு உங்க ரூமுக்கு போங்க "

" வா மஹல்சா " என ரஞ்சனி அழைக்க அவளுடன் சென்றாள்.ராகவ் முன்னாடி ஓடிவிட்டான்.

" ம்ம்ம. இப்போ சொல்லுங்க மா "

" என்னத்த மா சொல்ல. அந்த பாவி மகள என் தம்பிக்கு கட்டிவெச்சேன். அந்த தருதல குடிச்சு குடுச்சே என் பொண்ண கொன்னுட்டான் . எப்டி இருந்த பொண்ணு. நானே அவ வாழ்க்கைக்கு ஒல வெச்சுட்டேன் " என கண்ணீர் வடித்தார்.

சுமதிக்குமே சுகன்யாவின் நினைவு வந்தது. சிறுவயது முதலே இருவரும் தோழிகள். சுமதியை விட சுகன்யா தைரியமானவள் படிப்பிலும் கெட்டியாக இருந்தாள். இவர்களது நட்பை பார்த்து மெச்சியவர்களும் உண்டு.
இன்னிலையில் தான் சுகன்யா ஒருவரை காதலித்தாள். கற்பகம் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் , அவளை தன் தம்பிக்கு மணமுடித்து
வைத்தார்.

" அதான் மா நா பண்ண பெரிய தப்பு " என தலையில் அடித்துக்கொண்டார். தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டவர் மீண்டும் தொடர்ந்தார்.

" அவ்ளோ தைரியமான என் பொண்ணு எப்டி செத்தா தெரியுமா " என அந்த நினைவுகளை அசைபோட்டார்.

" இந்தா பாரு டீ.. ஒழுங்கா அவன மறந்துட்டு உன் புருஷன் கூட குடும்பம் நடத்துற வழிய பாரு " என தன் மகளிற்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார் கற்பகம்.
சுகன்யாவும் ஒன்றும் கூறாமல் எல்லா பெண்களை போல் தன் விதியை நொந்து கொண்டு சென்றாள்.

" அதுலேந்து அவ வாழ்க்கை நாசமாபோச்சு." என அங்கலாய்த்தார்.

" தினம் அடி உதை தான். உடம்பெல்லாம் புண்ணா ஒரு வாட்டி வந்தா " என அந்நாளை நினைவு கூர்ந்தார்.

" அம்மா..." என சுகன்யா சோர்ந்து போய் வாசலிலிருந்து அழைத்தாள்.

" வா மா.. தம்பி வரல ?"

" இல்ல மா. ஏன் நா மட்டும் வந்தா உள்ள சேக்க மாட்டியா "

" உள்ள வா மொதல்ல. என்ன சோர்ந்து இருக்க. எதா நல்ல சேதியா ??" என்றார் பெரிய எதிர்பார்ப்புடன்.

" உக்கும்... அத தான் உன் தம்பி ஒன்னுமில்லாம ஆகிட்டானே பாவி.." என கதறினாள்.

" என்ன சொல்ற நீ " என்று பதட்டமானார்.

" இந்த வாட்டி தான் நாள் தள்ளி போச்சு. சோர்வா இருக்குன்னு படுத்திருந்தேன். உன் தம்பி எப்பொவும் போல வந்து என்னடி இந்த நேரத்துல தூக்கம்னு அடிச்சு உதைச்சு , வயித்துல மிதிச்சு , உள்ள இருந்தத ஒன்னும் இல்லாம ஆக்கிடான், கொலைகாரன் "

கற்பகம் அப்படியே அமர்ந்துவிட்டார் தலையை பிடித்துக்கொண்டு. ஒரு வாரம் கழிந்த நிலையில் கற்பகம் சுகன்யாவிடம்

" எப்போ கிளம்பர "

" ஏன் நா இங்க இருக்குறது உனக்கு பிடிக்கலயா "

" என்ன இருந்தாலும் அதான் உன் வீடு "

என்ன ஒரு நெஞ்சை தைக்கும் வார்த்தை. திருமணம் வரை அப்பா வீடு. பின் மாமியார் வீடு அல்லது புருஷன் வீடு. பெண்களுக்கென ஒரு இடம் இருக்கிறதா என்ன. பெண்களை எப்பொதும் அடுத்தவரை நம்பியே இருக்க சொல்லித்தருகிறது சமூகம். திருமணம் வரை தந்தையை நம்பி இரு, அதன் பின் கணவனை நம்பி , வயதான பின் பிள்ளைகளை நம்பி. இப்படியே ஆகிவிட்டது. ஆக்கிவிட்டார்கள். அப்படித்தானிருந்தது சுகன்யாவிற்கு.

" நீ இப்போ என்ன போக சொன்ன நா திரும்ப இங்க வரவே மாட்டேன் "

" உன் நல்லதுக்கு தா சொல்றேன் கிளம்பு " என அனுப்பிவைத்தார், அவள் சொன்னது உண்மையாகும் என தெரியாமல். தெரிந்தால் அனுப்பி இருக்க மாட்டாரோ என்னவோ ... அதற்கு பிறகு அவள் இங்கு வரவே இல்லை. மகளை பார்க்க இவர் தான் போய் வருவார். வருடங்கள் எட்டு உருண்டோடியதே தவிர, முதல் கரு கலைந்த பின் சுகன்யாவும் கருதரிக்கவில்லை. அவனும் குடித்து குடித்து உடல் நிலை மோசமானது தான் மிச்சம். தினமும் முழுபோதையில் வீட்டிற்கு வந்து , அங்கு இருப்பவளை தன் இச்சைக்கு அடிபணியவைத்தானே தவிர அவளை உணர்ச்சியுள்ள ஒரு பெண்ணாக என்றும் நினைக்கவில்லை. நினைக்கும் நிதானம் அவனிடம் இருந்தால் தானே.

" அந்த சிருக்கி எங்கிட்ட எதுமே சொல்லல மா " என மீண்டும் வருந்தினார்.

"அப்டி தா மா ஒரு எட்டு வருஷம் கழிச்சு என்ன வரசொன்னா " என கூறத்தொடங்கினார்.

" வா மா.."

" என்ன மா.. திடீர்னு போன் போட்டுருக்க..."

" ம்ம்ம்ம்ம்" என லேசாக புன்னகை பூத்தாள்.

" என் ராசாத்தி. இத அவங்கிட்ட சொல்லிட்டியா "

" இல்ல. இன்னைக்கு சொல்றேன். எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு. நீயும் அங்க தனியா தான இருக்க. அதான் இங்கயே இரு கொஞ்ச நாள் "

" சரி மா "

மாலை வர , முகம் கழுவி பளிச்சென இருந்தாள் சுகன்யா.அவனுக்காக காத்திருந்தாள்.எப்போதும் போல் முழு போதையில் வந்தவன், பளிச்சென காத்திருக்கும் அவளை பார்த்ததும்.

" என்ன எவன மயக்க இப்டி மினிக்கிட்டு திரியுர " என நெருப்பை கக்கினான். அவளுக்கோ மது வாடையில் குமட்ட , மறுபக்கமோ வலி நெஞ்சை தைக்க , முதலில் வாந்தி எடுத்துவிட்டு போய் படுத்தாள். இவை அனைத்தையும் வீட்டினுள் இருந்த கற்பகத்தின் காதுகளில் நன்றாகவே விழுந்தது...

நாட்கள் இப்படியே நகர ,சுகன்யா அவனை எப்படியோ தன்னிடம் நெருங்க விடாமல் தடுத்தாள். இவனின் காட்டு மிராண்டித்தனத்தில் பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில். வயிறு சற்று மேடிடவும், அவன் அதை கண்டுகொண்டு அவளிடம் ஒருநாள்

" ஏன்டி.. என்ன முழுகாம இருக்குறியா .."

தீயாய் அவனை பார்த்தவள் " ஆமா " என்றாள். தன் அக்கா அங்கு வந்து தங்கி இருப்பதற்கான காரணம் அப்போதே புரிந்தது. அமைதியா சென்றுவிட்டவன், முழு போதையில் வந்தான்.இவனுக்கு இதற்கு மட்டும் காசு எங்கிருந்து வருமோ என சுகன்யா நினைக்காத நாள் இல்லை.
வீட்டிற்கு வந்தவன், வாசலில் நின்றுகொண்டு

" அடியேய் வெளிய வாடி.. "
அடித்துபிடித்து சுகன்யாவும் கற்பகமும் வெளியே வர

" உன் வயித்துல வளருறதுக்கு எவன் டி அப்பன் " என கத்தினான். தெருவே வேடிக்கை பார்த்தது.அவளருகில் வந்தவன்

" நம்ம மேட்டரு பண்ணி ரொம்ப நாள் ஆன மாறி இருக்கே . அப்றம் எப்டி டீ இது " என காதில் கேட்க ,கூனி குறுகி போனாள். ப்ளார் என கன்னத்தில் ஒரு அரை விழுந்தது . அடித்தது கற்பகம்.

" ஏய்... " என அவனும் கை ஓங்க, கற்பகம் அதிர்ந்து போனாள்.

" பொண்ண பாக்க வந்தோமா போனோமான்னு இல்லாம , மாசக்கணக்குல இங்க வந்து டேரா போட்டுட்டு இருக்க நீ. ஒழுங்கா தள்ளு. இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இருக்குற ப்ரச்சனை. "

அக்காவாகவே இருந்தாலும் பெண்ணை குடுத்தவர் ஆயிற்றே. அமைதியாகத்தானே இருக்க வேண்டும். அதானே இச்சமூகம் வகுத்த விதி. அதற்கு அடிபணிந்து வாயை மூடிக்கொண்டார் கற்பகம். பேச்சுக்கள் மேலும் தொடர, அவ்விரவு நீண்டது. காலையிலேயே கற்பகம் புறப்பட்டுவிட்டார். கிளம்ப சொன்னாள் சுகன்யா.

" அம்மா. நீ கிளம்பு. நா பாத்துக்குறேன். கண்ட நாய்கிட்ட நீ ஏன் பாட்டு வாங்குற " என ஏதேதோ சொல்லி கிளம்ப வைத்தாள். நாட்கள் நகர, பிரசவத்திற்கு வந்தார் கற்பகம். சுகன்யா அழகான ஒரு பெண் குழந்தையை பிரசவித்தாள்.அதற்கு பார்வதியின் பெயரான " மஹல்சா " வை வைத்தாள். அவள் தைரியமாக இருக்க விருப்பப்பட்டு. கற்பகம் அவ்வப்போது வந்து பேத்தியை பார்த்துவிட்டு செல்வார்.

அதன் பின் வருடங்கள் உருண்டோட, அன்று திடீரென சுகன்யாவிடம் இருந்து போன் வந்தது.

" ஹலோ. மா. நா தான் "

" சொல்லு மா.. நல்லா இருக்கியா "

" ம்ம்ம்ம். கொஞ்சம் வீடுவரைக்கும் வரியா. ஒரு ரெண்டு மூணு நாள் இருக்குற மாறி."

" என்ன விஷயம் ."

" வா சொல்றேன் "

" சரி வரேன் " என கிளம்பிச்சென்றார். வந்தவர் பார்த்ததோ உடல் மெலிந்து, முகத்தில் களை இழந்து விரக்தியுடன் தென்பட்ட சுகன்யாவை. எவ்வளவு கஷ்டம் வந்தபோதும் தன் மன தைரியத்தை மட்டும் விடாதவள் அவள். அவளை இவ்வாறு பார்க்க அம்மாவாகிய கற்பகத்துக்கு இன்னும் மன வலியை தந்தது.

" வா மா "

" ம்ம்ம் "

" பாட்டி " என பட்டாம்பூச்சியாய் பறந்து வந்தாள் 5 வயது மஹல்சா

" வாடி கண்ணு. நல்லா இருக்கியா "

" ம்ம்ம். நல்லா இருக்கேனே "

ஏனோ கற்பகதிற்கு மனம் அடித்துக்கொண்டது. வீட்டில் எப்போதும் இல்லாத ஒரு அசாத்திய அமைதி அவர் காதை கிழித்தது. இரவு எட்டு மணிக்கு கற்பகத்திற்கும் மஹல்சாவிற்கும் உணவளித்துவிட்டு, மஹல்சாவை தூங்கச்செய்தாள். கற்பகம் கேட்டதற்கு , தான் பிறகு அவனுடன் சாப்பிட்டுக்கொள்வதாக கூறிவிட்டாள். மஹல்சா தூங்கிய பின், ஒரு பையை எடுத்துவந்தவள் கற்பகத்தின் பக்கத்தில் அமர்ந்தாள்.

" மா.. உன் மடியில தலை வெச்சுக்கவா "

அவள் கேட்பது புதிதாக இருந்தாலும் அதை மறுக்கவில்லை கற்பகம்.
" வா மா.." என அழைத்து தலை கோதினார்.

" அம்மா. இந்த பையில. கொஞ்ச பணமும், நீ எனக்கு போட்ட நகையோட ஒரு அஞ்சு பவுன் நகை இருக்கு "

" இத எதுக்கு இப்போ எங்கிட்ட சொல்ற "

" எனக்கு எதா ஆச்சுன்னா என் பொண்ண எப்படியாது உன்னால முடிஞ்ச வரைக்கும் கரை சேர்த்துடு "

" அதெல்லாம் ஒன்னும் ஆகாது "

" நா சொல்றத மொதல்ல முழுசா கேளு "

" ம்ம்ம்ம்"

" இந்த பணம் நகை இதெல்லாம் எடுத்துகிட்டு , மஹல்சாவையும் கூட்டிகிட்டு நாளைக்கு ஊருக்கு கிளம்பு "

" ஏன்..."

" சொல்றத கேளு. அந்த ஆளு இவள பொண்ணா நினைக்குறதே இல்ல. அது அவ மனநிலைய ரொம்ப பாதிக்குது. அவனுக்கு இன்னும் என் மேல சந்தேகம் இருக்கு மா..." என அழுதாள்.

" ஏன்டி அவன் என்ன லூசா "

" அம்மா.. அவன் லூசா டைட்டான்னுலாம் என்னால ஆராய்ச்சி பண்ண முடியாது. அவனால ஒன்னும் முடியாதுன்னு அவனுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கு. அத மறைக்க தான் அடி , உதைலாம் "

" என்னமா எதேதோ சொல்ற "

" நா சொல்றதெல்லாம் உண்மை. குடிச்சு குடிச்சு எல்லாத்தையும் நாசமாக்கிகிட்டான். "

" ஐயோ என் பொண்ணு வாழ்க்கைய நானே நாசமாக்கிட்டேனே. உன்ன நீ காதலிச்சவனுக்கே கல்யாணம் பண்ணி குடுத்துருக்கலாம். என்ன மன்னிச்சிடு மா "

" மொதல்ல அழுவாத. அதயெல்லாம் இப்போ யோசிச்சு ஒரு பயனும் இல்ல. " பின் ஒரு பெருமூச்சை விட்டவள் மீண்டும் தொடர்ந்தாள்.

" அம்மாவா இருந்தாலும் உங்கிட்ட சொல்ல சங்கடமாதா இருக்கு. ஆனா என்ன செய்ய. அவன் தினம் என்ன கேள்வி கேக்குறத , அதும் மஹல்சா முன்னாடியே அவ பொறப்ப அசிங்க படுத்துறத என்னால தாங்கிக முடியல "

" சொல்லுமா.. எதுனாலும் சொல்லு. கொட்டி தீத்துடு. இவன தல முழுகிடு. நாளைக்கு எங்க கூட நீயும் வந்துடு "

அவள் ஒரு விரக்தி சிரிப்பை உதிர்த்தாள்.

" அத அப்றம் பாக்கலாம்.அவன் அன்னைக்கு போதைல வந்தான். தன்னால முடியாது , ஆனா இன்னும் அப்பன் ஆகுர துப்பு இல்லன்னு கூட்டாளிலாம் கிண்டல் பண்ண , தன் இயலாமைல கோவம் தலைக்கு ஏறி , எவன் குடுத்த ஐடியாவோ பேனா ரீஃபில்ல வெச்சு...." என அதற்கு மேல் தொடர முடியாமல் அழுதாள்.

" அவனுக்கு தான் பொழுது விடிஞ்சு பொழுது போனா அவன் என்ன செய்யுறான்னு அவனுக்கே தெரியாதே, இத எங்க நியாபகம் வெச்சுபான் "

" அட பாவி. கிளிய வளர்த்து குரங்கு கிட்ட குடுத்துட்டேனே " என அழுதார்.

" சரி.. நீ அத பத்ரமா வெச்சுக்கோ. நாளைக்கு கிளம்பு "

" ம்ம்ம் " என கற்பகமும் தூங்கச்சென்றார்.

மீதி வேலைகளை முடித்த சுகன்யா , அவனுக்காக காத்திருந்தாள். வந்ததும் எப்போதும் போல் அடி விழுந்தது காரணமே இல்லாமல். இருவரும் சாப்பிட்டு உறங்கினர்.

காலை நாலு மணிக்கு கற்பகத்துக்கு முழிப்பு தட்ட, எழுந்தவர் அக்கம் பக்கத்து வீட்டினர் அனைவரும் எழுந்து வரும்படி கத்தினார் " ஐய்யய்யோ....." என...


( வளரும்...)


பின் குறிப்பு : இது சில வருடங்களுக்கு முன் வாரமலரில் வந்த மனதை மிகவும் வருத்திய ஒரு செய்தி.. அதை தழுவி எழுதியதே...
 
Top