ரொம்ப நாட்களுக்கு பிறகு ஜனனி தன்னுடைய நெருங்கிய தோழி திவ்யாவின் கலயாணத்தில் கலந்து கொள்வதற்கு கிளம்பியவளை, அவளின் அம்மா விமலா "மாஸ்க் எடுத்துட்டியா? சானிடைஸர் வச்சிருக்கியா? யார் கூட பேசினாலும் தொலைவாக நின்றே பேசு" என்று பட்டியல் போட்டுக்கொண்டே போனவளை "அம்மா போதுமா கல்யாணத்திற்கு ஐம்பது பேர், ரிசப்ஷனிற்கு ஐம்பது பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அதனால நீ பயப்பட வேண்டாம். நம்ம வீட்டிலிருந்து டூ-வீலரில் கிளம்பினாள் பத்து நிமிட்டிடத்தில் சத்திரத்தை அடைந்து விடலாம். நீ கவலை படாதே நான் பத்திரமா போயிட்டு பத்திரமா வந்திடுவேன்” என்றாள்.
அவளின் நெருக்கமான நான்கு ஃபிரண்ட்சும் கல்யாணத்தில் ஒன்று சேர்ந்தவுடன் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மேடையேறி தங்களின் கிஃப்ட்டை கொடுத்தவர்கள் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு கல்யாண பெண் கன்னத்தை கிள்ளி தங்கள் வாழ்த்துக்களையும் கேலியையும் கொடுத்துவிட்டு மேடையை விட்டு இறங்கியவர்கள், "ஹே எவ்வளவு நாள் ஆச்சுடி இப்படி ஒன்று சேர்ந்து அரட்டை அடித்து சிரித்து. சே பாழாய் போன இந்த கொரோனா-விற்கு என்று தான் முடிவு காலமோ தெரியவில்லை”. புலம்பியபடியே உட்கார்ந்திருந்தவர்களை மணப்பெண் திவ்யாவின் அம்மா, "வங்கம் எல்லாரும் சாப்பிட. யாரும் சாப்பிடாமல் போகக்கூடாது" என்று உரிமையோடு அவர்களை கையை பிடித்து டைனிங் ஹாலிற்கு அழைத்து சென்றார்.
அங்கு நின்றிருந்த உணவு உணவு பரிமாறிபவர்களிடம் "இவர்களை பார்த்து நல்லா கேட்டு உபசரிங்க" என்றார். கைகளை அலம்பிய பிறகு வந்து சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது அவர்கள் இருந்த சந்தோஷமான மனநிலையில் சாப்பாடு இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது. "காலேஜில் லன்ச் அவர்ல என்ன அமர்க்களம் பண்ணுவோம். ஷேர் பண்ணுறோம் என்ற பெயரில் யார் என்ன கொண்டு வந்தோம், என்ன சாப்பிட்டோம் என்று கூடத் தெரியாது. திரும்பவும் இரண்டு மணிக்கே பசிக்க ஆரம்பித்து விடும்" என்று பழைய நினைவுகளை பேசியபடியே தங்கள் இலையில் என்ன மெனு இருக்கிறது என்ன சாப்பிடுகிறோம் என்பதை மறந்து பேசிக்கொண்டிருக்கும்போது பரிமாறும் நபர் ஜனனியிடம் "அம்மா இன்னும் கொஞ்சம் அவியல் போடவா" என்றார். நிமிர்ந்து கூட பார்க்காமல் "இல்லைங்க போதும்" என்று திரும்பவும் காலேஜ் ஃப்ளாஷ் பேக் போக முற்பட்டவளை "உனக்கு ரொம்ப பிடிக்கும் கொஞ்சம் போட்டுக்கோமா" என்று வற்புறுத்தவே சட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்தவள் அவர் முகத்தை மாஸ்க் மறைந்திருந்தாலும் அந்த கண்களில் லேசான கண்ணீர் தளும்ப, சுதாரித்தபடி அவர் இடத்தை விட்டு நகர்ந்தார். தொடர்ந்து அவளால் சாப்பிடவும் முடியாமல் பேசவும் முடியாமல் துக்கம் தொண்டை அடைக்க, " நீங்க சாப்பிடுங்கடி எனக்கு போதும் கை அலம்பிகிட்டு வரேன் " என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக கை அலம்பியவள் கண்கள் அலைபாய கொஞ்சம் தள்ளி தனக்கு முதுகை காட்டியபடி நின்றிருந்தவரை நெருங்கி "அப்பா" என்று அழைக்க அதிர்ச்சியோடு அவர் திரும்பி பார்க்க கண்களிலிருந்து அருவியாய் கண்ணீர் கொட்டியது. ரொம்பவும் இளைத்து போய் அடையாளமே தெரியாத அளவு மாறி இருந்த கேசவன் "எப்படிம்மா என்னை கண்டுபுடிச்ச" என்று தடுமாறிய படியே கேட்டார். "அப்பா மாஸ்க் போட்டு நீ மூக்கையும் வாயையும் மட்டும் தானே மறச்சிருக்கே, என்னுடைய அப்பாவுக்கு எவ்வளவு தீர்க்கமான கண்கள் அது எப்படி தெரியாமல் போகும்? எனக்கு அவியல் ரொம்ப பிடிக்கும்னு என்னுடைய அப்பா அம்மாவுக்கு மட்டும்தானே தெரியும். உன்னுடைய குரல் மறந்து போகுமாப்பா. எப்படிப்பா இருக்கே? எங்கே இருக்கே? இந்த நாலு வருஷமா என்னையும் அம்மாவையும் விட்டுட்டு எங்கே போன?" கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகவும் ப்ரண்ட்சுகள் கை அலம்பியபடியே வரவும், "அப்பா கிளம்புங்க நம்ம வீட்டுக்கு போகலாம். போதும்பா இவ்வளவு நாள் நீங்க தனியா இருந்தது" என்றவள் "இவர் எங்க அப்பா" என்று அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவள் "நான் வெயிட் பண்ணுறேன்பா" என்றாள். சந்தர்ப்பத்தை புரிந்து கொண்ட தோழிகள் "நாங்க கிளம்பறோம் ஜனனி நீ அப்பாவுடன் பேசிட்டு வா" என்று கிளம்பி போனார்கள்.
உட்கார்ந்திருந்த ஜனனியிடம் தயங்கிய படியே வந்த கேசவன் "நான் வீட்டுக்கு வரலேமா எந்த முகத்தை வச்சிக்கிட்டு உங்க அம்மாவை பார்க்க முடியும். உங்களை பத்தி கவலைப்படாமல் என்னுடைய சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று இருந்தவன்தானே. என்னுடைய இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்"
"அப்பா அதெல்லாம் நம்ம வீட்டுக்கு போயி பேசிக்கலாம் யார்கிட்டயாவது சொல்லனும்னா சொல்லிட்டு வாங்க போகலாம்"
உள்ளே சென்ற கேசவன் தன் முதலாளியிடம் (தலைமை சமையல்காரர்) தனக்கு இன்று ஒரு நாள் லீவு வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வந்தவனை "போகலாமா ப்பா?" என்று கேட்டபடி தயங்கிய தன் அப்பாவின் கைகோர்த்தபடி பார்க்கிங் வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தவள் "அப்பா நீங்களும் மாஸ்க் போட்டுக்கோங்க உட்காருங்க போகலாமா என்னை பிடிச்சிக்கோங்க" என்று சொன்னவள் மெதுவாகவே வண்டியை ஓட்ட, கேசவன் பின்னோக்கி தன் கடந்து போன வருடங்களை எண்ணி பார்த்தான்.
புகழ் பெற்ற ஆட்டோ மொபைலில் நல்ல வேலை கை நிறைய சம்பளம் அன்பான மனைவி புத்திசாலியான ஒரே பெண் குழந்தை, நன்றாக போய்க் கொண்டிருந்த அவன் வாழ்க்கையில் வேண்டாத மதுப்பழக்கத்திற்கு மெல்ல மெல்ல அடிமையானவன் வெகு விரைவில் மது என்னும் கொடூர அரக்கன் அவனை முழுவதாக ஆட்கொள்ள வேலையை மறந்தான் மனைவி குழந்தையை விட்டுவிலகி போதை போதை என்று சதா சர்வ காலமும் இதற்கு துணை போவது போல் கூடா நட்புகள் இதனால் வேலையை இழந்தான். விமலாவும் எவ்வளவு எடுத்து சொல்லியும் போராடியும் அவன் திருந்தவில்லை. அவளுக்கு வருமானத்திற்கு கை கொடுத்தது அவளின் தையர் கலை.
ஜனனி பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது திடீரென ஒரு நாள் அவன் உடல்நிலை மிகவும் மோசமாகி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்து விட்டு கேசவனின் ஒரே அண்ணன் வாசுவிற்கு போன் செய்தவள் "அண்ணா உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் பார்த்தேன் இனியும் உங்க தம்பிகூட போராட என்னால் முடியாது. டாக்டர் அவர் குடித்து குடித்து குடல் மற்றும் கல்லீரல் மிகவும் பாதிப்பு அடைந்துவிட்டதாக சொல்லி விட்டார். என்னை மன்னித்து விடுங்கள் தினமும் அவர் குடித்து விட்டு அவர் வீட்டில் செய்யும் அமர்களத்தை இந்த ஃபிளாட்டில் உள்ளவர்கள் அவரை பற்றி பேசும் வார்த்தைகளை கேட்க முடியவில்லை. தயவு செய்து அவருக்கு நீங்க தான் ஒரு வழி பண்ணனும். தொடர்ந்து இங்கே அவரை என்னால் வைத்துக் கொள்ள முடியாத நிலை" என்று போனில் கதறியவளை சமாதானப்படுத்தி தம்பியை விட்டுக் கொடுக்க முடியாமல் அவனுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்து தேறியவுடன் மனதை கல்லாக்கி கொண்டு "மது அடிமை மறு வாழ்வு" மையத்தில் மூன்று மாதங்கள் இருக்கும் படி பணம் கட்டி சேர்த்து விட்டான்.
அங்கு தங்கியிருந்த மூன்று மாதமும் தியானம், யோகா, மருந்துகள் உதவியுடன் மனதளவிலும் உடலாலும் நன்கு தேறி வெளியே வந்தவன் விமலாவும் ஜனனியும் நினைவில் வந்தாலும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களை போய் பார்ப்பது, அண்ணன் வாசுவையும் மேற்கொண்டு கஷ்டப்படுத்தாமல் விருப்பமில்லாமல் ஊரை விட்டு போக மனமும் இல்லை. தூரத்தில் இருந்தாவது மனைவி மகளை பார்த்து திருப்த்தி பட்டுக்கலாம் என்ற எண்ணத்தில் எப்படியோ கஷ்டப்பட்டு இந்த கேட்டரிங்-ல் வேலைக்கு சேர்ந்தான்.
மனம் தளராது அவர்களுடனே தங்கி இந்த நான்கு வருடங்கள் முதலாளியின் நன்மதிப்பை பெற்று சம்பாதிக்கும் பணத்தில் தனக்கென எதுவும் செலவு செய்து கொள்ளாமல், பேங்கில் ஜனனியின் பெயரில் பணத்தை சேமிக்க தொடங்கினான். என்றாவது ஒரு நாள் விமலாவை சந்தித்து மன்னிப்பு கேட்டு இந்த சேமிப்பை ஜனனியின் கல்யாணத்திற்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தவன் இன்று எதிர்பாராத பெண்ணின் சந்திப்பு அவனை இதோ இப்போது விமலாவின் முன் நிற்க வைக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எல்லாமே கடவுளின் செயல் என்று நினைத்தான். வீட்டை அடைந்ததும் "இறங்குங்க அப்பா" என்ற ஜனனியின் குரல் அவன் என்ன ஓட்டங்களுக்கு முற்று புள்ளி வைத்தது. “வாங்கப்பா” என்று கைகளை பிடித்து உள்ளே அழைத்து வந்தவளை வண்டியின் சத்தம் கேட்டு வெளியே வந்த விமலா கூட நிற்கும் கேசவனை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் தடுமாறினாள்.
ஒரு சில வினாடிகள் அங்கு அமைதி நிலவியது. ரொம்ப நாட்களுக்கு பிறகு கேசவனை பார்த்ததால் விமலாவின் கண்களில் கண்ணீர் தளும்பியது. "அப்பா உட்காருங்கு அம்மா நீங்களும் தான்" என்ற ஜனனி "நான் போய் காஃபி கொண்டு வரேன்" என்றபடி சமயலறையில் புகுந்து கொள்ள, தடுமாறியபடி "விமலா எப்படி இருக்கே உன்னை நிமிர்ந்து பார்க்க என்னால் முடியவில்லை தயவு செய்து என்னை மன்னித்து விடு. உன்னையும் ஜனனியையும் நிராதரவாக விட்டுட்டு போன எனக்கு மன்னிப்பே கிடையாதுன்னு தெரியும். இன்னிக்கு கூட குழந்தை வற்புறுத்தி கூப்பிடவே தான் வந்தேன் விமலா. மற்றபடி எனக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை உன்னை பார்த்தாச்சு இதுவே போதும் நான் வரேன்" என்று போக திரும்பியவனை "அப்பா நில்லுங்க இனிமேலும் எங்களால் உங்களை விட்டுட்டு இருக்க முடியாது எத்தனை நாள் அம்மா உங்களை நினச்சு அழுதிருப்பாங்கன்னு எனக்கு தான் தெரியும்”.
“அம்மா வாயை திறந்து அப்பாகிட்ட சொல்லுங்கம்மா நம்ம கூடவே இருக்க சொல்லி ப்ளீஸ்மா எனக்கு நீங்க இரண்டு பேரும் வேணும்மா".
அமைதியாக கண்ணீர் வடித்தபடி விமலா நின்றிருக்க "அம்மா அப்பா தான் செய்த தவறை உணர்ந்து வருத்தப்பட்டு நிக்கறார்மா போதுமா அவர் பட அவஸ்தைகள் பழையபடி நாம மூணு பேரும் ஒன்னா சேர்ந்து ஊர் சுத்தனும், டிவி பார்க்கணும், அரட்டை அடிக்கணும், ஜாலியா சண்டை போடணும் ஏற்கனவே நாலு வருஷமா நம்ம வீட்டில் இருக்கும் நிசப்தம் தொலைந்து நம்ப மூனு பேரின் சிரிப்பும் கும்மாளமும் இந்த வீட்டில் நிறைய வேண்டும்"
அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த விமலா சமையல் அறைக்கு போக ஜனனி கொஞ்சம் உரத்த குரலில் "என்னம்மா ஒன்னும் சொல்லாமல் நீ பாட்டுக்கு உள்ளே போறே" என்றாள். திரும்பி வந்த விமலாவின் கைகளில் கேசவனுக்கும் ரொம்ப பிடித்த வேர்க்கடலை உருண்டையும் மிக்சிசரும் தட்டில் வைத்து அவனிடம் நீட்ட மகிழ்ச்சியும் சந்தோஷமும் அந்த வீட்டினுள் போட்டி போட்டுக் கொண்டு நுழைந்தது.
தெரியாமல் தவறு செய்பவனை மன்னிப்பது தவறே கிடையாது.