sanchumahen
New member
அன்று
வடிவேல் அழகரது தென்னம் தோட்டத்திலிருந்து வந்து கொண்டிருந்த பவதிக்கு முன்னே சைக்கிளிலில்; வந்து இறங்கினார் தபாற்காரர் “அம்மாடி—உன்ரை பெரியண்ணா ஊருக்கு வந்திட்டான் மறக்காம அந்த கடிதத்தை கொடுத்திடு------சின்னவர்கூட படிக்கிறபிள்ளை----- ஏதாவது முக்கிய விசயமாக இருக்கப்போகுது” என்றவரது பேச்சு பீதியை கிளப்ப பயந்தபடி வீட்டிற்கு வந்தவள் கண்டது யோசனையுடன் முற்றத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் அவளது பெரியண்ணனைத்தான்.
இவளைக் கண்டதும் “எனக்கு வந்த கடிதத்தைக் கொண்டு வா” என்று கட்டளையிட்டவன் முன்னே எதுவும் செய்யத் தோன்றாது கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தவளை
“எதுக்கு எனக்கு வந்த கடிதத்தைப் பிரிச்சு பார்த்தனீ?” என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது தயங்கியவள்
“இல்ல---- ஏதாவது முக்கிய விசயமாக இருக்குமோ என்று நினைச்சுத்தான் ----- அண்ணா” என்றவளிடம்
“படிச்சே சரி அதை ஏன் எனக்கு நீ திரும்ப அனுப்பவில்லை? என்றவனின் வினாவிற்கு “அது வந்து அண்ணே-----“ என்று இவள் இழுக்க
“கேட்கிறேனில்ல என்ன இழுக்கிறாய் பதிலை சொல்லு” என்று கர்ச்சித்தவனிடம்
“அது ஏதோ---ஆடடித்து விருந்து வைக்கிறது என்று சின்னவர் எழுதியிருந்ததால் முக்கியம் இல்லை என்று விட்டிட்டேன்” என்றவளது பதில் திருப்தியைத் தராத போதும் மேலும் தூண்டித் துருவ அக்கடிதத்தில் ஏதும் இல்லாததால் நிலமையை உன்னிப்பாக அவதானித்து மேல ஆகவேண்டியதைச் செய்வோம் என்ற முடிவிற்கு மட்டுமே அவனால் வர முடிந்திருந்தது.
அழகனைச் சின்னவர் என்று சொல்லி தன்னிடமிருந்து அந்நியப்படுத்தும் நிலை வந்ததை பவதி விரும்பாவிட்டாலும் தங்கள் இருவருக்கும் இடையிலிருக்கும் இறுக்கமான உறவு மேலும் பலப்படமுன் எதையும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள அவள் விரும்பினாளில்லை.
அவளுக்குத் தெரியும் அவளது பெரியண்ணன் அழகனைத் திருமணம் செய்ய விடமாட்டான். அதுவும் வடிவேல் அழகர் இவனது படிப்பிற்கு உதவி செய்யத் தொடங்கிய பின்னர் அவர்கள் மீது அவனுக்கு இருந்த பக்தி வெள்ளம் பொட்டாற்றுக் கரையையே உடைக்கும் அளவிற்கு கொஞ்சம் ஓவராகத்தான் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
தாய்மேல் கொண்டிருந்த பாசத்தாலும் அக்கறையாலும் இரண்டு நாட்கள் ஊரில் தங்கியிருந்தவன் தனது படிப்பிற்கு உதவிசெய்யும் பெரிய ஐயாவை பார்க்காது ஊர் திரும்ப மனமற்று வடிவேல் அழகரது வீட்டிற்குச் செல்ல வடிவேல் அழகர் வீட்டில் இருக்கவில்லை.
ஆனாலும் அங்கிருந்த காத்தாயி சொன்ன செய்திகளால் ஒரு புறம் சந்தோசத்தையும் மறுபுறம் துக்கத்தையும் ஒன்றுசேர அனுபவித்துக் கொண்டிருந்தான்.
சந்தோஷம் அவனது சின்னய்யா அழகனுக்கும் அவனது ஒன்றுவிட்ட மாமா மகள் புனிதாவுக்கும் திருமணமாம்----அதுவும் அடுத்த மாதம் வரும் வைகாசி விசாகப் பொங்கல் அன்று சம்பிரதாயத்திற்கு பெண்பார்த்து பூவைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பது ஏதோ தன் உடன்பிறந்தானுக்குத் திருமணம் என்பது போல மனமகிழ்வைத் தந்திருந்தது
துக்கத்திற்குக் காரணம் இந்த திருமண ஏற்பாடுகள் பற்றி இவனிடம் இதுவரை அழகன் ஏதும் சொல்லாதிருப்பது.
அது சரி! நான் யார்? சின்னய்யாவுடன் படிக்க வைத்ததால் நான் அவருக்கு சமமாகிவிடுவேனா? என்று தன்னைத் தானே கேட்டவன் மனதின் ஏற்பட்ட வலியை தாங்கமுடியாது தவித்தான்------
என்ன இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்------
சின்னய்யா நல்லா இருந்தால் போதும் என்று மனதார நினைத்தவனுக்கு காத்தாயி சொன்ன அடுத்த விசயம் தாங்கொணா தலைக்குடைச்சலை ஏற்படுத்தி விட்டிருந்தது. அழகன் அடிக்க அழகர்புரம் வந்து செல்கின்றான் என்பதே அது.
புனிதாவைப் பார்ப்பதற்கென்றும் சொல்ல முடியாது ஏனென்றால் புனிதா குடும்பத்தார் இப்போ இருப்பது சிங்கப்பூரில். ஆம்! அவளது கொள்ளுத்தாத்தா காலத்திலேயே அவர்கள் குடும்பம் மலாயாவில் போய் குடியேறியிருந்தது. சிங்கப்பூரும் மலேசியாவும் பிரிந்தபோது இவர்கள் சிங்கப்பூரின் குடிமக்கள் ஆகியிருந்தனர்.
புனிதாவின் தாத்தாவும் சரி அவளது அப்பாவும் சரி தங்கள் வேரை மறக்காமல் ஊரில் நடக்கும் நெருங்கிய சொந்தங்களின் நல்லது கெட்டதுக்கு வந்து போய்கொண்டிருப்பவர்கள் தான்.
அதுவும் வள்ளியம்மையின் ஒன்றுவிட்ட அண்ணன்தான் புனிதாவின் அப்பா கார்த்திகேயன்.
புனிதாவிற்கு அழகனைப் பிடிக்கும் என்பது மூர்த்தியும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அழகனுக்கு புனிதாவில் பெரிதாக நாட்டம் எதுவும் இருந்ததில்லை.
அதுவும் புனிதாவின் சற்றுத் தூக்கலான பல்லும் அவளது நிறமும் அழகனுக்கு அந்த வயதில் உவப்பானதாக இருந்ததில்லை.
அவனது “முறைப்பெண்” என்று அவளைக் குறிப்பிட்டுப் பேசினாலே கோபம் கொள்பவன் “அதென்ன எனக்கு மட்டும் இவளை முறைப் பெண்ணாக்கி நீ நழுவவுகிறாய்? மனித இனம் எல்லாவற்றிற்கும் இவளது குடும்பம் தான் மூதாதையர்” என்று வர்ணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
யோசிக்க யோசிக்க அழகன் இந்த திருமணத்தை விரும்புவானா? என்ற வினாவே இப்போது பிரதானமாக முன் வந்து நின்றது.
இருபுறமும் இருக்கும் சொத்து சுகங்கள் இன்னொருவருக்கு ஏன்போய்ச் சேரவேணும் என்று நினைத்து முடிவு எடுத்திருப்பார்களா? இல்லை இந்த திடீர் முடிவிற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா?
புனிதாவைத் திருமணம் செய்வதற்கு வீட்டுக்காரர்கள் வற்புறுத்தினால் அன்றி அழகன் அவளைத் திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டான் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு அவ்வளவு உண்மை அப்படி வற்புறுத்தும்போது நிச்சயமாக அதைப்பற்றிச் சொல்லிப் புழுங்கவாவது அவன் மூர்த்தியிடம் வந்திருப்பான் என்பது-----
ஆக அழகனுக்கு இந்த திருமணஏற்பாடு தெரியாது என்ற முடிவிற்கு வந்தவனுக்கு
அழகன் அழகர்புரம் வந்து போவதற்கும் தனது வீட்டிற்கு வந்த கடிதத்திற்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்று சந்தேகத்துடன் ஆரம்பித்த யோசனை----- தொடர்பு இருக்கும் போல என்று தொடர்ந்து------- தொடர்பு இருக்கு என்ற உறுதியில் வந்து நிற்க அந்த முடிவு அவனது நிம்மதியைக் குலைக்க போதுமானதாக இருந்தது.
அவன் சந்தேகிப்பது போல அழகன் தனது தங்கையைப் பார்க்க வந்திருந்தால் ------
நிச்சயம் பெரும் பிரளயம் வெடிக்கும்.----
வடிவேல் அழகரது அடுத்த கட்ட நடவடிக்கையில் தங்களது குடும்பம் அழிந்து விடும். தனது தங்கையின் வாழ்வு கேள்விக்குறியாகி விடும்.
இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்ற நினைப்புடன் வீடு திரும்பியவன் நிலைமை எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதை அறிய சொன்ன வார்த்தை அவன் எதிர்பாராத ஊழித்தீயை ஏற்படுத்தியிருந்தது.
இன்று
“டேய் பெண் என்றால் உனக்கு மலிவானவளாகத் தான் தெரியுதா? அவ்வளவு இளப்பமாக போச்சா உனக்கு??”
“உனக்கு பிடிச்சிருந்தால் என்ன வேணும் என்றாலும் செய்வியோ?”
“உன்னைப் பிடிக்காத பிள்ளைக்கு எதுக்குடா கட்டாயத் தாலி கட்டினே?”
“அவ்வளவு கொழுப்பாடா உனக்கு------- சுப்பிரணியன் சொத்துக்களுக்கு வாரிசாக நீ போட்ட டிராமா தான் அவரை படுத்த படுக்கையாக்கி மேல அனுப்பியிட்டுதா?”
அடி இடிபோல கன்னத்தில் இறங்கியது. பதில் பேச விரும்பாது அவன் நிற்க மேலும் பல தாக்குதல்களுக்கு இலக்கானவனது மனம் கொப்பரையில் கொதிக்கும் எண்ணெயை ஒத்திருந்தது.
ஒரு வாரம் முன்னதாக அவளுடன் அழகர்புரம் சென்று வந்தபோது இருந்த இதம் இப்போது முற்றிலும் மறைந்து போயிருக்க வஞ்சினம் அதன் இடத்தைப் பற்றிக்கொண்டது. பழிவாங்கும் எண்ணம் கருக்கொண்டு அவனது சிந்தையை வியாபித்துக் கொண்டிருந்தது.
நான் இவளுக்கு கட்டாய தாலி கட்டினேனா? அப்படியா அந்த காளி கம்ளைன்ட் பண்ணியிருக்கா?
சீ----இவள் எல்லாம் ஒரு பெண்ணா???
உனக்கு இதெல்லாம் தேவையா விஷ்ணு? எத்தனை தடவை அந்த குருவப்பா சொன்னார் இந்த திருமணம் உனக்கு வேண்டாம் என்று கேட்டாயா நீ? இதிலை அவளை அவளது ஊருக்கெல்லாம் கூட்டிப் போயிருக்கிறாய் வெட்கமில்லையா உனக்கு----
ஒரு பொம்பள கண்ண கசக்கிட்டு உங்க முன்னாடி வந்து நிற்கக்கூடாதே! உடனேயே கிளம்பியிடுவீங்க ஆபத்பாண்டவனாக!
மனச்சாட்சி கேள்விகளால் குடைந்து கொண்டிருக்க தனக்குள்ளே இறுகிப்போனவனால் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்ல விருப்பம் இருக்கவில்லை
உன்னை பலவந்த திருமணம்------ பலாத்காரம் ------ என்று எல்லா செக்ஷனிலும் கேஸ் ஃபைல் பண்ணி வெளியில வராதபடி உள்ள போடணும்டா-----
மனைவியேயானாலும் அவளின்ர விருப்பம் இல்லாமல் தொடுறவன் ஆம்பளயாடா? இதிலை கட்டாயத் தாலி கட்டின நீ எல்லாம் எப்டிடா? உன்னப்போல ஆட்களால தான் ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்திற்கே அவமானம்----
முதல் நாளே நீ அவளைக் கெடுக்க முயற்சி பண்ணியிருக்கிறாய்---அந்த பொண்ணு தன்னைக் காப்பாத்த உன்ன கடிச்சிருக்கிறா---கேவலமா இல்லை? இன்ஸ்பெக்டர் தொடர அந்த பொய்க் குற்றச்சாட்டு தந்த வலியில் இவனது மௌனம் மென்மேலும் இறுகியது.
இவனுக்கு அடி விழுந்து கொண்டிருக்க திருப்தியாகப் பார்த்தபடி நின்றிருந்தனர் பார்வதி அம்மாவும் அவளது சகோதரிகளும் கணவன்மாரும்.
இவனை இன்ஸ்பெக்டர் அழைப்பதாக கான்ஸ்டபிள் வந்து கடையில் வந்து சொன்ன போது திருட்டுப் போன பொருட்கள் கிடைத்துவிட்டன போலும் என்ற எண்ணத்துடன் வந்தவனிடம் நியாயம் எதுவும் கேட்காது தாக்குதல்கள் தொடர ----
இங்கு வரும்போது கராஜ் விசயமாகத்தான் இருக்கும் என்று இவனே ஊகித்து மொபைலில் அழைத்துச் சொன்னதால் தற்போது கராஜை கவனிக்கும் நாதனும் அங்கு வந்து விட்டிருக்க -------
இவனுக்கு நடந்து கொண்டிருந்த போலீஸ் உபசரிப்பையும் அவளது குடும்பத்தினரையும் கவனித்த நாதன் உடனடியாக குருவப்பாவிற்கு அழைத்துச் சொல்லியிருக்க------
பதறியவர் வக்கீலுடன் அவ்விடம் விரைந்து வந்திருந்தார். அத்துடன் நிற்காது மனித உரிமை ஆணையாளருக்கும் தெரிவித்திருக்க அவர்களும் போலீஸ் ஸ்டேசன் வர ----
அவரது கொதித்த வார்த்தைகளில் இருந்த வீரியம் தொலைபேசியைத் தாண்டி செவிப்பறையைச்சுட பாமாவும் அங்கே வந்திருந்தார். அவருக்கு இங்கு நடப்பவை எதுவும் தெரிந்திருக்கவில்லை.
லயாவிற்கு இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதிநாள். இன்றைய தேர்வுடன் அவளது கல்லூரி வாழ்க்கை முடிவடைகிறது. அவள் கல்லூரிக்குச் சென்றிருந்தாள். அவள் வரும்வரை பொறுமையாக இருக்க விரும்பாத போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருந்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டரின் கேள்விகளால் அதிர்ந்து போனான் இவன்.
அந்த இன்ஸ்பெக்கடர் நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர். தகுந்த காரணம் இன்றி அவனை விசாரணைக்கு அழைத்திருக்க மாட்டார் என்பது அவனுக்குமே தெரிந்திருந்தது. அவனுக்கு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை.
குறிப்பாக அவளை தனது முறைப்பெண் என்று சொல்வதில் அதிலும் அவளது தந்தையை தனது தாய் மாமன் என்று சொல்வதில் விருப்பம் இருக்கவில்லை. காரணம் அவனது தாய்.
தனது தாயைப்பற்றி இங்கே நிற்கும் பார்வதி கட்டாயமாக பேசுவார். இவர்களை உறவு என்று சொல்லி என் தாயை இவர்கள் அசிங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது
தனது தாத்தா எதற்கு தன் தாய்க்கு சொத்துக்கள் எதனையும் கொடுக்கவில்லை என்பதை அறியாதவன் அதைப்பற்றிப் பேசவே தயங்கினான்.
வீட்டுப்பறவையாக தந்தையுடன் வாழ்ந்த அவனது தாயைப்பற்றி யாருக்கும் அதிகம் தெரிந்திருக்கவில்லை. யாரும் அவனிடம் இவைபற்றிப் பேசத் துணியவில்லை------யாரிடமும் கேட்டு அறிய இவனுக்கும் துணிவு இல்லை.
இவனது மௌனம் அங்கிருந்த காவலர்களின் அதிகார மமதைக்கு சவாலாகத் தோன்ற மீண்டும் அவனைத் தாக்க அவர்கள் முனைய “ஸ்டாப் யுவர் பாபறிசம்” மனித உரிமை ஆணையாளரும் இவர்களது வக்கீலும் ஒரே நேரத்தில் சொல்ல -------
"இவனை யார் என்று நினைச்சு அவன் மேல கையை வைச்சீங்க?" என்று ஆவேசமாக குருவப்பா கேட்க—----
"ஹலோ நீங்க யார் சார்---? போலீஸ் ஸ்டேஷனிலேயே வந்து எங்களை மிரட்டுறீங்க" என்று காவலர் ஒருவர் முன்னே வர-----
"போலீஸ் மக்களுக்காகத் தானே இருக்கு --அராஜகம் பண்ண இல்லையே---" என்று மொழிந்தவர் கண்களில் விஷ்ணுவின் காயங்கள் பட "எத்தனை வாட்டி சொன்னேன் கேட்டியாப்பா நீ ?"
"உன்ன எங்கே கொண்டுவந்து இந்த குடும்பம் நிறுத்தியிருக்கு பார்த்தாயா?" என்றவர் கண்களிலிருந்து நீர்வடிய அவரது தழுதழுத்த குரல் அவனது இதயத்தைப் பிசைய ஒரு கணம் அவரது முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் இதுவரை காணாத குருவப்பாவின் தவிப்பில் நெகிழ்ந்து போனான்.
"F.I.R போட்டுட்டீங்களா? இவர் மேல என்ன கேஸ்" என்று வக்கீல் கேட்க
"கட்டாய திருமணம் ----சுப்பிரமணியத்தை மிரட்டி அவரது சொத்துக்களைத் தன்பெயரில் மாற்றிக்கொண்டது" என்று இன்ஸ்பெக்டர் தொடர-----
"இன்ஸ்பெக்டர் யார் இந்த கம்பிளைன்ட் தந்தது?" என்ற வக்கீலின் கேள்விக்கு
"இவரது மனைவியும்---- சகோதரிகளும்" என்ற பதிலால் வெகுண்ட குருவப்பா "என்னது கட்டாய திருமணமா???-சொத்தை மிரட்டி எழுதிவாங்கினானா??? இந்த நூற்றாண்டிலேயே இதுதான் பெரிய ஜோக்காக இருக்கும் இன்ஸ்பெக்டர்".
என்னது கட்டாய திருமணமா? என்ற குருவப்பாவின் அதிர்ச்சிக்கும் அவரது கோபத்தின் அளவிற்கும் நிச்சயமாக எல்லா நிலைமைகளும் தலை கீழாக மாறிவிடும் என்பதை உணர்ந்த பாமா
"ஐயோ சார் அப்படி எதுவும் இல்லை" என்க
"நீங்க –யார் ?" என்ற இன்ஸ்பெக்டருக்கு "நான் அவளோட அம்மா" என்று பதில் தந்தவர் குருவப்பாவை முந்திக்கொண்டு "இந்த திருமணம் அவளது சம்மதத்துடன் தான் நடந்தது------"
"என் புருஷன் ஆரோக்கியமாக இருக்கும் போதே சொத்துக்கள் எல்லாவற்றினையும் அவங்க அக்கா பையனிடம் கொடுத்துவிட்டார் ----" என்று கவனமாக வார்த்தைகளை கோர்த்துச் சொல்ல----
"அம்மாடி உங்க கெட்டித்தனத்திற்கு நாடே தாங்காது-----நீயும் உன்ர பிள்ளைகளும் சிறப்பாக வேலை செய்றீங்க"
"ஏம்மா இந்த பிள்ளை உங்க வீட்டிற்கு பொண்ணு கேட்டு வந்தானா? என்ன நாசத்திற்கு போலீஸ் கம்ளைன்ட்?" என்றவர்
இன்ஸ்பெக்டர் கேஸ் கிடைச்சிட்டுது என்று அடிக்கக்கூடாது. அதுவும் அவன் கைதியோ -----இல்ல குற்றவாளியோ இல்லை------பின்ன எப்படி நீங்க அவன் மேல கை வெச்சீங்க-----
அந்த பொண்ணு நேர வந்து கம்ளைன்ட் கொடுத்தாளா? என்று தனது பங்கிற்கு வக்கீல் கேள்வி எழுப்ப
இந்த றிட்டின் கம்ளைன்டை அவங்க சிஸ்டர்ஸ் அண்ட் இன் லோஸ் அவங்க வக்கீலுடன் வந்து குடுத்தாங்க
விசாரணை எதுவும் செய்ய மாட்டீங்களா? அவன் தரப்பு நியாயத்தைக் கேட்க மாட்டீங்களா?
இன்ஸ்பெக்டர் குருவப்பாவை சமாளிக்கும் வகை தெரியாது தயக்கத்தில் மெல்லவும் முடியாது சொல்லவும் முடியாது தனது அதிகாரத்தைக் காட்டவும் முடியாது தவித்துக்கொண்டிருப்பதை அவரது முகமே காட்டிக்கொடுக்க-----
அவரது நேர்மை அவரை கேவலமாகப் பார்த்து கைகொட்டிச் சிரித்தது லயாவின் இரு அக்காக்களின் கணவன்மாரான ராகவனையும் சுகந்தனையும் குரோதமாக விழித்துப் பார்த்தார்.
அந்த பார்வை சொன்னது உங்கள் இருவரது பேச்சையும் நீங்கள் இருவரும் டாக்டர்கள் என்றபடியால் தான் நம்பி இந்த கேஷை எடுத்தேன் நல்ல சிக்கலில கொண்டுவந்து என்னை மாட்டி விட்டிட்டீங்க.
"சார்! கம்ளைன்ட் நாங்களும் சேர்த்துத்தான் தந்திருக்கின்றோம்" என்ற ராகவனும் சுகந்தனும்
"இவன் இப்போ இருக்கிறது எங்களுக்கு ஹாஸ்பிட்டல் கட்டுவதற்கு மாமா எங்கள் பெயரில் எழுத இருந்த நிலம்" என்றனர்.
"அப்படியாப்பா எப்படி உங்க மாமா இதை உங்க பெயரிலை எழுதுவார்? அந்த விசயம் எதாவது சொன்னாரா உங்க மாமா ?"
உங்கமாமா என்பதை நக்கலாக குருவப்பா அழுத்திக்கூற
என்ன இது மாமாவின் ஃபிரண்ட் மாமாவை நக்கல் பண்ணுறமாதிரிப் பேசுறார் என்று புரியாது பார்த்தபடி நின்றிருந்தான் விஷ்ணு.
"அந்த நிலத்திற்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது யாரைக் கேட்டு கேஸ் குடுத்தீங்க?" என்று மகள்கள் இருவரிடமும் பாய்ந்த பாமா
"போதும்டி எல்லாம் உங்க தங்கைச்சியின்ர வாழ்க்கை அழிக்கிறதென்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையாதையுங்கோ" என்று கண்கலங்கியபடி கூற
"இப்போ என்னம்மா சொல்ல வாறீங்க ?"
"நீங்க கம்ளைன்ட் கொடுத்தது தப்பு . இந்த நிலம் அவங்களுடையது" என்று பன்மையில் சொல்ல
"எவங்களுடையது?" என்ற குருவப்பாவிற்கு
"அது சின்ன மாப்பிள்ளையின்ரை நிலம்" என்றவர்
சார் கம்ளைன்ட்டை நான் வாபஸ் வாங்கலாமா என்று கேட்ட பாமதியை நீ என்னம்மா லூசா? என்பது போல பார்த்து வைத்தவர் இறுகிய குரலில் இந்த கம்ளைன்ட்டின் உண்மைத்தன்மை தெரியாமல் எதுவும் செய்ய முடியாது.
சம்மந்தப்பட்ட இவரது வைஃப் வந்தாகணும் அது வரைக்கும் எல்லோரும் வெளியில் போய் இருங்க. சதாசிவம் இவருக்கு குடிக்கிறதிற்கு எதுவும் கொடுங்க என்று விஷ்ணுவின் பக்கம் கைகாட்டியவர் அவ்விடம் விட்டு அகன்றார் எரிச்சலுடன் .
மனித உரிமை ஆணையாளரிடம் திரும்பி அடிச்சது தப்புதான்-----அது ஒரு பெண்ணுடைய வாழ்க்கைப் பிரச்சினை ஆக்கிட்டான் என்ற கோபத்தில நடந்திட்டுது------சாரி-----நீங்க என்மீது நடவடிக்கை எடுக்கிறதென்றால் தாராளமாக எடுக்கலாம் என்று சொல்ல-----
எங்களுக்கு எங்க கடமையை எப்படி செய்யிறது என்று தெரியும் சார்------பார்க்கலாம் உங்களுக்கு இன்னமுமே மனித உரிமையைப்பற்றி தெரிய மாட்டேன் என்குது அதுதான் பிரச்சினையே----- என்றபடி வக்கீல் இருந்த இடத்தை நாடிச் சென்றார்.
கம்ளைன்டை வாபஸ் வாங்க லயா நேரில் வரவேண்டும் என்று போலீஸ் சொல்லியிருக்க கணக்கர் சோமுவை தொலைபேசியில் அழைத்த குருவப்பா அவள் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது அவளை உடனேயே கூட்டிவரும் பொறுப்பை அவருக்குக் கொடுத்துவிட்டு சிலபல அறிவுறுத்தல்களையும் சேர்த்து அவருக்கு வழங்கிவிட்டு அவளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்.
கல்லூரியில் பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் ஹாஸ்டலுக்குச் சென்றவள் அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு பஸ்ஸிலிருந்து வந்து இறங்க நேரம் மாலையை அண்மித்துக் கொண்டிருந்தது.
பஸ்தரிப்பிடத்தில் தனக்காகக் காத்துக்கொண்டிருந்த கணக்கர் சோமுவைப் பார்த்தவள் "என்ன மாமா இங்கே நிற்கிறீங்க?" என்றாள்.
"அம்மாடி கையிலை வெச்சிருக்கிற திங்ஸையெல்லாம் வீட்டிலை கொண்டு போய் வெச்சிட்டு உடனே வா நாம ஒரு இடத்திற்குப் போகணும்" என்றவரிடம்
"எங்கே மாமா?" என்று இவள்கேட்க
"சொல்லுறன்டா வா உடனேயே கிளம்ப வேண்டும்" என்றபடி இவளுடன் இணைந்து அவரும் நடக்க
"என்ன மாமா விசயம்?" என்று மீண்டும் இவள் கேட்கவும் அவர்கள் விஷ்ணுவின் வீட்டு வாசலுக்கு வரவும் சரியாக இருக்க
"நீ திங்ஸை உள்ள வைம்மா நான் ஆட்டோ பார்க்கிறேன்" என்றவரிடம்
"என்னமாமா விசயம்?" என்று மீண்டும் ஒரு தடவை அழுத்திக் கேட்டாள். தனது அப்பாவிடம் பல காலமாக வேலை செய்யும் அவரிடம் சின்ன வயதிலிருந்தே அவளுக்கு மரியாதை இருந்தது. அதற்காக என்ன ஏதென்று தெரியாமல் அவர்கூப்பிட்டதும் அவள் போவாளா என்ன?
அவள் விசயத்தை அறிந்து கொள்ளாமல் வரமாட்டாள் என்பதை அறிந்தவர்
"அதில்லையம்மா----உங்க அம்மாவை போலீஸ் அரஸ்ட் பண்ணி லாக்கப்பில வெச்சிருக்கிறாங்க" என்று சொன்னதும் அதிர்ந்தவள்
"என்ன மாமா சொல்லுறீங்க------அம்மாவை எதுக்கு அரஸ்ட் பண்ணினாங்க-----அம்மா என்ன தப்பு செஞ்சாங்க?"
"நியாமாகதான் கேட்கிறாய்டா. நீ கொடுத்த கம்ளைன்ட்தான் உங்க அம்மாவை உள்ளுக்கு வெச்சிருக்கு" என்று சொல்ல
"விளையாடாதையுங்க மாமா நான் எப்போ கம்ளைன்ட் அம்மாமேல குடுத்தனனான்?" என்றவளின் வினாவிற்கு
"உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொடுத்ததா நீ கொடுத்த கம்ளைன்ட்க்கு யாரை அரஸ்ட் பண்ணுவாங்க?"
"நானா? என்ன மாமா சொல்லுறீங்க நான் எப்போ கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொடுத்தது என்று போலீஸில் கம்ளைன்ட் கொடுத்தனான்? என்ர விருப்பத்தோட தானே இந்த கல்யாணம் நடந்தது" என்று பதட்டத்துடன் சொன்னவளிற்கு
"சரிம்மா அதை வந்து போலீஸ் ஸ்டேசனிலை சொல்லு" என்று சொன்னவருக்கு முன்பே பாய்ந்து சென்று ஆட்டோவில் ஏறியிருந்தாள் லயா