கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி----+அது- அத்தியாயம் 13

sanchumahen

New member
அன்று

வடிவேல் அழகர் ஐயா வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தான் மூர்த்தி. அவன் மனம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.

நிச்சயமாக இது பருவ கிளர்ச்சிதான்-----அழகனின் தோற்றப் பொலிவும் அவனது வசதியும் தந்த மயக்கம் தான் வேறெதுவும் இல்லை.

இந்த சின்னையாவின் புத்தி ஏன் இப்படிப்போகுதோ? ஒற்றைப் பிள்ளை--- குடும்ப பாரம்பரியத்தை நினைக்க மாட்டாரா இவர்?

அவனுக்கு அவனது தங்கையைப்பற்றி நன்றாகவே தெரியும் பசுபோல அடங்கியிருப்பவள் தனக்கு தேவையென்றால் காட்டெருமை மாதிரி குத்தவும் தயங்க மாட்டாள்.

அவளிடம் சரியாக யோசிக்காது வார்த்தைகளை அள்ளி வீச முடியாது. ஒரு எல்லை வரைக்கும் பெரியண்ணா என்பவள் அந்த எல்லை தாண்டினால் அவ்வளவுதான்-----

அவன் மனம் ஒரு நியாயவாதியைப் போல சிந்தித்தது. அவனது தங்கை பேரழகி தான் சந்தேகம் இல்லை. ஆனால் எங்களது குடும்பத்தில் பெண் எடுத்தால் அவர்களது சாதி சனம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது.

அப்படி போராடி கல்யாணம் செய்து கொண்டாலும் பெரியையாவின் அங்காளி பங்காளிகள் சும்மா விடுவார்களா????

ஏதோ ஒரு சாட்டுச் சொல்லி என் தங்கையைக் கொன்னுட்டாங்க என்றால் -----இந்த பொருந்தாத காதல் எங்களது குடும்பத்திற்கு வேண்டாம்.

பணத்தை ஒருபக்கம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் எங்களது குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள என்ன இருக்கிறது?

யோசிக்க யோசிக்க அவனுக்கு இந்த திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகத் தெரிய எட்டி நடைபோட்டான்.

அவன் மனம் முழுவதும் தான் ஊருக்குப் போகுமுன் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணமே நிரம்பியிருந்தது.

மனிதன் போடும் கணக்கெல்லாம் நடப்பது இறைவன் கையில் தானே இருக்கிறது.

அவன் வீட்டை அண்மிக்க அவர்களது வீட்டில் ஊர்சனங்களும் வேறு தெரியாத முகங்களும் குழுமியிருக்க அம்மாவிற்கு ஏதாவது ஆகிவிட்டதா?

இல்லை!! அந்த கிராதகன்கள் இரண்டு பேரும் எங்கோ திருடச் சென்று பிடிபட்டு விட்டான்களா?

கடவுளே!! நான் எந்த பிரச்சினையைப் பார்ப்பேன் என்றபடி உள்ளே போக----

கையில் ஒருவயது மதிக்கத் தக்க ஆண் குழந்தையுடன் பதினேழு அல்லது பதினெட்டு வயதில் இருக்கும் பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள்.

அவளது தோற்றமே சொன்னது அவர்களது நிலை இவர்களது நிலையைவிட மிகமோசம் என்று.

பார்வையால் இந்த கதைக்கு கதாநாயகன் யாராக இருக்கும்என்று இவன் துளாவ தலையைச் சிலுப்பியபடி இவனது தம்பி கணேசன் நின்றிருக்க

"தம்பி தெனாவெட்டா பதில் பேசாதீங்க---இப்போ இந்த பிள்ளையையும் தாயையும் ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாதா?" என்று ஒருவர் கேட்க

"முடியாதையா உன்னால என்ன செய்ய முடியுமோ அதைச் செய்" என்ற கணேசனின் பதிலில் இவன் காலடியில் வந்து விழுந்தவள் "மாமா அப்டி சொல்லாதையுங்க" என்று துடித்தாள்---

இவன் காலால் ஓங்கி ஒரு மிதிமிதிக்க குழந்தையுடன் சுருண்டு விழுந்தவளை "ஏன்டி! இது என் பிள்ளை என்றதற்கு என்ன ஆதாரம் வெச்சிருக்கே?" என்று மனச்சாட்சி இல்லாமல் கேட்க—

அவள் "ஆதாரமா??" என்றபடி அதிர்ந்து நின்றாள்.

கணேசன்தான் இப்படி பேசுகின்றான் என்று பார்க்க நாகராசன் இவர்களது அப்பா இன்னும் ஒருபடி மேலே போய்

"இந்தா---அவன்தான் போகச் சொல்றானில்ல----கிளம்புங்க --கிளம்புங்க" என்று வந்தவர்களை விரட்டியடிக்க முயற்சிக்க மீண்டும் வந்தவர்களிடையே சலசலப்பும் குழப்பமும் ஏற்பட இதையெல்லாம் பார்த்த மூர்த்திக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்க மெதுவாக நடந்துவந்து வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு எந்த பிரச்சினையைக் கையாளுவது என்றே புரியவில்லை.

மெதுவாக உள்ளே பார்க்க அந்த வீட்டில் இருந்த ஒரே ஒரு அறையினது கதவைப் பூட்டிக் கொண்டு தங்கை உள்ளே இருப்பது புரிந்தது.

அவள் மனம் ஆத்திரத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. ஐயோ--- ஐயோ இந்த கொடுமையை யாரிட்ட சொல்லி அழுறது?

இந்த வயசில என்னை பெத்தபாவி வயித்தை தள்ளிக் கொண்டு நிற்கிறாள்---கூடப்பிறந்த பரதேசி இரண்டு தரித்திரபீடைகளைக் கொண்டுவந்து வெச்சிருக்கிறான்-----

அத்தான் பெண் கேட்டு வரப்போற நேரத்திலை இப்படி ரகளை எல்லாம் நடந்தால் எனக்கு என்ன மரியாதை பெரிய வீட்டில கிடைக்கும்???

அவளுக்கு அழகனின் அப்பாவித் தனத்திலும் அவள் மீதிருக்கும் மயக்கத்திலும் நம்பிக்கையிருந்தது. அடிக்கடி அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டாலும் அவள் தன்னை பெரிய வீட்டு மருமகளாக எண்ணுவதிலிருந்து பின்வாங்கினாளில்லை.

தங்கையின் பிரச்சினையை என்ன செய்வது என்று யோசிக்க முடியாமல் புதிதாக முளைத்துள்ள இந்த பிரச்சினையை என்ன செய்வது என்ற இவன் பார்த்திருக்க--

ஒவ்வொருவரதும் காலில் விழுந்து வாழ்க்கைப்பிச்சை கேட்ட பெண் கடைசியா ஓடிவந்து மூர்த்தியின் காலில் விழுந்து இவனது காலைக் கட்டிக்கொண்டு 'என்னைய உன்ர கூடப்பிறந்த பிறப்பா நினை அண்ணே என்னையும் என்பிள்ளையையும் ஏத்துக்கச் சொல்லி மாமாட்டை சொல்லண்ணே என்று கதற உடனடியாக முடிவெடுத்தவன் "இந்தாம்மா தங்கைச்சி உனக்கு இங்க நியாயம் கிடைக்காது. நீ போலிசுக்குப் போ. அப்ப தான் உனக்கு வழிகிடைக்கும்" என்று கூற கணேசனுக்கும் நாகராசனுக்கும் சர்வ அங்கமும் நடுங்கத் தொடங்கிவிட்டது. இன்னமும் அவர்கள் போலிஸ் தேடும் குற்றவாளிப் பட்டியலில்தான் இருந்து கொண்டிருக்கின்றனர்.

போலிசுக்குப் போனால் அவ்வளவுதான். கப்பென்று பிடிச்சு கூட்டுக்குள்ள போட்டிடுவான்கள். இப்போது ஆத்திரம் மூர்த்தி பக்கம் திரும்பியிருந்தது. இவனெல்லாம் கூடப்பிறந்த பிறப்பா. எப்ப பாரு பஞ்சாயத்து தலைவன் மாதிரி எங்களுக்கு எதிராகவே நிற்கிறான். கோடரிக் காம்பு---.கோடரிக் காம்பு மனதுக்குள் இவனை மாறி மாறி இருவரும் வைது கொண்டிருந்தனர்.

அன்னிக்கு சூடு பட்டு கிடந்த போதுகூட இவன் ஏன் என்று எங்கள எட்டிப் பார்க்கல---வந்திட்டான் பெஞ்சுக்கு தீர்ப்புச் சொல்ல.

இந்த நேரம் பார்த்து தனக்கு மகன் பிறந்த சேதியைத் தெரிவிக்க வந்த மாணிக்கராசன் தனது மைத்துனனுக்கும் மருமகனுக்கும் வந்துள்ள இக்கட்டைப் புரிந்து கொண்டு கைகொடுக்க முன்வந்தான்.

அட சீ! என்ன மாப்பிள்ளை நீ ---பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கொண்டு-----இந்த புள்ள திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் வந்த ஆத்திரத்திலை தம்பியும் அப்பனும் பேசிட்டாங்க---கை குழந்தையோட நிற்கிற புள்ளய யாராச்சும் கைவிடுவாங்களா? நீ உள்ளார போம்மா என்று பிரச்சினையை முடித்து வைக்க

ஊப்---என்றபடி மூச்சை வெளியில் விட்டான் மூர்த்தி. இந்த நிம்மதி இவனுக்கு நிலைக்குமா?

இன்று

ஆட்டோ நிற்க முன்பே அதிலிருந்து குதித்து போலீஸ் ஸ்டேசனுக்குள் ஓடிவந்தவள் “சார் இந்த கல்யாணம் என்ர விருப்பத்துடன்தான் நடந்தது ----ப்ளீஸ் அம்மாவை வெளியில விடுங்கோ. என்னை யாரும் ஃபோர்ஸ் பண்ணயில்ல.

ஃப்ளீஸ் சார்----- ஃப்ளீஸ்---” என்று கெஞ்சியவளது விழிகள் அம்மா எங்கே என்று நாலாபக்கமும் சுழன்று தேட அங்கே ஒரு பெஞ்சில் தலைக்கு தனது இரு கைகளையும் சுமைதாங்கியாக வைத்து கவலை தோய்ந்த முகத்துடன் இருந்து பாமதி பட

அய்யோ என்ர அம்மா போலீஸ் ஸ்டேசனிலை விசாரணைக்கு வரும்படி ஆயிடிச்சே என்று துடித்தவளுக்குத் தெரியவில்லை இதே இடத்திற்கு இவள் வரக்கூடாது என்பதற்காக மட்டுமே பல லட்சம் பெறுமதியான பொருட்களுடன் தனது தொழில் கனவையும் சேர்த்துத் தொலைத்தவனது தியாகம்.

காவல்துறை உங்களது நண்பன் என்று சொன்னாலும் காவல் நிலையத்திற்கு பெண்கள் துணிந்து செல்ல தயங்குவதற்கு ஒரு சில காவலர்கள் காரணமாக இருப்பதும் தொடர்கின்றது தானே

"அம்மா"--- என்றபடி தாயிடம் விரைந்து வந்தவள்

“நான் உங்க மேல எந்த கம்ளைன்ட்டும் குடுக்கயில்ல. ஏன் உங்களை அரஸ்ட் பண்ணினவங்க?” என்று கேட் டு அழ

"அப்போ யார் கட்டாயப்படுத்தி உன்னை கல்யாணம் முடிச்சதா எழுதிக் கொடுத்தனீ?"

நான் யாரிடமும் எந்த கம்ளைன்ட்டும் என்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வெச்சதா எழுதிக் கொடுக்கயில்ல-----

“லயா என்னடி பேசிறாய்?” என்ற அவளது அக்காக்களின் குரலில்

“என்னக்கா இது? அப்பா என்னைக் கேட்டதற்கு நான் சம்மதம் சொல்லித்தானே இந்த கல்யாணம் நடந்தது.”

“ஏய்! அறிவில்லாமல் பேசாத ---இந்த விஷ்ணு உனக்கு கட்டாய தாலி கட்டயில்லை?” என்று தங்கள் தரப்பை காப்பாற்றக்கூடிய பதிலை அவள் வாயால் பெற்றுவிடக் கேட்க

“இல்லை---- அப்படி எதுவும் நடக்கயில்லை-----ஏனக்கா இப்படி பேசுறீங்க?” இவள் அக்காக்களுடன் வார்த்தையாடிக் கொண்டிருக்க----

விஷ்ணுவிற்கு அருகில் வந்த இன்ஸ்பெக்டர் “சாரி மிஸ்டர் விஷ்ணு நான் நடுநிலையாக இருந்திருக்க வேணும். தப்பு பண்ணியிட்டேன்”

“ஒரு பொண்ண அவளது ஆற்றலை, உணர்வை கால்ல போட்டு மிதிக்கிறவன, இமோஷனல் ப்ளக்மெயில் பண்றவன ஹீரோ என்று என்னால கொண்டாட முடியாது-------ஏன்ன அவளுக்கும் இருக்கிறது இந்த ஒரு வாழ்க்கைதானே அதை அவள் வாழ வேண்டாமா?---”

“அவளின்ர சுதந்திரத்தை அவளைவிட உடல் பலம் கொண்டதனாலயோ இல்ல பணபலம் கொண்டதனாலயோ ---மறுக்கிற உரிமை எந்த ஆணுக்கும் இல்ல----எந்த சகமனிஷனுக்கும் இல்ல”

“இப்பவும் சொல்லறன் நீங்க அந்த பொண்ணுக்கு பலவந்தமா தாலி கட்டியிருந்தா உங்களை வெளியில விட்டிருக்க மாட்டேன்”.

“இங்க பிரச்சினை வேற திசையில ஓடுறதால நீங்க நிரபராதி என்று புரியுது அகெய்ன் சாரி நீங்க கிளம்புங்க. நாங்க F.I.R ஃபைல் பண்ணாமல் விசாரிச்சதில வந்த ஒரு நன்மை இதுதான் என்றவர்”

அவனை அனுப்பி வைக்க யாரையும் திரும்பிப்பாரது நடந்தவ னுக்கு தனது பைக்கூட நினைவில் இல்லை.

மனமும் உடலும் போட்டிபோட்டுக்கொண்டு வலித்தது. அந்த இன்ஸ்பெகக்டர் கூறிய வார்த்தைகள் அவனுக்கு விரக்தியான சிரிப்பை ஏற்படுத்த உதட்டைச் சுழித்தவனுக்கு உதடுகள் தாங்கொணா வலியைத்தர அவை இரண்டும் வீங்கிப்போயிருந்தது தெரிந்தது.

பெண் என்றால் இழிவானவளா? என்று அவர் கேட்ட கேள்விகளையே அவரிடம் மாற்றிக் கேட்கவேண்டும் போலிருந்தது.

ஒரு பெண்ணை ஆண் துன்புறுத்தினால் தட்டிக் கேட்க நினைக்கும் சட்டமும் சமூகமும் ஆணைப் பெண் துன்புறுத்தினால் ஏன் கண்டு கொள்வதில்லை???

ஒரு பெண்ணை பெண்ணே துன்புறுத்தும்போது ஏன் மௌமாக வேடிக்கை பார்க்கின்றது.

ஆண் என்பவன் என்ன கல்லால் செய்யப்பட்ட இதயத்தைக் கொண்டு பிறந்திருக்கின்றானா?

அவனை சுதந்திரமாக அழத்தான் இந்த சமுதாயம் விடுகின்றதா?

‘அழுகின்ற ஆண்களை நம்பாதே’ என்று சொல்பவர்களுக்கு அவனுக்கும் கண்ணீர் சுரப்பி உண்டு அதிலிருந்தும் கண்ணீர் சுரக்கும் என்பது ஏன் புரியவில்லை.

அவன் கல்லாக இருந்து அத்தனை சுமைகளையும் சுமக்க வேண்டும். அதைத்தானே இந்த சமூகம் எதிர்பார்க்கின்றது. ஆக கல்லாகும்படி சபிக்கப்பட்டவர்கள் அகலிகைகள் அல்ல ஆண்கள்தான் போலும்.

இவன் தன்வழியே போக இன்ஸ்பெக்டர் ராகவனையும் சுகந்தனையும் விசாரணைக்காக உள்ளே வரும்படி அழைக்க பாமாவின் மேல் அவர்களுக்குத் தோன்றியிருந்த கடுப்பை அதிகரிக்கும் வண்ணம் அவரது விசாரணை ஆரம்பமாயிருந்தது.

விசாரணையின் போக்கு திருப்தியளிக்க குருவப்பா மெல்ல சிரித்துக் கொண்டார். இததான் சொல்லுறது சொந்த கையால சூனியம் வைக்கிறதென்று.

நினையாப் பிரகாரமாக வாண்டட்டாக வந்து இவர்கள் சிக்கியது திருப்தியளிக்க தனது நண்பனின் கனவுகளை நனவாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார் அவர்.

அவரும் எவ்வளவு காலம் இங்கே தங்கியிருக்க முடியும்? அவரது மனைவியும் பிள்ளைகளும் அவரை கனடாவிற்குத் திரும்பி வரும்படி நச்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.

குருவப்பா கூறிய நியாயமான சூழ்நிலை விளக்கத்தால் மனித உரிமை ஆணையாளரும் திரும்பிச் சென்றிருக்க வக்கீலுடன் அங்கேயே நின்றிருந்தார் அவர். இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டாமல் போலீஸ் ஸ்டேசனை விட்டுப் போக அவர் தயாராக இல்லை.

இன்னும் ஒருதடவை எந்த முயற்சியையும் இவர்கள் எடுக்க விடக்கூடாது------அவன்ர ஆத்மா என்னை மன்னிக்காது----என்று பதைத்தவர் விஷ்ணு வெளியே சென்றதையும் அவனை ஒரு பொருட்டாக இவள் கவனியாது நின்றதையும் மனதில் குறித்துக் கொண்டார்.

நிச்சயமாக லயா விஷ்ணுவை காப்பாற்ற போலீஸ் ஸ்ரேசன் வந்திருக்க மாட்டாள் என்பதை அவர் முழுமையாக நம்பினார்.

அவரது எண்ணத்தை முழுமையாக மறுக்கவும் முடியாது தானே! ஏனென்றால் அந்த எழுத்து மூல கம்ளைன்ட்டில் கையொப்பம் இட்டது இவள் தானே.

எதற்காக இப்படிச் செய்தாள்???????

இவள் விஷ்ணுவுடன் அழகர்புரம் வரமுத்துமாரி அம்மன் கோயிலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பி சில நிமிடங்;களில் அவளது அக்காக்கள் இருவரும் இவளைப் பார்க்க வீட்டுக்கு வந்திருக்க வழமையைப்போல அவர்கள் வீட்டினர் யாரையும் “வாங்க” என்று அழைக்காதவன் ஒரு பார்வையுடன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

பாவம் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை அவர்கள் இருவரும் விருந்தாட வந்திருக்கவில்லை வினை விதைக்கவே வந்திருக்கின்றனர் என்று.

அவனுக்கு இன்று கராஜ் வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. அப்படி ஒரு வேலை இல்லாதிருந்திருந்தால்கூட அவர்களில் யாரையும் அவன் “வாங்க” என்றுஅழைத்திருக்கமாட்டான் என்பது ஒருபுறம் என்றால் இவர்கள் வந்தது அவனுக்கு அசௌகரியமாக இருந்தது இன்னொரு காரணம்.

வரும்போதே சிறிது நேரம் தூங்கி எழுந்தபின்தான் கராஜ்க்கு போக வேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு இவர்கள் வரவு கசந்ததில் தவறொன்றும் இல்லைத் தானே. அதுவும் அவன் வழமையாக உறங்கும் ஹாலில் தானே இவர்கள் இருந்து பேசிக்கொண்டிருப்பர்.

இவன் எப்படி அந்த இடத்தில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு படுக்க முடியும்?

வசதி சற்று வந்தாலும் தனக்கென ஒரு பைக்கை வாங்கியதைத் தவிர அவன் வேறெதற்கும் செலவு செய்ததில்லை.

இந்த நாள் வரை ஒரு தடவையேனும் தனது வீட்டிற்கு வராத அக்காக்களை “வாங்க” என்று அவன் அழையாதது சுருக்கென்று அவளது கோபத்தைத் தூண்டிவிட இன்று இவளை அழகர்புரம் அவன் அழைத்துச் சென்றதால் வந்த இளக்கம், இணக்கம் எல்லாம் பின்தள்ளப்பட்டு எனது அக்காக்களை இவன் எப்படி அவமரியாதை செய்யலாம்? என்ற சிந்தனை மட்டும் தான் அவளுக்கு பிரதானமாக முன்வந்து நின்றது.

திருமணமாகி இத்தனை நாட்களில் எத்தனை தடவை இவளது அக்காக்கள் அவனையும் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை என்ற அடிப்படையில் பார்த்திருக்கின்றார்கள் என்று ஒருதடவை நினைத்திருந்தால் இந்த கோபத்தில் எந்த நியாயமும் இல்லை என்பதை அவள் புரிந்திருப்பாள்.

“பெரிய மைசூர் மகாராஜா ராஜ்ஜிய பரிபாலனம் செய்ய கிளம்பியிட்டார்” என்று புகைந்தவள் அவனுக்கும் சேர்த்து அவர்களை “வாங்க அக்கா வாங்க------இப்போதான் தங்கைச்சி என்று ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைப்பே வந்திருக்கு-----இல்லையா??” என்று கேட்க

“அப்படி எதுவும் இல்லடா----நம்ம வாழ்க்கையில் நினையாததது ஏதோ எல்லாம் நடந்து எல்லா சூழ்நிலைகளையும் மாத்தியிட்டுதே---- உடனடியாக மீளமுடியலைடா----“என்றனர் இருவரும்.

வந்தவர்களுக்கு கிளம்புபோதிருந்த உற்சாகம் இப்போது இல்லை. அவர்கள் இருவரும் வந்த நோக்கம் அப்படி.

அதுவும் அவர்கள் கிளம்பும்வரை பேசாதிருந்த பாமா “எங்கம்மா கிளம்பிட்டீங்க?” என்று கேட்க -----இருவருக்கும் அது பெரும் சகுனத்தடையாகப்பட

“அட! என்னம்மா நீங்க ---- கோயிலுக்குத் தான் போகிறோம்” என்றனர் இருவரும் கோரஸ்ஸாக

“இன்றைக்கு என்னம்மா என் பிள்ளைகள் எல்லோரும் கோயிலுக்குப் போக என்று கிளம்புகிறீங்க?”

“லயாவும் அவ புருஷன்கூட அழகர்புரம் போயிட்டாள்”

என்னது லயாவா???----அதுவும் புருஷன்கூடவா? இருவரும் குழம்பிப்போயினர்.

அப்போ அவன்கூட ராசி ஆகிவிட்டாளா?----------எங்கள் பக்கம் எதுவும் செய்யமாட்டாளா?? இதுவே இருவரதும் சிந்தனையாக இருக்க-------

“சரிம்மா பூஜைக்கு நேரமாகுது போய்விட்டு வருகின்றோம்” என்று வெளியே போக

“ஏம்மா எதிலை போறீங்க? செந்திலின்ர ஆட்டோவைக் கூப்பிடுங்களேன்” என்றவருக்கு

“இல்லம்மா நடந்தே போகிறோம் ----பக்கம் தானே” என்றபடி கேற்றினைத் திறந்து கொண்டு இருவரும் வெளியேறியிருந்தனர். அவர்கள் இருவருக்குமே சில விடயங்களைப் பேசி முடிவெடுக்க வேண்டியிருந்தது.

ஆட்டோவில் போகும் போது பேசினால் நிச்சயமாக யாருக்காவது தெரியவந்துவிடும் என்பதால் நடந்து போவது தான் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்க அதன்படி தமக்கிடையே பேசி முடிவெடுத்தவர்கள் விஷ்ணுவின் வீட்டிற்கும் வந்திருந்தனர்.

இருவருக்கும் லயா இருந்த வீட்டைப் பார்க்க தலைசுற்றுவது போலிக்க “என்னடி இப்படி இருக்கிறாய்?”

“எப்படிக்கா?” என்று பதில் கேள்வி கேட்டவளுக்கு

“இல்ல இதை வீடு என்று சொல்லிக்கொண்டு நீ இங்கே இருக்கியே அதுதான் ஆச்சரியமாக இருக்கு”.

“அங்கே எங்க வீட்டில உன்ர அறை இந்த வீட்டைவிட பெரியதில்லையா? உன்ர அறைக்குள் இருந்த கட்டிலில் ஐந்து பேர் தாரளமாகப் படுத்துக் கொள்ளலாமே----“

“என்ன லயா எதுக்கு இந்த வீட்டிலதான் நீ இருக்க வேணும் என்று அம்மாவும் அப்பாவும் ஆசைப்பட்டாங்க?”

“பேசாம நீ வீட்டிற்கு திரும்பி வந்திடு எதுக்கு இந்த தரித்திரத்திலை புரளவேணும்? என்றனர் அவளது அக்காக்கள்.

“அக்கா நான் இனி அந்த வீட்டு வாசல் படிய மிதிக்க மாட்டேன் அப்பா சொன்னபடி நடக்கிறதாக அப்பா மேல சத்தியம் பண்ணியிருக்கிறன்”

“அப்போ நாங்கள் இரண்டுபேரும் சாகிறதா?” என்றவர்களிடம்

“என்னக்கா சொல்லுறீங்க?” என்று இவள் கேட்க

“உனக்கே தெரியும் லயா நாங்க இரண்டு பேரும் கல்யாணம் கட்டி அஞ்சு வருஷம் ஆகுது.

இரண்டுபேரோட வயித்திலயும் எந்த புழு பூச்சியையும் காணேல்ல. எங்க புகுந்த வீட்டில கேவலமா பேசுறாங்கடி”

அப்பா இந்த நிலத்தில இருந்து இவனைத் துரத்தி விட்டிட்டு எங்க வீட்டுக்காரருக்கு ஹாஸ்பிட்டல் கட்ட தாறேன் என்று சொன்னவர் தானே ----

அப்புறம் எங்க எல்லோரையும் முட்டாள் ஆக்கியிட்டு இவனுக்கு எல்லா சொத்தையும் குடுத்திட்டு எங்களை அம்போ என்று நட்டாத்தில் விட்டிட்டார்.

இது நியாயமா சொல்லு?? என்று அவர்கள் இருவரும் கேட்க எப்போதும் போல “அதானே?” என்ற மனதுக்குள் கேட்டவள் பதிலின்றி அக்காமாரை பார்த்திருக்க. இவளைத் தம்பக்கம் திசைதிருப்ப அவர்கள் இருவரும் இறுதி அஸ்திரத்தை கையில் எடுத்தனர்.

ரொம்ப பயமாக இருக்கு லயா. பிள்ளை இல்லாதத காரணம் காட்டி எங்களைத் தலை முழுகியிட்டு அடுத்த கல்யாணம் என்று போனால் என்ன செய்வது?? என்றவர்களது கேள்விக்கு அறிவு பூர்வமாக பதில் தெரிந்தும் உணர்வு பூர்வமான தீர்மானத்தை எடுக்கத் துணிந்தாள் லயா.

அக்கா பிள்ளை இல்லாததற்கு நீங்கள் மட்டும் தானா காரணம்? பிரச்சினை அவர்களிடமும் இருக்கலாம் தானே. அதுவும் டாக்டர்களாக இருப்பவர்களுக்கு இதுகூடத் தெரியாதா?

இப்போ மெடிக்கல் சயின்ஸில் இருக்கும் அட்வான்ஸ்மென்ட் தெரியாதா?

பிள்ளை இல்லாத தம்பதிகளுக்கு உதவ பல முறைகளை இருக்கே.. அதிலொன்றை ஏன் செய்து பார்க்கக்கூடாது?

அது சரி! பிள்ளை இல்லாததற்கு நிலம் என்ன காம்பன்ஷேஷனா?

விவசாய நிலத்தில் கட்டிடங்கள் கட்டலாமா???

இத்யாதி----இத்யாதி என்று எல்லாம் யோசித்து அறிவுடன் பேசக்கூடியவளை பாசம் யோசிக்கவிடாமல் செய்துவிட எப்படியாவது அக்காக்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே நினைத்தவளுக்கு விஷ்ணுவிடம் பேசி நிலத்தை வாங்கிக் கொடுக்கும் எண்ணம் வராமல் எங்களது சொத்தை இவனிடம் என்ன கேட்பது என்ற அகங்காரம் தான் முன்னுக்கு நிற்க கோர்ட்டில் கேஸ் ஃபைல் பண்ண என்று அவர்கள் கொண்டு வந்திருந்த பத்திரங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று வாசித்துப் பார்க்காமலே கையொப்பம் இட்டுக் கொடுத்தாள்.

அவர்கள் இவனை கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் சிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தது எதுவும் இவளுக்குத் தெரிந்திருக்கவில்லை

இவள் உணர்ச்சி வசப்பட்டு எடுத்த முடிவு பின்னொரு நாளில் அவள் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தாக்கத்தைக் கொண்டு வரப்போகிறது என்பதை அவள் அறியாமல் போனாள்.
 
Top