sanchumahen
New member
அன்று
விரக்தி மேலிட இனி என்னமோ கடவுள் விட்ட வழியென்று அழகனிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியபோதும் அதை அவ்வாறே கைவிட மூர்த்தியின் நியாயமான உள்ளம் விடவில்லை.
தனது தங்கையின் காதலுக்கு எதிரியாவதைப் பற்றிக் கவலைகொள்ளாதவன் மனம் முழுவதும் அவளின் வாழ்வை எப்படிக் காப்பாற்றுவதென்றே அடித்துக் கொண்டிருந்தது.
இந்த காதல் அவளை வாழவிடாது என்பதை உறுதியாக நம்பியவன் கடவுளே என் தங்கையின் வாழ்க்கையைக் காப்பாற்று என்று வேண்டிக்கொண்டான்.
ஆனால் பாவம் அவனுக்குத் தெரியவில்லை தன் உயிர் நண்பனின் வாழ்க்கையைக் காப்பாற்றும்படி தான் வேண்டியிருக்க வேண்டும் என்பது.
இவர்களின் காதல் விவகாரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த நேரம் முதல் இது கைகூடும் என்ற எந்தவிதமான நேர்மறைச் சிந்தனையும் அவனது மனதில் தோன்றாததுடன் ஏதோ தவறாகப் போவதாகவே உள்ளுணர்வு கூறிக்கொண்டிருக்க தொடர்ந்து பயிற்சியில் கவனம் செலுத்தமுடியாத நிலையில் இருந்தவன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தாயையும் அவளைத் தாக்கியுள்ள இரத்தச் சோகைகையும் எண்ணியபின் விடுப்பில் ஊர் செல்லமுடிவு செய்ததுடன் வீட்டிற்குச் செல்வதற்கு முன்னர் தான் பார்த்துப் பேசவேண்டிய நபரையும் அதன் அவசியத்தையும் மனதில் குறித்துக் கொண்டான்.
அவன் அழகர்புரம் வந்து சேர்ந்த போது நேரம் காலை 5 மணி ஆகியிருக்க மெதுவாக ஊருக்குள் வந்து கொண்டிருந்தவன் கந்தசுவாமி கோயிலை அண்மிக்க வடிவேல் அழகர் அதிகாலைப் பூஜைக்கு கோயிலை நோக்கி வந்து கொண்டிருப்பது கண்ணில்பட ஓட்டமும் நடையுமாக அவரருகில் வந்தவன் அவருக்குத் துணையாக வந்து கொண்டிருந்த சின்னானைக் கண்டதும் தயங்கியபடி “ஐயா வணக்கமுங்க” என்றான்.
அவனது வாடி வதங்கிய தோற்றமும் கவலை தோய்ந்த முகமும், தயக்கமும் வடிவேலழகரின் இரக்கத்தைத் தூண்ட “ஏன்டா தம்பி சரியா சாப்பிடுறது இல்லையோ? முகம் வாடியிருக்கு. ஏன்னையா கணக்குப்பிள்ளை அனுப்புற பணம் போதாதோ?” என்றதும்தான் தாமதம் இவன் கண்களிலிருந்து நீர் பெருக “அட! இதென்னப்பா வயசுப்பையன் பொட்டபுள்ள மாதிரி கண்ண கசக்கியிட்டு” என்று கூற
“ஐயா உங்களோடை பேசணும் என்றுதான் இந்த வழியே வந்தேனுங்க--- நீங்களே தெய்வம் மாதிரி எதிரில வார்றீங்க” என்று விம்மலை மறைத்துக்கூற ஓரளவிற்கு இவன் கூறவருவதைப் புரிந்து கொண்டவர் தன் பார்வையாலேயே சின்னானை முன்னே போகும்படி பணிக்க அவன் இவர்களைவிட்டு விலகிப்போக---
தனது ஊகம் முதல் அழகனுடனான தனது உரையாடல், அழகனின் பிடிவாதம் அனைத்தையும் எந்தவித உணர்ச்சியையும் பிரதிபலிக்காத குரலுடன் கூறி முடிக்க “என்ன மாப்பிள்ளை கேட்குறியோ தம்பி” என்றவரது ஆளுமையான குரலில்
“ஐயா!” என்று தளதளத்தவன் வேதனை நிரம்பிய விழிகளுடன் எந்தவித பதிலும் சொல்லாது அவரது முகத்தை ஏறிட்டுப் பார்க்க அந்தப் பார்வை கேட்டது இவ்வளவுதானா நீங்கள் என்னைப் புரிந்து கொண்டது என்று.
என் தங்கையும் பாவம். நீங்கள் மனம் விரும்பி சம்மதித்தால் இந்த திருமணத்தை நான் ஏற்றுக்கொள்வேன்----- என்று அவன் நினைத்த மறுகணம் அவனது மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட வடிவேல் அழகர் ----
“அழகனுக்கும் உறவுமுறையில் எங்க பேத்தியான புனிதாவிற்கும் வரும் வைகாசி விசாகத்தன்று நிச்சயம் பண்ணுறோம்--- நீயும் முடிந்தால் வந்திடு” என்று முடித்தவர் அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டு இவனை விலத்திச் செல்ல அவரையே பார்த்திருந்தவன் அருகே தெரிந்த கோபுரத்தை பார்த்திருந்தான்.
“ஆ---சொன்னாப்போல” என்று இவனை நோக்கி திரும்பி வந்தவர் “உன் பெரியமாமன் இரத்தினம் பெண்கேட்டு வந்திருக்கிறான். அவனது பெரிய பையனுக்கு உன் தங்கையை கல்யாணம் கட்டி கொடுத்திடு. அவனும் அரசாங்க உத்தியோகம் தானே!” என்றவர் திரும்பி நடக்க ------
அழகனின் தோற்றப் பொலிவிலும் வசதியிலும் மயங்கியவள் இவனைக் கட்டுவாளா? என்ற எண்ணம் எழுந்தாலும் வேறு வழியில்லையே---------என்று பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் வீட்டை நோக்கி நடைபோட்டான்.
கால்கள் தம்பாட்டில் நடையைப் போட்டாலும் மனமோ பெரியமாமன் இரத்தினத்தின் மகன் சுந்தரத்தில் வந்து நின்றது.
சுந்தரம் குணத்தில் தங்கம்தான். ஆனால் என்ன நிறந்தான் கொஞ்சம் கறுப்பு. சுமாரான தோற்றம் தான். ஆனாலும் தங்கள் வீட்டு வறுமைக்கும் பண்புகெட்ட தனத்திற்கும் சகித்துப் போகக்கூடிய மாப்பிள்ளை தானே தேவை.
சுந்தரத்திற்கு இவனது தங்கையில் உள்ள மயக்கம் மூர்த்தி அறிந்தது தான். இவள் விரும்பும் அழகனைவிட இவளை விரும்பும் சுந்தரமே இவளுக்கும் குடும்பத்திற்கும் ஏற்ற துணையாகத் தெரிய வீட்டினை அடையும் போது சுந்தரம்தான் மாப்பிள்ளை என்ற முடிவுடன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தான்.
இப்போது அழகனே அவனது பிடிவாதமான காதலோ மூர்த்தி மனதில் இல்லை. அன்று ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக நாகராசனும் வீட்டிலிருக்க இவனைக் கண்டதும் முகம் சுழித்தவன் சரி எப்படியும் துட்டு வெச்சிருப்பான் வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வர முகச்சுழிப்பு இப்போது புன்னகையாக மாறியிருந்தது.
“என்ன தம்பி இப்ப தான் வந்து போனே திரும்பவும் வந்திருக்கே!! என்ன ஆத்தாவைப் பாக்கமல் இருக்க முடியவில்லையோ?? என்ற கேள்வியுடன் மகனை வரவேற்றவன்
“ஏம்மா மவளே! அண்ணா வந்திருக்கான் காப்பி தண்ணியை கண்ணில காட்டு” என்று சொல்ல-----
காப்பியா அது எங்க இங்க இருக்கு??? எந்த நேரமும் பொண்டாட்டியோட முந்தானையைப் பிடிச்சு சுத்துறவனுக்கு என்ன புதுசா காப்பி----
பழந்தண்ணிக்கே வழியைக் காணோம் காப்பி கேக்குதோ காப்பி என்று நினைத்தவள் வெளியே வந்து பார்க்க நின்றதோ மூர்த்தி அதிர்ந்துதான் போனாள் நங்கை.
தன் அதிர்ச்சியை மறைத்தபடி “என்னண்ணே திரும்பவும் வந்திருக்கே! காப்பித்தண்ணி போடுறேன் குடி” என்றபடி உள்ளே போனவளுக்கு கை கால்கள் எல்லாம் உதறல் எடுத்தது.
கடிதக் கதையை நம்பிவிட்டான் என்று இவள் நினைத்திருந்தாலும் உள்ளார ஒரு சந்தேகம் தமையன் மேல் இருக்கத்தான் செய்தது.
மற்றவர்களைப் போலல்ல இவன் அறிவாளி. என் பேச்சை நம்பியிருப்பானா??? நம்பாமல்தான் வேவுபார்க்க வந்திருக்கிறானா?? என்று சந்தேகப்பட்டவள்.
சரிதான்! சோதிச்சுப் பாத்திடுவம் என்றபடி காப்பியுடன் முற்றத்திற்கு விரைய தான் கொண்டு வந்த பேக்கை வீட்டு திண்ணையில் வைத்துவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தவனிடம் “என்னண்ணே விசேஷம்? ஊருக்குப் போனா வரமாட்டாய். இப்போ அடிக்கடி வர்றே” என்று போட்டு வாங்க முனைய—
“விசேஷம் தான்டா அம்மா” என்றவன் “எங்க வீட்டில் இல்லை. பெரியவீட்டில்” என்றான் தங்கையின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தபடி.
அவன் எதிர்பார்த்தபடி அவள் முகம் அவளையும் மீறி கலவரத்தைக் காட்ட இங்கே நம்ம வீட்டிலையும் விசேஷம் வந்திடும் போல என்று சொன்னவன் நாகராசனைப் பார்த்து
“பெரிய மாமா பொண்ணு கேட்டு வந்தார் போல ------- ரொம்ப நல்லதா போச்சு நீ பேசு அப்பா------ நம்மளால முடிஞ்ச சீரை செய்திடலாம்” என்று இவன் தொடர இவன் பேசியதெல்லாவற்றையும் காதில் விழுத்தாதவள் மனதில் விசேஷம் எங்க வீட்டில் இல்லை----- பெரிய வீட்டில் எ;னறவார்த்தைகளே ஓடிக்கொண்டிருக்க வழமைபோல மனம் பதகளிக்கத் தொடங்க இவன் பேசியவற்றையெல்லாம் புறந்தள்ளியபடி பெரிய வீட்டில் என்னண்ணா விசேஷம்? என்றாள் சாதாரண குரலில்.
இவள் சாதாரணமாக வினாவினாலும் இவளையும் மீறி குரல் பதட்டத்தைக் காண்பிக்க வேதனையுடன் தங்கையைப் பார்த்தவன் நாட்பட்ட புண்ணுக்கு அறுவைச் சிகிச்சை அவசியம் என்று உணர்ந்தவன் சரியான வார்த்தைகளைக் கோர்த்து பேசத் தொடங்கினான்.
இவன் பேசும் வார்த்தைகளின் விளைவுகளை அறியாதவன் தங்கையைச் சூழ்ந்துள்ள மாயவலையை அறுக்க முயற்சித்தான்.
“அட! உனக்கு தெரியாதா? நம்ம சின்னவருக்கு நிச்சயம் பண்ணுறாங்கம்மா இன்னும் பத்து நாட்களில்” என்றான் தகவலாக.
தமையன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் “ஏது அந்த கிழட்டு பிசாசு சொல்லிச்சோ?” என்று ஏளனமாக இவள் கேட்க
“ஏய்! என்னம்மா நீ பெரியவரை இப்படி பேசுறாய்? இது சரியில்லையம்மா.” என்று சொல்ல இன்னும் ஆவேசம் கொண்டவள் தகவல் சொன்னவனையே கொல்லும் ஆத்திரத்தில் “பாத்தயாண்ணே!” என்று கணேசனைத் துணைக்கு அழைத்தவள் “உங்களுக்கு சூடு போட்ட கிழட்டு நரி பெரியவராம்!” என்று திசைமாற்றி அம்பை செலுத்த---
முதலில் ஆத்திரம் வந்தாலும் தங்கையின் இனம் புரியாத வெறுப்பில் உசாரான கணேசன் “ஏண்ணே! உண்மையாகவே அந்த அழுக்கனுக்கு கலியாணமோ?” என்று கேட்க----அவனுக்குதான் முடிக்கவேண்டிய கணக்கு பாக்கியிருக்கே.
அழகனைத் தம்பி அழுக்கன் என்றது கோபத்தை தந்தாலும் தங்கை வெளிப்படுத்திய கோபத்தில் நிதானித்த மூர்த்தி கதையைத் திசைமாறவிடாது சரியான திசையில் கொண்டு செல்ல முடிவுசெய்து
“ஆமாடா கணேசா” என்று பதிலைத் தந்தவனிடம் “ஏன்ணே அந்த கிழம் தான் உனக்கு தகவல் சொல்லிச்சோ” என்று கேட்டு வைக்க
இவர்கள் வடிவேல் அழகர்மீது காட்டும் குரோதத்தை குறைக்க எண்ணியவன் “இல்லடா கணேசா சின்னவர்தான் சொன்னார்”-----அவருடைய மாமா மகள் புனிதாவைத்தான் நிச்சயம் பண்ணுறாங்க என்று இவன் சொல்லி முடிக்க
“பொய்” என்று தன்னை மறந்து கத்தியவள் “என்ரை வேல் அத்தான் என்னை ஏமாத்த மாட்டார்” என்றபடி இவனுக்கு கொண்டு வந்த காப்பியை தம்ளருடன் சேர்த்து சுவரில் விட்டெறிந்தாள்.
நாகராசனுக்கும் கணேசனுக்கும் இவள் காப்பித் தண்ணியை விட்டெறிந்ததுகூட அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை இவள் சொன்ன “வேல் அத்தான்” என்ற வார்த்தையில் இருவரும் உச்சக்கட்ட அதிர்ச்சியை வெளிப்படுத்த அந்த அதிர்ச்சியை இவர்களுடன் சேர்ந்து மாணிக்கராசனும் அனுபவித்தான்.
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அக்காவை அடிக்கடி வந்து பார்த்துச் செல்லும் மாணிக்கராசன் அன்றும் வர பவதி சொன்ன வார்த்தைகள் அவனையும் ஊடுருவி ஒருகணம் உறைய வைத்தாலும் பெரியவீட்டு எசமானியம்மாவாக மருமகளை ஏன் கொண்டு வரக்கூடாது என்று எண்ணியவன் சில பல மனக்கணக்குகளைப் போட
தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை சிறப்பாக நடத்தி முடிக்க முடிவு செய்த மூர்த்தி “என்னது வேல் அத்தானா?” என்று கேட்டதுடன் “எப்போது அவங்க உனக்கு சொந்தக்காரங்க ஆனாங்க----எங்களுக்குத் தெரியாதே!” என்று சொல்ல
“இப்ப தெரிஞ்சிட்டுதில்ல அடங்கி இரு. என்ன எசமான விசுவாசத்தில என்ரை கல்யாணத்தை நிற்பாட்ட பாக்குறீயோ?” என்று இவள் குரோதத்துடன் வினாவ
“முட்டாள் மாதிரி பேசாத----உன்னை கட்டுறது என்று சின்னவர் சொன்னாரா?? சொன்னவர் எப்படி அவர்ட மச்சினிச்சிய கட்ட சம்மதிச்சவர்?? என்று தொடர்ந்து கேட்க
“அவர் என்னைத்தவிர யாரையும் கட்டமாட்டார் எனக்குத் தெரியும்” என்று தொடர
“பைத்தியமாடி நீ? பெரியவீட்டு ஆம்பளடி அவன். பணக்காரன் புத்தி உனக்குத் தெரியாது? என்று கத்திய நாகராசன் ஓங்கி மகளின் கன்னத்தில் ஒன்றுவிட ஒரு கணம் அதிர்ந்து நின்றவள்
தூ—நீயெல்லாம் ஒரு தகப்பன் ----கல்யாணவயசில ஒரு பொண்ண வீட்டில வைச்சுக்கொண்டு-----சீய்ய்ய்-----
அவள் சொல்லாது விட்ட வார்த்தைகளில் கொதித்துப் போனவன் மீண்டும் அவளை அடிக்க வர இடையில் பாய்ந்து பிடித்துக் கொண்ட மாணிக்கராசன் “அட நீ என்ன மச்சான் புசுக்கு புசுக்கென்று கையை நீட்டிக்கொண்டு.
புள்ளயின்ரை ஆசையில என்ன மச்சான் தப்பு அவன் அப்படி சுலபமாக ஏமாத்திப் போட்டுப் போக விட்டிருவானா இந்த மாமன்?? என்று மார்தட்ட
“ஓஹ்! விடமாட்டியோ? அப்போ என்ன செய்யுறதா உத்தேசம்?” என்று நக்கலாகக் கேட்டது சாட்சாத் கணேசனே தான்
தான் ஒன்றை நினைத்து தொடக்கி விட அது இன்னொன்றாக மாறிப் போய்க்கொண்டிருக்க தான் தலையிடுவதற்கான சரியான சந்தர்ப்பத்தை மூர்த்தி எதிர்பார்த்திருக்க இவனுக்கு இடம் கொடுக்காது இவனது எண்ணப்போக்கை ஒட்டியே பேச்சுவார்த்தையைக் கொண்டு சென்ற கணேசனை "என்னடா நடக்குதிங்க" என்று பார்தான் மூர்த்தி.
அவனுக்கு ஒவ்வொருவரதும் எண்ணப்போக்கையும் படிக்க வேண்டியிருந்தது. அழகனைத் திருமணம் செய்து தன் தங்கை நிம்மதியாக இருக்க மாட்டாள் என்ற எண்ணம் இவர்களது பேச்சுக்களில் வலுப்பெற தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை
பஞ்சாயத்தில் வடிவேல் அழகர் குடும்பத்தை நிறுத்தி அழகனைத் தலைகுனிய வைத்து மருமகள் கழுத்தில் தாலிகட்ட வைக்க வேண்டும் என்ற மாணிக்கராசனின் கூற்றில் பதட்டம் தொற்றிக் கொண்டது.
அட பாவிகளா? அவனுக்கு இருக்கிற மயக்கத்திற்கு பஞ்சாயத்தெல்லாம் எதுக்கடா?? அவன் தாலிக்கயிறு இல்லையென்றாலும் அரைஞாண் கயிற்றைக்கூட இவள் கழுத்தில் கட்டுவான்டா! என்று இவன் நினைக்க
ஆத்திரத்தில் கூச்சலிட்ட கணேசன் "என்ன மாமா புரிஞ்சுதான் பேசுறியா? பஞ்சாயத்தில என்ன சொல்லுவாய்?? இவள் என்ன முழுகாமலா இருக்காள்? சும்மா காதல் தானே! ஆதாரம் கேட்டா என்ன செய்வாய்? சாட்சிக்கு யாரை கூட்டிட்டு போவாய்?? என்ரை தங்கைச்சியை மருவாதி கெடுக்கப் பாக்குறியோ?" என்று குதித்து பாசமலர் சிவாஜிக்கே போட்டிக்குப் போனவனைப் பார்த்து ஆ---வென்று வாயைப் பிளக்கவேண்டிய நிர்ப்பந்தம் மூர்த்திக்கு ஏற்பட—-----
ஆக இவனுக்கும் அழகன் இந்த வீட்டிற்கு மாப்பிள்ளையாக வருவதில் இஷ்டமில்லை என்று புரிந்த போதிலும் அழகர் குடும்பத்தை வேரறுக்க வெஞ்சினம் கொண்டவன் பேச்சுத்தான் அது வென்று புரியவில்லை.
கணேசனது பேச்சை ஆமோதிக்க வேண்டிய கட்டாயத்தைப் புரிந்து கொண்ட மூர்த்தி "உனக்கென்ன மாமா வாய்புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோ என்று சகட்டு மேனிக்கு பேசுவாய் அதுக்குப் பிறகு இவளை யார் கட்டுவாங்க? பஞ்சாயத்திற்கு போய் எல்லாம் வெல்ல முடியாது மாமா."
பெரியமாமா மகன் சுந்தரத்திற்கு தங்கைச்சியைக் கட்டிக்கொடுத்து சோலியை முடிக்காமல் சும்மா எதுக்கு வீண்பேச்சு என்றவனைக் குரோதமாகப் பார்த்த பவதி ஓஹ்! சரியாக காய் நகர்த்தி என்னைப் படுகுழியில தள்ளப்பார்க்கிறியே பாவி உனக்கே இது நல்லா இருக்காடா? என்று மனதில் கறுவியவள் அழகனைப்போல வசதியும் அழகும் உள்ளவனை எப்படி இழப்பது என்று தவித்ததும் அன்றி இந்த நிச்சயதார்த்தம் எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்றும் அறியவேண்டும் என்று நினைத்துக் கொண்டவளின் மறுநாள் பொழுது அவளுக்கானதாய் விடியாமல் போக அழகனைப் பழிவாங்கியே தீர வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.
அழகன்தான் பாவம் தனக்கெதிராக நடக்கும் எதுவும் தெரியாமல் மனதுக்கினியவளுடன் கனவில் டுயட் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தான்
இன்று
மனம் முழுவதும் சந்தோஷத்தில் நிரம்பி வழிய தன்னைமீறி மொபைலில் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தவளது பேச்சு அவன் காதில் நுழைந்த அந்த நொடி அவன் முகத்தில் அர்த்தம் நிரம்பிய புன்னகை வந்து போனது.
முதலில் தன் நட்பு வட்டத்தினுள் தனது வெற்றியைப் பகிர்ந்து கொண்டவள் தாய்க்கு அழைத்துச் சொல்ல வீட்டின் லேண்ட் லைனுக்கு முயற்சிக்க இவளது பெரியக்கா ஃபோனை எடுத்தவள் பேசுவது லயா என்று உணர்ந்த உடனேயே தொடர்பை துண்டித்திருந்தாள்.
அக்காவின் கோபம் புரியாமலில்லை ஆனாலும் அம்மாவிற்குச் சொல்ல வேண்டுமே! அதுவும் அவள் அப்பாவின் கனவை மட்டுமல்ல தனது தாத்தாவின் கனவையும் நோக்கி தனது இரண்டாவது அடியை எடுத்து வைத்துவிட்டாள் என்பதை.
ஆனந்தபுரத்தில் உள்ள அவளின் தாத்தாவினது மோட்டார் வாகனங்களுக்கு உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யவென ஆரம்பிக்கப்பட்டு ஏதேதோ காரணங்களால் கைவிடப்பட்ட தொழிற்சாலையை இன்னும் இரண்டு வருடத்துக்குள் மீண்டும் செயற்பட வைக்கப்போகிறாளே. அது சாதாரண விஷயமா என்ன??
தலைகால் புரியாத சந்தோசத்தில் மீண்டும் மீண்டும் அம்மாவின் வீட்டு லேண்ட் லைனுக்கு முயற்சிக்க அதனது ரிசீவர் வெளியில் எடுத்து வைக்கப்பட்டிருக்க லைன் போகாமல் பிஸி சத்தம் வர அம்மாவின் மொபைலுக்கு அழைத்து என்னம்மா நீங்க---எத்தனைவாட்டி கூப்பிடுறேன் -----பெரியக்கா கால் அட்டன்ட் பண்ணிட்டு பேசவே இல்லம்மா-----ஃபோனை வேற கட் பண்ணிட்டாங்க என்றுகூற
“ஏன் லயா ஏதாவது பிரச்சினையா?” என்று சுரத்தில்லாமல் கேட்டார் பாமதி.
“ஹையோ அம்மா! பிரச்சினை என்றால் தான் உங்களைக் கூப்பிடணுமா??? என்னம்மா நீங்க? இது ரொம்ப சந்தோசமான விஷயம்” என்று இவள் சொல்ல
“சந்தோசமான விஷயமா??” என்று மீண்டும் கேட்டவர் “சுருக்கா சொல்லு லயா” என்று சலித்தபடி கேட்க
“ஏம்மா உங்க பேச்சு ஒரு மாதிரி இருக்கு? உங்க உடம்புக்கு முடியாமல் இருக்கா?” என்று பதற்றத்துடன் கேட்க
இவளது பதட்டம் அவரின் கண்களில் நீரை நிரப்ப இவளைப் பற்றித் தெரிந்ததால் இவளிடம் எதுவும் சொல்ல முனையாத அவர் "இல்லம்மா நான் ஊருக்கு புறப்படுறேன்" என்றதுடன் இவள் அடுத்த கேள்வியைக் கேட்க முன்னரே குலதெய்வம் கோயிலுக்கு போக வேண்டும் என்று முடித்ததுடன் “சமைத்துச் சாப்பிடு லயா நான் திரும்பிவர நாளாகும். தென்னந்தோட்டம் எல்லாம் பார்க்கணும் உரம் போடணும்” என்று தொடர்ந்தவரிடம்
“என்னம்மா தனிய போறேன் என்றீங்க” என்று இவள் வருத்தப்பட “நம்ம ஊருக்குத்தானே போறேன். அங்க சக்தி மாமா குடும்பம் இருக்கேம்மா என்ன பயம்” என்று முடித்தவரிடம்
தானும் இரு நண்பர்களும் சேர்ந்து செய்த ப்ரஜெக்ட்டை ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டு தங்கள் மூவருக்கும் இரண்டு வருடம் பயிற்சியளிக்க முன்வந்துள்ளதைக் குறிப்பிட்டவள் ஜப்பானில் ஒரு வருட பயிற்சி முடித்த பின்னர் தங்களது பெர்போமன்ஸ் மதிப்பீட்டின் புள்ளிகளைப் பொறுத்து தாய்வான் அல்லது ஹாங்ஹாங்கில் தொடர் பயிற்சிக்கு தங்களை அனுமதிப்பர் என்றும் கூறியவள் நாளை மறுதினம் நேர்முகப் பரீட்சை ஒன்று நடைபெற உள்ளதாகவும் ஜப்பானியர்கள் ரைம் மனேஜ்மன்ட்டில் ரொம்ப கறாரானவர்கள் என்பதால் அன்றைய தினம் மாலையில் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு தான் காலையிலேயே கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றும்கூறி வைக்க இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு ஹாலில் நின்றிருந்த விஷ்ணு ஏளனமாகச் சிரித்துக் கொண்டான்.
இவள் சொன்னவற்றையெல்லாம் கேட்டு மகிழும் நிலையில் பாமதி இருக்கவில்லை. ஊருக்குச் செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் நின்று கொண்ருந்தவருக்கு ஒரு மணிக்கு மேலாகக் காத்துக் கொண்டிருந்தும் பேரூந்து எதுவும் கிடைக்கவில்லை.
ஆளும் அரசியல் கட்சியின் மாநாடு ஒன்று நடந்து கொண்டிருக்க பெரும்பாலான தனியார் மற்றும் அரச பேரூந்துகள் அந்த மார்க்கத்தில் தொண்டர்களை அழைத்துச் செல்ல தூர இடங்களுக்கான பேரூந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
தனக்கு இப்படியொரு நிலைவரும் என்று அவர் கனவிலும் நினைத்ததில்லை. அதுவும் கணவர் இறந்த ஒருவருடத்திற்குள்ளேயே.
சுப்பிரமணியன் அவரை ராணிபோல தான் வைத்திருந்தார். பேரூந்து பயணம் எல்லாம் அவரது திருமணத்தின் பின் இல்லவே இல்லை.
அப்படியொரு பயணம் மீண்டும் வாழ்க்கையில் வரும் என்ற எண்ணமே அவர் மனதில் எங்குமே இல்லை.
அவ்வளவு வசதி. கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அவரது கணவன் அதிபதியாக இருந்தார். படுபாவி ----எங்கிருந்தோ எங்கள் குடும்பத்தை நாசம் பண்ண என்று வந்திருக்கிறான். மனம் குமுறியது குருவப்பாவையும் விஷ்ணுவையும் நினைத்த மட்டில்.
என் பொண்ணுக்கு இவனை மணக்கும் தலையெழுத்தை என் கணவரே எழுத அந்த குருவும் அவனது பேச்சுக்களும்தான் காரணம்.
நினைக்க நினைக்க ஆறவில்லை அவருக்கு. இன்று மகள் அடைந்திருக்கும் சாதனையைக் காண கணவர் இருந்திருக்க வேண்டும்------என்ன செய்வது??? அந்த ஆனந்தபுரம் தொழிற்சாலையைத் திறக்க எவ்வளவோ முயன்றும் அவரால் முடியாமல் போய்விட்டதே!!
பாவி அத்தனை சொத்தையும் தன் பேரனுக்கு என்று எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டான் என்று கணவரின் குடும்பத்தவர்களை மனதார சபித்தவருக்கு இன்னமும்கூட தாம் செய்த வினைதான் தங்களை உறுத்துகின்றது என்பது தெரியவில்லை.
இன்று சொந்த ஊரை நோக்கி தான் மூட்டை முடிச்சுகளுடன் செல்ல யாருடைய சாபமோ அல்லது பாவமோ காரணமாக இருக்குமோ என்ற உறுத்தல்கூட அவருக்கு இல்லை.
மருமகன்களது பக்கம் நிறையவே நியாயம் இருப்பதாகவே அவருக்குப் பட்டது. அந்த நிலத்தை அவர் இருக்கும் போதே கொடுத்திருந்தால் இன்று சொந்த ஊரில் போய் வாழும் நிலை அவருக்கு வந்திருக்காதே!
பாவம் அவரும் எவ்வளவோ முயன்றார் தானே ஆனால் முடியாமல்தான் போய்விட்டதே. எல்லா நிலைமைகளையும் தொடக்கத்திலிருந்து மூத்த மருமகன்களிடம் சொல்லிவிடலாம் இந்த நிலையைத் தவிர்த்துவிடலாம் என்றுதான் அவர் நினைத்திருந்தார்.
ஆனால் சுப்பிரமணியன் சாகும் தறுவாயில் அவரிடம் வாங்கிய சத்தியம் அவரின் வாயைக் கட்டிப்போட்டுவிட மகள்களின் வாழ்க்கையை காப்பாற்ற வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலை அவருக்கு வந்திருந்தது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் லயாவினது வீட்டிலிருந்து திரும்பி வந்தவருக்கு மகள்கள் இருவரும் முகம் கொடுத்துப் பேசாதது வருத்தத்தை தந்தாலும் எல்லாவற்றையும் கடந்துவிடலாம் என்று அவர் நினைத்திருக்க அப்படி எதனையும் சுலபமாகக் கடந்துவிட முடியாது என்பதை மகள்களும் மருமகன்களும் உணர்த்திவிட்டிருந்தனர்.
தனது மூன்று பெண்குழந்தைகளும் அந்த வீட்டில் ஒன்றாக குடும்பத்துடன் வாழவேண்டும் என்ற தீராத ஆசையில் வரன் பார்க்கும்போதே அந்த ஒன்றை நிபந்தனையாக வைத்து மூத்த இரு மகள்களுக்கும் வீட்டோடு மாப்பிள்ளைகளைப் பார்த்து திருமணம் முடித்திருந்தவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் அவர் கேட்ட அந்த ஒரு நிபந்தனைக்கு சாதாரணநிலையில் இருந்த இரு மாப்பிள்ளை வீட்டாரையும் சம்மதிக்க வைத்திருந்தது.
எப்படியிருந்தாலும் பல தலைமுறைக்கு வரும் கணக்கிலடங்கா பரம்பரைச் சொத்துக்கள் மூன்றாகப் பிரிந்த்தாலும் கணிசமாக ஒவ்வொருவருக்கும் தேறுமே. இது இவர்களின் நினைவாக இருக்க நடந்ததோ வேறாகிப் போனது.
சுப்பிரமணியனுக்கு ஒரு அக்கா இருந்ததே விஷ்ணு முதன் முதலாக அவரது ஹாட்வெயர் ஸ்டோரினுள் வந்தபோது தெரிந்ததென்றால் லயாவை அவனுக்குத் திருமணம் முடிக்க முன்னரே அவர் சொத்துக்கள் அனைத்தையும் அவன் பெயரில் எழுதி தங்களை ஒரே நாளில் சாதாரணநிலைக்குத் தள்ளியது எதிர்பாராதது.
அதுவும் ஹாஸ்பிட்டல் கட்டவென்று நினைத்திருந்த நிலத்தை கையகப்படுத்த எடுத்த முயற்சிக்கு பாமதி முட்டுக்கட்டை போட்டது உச்சக்கட்ட கோபத்தைதர மருமகன்கள் இருவரும் போலீஸ் நிலையத்திலிருந்து வந்ததினமே வீட்டை விட்டு வெளியேறியதுடன் பாமதி இருக்கும் இடத்தில் வந்து வாழவதற்கில்லை என்றதுடன் மகள்களையும் அவர்களது வீட்டில் ஏற்க மறுத்தது இவர் எதிர்பாராதது.
இரண்டு நாட்களாக இவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய மகள்களை வாழாவெட்டிகளாக்க முடியாதவர் வீட்டை விட்டு வெளியேறும் முடிவிற்கு வந்திருந்தார். கணவர் தனக்கென ஊரில் கட்டிய வீட்டில் போய் வாழ முடிவுசெய்து யாரிடமும் சொல்லாது வீட்டைவிட்டும் வெளியேறியிருந்தார்.
பாவம் அவருக்கு இன்னமுமே கர்மாவின் பலம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அன்று வெறும் துணிப்பையில் ஓரிரு உடைகளுடன் மகனைக் கையில் பிடித்துக்கொண்டு அனாதரவாக வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவள் நினைவுக்கு வராமலா போயிருப்பாள்??? ஆக இவர் இன்னும் கரைக்க வேண்டிய பாவக்கணக்கு மீதம் இருக்கிறதுதான் போலும்.
பாமதியின் நிலை இவ்வாறிருக்க லயாவோ நேர்முகத்தேர்வை எண்ணி எண்ணி தூக்கம் வராது கட்டிலில் இங்கும் அங்கும் புரண்டு கொண்டிருந்தவள் எழுந்து தனது மொபைலில் முடிந்தவரை சமூக வலைதளங்களில் ஊலாவி முடித்து சார்ஜ் குறைந்ததற்கான அறிவிப்பு வந்த பின்னர் தான் அதனைக் கைவிட்டு மீண்டும் தூங்கும் முயற்சியில் இறங்கி முயன்று ஜாமம் தாண்டிய பின்னரே தூங்கத் தொடங்கினாள்.
அவளது உறக்கத்திற்கு தடா போடுவது போல மோட்டார் வேலை செய்யும் சத்தம் காதில் விழ எழுந்து வெளியில் வந்தவளின் கண்களுக்கு புலர்ந்தும் புலராத அந்த அதிகாலை வேளையில் வாழைமரங்களுக்கு நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்தவன் பட்டான்.
ஷப்பா! தாங்க முடியலடா சாமி!! கடமை கண்ணாயிரம் தன்ர றூட்டீன் வேர்க்குக்கு வந்திட்டார்!!! என்று நினைத்தபடி உள்ளே சென்று நேர் முகத்தேர்விற்காக தான் எடுத்து வைத்திருக்கும் சர்டிபிக்கட்டுகளை மீண்டும் ஒரு முறை சரிபார்த்தவள் சார்ஜ் குறைவாக இருந்த மடிகணினியை எடுத்துவந்து அறைக்கு வெளியில் அவன் தனது மடிகணினி உட்பட இதர தொழில் சார்ந்த ஆவணங்களை வைக்கும் மேசையில் வைத்து சார்ஜ் போட்டாள்.
அந்த இடத்திலிருந்தே தனது பென்டிரைவில் தான் செய்யவேண்டிய பிரசண்ட்டேஷனை பதிவு செய்து ஷிலைட்ஸை ஓடவிட்டுப் பார்த்தவள் நேர்முகத் தேர்விற்கு எடுத்துச் செல்லவேண்டிய ஃபைல்களையும் வழமையைப் போல அந்த மேசைமீதே கொண்டு வந்து வைத்தாள்.
எப்படியும் காலை ஏழு மணிக்கே வீட்டைவிட்டு கிளம்பிவிட வேண்டும் என்று நினைத்து தனது வேலைகள் ஒவ்வொன்றையும் முடித்தவளுக்கு இன்று அம்மா வீட்டிலிருந்து காலையுணவு வராது என்பது நினைவு வர தனக்கு மட்டும் டீயைத் தயாரித்து எடுத்துச் சென்று வீட்டின் முன்புறம் இருந்த அவனது சிம்மாசனம் என்று இவள் மனதினுள் கேலி செய்யும் சீமெந்து இருக்கையில் அமர்ந்து கொண்டு அந்த சுமாரான டீயை ரசித்துக் குடித்தாள்.
இரவு முழுவதும் தூக்கம் தொலைந்து போயிருந்ததால் மொபைலை தான் நோண்டிக் கொண்டிருந்தது நினைவு வர
ஹையோடா! சார்ஜ் தீர்ந்து போயிருந்ததே மறந்து போச்சே என்று மனதில் அலறிக்கொண்டு மொபைலையும் வெளி மேசையிலேயே சார்ஜ் போட்டவள் தனது உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.
இவளது ஒவ்வொரு அசைவையும் அவதானித்தபடி இருந்தவனையோ அவன் இன்று எதற்காக மெஸ்க்கு டீ குடிப்பதற்குப் போகாமலிருக்கிறான் என்பதையோ கவனிக்காதவள் உடை மாற்றுவதற்காக அறையினுள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டாள்.
நேர்முகத் தேர்விற்குரிய உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்த கண்ணாடியில் பார்த்து தன் தோற்றத்தில் திருப்தி கொண்டவள் கதவைத் திறந்து வெளியில் வர முயற்சித்தாள்.
ஆம்! முயற்சித்தாள். அவளால் முயற்சிக்க மட்டும் தான் முடிந்திருந்தது. ஏனென்றால் கதவு வெளியில் பூட்டப்பட்டிருந்தது. அவளுக்குத் தெரியும் வெளியில் அந்தக் கதவைப் பூட்டினால் உள்ளிருந்து திறக்க முடியாதென்பது.
கதவைத் திறக்க அவள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய பதட்டமானவள் கடிகாரத்தைப் பார்க்க நேரம் விரைந்து கொண்டிருப்பது புரிந்தது.
7 மணிக்கு வரும் பேரூந்தை தவறவிட்டால் நிச்சயமாக அவள் திட்டமிட்டபடி எதனையும் செய்ய முடியாதே!!
கடவுளே! நேர்முகத் தேர்விற்கு முன்னர் அவளது குழுவினருடனும் புரொபஸருடனும் கலந்துரையாடல் உள்ளதே. கட்டாயமாக அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று புரொபஸர் சொன்னாரே!
விஷ்ணு----- விஷ்ணு என்று அழைத்தவள் பதில் இல்லாமல் போக விஷ்ணு கதவைத் திற! என்று இவள் மீண்டும் மீண்டும் கதவைத் தட்டிக்கொண்டு அவனை அழைக்க அவன் வரவுமில்லை. கதவைத் திறக்கவும் இல்லை. ஏன் அவன் வீட்டிலேயே இல்லை.
மொபைல் உட்பட அனைத்தும் ஹோலில் இருக்க யாருடனும் தொடர்பு கொள்ள முடியாதிருந்தவள் தன்னைவிட்டு விலகிப் போய்க்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தை எண்ணி எண்ணி இதயம் வெடிக்க வாய்விட்டுக் கதறி அழுதாள்.
ப்ளீஸ் விஷ்ணு கதவைத்திற தெரியாம தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சுக்கோ விஷ்ணு. கதவைத் திற ---இனி ஒரு தடவை இப்டி செய்யமாட்டேன்------ ப்ளீஸ் விஷ்ணு------- ப்ளீஸ் விஷ்ணு-----
தோட்டவெளியில் பயிரிடப் பட்டிருந்த சிறுதானியங்களது அறுவடை முடிந்திருந்ததாலும் இவனது வீடு இரண்டு ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் இருந்ததாலும் இவளது குரல் யாரையும் சென்றடையவில்லை.
மனம் இரங்க வேண்டியவனோ தனது மொபைலில் வீட்டில் இருந்த CCTV கமெராக்களின் இயக்கத்தைப் பார்த்தபடி மெஸ்ஸில் வெகுநிதானமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
Last edited: