கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி ---+அது- அத்தியாயம் 22

sanchumahen

New member
அன்று

“அம்மா!” என்று ஓடிவந்த மருமகளை அன்பு ததும்ப பார்த்தார் வள்ளியம்மை. இது தான் தெய்வ சங்கல்பம் என்பதா? தான் பெரிய பெண் ஆனதை என்னிடம் முதலில் சொல்லி சடங்குகளைச் செய்ய வைத்து என்மகனின் முகத்தில் முதன் முதலில் விழித்து இன்று என் மருமகள்--- என் வீட்டு மகாலக்ஷ்மி இந்த பூரணி.

படிப்பு இல்லை! பணம் இல்லை!! அன்பு!!!-----அவள் மனதில் தன் மகன்மீது கொண்டிருக்கும் அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பதை அந்த தாய் மனது அறிந்து கொண்டது.

தாய் மட்டும் இல்லை தந்தையும் தான். ஆரம்பத்தில் கந்தவேள் அழகருக்கு தன்மகனைப் பார்த்துக் கொள்ள வந்த வேலைக்காரி என்ற மதிப்பு மட்டும் தான் அவள்மீது இருந்தது.

இன்றோ அவளது அறியாமை நிரம்பிய விழிகள், அப்பாவித்தனமான பேச்சு, அழகனைப் பேணவென்றே பிறப்பெடுத்து வந்தது போல் நடத்தை அப்பப்பா குருடனுக்குக்கூட புரியும் அவளது வெள்ளை மனம்--- இந்த மாமனுக்குப் புரியாதா என்ன?

ஆனாலும் அவள் தன்மனதில் அழகனின் மனைவி என்ற சிம்மாசனத்தில் இல்லை. கையில் ஒரு கிண்ணத்தில் ஏதோ நாட்டு வைத்தியர் கொடுத்த எண்ணெய்யை வைத்திருந்தவள் தன் கணவன் அருகில் வந்தாள்.

“சின்னவரே! இந்த துண்டைக் கட்டிக்கிட்டு இப்டி வந்து உக்காருங்க!” என்று ஒரு முக்காலியை எடுத்து வைத்தாள். இவள் வந்த ஆறுமாதங்களில் இவன் அவளிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை. அவளும் அதைக் கண்டு கொண்டதில்லை. அவனுக்கும் சேர்த்து இவளே பேசிக்கொள்வாள்.

சிலசமயம் கேள்விகளை அவனிடம் கேட்டு அவன் சார்பில் இவளே பதிலையும் சொல்லிவிட முதலில் அசுவாரஸ்யமாக அவள் பேச்சைக் காதில் போடாமல் இருந்தவன் இப்போது அவளின் பேச்சை ரசிக்கத் தொடங்கியிருந்தான். ஆனாலும் பதில் பேசமாட்டான்.

அவன் தனது பேச்சை ரசிக்கின்றான் என்பதைக்கூட உணரும் அளவில் அவள் இல்லை. ஒரு வேலைக்காரியின் பேச்சுக்கு பதில் பேசுவாங்களா? என்ன??

சில சமயம் அவன் பேசாமல் இவளது வாயைப் பார்த்துக் கொண்டிருக்க என்ன கிறுகச்சி போல கூவிக்கிறனா? என்று அதற்கும் சங்கடப்பட்டுக் கொள்வாள்.

“எதுக்கு பேசாம இருக்கீங்க? வெரசா வந்து உக்காருங்க! எண்ணெய் ஆறிடப்போகுது. மூலிகை எண்ணெய் ஆறினா அதுல விசயமில்ல” அவன் இவளது எந்த பேச்சுக்கும் பதிலின்றி இருக்க; ஐயா! ---ஐயா!---என்று கந்தவேள் அழகரை அழைக்க வெளியில் வந்தவரிடம் “பாருங்கையா! சின்னவர சொல்ல சொல்ல கேளாம சின்ன புள்ளயாட்டம் இருக்கார்-----இந்த எண்ணெய்யை ஒடம்பு பூரா பூசி உறவிட்டா இந்த தழும்பு எல்லாம் காணம போயிடும்” என்றவளது பேச்சை கேட்டும் இவன் ஏதும் செய்யாதிருக்க “தம்பி வந்து உக்காருங்க-----அவ நம்பிக்கையை எதுக்கு கெடுக்கணும்?” என்றவரிடம் “அவள போகச் சொல்லுங்க!” என்றபடி துண்டை வாங்கியவன் இவள் அந்த இடத்தைவிட்டு அகலும் வரை தனது மேல் சட்டையை கழற்றினான் இல்லை.

உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்தாலும் சிற்சில இடங்களில் அவை குறைவாக இருந்தன. அழகன் என்பது மாறி குரூபியாகிப் போனாலும் ஒரு இளம் பெண்முன் துண்டுடன் இருக்க கூச்சமாக அவனுக்கு இருக்க அதனைப் புரிந்து கொண்டவள் அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தாள்.

அவள் இங்கு வந்த சில நாட்களிலேயே அவனது வாழ்க்கைமுறை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியிருந்தது.

அறை முழுவதும் தூசு, தும்பு இல்லாமல் சுத்தமாக இருக்க அவன் படுக்கும் மெத்தை மற்றும் தலையணை உறைகள் தினமும் மாற்றப்பட்டு திரைச் சீலைகளும் அடிக்கடி மாற்றப்பட்டு புதியனவாக இருக்க அந்த அறையை பார்க்கப் பார்க்க மனதிற்கு பாந்தமாக இருந்தது.

இவையெல்லாம் அவனுக்கு உற்சாகத்தை கொண்டுவரும் என்று பேச்சுவாக்கில் அவனை பரிசோதிக்க வரும் டாக்டர் கந்தவேள் அழகரிடம் சொன்னவை. அதைக் கேட்டவள் இம்மியளவும் பிசகாமல் கடைப்பிடிக்க தொடங்கியிருந்தாள் .பூரணி ஏற்படுத்திய மாற்றங்களால் அவனது உற்சாகம் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு வர தொடங்கியிருந்தது.

இது நாள் வரையும்; தன்னில் மட்டும் மூழ்கி, தன் இரக்கத்தில் நொந்து, வெந்து இருந்தவனது மனம் மெல்ல மெல்ல தன்னைச் சூழஉள்ள உலகத்தை இரசிக்க தொடங்கியிருந்தது.

எண்ணெய் குளியலை அவன் முடித்து வர எடுத்த இரண்டு மணி நேரத்திலும் அவன்தான் அவளது சிந்தை முழுவதும் நிரம்பியிருந்தான். அவன் அணிவதற்கான கைலி, சட்டை எல்லாம் எடுத்து வைத்தவள் அவன் விரும்பி உண்ணும் உணவு வகையறாக்களுடன் வள்ளியம்மை இருக்கும் இடத்திற்கு வந்தாள்.

“அம்மா சின்னவர் குளிச்சிட்டு வரட்டும்! அதுக்கு முன்னாடி நீங்களும் ஐயாவும் சாப்பிட்டிடுங்க. ஐயா பசி பொறுக்க மாட்டாங்க”

“இருக்கட்டும்மா தம்பியும் குளிச்சிட்டு வர ஒண்ணா உக்காந்து எல்லாரும் சாப்பிடலாம்” என்றவர் “பூர்வாம்மா! கையில யாருக்கு சாப்பாடு?” என்று கேட்க

“சின்னவருக்குதாம்மா. நீங்க சாப்பிட்டிட்டு அவங்க வர பரிமாறுங்க மாத்திரை போட வேணாமா?”

“நான் எதுக்குடா பரிமாறணும்? வீட்டுக்காரி நீ தான் பரிமாறணும் உன் புருஷனுக்கு!” என்று விட வெட்கம் வரவேண்டிய இடத்தில் பதற்றம் அவளுக்குத் தொற்றிக் கொண்டது.

“என்னம்மா சொல்றீங்க -----ம்க்கும்---இல்ல----- இல்ல நான் உங்க வீட்டு வேலக்காரிம்மா----சித்தப்பா என்னைய இங்கிட்டு வர விடமாட்டாங்க என்றதுக்கா தான் கல்யாணம் கட்டிக்க சரிண்ணேன்------நீங்களே இப்டி பேசலாமா?” என்றவளுக்கு கண்களில் நீர் தேங்கிநிற்க இப்போது பதட்டப்படுவது வள்ளியம்மையின் முறையானது.

“பூர்வாம்மா! என்னடா இது பேச்சு? நீ வேலைக்காரியா? யாருடா சொன்னது? நீ எங்க வீட்டு மகாலக்ஷ்மிம்மா இன்னொருவாட்டி வேலைக்காரி அது இது என்ணு எதுவும் பேசப்படாது” என்றவரிடம் பதில் பேசாது நின்றாலும் முகம் அகத்தின் சம்மதமின்மையை காட்டிவிட

“என்னடா உனக்கு பிரச்சினை? என் மகன் பெண்டாட்டி எனக்கு வேலைக்காரியா? நீ இப்டி பேசலாமாடா?” என்று வேதனையுடன் கேட்டவரிடம்

“அம்மா! சின்னவரு காதுபட என்னைய பெண்டாட்டி என்ணு எதுவும் சொல்லிப்புடாதீங்க ---கேட்டா எம்புட்டு வருத்தப்படுவாங்க? எனக்கு என்ன தகுதி இருக்கம்மா சின்னவருக்கு பெண்டாட்டியாக?”

“அம்புட்டு வருத்தமா இருக்கும்மா------நான் என்ன அழகா? படிப்பிருக்கா? சின்னவர்ட மனசுக்கும் படிப்புக்கும் குணத்துக்கும் ராசாத்திதான் பெண்டாட்டியா வரணும்;! வேலக்காரி இல்ல!!” என்றவளது பேச்சு கந்தவேள் அழகருக்கு மட்டுமல்ல அவர் மகனுக்கும் காதிலும் விழுந்தது.

உரிமையே இல்லாது அத்தான் என்றவளும், உரிமை அத்தனையும் இருந்தும் தன்னை வேலைக்காரி என்று நினைப்பவளும் மனதில் வந்து போக பூரணியின் பக்கம் தராசு மிகத்தாழ்ந்து போயிருந்தது.

எனக்கு இப்படி ஒரு நிலை வந்தது கூழாங்கல்லுக்கு பக்கத்திலிருந்த வைரத்தை காட்டத்தான் போலும் என்று எண்ணிக் கொண்டான்.

இது அவள் தன்னை வேலைக்காரி என்று மட்டும்தான் நினைக்கின்றாள் என்பதால் வந்த எண்ணம் இல்லை. தன்னை,, கருகிப்போய் தசை இழுத்தபடி இருக்கும் தன் அவயங்களை, தனது வீட்டு செல்வ செழிப்பை எதையுமே எண்ணாமல் அவனை அவனுக்காக மட்டுமே ஆராதிக்கும் அவளது தூய உள்ளம் அவனைக் கொள்ளை கொள்ளத் தொடங்கியது.

அவனை திருமணம் செய்வதற்கு அவளது நிராதரவான நிலையும் வறுமையும் அவளது சித்தப்பனின் பேராசைகளும் காரணமாக இருந்தாலும் அவள் மனதில் அவன் இன்னமும் அந்த பழைய அழகன் தான். அவளது அகக் கண்ணிலோ அன்றி புறகண்ணிலோ அவனது புதிய தோற்றம், இயலாமை, உடல் நிலை எதுவுமே தெரியவில்லை.

ஒரு சராசரி மனிதனாக மட்டுமே தன்னைப் பார்க்கும் அவளை அவனுக்கு அவ்வளவு பிடிக்கத் தொடங்கியிருக்க தன்னைப் போன்ற ஒருவன் அவளுக்கு கணவனாகக் கிடைக்க வேண்டாம் என்று எண்ணியவன் அவளுக்கு உற்றவனாக இன்னொரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றே எண்ணினான். அது அவ்வளவு சுலபம் இல்லை என்று தெரிந்தும்கூட.

மனம் முழுவதும் அதை எப்படி செயல்படுத்துவது என்ற சிந்தனை வியாபித்திருக்க என்னேரமும் யோசனையுடன் இருந்தவனின் நிலை அறியாத பேதை வள்ளியம்மை அடிக்கடி சொல்லும் “உன் புருஷன்” என்பதை மெல்ல மெல்ல உள்வாங்கத் தொடங்கியிருந்தாள்.

பூரணி அழகன் வீட்டிற்கு வாழ வந்து ஆறு வருடங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் லக்ஷ்மியையும் தன் மகனையும் அழைத்துக் கொண்டு அறிவியல் நகருக்கு வந்திருந்தான் மாணிக்கராசன்.

கந்தவேள் அழகர் மூலம் அவனுக்கு அவனது திட்டத்தில் பின்னடைவு பலதடவைகள் வந்திருக்க அவர்மீது உச்சக்கட்ட எரிச்சல் இருந்தாலும் நயவஞ்சகப் புன்னகை முகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொண்டான்.

அவனுக்குப் புரியவில்லை அவனது புன்னகை அகத்தை தெளிவாகக் காட்டிக் கொடுத்துவிடும் என்பது. இம்முறை வரும் போது மகனுக்கு “அம்மாவை விட்டுட்டு உங்ககூட வரமாட்டேன்” என்று சொல்லி அழணும் என்று போதித்து நெஞ்சில் பதியவைத்து திரும்ப திரும்ப கேட்டு அதில் திருப்திப்பட்ட பின்னரே கூட்டி வந்திருந்தான்.

பூரணியைக் கண்டதும் “அம்மா” என்று அழைத்தபடி ஓடிவந்து கட்டிக்கொண்ட குழந்தையை பார்த்த கந்தவேள் அழகர் “அக்காவை எதுக்கு அம்மா என்ணு சொல்லிக் கொடுத்திருக்கே?” என்று ஆணிவேரில் கைவைக்க திகைத்துப் போனவன் ஹி-----ஹி-----என்று சிரித்து வைக்க “என் வீட்டு மருமகளை இனி வேற யாரும் அம்மா என்ணு கூப்பிடக் கூடாது. அவளை அம்மா என்று கூப்பிட அவ பிள்ளை வருவான். உன் பிள்ளை எதுக்குப்பா அவளை அம்மா என்கிறான்? என்று சொன்னவர் சுயனை அழைத்து “உன் அம்மா அவங்க தான்” என்று லக்ஷ்மியைக் காட்டியவர் கண்டிப்புடன் “அக்கா” என்று அழை என்று சொல்லி அவன் அவ்வாறு அழைத்த பின்னரே அவனை ஊர் போகவிட்டார்.

கந்தவேள் அழகர் கொடுத்த பேதிமருந்தில் கலங்கிய பொடிப்பயல் இங்கிருக்க மாட்டேன் என்று அழுது தாய் தந்தையுடன் ஊருக்குக் கிளம்பிப் போனான்.

அட! கிழட்டு பயலுக்கு பேரபுள்ள வேற பொறக்கும் என்ற எண்ணமா? என்று வழி நெடுகலும் புலம்பியபடி வந்தவன் வடிவேல் அழகரின் அத்தனை சொத்துக்களையும் காட்டி அவையாவும் அவனது மகனிற்கு வரவேண்டிய சொத்துக்கள், இவற்றை ஆளப்பிறந்தவன் அவனே என்று அவனின் மனதில் தினந்தோறும் பதிய வைத்துக் கொண்ருந்தான்.

இங்கோ அழகன் மெல்ல மெல்ல தந்தையுடன் தொழிலுக்கு வரத் தொடங்கியிருந்தான். கண்ணில் காணும் நல்ல பையன்களை இவன் பூரணிக்குப் பொருத்தமானவனாக இருப்பானா? என்று பார்க்கத் தொடங்கியது மட்டுமல்லாது பூரணியின் மனதில் இருப்பதை அறிந்து கொள்வதற்காக அவளுடன் பேசவும் தொடங்கியிருந்தான்.

சின்னவர் தன்னுடன் பேசுவதையே பெரிய வரமாக எண்ணியவள் அவன் வேலைக்குச் சென்று திரும்பி வரும்வரையும் வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பாள்.

அன்றும் அப்படித்தான் இவர்களின் டீலர் ஒருவன் வந்து பேசிக்கொண்டிருக்க அவனது குணம்இ ஒழுக்கம் அனைத்தும் அத்துப்படியாகத் தெரிந்தவன் என்பதால் இவனை பூரணிக்கு மணம் முடித்துக் கொடுக்கலாம் என்று எண்ணியவன் பூரணியிடம் பேச்சுக் கொடுத்தவாறே “பூர்வாம்மா நீ எங்க வீட்டு வேலைக்காரியாகத்தானே உன்ன நெனைக்கிறே----சரியா? என்னை சின்னவர் என்கிறே! என்ரை அம்மா. அப்பாவை நீயும் ஐயா. அம்மா என்கிறே” என்று ஏதேதோ சொல்ல “ஐய்யையோ தப்பா மொற வெச்சு கூப்பிடுறேனே! நான் ஒரு புத்தி கெட்டவ! சின்னவரே! என்று இவனை விழித்தவள் புருஷனை இப்டி கூப்பிடக்கூடாது தானே -----தனக்குள் பேசியபடி தன் உலகத்தில் சஞ்சரிக்க இவன் பேசியவை எதுவும் அவள் காதில் ஏறவில்லை.

பாவம் அழகனுக்குத் தெரியவில்லை அவள் மனதில் இவன் கணவனாக மாறி பலகாலம் ஆகிவிட்டதென்று.

அத்தனை விளக்கத்தையும் இவன் கொடுக்க ஙே---- என்று விழித்தவாறு இவன் பேச்சில் லயிக்காது நின்றவளை பூர்வா! என்று அதட்டிக் கூப்பிட்டவன் “என்ரை கேள்விக்கு பதில் சொல்லல நீ” என்று விட

அச்சச்சோ என்ன கேட்டீங்க சின்----என்று தொடங்கியவள் இனி சின்னவரே என்று அழைக்கக்கூடாது என்ற தீர்மானத்தில் இடையில் அவனை விழிப்பதை நிறுத்திவிட

“நீ வேற நல்ல பையனா கட்டிக்கலாம் பூர்வா! என்றவனது பேச்சில் “ஐயோ மச்சான் இனிமே உங்கள சின்னவர் என்று சொல்ல மாட்டேன். தெரியாம உங்களை அப்டி கூப்பிட்டுட்டேன் அதுக்காக என்ன தள்ளி வெச்சிடாதீங்க” என்றபடி பாய்ந்து அவனை கட்டிக்கொண்டு ஓ வென கதறி அழுதாள்.

அட கடவுளே! நான் என்ன சொன்னேன் இவ என்னத்த புரிஞ்சு கொண்டிருக்கிறா? என்று நினைத்தபடி தன்னைக் கட்டிக்கொண்டு அழுபவளைச் சமாதானப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் பூர்வாவின் மச்சான்.

இன்று

அன்றைய சம்பவத்தின் பின் நாளாந்தம் அவளை பைக்கில் ஏற்றிச் சென்று புகையிரத நிலையத்தில் இறக்கி விடுபவன் மாலை ரயில் வரும் நேரத்திற்கு முன்பே அவளுக்காகக் காத்திருந்து ஏற்றி வந்து வீட்டில் விட்டுச் செல்வான்.

அவனது அருகாமையை மிகவும் ரசிக்கத் தொடங்கியிருந்தாள் லயா. அன்று அழகர்புரம் சென்றபோது நடந்த சம்பவங்களை இவள் மறந்தது போல மீண்டும் அவனது இடுப்பைச் சுற்றி கைபோட்டுக் கொண்டு பயணம் முழுவதும் அவனைச் சோதித்துக் கொண்டிருந்தாள்.

சிலசமயம் களைப்பு மிகுதியில் அவனது முதுகில் தலையைச் சாய்த்தபடி அமர்ந்திருப்பாள். என்ன இவள் விட்டால் தூங்கியே விடுவாளோ என்ற பயத்தில் “ப்ரியா தூங்கிட்டியா?” என்று அடிக்கடி கேட்டு வைப்பான் இவன்.

இவன் அப்படி கேட்கும் போது சிரிப்பு வந்தாலும் பதில் பேசாது தன் தலையை அவன் முதுகில் தேய்த்து அவனைப் பதற விடுபவள் சட்டென அவன் பிறேக் பிடித்து திரும்பிப்பார்க்க தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து சிரித்து வைப்பாள்.

விஷ்ணுவிற்கு இவள் பண்ணும் சேட்டைகள் ஒருபுறம் பிடித்திருந்தாலும் மறுபுறம் இவள் எதற்காக என்னுடன் இழைகிறாள்? என்ற கேள்வியும் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

அந்த கருணாகரனை மறந்திட்டாளா? இல்லை எந்நேரமும் என்னைப் பார்ப்பதால் என்னைப் பிடிக்கத் தொடங்கிவிட்டதா? என்று நினைத்தமட்டில் மனம் குழம்பத் தொடங்க அவள் மீது ஏற்படும் இளக்கம் மறைந்து போய்விடும்.

வாரத்தின் ஆறு நாட்களும் பயிற்சிக்கு செல்பவள் இப்போது ஞாயிற்றுக் கிழமைகளில் சமையல் வகுப்புக்களுக்கும் போகத் தொடங்கியிருந்தாள். இப்போதெல்லாம் அவளின் தேவைகளுக்குக் கேட்காமலே அவன் பணம் கொடுத்துவிடுவதால் அவன் முன் சென்று விளக்கம் சொல்லும் தேவை இருக்கவில்லை.

அவன் தனக்கென வரும் உறவின் கையால் சாப்பிட காத்திருக்க இவள் குக்கறிக் கிளாஸில் கற்றுவந்த கலையை அவனிடம் காட்ட முயற்சித்து அவனைக் கலவரப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அவனை ஆச்சரியப்படுத்தும் விதமாக ரொம்ப மரியாதையாக “நீங்கள்” என்று விழிக்கத் தொடங்கியிருக்க “டேய் விஷ்ணு” என்பதும் காணமல் போயிருந்தது. எதுவும் திட்டமிட்டு செய்கிறாள் என்று இல்லாமல் அது இயல்பாகவே வந்திருந்தது. தன்னை மறந்து இவள் பேச அவன் அந்த மாற்றங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் எதையும் புரிந்து கொண்டது போல காட்டிக் கொண்டான் இல்லை.

அவன் அதிகாலையில் எழுந்து தன் அன்றாட வேலைகளை முடித்து உள்ளே வர டீ தயாரித்தவள் அவனுக்கும் ஒரு டம்ளரில் ஊற்றிவந்து கொடுத்தாள். இவள் டீயை தர பின்னடைந்தவன் இல்லை வேணாம் என்றுவிட அவனது பின்னடைவால் மனதில் பலத்த அடி வாங்கினாள்.

நான் டீ போட்டால் குடிக்க மாட்டீங்களா? என்று வேதனை மிகுந்த குரலில் கேட்க நீ என்னவள் தானா? என்று கேட்டு அவளுடன் யுத்தம் செய்ய விரும்பாதவன் “ப்ரியா உன்ரை சோதனை முயற்சிகளுக்கு என்னை எலி ஆக்காதை----- என்றபடி இவளை விலக்கிக்கொண்டு போக “நம்புங்கோ நான் நல்ல டீ போட பழகிட்டேன்” என்று சொல்ல இரண்டு கைகளாலும் வணக்கம் வைத்தவன் “என்னை பிழைச்சுப்போக விட்டிடம்மா?” என்று சொல்லியபடி நகர்ந்துவிட மனம் நொந்து போனவள் தனக்கென தயாரித்ததையும் அருந்தவி;ல்லை. அவனுக்குப் போட்ட டீயும் அவளது டீயும் குடிக்க ஆளின்றி ஏடு படர்ந்திருந்தது.

அன்று டீ கூட குடிக்காது அவள் வேலைக்கு புறப்பட்டுப் போனது இவனுக்குத் தெரியவில்லை. வழமையைப் போல அவளை ரயில் ஏற்றி விட்டபின் இவன் தன் நாளாந்த கடமையில் மூழ்கிவிட மாலையில் இடிபோல வந்த செய்தி அவனை உலுக்கி விட்டிருந்தது.

அவளது கம்பனி இருந்த ஊருக்கு அண்மையில் இருந்த ஊர்களில் ஜாதி கலவரம் மூண்டிருந்ததால் போலீஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன் அனைத்து போக்குவரத்துப் பாதைகளும் தடைப்பட்டிருந்தன. அத்துடன் தொலைத் தொடர்புகளும் செயலிழந்து போயிருந்தன.

மொபைல் நெட்வேர்க் செயலிழந்திருந்ததால் அவளுடன் தொடர்பு கொள்ள முடியாது போயிருக்க அவளாலும் இவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதிகாரிகள் சமூகவலைதளங்கள் மூலம் விஷமத்தனமான செய்திகள் பரப்பப்படுவதனைத் தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இவை அனைத்தும் செயற்படுத்தப்பட்டிருக்க எதுவும் செய்ய முடியாது அவளது பாதுகாப்பை எண்ணித் தவித்துப் போனான்.

அதுவும் அவளது தொழிற்சாலை இருந்த பகுதி பிரதான பேருந்து போக்குவரத்து வழியில் இல்லாதிருக்க அவளது நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்று கண்டவன் உடனடியாகவே பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

கூகுள் வரைபடத்தில் அவளது தொழிற்சாலைக்குப் போகும் வழிகளை துல்லியமாக கணக்கிட்டவன் நேரத்தை பார்க்க அது மாலை 5.30 ஐ காட்டியது அவனது கணக்கின்படி அவன் அங்கு போய்சேர மேலும் மூன்று மணி நேரமாவது தேவைப்படும் என்பதைப் புரிந்து கொண்டவன் வழியில் இருக்கும் போலீஸாரின் தடைகளை எப்படிக் கடந்து போவது ஆக்ரோஷத்துடன் இருக்கும் இரு தரப்பின்ரையும் எப்படி சமாளிப்பது என்ற சிந்தனைகள் மனதின் ஒருபுறம் ஓட இன்னொரு புறமாகஅவள் தொழிற்சாலையில்தான் இருப்பாளா? இல்லை கிளம்பி ஏதாவது மார்க்கத்தில் வந்திருப்பாளா என்ற கேள்வியையும் மனது கேட்டுக் கொண்டிருந்தது.

லயாவின் நிலைமையோ சொல்லும்படி இருக்கவில்லை. தொழிற்சாலையின் சைரன் ஊதும் சத்தம் கேட்க சற்று நிதானித்த ஃபோர்மன் வேலை செய்து கொண்டிருந்த மெஷினை நிறுத்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கியிருந்தனர்.

தொழிலாளர்களில் பலரும் அருகில் இருக்கும் ஊர்களில் வசிப்பவர்களாக இருக்க அவர்கள் விரைந்து வெளியேறி விட்டிருந்தனர். கலவரம் தொழிற்சாலைக்குள்ளும் தோன்றும் ஆபத்து இருக்க தொழிற்சாலையை மூடிவிடுவதென நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

இவளைப் போல பயிற்சிக்கு வந்தவர்களில் யாரும் பெண்களாக இல்லாதிருக்க பையன்களும் வேறு இடங்களில் இருக்கும் யூனிட்களில் வேலை செய்ய அவர்களது உதவியையும் நாடமுடியாமல் தனித்துப் போனாள்.

தனது கான்ட் பேக்கை எடுத்துக்கொண்டு தொழிற்சாலையைவிட்டு வெளியே வந்தவளை முன் செல்ல விடாதவாறு ரோந்துக்கு வந்த போலீசார் தடுத்துவிட மீண்டும் தொழிற்சாலை வளாகத்திற்குள் திரும்பி வந்தவளுக்கு அங்கே ஒருசில பெண் ஊழியர்கள் நிற்பது சற்று நிம்மதியாகத் தான் இருந்தது.

அந்த நிம்மதியும் அவர்களை உறவினர்கள் போலீசின் அனுமதியுடன் வந்து அழைத்துச் செல்லும் வரையே நிலைத்திருந்தது.

நேரம் சென்று கொண்டிருந்தது. அங்கே இருந்த ஆபீஸ் அறையின் முன்னே சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். தொழிற்சாலை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இவளது கஷ்டகாலம் இன்று பார்த்து மனேஜிங் டைரக்டர் வேறு வேலையாக சென்றிருந்தார். யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை. வீட்டிற்கு செல்வது எப்படி என்பதும் புரியவில்லை.

செக்குயூரிட்டியிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்து வர அங்கே நான்கு ஐந்து பேர் கூடி நின்று புகைப்பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்களின் பார்வை இவளை மேய கடவுளே என்ன செய்வேன் என்று தவித்தவள்

தன் துணிவையெல்லாம் திரட்டிக் கொண்டு “அண்ணா அறிவியல் நகருக்கு போகவேணும் எப்டி போறது?” என்று கேட்க

“இப்டி” என்று அவன் கையை நீட்டி அறிவியல் நகர் இருந்த திசையைக் காட்ட மற்றவர்கள் “கொல்” என்று சிரித்தனர். இது போதாதென்று அவர்களில் ஒருவன் “என்னடா கிளி அண்ணா என்கிது?” என்று சொல்லிவிட “கண்ணா” என்றுதான் என்ரை காதில விழுந்தது உனக்கு தப்பாதான் எல்லாம் கேட்கிது போல மச்சி? என்று விரசமாக இவளைப் பார்க்க அந்த இடத்தில் நிற்பதை அவஸ்தையாக உணர்ந்தவள் தொழிற்சாலையைவிட்டு வெளியேற முனைந்தாள்.

அதேசமயம் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள யூனிட்டுகளை மேற்பார்வை செய்தபடி வந்த சீஃவ் செக்குயூரிட்டி ஆபீஸர் இந்த பிரச்சினையில் வெளியே போக முனைபவளை தடுக்க நினைத்து ‘இந்தாம்மா வெளிய போகாதீங்க. ஊரடங்க சட்டம் போட்டிருக்கு போலீஸ் உங்களை அரஸ்ட் பண்ணுவாங்க. அதைவிட இந்த ஊர் பயல்களிடம் சிக்கினா கண்டம் பண்ணிடுவாங்க. உள்ளார போய் இருங்கம்மா நாங்க எல்லாம் இருக்கிறோமே என்ன பிரச்சினை? “என்றபடி அங்கிருந்த இளவட்டங்களை “என்னடா பேசினீங்க? அந்த பிள்ளை பயந்திருக்குது. இங்க இன்ஜினியர் வேலைக்கு வந்திருக்கிற பிள்ளை அது. உங்கட வாலைச்சுருட்டி வைச்சுக்கொண்டு இருங்கடா” என்றவரது வீராப்பு எல்லாம் ஒரு குவாட்டரை பார்க்கும் வரை தான் என்பதை இவள் அறியாள். ஆனால் அந்த காலிப்பயலகளுக்கு அத்துப்படியாக தெரியுமே! அவர்கள் மெல்ல தமக்குள் சிரித்துக் கொண்டனர்.

இவளைப் பார்த்து ஆபீஸ் வாசலில் இருக்கும் சேரில் உக்காரும்படி சீஃப் செக்குயூரிட்டி சொல்லிவிட என்ன செய்வதென்று புரியாது மீண்டும் பழைய இடத்தில் வந்து அமர்ந்தவளுக்கு எப்படி வீடு போய் சேருவோம் என்ற நினைப்பே மேலோங்கியிருந்தது.

இருள் முழுமையாக சூழ்ந்திருக்க தொழிற்சாலை முழுவதும் விளக்குகள் அழுது வடிந்து கொண்டிருந்தன. இவளோ பயத்தில் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருந்தாள்.

செக்குயூரிட்டியாக நின்றவர்களும் அங்கே உள்ள தொழிலாளிகள் தங்குமிடத்தில் தங்கும் கீழ்நிலை ஊழியர்களும் வந்து சேர்ந்திருக்க அங்கே கூட்டம் களைகட்டத் தொடங்கியிருந்தது.

முதலில் இவளைக் “கிளி” என்று வர்ணித்தவன் பார்வை நொடிக்கொருதரம் இவளில் பதிந்து மீள பதட்டமானவள் மனதால் தன்னுயிராக நினைப்பவனை அழைக்கத் தொடங்கியிருந்தாள்.

ஆம்! உயிரானவன் தான். எப்போது தாலி களன்று விழுந்ததை பார்த்து துடி துடித்து அழுதாளோ அன்றே அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டியது அன்று புரியாது எல்லாம் ஆலத்தூர் சென்று வந்ததிலிருந்து இவளுக்குத் தெளிவாகிப் போயிருக்க அவன்தான் பாராமுகமாக இருந்து இவளை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறான். இன்றோ அவனுடன் வாழ்வதற்கே வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் வாட்ட தொடங்கியிருந்தது. நிலைமை அவள் கைமீறிச் செல்லப்போகிறது என்பதை புரிந்து கொண்டவள் ரொம்ப பயமா இருக்கு விஷ்ணு வாங்களேன் என்று அவன் பெயரையே ஜெபித்தபடி இருந்தாள்.

விஷ்ணு----- விஷ்ணு--- என்று அவள் மனம் இடைவிடாது அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்க இவளுக்குக் குறையாத தவிப்பில் தான் அவனும் இருந்தான். இவள் இருந்த இடத்தில் நின்ற கூட்டமோ ரம்மி விளையாட ஆரம்பித்திருந்தது.

நேரம் 8 மணியைத் தொட ரம்மியுடன் சரக்கும் சேர்ந்து கொண்டது. இது எல்லாமா தொழிற்சாலையில் வைத்திருப்பார்கள்? அவர்கள் ஒவ்வொரு ரவுண்டாக கூட்டிக்கொண்டு செல்ல எல்லோருக்கும் முன்பே மட்டையாகிக் கிடந்தான் சீஃப் செக்கியூரிட்டி ஆபீஸர். சுயநினைவை இழந்தபடி இருந்தவர்கள் மத்தியிலிருந்து அவன் எழுந்து இவளருகில் வர கால்கள் வெட வெடக்க எழுந்து நின்றாள் ஓடிவிடலாம் என்ற எண்ணத்தோடு.

இவளது எண்ணத்தைப் படித்தவன் நக்கலாக சிரித்தபடி “செல்லக்குட்டி! அவனுகள் இப்ப சாய்ஞ்சிடுவானுகள். நான் ஸ்ரெடியா தான் இருக்கிறன். அவங்க விளையாட்டை அவங்க முடிக்கட்டும். ராத்திரி பூரா நானும் நீயும் விளையாடலாம்” என்று விட அதிர்ந்து பின்வாங்கியவளுக்கு அருகில் வந்தவன் “சரின்னுட்டாய் என்றால் சுகம். இல்லை கஷ்டப்படுவாய். என் வேலை முடிச்சிட்டு அவங்கள உசுப்பி விட்டேன் என்று வை. உனக்கு ராத்திரி பூரா டூட்டி தான். என்கூட வாரியா!” என்றபடி இவளை அவன் நெருங்க அந்த இடத்தைவிட்டு ஓடத் தொடங்கினாள்.

“செல்லக்குட்டி! ஓடி எதுவும் ஆகப்போவதில்லை” என்றவன் “பொறுத்துக்கடி தங்கம்! அவனுங்கள் எல்லாம் மொத்தமா சாயட்டும்” என்று சொல்ல இங்கிருந்து கேவலப்படுவதைப் காட்டிலும் போலீஸ் சுட்டு செத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் அவளை தொழிற்சாலையின் பிரதான வாசலை நோக்கி ஓட வைத்திருந்தது.

இவள் பிரதான வாசலை அடையவும் ஒரு போலீஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாக இருக்க அதிலிருந்து இறங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கதவைத்திறந்து கொண்டு உள்ளே வர அவரின் பின்னே விஷ்ணுவும் வந்தான்.

அவனைக் கண்ட மாத்திரத்தில் “அத்தான்” என்று கத்தியபடி ஓடிச்சென்று அவனை இறுக கட்டிக் கொண்டவள் ஓ--- என்று கதறி அழுதாள். இன்னும் சிறிது நேரம் அவன் தாமதமாக வந்திருந்திருந்தால் அவளது வாழ்க்கை முடிந்திருக்கும்.

உள்ளே இருந்தவர்கள் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் “ஒரு பொண்ணு இருக்கிறா என்றுகூட பார்க்காம என்னடா குடிக்கிறீங்களா?” என்றபடி விட்ட அறையில் அனைவரும் கலைந்து ஓட இவளை நாசம் செய்ய திட்டமிட்டு இருந்தவன் போலீஸைக் கண்டதும் காணாமல் போயிருந்தான்.

அவனில் புதைந்து கொண்டு அழுபவளை அவனும் அணைத்துக் கொண்டான். அங்கிருந்த சூழல் புரிந்தவன் இந்த இடத்திலா இவள் றெயினிங் எடுக்க வந்திருக்கிறாள் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அந்தளவிற்கா இவளது தாத்தாவின் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கிறாள்????

முதல் தடவையாக அவளை அன்று இன்டர்வியூவிற்கு போகவிடாது தடுத்தது தவறு என்ற எண்ணம் வந்திருக்க தன்னுள் புதைந்து போனவளின் தலையைத் தடவிவாறு நின்றவன் அவளையும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஜீப்பில் வந்து ஏறிக் கொண்டான்.

அவனை விட்டு விலகினால் தனக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தினால் ஜீப்பில்கூட அவனது கைகளைப் பற்றி நெஞ்சில் வைத்து அழுத்தியபடி இருந்தவளது இதயத்துடிப்பின் வேகம் அவள் பயத்தின் அளவைச் சொல்ல வருத்தத்துடன் அவளை ஒட்டி அமர்ந்தபடி தன் மடியில் அவளை சாய்த்துக் கொண்டான்.
 
Top