கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி ----+அது- அத்தியாயம் 3

sanchumahen

New member
அன்புவலி ----+அது

அத்தியாயம் 3



கைகளில் நகக்கீறல்கள், கடிபட்டிருந்த காயம் இவற்றுடன் மறுநாள் காலை ஹாட்வெயர் ஸ்ரோஸிற்கு வந்தவனை அர்த்தபுஷ்டியுடன் பார்த்துக் கொண்டார் கணக்கர் சோமு.

அவருக்கு லயாவை நன்றாகத் தெரியும் அவள் இவனைத் திருமணம் செய்யமாட்டாள் என்றே அவர் நம்பினார். ஆனாலும் இவருக்கு அதிர்ச்சியை அளிப்பது போல அவள் இவனைத் திருமணம் செய்து கொண்டாள். ஆனால்---மிச்ச சொச்ச கசமுசாக்கள் எல்லாவற்றிற்கும் வழியிருக்காது என்ற அவரது நம்பிக்கையையும் பொடிப்பொடியாக்குவது போல இவன் காயங்களுடன் வந்து நிற்கிறான்.

அப்போ ----அப்போ இவன் பலகாரம் செய்திருக்கிறானா?? அட பாவிப்பயலே! இவ்வளவு ஆத்திரமும் அவசரமும் எதுக்கடா???? கிணற்றுத் தண்ணீரை ஆற்று வெள்ளமா கொண்டு போகப்போகிறது? என்று ஆதங்கப்பட்டவர் பல்லு பட்ட காயத்திற்கு அவசியம் மருந்து போடவேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டார்.

இவர்களது கடைக்கு இரண்டு கடைதள்ளி கிளினிக் நடத்திக்கொண்டிருக்கும் சத்தியமூர்த்தி டாக்டரிடம் இவனைக் கூட்டிக்கொண்டு போக நேற்றுத்தான் இவனுக்கு திருமணம் முடிந்ததை தெரிந்து கொண்டு அந்ததாள் ஒரு டெட்டனஸ் ஊசியை ஏற்றிவிட்டு புத்தி சொல்கின்றேன் பேர்வழி என்று இவனைப் பங்கப்படுத்தி அனுப்பிவிட அடபாவிகளா??? நீங்கள் கற்பனைக்குதிரை ஓட்டி விளையாட என்ரை தலைதானாடா கிடைச்சது? என்று நொந்து போனான் விஷ்ணு.

கற்பனைக் குதிரை தானா??அப்போ உண்மையில் நடந்ததுதான் என்ன???

இவன் ஹாட்வெயர் ஸ்ரோஸ்க்கு சென்ற சற்று நேரத்திற்குள் எல்லாம் குருவப்பா அவளை தனியே விட்டுத் சென்றிருக்க வாளிகளில் நிரப்பி வைத்திருந்த நீரில் முகம் கழுவி தனது கூறைப் புடவையையும் மாற்றியவள் மறக்காது அந்த இரும்பு நெற் கதவை பூட்டியபின் அங்கிருந்த ஒரே ஒரு அறைக்குள் வந்தாள்.

ஜெயானந்தம் ஐயா கற்றுக்கொடுத்த நேர்த்தி, ஒழுக்கம் எல்லாமே அந்த அறையை அவன் வைத்திருந்த அழகில் தெரிந்தது. அவ்வளவு சுத்தமாக இருந்ததுடன் அவனது ஒரு சில செட் உடைகள் அழகாக மடிக்கப்பட்டு அவ்வறையினுள் இருந்த ஒரே ஒரு வெளிப்புறம் துரு பிடித்திருந்த இரும்பு அலுமாரியின் தட்டுகளில் பழைய தினசரி செய்தித்தாள்கள் விரிக்கப்பட்டு அதன் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவன் பயன்படுத்தும் ஒரு சில அலுமேனிய கோப்பைகளும் எவர்சில்வர் டம்ளர்கள் அங்கிருந்த சிமெண்ட் ஸிலப்பில் நன்றாக விளக்கப்பட்டு கவிழ்த்து வைக்கப்பட்டிருக்க அவை வெள்ளி பாத்திரங்கள் போல மினுமினுத்தன.

தூக்கம் கண்களைச் சுழற்ற சுற்று முற்றும் பார்த்தவள் கண்களுக்கு அங்கிருந்த ஒரு பாயும் ஒரே ஒரு தலையணையும் போர்வையும் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலும் தென்பட்டன. போர்வையிலும் தலையணை கவரிலும் வீசிய கம்பேர்ட் பப்ரிக் கண்டிசனரின் வாசனை மனதை மயக்கியது.

அவன் பயன்படுத்திய பாய் மற்றும் தலையணையில் படுப்பதை விரும்பாதவள் வெளியிலிருந்த பிளாஸ்டிக் கதிரைகளில் ஒன்றைக் கொண்டு வந்து அதில் அமர்ந்து கொண்டு தலையைச் சுவரில் சாய்த்துக் கொண்டாள்.

ஹாட்வெயர் கடைக்கு வந்தவனை வேலை இழுத்து அமுக்கிக் கொண்டது. வரும்போது மனம் சுணங்கி வந்தவனுக்கு ஒரு துளி சந்தோசம் இல்லாமல் இல்லை. அந்த சந்தோசத்திற்குக் காரணம் அவள் தான். இவ்வளவு நாளும் வெறுமையும் தனிமையும் மட்டுமே சூழ்ந்திருந்த அவனது வாழ்வில் அவனுக்காக ஒரு துணை காத்திருப்பது பிடித்திருந்தது.

ஆனால் அவளை மனைவியாக அவன் ஏற்றுக்கொண்டானா என்றால்--------அந்த நிலைக்குப் போவதற்கு அவனுக்கு சில விளக்கங்கள் தேவைப்பட்டன என்பதுதான் உண்மை ஜூலிய சீசரின் மனைவி மட்டுமல்ல இந்த விஷ்ணுவின் மனைவியும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாகத்தான் இருக்க வேண்டும்.

மாலை மெல்ல மெல்ல மயங்க காற்றோட்டம் இல்லாத அந்த அறையினுள் அவளுக்கு வியர்த்து வழிய இரவாகி விட்டதோ என்று நினைத்துப் பதைத்து எழுந்தவள் றெஸ்ட் ரூம் போய்விட்டு மறுபடியும் வந்து அந்த அறையினுள் பதுங்கிக் கொண்டாள்.

அந்த தோட்ட வெளியெல்லாம் ஊ----ஊ---என்ற சத்தத்துடன் சுழற்றி அடித்த காற்று இவள் இருந்த பக்கம் வரவே இல்லை. அதற்கு இவள் மீதிருந்த பயம் காரணம் இல்லை. இவளுக்கிருந்த பயமே காரணம். இவள்தான் அங்கிருந்த ஜன்னலைத் திறக்கவேயில்லையே. அப்புறம் காற்று எப்படி வரும்?

இருள் சூழத்தொடங்கியதும் அவன் சொன்ன பேய் பிசாசு கதைகள் உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்தவளுக்கு அவளது பாட்டி சொன்ன பேய்க்கதைகள் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக ஞாபகத்திற்கு வந்து தொலைக்க ஜன்னலையோ அன்றி கதவையோ திறக்கும் எண்ணம் வரவேயில்லை.

ஒரு பேயினது கையால் காலையில் தாலியை வாங்கி படுகின்ற அவலம் போதாதென்று வேறுபேய்களுடனும் இருட்டில் போய் நின்று கூட்டணியமைத்து இம்சைப்பட அவளுக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு??

ஓவனுக்குள் இருந்த உணர்வுதான் வந்திருந்தது. அப்படி ஒரு புளுக்கம் அந்த புளுக்கத்தில் வேர்த்து விறுவிறுத்துப் போயிருந்தவள் அங்கிருந்த ஸீலிங் ஃபேனைப் போட அது எழுப்பிய ஓசை ஹெலிகாப்டர் பறந்து வரும் சத்தத்தை நினைவுபடுத்தியது என்றால் அது ஆடிய ஆட்டத்தைப் பார்த்தால் அயிட்டம் டான்ஸ் ஆடிய நடிகைகூட அந்தளவிற்கு குலுங்கியிருக்க மாட்டாள் அப்படியெரு ஆட்டம்.

அந்த ஆட்டத்தைப் பார்த்துப் பயந்தவள் அது எங்கே கழன்று தன்னுடைய தலையில் விழுந்து மண்டையைப் போட வைத்துவிடுமோ என்ற பீதியில் ஓடிப்போய் அதை நிறுத்தியிருந்தாள்.

அவன் மின்சாரத்தை சிக்கனம் செய்யவோ அல்லது காசைச் சிக்கனம் செய்யவென்றோ பூட்டியிருந்த மின் விளக்குகள் மின்சாரத்தை சிக்கனப்படுத்தியதோ இல்லையோ ஒளியை நன்றாகவே சிக்கனம் செய்திருந்தது. இதனால் இருட்டில் ஹால் என்றும் சொல்லவும் முடியாத ஹால் இல்லை என்று மறுக்கவும் முடியாத அந்த வராண்டாவில் வந்திருக்க அவளுக்குப் பயமாக இருந்தது.

பிடிக்காத கல்யாணம், கம்பளிப் பூச்சி அதற்கான கலாய் என்று காண்டாகிப் போயிருந்தவளை அந்த இரவு மிரட்டியது என்னவோ உண்மைதான். நேரம் செல்லச் செல்ல அவளுக்கு ஏற்பட்ட எரிச்சல் விலைவாசி ஏறியதைப்போல கிடுகிடு என்று ஏறி வெடிக்கத் தயாரான எரிமலை போல புகைந்து கொண்டிருந்தது.

தனது மொபைலினை எடுத்து நேரத்தைப் பார்க்க அது இரவு ஏழு மணியைக் காட்டியது. அவளுடைய அப்பா இரவு ஒன்பது மணிமட்டில் தான் வீட்டிற்கு வருவார். அவர் முதலாளி ----- இவனுக்கு என்ன எடுபிடிதானே----நான் தனியே இந்த ஆளில்லா வெளியில் இருக்க------என்னதான் செய்கிறான்??? அவன் வந்தாலாவது வெளியில் போய் இருக்கலாம் என்று எண்ணியவள் திரும்பவும் மொபைலை எடுத்து நோண்டத் தொடங்கினாள். அவளது சமூகவலைத்தளப் பக்கம் முழுவதும் அலைந்து முடித்தவள் டேற்ரா முடிந்தது என்ற அறிவிப்பைப் பார்த்ததும் மீண்டும் மொபைலில் மூழ்க வேண்டும் என்றால் ரொப்பப் பண்ண வேண்டுமே என்ன செய்வது என்று யோசித்தபடி வீட்டிற்கு கால் பண்ண யாருமே எடுக்கவில்லை.

அவளுடைய அம்மா அப்பாவுடன் நிற்பதற்காக ஹாஸ்பிட்டலுக்குச் சென்றிருக்க சாயங்கால பார்வையாளர் நேரத்திற்கு அப்பாவைப் பார்க்க அவளது இரு அக்காக்களும் அம்மாவுடன் சென்றிருந்தனர். இந்த விபரம் எல்லாம் இவளுக்கு யார் சொல்வது?? இந்த திருமணம் காரணமாக தனது தாயும் அக்காமாரும் தன்னை ஒதுக்குவதாக நினைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தாள்.

அம்மா, பெரியம்மா, அக்காக்கள் அத்தான்கள் எல்லோர்மீதும் கோபம் கோபமாக வந்தது. அவள்தான் அப்பாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக இவனுக்குப் பின்னால் வந்தாள் என்றால் -----யாராவது என்னை வந்து பார்த்தார்களா?? என்று பொங்கினாள். என்னமோ நான் இவனை லவ் பண்ணி ஓடிவந்த மாதிரி என்ரை டிறஸ் எல்லாவற்றையும் எடுத்து குருவப்பாவிடம் கொடுத்து விட்டிருக்கினம்--------நல்லகாலம் என்ரை மொபைலையாவது கொடுத்துவிட மனம் வந்ததே------ நாளைக்கு இருக்கு இந்த அம்மாவிற்கு என்று கறுவியவளது கொதிநிலை 60 பாகை சென்டிகிறேட்டில் இருந்தது.

இப்போது நேரம் ஒன்பது மணியாகியிருக்க பசி அவளை வாட்டி வதைக்கத் தொடங்க அழுகை வரவா? வேண்டாமா? என்று கேட்டுக்கொண்டிருக்க என்னதான் இவன் மனசிலை நினைச்சுக் கொண்டிருக்கிறான்?? நான் என்ன ஜெயில் கைதியா? எதுக்கு எனக்கு தாலி கட்டினவன்? இவன்ரை ஓட்டை ஒடிசல் பொருட்களுக்கு காவல் வைக்கவா??

அவனது சைக்கிள் அவளுக்கு அநியாயத்திற்கு நினைவுக்கு வந்தது. ஐய்யோ! கடவுளே!! அந்த சைக்கிளின் விலையைவிட அதற்கு அவன் பூட்டி வைச்சிருக்கிற பூட்டு விலைகூடியதாக இருக்கும் என்று நினைத்தவள் பகவதி படத்தில் வடிவேல் சொன்ன அத்தனை அம்சங்களும் அதற்குப் பொருந்திப் போயிருந்ததை ஏளனமாக நினைத்துக் கொண்டாள்.

இவன்ரை சைக்கிளை ஒருவன் திருடுறான் என்றால் அது நிச்சயமாக அந்த பூட்டிற்காகத்தான் இருக்கும். இந்த ஃபேன் சும்மா கொடுத்தால்கூட யாரும் வாங்கமாட்டான். சீ---- இதற்கு காயலான் கடைகாரன் பேரீச்சம்பழம்கூடதர மாட்டான்.

இன்றைய திகதிக்கு இவன்ரை வீட்டிலை இருக்கற அயிட்டம்களில் விலைகூடிய அயிட்டம் நான் தான்.

ஐய்யய்யோ என்னை நானே அயிட்டம் என்று சொல்லுற நிலைக்குக் கொண்டு வந்து விட்டிட்டானே இந்த கராஜ்கார படுபாவி என்று மனதிற்குள் பொருமிக்கொண்டு காத்திருக்க அவன் பத்துமணியளவில் வீட்டிற்கு ஒருவாறு வந்து சேர்ந்தான் கையில் கொத்து பரோட்டாவும் நல்ல மலை வாழைப்பழச் சீப்பும் ஒரு போத்தலில் சுடச்சுட பாலும் வாங்கிக்கொண்டு.

பால், பழம் அவனது வழமையான சாப்பாடு என்பதால் அவனுக்கு விகல்பமாக எதுவும் தெரியாதிருக்க அவளுக்கோ அவற்றைப் பார்த்த மாத்திரத்தில் புதுப்புது அர்த்தங்கள் எல்லாம் தோன்றின.

அதுவும் எப்படி???

பழைய மாடல் நோக்கியா போனில் எவ். எம் றேடியோ கேட்டுக் கொண்டு வந்தவன் வீட்டு வாசலிற்கு வர
“ இதுதான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி-----“ என்று அது பாட ----

எந்தவித சிந்தனையுமின்றி வந்தவன் அந்தப் பாட்டை றேடியோவுடன் சேர்ந்து பாடினான். அந்த பாட்டைக் கேட்டதும் லயாவின் மூளையில் உச்சஸ்தாயியில் அலாரம் அடிக்க அலர்ட் ஆனவள் என்னது முதல் ராத்திரியா?? என்று அதிர்ந்து போனாள் பெண். அட கடவுளே! இதை எப்படி மறந்து போனேன் என்று தன்னையே நொந்து கொண்டு அவள் இருக்க----

இரும்பு நெற் கதவு பட்லாக்கால் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்தவன் ----

“நான் விஷ்ணு வந்திருக்கிறேன் கதவைத் திற” என்று குரல் கொடுத்தான். இவனது முதல் இரவுப் பாட்டைக் கேட்டபின்பும் வந்து கதவைத் திறக்க அவளுக்கென்ன லூசா???

அவள் கதவைத் திறக்கும் அறிகுறி எதுவும் தெரியாமல் போக வீட்டின் பின்புறமாக இருந்த ஜன்னல் கதவை தட்டிக் கதவைத் திறக்கச் சொன்னவனது குரல் கேட்டும் கேட்காதது போல இருந்தவளது காதில் றேடியோவில் ஒலிபரப்பப்பட்ட ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு-------என்ற பாடல் தப்பாது கேட்க ஏதோ இந்த பாடல்களை எல்லாம் அவன்தான் எழுதி சிச்சுவேஷனல் சாங்காகப் பாடுகிறான் என்பது போல ஆத்திரம் கொண்டவள் முதல் இரவு ஒன்றுதான் இந்த கல்யாணத்திற்கு குறையாக இருக்குது என்று எண்ணி பற்களை நற நற என்று கடித்துக் கொண்டு இருக்க ----

சரி சற்று நேரம் வெயிட் பண்ணுவோம் என்று நினைத்தவன் வீட்டின் முன்புறம் இருந்த கல்லில் வந்து அமர்ந்து கொண்டு ஸ்ரேசனை மாற்றி மாற்றி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்க எல்லா ஸ்ரேசன்களிலும் அவனுக்கு சதி செய்வது போல பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

அவளுக்கிருந்த கொதிநிலையைப் பற்றியோ இல்லை அவனுக்கு எதிராக எவ் எம் ஸ்ரேஷன்கள் செய்யும் சதி பற்றியோ இல்லை தனது விதி பற்றியோ எதனையும் உணராது இருந்தவனுக்கு எப்படா வீட்டினுள் போய் உடைகளை மாற்றி ஒரு குளியல் போட்டுவிட்டு தூங்குவோம் என்றிருந்தது.

அதைவிட பால் வேறு ஆறிக்கொண்டிருந்தது. ப்ளாஸ்கை விட்டுவிட்டு கடைக்குப் போனதால் ஒரு போத்தலிலேயே இவன் பாலை வாங்கி வந்திருந்தான்.

மேலும் ஒரு பத்து நிமிஷம் பொறுத்துப் பார்ப்போம் என்று இவன் நினைத்து இருக்க-----

“நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை----
இன்று முதல் இரவு ----நீ என் இளமைக்கு உணவு

என்ற பாடல் போக அந்த பாடலை றேடியோவுடன் சேர்ந்து தானும் ஹம் பண்ணிக் கொண்டிருந்தான்.

அவளுக்கிருந்த கடுப்பை அதிகரிப்பது போல மேலும் பல பாடல்கள் ஒலிபரப்பப்பட அவற்றில் பல பாடல்கள் விவகாரமான பாடல்களாக இருக்க அவளது கொதிநிலை 200 பாகை சென்ரிகிறேட்டில் இருக்க-----

இவள் கதவு எதனையும் திறக்க மாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டவன் ஒரு கல்லை தேடியெடுத்துக் கொண்டு வந்து பாட்லாக்கை உடைத்தான் வீட்டின் உள்ளே வருவதற்காக.

இவன் லாக்கை உடைக்கிறான் என்பதை சத்தத்திலிருந்தே தெரிந்து கொண்டவள் விவகாரமான காட்சியில் வில்லனுடன் மோத தயாரான ஹீரோயின் போன்ற மனநிலையில் இருக்க உள்ளே வந்தவனோ கொண்டு வந்த கொத்து பரோட்டா பார்சல்களையும் பால், பழங்கள் உட்பட அனைத்தையும் வெளியில் இருந்த கதிரையில் வைத்துவிட்டு அறையின் உள்ளே போய் டவல் மற்றும் மாற்று உடுப்புகளை எடுத்துக் கொண்டு குளிக்க போக நினைத்து கதவைத் தட்ட இப்போதும் அவள் கதவைத் திறந்தாளில்லை.

“பால் ஆறப்போகுது வெளியிலை வந்தால்தான் என்ன?” என்றவன் “பழம் கொத்து பரோட்டா எல்லாம் இருக்கு வா வந்து சாப்பிடு” என்றான் மதியம் அவளை அழைக்காது உண்டதை ஈடு செய்வது போல.

நான் பரோட்டா தின்ன நீ என்னைத் தின்னவா??? என்று மனதினுள் கவுண்டவுண் கொடுத்தவள் மௌனமாக இருந்து கொண்டாள்.

அவளிடமிருந்து பதில் எதுவும் வராது போக பூட்டியிருந்த கதவை யோசனையுடன் பார்த்தான். பூட்டியிருந்தாலும் அந்த கதவைத் திறப்பு இல்லாமலே திறக்கும் சூட்சுமம் அறிந்தவன், தான் அறிந்த நுட்பத்தின் மூலம் அந்த கதவைத் திறந்து கொண்டு சேட்டைக் களற்றியபடி உள்ளே வந்தான்.

சுவருடன் பல்லியைப் போல ஒட்டிக்கொண்டிருந்த இவளின் பல்ஸ் தாறுமாறாக எகிற என்னைத் தொடட்டும் அப்போ இருக்கு பூஜை என்று கறுவியபடி இவள் இருக்க -----


இவள் ஒட்டிக்கொண்டிருந்த சுவரிலிருந்த ஹங்கரில் சேட்டை மாட்டுவதற்காக அதனைக் களற்றியபடி இவள் இருந்த பக்கம் வந்தவன் இவளை நெருங்க----

டேய்! கிட்ட வந்தியோ உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று கத்தியபடி இவன்மேல் பாய்ந்து தாக்கத் தொடங்கினாள் அவள்.

எல்லோருக்கும் முதல் இரவு கட்டில் யுத்தம் என்றால் இவர்கள் இருவருக்கும் அது கடும் யுத்தமாகிப் போயிருந்தது. முதல் இரவன்றே மனைவியிடம் சாத்துபடி வாங்கிய ஒரே ஒரு கணவன் என்ற பெயரைப் பெற்று கின்னஸில் இடம் பிடித்திருந்தான் விஷ்ணு.

இந்த பாவத்திற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அந்த ஊரில் இருந்த எல்லா எவ். எம் றேடியோ ஸ்ரேசனுக்கும் இருந்தது.

அவன்கள் போட்ட பாட்டுகள் இவனது வாழ்க்கைப் படகை அதகளப்படுத்தி கவிழ்த்து விட ஐயோ பாவம் என்று பரிதாபப்படும் நிலையில் மலைத்துப்போய் நின்றிருந்தான் அந்த புதுமாப்பிள்ளை.

இந்த பாவத்தையெல்லாம் எவ். எம் காரன்கள் எங்கே கொண்டுபோய் கழுவப்போறாங்களோ தெரியவில்லை. அப்படி இருந்தது அவன் பட்டுக்கொண்டிருந்த கொடுமை.

அந்த நகரில் அவனைத் தெரிந்தவர்கள் யாரும் அவனுக்குக் கிட்டவந்து கேம்க்கு கேட்க மாட்டார்கள். அவனது ஆறடி உயரமும் கட்டுமஸ்தான தோற்றமும் அவனுக்கு வரும் கோபமுமே அதற்குக் காரணம்.

என்ன பிரச்சினையென்றாலும் கையால் பேசிய பின்னரே அவன் வாயால் பேசும் பண்பு கொண்டவன். சிவானந்தம் ஆசிரமத்தில் இருந்த காலம் வரை உடற்பயிற்சி கட்டாயம் என்பதால் அன்று பழகிய அந்தப் பழக்கத்தை இன்று வரை அவன் கடைப்பிடிப்பதால் ஆரோக்கியமான ஆண்மகன் அவன்.

ஆண்களே பயப்படும் அவனை, அவனது மனைவி மஞ்சள் கயிறென்று அவன் கொடுத்த ஆயுதத்தைப் பயன்படுத்தி தாக்கோ தாக்கென்று தாக்கியிருந்தாள்.

அன்பே சிவம் என்று ஜெயாந்தம் ஐயா திரும்பத்திரும்ப போதித்து வளர்த்தாலும் அடிக்கு பின்னரே அன்பு என்ற அசையாத கொள்கையில் நம்பிக்கை கொண்டவனது மனையாளும் அதே பாலிசியை பின்பற்றுபவள்தான் தானும் என்பதை முதல் நாளிலேயே காட்டி பின்வந்த நாட்களில் அவனது அன்புக்காக ஒற்றைக் காலில் தவமிருக்கத் தயாராகிவிட்டதை சூட்சுமமாக அறிவித்திருந்தாள்.

வாழ்க்கையில் முதற்தடவையாக ஒரு யுத்தகளத்தில் வெல்லுவதற்காக அவன் தோற்று நின்றது சம்பவம் மட்டுமில்லை சரித்திரமும் கூட.

உண்மையில் லயாவின் தாக்குதலில் விஷ்ணு ஒரு கணம் பயந்து தான் போனான். அவனுக்கு இவள் ஏன் தன்னை அடிக்கிறாள் என்பது புரியவில்லை. தனியே இருந்தததானால் பயந்து லூசாகி விட்டாளா?


இல்லை முதலிலிருந்தே லூசா? இதனால் தான் இஞ்ஜினியருக்குப் படித்துக் கொண்டிருந்த இவளை அந்தாள் என்ரை தலையில் கட்டி விட்டாரா?

இவள் படித்துக்கொண்டுதான் இருந்தாளா? இல்லை பைத்தியக்கார ஹாஸ்பிட்டலில் தான் இருந்தாளா? என்னடா இது!! ஒரே குழப்பமாக இருக்கு என்று நினைக் கொண்டிருந்தவன் அவனுக்கு இருந்த குழப்பம் காரணமாக இவளது தாக்குதலைத் தடுக்க முனையவில்லை. இவள் கொடுத்த அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு சிலைபோல நின்றிருந்தான் அவன்.

ஆனாலும் அடிப்பதை இவள் நிறுத்தாது போடா வெளியில ----என்று கத்த உணர்வு வரப்பெற்றவன் இவளது கையை பிடித்தான் இவளை நகர்த்தி விட்டு கங்கரில் சேட்டைக் மாட்டுவோம் என்ற எண்ணத்தில். அவ்வளவுதான் உக்கிரகாளியாகி அவனது கையை இவள் கடித்து வைக்க----

ஆ----- என்று அலறியவன் லூசாடி நீ----என்றான்.


லூசு தாண்டா நான் லூசேதான். உன்னை கட்ட சம்மதிச்சேனே நான் லூசு தான்டா. என்னை கல்யாணம் செய்ய உனக்கு என்ன தகுதியிருக்கு? ஆஃப்ரர் ஆல் ஒரு மெக்கானிக் நீ-------

என்ரை தகுதிக்கு எங்க வீட்டிலை வேலைக்காரனாக இருக்கக்கூட லயக்கில்லை


உனக்கு------- இதிலை ஃப்ஸ்ட் நைட் கேட்குதோ? என்று கத்தி தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டிருக்க ---

அவளுக்கு வழங்கியிருந்த மனைவி என்ற பதவியை அவன் வாபஸ்வாங்கி பலமணிநேரம் கடந்திருக்க மௌனமாக அவள் சொல்வதை எல்லாம் மனதில் பதிய வைத்துக்கொண்ருந்தான் அவன்.

அவளுக்கு மட்டுமல்ல அவளது அப்பா உட்பட யாருக்குமே அவனைப் பற்றித் தெரியவில்லை. அவளை வேண்டாம் என்று அவளது வீட்டிலிருந்து மதியம் திரும்பும் போதே அவன் முடிவெடுத்திருப்பதையும் எடுத்த முடிவிலிருந்து சுலபமாக அவன் மாற மாட்டான் என்பதையும் தனது வீட்டில் தன்னுடன் அவள் இருக்கின்றாள் என்பதற்காகத்தான் அவன் அவளுக்குச் உணவு வாங்கி வந்திருக்கின்றான் என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை. அவனது மனதில் தோன்றிய அந்த ஒரு துளி சந்தோஷத்திற்கு காரணம் அவளால் அவனது தனிமையும் வெறுமையும் காணமல் போனதேயாகும்.

“காத்திருந்தவன் பெண்டாட்டிக்கு----“ சரியான விளக்கம் கொடுக்காமல் அவனது வாழ்க்கையில் உறவினள் என்ற இடத்தையே அவள் பெறமுடியாது என்பதையும் புரியாதவள் மேலும் மேலும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி நிலைமையை சிக்கலாக்கிக் கொண்டிருக்க முகம் இறுகிப்போக நின்றிருந்தவன் கிணற்றடிக்குச் சென்று குளித்துவிட்டு தனக்கான உணவை உண்டபின் கயிற்றுக் கட்டிலை தூக்கி வெளி வராண்டாவில் போட்டுக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.


தனது பேச்சிற்கு எதிர்வினை எதுவும் காட்டாது அவன் நடந்து கொண்டவிதம் அவளை யோசிக்க வைக்க இத்தனை களேபரத்திற்குப் பின்பும் அவன் வாங்கி வந்த உணவை உண்பதை ஈகோ தடுக்க வெறும்வயிற்றுடன் அந்த அறையினுள் படுத்துக் கொண்டாள். பசியில் தூக்கம் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்க தந்தையின் பக்கம் நினைவைத் திருப்பியவள் நாளைக்கு அப்பாவினது ஆப்பிரேஷன் சக்ஸஸ் ஆக வேண்டும் என்று கடவுளை வேண்டியபடி இரவினைக் கடக்க முயற்சித்தாள்.

அவனும் தூக்கம் வராமல்தான் தவித்துக் கொண்டிருந்தான் காரணம்தான் வேறு. நாளை மாமாவினது ஆப்பிரேஷன் அவனால் ஹாஸ்பிட்டலுக்கு நேரத்துடன் போக முடியாது. புதிதாக வந்திருக்கின்ற ஸ்டாக்குகளை குடோனில் கொண்டு போய் அடுக்குவதை மேற்பார்வை செய்ய வேண்டும் பாங்கிற்கு பணம் போடவேண்டும். இல்லையென்றால் செக்குகள் பவுண்ஸ் ஆகிவிடும். ஆடிட்டரிம் போக வேண்டும் இப்படி பல வேலைகள் நாளைக்கே செய்து முடிக்கப்பட வேண்டியிருந்தன.

அதே நேரம் இவள் நடந்துகொள்ளும் விதம் அவனை யோசிக்க வைத்திருந்தது.

தூக்கத்தைத் தொலைத்திருந்த இருவரும் அதிகாலையில் எழுந்து வந்தனர். இவளது முகத்தை விஷ்ணு திரும்பிக்கூடப் பார்த்தானில்லை. ஆனாலும் அவனது பார்வையில் பட்டுக்கொண்டுதான் அவள் இருந்தாள். தனது காலைக் கடன்களை முடிப்பதற்காக வாளியை எடுத்துக்கொண்டு கிணற்றடிக்கு வந்தவளுக்கு தண்ணீரை கிணற்றிலிருந்து அள்ளும் வகை தெரியவில்லை.

வாளியில் கட்டிய கயிறு காலுக்கு மிக நெருக்கமாக இருக்க அந்த பெரிய வாளியைக் கிணற்றினுள் இவள்விட விரைவாக அது உள்ளே சென்றது மட்டுமல்லாது வெளியிலிருந்த கயிற்றையும் உள்ளிளுக்க கயிறு இவளைக் கிணற்றினுள் இழுக்கப்போகிறது என்பதை கண்டு கொண்டவன் பாய்ந்து ஓடிவந்து இவளைப் பிடித்துக் கொண்டான்.

தன்னையறியாமலே சீ---- என்று சொன்னவளிடம் என்ன சீ? என்று பதிலுக்கு கேள்வி கேட்டான் கணவன்.

சீ---- என்னைத் தொடாதை--- நீ தொட்டால் அருவெருப்பாக இருக்கு---கரப்பான் பூச்சியைத் தொட்டமாதிரி இருக்கு என்று சொன்னவளை அப்படியா? ரொம்ப நல்லது என்றவன் நக்கல் சிரிப்புடன் விலகிப் போக அந்த சிரிப்பின் அர்த்தத்தை புரிந்துகொள்ளத் தெரியாதவள் மிதப்பாக

அவனுக்கெதிராஎல்லா தாக்குதல்களையும் தொடுத்து முடித்து அவன் கடைக்குப் புறப்படுவதற்கு முன்பாகவே புறப்பட்டு ஹாஸ்பிட்டலுக்கு வர அன்றைய நாள் சரியாக விடியவில்லை என்பது அவளுக்குத் தெளிவாக்கப்பட்டது விதியினால்.

இவள் ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர இவளது தந்தை யாரும் காணமுடியாத இடத்திற்கு சென்றிருந்தார். எதிர்காலம் பற்றிய பயம் விஸ்வரூபம் எடுக்க மேலும் மேலும் சிந்திக்க முடியாது தலை விறைத்துப்போக ஏதுவும் செய்யத் தோன்றாது நின்றிருந்தவள் மெல்ல மயங்கிச் சரிந்தாள்.


(தொடரும்)


 
Last edited:
Top