கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி ----+அது- அத்தியாயம் 4

sanchumahen

New member
டியர் அன்பூஸ்

இந்த அத்தியாயம் முதல் கதை அன்று, இன்று என இருவழிகளில் பயணிக்கப் போகின்றது. இதோ நான்காவது அத்தியாயம் படித்துப் பாருங்கள்.

அன்று

அழகர்புரம் கந்தசுவாமி கோவிலில் மிகக்கோலாகலமாக மணவாளக்கோல பெருவிழா நடந்து கொண்டிருக்கின்றது. கந்தவேள் அழகரும் அவர் மனைவி வள்ளியம்மையும் முன்னின்று காப்புக்கட்டி பக்தி சிரத்தையுடன் எல்லாவிதமான சடங்கு சம்பிரதாயங்களையும் நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

கந்தவேள் அழகர் தோற்றத்தில் நாட்டாமை படத்தில் வரும் சரத்குமார் போல குடுமி எல்லாம் வைத்து கடுக்கண் போட்டு பட்டுவேட்டி சகிதம் இருப்பார் என்று யாராவது நினைத்தால் அது ரொம்ப தப்பான கணிப்பீடு.

இவர் அந்த நாளிலேயே படிததவர். பொறியியல் துறையில் நிரம்ப ஆர்வம் கொண்டவர் இதனால் ஊரிலுள்ள சொத்துக்களை அப்பா வடிவேல் அழகரும் அம்மா தெய்வானையும் கவனிக்க தனது கனவு தொழிலான வாகனங்களுக்கு உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வளர்ந்து வரும் டவுனான அறிவியல் நகரில் சில பல வருடங்களுக்கு முன்னர் வந்து குடியேறியிருந்தார்.

அழகர்புரம் மற்றும் அதனது சுற்று வட்டாரத்தில் 'அழகர் குடும்பம்' என்றால் அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் 100 கிலேமீற்றர் தள்ளியிருக்கும் இந்த ஊரில் வந்து குடியேறி தனது கனவை நோக்கி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வளரும் கந்தவேள் அழகர் அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு அறிமுகமான மனிதராக வளர்ச்சியடைய ஆரம்பித்திருந்தார்.

கந்தவேள் அழகரின் மனைவி வள்ளியம்மை ஒற்றைப் பெண் இவரது தூரத்து உறவான மாமாவின் மகள் இவர்களைப்போலவே செல்வச் செழிப்புமிக்க குடும்பம்.

இறைவன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை வடிவேல் அழகர் தாய் தந்தையருக்கு ஒற்றை மகன் அதே போல கந்தவேள் அழகரும் ஒரே மகன் அதுமட்டுமல்ல கந்தவேள் அழகருக்கும் வாரிசு ஒன்றுடன் நின்றுவிட்டது. அதுவும் ஊரில் உள்ள கோவில்கள் எல்லாவற்றிற்கும் நேர்த்தி வைத்து பலவருட மணவாழ்க்கையை தனிமையில் தம்பதிகள் இருவரும் கழித்த பின்னரே பிள்ளையைக் கொஞ்சும் பாக்கியத்தை இறைவன் கொடுத்திருந்தான்.

அவ்வாறு பிறந்த தம் மகனுக்க தமது பரம்பரை வழக்கப்படி மகனது பெயரின் பிற்பாதி அழகரில் முடிவடைவதுபோல வைத்துக்கொண்டாலும் அவனை அழகன் என்றே அழைத்தனர். அழகன் உண்மையிலேயே பேரழகனாகத்தான் இருந்தான்.

அவனது சிவந்த நிறமும் உயரமும் பார்க்கும் நபர்களைப் பால் பேதமின்றி மறுமுறை பார்க்க வைக்கும். குணத்திலும் தங்கக் கம்பி. ஒழுக்கமானவன் அத்துடன் இரக்கமானவனும் கூட.

தாத்தா வடிவேல் அழகரின் சிலம்பு சுற்றும் லாவகம் எல்லாம் சிறுவயது முதற்கொண்டே கைவரப் பெற்றவன். அப்பா கந்தவேள் அழகரது இலட்சிய பயணத்தை தன் பயணமாக வரித்துக்கொண்டவன்.

வழமையாக எல்லா பாட்டன்களுக்கும் உள்ளதுபோல் வடிவேல் அழகருக்கு பேரன் அழகன்மேல் கரைகாணாத பாசம். அவனது தோற்றத்தில் ஊரில் உள்ள மங்கையர்கள் மயங்கினரோ இல்லையோ தாத்தா மயங்கிக்கிடந்தார். காரணம் அவரது பார்வையில் பேரன் அவரது தாயின் சாயலிலும் நிறத்திலும் இருந்ததுதான்.

இதனால் ஊருக்குப் பேரன் வந்தால் கண்ணடிபடாது பாதுகாத்தவரது பாதுகாப்பு வேலிகளைத்தாண்டி ஒரு ஜோடிக்கண்கள் அவனைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டன.

அந்த கண்களுக்குச் சொந்தக்காரி பவதி என்று சுட்டுப் பெயரால் அழகனால் அழைக்கப்படும் ஒரு அழகிய நங்கை. வயது 18. இவனது பால்யதோழன் மூர்த்தியின் தங்கை.

இன்றைய தினம் வள்ளியம்மைக்கும் கந்தவேள் அழகருக்கும் மிக முக்கியமான நாள் அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று கந்தவேள் அழகர் வள்ளியம்மையைக் கைபிடித்த நன்னாள் மற்றையது அவர்களது அருமருந்தன்ன புத்திரன் அழகனது பிறந்தநாள்.

எதிர்பாராத விதமாக இந்த நாளில் மணவாளக்கோல பெருவிழாவும் இம்முறை வந்துவிட்டதனால் பெருமகிழ்ச்சியடைந்த வடிவேல்அழகர் தனது வாரிசுகளுடன் ஓரிரு நாட்களையாவது களிக்கலாம் என்று ஆர்வம் கொண்டிருந்தார்.

அதுவும் எண்பதுகளின் நடுப்பகுதியில் இருக்கும் வடிவேல்அழகருக்கு மனைவி தெய்வானை ஒரு வருடத்திற்குமுன் சுமங்கலியாக போய் சேர்ந்தபின் துணையாக இருப்பது கோயிலும் தர்ம பணிகளும் மட்டும்தான்.

தாயார் காலமானதன் பின்னர் கந்தவேள் அழகர் தனது அப்பாவைத் தன்னுடனே அழைத்துச் செல்ல எடுத்த முயற்சிகள் எல்லாவற்றினையும் தனது சொந்த ஊரைவிட்டு பட்டணத்தில் வந்து தன்னால் வீட்டினுள் அடைபட்டிருந்து காலத்தைக் கழிக்க முடியாது என்று சொல்லியே முறியடித்திருந்தவர் மகன் குடும்பத்துடன் ஊர்வரும் நாளுக்காக காத்திருப்பதை வெளியில் சொல்வதில்லை.

மகன் அவரது ஏக்கத்தை புரிந்து கொள்கிறானோ இல்லையோ மருமகள் வள்ளியம்மை இதனை எல்லாம் பொறுக்க மாட்டாள் என்பதை அவர் நன்கு அறிவார். அவ்வளவு இளகியமனம் வள்ளியம்மைக்கு

அழகன் இவர்களது ஊரிலிருந்து 250 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டவுனில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருவதால் இன்றைய விழாவிற்கு வரமாட்டேன் என்று அவன் முதலிலேயே அறிவித்துவிட்டான் இருந்தாலும் மகன் இந்த நன்நாளில் அந்த கந்தப்பெருமானின் திருவருள் கடாட்சத்தால் வந்துவிடமாட்டானா என்ற நப்பாசை வள்ளியம்மையை ஆட்டிக்கொண்டு இருந்ததனால் யாகத்தில் ஒரு கண்ணும் வழியில் ஒரு கண்ணுமாக தவித்துக்கொண்டிருந்தவரது தவிப்பு கணவரான கந்தவேள் அழகருக்குப் புரியாமல் இல்லை.

கந்தன்மேல் கொண்ட காதலோ இல்லை இரு காந்த விழிகள் மேல் கொண்ட நேசம் காரணமாக தனது மகன் எப்படியும் திருவிழாவிற்கு வந்துவிடுவான் என்ற செய்தியை வள்ளியம்மை மட்டுமல்ல கந்தவேள் அழகர்கூட அறிந்திருக்கவில்லை.

ஹாஸ்டலில் தங்கியிருந்து பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்த அழகன் கைக்கு வந்ததிருந்தது ஒரு காதல் கடிதம் அந்தகடிதத்தை எழுதிய இவன் மனம் கவர்ந்தவளோ அழகனை எவ்வாறாகிலும் மணவாளக்கோல பெருவிழாவிற்கு வருமாறு அன்புக் கட்டளை இட்டிருந்தது மட்டுமன்றி இந்த திருவிழாவில் தனக்கும் அவனுக்கும் திருமணம் நடக்கவேண்டும் என்று பாற்குடம் எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தவள் அந்த நேர்த்தியை அவள் முடிக்கும்போது அவன் அருகிலிருந்தால் கந்தன் அருள் கடாட்ஷம் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும் தனது நம்பிக்கையை வெளியிட்டிருக்க அந்த நம்பிக்கையை பொய்யாக்க விரும்பாத அழகனும் தங்களது குலதெய்வத்தையும் தனது குடும்பவிளக்காகப் போகின்றவளையும் காண முடிவெடுத்தான்.

இருப்பினும் ஊருக்குப் புறப்படுவதை எண்ணும்போது மனம் சற்றுக் குற்றக் குறுகுறுப்பில் சுணங்கிக்கொண்டது. இரண்டு நாட்களுக்கு முன் அவனது உயிர்த்தோழனும் வருங்கால மைத்துனன் என்று இவன் நினைப்பவனுமான மூர்த்தி திருவிழாவிற்கு ஊருக்கு செல்வதாக தெரிவித்தபோது தான் இம்முறை வரமாட்டேன் என்றும் அதுபற்றி தனது அப்பா அம்மா மற்றும் தாத்தா ஆகியோருக்கு அறிவித்துவிட்டதாகவும் சொல்லி தான் ஹாஸ்டலிலிருந்து படிக்கப் போவதாகவும் சொல்லியிருந்தான்.

திடீரென ஊருக்குப்போய் மூர்த்தி முன் நிற்க அழகனுக்குச் சங்கடமாக இருந்தது. பாவம் மூர்த்திக்கு அவனது தங்கையும் அழகனும் நடத்தும் காதல் நாடகம் தெரிந்திருக்கவில்லை.

தெரிந்திருந்தால் அதற்கு ஒருபோதும் சம்மதித்திருக்க மாட்டான் என்பதுடன் அதனை எப்பாடு பட்டும் தடுத்திருப்பான் என்பதும் உண்மை.

மூர்த்திக்கு அழகன்மேல் இருப்பது நட்பையும் தாண்டிய ஒரு பாசம். வடிவேல்அழகர் எவ்வளவுக்கு எவ்வளவு பரோபகாரமான எண்ணம் கொண்டவரோ அவ்வளவுக்கு அவ்வளவு குடும்ப பாரம்பரியம் பார்ப்பவர்.

மூர்த்தியின் குடும்பம் பல குழறுபடிகள் கொண்டது. அவனது அப்பா ஒரு பொறுப்பான குடும்பத்தலைவனாக நடந்து கொண்டதில்லை. காசு வைத்து சீட்டு விளையாடுவதுடன் திருட்டுப்பழக்கமும் உண்டு. தென்னை, மாந்தோப்புகளில் திருடுவது ஆடுமாடுகளைத் திருடிவிற்பது போன்றன அவருக்கு கைவந்த கலை. அந்த குடும்பத்தின் மூத்தமகன்தான் மூர்த்தி. மூர்த்தி மிகவும் நல்லவன் படிப்பில் படுகெட்டிக்காரன்.

தம்பியோ அப்பாவுக்கு அவரது தொழிலில் உதவியாக இருக்க நொந்துபோன மூர்த்தி “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற எண்ணத்தில் வடிவேல் அழகரிடம் போய் நின்றான் தனது கல்விக்கு உதவி செய்யும்படி.

தனது பேரனது வயதுப் பையன் படிப்பை யாசிக்க அதற்கு மறுப்பு சொல்ல விரும்பாத வடிவேல் அழகர் அவனைப் படிக்க வைக்க முன்வந்தார். எந்தவித பாரபட்சமும் காட்டாது தனது பேரன் படித்த பள்ளியில் அவனைச் சேர்த்துவிட்டதுடன் அவனது கல்விக்கான ஏனைய செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். வடிவேல் அழகர் செய்த உதவிகளால் இன்று அவன் சிவில் இஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கின்றான்.

அவன்படிக்கும் அதே யூனியில்தான் அழகனும் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் செய்து கொண்ருந்தான். இருவரும் ஒரே ஹாஸ்டல் றூமில் தங்கியிருந்தனர். ஆனாலும் தனது பொருளாதார நிலைமையையோ அல்லது அழகனது குடும்பம் செய்த உதவிகளையோ மூர்த்தி என்றும் மறந்தானில்லை.

என்னமோ தன்னை அழகனது பாடிகார்ட் போன்று பாவனை செய்து கொண்டு நடப்பவன் அவனுக்கு நண்பன் போலவும் அடிமைபோலவும் நடந்து கொள்ள ‘டேய் ஓவரா பண்ணாதடா’ என்று அழகன் அடிக்கடி அவனை எச்சரித்துக் கொண்டிருப்பான்.

அழகன் மூர்த்தியுடன் பேசி நட்பு பாராட்டுவதை வடிவேல் அழகர் ஒருபோதும் விரும்பியதில்லை. ஹாஸ்டலில் ஒன்றாக ஒரே றூமில் தங்கியிருப்பதை அறிந்த போது ‘இதையெல்லாம் தவிர்க்க முடியாது ஆனாலும் அவரவர் அவரவர் இடத்தில் இருப்பதே நல்லது’ என்று அழகனிடம் மட்டுமல்ல மூர்த்தியிடமும் பலதடவைகள் அவர் கூறியிருக்க அழகன் ஊரிற்கு வந்திருக்கின்றான் என்று தெரிந்தாலும் மூர்த்தி அவனைச் போய் பார்க்க மாட்டான் என்பதால் அழகனே தனது பைக்கை எடுத்துக்கொண்டு இவனிடம் வருவான்.

அப்படி வருபவனையும் அவன் வீட்டினுள் அழைத்து உபசரிக்கமாட்டான். அவனுக்கு வயதுக்கு வந்த தங்கை ஒருத்தி இருப்பதால் யாரும் அழகனைப்பற்றியோ அல்லது அவளைப்பற்றியோ தப்பாக எதுவும் பேசிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணம்தான் காரணம்

அழகன் மூர்த்தியுடன் பேசுவதையே விரும்பாத வடிவேல் அழகர் தனது பேரனை பவதிக்குக் கட்டி வைப்பாரா? இவையெல்லாம் தெரிந்தும் அழகன் தனது அம்மா வள்ளியம்மை நிச்சயம் தன்பக்கம் நிற்பார் என்று துணிந்து காதல் கடலில் குதித்தவன் மூர்த்தியால் வரும் இடையூறுகளைத் தவிர்க்க அதை அவனிடமிருந்து மறைத்துவிட்டான்.

தாத்தா வீட்டிற்கு வந்த அழகன் அவசர அவசரமாக குளித்து வேட்டி சட்டை சகிதம் கோவிலுக்குப் புறப்பட்டான். மனம் முழுவதும் பாற்குட பவனி தொடங்கியிருக்குமா? பவதி என்னைக் காணோமே என்று வருத்தப்படுவாளே என்ற சிந்தனையில் சுழன்று கொண்டிருக்க எட்டி நடைபோட்டவன் கோவில் வாசலுக்கு வர வள்ளியம்மையின் கண்கள் மகனைக் கண்டுகொண்ட ஆனந்தத்தில் பூரிப்பை வெளிப்படுத்த வழமையாக பேரனைக் கண்டதும் மலரும் வடிவேல் அழகரின் முகம் யோசனையைக் காட்டியது. அவரது வேலையாள் சின்னான் சொன்ன தகவல் அப்படி.

இரண்டு நாட்களுக்குமுன் இவரது விசுவாசியும் நம்பிக்கைக்கு உரியவனுமான சின்னான் அழகன் பற்றி தான் அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட சில செய்திகளைப் பட்டும் படாமலும் இவரிடம் தெரிவித்திருக்க பேரன் பற்றிய கதையைத் தொடரவிடாது தடுத்தவர் அவதானித்துப் பார்ப்பது என்று முடிவெடுத்திருந்தார்.

அவருக்குத் தெரியும் மகன் கந்தவேள் அழகரோ மருமகள் வள்ளியம்மையோ பேரனது விருப்பத்திற்குக் குறுக்கே நிற்க மாட்டார்கள் என்பது.

அதேசமயம் குலப்பெருமை ஏதுமற்ற திருட்டுக் குடும்பத்திலிருந்து பெண் எடுப்பதற்கான தேவை எதுவுமே அவர்களது குடும்பத்திற்கு இல்லை. தனது பேரனுக்கு திருமணம் செய்யப்போவதாக இவர் உற்றார் உறவினர்களுக்கு அறிவித்தால் போதும் ஒரு சுயம்வரம் நடத்தும் அளவிற்கு அவர்கள் ஏற்பாடு செய்து விடுவர். ஆனால் இங்கு வரிசையில் காத்திருக்கும் கன்னியரில் தன்மனதிற்குப் பிடித்தவளை பேரன்தான் தெரிவு செய்ய வேண்டியிருக்கும்.

அவ்வளவு தகுதி தராதரம் உள்ளவன் போயும்போயும் ஒரு திருட்டுக் குடும்பத்ததுப் பெண்ணை விரும்புவானா என்று சிந்தித்தவர் மனதில் அவனது வயது இவைகள்பற்றி எதனையும் சிந்திக்கவிடாது என்ற எண்ணம் வந்திருக்க பேரன் திருவிழாவிற்கு வரமாட்டான் என்ற செய்தி முதலில் ஆறுதலை அவருக்குத் தந்திருந்தது. ஆனால் இன்று திடீரென வந்த பேரனின் அலைப்புறும் கண்கள் வேறு செய்தியைச் சொல்ல அவரும் இந்த பருவத்தைத் தாண்டிவந்தவர்தானே அவருக்கு இவைகளைப் பற்றிப் புரியாதா என்ன? தான் அடுத்துச் செய்யவேண்டியவைகள் பற்றி தெளிவான முடிவை எடுத்தவர் செயற்படுத்துவதற்கான நேரத்திற்காகக் காத்திருந்தார்.

கோயிலின் உள்ளே வந்த அழகன் தாயைக் கண்டதும் விரைந்து சென்று அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்தாலும் மாரியம்மன் கோயிலிலிருந்து பாற்குடம் எடுத்துவருவோர் இன்னும் வந்து சேராததால் வழிமேல் விழி வைத்து அவர்களை எதிர்பார்த்திருந்தான்.

இதோ உடுக்கை ஒலியுடன் தவில் நாதஸ்வரம் முழங்க மஞ்சள் சேலையணிந்து அபிஷேகத்திற்கான பாலை குடங்களில் எடுத்துக்கொண்டு இளம்பெண்கள் ஒவ்வொருவராக உள்ளேவர அழகனிடத்தில் ஒரு பரபரப்புத் தொற்றிக்கொண்டது.

பேரனின் கண்கள் காட்டும் ஜலங்களில் அவனது உள்ளத்தைப் சந்தேகமறப் புரிந்து கொண்ட வடிவேல் அழகர் தான் விரைந்து செயற்படவேண்டிய அவசியத்தையும் உணர்ந்து கொண்டார்.

அதேசமயம் வந்து கொண்டிருக்கும் பெண்களில் தன்னவளைத் தேடிச்சலித்துப்போன அழகனின் முகமோ அப்பட்டமான ஏமாற்றத்தைப் பூசிக்கொண்டிருந்தது. இந்த நேர்த்தி எவ்வளவு முக்கியமானது என்று எனக்கு எழுதியவள் ஏன் பாற்குடம் எடுக்கவில்லை? அவளை மட்டுமல்ல மூர்த்தியையும காணவில்லையே ஏன்?

இன்று

லயா தனது தாய்வீட்டிற்குப்போய் நாளையுடன் முப்பதொரு நாட்கள் முடிவடையப்போகின்றது. அப்பா இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கின்றாளா? இல்லை -----இல்லை இவனைத் திருமணம் செய்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கின்றாளா? என்பதில் விஷ்ணுவுக்குக் குழப்பம் இருப்பதென்னவோ உண்மைதான். அவனது பார்வையில் அவன் வாழும் வீடு இருண்டுதான் போய் இருக்கின்றது. அவனுக்கு திருமணம் ஆன அன்று அந்த வீட்டிற்கு வந்த உயிர்ப்பு அன்றுடன் இல்லாது போயிருந்தது.

சுப்பிரமணியன் இறந்துபோன செய்தியைக் கேட்டு மயங்கிப்போய் கிடந்தவளை அவளது பெரியம்மா பார்வதிதான் ஒருவாறு வீடு கொண்டுவந்து சேர்த்திருந்தார். அப்பாவின் உடல்மேல் விழுந்து கதறி இவள் அழுததைப் பார்த்தால் கல்லும் கரையும்.

ஏனப்பா இப்படி செய்தனீங்கள்? என்று இவள் கதறியது அவர் உயிரை விட்டதற்கா இல்லை அவளுக்குப் பிடிக்காத இந்த திருமண பந்தத்தில் அவளை மாட்டிவிட்டதற்கா? இவன் மனதில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது.

நாளைய தினம் சுப்பிரமணியனுக்கான சிரார்த்தம் நடைபெற இருப்பதுடன் அவரது மரணவீட்டில் கலந்து கொண்டவர்களுக்கு உணவும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

மதிய உணவிற்கு அழைக்கவும் தீர்மானித்திருக்க அதற்கான வேலைகளில் மும்முரமாக அவரது மூத்த இரு மருமகன்களும் தீயாய் வேலைசெய்ய அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கமுடியாத வேலைப்பழுவில் திணறிக்கொண்டிருந்தான் விஷ்ணு.

விஷ்ணுமீது லயாவிற்கு பல காரணங்களால் எரிச்சல் ஏற்பட்டிருந்தது. அப்பா இறந்ததன் பின் விஷ்ணுவை இவள் எட்டாவது நாள் தான் பார்த்தாள். இடையில் நடந்த சடங்குகளில் கலந்து கொள்ள அவன் வரவில்லை.

இவன் தனது அப்பாவினது காரியங்களில் கலந்து கொள்ளாது தவிர்க்கிறான் என்ற நினைப்பினாலும் அக்காமார் அவரவர் கணவன்களுடன் செய்யும் சடங்குகளில் இவள் தனித்து நின்று செய்ய "லயா புருஷன் எங்கே?" என்று கேட்ட உறவினர்களுக்கு பதில் சொல்ல முடியாது நின்றதால் வந்த குன்றலாலும் இவனைக் கட்டியதால் எல்லோரும் தன்னைப் பரிதாபமாகப் பார்க்கின்றரோ என்ற எண்ணத்தினாலும் மலையளவு கடுப்பு இவன்மீது ஏற்பட்டிருக்க ஆற்றாமையில் அவள் பொங்கிக் கொண்டிருந்தாள்.
அந்த பொங்கல் நாளாக நாளாக சேர்ந்து கொண்டுதான் சென்றது.

அவனோ அன்று சுடுகாட்டிலிருந்து நேராக தனது வீட்டிற்குச் சென்றவன் எட்டாம் நாள் காரியத்தன்று ஒரு ஊரவன்போல் பட்டும் படாமலும் நின்றுவிட்டுச் சென்றிருந்தான்.

பாவம் அவளுக்கு ஒரு சராசரி மனைவியாக தனது கணவனுக்கு உரிய இடத்தை உறவினர் மத்தியில் தான் கொடுக்கவில்லை என்பது புரியவும் இல்லை. அதைச் சரிசெய்து அவளை அவன்புறம் திருப்ப அங்கே யாருக்கும் மனம் இருக்கவும் இல்லை.

இவனுக்குத்தான் மாமாவின் தொழிலைவிட்டு ஒரு நொடிகூட விலகியிருக்க முடியாத அளவிற்குப் பொறுப்புகள் மலைபோல குவிந்திருந்தது. அவர் நோயில் விழுந்த நாள் தொடக்கம் இவன் பொறுப்பெடுத்திருந்தாலும் இவனுக்கும் தொழில் தொடர்பான அனுபவம் ஏதுமில்லையே!! சமாளிக்க முடியாது திணறித்தான் போயிருந்தான்.

நல்ல காலம் கணக்கர் சோமு உடனிருந்து கைகொடுத்தார். மாமாவுக்கு இருந்த பல்வேறு தொழில்களில் யார் யார் சம்மந்தப் பட்டிருக்கின்றார்கள் என்பதைப்புரிந்து கொள்ளவே இவனுக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டிருந்தது.

ஆனாலும் இவன் கற்றுக்கொள்ளும் வேகத்தைப் பார்த்த சோமு இது இரத்தத்தில் ஊறிய சமாச்சாரம் என்று சொல்லுமளவிற்கு அவன் வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றான்.

ஏதோ நண்பனின் சொத்து அழியக்கூடாது என்று அந்த குருவப்பாவும் வந்து உதவி செய்கின்றார். மாமாமீது அந்த குருவப்பாவிற்கு இருந்த நட்பு பிரமிக்க வைத்திருந்தது. எவ்வளவுதான் உதவி செய்தாலும் இவனை நெருங்க மறுக்கும் அவரது போக்கு இவனுக்குப் பிடிபடமாட்டேன் என்கின்றது.

அதுவும் மாமாவிற்கு கொள்ளி இவன்தான் போடவேண்டும் என்று மாமா சொன்னதாக மாமி சொன்னபோது பொங்கியெழுந்தவர் யாருக்கு யார் கொள்ளி போடுவது? சீ என்ன அருகதையிருக்கு ? என்று தொடர்ந்தவர் மாமியினது பரிதாபமான பார்வையைச் சந்தித்ததும் ------

நெருப்பு வைச்ச வரைக்கும் எல்லாம் போதும் நேற்று தாலி கட்டியவனை கொண்டு இன்றைக்குக் காரியம் பார்க்க வைப்பீர்களா? என்று மெல்லிய குரலில் வார்த்தைகளைக் கடித்துத்துப்ப-----

அவருக்கு தன்னை மாமாவினது எந்த விசயத்திலும் ஈடுபடவைப்பதில் ப்ரியமில்லை என்பதைப் புரிந்துகொண்டவன் மாமாவினது அன்புக்காவேனும் செய்யலாம் என்ற நினைப்பு இருந்தாலும் எதுவும் ரசாபாசமாக நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஒதுங்கியிருந்து கொண்டான்

மாமாவின் வருமான மட்டம் அவனை மலைக்கச் செய்திருந்தது. அடடா இவ்வளவுக்கு லட்சங்களில் மாத வருமானமா? அவன் முழுதாக ஆயிரங்களைப் பார்த்ததே டுபாய்க்கு வேலைக்குப் போனபின்னர் தான். இங்கானால் மாதாந்த வருமானம் லட்சங்களில் அதுவும் ஹாட்வெயர் கடையின் வருமானத்தை தவிர்த்து.

அந்த நகரில் மட்டுமல்லாது அருகில் இருந்த நகரத்தில்கூட பல கடைகளுக்கு மாமா சொந்தக்காரராக இருக்க வாடகை வருமானமே பல லட்சங்களாக இருந்தது. இது தவிர வயல்கள், பண்ணைகள், தென்னம் தோட்டங்கள், மாந்தோப்புகள் என்று ஏராளம் ஏராளம். இவ்வளவு வாய்ப்புகளும் வசதிகளும் உடைய மாமா ஏன் அம்மாவையும் அவனையும் வறுமையில் வாடவிட்டார்?

“நான் ஒரு தற்குறி---- பாவி ----உன்னைக் கொண்டு வந்து தெருவிலை விட்டுட்டேனே ஐயா” என்று அம்மா இறந்த அன்று அழுதாளே ஏன் அப்படி அழுதாள் ?

அதுதான் பார்வதி அம்மா ஏதோ அம்மாவை நடத்தை சரியில்லாத பெண். அப்பாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவள் என்று மாமாவிற்கு எட்டாம் நாள் படையல் செய்த அன்று சொன்னாவே---

அம்மாவை நினைக்க நினைக்க பாவமாக இருந்தது அதுவும் கடைசி நாட்களில் அவர் அணிந்திருந்த கிழிசல் சேலைகள் ------எனக்குக்கூட நல்ல உடை என்று எதுவும் இருந்ததில்லையே.

அப்பா அம்மாமீது வீணாகச் சந்தேகப்பட்டு விட்டாரா? எதற்கு உடுத்த உடையுடன் அந்த வீட்டைவிட்டு வெளியே வந்தா அம்மா? ரோசம் காரணமாக இருக்குமோ --இல்லை அப்பா இறப்பதற்குமுன் ஏதாவது சொல்லியிருப்பாரா? யோசிக்க யோசிக்க குழப்பங்கள் கூடிக்கொண்டே சென்றன தெளிவுதான் கிடைக்கவில்லை.

வேலை ஒருபுறம் சென்றாலும் மனம் இன்னெருபுறம் வேலை செய்ய அதனைக் மாற்றுவது போல ஒரு போன் கால் மாமாவின் வக்கீலிடமிருந்து வந்திருந்தது.

அவனை மாலை 5 மணியளவில் மாமாவின் வீட்டிற்கு வரவேண்டும் என்று தொடங்கியவர் மாமாவின் சொத்துக்களது நிர்வாகம் தொடர்பாக பேச வேண்டும் என்றதும் அல்லாது இவன் கட்டாயம் அங்கே அவர் வரும்போது இருக்கவேண்டும் என்று சொல்ல அந்த வீட்டிற்கு போவதை நினைத்த மாத்திரத்தில் அவனுக்கு எரிச்சல் மூண்டது.

அவன் திருமணம் முடித்து சென்ற அன்று பார்வதி அம்மாள் நடந்து கொண்ட முறை அவனை முடிந்தவரை மாமாவின் காரியங்களில் ஈடுபடவிடாது குருவப்பா தடுத்த விதம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வீட்டினது முற்றத்தை மிதிப்பதை நினைத்த மாத்திரத்தில் ஒரு ஒவ்வாமை உணர்வை அவனுக்குத் தோற்றுவித்துக் கொண்டிருக்க வரும்போது குருவப்பாவையும் அழைத்து வரும்படி வக்கீல் சொன்னது ஒவ்வாமையக் கூட்டிவிட்டது.

குருவப்பாவுடன் போய் மாமாவின் சொத்து நிர்வாகத்தைப்பற்றிக் கதைப்பதா? சரிதான் பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பது போல என்றிருந்தது விஷ்ணுவிற்கு.

மனதின் ஒரு பகுதி வெட்கம் கெட்டுப்போய் அவனது கையால் தாலி வாங்கியவளைப் போய்ப் பார்ப்போமா என்று கேட்க அவளை எதற்கு உனக்கு? அவள் உனக்கு வேண்டாம் என்றது அறிவு.

எட்டாம் நாள் படையலின்போது நடந்தவைகள் நினைவுக்கு வந்தன. அவன்தான் அடுத்தவர் வீடுகளில் உண்ணமாட்டானே ஆனால் அங்கே அவனது மனைவி உட்பட யாருமே அவனை உணவு உண்ணும்படி கேட்கவில்லை. அப்படி ஒரு மரியாதை அவனுக்குக் கிடைத்திருந்தது. அன்றும் அவனுக்கு சோறுபோட்டது தவம் அண்ணாவின் மெஸ்தான். அவரும் இவனிடம் எதுவும் கேட்கவில்லை. இவனும் அவருக்கு எதுவும் சொன்னானில்லை

குருவப்பா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று அவரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு இவன் லயாவின் வீட்டிற்கு வர என்றும் இல்லாதவாறு லயாவின் அம்மா பாமதி உள்ளே வாங்கோ மருமகன் என்று அழைக்க அதிர்ந்து போய் நின்றிருந்தது இவனல்ல இவனது அன்பு மனைவி லயாதான்.

உடன் வந்த குருவப்பாவை இவன் பார்க்க அவரது முகத்திலிருந்த எள்ளல் தெளிவாகவே தெரிந்தது. அதைவிட லயாவை அழைத்த பாமதி இவனுக்குக் குடிப்பதற்கு குளிர்பானத்தை அவளிடமே கொடுத்து அனுப்பிவிட அவள் இவன்மீது மலைபோல தேக்கி வைத்திருந்த எரிச்சல் வெளிப்படத் தொடங்கியது வெளிப்பூச்சு இன்றி.

ஓஹ்! மகாராஜாவிற்கு கூல் றிங்ஸ் கேட்குதோ? பழைய கஞ்சிக்கே வழியில்லாதவருக்கு உபசாரம் வேறா??? என்று பொருமினாள்.

ஆத்திரத்தில் குமுறிக்கொண்டிருந்தாலும் அம்மாவின் வார்த்தைகளை மறுக்க முடியாதவள் முகத்தில் அப்பட்டமான எரிச்சலைக் காண்பித்துக்கொண்டே யூஸைக்கொண்டுவந்து இருவருக்கும் பரிமாறினாள்.


சாதாரணமாக அந்தஸ்த்துத் தொடர்பாக இப்படியெல்லாம் நினைக்கும் பண்பு இல்லாதவள் தான் லயா,

தந்தை இறந்தபின் ஃபைனல் இயர் லெக்சருக்கு வந்தவளை அவளது ஃபிரண்ட்ஸ் இவளுக்கு நடந்த திருமணத்தைச் சொல்லி அப்படிக் கேலி செய்திருந்தனர்.

இன்னும் ஹாஸ்டலில் இருந்த இவளது அறைத்தோழிகள் இவள்மீது பரிதாபப்பட்டு சொல்வது போல பேசிய பேச்சுக்களால் நொந்து போய் இருந்தவளுக்கு விஷ்ணுதான் தனது அப்பாவின் மனதைக் கலைத்து தன்னை திருமணம் செய்திருக்கின்றான் என்ற எண்ணம் தோன்றியிருக்க இவளது பெரியம்மா பார்வதியின் பேச்சுக்கள் அவளது எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல இருக்க அவன்மீது கொலைக்காண்டில் அவள் இருந்தாள்.

குளிர்பானத்தை இவனுக்க வழங்குவதற்காக வர அவனது வாழ்க்கையில் முதற்தடவையாக மாமாவீட்டில் அளிக்கப்படும் உபசாரத்தில் சிறிதளவில் தயங்கி நின்றாலும் உறுதியாகவே அவைகளை அவன் மறுத்தான்.

“இல்லை நான் கூல் றிங்ஸ் குடிக்கிறதில்லை“ என்றவன் கஞ்சிக்கே வழியில்லை இதிலை கூல் றிங்ஸ் எதற்கு என்று முணுமுணுத்தபடி எழுந்து சென்று வெளியில் நின்றுகொண்டான். தான் மனதில் நினைத்வைகளுக்கு அவன் வார்த்தையால் வடிவம் கொடுத்தது அதிர்ச்சியை அளிக்க அவனது இந்த செய்கை முதற்தடவையாக லயாவை அவனைக் கவனிக்க வைத்தது.

மாமாவின் வக்கீல் தனது பிந்திய வருகைக்காக மன்னிப்பைக் கேட்டபடி உள்ளே வந்தவர் சுப்பிரமணியன் உயில் எழுதி வைத்திருப்பதாகச் சொல்லி அவரது அசிஸ்டென்ட்டை அவர்களது ஃபைல்லை எடுத்து வரும்படி கூற மூத்த இரு மருமகன்களும் உயில் எழுதியிருக்கிறாரா என்று ஒன்றாகவே கேட்டனர்.

ம்---- என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவர் உயிலை வாசிக்கத்தொடங்க அங்கே நிலவிய அசாத்திய அமைதியை முதலில் கலைத்தது லயாதான்

அப்பா ஒரு நாளும் இப்படியெரு உயில் எழுதியிருக்க மாட்டார். இவன் இந்த விஷ்ணுதான் ஏதோ செய்திருக்கிறான் என்று அவனைக் குற்றம் சுமத்த அவளது இரு அக்காக்களும் எதுவும் பேசாது எழுந்து உள்ளே அழுது கொண்டு ஓடினர்.

சுப்பிரமணியன் எழுதிய உயில்படி அவரினது அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தும் விஷ்ணுவிற்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

அதுவும் தடையற்ற உரிமை யாரும் எந்தவிதமான இடையூறும் செய்யமுடியாதபடி.

ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்த குருவப்பா இதைவிட கேவலமான வேலை உலகத்தில் இருக்காதுப்பா. இந்த கேவலத்திற்கு பிச்சையெடுத்து பிழைப்பது மேலான விசயம் என்றவர் தோளிலிருந்த துண்டை உதறியபடி வெளியே செல்லத்தொடங்க மூத்த இரு மருமகன்களும் விஷ்ணுமேல் பாய்ந்திருந்தனர்.

அவர்கள் இருவரையும் ஒரே அடியில் விழுத்தியவன் என்னங்கடா எங்கிட்டேயேவா என்று உதறிவிட்டு செல்ல முனைய பார்வதியம்மாள்---

“டேய் நீ உருப்பட மாட்டாய். நாசமாய்தான் போவாய் நீ இப்போ இருக்கிற நிலமே அந்த பைத்தியக்கார பயந்தாங்கொள்ளி மனுஷன் இவங்க இரண்டு பேருக்கும் ஹாஸ்பிட்டல் கட்டக் கொடுத்தது தான்டா. உன்னை துரத்திவிட்டிட்டு அந்த நிலத்தை இவங்களுக்கு கொடுக்கிறேன் என்ற மனிஷன் எப்டிடா எல்லாவற்றையும் உனக்குத் தந்தார்?” என்று காட்டுக் கத்தல் கத்த அவரின் குரல் கேட்டு வெளியே சென்றுகொண்டிருந்த குருவப்பா மீண்டும் உள்ளே வந்து----

நீங்க இந்த கேள்வி எல்லாவற்றையும் சுப்பிரமணியனிடம் போய் கேளுங்கோ என்றவர் இவனது கையைப்பிடித்தபடி வெளியே வர தனது தாய் தமக்கைமார் யாருக்கும் எதுவுமில்லாது சொத்து முழுவதையும் இவனுக்குக் கொடுத்ததில் வெகுண்டு போயிருந்த லயா ----

சீ---- பெத்த அப்பன் யார் என்று தெரியாத உனக்கு சொத்து சுகம்போய் சேர பரம்பரை பரம்பரையாக எங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை நீ கொண்டு போயிடுவியா?

உன்ரை அப்பன் அந்த மூர்த்தியிட்டை போய் சொத்தை கேள். என்ரை அப்பா தாத்தாவினது சொத்து எதுவும் உனக்கு வர நான் விடமாட்டேன் என்று சூழ் உரைத்தவள் அவளது அம்மா பாமதி தந்த அடியில் சுருண்டு போய் விழுந்தாள்.

இவளது பேச்சைக்கேட்டு ஆவேசம் பொங்க திரும்பிய குருவப்பா பேசுவதற்கு முன்னரே

“வாயை மூடடி அறிவு கெட்ட கழுதை. யாரைப்பற்றிப் பேசுறாய் என்று தெரியுதா??உன்ரை மாமியை பற்றி.

அவங்களோடை மகன் தான் உனக்குப் புருஷன் என்றது மறந்து போச்சா?
அப்பாவுக்குப் பண்ணிக்கொடுத்த சத்தியம் எல்லாம் அவ்வளவு தானா?
செத்துப்போனவர் என்ன திரும்ப வந்து கேட்கப்போறாரா என்ற நினைப்பா?

அவங்க உன் புருஷனுக்கு அம்மா. உங்க அப்பாவுக்கு அக்கா. என்னடி பேசுறாய் நீ?” என்று பொரிந்தவரை ஈன பிறவியைப் பார்ப்பது போல பார்த்து வைத்த குருவப்பா “அந்த உத்தமிக்கு இப்படியொரு பெயரைக் கொடுத்தா சாகடிச்சீங்க?” என்று கேட்டுவிட கையெடுத்துக் கும்பிட்ட பாமதி----

தப்புத்தான் அண்ணா-- தப்புதான்--- எம்பொண்ணு பேசினது எல்லாமே தப்புத்தான் மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்று கெஞ்சத் தொடங்க அந்த ஸீனுக்குள் நுழைந்த பார்வதி அம்மாள்

என்ன பாமா இந்தாளைப் பார்த்து எல்லாம் பயப்பிடுறாய்? என்க

போதும் நிறுத்து அக்கா! இது என்ரை குடும்ப பிரச்சினை. நீ தலையிடாதே என்று சொன்னதும் அல்லாமல் பார்வதி அம்மாளின் கையைப் பிடித்து இழுத்து வந்து வீட்டுக்கு வெளியில் விட----

அம்மாவுக்கு எதற்கு இத்தனை கோபம் வருது என்று புரியாத லயா குழம்பிப்போய் நிற்க போன வேகத்தில் உள்ளே வந்த பாமதி இவளது உடைகள் இருந்த ரவலிங் பேக்கை கொண்டு வந்து வெளியில் வைத்தவர் நீ இந்த வீட்டில் ஒரு நிமிஷம்கூட நிற்கக்கூடாது வெளியிலை போ என்று விரட்டியடித்தார்.

தனது தாயை லயா கேவலமாகப் பேசியபோதே அவளை அடித்து நொருக்கும் எண்ணம் கொண்டிருந்தவனது உடல்மொழியைப் புரிந்து கொண்டுதான் பாமதி மகளை தனது அடியிலிலிருந்து காப்பாற்ற அடித்திருக்கின்றார் என்பதைப் புரிந்து கொண்டிருந்தான் விஷ்ணு.

அவரது மூத்த இரு மருமகன்களுக்கும் இவன் கொடுத்த அறை அவனைப்பற்றிச் சொல்ல தனது சின்ன மகள் இதையெல்லாம் தாங்கமாட்டாள் என்பதை புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக அவளை அடித்திருந்தார். இது தாக்குதல் அல்ல மகளைக் காப்பாற்றும் முயற்சி. நினைக்க நினைக்க விஷ்ணுவிற்குக் கொதித்தது.

அந்த நிமிஷம் அவன் முடிவெடுத்தான் அவனது பெயரில் மாமா எழுதிய எந்த ஒரு சொத்தையும் யாருக்கும் திருப்பி கொடுப்பதில்லை என்று.

(தொடரும்)
 
Last edited:
Top