sanchumahen
New member
அன்று
அழகனைப் பார்த்து பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அவனைப் பற்றி எந்த தகவலும் தெரியாத பவதி எப்படி அவனைத் தொடர்பு கொள்வது என்று தெரியாது கவலையில் மூழ்கி இருந்தாள். பிரிவுத்துயர் அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. பாவம் அவளுக்கு வடிவேல் அழகரது புத்திசாதுரியம் தெரிந்திருக்கவில்லை.
கந்தவேள் அழகர் வீட்டிலும் வடிவேல் அழகர் வீட்டிலும் இருக்கும் தொலைபேசி இணைப்பு இவர்கள் இருவரையும் கச்சிதமாகத் துண்டித்து விட்டிருந்தது.
மகனுடன் பேசும் போது பேரன் ஊருக்கு வருவது பற்றி அறிந்து கொள்ளும் வடிவேல் அழகர் அவன் அறிவியல் நகர் வருவதற்கு முதல் நாளே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு மகனது வீட்டில் வந்து தங்குவதை சில மாதங்களாக வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தான் அழகர்புரம் செல்வதைத் தடுக்கத்தான் தாத்தா தங்களது வீட்டிற்கு வருகின்றார் என்பதை முதலில் புரிந்து கொள்ளாத அழகன் பவதியைச் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காமல் தவித்துப் போனான்.
இவனுக்கும் பயிற்சிக்காலம் என்பதால் அடிக்கடி விடுப்பும் எடுக்கமுடியவில்லை. தான் அறிவியல் நகர் வரும்போதெல்லாம் சரியாக ஆஜராகும் பாட்டனை அதிசயத்துடன் பார்த்தாலும் தான் மீண்டும் ஊருக்குத் திரும்பும்வரை அழகர்புரம் போகமல் அவர் தங்கியிருப்பது சந்தேகத்தை கிளப்ப நிலைமையை உற்று நோக்கியவன் கண்டு கொண்டான் இது தன்னை அழகர்புரம் வரவிடாது தடுக்கும் உத்தி என்பதை.
ஆக தாத்தாவிற்கு தான் பவதியைக் காதலிக்கும் விசயம் தெரியவந்திருக்கின்றது என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்து கொண்டவன் தனது புத்திசாலித்தனத்தை மூத்த தலைமுறைக்குக் காட்ட முடிவு செய்தான்.
தாத்தாவை எதிர்க்க முடியாது என்பதால் தனது தாயாரை கையில் போட்டுக் கொண்டு காரியத்தை சாதிக்க முடியும் என்று நம்பியிருப்பவன் அடுத்ததடவை தான் ஊருக்கு வருவதைப் பற்றி முன்னறிப்பு எதுவும் தராமல் வந்ததுடன் இம்முறை பவதியை அழகர்புரம் போய் பார்ப்பது என்று முடிவு செய்து காய்களை நகர்த்தியிருந்தான்.
மூர்த்தி கட்டுமாண கம்பனி ஒன்றில் பயிற்சியில் இருக்க இவனது மெக்கானிக்ல் இன்ஜினியரிங் தொடர்பான பயிற்சிக்காக இவன் வேறு இடத்தில் இருந்ததால் பவதிக்கு போய் சேரும்படியாக ஒரு கடிதத்தை மூர்த்தியின் பெயருக்கு எழுதி அதில் தனது தற்போதைய முகவரி முதல் தான் அழகர்புரம் வரும் தேதிவரை மூர்த்திக்கு எழுவது போல எழுதியிருந்தான்.
மூர்த்தியின் அழுத்தம் காரணமாக பவதியைப் பத்தாவதுவரை படிக்க அனுமதித்த நாகராசனும் கணேசனும் அவள் பெரியவளானதும் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டிருந்தனர். இதனால் ஊரில் இருக்கும் மற்றப் பெண்களைப் போலல்லாது இவள் எழுதப்படிக்கத் தெரிந்தவளாக இருந்தாள்.
அழகனின் கையொழுத்துடன் மூர்த்திக்கு விலாசமிடப்பட்டு வந்த கடிதத்தை வாங்கிப் படித்தவளுக்கு கடிதம் மூர்த்திக்கல்ல தனக்கானது என்பது புரிந்து போனது.
அதுவும் தாம் இருவரும் இஜ்ஜினியரிங் முடித்ததை நண்பர்களுடன் கொண்டாட வேண்டும் என்றும் வடிவேல் அழகரது தென்னம் தோப்பு வீட்டில் ஆடடித்து விருந்து வைப்பதற்கு தான் ஆயத்தம் செய்வதாக அவன் எழுதியிருந்த பிற்குறிப்பு அவளை அவன் அங்கே வரச் சொல்வதாக இருக்க அதைப்புரிந்து கொண்டவள் கடிதத்தை மறைத்து வைத்துக்கொண்டாள்.
அவன் வரவிற்காக இவள் காத்திருக்க இவர்களது காதல் நாடகத்தை எப்படியாவது முடிவிற்குக் கொண்டுவர வடிவேல் அழகர் திடம் கொண்டு அயலூர் சென்றிருக்க பாட்டனிடம் கொண்ட பாசம் காரணமாக அவரைப் பார்க்காமல் ஊர்திரும்ப முடியாது என்று திடமாக மறுத்தவன் பெற்றோரிடம் சம்மதம் பெற்றுப் பாட்டன் வீட்டிற்கு வர தாத்தா வீட்டில் இல்லாதது பேரனுக்கு சாதகமாக அமைந்துவிட காதல் கடலில் முக்குளிக்க தென்னந்தோப்பை நாடிப்போனான்.
மீண்டும் பெரிய வீட்டில் வேலை செய்வதற்கென வந்திருந்த பூரணியின் மனம் மகிழ்ச்சியி;ல் பொங்கியெழுந்து பிரவகித்துக் கொண்டிருந்தது. காரணம் சித்தப்பன் மாணிக்கராசன் மனம் மாறியதால் அல்ல. அம்மா ஸ்தானத்தை மகளுக்குக் கொடுக்காத லக்க்ஷ்மி மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தது தான்.
மாணிக்கராசன் இந்த செய்தியில் மார்பை நிமித்திக் கொண்டு திரிந்தாலும் அதில் எதிர்பார்ப்பேதும் இல்லாத சந்தோஷம் அடைந்த ஆத்மா பூரணி மட்டும் தான்.
சும்மாவே மழைமேகம் போல அடுத்தவர்மீது அன்பை பொழிபவளுக்கு அவளின் ‘அக்கா’ முப்பதாவது வயதில் மீண்டும் தாய்மை அடைந்திருப்பது அவளைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்த தன்மீது கரிசனை காட்டாத தாய்மீதுகூட அவளால் மட்டுமே அன்பு செலுத்த முடியும் என்பதை காட்டினாள்.
அவளது அன்பும் அக்கறையும் லக்க்ஷ்மிக்கு குற்றக் குறுகுறுப்பை ஏற்படுத்தியதென்றால் மாணிக்கராசனுக்கு பூரணியை மேலும் மேலும் வருத்த இன்னும் ஒரு வழிகிடைத்திருக்க எல்லா வீட்டு வேலைகளையும் அவளைக் கொண்டே செய்வித்தவன் அவளை உழைத்துவர வேலைக்கு அனுப்பவும் தவறவில்லை.
இங்கோ பவதியும் எரிமலைபோல குமுறிக்கொண்டுதான் இருந்தாள். எதிர்பாராத விதமாக அவளது தாய் சில நாட்களுக்கு முன் மயக்கி விழுந்திருக்க அவளை நாடிபிடித்துப் பார்த்த வைத்தியர் அவளது தாய் கர்ப்பம் தரித்திருப்பதாகச் சொல்ல ஆத்திரம் மேலிட ஓவென்று கத்தி அழுத பவதி -----
என்ன இது சோதனை? அத்தான் வேறு இரண்டு நாட்களில் வருகிறாரே! இந்த பாவி மனுஷிக்கு இத்தனை வயதுக்கு மேல் பிள்ளை தேவைதானா? என்று பொங்கிப் போனாள்.
கிராமப்புறங்களில் மிக இளவயதில் மணம் முடிக்கும் பல பெண்கள் தமது மகள்கள் தாய்மை அடையும் போது தாமும் தாய்மையடைவது சகஜம் என்றாலும் பவதியின் குத்தல்கள் குதறல்கள் தாங்கமுடியாது துவண்டு போனாள் காவேரி.
அதுவும் நாற்பத்தியிரண்டு வயதில் அவளால் மசக்கையைச் சமாளிக்க முடியாதிருக்க சத்தான ஆகாரம் இன்றி இரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டவள் நோயாளி போலவே இருக்க அவளது தோற்றம் பார்ப்போருக்கு இரக்கத்தைத் தோற்றுவித்த போதிலும் பெற்ற மகளோ கண்ணாடிக்கு முன்னே நின்று காலத்தைக் கழிக்க பொறுப்பற்ற திருடர்களான கணவனும் இரண்டாவது மகனும் தம்மை தாம் கவனித்தனரே தவிர அவளைப் பேண மறந்தனர்.
கையில் சூடு வைக்கப்பட்ட பின்னர் ஊரில் வேலை எதுவும் கிடைக்காததால் இருவரும் வேற்று ஊர்களுக்கு பிழைப்புத் தேடி சென்ற போதிலும் இவர்கள் போகும் இடமெல்லாம் இவர்களது வீர பிரதாபங்கள் போய்விட எந்த ஒரு இடத்திலும் நிதந்தரமாக பிழைப்பதற்கு வழிகிடைக்கவில்லை.
பவதி சுயநலம் மிக்கவள் என்பது தாய் அறிந்திருந்த போதிலும் அவளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் வெறுப்பிற்கும் கோபத்திற்கும் முகம் கொடுப்பது கடினமாகவே பட்டது காவேரிக்கு.
பவதியின் கோபத்திற்குக் காரணம் தனக்குத் திருமணம் செய்யும் வயதில் தாய் மீண்டும் தாய்மை அடைந்திருப்பது தான். பெரிய வீட்டினர் திருமணம் பேச வரும்போது இந்த மனுஷி வயிற்றை தள்ளிக்கொண்டு நின்றால் நல்லாகவா இருக்கும்?? சீச்சீ--- என்ன இழவடா இது? என்று எரிச்சல்பட்டவள் சொல்லாலும் செயலாலும் தாயை துன்புறுத்தினாள்.
பெற்ற மகள் முன் கூனிக்குறுகி நின்றிருந்த காவேரியிடம் இந்த குழந்தை வேண்டாம் கருவைக் கலைத்துவிடு என்று மகள் கட்டளையிட மருத்துவிச்சியிடம் சென்றவளுக்கு கருக்கலைப்பு செய்யும் காலம் கடந்துவிட்டது என கைவிரித்துவிட்டார் மருத்துவிச்சி.
தாயின் கர்ப்பத்தைக் கலைக்க முடியாது என்பதை அறிந்த நாள் முதல் முகத்தை கடுகடுவென வைத்தபடி வலம் வந்தவளுக்கு இன்னும் கொஞ்சக் காலம் தானே இந்த தரித்திரத்தில் தான் புரள்வது என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது.
இவை போதாதென்று சில நாட்களாக ஒரு சந்தேகப் பேயும் தன்பங்கிற்கு அவளை ஆட்டுவித்துக் கொண்டு இருந்தது.
பெரியவீட்டினரின் அந்தஸ்த்து முன் தன் குடும்பம் தூசியாக இருக்க தனது தமையனுக்கே கல்வியை பிச்சையாக போடும் குடும்பம் தன்னை மருமகளாக ஏற்குமா? அதுவும் பல மாதங்களாகத் தன்னைக் காணாது இருக்கும் அழகன் தன்னை கழட்டிவிட்டான் என்றால் என்ன செய்வது?
எப்படியாவது அவனைத் தன் கையுக்குள் போட்டு விலகிவிடாதபடி வைத்திருக்க வேண்டும் என்று ஓயாது நினைத்துக் கொண்டிருந்தாள்.
அழகன் ஊருக்கு வரும் நாளை எண்ணிக்கொண்டு இருந்தவளுக்கு அவன் வரும்நாள் வந்ததும் மகிழ்ச்சி பதட்டம் என்பன ஒன்றாக வந்து போயின. ஒருதரம் சந்தோஷம் பொங்கினால் ----அடுத்த தடவை அவன் கைவிட்டாமல் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி பதட்டத்தைக் கொண்டு வந்தது.
அவனைப் பார்க்கப்போவதற்காக அழகாக தன்னைச் சிங்காரித்துக் கொண்டதுடன் ஒரு நாளும் இல்லாத திருநாளாக தாயின் இரத்தச் சோகைக்கு பொன்னாங்காணி கீரை நல்லது என்றபடி அதைப் பறித்து வரப்போவதாகச் சொன்னவள் பனை ஓலையால் செய்த கடகத்தை எடுத்துக் கொண்டு வடிவேல் அழகரது தென்னம் தோட்டத்திற்கு விரைந்தாள்.
தென்னந்தோப்பிலிருந்த தென்னோலையால் வேயப்பட்ட வீட்டின் உட்புறம் வந்தவளை இரு கரங்கள் ஆரத்தழுவிக் கொண்டன.
அத்தான்----- என்று துள்ளிக் குதித்தவள் அவன் எதிர்பார்க்க முன்பே அவனை முத்தமழையில் குளிர்விக்க கள்ளுண்ட மந்தியாய் கிறுகி நின்றான் அழகன்.
“நீங்க என்னை நினைக்கயில்லை தானே!” என்று கோபித்தவளை இழுத்து தனது மடியில் போட்டுக் கொண்டவன் “ஆமா உன்னை நினைக்கவில்லை தான்” என்று ஒத்துக் கொண்டு காதலியின் ஊடலுக்கு களம் அமைக்க முகத்தை திருப்பிக் கொண்டவளிடம்
“மறந்தால் தானே நினைப்பது செல்லம் “ என்று கொஞ்சியவன் கழுத்தில் தன் கரங்களை மாலையாகப் போட்டு தன்னுடன் அணைத்துக் கொண்டாள் அவனது மங்கை.
அத்தான் என்னை கைவிட்டிட மாட்டீங்க தானே? என்று தனக்கு புதிதாக முளைத்த சந்தேகத்தை அவனிடமே கேட்டவளுக்கு “உன்னை நான் மறப்பது என்னை நான் மறந்தபின்னர் தான் செல்லம்” என்று ஆர்த்மாத்தமாகப் பதில் சொன்னான் கள்ளம் கபடம் ஏதுமற்ற அந்த உண்மைக் காதலன்.
அவனது பேச்சில் உள்ளம் குளிர்ந்தவள் மீண்டும் மீண்டும் அவனைக் கட்டியணைக்க அந்த அணைப்பு ஆண்மகன் அவனின் தாப உணர்வைத் தூண்டிவிட உடலும் உள்ளமும் உன்மத்தம் கொண்டு அவளை அடையத் துடித்தது ஒருபுறம் என்றால் அவனது வளர்ப்புமுறை விழித்துக் கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போராட பவதியின் அத்துமீறிய அணைப்புக்கள் மீண்டும் மீண்டும் அதேசுழலில் அவனைத் தள்ளிவிட ----
அவனைக் காட்டிலும் அவனைக் கட்டிக் கொள்வதில் பவதி காட்டிய வேகம் வித்தியாசமானதாக இருக்க மனக்கண்முன் மூர்த்தி வந்து நின்றான்.
கடவுளே நான் என்ன செய்ய இருந்தேன் என்று தன்னைத்தானே நொந்து கொண்டவன் “இப்போ இது தப்பு செல்லம்” என்று அவளுக்குப் புரியவைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.
தன்னைத் தானே கடிந்து கொண்டு மீண்டும் தன்னை நிலைப்படுத்தியவன் அவனது எண்ணங்கள் ஒரு நிலைப்பட்டதும் அவளை விலத்தி அமர ஏமாற்றத்துடன் பார்த்தவள் அமர்ந்தவன் மடியில் படுத்துக் கொண்டு அவனது இடுப்பை இறுக கட்டிக் கொண்டு அவளைத் திருமணம் செய்யும் நாளைப் பற்றி கேட்க இன்னும் சில மாதங்கள் பொறுக்கும்படி கேட்டவனுக்கு தனது தாத்தனுக்குத் தன்மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தை அவளிடம் பகிர்ந்து கொள்ள மனம் வரவில்லை.
தனது தாத்தாவின் எண்ணப்போக்கை அறிந்தால் அவள் தங்கள் வீட்டிற்கு வாழ வந்தபின் இவையாவும்; அவளை தன்னைப் பெற்றவர்கள் மீதும் தன்னை உயிராக எண்ணும் தாத்தாமீதும் வெறுப்பை கொண்டு வந்து உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்தி விட்டுவிடும் என்று நினைத்தவன் அனைத்தையும் அவளிடமிருந்து மறைத்தான்.
தான் சொல்லாமல் மறைக்கும் வார்த்தைகள் தனது வாழ்க்கையில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் எத்தகையவை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
இன்று
விஷ்ணுவும் லயாவும் ஒரே வீட்டில் வசிக்கத்தொடங்கி நான்கு மாதங்கள் சென்றிருந்தன. இவள் இடைநடுவில் சில மாதங்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்தாலும் பாமதி அம்மாவின் நச்சரிப்புத் தாங்க முடியாது வார இறுதிநாட்களில் இவனது வீட்டிற்கு வந்து தங்கி சென்று கொண்டிருந்தாள்.
அந்த வீட்டில் அவள் அனுபவிக்கும் தனிமை பெரும் கொடுமையாக இருக்க அங்கே அவளுக்கு இருக்கும் ஒரே துணையான ‘மௌனகுருவை’ (அதுதான் அவள் விஷ்ணுவுக்கு வைத்திருக்கும் பெயர்) கவனிக்க அதுவே அவளைத் தூண்டியது.
காலையில் எழுந்தது முதல் அவன் செய்யும் அத்தனை வேலைகளும் அவளுக்கு அத்துப்படி. அவனும் அதே ஒழுங்கை எப்போதும் பின்பற்ற இவளுக்கு அவன் அடுத்ததாக என்ன செய்யப் போகிறான் என்பது நன்றாகவே தெரியும். அதனால் மனதுக்குள் அவனை நேர்முக வர்ணனை செய்தபடி இருப்பாள்.
இப்போது மௌனகுரு வாசல் பெருக்குகிறார்------அடுத்தாக மோட்டாரை ஓடவிட்டு தண்ணீர் பாய்ச்சப் போகிறார்-----இதோ நேரம் காலை 5 மணி 20 நிமிடங்கள் தனது காகக்குளிப்பை (காகம் குளிப்பது போல விரைவாக குளிக்கிறானாம்) முடிப்பதற்காக வாளியுடன் கிணற்றடிக்குப் புறப்படத் தயாராகின்றார் இப்படி பல –
இவன் கடைக்குச் சென்றபின் பொழுதை நெட்டித்தள்ளவென்றே றெபரன்ஸ் புக்ஸ் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்ததில் இன்கோர்ஸ் அசைன்மென்ட்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற முடிந்திருந்தது. இருப்பினும் அவன் வீட்டில் இருக்கும் போது சுதந்திரமாக அந்த வீடு, தோட்டம் முழுவதும் சுற்றி வருபவள் அவன் இல்லாத நேரத்தில் வீட்டைவிட்டு முற்றத்திற்குக்கூட வரமாட்டாள். அருகே குடியிருப்புகள் அற்ற நிலை அவளை அச்சுறுத்திக் கொண்டுதானிருக்கும்.
அவன் தனது வேலைகளை முடித்தபின் வரும் நேரத்தில் அவனது பைக் சத்தத்தை எதிர்பார்த்தபடி காத்திருப்பவளுக்கு தனது பயத்தைப் பற்றி அவனுக்குச் சொல்ல மனம் வராது என்பது ஒருபுறம் என்றால் அவனே அதைப்பற்றியெல்லாம் சட்டை செய்யமாட்டான்.
அவனது பைக் வீட்டு வாசலில் நிறுத்தப்படும்போது அதுவரை தனிமை தந்த பதகளிப்பு மறைந்து மனம் அமைதியடைந்தாலும் அவன் கதவைத் திறக்கும்போதோ அறையினுள் வந்து பைக்சாவி, கடைச்சாவி மற்றும் இதர பொருட்கள் அடங்கிய பேக் போன்றவற்றை வைத்துவிட்டுச் செல்லும்போதோ திரும்பிக்கூட பார்க்காது படிப்பில் கவனமாக இருப்பது போல காட்டிக் கொள்பவளுக்கு அவனது காலடிச் சத்தத்தை துல்லியமாக கவனிப்பது அவளையறியமல் அவன்மீது ஒரு ஈர்ப்பைக் கொண்டு வந்திருந்தது.
இருவருக்கும் இடையில் எந்த பேச்சு வார்த்தையும் இருப்பதில்லை அதிலும் குறிப்பாக லயா இவனிடம் பேசினால்தான் உண்டு.
இவள் பேசும் போது அவன் கேட்டுக் கொள்வான். பதில் தரமாட்டான். இவ்வளவும் ஏன் இவளது பேச்சைக் தான் காது கொடுத்துக் கேட்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ளாது தனது வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான்.
அவன் விட்டேற்றியாக நடந்து இவளைப்பற்றிய சிந்தனைகளில் மனதைவிடாது இருக்க இருக்க லயாவிற்கு எந்த நேரமும் அவனைப் பற்றித்தான் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.
என்னை என்ன கிறுக்கி என்றா நினைக்கிறான்? எதுக்கு மைன்ட் பண்ணமாட்டேன் என்கிறான்? என்ற சிந்தனை வலுவடைந்து கொண்டே சென்றது.
அதிலும் அவள் பார்த்த திரைப்படங்களிலும் வாசித்த புத்தகங்களில் எல்லாம் அழகான பெண்களைப் பார்த்ததும் பையன்கள் விடும் ஜொள்ளை மட்டுமே கண்டு ஆண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று கணித்து வைத்திருந்தவளின் அத்தனை கணிப்புக்களையும் நாளாந்தம் தவிடு பொடியாக்கும் இவனைப் பார்க்கப் பார்க்க ஜென் துறவி ஒருவருடன் காட்டில்; இருப்பது போல இருக்க---
இந்த துறவிக்கு எதுக்கு கல்யாணம்? என்று நினைத்தவளுக்குப் புரிந்திருக்கவில்லை அவன் தங்களது சொத்துக்களை தந்தையை ஏமாற்றி அடைந்திருக்க அதுபற்றிய கோபம் மனதில் ஒரு புறம் கனன்று கொண்டிருந்தாலும் மறுபுறம் அவனைத் தன் உரிமையானவனாகப் பார்ப்பது ஏன் என்பது.
இது தாலியால் வந்த தாக்கமா? இல்லை ஒரு ஆணும் பெண்ணும் தனியே ஒரே வீட்டில் இருப்பதனால் ஏற்பட்ட இரசவாதமா? எதுவோ ஒன்று அவன் மீது ஒரு உரிமை உணர்வினைத் தோற்றுவித்திருந்தது.
இறுதித் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கான விடுமுறை விடப்பட்டிருக்க ஹாஸ்டலில் இருந்த ப்ரண்ட்ஸ் எல்லோரும் தத்தமது வீடுகளுக்குச் சென்றிருந்ததால் வேறு வழியின்றி இவளும் மூட்டை முடிச்சுக்களுடன் இவனிடம் வந்திருந்தாள்.
தாய் வீட்டிற்கு செல்ல அவளது தன்மானம் இடம் கொடுக்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்ய அம்மா மீதிருந்த பாசத்தைவிட அம்மா காட்டும் பராமுகம் துன்பம் தருவதாக இருக்க இவள் தனது வீட்டாரிடமிருந்து ஒதுங்கத் தொடங்கினாள்.
படிப்பில் தன்னை மூழ்கடிப்பவளின் இலட்சியம் தாய் அறியாததல்ல. ஆனாலும் தான் காட்டும் இளக்கம் இவளை வீட்டிற்கு மறுபடியும் கொண்டு வந்து விட்டுவிடும் என்று கருதியே இவளுக்குத் தேவையான உணவை அனுப்பிக் கொண்டு பேச்சைச் சுருக்கியவர் தன் கணவனின் கனவை நனவாக்க முயன்று கொண்டிருந்தார்.
லயா படிப்பில் படுசுட்டி அதுவும் அவள் இலட்சியம் எல்லாம் பட்டப்படிப்பில் கோல்ட் மெடலிஸ்டாக வரவேண்டும் என்பதிலேயே எப்போதும் இருந்திருக்கின்றது.
அந்த நன்நாளைத் தந்தையுடன் கொண்டாடவும் அந்த சந்தர்ப்பத்தை அவளது அப்பா எப்படிப் பெருமையுடன் அனுபவிப்பார் என்பதெல்லாம் எட்டு மாதங்களுக்கு முன் வரை அவளது கனவில் வரும் வழமையான காட்சிகளாக இருந்திருந்தது.
இன்றோ இலட்சியமும் மெடலும் அப்பாவிற்குச் சமர்ப்பணம் செய்யும் அர்ச்சனைப் பொருட்களாகப் போயிருந்ததை எண்ணி எண்ணி மனம் வருந்தத்தான் முடிந்திருந்தது.
பகல் இரவு என்று பாராது இவள் படிப்பது இவளுக்கு அவசியமாக இருக்க இவளால் நேரம் கெட்ட நேரத்தில் வைக்கப்படும் அலாரமும் ஆவிகள் உலாவரும் நடுநிசியில்கூட வீடு முழுவதும் மின் விளக்குகளை எரியவிட்டபடி இவள் நடமாடுவதும் விஷ்ணுவுக்கு துன்பமாக இருந்தது.
கடையை மூடிவிட்டு தனது கம்பியூட்டர் மற்றும் அக்கவுண்டிங் கிளாஸ்களுக்கு போய்விட்டு இரவு பதினொரு மணிக்கு வருபவனை தூக்க விடாது புண்ணியம் தேடிக்கொண்டவளுக்குத் தெரியவில்லை அவனுக்கு தான் கொடுக்கும் தலைவலியின் அளவு.
எப்படா இந்த தேர்வு முடியும் என்று அவளுக்குப் பதில் இவன் காத்திருக்கத் தொடங்கினான்.
லயாவிற்கு இந்த ஃபைனல் தேர்வும் அதைத் தொடர்ந்து வரப்போகும் இன்டர்ன்ஷிப்பிற்கான கவுன்ஸிலிங்கும் அவ்வளவு முக்கியமானதாக இருக்க அப்பா சொன்ன இவளது தாத்தா தொடங்கி சிலபல பிரச்சினைகள் காரணமாக கைவிட்ட “ஆனந்த வாசல்” என்ற ஊரிலிருக்கும் வாகனங்களுக்கான உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் ஃபக்டரியைத் திரும்ப தொடங்க வேண்டும் என்பது அடிமனத்தில் இருந்து கொண்டே இருந்தது. அதற்காகவே ஜப்பானை தலைமையகமாகக் கொண்டிருந்த அந்த ஆட்டோமொபைல் கம்பனியின் கவுன்சிலிங்கை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கத் தொடங்கினாள்.
இவளும் இவளது குழுவினரான இரு பையன்களும் சேர்ந்து செய்த புறஜெக்ட் இரு முக்கிய கம்பனிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க இவர்களுக்கு சூப்பவைஸராக நியமிக்கப் பட்டிருந்த புரபஸர் இவர்கள் மூவருக்கும் அந்த கம்பனியில் இன்டர்ன்ஷிப் கிடைப்பதுடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் ஜப்பான், தாய்வான் அல்லது வேறொரு நாட்டில் டிறெயினிங் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகச் சொன்னது எப்படியும் தாத்தாவின் ஃபக்டரியைத் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குள் மீண்டும் தொடங்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்திருந்தது.
தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னர் தங்களது பூர்வீக கிராமத்திலிருக்கும் குலதெய்வம் கோயிலுக்கு அம்மா அப்பாவுடன் சென்று தரிசித்து வரும் வழக்கம் கொண்டவள் இன்னும் ஐந்து நாட்களில் ஆரம்பமாக இருக்கும் தேர்வுகளுக்கு முன் குலதெய்வம் கோயிலுக்குப் போவதற்கு அம்மாவை ஆவன செய்யும்படி அழைத்துக் கேட்க அவரோ இவளது அப்பாவின் மறைவைக் காரணம் காட்டி மறுத்துவிட நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பூர்வீக கிராமத்திற்கு எப்படிச் செல்வது என்று தெரியாது முழித்துக் கொண்டு நின்றாள்.
பஸ்ஸில் போய் இறங்கினாலும் இவளது ஊருக்குச் செல்ல வசதிகள் குறைவு. அதுவும் பிரதான வீதியிலிருக்கும் பஸ்தரிப்பிடத்திலிருந்து மேலும் பல கிலோமீற்றர்கள் உட்புறமாகச் செல்லவேண்டும். நிச்சயமாக ஒரு சில ஆட்டோகளோ சைக்கிள் றிச்சோக்களோ அந்த சந்தியில் நின்றாலும் அறிமுகம் இல்லாதவர்களுடன் தனியே எந்த நம்பிக்கையில் பயணம் செய்ய முடியும்?
என்ன செய்வது என்று தெரியாது தவித்தவளுக்கு குலதெய்வத்தைத் தரிசிக்காது தேர்வுக்குச் செல்வது அபசகுனமாகப்பட மீதமிருக்கும் ஒரே ஒரு ஆப்ஷன் விஷ்ணுவாக இருக்க எப்படி அவனிடம் கேட்பது என்பது மூளையைக் கலங்கடித்துக் கொண்டிருந்தது.
அவன் ஏனென்றும் திரும்பிப் பாராமல் இருக்க மீண்டும் மீண்டும் அவனிடம் உதவிக்குப் போய் நிற்க தன்மானம் இடம் கொடாது தகராறு செய்ய வீரியத்தைவிட காரியம் பெரிதென்று உணர்ந்த நொடி அவனுடனேயே கோயிலுக்குச் செல்வது என்று முடிவு செய்தாள்.
தாலிகட்டி தண்ணி தெளித்துவிட்டிட்டு இவன் இருக்க நான் ஒவ்வொருவராக துணைக்கு வாங்க என்று கேட்பதா? என்ற சிந்தனை வலுப்பெற அவன் கடையை மூடிவிட்டு வருவதற்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.
கடையை மூடியபின் தனது வழமையான வேலைகள் அனைத்தையும் முடித்தபின் பைக்கில் வந்து இறங்கியவன் தனது இரவு குளியலை முடித்துவிட்டு ஹாலில் இருந்த கயிற்றுக் கட்டிலில் அவனது தலையணையை வைத்துவிட்டு ஃபேனை ஓடவிட வழக்கத்திற்கு மாறாக அவன் பக்கத்தில் வந்து நின்றவள்---
எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? என்றாள் மொட்டையாக அவனோ படுக்கை விரிப்பை உதறி கட்டிலில் விரித்தபின் தனது மொபைலை எடுத்து தலைமாட்டில் வைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்து கையை நெற்றியின் மேல் குறுக்காக வைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.
கண்கள் மூடிக்கொண்டாலும் மனம் விழித்துக்கொண்டு அடுத்து அவள் அடுத்துச் சொல்லப்போகும் “டேய் விஷ்ணு” என்ற கத்தலுக்காகக் காத்திருக்க
இவனது பாராமுகத்தால் அவளது சுயம் அடிவாங்கியிருக்க கண்களில் நீர் நிரம்பி வழியத் தொடங்கியிருந்தது.
என்ன சத்தத்தையே காணோம் என்று நினைத்தபடி கைகளை விலக்கி கண்களை திறந்து பார்த்தவன் கண்டது அவளது அழுகையைத் தான். அதுவும் மௌனமாக அழுது கொண்டு அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.
உதவி என்று கேட்டாளே-----ஏதாவது பணம் தேவைபடுகிறதோ என்று எண்ணியபடி எழுந்து அறையினுள் சென்றவன் அன்று அவள் கேட்டது போல ஹாஸ்டல் பீஸ்கட்ட பணம் தேவைப்படுகிறது போல என்ற சிந்தனை தோன்ற தனது வலட்டிலிருந்து பணத்தை எடுத்துவந்து அவளது கையில் வைத்தான்.
இவன் எதுவும் கேளாது பணத்தைத் தந்தது பேச விருப்பமில்லை இடத்தைக் காலி பண்ணு என்று சொன்னதைப் போல இருக்க அவளது அழுகை வலுப்பெற்றது.
இப்போது பேசியே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்க எதுக்கு இந்த அழுகை? என்ன உதவி? என்று கேட்டான்.
சீ போடா!! எதுவும் வேண்டாம் என்று முறுக்கிக் கொண்டவள் அறையினுள் சென்று லைட்டை ஆஃப் பண்ணினாள். ஆனாலும் குலசாமியைக் கும்பிடாமல் போனால் தேர்வில் ஏதாவது குழறுபடியாகிவிடுமோ என்ற பயம் தோன்ற தன்னை கோயிலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை என்ற எண்ணம் அப்பாவில் வந்து நிற்க இவன் முன் அழுது தான் தோல்வியடைவதை அவனுக்குக் காட்டுகின்றேன் என்ற நினைப்பு மேலோங்க-----
அப்பா---- பாருங்கப்பா---- எனக்குன்னு யாருமே இல்லையே அப்பா என்று தந்தையுடன் மனதில் பேச அவளைமீறி வெளிப்பட்ட கேவலும் மூக்கை உறுஞ்சுவதும் வெளியே படுத்திருந்தவனின் நிம்மதியான நித்திரைக்கு குந்தகம் விளைவிக்க எழுந்து அறையினுள்ளே வந்தவன் அவள் அணைத்துவிட்டிருந்த லைட்டைப் போட்டான்.
திடீரென லைட் போடப்பட்டதால் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவள் தனது கர்சீப்பை எடுத்து மூக்கைப் பிடிக்க, அவளையே பார்த்திருந்தவன்---
நான் என்ன உதவி செய்ய வேணும்? என்று கேட்க அந்த குரலிலிருந்த அந்நியத்தன்மை அவளைக் குத்த மீண்டும் பேசாது மௌனமாக இருந்தவள் நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தாளில்லை.
ரொம்ப நல்லது ----இப்பிடியே இரு----பதில் சொல்லாதை--- எனக்கு நித்திரை வருகிது. சத்தமாக அழாதை என்ன --என்றபடி மறுபடியம் லைட்டை அணைத்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.
அவளுக்குத்தான் தூக்கம் வரமாட்டேன் என்று அடம்பிடிக்க சுய அலசலில் தன்னை தொலைத்திருந்தவள் கண்டு கொண்ட உண்மை அவளுக்கு உவப்பாக இருக்காத போதும் அவனைவிட்டால் நூறு கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கும் குலதெய்வம் கோயிலுக்கு அவளை அழைத்துச் செல்ல யாரும் வரப்போவதில்லை என்பதைத் துல்லியமாக உணர்ந்து கொண்டாள். இதைவிடவும் தனது அம்மா அப்பாவுடன் இருந்தது போல எதுவுமே இங்கு இல்லை. அவளது முகச் சுணக்கங்கள், கோபம், அழுகை எதற்குமே இங்கு மதிப்பில்லை என்ற நிதர்சனம் முகத்தில் அறைந்தது.
சாப்பிடாமல் இருந்தால் ஏண்டா கண்ணு சாப்பிடவில்லையா? அம்மா சொல்லுகின்றாள். சாப்பாட்டோடை நம்ம கோபதாபங்களைக் காட்டக்கூடாதும்மா. எத்தனை பேர் ஒருவேளை உணவிற்கே வழியில்லாமல் தவிக்கிறாங்கள் என்று சொல்லும் அப்பா எப்படியும் அவளை உண்ண வைத்துவிடுவார்.
இங்கு அவள் உண்டாளா? இல்லை உறங்கினாளா? என்றுகூட இவன் பொருட்படுத்தமாட்டான். இப்படித்தான் இவள் நினைத்துக் கொண்டிருக்க இவளுக்குப் புரியாத பலவிசயங்கள் இங்கும் நடக்கும்.
அவனுக்கு உணவுக்கு வழியின்றி இருப்பவர்களைக் காணப் பொறுக்காததால் அவன் கடைக்கு கிளம்ப முன்பே இவளுக்கு வீட்டிலிருந்து சாப்பாடு வந்து விட்டதா? என்று பார்த்துவிட்டுத்தான் கிளம்புவான். ஆனால் வாயால் எதுவும் கேட்கமாட்டான். இவள் உபயோகிக்கும் டவ்சோப், சம்பூகூட அவன் வாங்கிவந்து வைப்பதுதான். இவள் ஹாஸ்டலுக்குச் சென்ற பின்னர் அவை இங்கு வாங்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதையெல்லாம் இவளது அம்மாதான் வாங்கி அனுப்பிவிடுவதாகத்தான் இவள் நினைத்துக் கொண்டிருக்கின்றாள்.
காலையில் தனது வேலைகளை முடித்தபின் மெஸ்க்கு டீ குடிப்பதற்காக புறப்பட இருந்தவன் அழுது அழுது முகம் உப்பியபடி வெளியில் வந்து அமர்ந்திருந்தவளைப் பார்த்ததும் இரக்கம் மேலிட அருகில் வந்து என்ன பிரச்சினை உனக்கு? என்ன உதவி வேணும்? என்று கேட்க
என்னை ஊருக்கு கூட்டிப் போகமுடியுமா? குல தெய்வம் கோயிலுக்கு என்றவள் அங்கு போகவேண்டிய அவசியத்தைச் சொல்ல---
எங்கே இருக்கு குலதெய்வம் கோயில் என்றவனைப் புரியாது பார்த்தவள் குலதெய்வம் கோயில் எங்கே இருக்கும் நம்ம ஊரிலைதான் என்றாள்.
உங்களது ஊரா? அது எது? என்றவனை நம்ம தாத்தா பாட்டி வாழ்ந்த இடம் என்றவள் உங்களுக்கும் அதுதானே சொந்த ஊர் என்று சொல்ல---
“உங்கள்” என்று அவள் தந்த மரியாதையை எண்ணி மனதுக்குள் சிரித்தவன்
இந்த அறிவியல் நகர்தான் என்ரை சொந்த ஊர் என்றபடி எந்த ஊருக்குப் போகவேணும் என்று கேட்க ‘அழகர்புரம்’ என்றாள்.
தனது ஆணிவேர் இருக்கும் இடத்திற்கு புறப்பட்டது அவனா? இல்லை அவளா? விதியின் கரங்கள் வலியவை தானே.
(தொடரும்)
Last edited: