கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்பென்னும் ஊஞ்சலாட்டம் - அத்தியாயம் 10

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்—10





சங்கீதா தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கினாள். எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அப்பா ஏன் இரவு பத்து மணிக்கு வரச் சொன்னார்? அவளும் அவரைப் பார்க்கும் ஆசையில் முன் பின் சிந்திக்காமல் ஓடி வந்துவிட்டாளே! அவர் பொதுவாக மாலை ஆறு மணிக்கு மேல் பெண்கள் இருட்டில் தனியாக வெளியே வரக் கூடாது என்று


சொல்பவராயிற்றே! ஒரு சின்ன டார்ச் விளக்கை ஜாக்கெட்டுக்குள் செருகி இருந்தாள். அதை எடுக்கும் போது கை நடுங்கியது. அவளை வரச் சொன்னவர் அவள் வருகைகாக ஏன் காத்திருக்கவில்லை.? தெருவிளக்கு எரியாத பட்சத்தில் வாசல் விளக்கை அவளுக்காக போட்டு வைத்திருக்கலாமே! தூங்கிக் கொண்டிருக்கிறாரா?


கேட்டைத் திறந்து படியில் ஏறி மெல்ல “அப்பா..” என்று குரல் கொடுத்தாள். முட்டியால் தட்டினாள். காலிங் பெல்லை அழுத்தினாள். அம்மா...சித்தார்த்...அப்பா..என்று மாறி மாறி கூப்பிட்டாள். எந்த பதிலுமில்லை.


வீட்டைச் சுற்றிக் கொண்டு அப்பாவின் அறை ஜன்னல் பக்கம் வந்தாள். ஜன்னல் கதவுகள் மூடியிருந்தன. உள்ளே ஏதோ மங்கலான வெளிச்சம் தெரிந்தது. ஒரு கதவு விர்ரென்று அடித்தக் காற்றில் படீரென்று திறந்து கொண்டது. மெழுகுவர்த்தி ஒன்று உயிருக்கு பயந்த நிலையில் அணைவது போல் சரிந்தும், குபீரென்று பிரகாசமாக எரிந்தும் வெளிச்சம் பரப்ப இயலாமல் தவித்தது. டார்ச் லைட்டை உயிர்பித்து அறையுள் அடித்தாள் சங்கீதா. அவள் கை பயத்தில் சில்லிட்டு நடுங்கியபடி இருந்தது. ஏன் இப்படி கோழையாக இருக்கிறோம்? ஏன் இப்படி இருட்டுக்கு பயப்படுகிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை. அதுவும் அவள் புழங்கிய வீடு தானே இது!


இங்கிருந்து ஓடிவிடலாமா என்று தோன்றியது. அப்பா லைட்டை போட்டுக் கொண்டு அவளுக்காக காத்திருப்பார் என்று நினைத்தாள். இப்படி சத்தமில்லாமல் அந்தகாரத்துடன் போராட வேண்டியிருக்கும் என்று அவள் கற்பனை கூட செய்யவில்லை. “அப்பா..அப்பா...அப்பா...”மெல்ல கூப்பிட்டுப் பார்த்தாள். அவள் குரலை கேட்க அவளுக்கே பயமாக இருந்தது. அறையினுள் அங்கும் இங்கும் டார்ச் விளக்கை அடித்தாள். சுவர் ஓரமாக ஒரு உருவம் ஏதோ மாதிரி முடங்கிக் கிடப்பது தெரிந்தது. அவள் டார்ச்சின்


வெளிச்சம் அந்த தூரத்தை தெளிவாக காட்டும்படி ஒளி கொடுக்கவில்லை. கையை ஜன்னல் கம்பிக்கு இடையே நுழைத்து முன்புறமாக நன்கு சரிந்து கொண்டு நீட்டி உருவத்தின் மேல அடித்தாள். அப்பாவின் முகம் தெளிவாகத் தெரிந்தது. வாய்பிளந்த நிலையில் நெஞ்சில் கத்திக் குத்துபட்டு தலை சரிந்த வாக்கில் கிடந்தார். மார்பு பகுதி உறைந்து போன ரத்தத்தால் பயங்கரமாக


காட்சியளித்தது. சுவர் முக்கில் சாய்த்து வைக்கப்பட்ட மாதிரி இருந்தது.


கால்கள் இரண்டும் அகல பரப்பிக் கிடந்தது. அவர் அசையவேயில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்! பயத்தில் அவள் தன்னுடைய பென்டார்ச்சை அப்படியே அறைக்குள் தவறவிட்டு தலை தெறிக்க ஒடி வீதிக்கு வந்தாள். உடம்பெல்லம் சில்லிட்டு வேர்த்துவிட்டது. கண் பார்வை மங்கிற்று. வாய்க் குழறி எச்சில் ஒழுகிற்று. கத்தக் கூட தோன்றவில்லை. ஏதோ ஒரு உந்துதலால் சைக்கிளில் ஏறி வேக வேகமாக பெடல் செய்து வீடு வந்து சேர்ந்தாள். என்ன கோரமான இரவு! ஏன் வெளியே இருட்டிய பிறகு போனாள்.? அவள் கண்ட காட்சியை மறக்க முயன்றாள். கட்டிலில் வீழ்ந்தாள்.


ஆழ்ந்து தூங்கியபடி மெல்ல புரண்டு படுத்தாள் மங்களம். “அம்மா...” என்று அவளைக் கட்டிப் பிடித்து கண்களை மூடிக் கொண்டாள். அப்பொழுதும் அந்த கோரக் காட்சி தெரிந்தது. விடிந்ததும் போலீஸ் ஸ்டேஷன் போய்


கம்ப்ளேன்ட் கொடுக்கணும்....அய்யோ அந்த பென் டார்ச் அறையுள் கிடக்கிறதே! அவளை கொலையாளி என்று எண்ணிவிட்டால்! அப்பா போய்விட்டார் என்ற துக்கத்தை கூட நிம்மதியாக அழுது தீர்க்க முடியாமல் குற்றவாளி ஆகிவிடுவோமா என்று பயந்து மனம் நடுங்கினாள்.





மறுநாள் சுரீரென்று சூரியன் அவளைத் தாக்கிய போது தான் எழுந்தாள்.


மங்களம் குளித்து புதுப் புடவை அணிந்து தானே இட்டிலிகளை பிட்டு பிட்டு சட்னியில் தோய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “அம்மா...” என்று அவளைக் கட்டிபிடித்துக் கொண்டாள் சங்கீதா. மங்களம் சிரித்தாள். தண்ணீர் ஜக்குடன் உள்ளே நுழைந்த ஆண்டாள் “அடடே...மங்களம் நீயே சாப்பிட ஆரம்பிச்சிட்டியா? சங்கீதா பார்த்தியா? உன் அம்மா இத்தனை வருஷத்திலே


இன்னிக்குத் தான் தானா சாப்பிடறா. எல்லாம் உன்னைப் பார்த்தப் பின்தான்.


நீயும் சாப்பிட வா..” என்று உற்சாகத்துடன் சொன்னாள்.


“பல் தேச்சிட்டு ...இதோ ஒரு நொடியில் குளிச்சிட்டும் வரேன் பெரியம்மா.”


பாத்ரூமில் புகுந்து கொண்டபோது செல் அடித்தது. படுக்கையில் கிடந்ததை எடுத்துக் கொண்டு வந்து பாத்ரூம் கதவை சாத்தியபடி “ஹலோ..” என்றாள்.


“ஹலோ..என்ன சங்கீதா...உனக்காக லைட்டை போட்டுக் கொண்டு இரவெல்லாம் காத்திருந்தேன். நீ வரவே இல்லலையே ஏம்மா? அப்பாவை


வெறுத்திட்டியா? ஏம்மா இப்படி பண்ணினே?”


“அப்பா...நீங்களா? இரவு வந்தேனே...நீங்க....நீங்க...கொலை செய்யப்பட்டு


கிடந்ததைப் பார்த்தேனே...இப்ப எப்படி?...ஒண்ணுமே புரியலயே...”


“என்னது கொலை செய்யப்பட்டுக் கிடந்தேனா? அப்ப ஆவியா வந்து பேசறேன்னு சொல்றியா? நீ என்னை வெறுத்து ஒதுக்கிட்டே...இப்ப மழுப்பற,


கதை விடறே...நான் நலமா உயிரோடு இருக்கேன். கனவு கண்டியா?


சரி உனக்கு என்னைப் புடிக்கலை. எங்கேயோ நீ நல்லா இருந்தா அதுவே


எனக்குப் போதும்....புது உறவுகள் கிடச்ச சந்தோசம்...அதானே..”


“இல்லேப்பா....சத்தியமா நீங்க மட்டும் தான் என் உறவு. உங்களை எப்படி வெறுப்பேன்? சொல்லுங்க நான் வரட்டுமா? எப்ப பார்க்கலாம்?”


“இனிமே நாம சந்திக்க முடியாதும்மா. சூழ்நிலை அப்படி. எங்க எல்லோரையும் வேண்டாமுன்னு எட்டி உதச்சிட்டே. இனி மருகி என்ன பிரயோசனம்? நீ அந்த சந்திரனோடு நீடுழி வாழ்க. எங்க ஆசீர்வாதம்


உங்களுக்கு எப்பவும் உண்டு. இனி இங்கு என்ன வேலை? நாங்க துபாக்கே


போறோம். இந்த அப்பாவை ஞாபாகம் வச்சுக்க. விஷ் யூ வெல். குட்.பை.”


போனை வைத்துவிட்டார். திரும்பத் திரும்ப அடித்துப் பார்த்தாள். அவர் எடுக்கவேயில்லை. அதிர்ச்சியில் உறைந்து போனாள். என்ன தான் நடக்கிறது? பைத்தியமே பிடிச்சிடும் போல் இருந்தது. குளித்துவிட்டு வெளியே வந்தாள். சுரத்தில்லாத அவள் முகத்தைப் பார்த்து மங்களம் வாஞ்சையுடன் இவள் நெற்றியை தொட்டுப் பார்த்தாள். என்னாச்சு? என்று செய்கை செய்தாள். அடிபட்ட அவள் மனசுக்கு இந்த தூய விசாரிப்பு மிகவும் இதமாக இருந்தது. “அம்மா...” என்று அவளை கட்டி பிடித்து தேம்பித் தேம்பி அழுதாள். மங்களம் கண்களிலும் நீர் வழிந்தது.





மங்களமும் ஆண்டாளும் அவளை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தார்கள்.


“உங்கம்மா நீ அழறதைப் பார்த்து எப்படி தவிக்கிறா பார். கண்ணை துடைச்சுக்கோ. எல்லாம் சரியாயிடும். நாங்க உனக்கு நெருங்கிய உறவுகள்.


உயிரான உறவுகள். என்ன பண்றது இப்ப தான் ஒண்ணு சேர்த்திருக்கோம். உனக்கு குழப்பமா தான் இருக்கும். ஒன்னும் பயப்படாதே...சரியாம்மா...”


சங்கீதா தலை ஆட்டிவிட்டு பேப்பரை நோட்டம் விட்டாள். எங்காவது மூலையில் கொலை செய்தி போட்டிருக்கா என்று ஆராய்ந்து பார்த்தாள்.


எதுவுமில்லை. அப்ப நேற்று ராத்திரி அவள் பார்த்தது பிரமையா? இல்லை நிச்சியமாக இல்லை. அவள் பார்த்தது நிஜம். இப்ப அப்பா என்று சொல்லிக் கொண்டு அவர் குரலில் யாரோ பேசியிருக்க வேண்டும். எங்கோ சதி நடக்கிறது. சந்திரன்தான் ஆளை செட்அப் பண்ணி இப்படி பேச வைதிருக்க


வேண்டும். அப்பாவாக இருந்தால் இப்படி பேசியிருப்பாரா? நான் துபாய்


போறேன்...நீ அந்த சந்திரனோடு இருன்னு சொல்லிட்டுப் போவாரா? இது அந்த சந்திரனின் வேலையாகத் தான் இருக்க வேண்டும். சந்திரனின் வரவுக்காக காத்திருந்தாள். வரட்டும்...





சிங்கபூரிலிருந்து வந்த சந்திரன் அவள் முகம் இறுகி வெளுத்துப் போயிருந்ததைப் பார்த்து ஏளனமாக கேட்டான்.


“என்ன...உங்கப்பன் ஒரு வழியா செத்துத் தொலைஞ்சானா?”


இவனுக்கு எப்படித் தெரியும்? சிங்கப்பூர் போவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டு


இவன் தான் அப்பாவை கொன்று இருப்பானோ? என்னைக் குழப்ப அப்பாவின் குரலில் பேசியிருப்பானோ? பாடியை அப்புறப்படுத்த தான் வந்திருப்பானோ?


பேப்பரில் நியூஸ் வராமல் பார்த்துக் கொண்டானோ? கொலை செஞ்சாலும் செஞ்சிருப்பான்...பாவி..இவனெல்லாம் ஒரு மனுஷனா? அப்பாவோடு நான் பேசினால் இவன் தகுடுதத்தம் வெளியே வந்துவிடுமோ என்று பயந்து தீர்த்துக் கட்டிவிட்டானோ? அது தான் நடந்திருக்கும் இல்லாவிட்டால் வந்தவுடன் இப்படி கேட்பானா? அவனை வெறுப்புடன் பார்த்தாள்.


“செய்யறதையும் செஞ்சிட்டு எகத்தாளம் வேறேயா? கொலைகார பாவி.”


இவர்கள் பேசுவதை மங்களமும் ஆண்டாளும் கேட்கவில்லை. மங்களம் குளிக்கப் போயிருந்தாள். ஆண்டாளம்மா உதவி செய்ய போயிருந்தாள்.


“நான் என்ன செஞ்சேன்? வந்ததும் வராததுமா என் மேலே எதுக்கு பாயறே?”


“எங்கப்பாவை கொலை பண்ணியது நீ தானே? ஆள் விட்டு கொன்னியா இல்லை நீயே தீர்த்துக் கட்டினியா? சிங்கபூர் போறதா சொன்னதெல்லாம் பொய். உன்னை போலீஸில் பிடிச்சு கொடுக்கிறேன் பார்...”


“அப்பாடா...உண்மையில் செத்துட்டானா? நான் சும்மா ஜோக்கிற்கு சொன்னேன். உண்மையே அது தானா? அப்பாடா ஒழிந்தான் இனிமேலாவது


எங்களை நம்பு...” விழுந்து விழுந்து சிரித்தான்.


“அடப் பாவி...ச்சே..இப்படி சிரிக்க உன்னால் எப்படி முடியுது? நீ..நீ..”


“ஆமா...நான்தான் கொலை செய்தேன். இப்ப என்ன செய்யணும்கற?”


“வாடா...போலிஸ் ஸ்டேஷனுக்கு. அப்பா உயிரோடு இருக்கிற மாதிரி பேசினதும் நீ தானே? என்னை ஏமாத்தப் பாக்றியா? இரு நான் போலீஸ் ஸ்டேஷன் போய் ரிபோர்ட் பண்ணலே என் பெயர் சங்கீதா இல்லை..”


“அறிவு கெட்டவளே....நான் இப்ப தான் வரேன். நீ ஏதேதோ சொல்லி பினாத்திக்கிட்டு இருக்கே. போ போலிஸ் ஸ்டேஷனுக்கு...தாராளமா போ.”


“ப்ராடு..ப்ராடு..”


சந்திரனுக்கு வந்த கோபத்தில் சங்கீதாவை அறைந்து விட கையை ஓங்கினான். அதற்குள் அங்கு ஆண்டாள் வந்துவிட்டாள்.


“ஏனப்பா...வந்ததும் வராததுமா அவ கிட்டே போய் இசலிக்கிட்டு இருக்கே.?


குளிச்சிட்டு வா. உனக்கு பன்னீர் ரசம் பிடிக்குமே...செய்து வச்சிருக்கேன்.


திருப்பதியா சாப்பிடு. சரி..எதுக்கு அவ கிட்டே கலாட்டா பண்ணிட்டு இருக்கே? கொஞ்சம் பொறுமையா இருப்பா.”


“அத்தை...இனியும் என்னால் பொறுத்துக்க முடியாது. இவ என்னை நம்பவே மாட்டேங்கறா. அவ அப்பன்காரன் செத்துட்டானா என்று ஒரு வெறுப்பில் கேட்டேன். அதுக்கு அவ நான் தான் அவரை கொலை பண்ணிட்டேன்னு


கத்றா? பழி போடறா. அவர் துபாயிலே இருக்கார். அவரை எப்படி நான் கொலை பண்ண முடியும்? இவ கற்பனை பண்ணறா..”


“நான் எந்த கற்பனையும் பண்ணலை....என் இரண்டு கண்ணாலும் பார்த்தேன்.


அது தான் உண்மை..” என்று சங்கீதா அழுத்திச் சொன்னாள்.


“போதுமடா...அவ சின்னப் பொண்ணு. நீ தான் பொறுமையா இருக்கணும்.”


“எப்படி பொறுமையா இருக்க முடியும்? செத்த அப்பா பேசினார்ன்னு சொல்றா. இதப் பார் சங்கீதா...அந்த கேடுகெட்ட ஆனந்தன் உன் அப்பாவே இல்லைன்னு எத்தனை தரம் சொல்றது? ஏன் அந்த சொர்ணாவே உன் அம்மா இல்லை. படிச்சு படிச்சு சொல்றேன் நீ நம்ப மாட்டேங்கறே. அவங்க உன்னை துரத்திட்டாங்க. இன்னமும் அம்மா அப்பான்னு உருகிக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்கே. இடியட், நான் மட்டும் உன்னை அழச்சிட்டு வரலைன்னா நீ இருந்த இடம் புல்லு மொளச்சுப் போயிருக்கும். தெரு தெருவா பிச்சை எடுத்திட்டிருப்பே....” சந்திரனின் அத்து மீறிய வார்த்தைகள் சங்கீதாவை


வெகுவாக பாதித்தது. அவள் துடித்துப் போனாள். எப்படி பேசுகிறான்!.


“எப்படி எல்லாம் பேசறீங்க? நாக்கா? கத்தியா? டெவில்..ஐ ஹேட் யூ..”


“ஹேட்டு...ஹேட்டு...போனாப் போவுதுன்னு பார்த்தா..கொலைகாரன்னு சொல்றே...ஓவரா போறே...நீ உன் அதிசய அப்பா அம்மா கிட்டவே போ


வீட்டை விட்டுப் போடி...நல்லதுக்கே காலமில்லை...”


இந்தியா பாகிஸ்தான் ரேஞ்சுக்கு சண்டை வலுப்பதைப் பார்த்து ஆண்டாள்


சந்திரனை கண்டித்தாள். சங்கீதா எப்படிபட்ட நிலைமையில் இருக்கா...


“டேய்....என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கே உன் மனசிலே? அறிவிருக்கா உனக்கு? துரத்தரத்துக்குத் தான் சிங்கபூரிலிருந்து வந்தியா? இதுக்கு நீ வராமலேயே இருந்திருக்கலாம். இது தான் நீ அடைக்கலமா வந்தவளை


காப்பாத்தற லட்சணமா? ஏண்டா கொஞ்சம் பொறுமையாத் தான் இரேன்.


பாவம்டா அவ...யாரு தனக்கு உறவுன்னு தெரியாம எவ்வளவு மன ரீதியா


பாதிக்கப் பட்டிருக்கா? அவளிடம் போய் சண்டை போடறே...”
“ஸாரி சங்கீதா...ரொம்ப நொந்திட்டேன். இவ்வளவு சொல்லியும் என்னை நம்பாததாலே எரிச்சலில் அத்து மீறி பேசிட்டேன்....ஸாரி...ஸாரி...சங்கீதா.


போடச் சொன்னா போட்டுக்கிறேன். போடும் வரை கன்னத்திலே...”என்று ஜோக் அடித்து பாடி பார்த்து அவள் மன்னிப்பை வேண்டி நின்றான்.


“போதும் உங்க பாட்டும் கூத்தும். எனக்காக யாரும் பரித்தாபப் பட வேண்டாம்


இப்ப என்ன நான் போகணும் அவ்வளவு தானே. போயிடறேன். எந்த உறவுகளிலும் உண்மை இல்லை. நான் அநாதை தான். நான் படிச்சிருக்கேன்.


வேலை தேடிக்கிறேன். என்னை காப்பாத்திக்க எனக்குத் தெரியும். யாரும் எனக்கு அடைக்கலம் தந்து பிச்சை போட வேண்டாம்..எல்லாம் நல்லா இருங்க...” சங்கீதா தன் உடைமைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு சூட்கேசுடன் தடதடவென்று வாசல் நோக்கி ஓடினாள். அந்த சமயம் தான் ஒரு அதிசயம் நடந்தது. ஆண்டாள் தடுத்தும் கேளாமல், சந்திரன் கெஞ்சியும் கேளாமல் ஓடிய சங்கீதாவின் கையை பிடித்து நிறுத்தினாள் மங்களம்.


போகாதே...போகாதே...செத்திடுவேன் என்று செய்கை செய்தாள். அவள் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் வழிந்தோடியது. ரெண்டு கையையும் கூப்பி கும்பிட்டாள். தலையை வலதும் இடதுமாக ஆட்டினாள்.


சூட்கேசை பிடுங்கி வைத்தாள். வாய் பேசமுடியாததை அவள் உடல் மொழி பேசிற்று. அது சந்கீதாவை கட்டிப் போட்டது. மந்திரத்திற்கு கட்டுப் பட்டவள் போல் மனம் இளக நின்றாள். அவள் கண்களிலும் நீர் முட்டி நின்றது. சங்கீதாவை தட்டிக் கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றாள். தன் வயிற்றை


தொட்டுக் காட்டினாள். இருகரங்களையும் தொட்டில் போல் அமைத்து முன்னும் பின்னும் ஆட்டினாள். பிறகு நீ தான் என்று அவளை சுட்டிக் காட்டினாள். என் மகள் நீ தான்.....என்று அவள் பிரம்மபிரயத்தனப்பட்டு


சொன்னதும் சங்கீதா மட்டுமல்லாமல் ஆண்டாளும் சந்திரனும் கூட உணர்ச்சி வசப்பட்டுப் போனார்கள். “உன்னை தன் மகள் என்று சொல்றா. புரியுதா சங்கீதா? இனி நீ போவேன் என்று சொல்லவே கூடாது. அந்தக் கிறுக்குப் பயல் ஏதாவது உளறிக்கிட்டே தான் இருப்பான். அதை சட்டை பண்ணாதேம்மா.” என்றாள் ஆண்டாள். சங்கீதா மங்களத்தின் கையை பிடித்துக் கொண்டு இனி போகவே மாட்டேன் என்று சொல்லி அணைத்துக் கொண்டாள். இவளுக்கு இவள் அம்மாவோ இல்லையோ..ஆனால் இந்த அன்பு இவள் நெஞ்சை தொட்டது. இவளுக்கு பேச மட்டும் வந்துவிட்டால் எல்லா உண்மையும் விளங்கிவிடும். மங்களத்தை இறுக கட்டிக் கொண்டாள் சங்கீதா. அந்த பால் போன்ற அன்பு அவளுக்கு தாய்ப் பால் குடித்தது இருந்தது.


ஊஞ்சல் ஆடும்...
 
Top