கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்பென்னும் ஊஞ்சலாட்டம் - அத்தியாயம் 12

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம் - 12



நேர்மையாக இருந்தே பழக்கப்பட்ட சந்திரனுக்கு ஆனந்தனின் ஐடியா பிடிக்கவேயில்லை. “வேற ஏதாவது நல்ல ஐடியா சொல்லுங்க...”

“இதை தவிர வேறு நல்ல ஐடியா எனக்குத் தோணலை. உனக்கு தெரிந்தால் நீ சொல்லு..” என்றார் ஆனந்தன். சந்திரன் தெளிவாகச் சொன்னான்.

“நாங்க சங்கீதாவை பெண் கேட்டு வரோம். நீங்க சம்மதிச்சாப் போதும். உங்களுக்கும் கஷ்டமில்லை சங்கீதாவுக்கும் பிரச்சனையில்லை. இதை விட சிறந்த ஐடியா வேறு என்னாவா இருக்க முடியும்?.”

“மீண்டும் மீண்டும் நீ புரியாம பேசறே. அவள் உலகமே நாங்க தான். வேர் பிடித்துவிட்ட உறவு. அவள் சொர்ணா சொல்வதைத்தான் கேட்பாள். சொர்ணா இந்தக் கல்யாணத்துக்கு ஒருக் காலும் சம்மதிக்க மாட்டாள். சங்கீதாவை நீங்க பறிச்சுக்க இந்த வழியை பயன்படுத்றீங்கன்னு நினைப்பா. இன் பாக்ட்

நீங்க முன்பு பெண் கேட்டு வந்த போதே எனக்கு சம்மதம் தான். சங்கீதாவை ஒழித்துக் கட்ட சரியான வழின்னு ஒத்துக்கச் சொன்னேன். அவ பிடிவாதமா மறுத்திட்டா. சங்கீதாவைப் பிரிய மாட்டாள். சங்கீதாவும் விடமாட்டாள். அப்ப வேறு வழி? நான் சொன்னபடி அவளை உன் கம்பெனியின் இண்டர்வியூவுக்கு

கூப்பிடு. அப்படியே அவளை கடத்திக் கொண்டு போய் வச்சுக்கோ. கல்யாணம் பண்ணு இல்லை காடேத்து பண்ணு. அது உன் இஷ்டம். அவளை பெற்றவர் சிக்கா இருக்காரே...அவர் கூட இருந்தா மாதிரி ஆச்சு...என்ன சொல்றே?..” சந்திரனுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது. என்ன மனிதர் இவர்! “நான் இதுக்கு சம்மதிக்காவிட்டால்?”

“ரொம்ப சிம்பிள்...சொர்ணாவை ஏமாத்தி எப்படியாவது சங்கீதாவை தனியே விட்டு விட்டு நாங்க மூவரும் துபாய் போயிடுவோம்...இல்லை அவளை அநாதை ஆஸ்ரமத்தில் சேர்த்துவிடவா? நீயே சொல்லு...”

“யூ...யூ...ஸ்கௌன்டிரில்....துரோகி..நீ நல்லாவே இருக்கமாட்டே..”

“தேங்க்ஸ்...அப்ப நீ ஒத்துக்கற. போனை வச்சுடறேன்..”

வேறு வழியில்லாமல் சந்திரன் சங்கீதாவை கடத்திக் கொண்டு வந்து வீட்டில் சிறை வைத்தான். அலைகள் கரைக்கு வந்து மீண்டும் கடலை நோக்கி பின் வாங்குவது போல் சங்கீதா இங்கு வந்தும், உண்மையை தெரிந்து கொண்டும் நம்பாமல், மீண்டும் மீண்டும் அப்பா அம்மா தம்பி என்றே அந்த அன்பு வட்டத்தை மறக்காமல் பின்வாங்குகிறாள். சந்திரன் இதெல்லாம் நினைத்துப் பார்த்தான். அவனைப் பொறுத்தவரை

ஆனந்தன் மறக்கப்படவேண்டிய வில்லன்.



சங்கீதாவின் குரல் அவனை இந்த உலகத்துக்கு கொண்டு வந்தது.

“என்ன பேசாம இருக்கீங்க? இன்னும் என்ன பொய் பேசலாமுன்னு

சிந்திக்கிறீங்களா?” என்று அவனை தன் நினைவுக்கு கொண்டு வந்தாள் சங்கீதா. அவனுக்கு விரக்தியான சிரிப்பு வந்தது.

“சங்கீதா எனக்கு ஒண்ணு புரியுது. உனக்கு பொய் தான் பிடிக்கும். அதான் நூறு சதவிதம் நான் சொல்லும் உண்மையை நீ நம்ப மறுக்கிற...”

“ஆமா..ஆமா நீங்க உண்மை விளம்பி....இன்டர்வியூன்னு நாடகமாடி என்னை

வலுக்கட்டாயமா கூட்டி வந்த உத்தமன் தானே நீங்க. உங்களைத்தான் நான் நம்பணும் இல்லே?”

“அந்த ஐடியா கூட அந்த ஆனந்தன் கொடுத்த ஐடியா தான். அப்ப தான் உன் அப்பாவுக்கு அந்தக் கொடிய நோய் ஆரம்பித்திருந்தது. எப்படி வருத்தப்பட்டார்

தெரியுமா? எம் பொண்ணை அருமை தெரியாத இடத்திலே தூக்கிக் கொடுத்திட்டேனே...நான் பாவி...நான் பாவி...முதல் முறையா தான் செய்தது தவறுன்னு உணர்ந்தார். துடிச்சார். எம் பொண்ணு மனசு எவ்வளவு பாடு படும்? அந்த சொர்ணா கண்ணில் மண்ணைத் தூவிட்டு சங்கீதாவை துரத்தப் பார்க்கிறான். இந்த சொர்ணா இன்னொரு கல்யாணம் பண்ணிப்பான்னு தெருஞ்சிருந்தா இப்படி அவளிடம் என் கண்மணியை தூக்கி கொடுத்திருக்கமாட்டேன்னு ஏங்கி ஏங்கி அழுதார் தெரியுமா?”

“எல்லாம் எனக்கு கதை மாதிரி இருக்கு.”

“ஆனந்தனோட பேச்சும் குணமும் சரியில்லை. சொர்ணா அவன் போக்கிரித்தனத்தை மறைச்சு மறைச்சு வச்சிட்டா போலிருக்கு. கடைசியில்

வெடிச்சிடுச்சு. சொர்ணாவும் அவள் மகன் சித்தார்த்தும் உன் மேல் நிஜமான

பாசம் வச்சிருந்தாங்கம்மா..” என்றாள் ஆண்டாள்

“என் தம்பிக்கு விஷயம் தெரியுமா? உங்க கூற்றுபடி நான் அவன் கூடப் பிறந்தவளல்ல என்று தெரியுமா?”

“தெரியாது...தெரியக் கூடாதுன்னு ஆனந்தன் முடிவு பண்ணியிக்கார். தீடீர்ன்னு

இது உன் அக்கா இல்லை என்று சொன்னால் அவன் மனசு மாறிடுமா என்ன? அவனுக்கு சந்கீதான்னா உயிர்...இதெல்லாம் கணக்கில் வைத்து தான் அந்த ஆனந்தன் கடத்தல் ஐடியாவை செயல் படுத்த சொல்லியிருக்கான்.”

பெரியவங்க செஞ்ச தவறாலே நான் தான் பாதிக்கபட்டிருக்கேன். எதை நம்பறது எதை நம்பக்கூடாதுன்னு தெரியலை.”

“சொர்ணா உங்கப்பாக்கிட்டே சத்தியம் வாங்கிக்கிட்டா தெரியுமா சங்கீதா? எக்காரணத்தைக் கொண்டும் பார்க்கக் கூடாது, தொடர்பு கொள்ளக் கூடாதுன்னு...உங்கப்பா வெங்கடேசன் தான் சத்தியவான் ஆச்சே..கொடுத்த

வாக்கை மீறலை. பாசம் முட்டி மோதிக்கிட்டு இருந்தாலும் வாக்கு மீறக்கூடாதுன்னு வைராக்கியமா இருந்திட்டார். மங்களம் இப்படி ஆனபோதும், வேறு குழந்தை பிறக்காத போதும் கூட தன் சத்தியம் முக்கியம்னு நினைச்சவர். இதோ இவனை ஆளாக்கறதிலேயே மனசை செலுத்திட்டு இருந்தார். அவரைப் போல் ஒருவரை பார்க்கவே முடியாது.”

ஆண்டாள் மரியாதையுடன் சொன்னாள்.

“எல்லாம் சரி தான். என்னை பணயம் வைக்க யாருக்கும் உரிமை இல்லை.

நான் வாய் பேச முடியாத, ஏதும் புரிந்து கொள்ள முடியாத குழந்தையா

இருந்தது அவருக்கு சௌகரியமா போச்சு. துக்கிக் கொடுத்திட்டார்.

அங்கேயும் துரத்தப்பட்டு...இங்கேயும் திடீர் உறவுகளோடு ஓட்ட முடியாம எப்படி அவஸ்தைப் படறேன் தெரியுமா? என் நிலை யாருக்கும் வரக் கூடாது. இந்த ஊஞ்சலாட்டம் எப்போ முடிவுக்கு வருமோ?”

சங்கீதா அடக்கமாட்டாமல் அழதாள்.

“உன் நிலமை எனக்கு புரியுது ராசாத்தி. நீ தைரியமான பெண்ணாச்சே..

அழக்கூடாது. நீ எங்களை நம்பு எல்லாம் சரியாகிவிடும்.”

“பெரியம்மா..எனக்கு என்ன பயம் தெரியுமா? மறுபடியும் நீங்கெல்லாம்

நாங்க உன் குடும்பம் அல்ல..அது தான் உன் குடும்பம்னு சொல்லிட்டா? இப்படி பந்தாடிக்கிட்டே இருந்தா நான் என்ன தான் பண்ணுவது? எனக்குன்னு மனசு இருக்குன்னு உங்களுக்கு எல்லாம் புரியுதா புரியலையா?”

சந்திரன் முதல் முதலாக வாய் திறந்தான். அவன் குரலில் உறுதி இருந்தது.

“சங்கீதா..அப்படி ஒரு நாளும் நாங்க சொல்லமாட்டோம். நீ அவஸ்தைப் படறதை எங்களால தாங்கிக்க முடியாது. எங்களை அந்நியமா நினைக்காதே. உன் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக் கூடாது. உன் பழைய குடும்பம் ஒரு கெட்ட கனவு. மறந்துவிடு. மெல்ல மெல்ல உன் நிஜமான உறுவுகளை புரிந்து கொண்டு நேசிக்க முயற்சி செய். உன் அன்புக்காக நாங்க ஏங்கிட்டு இருக்கோம். நீ சிந்தும் புன்னகைக்காக காத்திட்டிருக்கோம். உன் அப்பா சாகும் போது அது உன் அப்பா தான்னு நீ உணரலை. ஆனா உன் அம்மா இப்போ உன் கண்முன் இருக்காங்க. கைகுழந்தையா உன்னை இழந்தாங்க. பிள்ளை என்று நினைத்த கரு முத்துப் பிள்ளை என்று முடிந்து

போயிற்று. அவங்க நிலைமையை யோசிச்சுப் பாரு. துக்கமும் பரிதவிப்பும் தான் அவங்க வாழ்க்கையாப் போச்சு. அதிர்ஷ்டவசமா நீ கிடச்சிட்டே. இழந்த அவங்க தாய்மை உணர்வை மீட்டுக்க நீ தான் உதவணும். அது உன்னை பெற்ற அம்மாடா. நீ நேசிக்கக் கூடாதா?” அவன் உருக்கமான பேச்சு சங்கீதாவை அசைக்கவே செய்தது. “ம்ம்...” என்ற பதில் தான் அவளிடமிருந்து

வந்தது. இன்னும் அவளுக்கு இதெல்லாம் ஒட்டவில்லை.

“அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுடா...பொறுமை தேவை.”

“சரிங்க அத்தை..” என்றான் சந்திரன்.

“எனக்கு முக்கியமான வேலை இருக்கு.” சொல்லிவிட்டு சங்கீதா வெளியே போனாள். அப்பா கொலையுண்டு கிடப்பதை போலீசுக்கு சொல்லணுமே!



போலிஸ் ஜீப் அந்த வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினாள் சங்கீதா. “மிஸ் சங்கீதா...நீங்க சொன்னபடி உங்க அப்பாவோட பாடி இங்கே இருக்கணும் இல்லையா? அவர் கொலை செய்யப்பட்டதா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கீங்க...வாங்க உள்ளே போலாம்..” என்றார் இன்ஸ்பெக்டர் முரளி.

“ஆமா இன்ஸ்பெக்டர். நேற்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு மேல் அப்பா போனில் கூப்பிட்டு வரச் சொன்னார். அதனால் வந்தேன். காலிங் பெல்லை அடித்தேன். யாரும் வந்து கதவு திறக்கலை. சரியென்று வீட்டைச் சுற்றிக் கொண்டு அப்பாவின் அறை பக்கமாக இருந்த ஜன்னல் வழியாக பார்த்தேன்.

அப்பா கொலையுண்டு கிடந்தார். கத்தி குத்துப் பட்டு மூலையில் சார்த்தி வைக்கப்பட்டிருந்தார். தலை முன்புறம் தொங்கிக்கொண்டிருந்தது. ரத்தக்

கறை தெரிந்தது. என் கண்ணால் பார்த்தேன்.”

எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. நீங்க சொல்றது உண்மையான்னு உள்ளே போய் பார்க்கலாம்...” என்றார் இன்ஸ்பெக்டர் முரளி. கூட வந்த கான்ஸ்டபிள் வரதன் பூட்டை உடைத்தார். இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் உள்ளே நுழைந்தனர். அவளும் சென்றாள். தரையில் கிஷோரின் கல்யாண பத்திரிகை அப்படியே கிடந்தது. மூன்று மாதம் முன்பு அவள் இங்கு வந்தபோது இருந்த மாதிரியே வீடு இருந்தது. அதற்குப் பின் புழக்கம் இல்லாமல் இருந்ததை பறைசாற்றியது. அப்பாவின் அறைக்குள் வந்தனர். சங்கீதா பயத்துடன் நுழைந்தாள். அப்பா கொலையுண்டு கிடக்கிற காட்சியை பார்க்கும் தைரியம் இல்லாதவளாக மனசு தடக் தடக் என்று அடித்துக் கொள்ளப் பார்த்தாள். மூலையில் சாற்றி வைக்கப்பட்டதாக அவள் சொன்ன மாதிரி நிகழ்ந்ததற்கான அறிகுறி எதுவுமில்லை. ஆச்சர்யப்பட்டுப் போனாள். ரத்தக் கரறையில்லை. குற்றம் நடந்திருக்கலாம் என்று எண்ணக் கூடிய மாதிரி எதுவும் இல்லை. சங்கீதாவுக்கு தலை சுற்றியது.

“என்னம்மா...நீங்க சொன்ன மாதிரி கொலை நடந்ததற்கான தடயம் ஏதுமில்லையே? பாடியை அப்புறப்படுத்தியிருந்தாலும், ஒரு அசாதாரண

தன்மை தெரியுமே. எல்லாம் நார்மலாகத் தானே இருக்கு. நல்லா யோசிச்சுப் பாரும்மா. உன் மனப்பிரமையாக இருந்திருக்குமோ?”

“இல்லே...இன்ஸ்பெக்டர். நான் பார்த்தது நிஜம். பதட்டத்தில் என் பென் டார்ச்சை இங்கே அறைக்குள் தவற விட்டுட்டேன்...’

அவள் அங்கும் இங்கும் கண்களை ஓட்டினாள். எங்கும் காணவில்லை.

அது அகப்படவேயில்லை. இன்ஸ்பெக்டர் அவளை ஒரு மாதிரியாகப்

பார்த்தார். அவர் முகத்தில் எரிச்சல் தெரிந்தது.

“இதோ பாருங்கம்மா...எல்லாம் உங்க பிரமைன்னு தோணுது. இந்த வீட்டை உங்கப்பா வித்திட்டதா எங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கு. வாங்கினவங்க இரண்டு மாசம் கழித்து குடி வரப்போறதாவும் நம்பகமான தகவல் இருக்கு.

ஸோ...எல்லாம் உங்க பிரமை தான். வீட்டை உங்களுக்குத் தெரியாமல் வித்தது உங்களுக்கு பிடிக்காம நீங்க ஏதோ பிரச்சனை பண்றீங்க.

எங்க நேரத்தை இப்படி வேஸ்ட் பண்றீங்களேம்மா...”

“இன்ஸ்பெக்டர்....இதில் ஏதோ மர்மம் இருக்கு. நான் வீட்டுக்கு வந்ததும். செத்துக் கிடந்த என் அப்பா போன் பண்ணி பேசறார்....சம்திங் ராங்.”

“நத்திங் ராங். உங்ககிட்டே தான் பிரச்சனை. தேவையில்லாம போலிஸ்

ஸ்டேஷன் வந்து புகார் கொடுக்றீங்க. புகார் கொடுக்கும் முன் யோசிக்க மாட்டீங்களா? சரி இதோ பாருங்க..இந்த வீட்டை வாங்கியவர் கிட்டே இருந்து

உங்கப்பாவின் போன் நம்பரை வாங்கியிருக்கோம். அவருக்கே போன் பண்ணி

பார்ப்போம். நீங்களே பேசுங்க. ஸ்பீக்கரில் போடறேன்..இந்தாங்க பேசறார்.

“அப்பா..அப்பா...நீங்க உயிரோடு தான் இருக்கீங்களா?”

“சங்கீதா...அறிவிருக்கா உனக்கு? உன் மனப்பிரமைக்கு ஒரு அளவே இல்லையா? நான் உயிரோடு இருக்கேனான்னு கேக்றே? நான் துபாயில்

இருக்கேன். சொர்ணா..சித்தார்த் கூட இங்கு தான் இருக்காங்க.”

இடையில் இன்ஸ்பெக்டர் பேசினார்.

“சார்..உங்க டாட்டர் அடிக்கிற கூத்துக்கு அளவே இல்லை. உங்களை யாரோ கொலை செய்துவிட்டதா சொன்னாங்க. என்னவோ டிப்ரஷனில் இருக்காங்க போலிருக்கு..நீங்களே பேசி கன்வின்ஸ் பண்ணுங்க..’

“என்னம்மா சங்கீதா..உனக்கு என்னாச்சு?

“அப்பா...அப்பா..நீங்க என்னை போன் பண்ணி வரச் சொன்னீங்களே..அது கூடவா என் பிரமை? நீங்க பேசினீங்க. என் செல்லில் பதிவாகியிருக்கு.

நான் என்ன சின்னக் குழந்தையா? இது கூட எனக்குத் தெரியாதா?”

“நான் உனக்கு போன் பண்ணவேயில்லை. யாரு போன் பண்ணியதோ? எல்லாம் உன் பிரமை தான். எப்போ அந்த கிஷோரோடு நீ ஓடிப் போனியோ..அதோடு நம்ம உறவு முடிஞ்சுப் போச்சு.

எதுவும் பேசாதே. நன்றி கெட்டதனமா எங்களை தவிக்கவிட்டிட்டு...அவமானப்

படித்திட்டு போக உனக்கு எப்படி மனசு வந்தது? இப்ப கொலை அது இதுன்னு நாடகம் ஆடறயா? நீயெல்லாம் ஒரு மகளா? உன் அம்மாவும் தம்பியும்

உன் செய்கையால் ரொம்ப அவமானப் பட்டுப் போயிட்டாங்க. அங்கே தலை காட்ட முடியலைன்னு சொல்லி அழுதாங்க. அதான் அவங்களை இங்கு

கூட்டி வந்திட்டேன். வீட்டையும் வித்திட்டேன். சங்கீதா நீ இனிமே எங்க கூட

பேசவேண்டாம். உன் திருமண வாழ்க்கைக்கு எங்க வாழ்த்துக்கள். நீ என் மகளே இல்லை...புரிஞ்சுக்கோ. குட்-பை...நிரந்தரமா..”

“அப்பா...அப்பா நீங்களா இப்படி பேசறது? உங்க கண்மணிப்பா நான்.”

“அதெல்லாம் முடிந்த கதை. வளர்த்ததுக்கு நல்ல பரிசு கொடுத்திட்டே.

மனசே ஆறலை....ஒழுக்கம் இல்லாத உனக்கு அப்பாவா நான் இருக்க விரும்பலை. அந்த கிஷோரை கழட்டிவிட்டிட்டு இப்ப உன் மாமா மகனுடன்

குஷால் பண்ணிட்டு இருக்கே இல்லே? அவனுக்கு உன்னைக் கொடுக்க அம்மா விரும்பலை. அதனால் எங்களுக்குத் தெரியாமல் ஓடிப் போயிட்டே.

வளர்த்த கடா மார்பில் பாஞ்சிடுச்சு. சீ...உன்னை வளர்த்ததை ஒரு அவமானமா உணர்றோம்...நல்லா இரு...”

“அப்பா..அப்பா...கிஷோரோடு நான் எதக்கு ஓடிப்போனும்? அப்படியே அவனை எனக்கு பிடிச்சிருந்தா உங்க கிட்டவே சொல்லி போராடி கல்யாணம் பண்ணியிருப்பேனே. அவன் கல்யாண பத்திரிகை உங்க வீட்டிலே தான் கிடக்கு...பார்த்தீங்களா இல்லையா?”

“அதான் தெரியுமே. அவனை நீ கழற்றி விட்டிட்டு உன் மாமா மகனுடன்

சேர்ந்துக்கிட்டே. நீயும் அவனும் சேர்ந்து ஆடிய நாடகம் தானே இது.?

அம்மா அழுதிட்டே இருக்கா. ஒரு நிமிஷம் அவளை தூக்கி எறிஞ்சிட்டு, அவளுக்கு பிடிக்காத ஆட்களோடு போயிட்டே. இனி உன்னை அவர்கள் பார்க்கத்தான் விடுவார்களா என்ன? கொடுப்பது போல் கொடுத்து மகளை பிடுங்கிக் கொண்டாங்களேன்னு..சதா புலம்பிக்கிட்டு இருக்கா சொர்ணா.

நீ ஒரு ஓடுகாலின்னு...”

சங்கீதாவின் உள்ளம் துடித்தது.. என்ன வார்த்தைகள் பேசிவிட்டார்! அக்னியை அள்ளி கொட்டியது போல் அது அவள் நெஞ்சை தகிக்கிறது! அன்பே உருவான அப்பாவா இப்படி பேசுகிறார்?. வேறு யாராவது சொல்லியிருந்தால் அவள் நம்பியிருக்க மாட்டாள். அவளே காதால் கேட்டுவிட்டாள்!

“ஸாரி இன்ஸ்பெக்டர்.....எங்கப்பா கொலை செய்யப்படலை. அவர் என்னைத்தான் கொன்றுவிட்டார்...வாங்க போலாம்...உங்களுக்கு சிரமம்

கொடுத்ததுக்கு மன்னிக்கவும்.” உடைந்து போய் நிற்கும் அந்த சிறு பெண்ணிடம் மேலும் பேசி மனதை புண்படுத்த விரும்பாமல் இன்ஸ்பெக்டர்

முரளி மௌனமாக ஜீப்பில் ஏறினார். வீடு வந்து சேரும்வரை சங்கீதா அழுகையை கட்டுப்படுத்தி வைத்திருந்தாள். சந்திரன் சொன்னதில் தான்

உண்மை இருக்கிறது என்று உணர்ந்தாள். அவள் சந்தேக மேகங்கள் விலகின.



அப்பா....இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே தன் மனம் புனிதம் அடைந்துவிட்டது போல் உணர்வாள் சங்கீதா. அவளுக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். கண்களில் கருணை...அவர் வர்ஷிக்கும் அன்பு பால் குடத்தை தலையில் கவிழ்த்தாற்போல் இருக்கும். இயற்கையின் அழகையெல்லாம் அவர் அன்பில் காணலாம். உறங்க வைப்பதில் தென்றலின் இதம் வரும்.

“செல்லக் கிளியே மெல்லப் பேசு. தென்றல் காற்றே மெல்ல வீசு

தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே...தொடரும் கனவுகள் தொடரட்டுமே..”

அவள் தூங்க அவர் எல்லோரையும் சூ பேசாதீங்க என்று அமர்த்துவார்.

அவர் கண்கள் சந்திரனின் ஒளியை சிந்தும். அவர் பேச்சில் சோழிகள் குலுங்கும். அவர் கைசூட்டில் தாய்மையின் கனிவு மழை போல் தெரியும். அவரா இன்று இப்படி பேசிவிட்டார்? மூன்றாம் தர மனிதனின் நாராச சொற்களை அவர் வாய் எப்படி சிந்திற்று? துப்பாக்கி தோட்டா போல் அது மனசை துளைத்த்து அவளை கொன்று விட்டது நிஜம். சந்திரன் சொன்னது போல் அவள் தந்தை வெங்கடேசன் தானா? யார் தன்னுடைய தந்தை? யார் தன்னுடைய தாய்? இந்த ஊஞ்சலாட்டதில் அவள் எவ்வளவு காலம் நசிந்து சிக்கி தவிக்க வேண்டும்? ஒத்தையா இரட்டையா போட்டு பார்க்க இது வாழ்க்கையா சூதாட்டமா? அம்மா....என்னால் தாங்க முடியவில்லையே!


ஊஞ்சல் ஆடும்...
 
Top