அத்தியாயம் - 5
சங்கீதா சுதாரித்துக் கொண்டாள். புரிந்து கொள்ளாதவர்கள் முன் சோகத்தையோ கண்ணீரையோ காட்டுவதில் அர்த்தமில்லை. தன் சோகத்தை இவன் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இவன் பொய் சொல்கிறான். எனக்கு கிடைத்தது போல் அன்பே உருவான பெற்றோர்கள் யாருக்கும் கிடைக்காது. அவர்களை போய் தப்பாகப் பேசுகிறானே!
“சந்திரன்...நான் என் அம்மாவை பார்க்கணும். நேரில் பேசணும்.”
“வேண்டாம்..அவ்வளவு தான் சொல்வேன்.”
“ஏன்? உன் குட்டு வெளிப்பட்டுவிடும் என்று பயமா?”
“நோ. மேலும் காயப்படுவாய் என்று பயம். அடம் பண்ணாதே. இல்லாமல் போயவிட்ட உறவைத் தேடி அலையாதே.”
“இருபத்திரண்டு வருஷ பந்தத்தை இருபத்திரண்டு மணி நேரத்தில் தகர்த்து எறிந்து விடப் பார்க்காதே மிஸ்டர் சந்திரன். நீ தான் தோத்துப் போவே.”
“நான் போனதும் மறுமடியும் வெளியே போய் துப்பறிய ப்ளான் போட்டிருக்கியா?” இவனிடம் எதுக்கு வீண் வாதம்?
“இல்லை...அதான் பட்டுட்டேனே. நெனச்சு நெனச்சு இங்கேயே பெரியவருக்கு முன்னாலேயே செத்துப் போயிடறேன். திருப்தி தானே? பெரியவருக்காக பார்க்கிறேன் இல்லை உன்னை போலீஸில் பிடிச்சு கொடுத்திருப்பேன். நீ தொலஞ்சு போனால் அவருக்கு வைத்தியம் பார்க்கறது யார்? போலீசுக்கு நான் போகலைன்னு நீ என்னை கோழைன்னு கணக்கு போடாதே.”
“ஆகா பெரிய வீராங்கனை தான். நீ போலீஸில் புடிச்சுக் கொடுப்பே, அதுவரை என் கை புளியங்காய் பறிச்சிட்டிருக்குமா? போனாப் போவுது சின்னப் பெண்ணாச்சேன்னு பார்க்கிறேன். ரொம்பத்தான் துள்ளிக்கிட்டு..”
“போதும் உன் கரிசனம். அவங்க என் அப்பா அம்மா இல்லேங்கறே.....முதல்ல
நீ யாருடா? முன்பின் தெரியாத உன்னை நான் ஏன் நம்பணும்? இருபத்திரண்டு வருஷம் பெத்து வளர்த்தவர்களை நான் தூக்கிப் போடணும்.....நல்ல கதையா இருக்கே? எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா செய்யறதையும் செஞ்சிட்டு, நியாயவான் மாதிரி பேசுவே? இந்த சங்கீதா உனக்கு கிடைக்கவே மாட்டா.”
“கிடைச்சாச்சே! அப்புறம் என்ன சவால் வேண்டியிருக்கு? உன் அருமை அப்பா, அம்மா. தம்பி என்ன பண்ணிட்டு இருக்காங்க? ஹீரோ மாதிரி வந்து உன்னை காப்பாத்தினாங்களா? யாராவது உன் கூட பேசவாவது முயற்சி செய்தாங்களா? உன் செல்லில் ஒரு மிஸ்ட் கால் கூட இல்லை தெரியுமா? போய் தூங்கு. காலையில் குளிச்சிட்டு நான் வாங்கித் தந்த உடையில் ஒன்றைப் போட்டுக்கிட்டு தேவதை மாதிரி சிரிச்சுக்கிட்டே என் முன்னாலே வந்து நிக்கறே. கண் படுமே பிறர் கண் படுமே...நீ வெளியே வரலாமான்னு..
நான் பாடுவேன். எப்படி?”
“அதான் வெளியே போக விடாம சிறை வச்சிட்டியே அதை பாடி வேறு காட்டனுமா? இடியட்...ராஸ்கல். உடம்பு முழுக்க திமிர். ச்சே இங்கே வந்து மாட்டிக்கிட்டேன்...” பொரிந்து தள்ளிவிட்டு அடுக்களைக்கு சென்றாள்.
“தாத்தா..பெரியவருக்கு இரவு உணவு ரெடியா?”
“ஆச்சும்மா. அய்யாவுக்கு சவைக்கறதும் முழுங்கறதும் சிரமம்மா. அதான் பூ மாதிரி இடியாப்பம் பண்ணி இருக்கேன். உங்களுக்கு வேற ஏதாவது செய்யணுமா?” என்று கனிவாகக் கேட்டார்.
“நீ வா போன்னே சொல்லுங்க தாத்தா. எத்தனை தரம் சொல்றது? சரி..ஆளுக்கொரு டிஷ் எதுக்கு? எனக்கு ஒ.கே உங்க சின்னய்யாவுக்கு...”
“அவரு தங்கம் தாயி. மாமாவிற்கு என்ன செய்றீங்களோ அதுவே எனக்கும் போதும்னு சொல்லிடுவார். மாமா மேலே உசுரையே வச்சிருக்கார். அபூர்வமான தம்பிம்மா...இந்த காலத்திலேயே இப்படியும் ஒருத்தர்..”
தண்டமேன்னு சிரித்து வைத்தாள். சாத்தானை புகழும் இவர் எவ்வளவு அப்பாவி என்று தான் நினைக்கத் தோன்றுகிறது சங்கீதாவுக்கு.. பொறுக்கி ராஸ்கல் பெண்டாட்டியை அதட்டுவது போல் உரிமை எடுத்துக்கறான். மகா கில்லாடி. இவன் அபூர்வமானவனாமே! தங்கமானவனாமே..விளங்கிடும். நாளை இவன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு அம்மாவைப் பார்த்து மனம் திறந்து பேசணும். “அம்மா நீ நினைக்கிற மாதிரி நான் கிஷோரோடு எல்லாம் ஓடிப்போகவில்லை. அப்பாக்கிட்டே யாரோ தப்பான தகவல் சொல்லி குழப்பி இருக்காங்க. நாங்க நல்ல நண்பர்கள். கிண்டலா பேசிப்போம். பிரிதிவிராஜ் சம்யுக்தையை குதிரையில் தூக்கிட்டு போன மாதிரி உன்னை ஒரு நாள் தூக்கிட்டு போகப் போறேன்னு சொல்வான். தூக்கிட்டு போன மறுநாளே என் தொல்லை தாங்காம கொண்டு வந்து விட்டிடுவே..எஸ் என் பெற்றோரை பிரிஞ்சா நான் செத்திடுவேன்னு சொல்வேன்மா. அவனுக்கு காதலி இருக்கா. நாங்க சும்மா கலாய்ச்சுப்போம்..அதைத் தான் யாரோ கேட்டிட்டு
உண்மை தெரியாம போட்டுக் கொடுத்திருக்கணும் என்று அம்மாக்கிட்டே விளக்கி சொன்னா நம்பமாட்டாங்களா என்ன? அப்ப இருக்கு இந்த ப்ராடுக்கு...” அவள் மனதில் ஓடிய இனிய கற்பனையால் அவள் புன்னகைத்தாள். அவன் அவளை சுவாரஸ்யத்துடன் பார்த்தான்.
“என்ன இது கொள்ளை சிரிப்பு சிரிக்கிறே? என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிற மாதிரி கனவா? பேஷ் பேஷ்...சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா என்ன புதுமை...”
“இது ரொமான்ஸ் சிரிப்பு இல்லை மிஸ்டர் ப்ராட். உனக்கு நான் சிரிக்கும் சிரிப்பு கண்ணகியின் அக்னி சிரிப்பு. பொசுங்கிடுவே ஜாக்கிரதை.’
“என்னக்கென்னவோ...உன் சிரிப்பு என் நோயாளி மாமாவை பார்த்து சிரிக்கும் கனிவான சிரிப்பு மாதிரி இருக்கு.”
“குட். யூ ஆர் ரைட்.”
“அப்பா மேலே எவ்வளவு பிரியம்? தன்னாலே வருது பார்த்தியா.”
“அவர் அப்பா இல்லை. பாவப்பட்ட மனிதர். எதுக்கு என் பின்னாலேயே வர்றே? உன் அலுவலகம் மூடப்பட்டுவிட்டதா?”
“மாமாவுக்கு நீ ஒழுங்கா சாப்பாடு கொடுக்றியான்னு செக் பண்ண வந்தேன்.
மேலும் எந்த அலுவலகம் மாலையில் நடக்குது? வேலை முடிச்சிட்டு தான் வரேன்.” இருவரும் பெரியவர் அறைக்குள் நுழைந்தனர்.
“பைத்தியக்காரனோடு பேசியதில் மூளை மழுங்கி விட்டது. அய்யா சாப்பிடறீங்களா?” என்று கேட்டாள் சங்கீதா. அவளைப் பார்த்து அவர் முகம் தாமரையாக மலர்ந்தது. மெலிந்த குழி விழுந்த கண்களில் உயிர்ப்பு வந்தது. அவள் பரிவுடன் அவர் தலையை வருடிவிட்டாள். இருவரும் சேர்ந்து அவரை சாய்த்து உட்கார வைத்தனர். இரு இள முகங்களையும் குழிந்த விழிகளால் ஆதூரமான பார்வை பார்த்தார். கண் நிறைந்த ஜோடி!
“ராமனையும் சீதையையும் பார்க்கிற மாதிரி இருக்கு.” என்று திக்கித் திக்கி சொன்னார். அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.
“ராவணனும் அவனிடம் அகப்பட்ட சீதையும் மாதிரி தெரியலை?..” என்று அவனுக்கு மட்டுமே கேட்கிற மாதிரி முணுமுணுத்தாள் சங்கீதா. அவன் முறைத்தான். உன் வாய் இருக்கே...அவனும் முணுமுணுத்தான்.
‘மாமா..சுந்தரம் அய்யர் நல்ல சமைக்கிறார் இல்லே! பெரிய அத்தை தான் பாவம். இங்கே அவரை அனுப்பிச்சிட்டு அங்கே கஷ்டப்படறாங்க...”
சங்கீதா அவனைக் கேள்விக் குறியுடன் பார்த்தாள்.
“மாமாவோட சம்சாரத்தோட அக்கா தான் பெரிய அத்தை. அத்தையை அவங்க தான் கவனிச்சுக்கிறாங்க...” என்றான் சந்திரன்.
“கணவனுக்கு இப்படி முடியாம இருக்கும் பொழுது அங்கே அவங்க என்ன பண்றாங்களோ?”
“அவங்க இருபத்திரண்டு வருஷமா சுயநினைவு இல்லமே இருக்காங்க. மாமவை கண்டால் அடிக்க வருவாங்க.”
“அப்படியா? ஏன்?”
“எல்லாம் உன்னால் வந்த பிரச்சனை தான்.”
“என்ன உளர்றீங்க? அவங்க யாருன்னே எனக்குத் தெரியாது. என் மேலே பழி
போடறீங்க. புதுசு புதுசா குற்றம் சொல்றீங்க.”
“ஸாரி...விடு. மாமா தண்ணி கேக்றார் பார்.”
நாட்கள் ஓடின. ஒரு மாதம் முடிய அஞ்சு நாள் தான் இருந்தது. பிறகு அவளுக்கு விடுதலை. அப்பாடா...மனம் துள்ளியது சங்கீதாவுக்கு.
“அஞ்சு நாள் போனதும் விடுதலை..”
“நோ..நீ மாமா உயிர் பிரியும் வரை இங்கே தான் இருக்கவேண்டும். கத்தி கலாட்டா பண்ணாதே. இது தான் உன் வீடு. நான்தான் உன் வருங்கால புருஷன். நாளைக்கு நர்ஸ் கோகிலா வருவாங்க. மாதாந்தர செக் அப். நாள் பூரா இங்கே தான் இருப்பாங்க. அவங்களுக்கு சாப்பாடு இங்கே தான். அவங்களை நல்ல கவனி. ஓடிடலாம்னு பார்க்காதே...”
அவன் போனதும் சங்கீதா உற்சாகமானாள். இது நல்ல சந்தர்ப்பம். நர்ஸ்ஸிடம் மாமாவை ஒப்படைத்துவிட்டு அம்மாவை பார்க்க நேரில் போய்விட வேண்டியது தான். நேரில் போய் எல்லாவற்றையும் விளக்கினால்,
அம்மா புரிந்து கொள்வாள். இந்த எண்ணமே இனித்தது.
மறுநாள் என்றைக்கும் இல்லாத உற்சாகத்துடன் சுறுசுறுப்பாக காரியங்களை பார்த்தாள் சங்கீதா. பெரியவரை கவனித்து துள்ளலுடன் அவள் மாடிப் படிகளில் வேகமாக இறங்கியபோது, குளித்துவிட்டு வந்தகொண்டிருந்த சந்திரன் மேல் மோதிக் கொண்டாள்.
“அட...இன்னொரு தரம் மோதிக்கலாமா?” என்றான்.
அவள் கோபத்துடன் முறைத்தாள். முகம் சிவந்தது.
“அட...நீ கூட வெக்கப்படறியே...” என்றதும் அவள் படபடத்தாள்.
“இது வெட்கம் இல்லை, வெட்கக்கேடு. சிவப்பு வெட்கத்தால் வந்ததல்ல,
கோபத்தால்...உன் மேல் மோதினோமே என்ற அவமானத்தால்...”
அதை கவனியாதவன் போல் கூறினான்.
“ரொம்ப ஈடுபாட்டுடன் என்னையும் மாமாவையும் கவனிக்க ஆரம்பிச்சிட்டியே
நாட் பாட். நானே போன்னு சொன்னாக் கூட போக மாட்டே போலிருக்ககே..”
“ஆமா...ரொம்ப சந்தோஷமா இங்கே இருக்க முடிவு பண்ணிட்டேன். அன்பான அப்பா...காதல் மழை பொழியும் காதலன். வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு? பரம சந்தோசம்.”
“நைஸ்...நைஸ். திருந்திட்டியே...”
ச்சே போடா ப்ராட்...என்று மனதுள் வைதபடி சிரித்து வைத்தாள். அது அவளுக்கு இப்ப கை வந்த கலையாகிவிட்டது. அவன் யூகித்து விடக்கூடாதே
இவள் கம்பி நீட்டப் போகிறாள் என்று...அதற்காக நடித்தாயிற்று.
“ஹாப்பி இன்று முதல் ஹப்பி..” என்று அவள் மனம் பாடியது.
நர்ஸ் கோகிலா சரியாக எட்டு மணிக்கு இவன் போகும்முன்னே வந்துவிட்டாள். அவனிடம் பேசிவிட்டு பெரியவர் அறைக்குச் சென்றுவிட்டாள்.
“நான் கிளம்பறேன். நர்ஸ்ஸுக்கு வேண்டிய வசதி செய்து கொடு. நான் வரும் வரை இருப்பார்கள். பிறகு என்னிடம் மாமாவின் பி.பி ஸுகர் ரத்த அழுத்தம் எல்லாம் செக்க பண்ணிய மெடிக்கல் ரிப்போர்ட் கொடுப்பார்கள். பிறகு தான் போவார்கள். இவங்களையே மாமாவை கவனிக்க ஏற்பாடு செய்திருப்பேன்.
மாமா தான் தன் மகள் தான் வேண்டும் என்று அடம் பிடித்தார். அதான் உன்னை அழைத்து வந்தேன் . வேறு வழி இல்லை..”
“அழச்சிட்டா வந்தே? கடத்திட்டு வந்தே...” என்ற வார்த்தைகள் வாய் நுனிவரை வந்துவிட்டது. கஷ்டப்பட்டு உள்ளே தள்ளிவிட்டு
“புரியுது..” என்று பவ்வியமாகக் கூறினாள்.
நர்ஸ் கோகிலா செக்-அப் எல்லாம் முடித்து அமர்ந்திருந்தபோது,
“கோகிலா மேடம்...தப்பா நினைச்சுக்காதீங்க...இப்ப தான் போன் வந்தது.
என் தம்பி ஹாஸ்பிடலில் அடிபட்டு கிடக்கிறானாம். செய்தி வந்தது. நான் போய் பார்த்திட்டு ஜஸ்ட் டூ அவர்ஸ்ஸில் வந்திடறேன்...”
“தாராளாமா போயிட்டு வாங்கம்மா. நான் சார் வரும்வரை இங்கு தான் இருப்பேன். நான் பார்த்துக்கிறேன்.” என்றாள்.
“தேங்க்ஸ் மேடம்...” வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் வெளியே ஓடினாள் சங்கீதா. மளிகை சாமான் வாங்க சந்திரன் அவளிடம் கொடுத்திருந்த பணம் அவளுக்கு போக்கு வரத்துக்கு உதவியாக இருக்கும்.
தன் வீட்டை நெருங்க நெருங்க சங்கீதாவின் உள்ளம் பரபரபடைந்தது.
அம்மாவிடம் என்னவெல்லாம் பேசவேண்டும் என்று அவள் மனம் ஆயிரம் தரம் ஒத்திகை பார்த்தபடி இருந்தது. வீட்டு கேட் திறந்து உள்ளே நுழைந்ததும் ஏனோ கண்களில் நீர் சுரந்தது. அம்மாவை யுகம் யுகமாக பிரிந்தது போல் ஏக்கமாயிற்று. “அம்மா...” உயிரை திரட்டிக் கூப்பிட்டாள். ஒரு
வழுக்கை தலையன்.....நடுத் தர வயதுடையவன் வந்து கதவு திறந்தான்.
“நீங்க யாரு? எங்கம்மா இல்லையா?”
“முதல்லே உள்ளே வாங்க..” என்றான். அவள் உள்ளே நுழைந்ததும் அவன்
கதவு சாத்தினான். அவள் திக்கென்று உணர்ந்தாள். எதுக்கு கதவு சாத்தறான்?
“பயப்படாதேம்மா...உனக்கு தபால் வந்திருக்கு.” சொல்லியபடி அவன் உள்ளே போனான். அவளுக்கு தபாலா? இப்பொழுதெல்லாம் யார் தபால் போடுகிறார்கள்? எல்லாம் ஈமெயில் மயமாச்சே...இவன் பொய் பேசறானோ?
இரண்டு கவர் கொண்டுவந்து அவளிடம் நீட்டினான். அவள் பார்த்தாள்.
ஒன்று கிஷோரின் கல்யாண பத்திரிகை. இன்னொன்று ஒரு கம்பனிக்கு அவள் அப்பளை பண்ணியிருந்ததால் வந்த இன்டர்வியூ கார்ட். இன்டர்வியூவுக்கான தேதி முடிந்துவிட்டது. என்ன துரதிர்ஷ்டம்!
“அம்மா....தம்பி எங்கே போயிருக்காங்க? நீங்க யாரு? இங்கே எங்க வீட்டிலே என்ன பண்றீங்க?” புரியாமல் கேட்டாள்.
“நான் இங்கு வாடகைக்கு வந்திருக்கேன். உங்க அம்மாவும் தம்பியும் துபாய் போயிட்டாங்க. அவங்க போய் ஒரு மாசமாச்சு. நீ வந்தால் அவங்களை நீ மறந்திடனும்னு சொல்லச் சொன்னாங்க.” என்னது யாரோ ஒரு மனிதரிடம் என்னை மறந்திடுன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்களா! என்ன விந்தை இது! அவளுக்கு கதறி அழவேண்டும் போல் இருந்தது.
“கவலைப்படாதம்மா...என்னை உன் கிஷோரா நினைச்சுக்கோ.” என்று அவள் தோளில் கை வைத்தான். “சீசீ நாயே..” என்று அவனை தள்ளிவிட்டு அவள் கதவு திறந்து வெளியே ஓடினாள். கண்மண் தெரியாமல் ஓடிய அவள், வேகம் குறைந்து நின்ற போது...எதிரே பைக்கில் சந்திரன்!
“நினச்சேன்...பட்சி கூட்டை விட்டு பறந்து போக திட்டமிட்டிருக்குன்னு.
ஏறு வண்டியிலே...முட்டாள்...”
வழக்கமாக அவள் தான் முட்டாள் ராஸ்கல் என்றெல்லாம் சொல்வாள். இன்று அவன் அவளை திட்டுவதைக் கேட்டுக் கொண்டு வண்டியில் ஏறினாள்.
எரியும் சட்டிக்கு பயந்து எரியும் அடுப்புக்குள் விழுந்த கதையாயிற்று.
வழியெல்லாம் அழுதபடி வந்தாள்.
ஊஞ்சல் ஆடும்...