அத்தியாயம் – 8
வெங்கடேசன் தீர்ப்பை மங்களத்திடம் சொல்லிவிட்டார். மங்களம் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. கடைசியில் பிரச்சனை இப்படியா முடிய வேண்டும்? கொதிக்கும் சுடுநீரில் தூக்கிப் போட்டது போல் மனம் வெந்து துடித்தாள். இந்த மனுஷனுக்கு புத்தி கெட்டுப் போச்சா? மனு நீதி சோழன் இத்தனை வருடங்கள் கழித்து மறுபிறவி எடுத்துவிட்டாரா? தாய் பசுவுக்கு நல்ல தீர்ப்பு வழங்க தன் மகனை தேர்காலில் இட்டு கொன்ற கதையாக, சொர்ணாவுக்கு நல்ல தீர்ப்பு வழங்க வெங்கடேசன் தன்னால் இறந்த குழந்தைக்குப் பதிலாக தன் குழந்தையை அவளுக்கு கொடுப்பது
தான் நல்ல தீர்ப்பு என்று முடிவு பண்ணிவிட்டார். மனு நீதி சோழன் மனைவியின் மனநிலை பற்றி கவலைபடாத மாதிரி, வெங்கடேசனும் மனைவி மங்களத்தின் மனநிலை பற்றி கவலைப்படவில்லை.
தவமாக தவமிருந்து அஞ்சு வருஷம் கழித்து பிறந்த வைரச் சரத்தை
அப்படியே அந்த சொர்ணாவிடம் தூக்கிக் கொடுத்து விட வேண்டுமாமே!
“இத பாருங்க..இதுக்கு நன் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். நீங்க ரொம்ப ஓவராப் போறீங்க...பெரிய நீதிமான்னு நினைப்போ?”
“மங்களம்..புரியாம பேசாதே. அந்தப் பெண் ஒரு விதவை. அவளுடைய ஒரே ஆதாரம் அந்தக் குழந்தை தான். அவள் புத்தி சுவாதீனமில்லாமல் பிதற்றுகிறாள் என்று அவள் தம்பி சொன்னானே...உனக்கு இரக்கமில்லையா?”
அந்தப் பாவி அஸ்வின் இவர் காலில் வந்து விழுந்தபோதே இவள் பயந்தாள்.
வாயிக்கு வந்தபடி திட்டின அஸ்வின் வீடு தேடி வந்து கெஞ்சினான்.
“அய்யா..நீங்க எங்க அக்காவை காப்பாத்தனும்.” என்று சரனடைந்தான்.
“என்னாச்சு அஸ்வின்? ச்ச...ச்சே..எதுக்கு காலிலெல்லாம் விழுந்துக்கிட்டு?”
“அக்கா ஏதேதோ பிதற்றுகிறாள். அஸ்வின் அந்த வெங்கடேசனுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கே...அது செத்துப் போணும்னு சாபமிட்டேனே....
வேணாம் வேணாம்...அது உயிரோடு இருக்கணும்...ஆனா அது என் குழந்தையா வளரணும். குழிப் பிள்ளை மடியிலேன்னு சொல்வாங்களே! என் சாபத்தை வாபஸ் வாங்கறேன். ஆனா அது என்கிட்டே வந்தா தான். இல்லே செத்துப் போயிடும்...ஆமா நிஜமா செத்துப் போயிடும்...அப்படின்னு கத்திட்டே இருக்கா....அடக்க முடியலை. சார்....ஒரு பத்து நாள் குழந்தையை இரவல் குடுங்க. ப்ளீஸ். என் அக்கா நார்மலானதும் கொண்டு வந்து கொடுத்திடறோம்.
ப்ளீஸ் சார்...ப்ளீஸ் சார்...” குரல் நடுங்க கெஞ்சினான். அது பாசாங்கு இல்லை என்று தெரிந்தது. அப்பெண் சொர்ணா மனநிலை பிரண்டு விடுமோ? அந்த பாவமும் நம்மை வந்து சேருமோ என்று பயந்தார் வெங்கடேசன்.
மங்களம் ஆவேசமாகக் கூறினாள்.
“உங்கக்கா என்ன பெரிய கண்ணகியா? சாபமிட்டா பலிக்கறதுக்கு? அநாதை ஆஸ்ரமத்திலே எத்தனை குழந்தைகள் இருக்கு....அங்கு போனா தங்கமா கொடுப்பாங்க...இங்கே வந்து கெஞ்சறீங்க? என் குழந்தை உங்க கண்ணை உறுத்துதா? இது நான் பெத்த குழந்தை. தரவே மாட்டேன். பத்து நாள் என்ன? பத்து நிமிடம் கூட தரமாட்டேன்.....போயிடுங்க.”
“அம்மா...அப்படி சொல்லாதீங்கம்மா. நீங்க சொன்ன மாதிரி அநாதை
ஆஸ்ரமத்திலிருந்து ஒரு குழந்தையை எடுத்து வந்து கொடுத்தோம். இன்னும் ஆவேசமா ஆயிட்டாங்க. எனக்கு அந்தக் குழந்தை தான் வேணும்கறாங்க.
நல்ல அடையாளம் தெரிஞ்சு வச்சிருக்காங்க. டாக்டர் வந்து பார்த்தார். ஊசி போட்டு தான் அவங்க ஆவேசத்தை அடக்கினார். எழுந்ததும் மீண்டும் அதே கத்தல். ட்ரீட்மென்ட் நடந்திட்டு தான் இருக்கு. ஒரு முன்னேற்றமும் இல்லை. அப்புறம் டாக்டர் தான் சஜஸ்ட் பண்ணினார். அந்தக் குழந்தையை ஒரு பத்து நாள் கொண்டு வந்து கொடுத்துப் பாருங்க, அவங்க சம்மதிச்சான்னு சொன்னார். அக்கா நிலமை கன்றாவியா இருக்கு. நீங்களே வந்து பாருங்க. இரவு அவங்களை கட்டி வைக்க வேண்டியதா இருக்கு. நீங்க பெரிய மனசு பண்ணி, ஒரு பத்து நாள் போதும்...எங்கக்காவை பயித்தியமாகாமல் காப்பாத்துங்க.” மறுபடி காலில் விழுந்தான். வெங்கடேசன் மனம் பாகாக உருகியது. அவர் அப்போது தான் அந்த முடிவுக்கு வந்தார்.
“நீ வீட்டுக்குப் போப்பா. குழந்தையை எடுத்து வர்றோம். பத்து நாள் என்ன...
விரும்பினா குழந்தைக்கு அவங்களே தாயா இருக்கட்டும். நான் செஞ்ச தவறுக்கு இது தான் என் பிராயச்சித்தம். நான் முடிவு பண்ணிட்டேன்.”
“சார்....நீங்க தெய்வம்....” மீண்டும் காலி விழுந்தான்.
மங்களம் பலமாக எதிர்த்தாள். அவளுக்கு கண்ணீர் வற்றி விட்டது.
“நீங்க எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வரலாம்? நான் பெற்றெடுத்த தாய் என் சம்மதம் முக்கியம். அவளுக்கு பயித்தியம் தெளியனும், ஆனா நான் பயித்தியமானா பரவாயில்லையா? பத்து நாட்கள் கேட்டாங்களே அதுக்கு கூட நான் தயாரில்லை. இன்னும் பால் குடி மறக்காத பச்சை மண்ணு...என்ன..
பொம்மையா தூக்கிக் கொடுக்க? கொஞ்ச நாளானா சரியாயிடும் அவளுக்கு.
இந்த யோசனையை ட்ராப் பண்ணிடுங்க. முடியவே முடியாது.’’
“தப்பா நினைக்காதே மங்களம்...நீ...நீ தான் இப்ப கர்பமா இருக்கியே. நமக்கு குழந்தை பிறக்கும். நம் கவலை தீரும். ஆனா விதவையான அவளுக்கு எப்படி குழந்தை பிறக்கும்? நீ சம்மதிக்காட்டி நான் வற்புறுத்த மாட்டேன்.
ஆனா குற்ற உணர்வில் புழுங்கி....அணு அணுவா புழுங்கிப் புழுங்கி நடை
பிணமாவேன். என்னால் தான் குழந்தை இறந்தது. இது பிராயச்சித்தம்.”
பலவாறாக அவர் பேசப் பேச....தன் விருப்பமே இல்லாமல் தங்க விக்ரகத்தை
சொர்ணாவிடம் இழந்தாள் மங்களம். இரங்கல் பூமாலையை போட்டு இறந்த குழந்தைக்கு மரியாதை செலுத்தப் போகாமல் இருந்திருந்தால் என் குழந்தையை நான் உயிருடன் பறிகொடுத்திருக்க மாட்டேன்....என்று எண்ணி எண்ணி ஏங்கினாள் மங்களம். இப்படி ஒரு விசித்திரமான சூழ்நிலை வரும்...
விசித்திரமான கணவர் விசித்திரமாக முடிவு எடுப்பார் என்று அவள் கண்டாளா என்ன? அவர்கள் பத்து நாட்கள் தானே கேட்டார்கள்..இவர் காலம் பூரா வைத்துக் கொள்ளுங்கள் என்று வள்ளலாகிவிட்டார். கடை தேங்காயை வழிப் பிள்ளயாருக்கு தானம் செய்தது மாதிரி என் பிள்ளையை அவளிடம்
தானம் செய்ய இவருக்கு என்ன உரிமை இருக்கு?
“நம்மிடமிருந்தால்...அவள் சாபம் பலித்து பிள்ளை இறந்துவிட்டால்? அதை விட எங்கோ உயிரோடு நன்றாக இருக்கட்டும் என்று சமாதானப் படுத்திக்கொள் மங்களம். அப்புறம் நமக்கு தான் இன்னொரு குழந்தை பிறக்க
போகிறதே! நாம் நல்லது தான் செய்கிறோம்...நமக்கு நல்லது நடக்கும்.”
“குழந்தையை நல்லா பார்த்துக்கோங்க..” உடைந்த குரலில் சொல்லி வேறு வழியில்லாமல் தன் மூன்று மாத பொக்கிஷத்தை சொர்ணாவிடம் இழந்தாள் மங்களம். குழந்தையை வாங்கிக் கொன்ட சொர்ணா முகம் பூரண சந்திரன் போல் ஒளிர்ந்தது. எல்லையில்லா நிம்மதி அவள் இதய கோவிலை வந்தடைந்தது. அம்மனின் சிலை போல் அவள் அழகு பெற்றாள். மங்களம் முகம் அமாவாசை இரவு போல் இருளடைந்தது.
“ரொம்ப நன்றிங்க. உயிரையே கொடுத்திட்டீங்க. கண்ணின் மணி போல் பார்த்துப்பேன். என் வாழ்வில் இசையாக வந்த இந்தக் குழந்தைக்கு சங்கீதான்னு பெயர் வச்சுக்கட்டுமா?”
தலையாட்டுகிறாள் மங்களம். அவளுக்கும் குழந்தைக்கும் உள்ள உறவுக்கு மங்களம் பாடியாகிவிட்டது. இவள் என்ன பெயர் வைத்தால் தான் என்ன!
சூரியன் அஸ்தமித்த அதே நேரம் சந்திரன் உதயமானது போல் இருந்தது அக்காட்சி. அஸ்தமித்த சூரியனாய் ஒளி இழக்கிறாள் ஒரு தாய்!. உதயமான சந்திரனாய் ஒளி பெறுகிறாள் ஒரு தாய்! ஒரு தாயிடமிருந்து இன்னொரு தாயிடம் மழலை சிரிப்புடன் குழந்தை போன பிறகு தான் வெங்கடேசனின் மனம் சாந்தி அடைந்தது. மங்களம் சாந்தி இழந்தாள்.
“இது தான் இருபத்திமூன்று வருஷத்துக்கு முந்தி நடந்த உண்மை சம்பவம்.”
என்றான் சந்திரன். அன்று வெங்கடேசனின் மனம் சாந்தி அடைந்தது. இன்று
அதைக் கேட்டு சங்கீதாவின் மனம் சாந்தி இழந்தது.
வளர்த்தவர்கள் பெற்றோர்களா? பெற்றுவிட்டு.....குற்ற உணர்வால் பிராயச்சித்தம் தேடியவர்கள் பெற்றோர்களா? முதலில் இதெல்லாம் நிஜம் என்று எப்படி நம்புவது?
“இதுதான் நீங்க மறைத்த உன்மைகளா? உங்களைப் பொறுத்தவரை பெரியவர் என்னைப் பெற்றவர். நீங்கள் அவரின் தங்கை பையன். என் முறைப் பிள்ளை.
இது தானே உங்க கூற்று.? நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? என்னை கல்யாணம் செய்து கொள்ளவதற்காக நீங்க இப்படி ஒரு கட்டுக் கதை சொல்றீங்களோன்னு....எனக்கு ப்ரூப் வேணும்?”
“சரி...மாமாவிடம் கேள். அவர் சாகக் கிடக்கிறார். பொய் சொல்ல மாட்டார்.”
சரி என்று எழுந்தாள் சங்கீதா. நாளை விடிந்ததும் கேட்போம் இப்ப தூங்கிக்
கொண்டிருப்பார் என்று இருவரும் முடிவு பண்ணி விடிய காத்திருந்தார்கள்.
“உங்கள் மருமகன் சொல்வது உண்மையா? நான் உங்கள் மகளா? அவர் உங்கள் தங்கை மகனா? சொர்ணா அம்மாவிடம் தான் என்னை தூக்கிக் கொடுத்தீங்களா? மங்களம் தான் என்னைப் பெற்ற அம்மாவா?” என்று கொட்டை எழுத்தில் ஒரு பெரிய பலகையில் எழுதிக் கொண்டு போய் பெரியவரிடம் காட்டினாள் சங்கீதா. “உங்க குட்டு வெளிப்பட்டுவிடும்.” என்று சந்திரனிடம் சொன்னாள். சந்திரன் சிரித்தான். “பெரியவரையாவது நம்புவியா?”
“மாமா..மாமா...இந்த அட்டையை பாருங்க. உங்க மகளிடம் உண்மையை சொல்லுங்க..” என்று சந்திரன் அவரை மெல்ல அசைத்தான். அவர் விழிக்கவே இல்லை. இத்தனை நாட்கள் வலியால் துடித்தவர் இன்று தூக்கத்திலேயே
அமைதியாக போய்விட்டார். பூவை விரும்பி விரும்பி நேசித்தவர் பூப் போல் போய்விட்டார். பலகையை பார்த்து கண்ணால் பேசாமலேயே போய்விட்டார்.
இறைவன் எழுதிய தீர்ப்பு. நடந்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கிறாளா
சங்கீதா.? எனக்கு இன்னொரு தங்கையோ தம்பியோ பிறந்திருக்கணுமே சந்திரனின் கதைப்படி...கேக்கலாம் என்று நினைத்தாள். இது சரியான சமயமல்ல என்று வாயை மூடிக் கொண்டாள். சந்திரன் மாமா இறந்த துக்கத்தில் இருந்தான். எப்படியெல்லாம் நெஞ்சிலும் தோளிலும் போட்டு வளர்த்தார். இன்று கண் மூடிவிட்டார். அவருக்கு இது விடுதலை தான்.
வியாதி எனும் சிறையில் துன்பம் எனும் ஊரில் வாழ்ந்தவருக்கு இது நிச்சயம் விடுதலை தான். ஆனாலும் அவரின் பாசம் அவன் மனதை விட்டு விடுதலை பெறவில்லை. பெறவும் பெறாது. அவன் இன்று ஒரு மனுஷனாக இருக்கிறான் என்றால் அது அவரால் தான். மென்மையாக மாமாவின் நெற்றியில் முத்தமிட்டான். “மனசு வலிக்குது சங்கீதா.” என்று அவள் தோளில் சாய்ந்துவிட்டான். அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. அவன் முதுகை தட்டிக் கொடுத்தாள். சந்திரன் மெல்ல சொன்னான்.
“பூரண திருப்தி அவர் முகத்தில் தெரிகிறது. மகளுடன் இந்த மூணு மாசம் இருந்த சந்தோசம் தான் அவருக்கு இந்த திருப்தியை கொடுத்திருக்கிறது.
தாங்க்ஸ் சங்கீதா...அவர் ஆத்மா சாந்தி அடைந்துவிட்டது.”
ஏனோ சங்கீதாவிற்கும் அழுகை வந்தது. ஏதோ ஒன்று அவள் மனதை அசைத்தது. இன்னும் கொஞ்சம் அவரிடம் பாசம் காட்டியிருக்கலாமோ? என்று முதல் முறையாக நினைத்தாள். விக்கி அழுதாள். சந்திரன் சொன்ன கதையெல்லாம் நிஜம் என்று கொண்டால் வெங்கடேசன் பாவம் தான். வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கவேண்டியது தான்
அதற்காக தனக்கு இன்னொரு குழந்தை பிறக்காமல் போன பிறகும் வாக்கை
காப்பாற்றவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தால் என்ன அர்த்தம்? இதை புகழ்வதா? மடத்தனம் என்று கொள்வதா? என்று அவள் தடுமாறினாள்.
வெங்கடேசனின் இறுதி சடங்கிற்கு இரண்டு பெண்மணிகள் வந்தார்கள்.
“இவங்க தான் உங்கம்மா மங்களம்.” என்று அறிமுகப்படுத்தினான் சந்திரன்.
சங்கீதாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஒரு அம்மாவை பெண்ணுக்கு அறிமுகப்படுத்தவது என்பது எவ்வளவு விசித்திரமான ஒரு நிகழ்வு!
அந்தம்மாள் பேந்தப் பேந்த விழித்தபடி நின்றாள். அரை பயித்தியம் போல்
தோற்றமளிக்கும் இவங்களா என்ன அம்மா.? திகைப்பாக இருந்தது.
“இது உங்க பெரியம்மா...உன் அம்மாவின் கூடப் பிறந்த அக்கா. அவங்க கல்யாணமே செய்துக்கலை.” என்றான் சந்திரன்.
“சங்கீதா...நல்லா இருக்கியாம்மா?” வாஞ்சையுடன் விசாரித்து அவளை கட்டிப் பிடித்து உச்சி முகர்ந்தாள் அந்தம்மாள். நெருங்கிய உறவுகள் என்று சொல்லப்படுபவர்கள் அந்நியர்களாகவே அவளுக்குத் தெரிந்தார்கள். சாவு வீட்டில் வருவோரும் போவோருமாக இருந்தார்கள். மங்களம் பிடித்து வைத்த பிள்ளையார் போல் ஒரே இடத்தில் பிரமை பிடித்த பார்வையுடன் அமர்ந்திருக்க, ஆண்டாள் தான் அவளை குழந்தையைப் போல் கவனித்துக் கொண்டாள். இப்படி இருப்பவர்களை பார்த்துக் கொள்ள எவ்வளவு பொறுமை வேண்டும்! தங்கை மேல் எவ்வளவு பாசம் இருந்தால் இத்தனை வருஷங்கள்
சலிக்காமல் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்! பெரியவரின் புகைப்படத்தை
பெரிது பண்ணி ஹாலில் மாட்டியிருந்தான் சந்திரன். அவ்வப்போது மனம் உடைந்து அழுதான். ஆண்டாளும் கண்கலங்கினாள்.
“மனசை தேதிக்கோடா சந்திரா...நீயே இப்படி உடைஞ்சு போனால் எங்களுக்கு ஆறுதல் சொல்வது யார்? அவர் நல்ல படியாக போய் சேர்ந்தது நல்லது தான். வியாதியோடு எவ்வளவு நாள் கஷ்டப்பட்டுட்டார்.”
கணவன் இறந்தது கூட தெரியாமல் மங்களம் அவள் பாட்டுக்கு உட்கார்ந்திருந்தாள். அவள் தாலியை இறக்குவது அது இது என்று சடங்குகள் செய்ய தயாரானார்கள். “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். எங்க அத்தையை நிம்மதியா இருக்க விடுங்க.” என்று சொல்லிவிட்டான். அவன் பேச்சுக்கு மறு பேச்சு பேச யாருக்கும் தைரியமில்லை. வெங்கடேசன் இறுதி சடங்கு
மற்ற சம்பிரதாயங்களுடன் சிறப்பாக நடந்தது. ஈமைகிரிகைகள் முடிந்ததும் எல்லோரும் சென்றுவிட்டனர். வீடு வெறுமையாக இருந்தது.
சங்கீதாவுக்கு மங்களத்தைப் பார்க்கப் பார்க்க கஷ்டமாக இருந்தது.
“உங்க மாமா ஒரு கிராதகர். பெற்ற தாயிடமிருந்தது பச்சைப் பிள்ளையை பிரிக்க எப்படி மனசு வந்தது? உங்க அத்தை இப்படி இருக்கிறதுக்கு அவர் தான் காரணம். இந்த கதிக்கு ஆளாக்கிவிட்ட இரக்கமற்ற கொடூரன்.”
என்று பத்து நாள் கழித்து நடந்த நீத்தார் கடன் முடிந்த பின் படபடத்தாள்
சங்கீதா. மங்களமும் ஆண்டாளும் ஊருக்குப் போய்விட்டிருந்தனர். அங்கே
சாமான்களை ஏறக்கட்டி எடுத்துக் கொண்டு இங்கு வந்துவிடுவதாக ஏற்பாடு.
ஆண்டாளால் தான் தங்கையைத் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால்
அவளை வைத்துக் கொண்டு சமாளித்தாள். அப்பப்ப சந்திரன் போய் பார்த்துக் கொள்வான். வேண்டிய உதவிகள் செய்வான். இங்கு மாமாவை வைத்து அவன் பார்த்துக் கொண்டான். வெங்கடேசனுக்கும் மங்களத்துக்கும் நடந்த
சீர்குலைந்த வாழ்க்கையில் ஒரே அதிர்ஷ்டம் அவர்களை நல்லபடியாக கவனிக்க ஆண்டாளும் சந்திரனும் இருந்தார்கள். அவர்கள் நல்ல மனசுக்கு
ஆண்டவன் இந்த பாக்கியத்தைக் கொடுத்திருந்தான். விதியின் கோர விளையாட்டின் ஆட்டத்திலும் அவர்கள் கௌரவமாக மரியாதையாக
அன்புடன் நடத்தப்பட்டார்கள். முதியோர் இல்லத்தில் விட்டெறிந்துவிட்டு
போகாமல் சந்திரன் கடமை மறவாமல் செயல் பட்டான். யார் அவனை போல் இந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என்று ஆண்டாள் நினைத்துக் கொண்டாள். சங்கீதா வெங்கடேசனை கொடூரன் என்று சொன்னதும் சந்திரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“என்ன சொன்னே...கொடூரனா? என்ன தெரியும் உனக்கு அவரைப் பற்றி?
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? இன்னொரு தரம் அப்படி சொன்னே உன்னை உயிரோடு பொதச்சிடுவேன்.” சங்கீதா சுதாரித்துக் கொண்டாள்.
வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கிறான்....பாவம் வளர்த்தவர் இறந்த துக்கம். இங்கிதம் அறிந்து அவள் மெதுவான குரலில்
“ஸாரி...தெரியாம சொல்லிட்டேன். மங்களத்தம்மாளைப் பார்க்க பாவமாக இருந்தது...அதான் சொல்லிட்டேன். தப்பு தான்...” என்றாள்.
“இட்ஸ்..ஒ.கே..” என்று அவனும் சமாதானமானான். ரொம்பவே டல்
அடித்தான். அவன் துறுதுறுப்பு..கேலி...இழை இழையாக அவன் வெளிபடுத்தின அன்பு எல்லாம் காணாமல் போயிற்று. அவன் மீண்டும் உயிர்பிக்க நாளாகும். அதை நன்கு புரிந்து கொண்டு அவனிடம் கனிவாக நடந்தாள் சங்கீதா. “பாலாவது சாப்பிடுங்க.....கவலைப்படாதீங்க...களைப்பா இருக்கீங்க...தூங்குங்க...”என்று சொல்லி அவனிடம் ஆறுதலாக நடந்தாள்.
“என்ன...நீங்க வாங்க..போங்கன்னு மரியாதை தூள் பறக்குது. என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா?” பழைய சந்திரனின் குறும்பு எட்டிப் பார்த்தது.
“சான்ஸ்சே இல்லை....ஜஸ்ட் ஒரு அனுதாபம் தான். என்னை மாதிரியே
வளர்த்தவரை பறிகொடுத்திருக்கீங்களே, அந்த வலி என்னன்னு எனக்குத்தான் புரியும்.” எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள் சங்கீதா.
“அப்ப..நீ இன்னும் நடந்ததை நம்பலை...நான் சொன்னது செவிடன் காதில் சங்குதானா? உனக்கு யாரையுமே ஜட்ஜ் பண்ணத் தெரியலையே.”
“இருந்துவிட்டுப் போகட்டும். ம்ம்....எல்லாம் நம்பி தான் ஆகணும் போலிருக்கு.
அது சரி மங்களத்தம்மாளுக்கு குழந்தை பிறந்ததா இல்லையா?”
“ப்சு...அது ஒரு சோகம். அவங்களுக்கு ஏழு மாசம் ஆன பிறகு தான் டாக்டரிடம் போயிருக்காங்க அத்தை. நீங்க கர்ப்பமா இல்லை. இது முத்துப் பிள்ளை...கர்ப்பம் இல்லை என்று சொல்ல்விட்டார்கள். இது மிகவும் அரிதாக சிலருக்கு நடை பெரும். பொய் கர்ப்பம். இது குழந்தையாக முடியாதாம். இதற்கு மோலார் ப்ரெக்னன்சி என்று பெயராம்.”
“அப்படியா...அவங்களுக்கு எவ்வளவு பெரிய ஷாக்! உங்க மாமா செய்த
பயித்தியக்காரத்தனம் எப்படி முடிஞ்சிருக்கு பார்த்தியா?”
“அத்தைக்கும் இது மிகப் பெரிய ஷாக். உண்டாகி இருப்பது போன்ற அறிகுறிகள் எல்லாம் இருக்குமாம். அதனாலே தான் ஏழு மாசம் வரை
டாக்டரிடம் செக்கப்புக்கு போகலையாம். ஒரு குழந்தையை தூக்கி கொடுத்துவிட்ட கவலை அத்தையை ரொம்பவே பாதிச்சிடுத்து. அதில் வேறு கர்ப்பம் இல்லை என்று தெரிந்ததும் நிலைகுலைந்து போயிட்டாங்களாம்.
முப்பத்தைந்து வயது தாண்டிவிட்டதால் வைட்டமின் “ஏ” குறைபாடு வந்திருக்கும். அதனாலேயே பொய் கர்ப்பம் ஆனதுக்கு ஒரு காரணம் என்று டாக்டர்கள் சொல்லிட்டாங்களாம். பிறகு சர்ஜரி மூலம் அந்த மோலார்
ப்ரெக்னன்சியை ரிமூவ் பண்ணிட்டாங்களாம். அப்படி பண்ணாட்டி பல சிக்கல்கள் வரும். அத்தை அந்த ஷாக்கிலிருந்து மீளவே இல்லை. உன் அம்மா பாவம். ரொம்ப வருஷம் ஒரு ஜடப் பொருள் போல் வாழ்ந்திட்—
டிருக்காங்க. நல்லது செய்தவங்களுக்கு வந்த கதியை பார்த்தியா? “
“தன் தலையிலே தானே மண் அள்ளிப் போட்டுக்கிட்ட உங்க மாமாவுக்கு
இது வருத்தமா இல்லையா?”
“அதெப்படி வருத்தம் இல்லாமல் போகும்? மனைவி சாப்பிடுவது...தூங்குவது...
வெறித்துப் பார்ப்பது என்று இருந்தால் எந்த கணவனுக்குத் தான் கஷ்டமாக இருக்காது? அவங்க சிறு புன்னகை புரிவதே அவங்க அக்காவை பார்த்துதான். வேறு எதுவும் தெரியாது. மாமாவுக்கு உடம்பு சரயில்லாம போனதும் தான் ஆண்டாள் அத்தை உங்க அம்மாவை தன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாங்க. நான் மாமாவை பார்த்துக்கிட்டேன்.”
“நாங்க நினச்ச மாதிரி எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. என் குழந்தை
எனக்கு வேண்டும் என்று மாமா போய் சொர்ணாவை கேட்டிருக்க வேண்டியது தானே? மங்களம் அம்மா நிலைமையை சொல்லி...”
“அதெப்படி முடியும்? மாமா சொன்ன சொல் தவறாதவர். வாக்கு முக்கியம் என்று நினைப்பவர். போலி சத்தியம் செய்யவில்லை. குழந்தையை எக்காரணத்தைக் கொண்டும் திரும்ப கேக்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டாளே அந்த ராட்சசி....பாவம் மாமா...எல்லாம் உன்னால் வந்த பிரச்சனை. பொக்கை வாய் சிரிப்பு சிரித்து சொர்ணாவை மயக்கி ஓடிட்டே.”
“அடப் பாவி...உங்க மாமா பண்ணிய கூத்துக்கு மூணு மாச பிள்ளையை
குத்தம் சொல்றியே? உனக்கும் உங்க மாமா புத்தி தானே வரும்.”
“உனக்கு என்ன தெரியும் அவரைப் பத்தி? மலை போன்ற துக்கத்தை வாக்கு முக்கியம்கறதுக்காக ஜீரணிக்க கத்துக்கிட்டார். என்னை வளர்ப்பதில், தான் இழந்த குழந்தையை கண்டார். ஹி இஸ் கிரேட்..”
“மெச்சிக்கோ...உன் உறவுகள் உனக்கு உசத்தி.”
“நமக்குள் இந்த உறவுப் போட்டி நடந்திட்டே இருக்கும் போலிருக்கே.
இதுக்கு ஒரு முடிவே இருக்காதா?”
“சந்திரன்..இனி ஆண்டாளம்மாவும் மங்களத்தம்மாளும் அங்கே தனியா இருக்க வேண்டாம். இங்கேயே வந்துவிடட்டும்.” என்றாள் சங்கீதா.
“நிஜமாவா? நீயா சொல்றே?” என்றான் சந்திரன் வியப்புடன்.
சந்திரனின் வியப்பு சங்கீதாவுக்கு ஆச்சர்யமாக இல்லை. அவன் அவள் மன
நிலையை புரிந்து கொன்டதே இல்லை. அவள் உடல் தான் இங்கே இருக்கிறதே தவிர அவள் மனமெல்லாம் அவள் குடும்பத்தையே சுற்றிக் கொண்டிருந்தது. எப்போ இங்கிருந்து ஓடலாம் என்று கால்கள் தவித்துக் கொண்டிருந்தது. அவளால் மங்களத்தின் வலியை புரிந்து கொள்ள முடிந்தது.
கணவன் இறந்து போனது கூட தெரியாமல் இருக்கும் கையறு நிலையில் அவர்கள் எங்கே போக முடியும்? சந்திரன் தான் அவர்களின் ஒரே ஆதரவு.
இத்தனை நாள் வேறு வழி இல்லாமல் அங்கொருவரும் இங்கொருவருமாக இருந்தார்கள். இனி அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லையே. அதனால் தான் அவள் அவர்களும் இங்கேயே வந்துவிடட்டும் என்று சொன்னாள். மனிதாபிமானம் உள்ள யாரும் சொல்லக் கூடியது தானே!
ஊஞ்சல் ஆடும்...