கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அம்மா

Rajasree Murali

Moderator
Staff member
ருக்மணி அரை மணி நேரமாக பரத் பரத் என்று தன் மகனை கூப்பிட்டுக்கொண்டே இருக்க, என்னம்மா வேணும் ப்ளீஸ்மா தொந்தரவு பண்ணாதே. இன்னைக்கு வெள்ளிக்கிழமை நான் வேலையை முடிச்சே ஆகனும். எதுவாக இருந்தாலும் கார்த்தாலே சொல்லு. மணி இப்பவே பத்தாரது. போய் தூங்கும்மா என்றவன் திரும்பவும் லேப் டாப்பில் மூழ்கினான். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எல்லா வீடுகளிலும் கணவன், மனைவி வீட்டிலிருந்தபடியே ஆபிஸ் வேலை, குழந்தைகளுக்கும் வீட்டிலிருந்தபடியே பாடம் படிப்பு. ஆளுக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்தால் அவ்வளவுதான். இதில் வயதானவர்கள் இருக்கும் வீடு என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களும் எவ்வளவு நேரம் தான் டிவி முன் உட்காருவார்கள்.

பரத் எழுந்து ஹாலுக்கு வந்தவன் அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது தான் இன்னும் டின்னர் சாப்பிடவில்லை என்று. கிச்சன் உள்ளே சென்றவன் பாத்திரங்களை திறந்து பார்க்க அவனுக்கு பிடித்த அடை அவியல், வெங்காய சட்னி ரெடியாக அம்மா வைத்து மூடியிருந்தாள். நல்ல பசி மடமடவென சாப்பிட்டு முடித்தவன் தங்கள் ரூமை எட்டிப்பார்த்தான். அப்போதுதான் மனைவி மீரா தன் லேப்-டாப்பை மூடி வைத்துவிட்டு என்னங்க நீங்க சாப்டீங்ககளா. இன்னைக்கு வேலை ரொம்ப அதிகம். அத்தை பாவம் எனக்கு இங்கயே டிபன் கொண்டு வந்து கொடுத்துட்டாங்க. உங்களை நான் கவனிக்கவே இல்லை. சாரிங்க. ரொம்ப டயர்டா இருக்கு. நான் தூங்கறேன் கார்த்தாலே பேசிக்கலாம் என்று குட்நைட் சொல்லி படுக்கையில் சோர்வாக விழுந்தாள். கதவை மூடியபடி வந்தவன் இரவு இரண்டு மணி வரை வேலை பார்த்து முடித்துவிட்டு தூக்கத்தில் கண்கள் சொருக ஹால் சோபாவிலேயே படுத்துவிட்டான்.

காலை மணி ஏழடிக்கும் போது மீரா அவனை தொட்டு எழுப்பி என்னங்க அத்தை இன்னும் எழுந்திரிக்கலை. வழக்கமா இவ்வளவு நேரம் தூங்க மாட்டாங்க. இரண்டு தடவை குரல் கொடுத்தேன். எனக்கு என்னவோ பயமாயிருக்கு கொஞ்சம் வந்து பாருங்க என்றவுடன் பரத் அடிச்சு கட்டி எழுந்தவன் என்ன மீரா சொல்றே அம்மாவுக்கு டயர்டா இருக்கும் அதான் தூங்கறா, ஏன் பயப்படுறே என்றபடியே அம்மா அம்மா என்று குரல் கொடுத்தவன் தொட்டு எழுப்பினான். ருக்மணி அசையாமல் இருக்கவே அவனுக்கு பயம் வர ஆரம்பித்து கீழ் பிளாட்டில் குடியிருக்கிற டாக்டர் அங்கிளுக்கு போன் பண்ணி வரச்சொல் மீரா என்றான். டாக்டர் வந்து ருக்மணியின் பல்ஸ் பிடித்து பார்த்துவிட்டு, சாரி பரத் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக். தூக்கத்திலேயே போயிட்டாங்க என்றவர், வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னா போன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னது, அம்மா நம்மை விட்டு போயிட்டாங்களா? அய்யோ கடவுளே என்னால் நம்ப முடியவில்லையே. நேத்து ராத்திரி தயங்கி தயங்கி ஏதோ பேச வந்தாளே. நான் என்னன்னு கூட கேட்கலையே. எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோம்னு தலையில் அடித்துக்கொண்டு அழ மீராவும் சேர்ந்து அழ, எதுவும் புரியாமல் தூக்க கலக்கத்தில் வந்த குழந்தைகளும் அழ ஆரம்பித்தார்கள். பரத்தால் துக்கத்தை அடக்க முடியாமல் கதறினான். அம்மா அடிக்கடி சொல்வாளே, டேய் பரத் உனக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் நான் தூக்கத்திலேயே போயிடனும் என்பாள். அப்போதெல்லாம், அம்மா உளறாதே போம்மா போய் எனக்கு சூப்பரா ஒரு காபி கொண்டுவா என்று சிரித்தபடியே பேச்சை மாற்றிவிடுவான். ஆனால் இன்று அது நிஜமாகி போனதே என்று கதறி அழுதான்.

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் திரும்பி வருவதில்லை. அம்மா அப்பா இருக்கும் போதே அவர்களுக்கு தினமும் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி, என்ன சாப்பிடீங்க, மாத்திரை போட்டிங்களா, தூக்கம் வரலையா, வாங்க டிவி பார்க்கலாம், கொஞ்ச நேரம் பேசி சிரித்து மகிழலாம் என்று சொன்னாலே அதுவே அவர்களுக்கு போதும். மருந்து மாத்திரைகள், ஊசிகள், டானிக்குகள் செய்யாததை நீங்கள் அவர்களுடன் செலவிடும் அந்த பத்து நிமிஷம் அவர்களை இன்னும் கொஞ்ச காலம் இருக்க செய்யும். அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாத ஒன்று.


- வாசகர்களுக்கு அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.
 
Top