கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 1

Rithi

Moderator
Staff member
லக்ஷ்மி காலனி... சென்னையின் சில்வர் ஸ்பூன் ஏரியா என்று பெயர் வாங்கிய அண்ணா நகரின் உள்ளே அமைந்துள்ளது தான் இந்த காலனி.

பெயரையும் ஏரியாவையும் வைத்து ஏகப்பட்ட பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட்ஸ், பார்க், சூப்பர் மார்க்கெட் என்றெல்லாம் கனவு வேண்டாம்.

மொத்தம் ஏழே வீடுகள். ஒன்றொன்றும் இரண்டு போர்ஷன்கள் மட்டுமே!

சிவசுந்தரம் என்ற பெரியவர் ஒரு காலத்தில் அவர் மனைவி பெயரில் வாங்கிய இடம். அவர் இறந்து அவர் மகனுக்கும் மகனான சுந்தரம் தான் அந்த இடத்தை ஒரு வட்டமான காலனியாக மாற்றியிருக்கிறார்.

நடுவில் பெரிதாய் ஒரு மாமரம். சுற்றிலும் இந்த வீடுகள். வடக்கு மூலையில் கேட். அதன்மேல் வானவில் வளைவில் வைத்து எழுதியிருக்கும் அந்த பெயர். லக்ஷ்மி காலனி.

சில அடியை கூட விற்க மனமில்லாமல் போர்ஷன்களை வாடகைக்கு கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து தன் வாழ்நாளை ஓட்டும் சாதாரண மனிதர்.

அறுபது வயதான சுந்தரத்தை பார்த்தால் வயதானவர் என்பது போலெல்லாம் இருக்க மாட்டார். எப்பொழுதும் கம்பீரமாக சுற்றும் மனிதர்.

மனைவி இல்லை. ஒரே மகனும் லண்டனில் செட்டில்டு. தன் கையே தனக்கு உதவி என நன்கு அறிந்தவர். எப்போதும் யாரையும் எதற்கும் எதிர்பார்க்கமாட்டார்.

அந்த காலனி தான் அவரின் உலகம். அங்கே இருப்பவர்கள் அனைவரும் தான் சொந்தம். அவ்வளவு நெருக்கம் இருக்கும் அங்கே குடியிருப்பவர்களோடு.

சுந்தரம் தாத்தா.. சுந்தரம் அண்ணா.. சுந்தரம் அங்கிள்... என்ற அழைப்புகள் தான் அவரின் அடையாளம்.

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்..
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்!
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்..
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்!
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்!

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்..
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்...
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்!
உண்மையை அதிலே உறங்க வைத்தான்!
உறங்க வைத்தான்! உறங்க வைத்தான்!

சுசிலாவின் பாடல் ராகமாய் ஒரு வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்க மெல்லமாய் புன்னகைத்து அந்த பக்கம் நடந்தார் சுந்தரம்.

"கல்பனா ஜீவா அழுறான் பாரு. உள்ள என்ன பண்ற?"

"நான் வேலையா இருக்கேன் சுதா. அவன் எழுந்துட்டான் போல. அவனை வெளில கூப்பிடுங்க பால் எடுத்துட்டு வர்றேன்" உள்ளிருந்தே குரல் கொடுத்தாள் கல்பனா.

"ஹ்ம்ம்! கோர்ட்டுக்கு டைம் ஆச்சுன்னு சொல்லியும் நீ பண்ற வேலை இருக்கே!..." சலித்துக் கொண்டாலும் ஜீவாவைத் தேடி உள்ளே சென்றான்.

"என்னடா கண்ணா! சீக்கிரமே முழிச்சிட்டீங்க? வெளில வர வேண்டியது தானே? அப்பா வேலைக்கு போக வேண்டாமா!" என்றவனை பார்த்து "வேண்டாம்" என்று தலையாசைத்தான் ஒன்றரை வயதுடைய ஜீவா.

"அது சரி" என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு முத்தம் வைக்க, வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தான்.

"சுதாகர்! சுதாகர்!" சுந்தரம்.

"வாங்க அங்கிள்! உள்ள வாங்க!"

"இருக்கட்டும் பா!" என்றவர் அவனையும் வெளியில் அழைத்தார்.

"சொல்லுங்க அங்கிள்! காலையிலே வந்துருக்கீங்க எதாவது ப்ரோப்லேமா?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. ஒரு உதவி கேட்டு வந்தேன்"

"அங்கிள் இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க. இத பண்ணுடான்னு சொன்னா பண்ண போறேன்" என்று சொல்லி சிரிக்க அவருக்கும் புன்னகை.

"என்ன சுந்தரம் அண்ணா! நேத்து சாய்ந்திரம் வாக்கிங் வருவீங்கனு எதிர்பார்த்தேன். ஆளையே காணும்" பக்கத்து வீட்டு ரங்கராஜன் அவர்களை கடந்து போகையில் கேட்க,

"நேத்து கொஞ்சம் வெளில அலைச்சல் ராஜன். இன்னைக்கு போகலாம்" என்று சொல்லிவிட்டு சுதாகர் பக்கம் திரும்பினார்.

"என் பையன் அருண் லண்டன்ல இருக்கானே! அவன் பிரண்ட் இங்க ஒரு வேலையா வர்றானாம். ஒரு மாசம் இங்க தங்குறதா அருண் போன் பண்ணினான். தெய்வானைக்கு காலையில திதி. அதுனால ரிஸீவ் பண்ண நான் போக முடியாது..."

அவர் விழுங்கி விழுங்கி பேசுவதிலேயே அவரின் தயக்கம் புரிந்தது சுதாகருக்கு.

"அங்கிள்! இப்ப என்ன? அவங்களை நான் போய் ரிஸீவ் பண்ணனும் அதானே! எத்தனை மணிக்கு? எங்க ரிஸீவ் பண்ணனும்?"

சொந்த மகன்களிடம் கூட உதவி என்று கேட்காதவர் மனம் சுதாகருக்கு என்று தனி இடத்தை தான் கொடுத்து வைத்திருக்கிறது.

சுதாகர் அவ்வளவு அன்பானவன். எளிதாக பழகிவிடுவான் யாரிடமும். சிரிக்கும் போது விழும் கன்னக்குழி அவனுக்கு இன்னும் அழகு சேர்க்கும். ஆறடி உயரம் அழகிய துருவம் எல்லாம் இல்லை ஐந்தரை அடியில் பார்த்தால் மீண்டும் பார்க்க தூண்டும் அழகன் தான்.

"அங்கிள் நீங்க எப்ப வந்தீங்க? மாமா! என்ன வெளில நிக்க வச்சு பேசிட்டு இருக்கீங்க? உள்ள கூப்பிடுங்க" கல்பனா பால் டப்பாவுடன் வாசலுக்கு வந்தாள்.

"இல்லம்மா! பரவால்ல இன்னைக்கு வெளில வேலை இருக்கு. அப்புறம் இந்த வீட்ல மாடி போர்ஷன் காலியா தானே இருக்கு. அங்க தான் அந்த பையனை தங்க சொல்லலாம்னு இருக்கேன் உங்களுக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே!" சுந்தரம் கேட்க,

"எப்படினாலும் யாராவது வர தானே போறாங்க. எங்களுக்கு ஒன்னும் இல்லை. பேமிலியா வர்ராங்களா அங்கிள்?"

"இல்ல பா. பையன் மட்டும் தான் வர்றானாம். பேமிலி பத்தி இன்னும் நான் கேட்கல. ஒருவேளை பேச்சுலரா இருந்தா என்ன பண்றதுன்னு தான் யோசிக்குறேன். அந்த சிவநேசன் இருந்த போர்ஷன் காலியா தான் இருக்கு. ஆனா இப்ப தான் அதுக்கு கீழ புதுசா கல்யாணம் ஆனவங்கள குடிவச்சேன். அதுனால தான் உன்கிட்ட கேட்குறேன்" என்று விளக்கமாக கூறினார்.

அவர் கூறியதும் திரும்பி கல்பனாவை பார்த்தான் சுதாகர். அவளும் ஏதோ யோசித்து கண்ணசைக்க "இருக்கட்டும் அங்கிள். அப்புறமா வேணா பாத்துக்கலாம்" என்று மட்டும் அவன் சொல்லிவிட

"அப்போ யாரு என்னனு நான் உனக்கு மெசேஜ் அனுப்புறேன் பா. கிளம்புறேன்" என்று கிளம்பிவிட்டார்.

"நாளைக்கு தெய்வானை ஆன்ட்டிக்கு திதியாம் கல்ப். அதான் அவருக்கு முகமே அவ்வளவு சோகமா இருக்கு" என்ற சுதாகர் அவர் கூறியதையும் கல்பனாவிடம் கூறினான்.

"ம்ம் ரொம்ப நல்ல மனுஷன். கடவுள் அவருக்கு கடைசி காலம் தனிமை தான்னு கொடுத்துட்டாரு போல" என்றவளை ஒரு பார்வை பார்த்தவன் கோர்ட்டுக்கு கிளம்பிவிட்டான்.

சுதாகர் பிரபலமான வழக்கறிஞர். முப்பதை மட்டுமே தொடும் வயதில் அவன் பேச்சுத்திறன் அனைவராலும் பாராட்டப்படும் அளவுக்கு பிரபலமானவன்.

கல்பனா ஏழு மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்தபோது பொய் பழி சுமத்தி சுதாகர் தாய் அவளை வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிட அத்தோடு அன்னையிடம் சண்டையிட்டு கல்பனாவுடன் சுதாகர் வந்தது இந்த லக்ஷ்மி காலனிக்கு தான்.

இந்த இரண்டு வருட வாழ்வில் தான் அவள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறாள்.

லண்டன்..

"டேய்! அம்மாக்கு நாளைக்கு திதி டா சோ அப்பா உன்னை ரிஸீவ் பண்ண வர முடியாது. காலனில இருக்கிற ஒருத்தர அனுப்பி வைக்குறதா சொன்னாங்க. தப்பா எடுத்துக்காத! அவரு பேரு சுதாகர்" அருண் தன் நண்பன் யுவராஜிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

"நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? அட்ரஸ் மட்டும் தான கேட்டேன்? ஏன் டா எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ற?" என்றவனிடம் அருண் எதுவும் சொல்லவில்லை.

யுவராஜ் அருணை போலவே வேலைக்காக லண்டன் சென்றவன். ஆனால் அவனுக்கு என்றுமே அங்கு இருக்க பிடித்தம் இல்லை.

முதலில் வேலைக்காக என்று வந்தவன் மீண்டும் ஒரு வருடம் அவனே கேட்டு வாங்கி அங்கேயே பணியாற்றி இப்போது சென்னை செல்கிறான்.

சென்னையில் அவனுக்கு ஒரு மாதம் மட்டுமே வேலை. அடுத்து அவன் பிறந்து வளர்ந்த டில்லிக்கே செல்ல அனுமதி கிடைத்திருக்க, வேண்டும் வேண்டாம் என்ற இரு மனநிலையில் தான் கிளம்புகிறான்.

"உன் அரண்மனை மாதிரி எல்லாம் அங்க வீடு இருக்காது டா. சின்னதா ஒரு காலனி. அங்கே சின்னதா ஒரு வீடு. அதுவும் மாடில. ஃபர்ஸ்ட் ஃப்ளோர். என்னால முடிஞ்சது அவ்வளவுதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" அருண்.

"ஒரு மாசத்துக்கு நைட் தூங்குறதுக்கு மட்டும் எனக்கு இடம் கிடைச்சா போதும்" என்றவன் பேக்குடன் விடைபெற்றான்.

அருணும் அவனைப் பற்றிய யோசனையில் நின்றான்.

புதுடில்லி..

"ஆன்ட்டி! ஆன்ட்டி!" என்றவாறு அந்த பங்களாவினுள் நுழைந்தாள் சந்தியா.

"ஹாய் அன்னி! என்ன இந்த பக்கம்?"

"உன்கிட்ட பேச எல்லாம் நான் வர்ல. எங்க ஆன்ட்டி?" அவள் கேட்கும் போதே மேலிருந்து இறங்கி வந்தார் ஜானகி தேவி. யுவராஜ் அன்னை.

"வா தியா! எவ்வளவு நாளாச்சு உன்னை பார்த்து. ஏன்டா இங்க வர்றது இல்ல?" ஜானகி.

"எப்படி வர்றதாம்? அதான் உங்க புள்ள என்னை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே!"

"அவன் கட்டிக்கலனு சொன்னா நான் அப்படியே விட்ருவேனா?" என்றவர் "ஏய் சூர்யா! தியா வந்திருக்கால்ல போய் காஃபி கொண்டு வர சொல்லு போ!" என்று மகளை விரட்ட, இருவரையும் முறைத்தவாரே சென்றாள் சூர்யா.

"இங்க பாரு தியாம்மா நீ தான் என் மருமக. இதுக்காக எல்லாம் வீட்டுக்கு வராம இருக்க கூடாது புரியுதா? அவனை நான் பாத்துக்குறேன்" என்று சொல்லிக்கொண்டு இருக்க வேலைக்காரப் பெண் ஆண்டாள் காபி கொண்டு வந்தாள்.

அவள் பின்னோடே சூர்யாவும் வந்துவிட்டாள்.

"அப்புறம் ஆன்ட்டி யுவா எப்படி இருக்காங்க? நான் போன் பண்ணினாலும் எடுக்கவே மாட்டேங்குறாங்க" முகத்தை சோகம் போல வைத்து சொல்ல,

'அடிப்பாவி' என வாயை பிளந்தாள் சூர்யா.

சந்தியா டில்லியில் மிகப்பெரிய பணக்காரர் வித்தார்த்தின் ஒரே மகள். அவள் அன்னை ஷீபாவும் ஜானகியும் தொழில்முறை நண்பர்கள்.

மகனை சந்தியாவிற்கு திருமணம் செய்து வைத்தால் சொத்து அனைத்தும் தனக்கு என ஜானகி நினைக்க, தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜானகி சொத்தை நினைத்தே ஷீபாவும் வித்தார்த்திடம் பேசி யுவராஜிற்கு சந்தியாவை திருமணம் செய்வது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

"அவனுக்கு என்ன நல்லா தான் இருப்பான். நானும் இப்ப வந்திடுவான்.. இப்ப வந்திடுவான்னு பாக்குறேன். அவன் ரொம்ப தான் ஆடுறான். இருக்கட்டும் சீக்கிரமே நான் ஒரு முடிவு கட்டுறேன்" சீரியஸ்ஸாய் ஜானகி சொல்ல,

"நீங்க நினைக்க தான் முடியும் ஆன்ட்டி. ஆனா யுவா இந்நேரம் முடிவு பண்ணி பறந்துட்டு இருக்காரு" தியா சொல்ல ஜானகியை விட சூர்யாவிற்கு தான் பயங்கர அதிர்ச்சி.

யுவராஜ் தங்கை சூர்யாவிடம் மட்டுமே பேசுவான். அது ஜானகிக்கு தெரிந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்.

அவன் சென்னை செல்ல இருப்பதும் சூர்யா மட்டுமே அறிந்திருக்க இவளுக்கு எப்படி தெரியும் என சூர்யா அதிர்ந்தாள்.

"நீ என்ன சொல்ற தியா? எங்க பறந்துட்டு இருக்கான்?"

"ஓஹ் உங்களுக்கு விஷயமே தெரியாதா? உங்க புள்ள ட்ரான்ஃபெர் வாங்கிட்டாரு. ஒரு மாசம் சென்னை அப்புறம் டில்லி" என சந்தியா புட்டு புட்டு வைக்க ஜானகி மகளை முறைக்கத் தொடங்கினார்.

"சூர்யா! தியா சொல்றது உண்மையா?" அழுத்தமாக அவர் கேட்க,

"ஆமா! அண்ணா தான் உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க" என தோளை குலுக்கியவள் அங்கிருந்த அறைக்குள் ஓடி விட்டாள்.

பேச விட்டால் அன்னை பேசிக் கொண்டே இருப்பாரே!

அப்போதும் சுவற்றில் காதை வைத்து அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு தான் இருந்தாள் சூர்யா.

ஜானகிக்கு இப்போது என்ன சொல்வது என்ன செய்வது என எதுவுமே தெரியவில்லை. கோபம்! மகன்மேல் அவ்வளவு கோபம்.

சந்தியா அவரை நெருங்கி வந்தவள் "நான் வேணா ஒரு ஐடியா சொல்லவா ஆன்ட்டி?" என்றாள்.

"என்ன?" என்பது போல அவர் பார்க்க, "நானும் சென்னை போகவா?" என்றவளை பார்த்து இரண்டாவது முறையாக வாயை பிளந்தாள் சூர்யா.

"போய்?"

"அதை நான் பாத்துக்குறேன். நீங்க பெர்மிஸ்ஸன் மட்டும் தாங்க" என அவள் கேட்க, யோசித்து சில கணக்குகளை போட்டவர் சரி என்றார்.

"தேங்க் யூ ஆன்ட்டி. அப்படியே அம்மாகிட்டயும் பெர்மிஸ்ஸன் வாங்கி தந்திடுங்க" என்றதற்கும் அதை தான் பார்த்துக் கொள்வதாக அவர் சொல்லிவிட "ஹுர்ரே" என்று கூச்சலிட்டுக் கொண்டு சூர்யா சென்ற அறைக்கு சென்றாள்.

"அடிப்பாவி அண்ணி சதிகாரி!" சூர்யா சந்தியாவை திட்ட, அசாராமல் சென்று பெட்டில் அமர்ந்தவள் கால்மேல் கால் போட்டுக் கொண்டாள்.

"இப்ப என்ன கோபம் உனக்கு?" சந்தியா கேட்க,

"நீ என்ன நினைச்சுட்டு இருக்க? யுவா அண்ணா தான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க இல்ல? பின்ன ஏன் அவங்க லைஃப ஸ்பாயில் பண்ண பாக்குற?" சூர்யா கொதித்து தான் கேட்டாள்.

சந்தியா சூர்யாவிற்கு நல்ல தோழி. அண்ணனை திருமணத்திற்கு பேசும் போதே இருவரும் நல்ல தோழிகளாக மாறி இருந்தனர்.

அண்ணி என்று தான் எப்போதுமே அழைப்பதும் கூட. ஆனாலும் அண்ணனுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்த பின்பும் அவன் வாழ்வில் நடந்தது எல்லாம் தெரிந்தும் அவள் அண்ணி என்று அழைப்பது அம்மாவிற்காக மட்டுமே!

சந்தியாவிற்கு யுவாவை பிடிக்கும் தான் ஆனால் அதற்காக இப்படி அவனை கார்னர் செய்வது சூர்யாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

"சூர்யா! ஏன் இவ்வளவு டென்ஷன்? பிரீயா விடு நான் பாத்துக்குறேன்" என்றவள் சென்னை செல்ல ஆயத்தமானாள்.

சூர்யா உடனே இதை அண்ணனிற்கு சொல்ல அழைக்க அவனை லைனில் பிடிக்கத் தான் முடியவில்லை.

ஆசைகள் தொடரும்..
 
Top