கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 18

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 18

"ண்ணா! இது.. இது அவன் தானே?" சூர்யா தன் அண்ணனிடம் கேட்க,


"சந்தியா!" என்று அழைத்தவன் சூர்யாவை மேலே அழைத்து செல்லுமாறு கண்ணை காட்ட, தரமான சம்பவம் வேண்டும் என எதிர்பார்த்த சந்தியா நகராமல் நின்றாள்.

வெளியில் நடப்பது தெரியாவிட்டாலும் புரியாவிட்டாலும் அனைத்தையும் கேட்டபடி வீட்டினுள் கதவுக்கு பின் நின்றாள் கல்பனா.

ஜீவி இன்னும் முறைத்துக் கொண்டு நிற்க, "டேய்! உள்ள போ" என சுதாகரின் ஒரே அதட்டலில் அதே உம்மென்ற முகத்தோடு உள்ளே சென்றான் ஜீவி.

சுதாகர் கையில் குழந்தையுடன் நிற்க, ஜீவி அவனை தாண்டி வீட்டிற்குள் செல்ல மொத்தமாய் குழம்பினாள் சூர்யா.

"ண்ணா! இது அவன் தான். அவன் எப்படி இங்கே? ஏய் அண்ணி! சுதாகர் சார் வீட்ல அவன் எப்படி?" என அண்ணனிடமும் சந்தியாவிடமும் சூர்யா கேட்க,

இதற்குமேல் சம்பவத்தை எதிர்பார்த்து சூர்யாவை அங்கேயே விட்டால் சுதாகர் பேசிய அனைத்தையும் யுவா முன் சூர்யா கொட்டிவிடும் அபாயம் இருப்பதால் சூர்யாவை இழுத்துச் சென்றாள் சந்தியா.

யுவா திரும்பி சுதாகரை பார்த்தான். அவனும் இவனை தான் பார்த்து நின்றான். ஜீவியை சுதாகர் உள்ளே அனுப்பிய விதத்தில் ஒரு சந்தேகம் யுவாவிற்கு.

"இவனுக்கு என்ன தெரியுமாம்?" நினைத்தவன் தன் தங்கையை காண மேலே சென்றான்.

"நீ எதையோ என்கிட்ட மறைக்குற. சொல்லு! சுதாகர்க்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?" சந்தியாவிடம் சூர்யா கத்திக் கொண்டிருக்க, மேலே வந்த யுவா அமைதியாய் அமர்ந்தான்.

சந்தியாவிற்கு எதுவும் தெரியாது என்பது தான் அவன் எண்ணம்.

"இப்ப நீ சொல்ல போறியா இல்லையா?"

"ப்ச்! இப்ப என்ன சூரி? யாரு எங்கே இருந்தா நமக்கு என்ன? நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கனும். சந்தியாக்கு எதுவும் தெரியாது. சும்மா அவளை டார்ச்சர் பண்ணாத!" சாய்ந்து அமர்ந்திருந்தவன் அதே வாக்கில் இருந்தே சொல்ல, திரும்பி சந்தியாவை பார்த்தாள் சூர்யா.

'அப்படியா?' என்ற கேள்வி அவள் முகத்தில் இருக்க, வேகவேகமாய் "ஆமாம்" என தலையாட்டினாள் சந்தியா.

தனியாய் அதாவது சுதாகர் துணை இல்லாமல் இந்த தருணத்தில் உண்மையை சொல்லி அதை கடந்து வருவது எப்படி என தெரியவில்லை சந்தியாவிற்கு. அதற்கு யுவா சொல்வது போல எதுவும் தெரியாது என இந்த நிமிடத்தை கடக்க முடிவு செய்துவிட்டாள்.

"ண்ணா! வேண்டாம் ணா. நீ முழுசா பழைய யுவாண்ணாவா எனக்கு கிடைக்கலைனாலும் பரவால்ல. ஆனால் இனியும் உன்னை இழக்க என்னால முடியாது. ப்ளீஸ் ண்ணா போய்டலாம். இங்கேருந்து போய்டலாம்ணா" சூர்யா அவன் காலருகே அமர்ந்து கெஞ்சினாள் என்றே சொல்லலாம்.

திருமணத்திற்கு முன்.. திருமணத்திற்கு பின் எனவெல்லாம் யுவா மாறிடவில்லை. எப்போதும் போலதான் இருந்தான். ஆனால் கல்பனா சென்றபின் அவனிடம் இருக்கும் பேரமைதி தான் சூர்யாவிற்கு பிடிக்காத ஒன்று. அந்த கோபம் கல்பனா மேல். அதைவிடவும் அன்னை சொல்லை அப்படியே நம்பிக் கொண்டிருப்பவள்.

"ஏன் இப்ப டென்ஷன் ஆகுற? எனக்கு ஒன்னும் இல்ல. நான் நார்மலா தான் இருக்கேன். இதுக்கே இப்படி பேசினால்..." என்று ஏதோ சொல்ல வந்தவன் அதை சொல்லாமல் விட்டுவிட்டான்.

"அருண் அப்பாக்கு ஹெல்த் சரி இல்ல.. அருண் இப்ப வர முடியாத சிட்டுவேஷன். என்னை பார்த்துக்கோன்னு சொல்லியிருக்கான் சூர்யா. சோ நாம இங்கே தான் இருக்கனும். யாரை பத்தியும் நீ கேர் பண்ணாத! நான் மறுபடியும் எங்கேயும் அடி வாங்கிட மாட்டேன்" என்றவன் எழுந்து தன்னறைக்கு சென்றுவிட்டான்.

"அண்ணி! ஐம் சாரி.. உனக்கு தெரியாதுல்ல.. அவன் யாரு தெரியுமா? அண்ணாவை ஏமாத்திட்டு போனால்ல அவ தம்பி. ஆனா அவனுக்கும் சுதாகர் சார்க்கு என்ன சம்பந்தம்? அண்ணி யாரையும் நம்பாத! அவங்க குடும்பமே ஒரு பிராடு கும்பல். எதுக்கும் சுதாகர் பத்தி கொஞ்சம் டீடெயில்ஸ் கேட்டுக்கோ!" சூர்யா பேசிக் கொண்டே செல்ல,

"லூசு! உனக்கு புத்தி சொல்லணும் நினச்சா நீ எனக்கு சொல்றியா? உனக்கெல்லாம் லாயர் டெக்னிக் தான் கரெக்ட். போ டி பேசாமல் தூங்கு" என அவளை விரட்டியவள் சுதாகர்க்கு மெசேஜ் ஒன்றை தட்டினாள்.

"நிலவரம் கலவரம் ஆகுது வக்கீலு! டூ சம்திங்" அனுப்பிவிட்டு சூர்யா பின்னே செல்ல இருந்தவள் பின் தன் முடிவை மாற்றி யுவா அறை கதவை தட்டினாள்.

"யாரு டா அந்த பொண்ணு? அவளை என்ன பண்ணின? ஏன் உன்னை பார்த்து இப்படி கோபப்படுறா?" சுதாகர் ஜீவியை கோபமாய் கேட்பது போல கேட்க, ஜீவி அவனையும் முறைத்து தான் நின்றான். அதில் உனக்கு தெரியாதா என்ற கேள்வியும் கூட இருந்தது.

"லவ்வு கிவ்வு பண்ணி ஏமாத்திட்டியா?" சுதாகர் மேலும் ஏற்றிவிட, "மாமா...!" என பல்லை கடித்த நேரம் "என்ன மாமா பேசுறீங்க? ஜீவி ஒன்னும் அப்படிப்பட்ட பையன் இல்ல" என வந்தாள் கல்பனா.

"அட கல்பு! நீயும் இங்கே தான் நிக்குறியா? ஆமா வெளில ஒரு நிலநடுக்கம் வந்துச்சே! அப்ப எங்கே போன நீ?" சுதாகர் கிண்டலாய் கேட்க,

"அது... ஜீவா..." என இழுக்க, அப்போதிருந்து இப்போது வரையுமே ஜீவாவை சுதாகர் தான் வைத்திருக்கிறான்.

"இன்னொரு ஜீவாவா?" மீண்டும் கிண்டல் அவன் குரலில்.

"ப்ச்! வேலையா இருந்தேன் மாமா!" எரிச்சலாய் அவள் சொல்ல,

"சரி உன் பஞ்சாயத்துக்கு அப்புறமா வர்றேன். நீ சொல்லு! யாரு டா அந்த பொண்ணு?" என மீண்டும் ஜீவி பக்கம் வந்தான்.

"அய்யோ மாமா அதான் சொல்றேன்ல! ஜீவி அப்படி எல்லாம் வம்பு பண்றவன் இல்ல" கல்பனா கத்திவிட, கையெடுத்து கும்பிட்டவன் "உங்க பேமிலி மேட்டர நீங்களே வச்சுக்கோங்க! இனி ஏதாவது உன்னையோ உன் தம்பியையோ நான் கேட்டேன்னா.. என்னை என்ன டான்னு கேளு!" சுதாகர் நிஜக் கோபமாய் சொன்னவன் அந்த இடத்தை விட்டு அகலாது அமர்ந்துவிட,

"யாரு தான் உண்மைய சொல்றாங்க? விடிஞ்சா ஒரு பேச்சு! பொழுது போனா ஒரு பேச்சு தான் எல்லாருக்கும்" என்றாள் கல்பனா அவனை போலவே கோபமாக.

"இப்ப என்ன சொல்ல வர்ற நீ?" - சுதாகர்.

"அந்த பொண்ணு சூர்யா கூடவும் சந்தியா கூடவும் உங்களுக்கு என்ன பேச்சு?" நேராய் அவளை கேட்க,

அவளுக்கு தெரிந்துவிட்டதே என்று வக்கீல் மூளை சொல்ல, அவள் சொன்ன வாக்கியத்தை கவனித்தவன் அதை விடுத்து அவள் கேள்வியிலேயே அவளை மடக்கினான். "உனக்கு சூர்யாவை தெரியுமா?" என்று.

ஜீவி இதுவரையுமே ஒரு வார்த்தை பேசவில்லை. இப்போதும் பேசாமல் நின்றாள் சரி இல்லை என்றே தோன்றியது.

"மாமா! இப்ப வெளில பார்த்தீங்களே அந்த யுவா...." ஜீவி சொல்ல வர "ஜீவி!" என அதட்டினாள் கல்பனா.

"ப்ச்! நீ எனக்கு தெரிஞ்ச கதையை தான் சொல்ல வர்ற ஜீவி!" என்ற சுதாகர் கல்பனாவை அழுத்தமாய் பார்க்க, ஒன்றும் இரண்டும் மூன்று என்பதை போல இப்பொழுது அவன் சொன்னதும் மாலை அந்த காபி ஷாப்பில் பார்த்ததும் என முடிச்சிட்டு சுதாகருக்கு தெரிந்துவிட்டது என முடிவுக்கு வந்தாள் கல்பனா.

யுவா அறைக் கதவை தட்டிய சந்தியா சூர்யாவிற்கு முன் யுவாவிடம் பேசி பார்க்கும் முடிவுக்கு வந்தாள். ஆழம் பார்த்தால் தானே காலை விட முடியும்.

யுவாவின் மனதில் இருப்பதை தெரிந்து கொள்வது நல்லது என தோன்றியது. சுதாகருடன் சேர்ந்து அவனை போலவே யோசிக்கவும் வைத்துவிட்டான் இவளை.

"யுவா! சூர்யா என்ன கேட்குறா?" அவன் அறைக்கு வந்ததும் சந்தியா தெரியாதது போல கேட்க,

"உனக்கு எதுக்கு? நான் பார்த்துக்குறேன் அவளை" என்றவன் அவளை கண்டுகொள்ளாதது போலவே நின்று கொண்டான்.

"ப்ச்! ஏன் யுவா இப்படி இருக்குற? சரி அதை விடு! இப்ப உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்றதா நம்ம வீட்ல பேசுறது உனக்கு தெரியும் தானே?" சந்தியா கேட்க, அவளை எரிப்பது போல பார்த்தான்.

"சும்மா முறைக்காத! அதான் உண்மை. உனக்கு வேண்டாம்னா அதுக்கான ரீசன்னை சொல்லு. தேவையில்லாமல் எல்லாரோட நேரத்தையும் வேஸ்ட் பண்ணாத" சந்தியா அவனை பேச வைக்க முயற்சிக்க,

"ஸ்டாப்இட் இடியட்! எந்த நேரத்துல என்ன பேசணும்னு தெரியாது? நான் யாருக்கும் சத்தியம் பண்ணல. உன்கிட்ட நான் சொன்னேனா உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு? அப்புறம் ஏன் இப்படி கூடவே இருந்து டார்ச்சர் பண்ற?" கல்பனா நினைவுகள் ஒருபுறம் மனதை அறிக்க, இங்கிருந்து ஓடவும் முடியாமல் மனதை அடக்கவும் முடியாமல் அவன் தவிக்கும் நேரம் வந்து கேள்வி கேட்டவளை கோபத்தில் இவன் கேட்டுவிட, அப்போதும் அமைதியாய் நின்றவள் ஒரே வார்த்தையில் இவன் வாயை அடைக்க வைத்துவிட்டாள்.

"உனக்கு ஒன்னு தெரியுமா யுவா? உன் அம்மா பண்ணின ஒரு கேவலமான வேலையை பத்தி உனக்கு ஒரு லெட்டர் மெயில் வந்துச்சே நியாபகம் இருக்கா?" அவள் கேட்க, உடனே ஞாபகம் வந்தவனாக இவளுக்கு எப்படி தெரியும் என்ற பார்வை பார்த்தான்.

"அந்த லெட்டர் அனுப்பிச்சதே நான் தான். உன் அம்மாவோட வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் எனக்கு தெரியும். ஆனால் உன்னை பத்தி அப்ப எனக்கு தெரியாது இல்லையா? அதான் யாரோ அனுப்பின மாதிரி உனக்கு அனுப்பினேன். ஒருவேளை நீயும் உன் அம்மா கூட சேர்ந்து அந்த பொண்ணை விரட்டிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்குறியோன்னு ஒரு டவுட். அதான்" அவள் சொல்ல சொல்ல அவளையே பார்த்து நின்றவன் முடிவில் ஆச்சர்யமாய் தான் பார்த்தான் அவளை.

"என்ன அப்படி பாக்குற? சத்தியமா சொல்றேன் உன் அம்மாவை எனக்கு புடிக்கவே புடிக்காது. என் அம்மாகிட்ட இருந்து தப்பிக்க தான் அவங்களை யூஸ் பண்ணிக்கிட்டேன். உன் வைஃப்பை நான் பார்த்தது இல்லை தானே தவிர உன் வீட்ல அப்ப நடந்த ஒவ்வொரு விஷயமும் உன் அம்மா மூலமா எனக்கு தெரிஞ்சிடும். ரெண்டு பேரோட அம்மாவும் சேர்ந்து உன் வாழ்க்கையை கெடுத்துட்டு என் வாழ்க்கையை கெடுக்குறதை பேசி பல்லை காட்டுங்க. உன் மேலே இருந்த சின்ன நம்பிக்கைல தான் அன்னைக்கு அந்த லெட்டர் நான் அனுப்பிச்சேன். நான் நினைச்சது வீண் போகல. ஆனாலும் எனக்கு ஒரு டவுட்" அவள் சொல்ல சொல்ல இவன் கேட்டது கேட்டபடி நின்றவன் முடிவில் கேள்வியாய் அவளை பார்க்க,

"நீ உன் அம்மாகிட்ட பேசாதது, அப்புறம் வீட்டு பக்கமே வராதது எல்லாம் சரி தான்... ஆனால் ஏன்.... கல்பனா அக்காவை தேடி போகல?" நிறுத்தி நிதானமாய் அவள் கேட்க, அதிர்ச்சியாய் அவளை பார்த்து நின்றான் யுவா அவளின் கேள்வியில்.

"எனக்கு எல்லாம் தெரியாது தான் பட் உன்னோட வைஃப் கல்பனா அக்கான்றது மட்டும் தெரியும்" என்றவள் அவன் எதாவது சொல்வானா என அவன் முகத்தையே பார்த்தபடி நின்றாள்.

ஆசை தொடரும்..
 
Top