கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 20

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 20

"
ஏங்க சுதாகர்க்கு கால் பண்ணிங்களா?" பானுமதி சிவலிங்கத்திடம் கேட்க,

"இது ஏதோ மலை வழியாம்.. கார் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது புக் பண்ணிட்டு போன் பண்றேன்னு சொன்னான்" என்றார் அவர்.

கோவிலுக்கு அருகே செல்லும் ஆற்றில் குளித்துவிட்டு கிளம்ப நினைத்தவர்கள் பின் சுதாகர் நேரமாகும் என்று அங்கேயே தயாராய் இருக்கும்படி சொல்லவும் ரூமை புக் செய்து அங்கேயே குளித்து தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்போதும் மதிய நேரம் வந்த பின்னும் கூட வண்டி எதுவும் கிடைத்தபாடில்லை. ஹோட்டலில் கேட்ட போதும் அர்ரேஞ் செய்து தருவதாக சொன்னவர்கள் பின் தற்போது எந்த வண்டியும் இங்கே இல்லை மாலையாகிவிடும் என்று சொல்ல, அங்கேயே நொந்து விட்டார் வசந்தா.

"வேண்டாம் வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா? இவளை கூட்டிட்டு ஒரு இடத்துக்கு போனா இப்படி தான் ஆகும்" மீண்டும் வசந்தா கல்பனாவை பேச ஆரம்பித்தார்.

சிவலிங்கத்தின் முதல் மனைவி மகள் கல்பனா என்ற போதும் அன்னையை இழந்தவள் என்ற போதும் கவலை இல்லாமல் இருந்த கல்பனாவை மொத்தமாய் கவலையில் தள்ள வந்தவர் தான் வசந்தா.

வசந்தா-சிவலிங்கம் திருமணம் ஆனதில் இருந்து இப்போது இந்த நொடி வரை கல்பனாவை வசந்தா ஒரு புழுவை போல தான் பார்ப்பார்.

எதிலுமே அவளுக்கு பாரபட்சம் தான். வீட்டில் ஒரு வேலை செய்பவள் போல தான் கல்பனா அவருக்கு.

ஹோட்டல் வந்ததும் பெண்களுக்கு மாதா மாதம் வரும் உபாதையில் சிக்கி இருந்தாள் கல்பனா. இதை இப்போது சொல்லவா வேண்டாமா என அவள் தயங்கிய நேரம் வசந்தா திட்ட ஆரம்பிக்க, "சித்தி! எனக்கு.. " இப்பொழுதே சொல்லிவிட்டால் கோவிலில் சென்று அனைவர் முன்னும் திட்டு வாங்க வேண்டாம் என நினைத்து சொல்ல வந்த நேரம்,

"ம்மா! சுதாகர் மாமா கார் புக் பண்ணிட்டாங்களாம்.. கார் வர ஒரு மணி நேரமாகுமாம். இங்கேயே கீழ ரெஸ்டாரண்ட் இருக்கு.. சாப்பிட சொன்னாங்க" என்று ஜீவி வந்து சொல்ல, வசந்தாவுடன் அனைவரும் சாப்பிட சென்றனர்.

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் போதாது என்பதை போல தான் கடவுள் சில பிரச்சனைகளை இயற்கையாய் அனுப்புவார். அப்படி ஒன்று தான் இந்த மாதா மாதமான வலி கூட.

சோர்ந்து போய் நடக்கவே முடியாமல் வலி தாங்கி நடந்து வந்தவளை பின்விட்டு முன்னே சென்றனர் குடும்பத்தினர்.

திருச்சியில் நடக்கும் கான்பெரன்சிற்கு வந்திருந்த யுவா குடும்பத்தையுமே அழைத்து வந்திருந்தான் சூர்யாவிற்கும் விடுமுறை என. குடும்பமாய் சுற்றி பார்க்க வந்தவன் அப்போது தான் அந்த ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து ரூம் புக் செய்து நடந்து வந்தான் ஜானகி மற்றும் சூர்யாவுடன். கல்பனா குடும்பம் முன்னே செல்ல, இறுதியாய் வந்தவளை தாண்டி தான் சென்றான் யுவராஜ்.

"இன்னும் இந்த மாதிரி ஹால்ப் சாரீ எல்லாம் கட்டுறாங்களா?" சூர்யா கல்பனாவை கடந்து போகும்போது கேட்டது.

பின் அனைவரும் சாப்பிட ஆரம்பித்திருக்க கல்பனாவால் சாப்பிடவும் முடியவில்லை. எதாவது குடித்தால் பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் அதை கேட்க கூட முடியாதே! கேட்டால் அதற்கும் அல்லவா வசந்தா ஆடுவார்.

'சுதாகர் மாமா நீங்களும் எங்களோட வந்திருக்கலாம். இல்ல என்னை மட்டுமாவது இவங்க ஊர்ல விட்டுட்டு வந்திருக்கலாம்' என்று கல்பனா நினைத்துக் கொண்டிருக்கும் நேரம்,

"இந்தா டி! இதை குடி" என கைகழுவி வந்த வசந்தா, கல்பனா அருகே ஒரு ஜூஸை வைக்க அவரை ஆச்சர்யமாய் பார்த்தவள் பின் எடுத்து குடித்தாள்.

அவரின் சூழ்ச்சியோ விணையோ எதுவும் தெரியாமல் தான் அதை கையிலெடுத்தாள் கல்பனா.

முதலிலேயே அதில் கசப்பு தெரிய என்ன ஜூஸ் என்று தெரியவில்லை. குடிக்காமல் கீழே வைத்தால் அதற்கும் திட்டு வாங்க வேண்டும் என நினைத்தவள் பாதி குடித்துவிட்டு கீழே வைத்த நேரம் கண்ணெல்லாம் இருட்டிவர தயாராய் இருந்தது.

"சித்தி! நான் மேல ரூம்க்கு போகவா? எனக்கு... வயிறு வலிக்குது" தலையை பிடித்தபடி அவள் சொல்ல,

"நானும் வர்றேன் வா" என்றவர் செய்த செயல் காலம் முழுதும் கல்பனாவால் ஏற்று கொள்ள முடியாத ஒன்று.

கல்பனா தன் எண்ணங்களில் கலந்திருந்தவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கு தெரியாது.

யுவாவும் அன்றைய தினத்தை தான் நினைத்திருந்தான். தங்கையோடு செல்ல சண்டையிடும் அண்ணனாய், அன்னை சொல்லை கேட்கும் மகனாய் தானே இருந்தான் அப்போதெல்லாம்!.

"ண்ணா எனக்கு ஸ்கூல் ஒன் வீக் லீவ்.. வெளில கூட்டிட்டு போயேன்" என சூர்யா கேட்ட போதும்

"அடடா! நான் மீட்டிங்காக திருச்சி போறேனே சூரி. நான் வர ஒரு வாரம் ஆகும்.. நீ அம்மாவோட போய்ட்டு வா டா" என்று சொல்ல,

"அப்ப என்னையும் கூட்டிட்டு போ" என ஆரம்பித்த சூர்யாவின் சேட்டை அன்னையும் வருகிறேன் என்று சொல்லி யுவா ஒத்து கொள்ளும் வரை முடியவே இல்லை.

அப்படி அவர்கள் வந்து சேர்ந்தது தான் வசந்தா குடும்பம் இருந்த அந்த ஹோட்டலும் கூட.

"ம்மா! எனக்கு ஆறு மணிக்கு ஆன்லைன் மீட்டிங் இருக்கு.. நீங்க அந்த ரூம்ல ரெஸ்ட் எடுங்க.. ஈவ்னிங் என்னை வந்து எழுப்பிடுங்க" என்ற யுவா அன்னை தங்கை வந்து போக வசதியாய் அந்த அறையை லாக் செய்யவில்லை. அது வசந்தாவின் வசதியும் கூட...

அன்றைய தினத்தை வசந்தாவே வாய் திறந்து சொல்லும் நாள்வரை கல்பனாவை குற்றவாளியாய் பார்த்த நால்வர் என்றால் அது ஜானகி, சூர்யாவோடு பானுமதி மற்றும் நாமறிந்த ஜீவியும் தான்.

என்ன நடந்ததாம்? எப்படி இப்படி நடந்ததாம்?

யுவா அருகில் உறக்கத்தில்... இல்லை மயக்கத்தில் கல்பனா. கல்பனாவிற்கு தெரியாத போதும் தன் அறையில் நடந்ததை கொஞ்சமும் உணராமல் இருந்த யுவாவை என்னவென்று சொல்வது? அதுதான் விதியோ!

ஆறு மணி அளவில் கிட்டத்தட்ட முழு நான்கு மணி நேரத்திற்கு பிறகு யுவாவின் மொபைல் சத்தம் கேட்டு அவன் கண்விழிக்க, கல்பனா திரும்பி அவன் பக்கமாய் புரண்டு படுத்தாள்.

அவன் கண் விழிக்கவும் இவள் புரண்டு படுத்த அசைவில் ஒரு நொடி பயந்து பதறி விலகி எழுந்தான் என்று தான் சொல்ல வேண்டும் யுவாவை.

"ஹூ இஸ் திஸ்?" அவன் கேட்ட நேரம் கதவை திறந்து கொண்டு வந்தாள் சூர்யா.

"ண்ணா! எழுந்துட்டியா? போன் பண்ணா அட்டன் பண்ணல.. அதான் எழுப்பிட்டு போகலாம்னு வந்தேன்" என்றவள் சொல்லி முடித்து அவன் பார்வை சென்ற பக்கம் பார்த்தவள் எதுவும் புரியாமல் விழித்தாள்.

"ஹால்ப் சாரீ?" சூர்யா சொல்ல, அப்போது அவள் கேட்ட கேள்வி ஞாபகம் வந்தது யுவாவிற்கு.

"சூரி! இது யார்னு தெரில.. என்னோட ரூம்ல எப்படி...?" யுவாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாய் நடப்பு புரிய, அவளை தவறாய் எல்லாம் அவன் நினைக்கவே இல்லை.

நூறு சதவீதம் அங்கே எந்த தவறும் நடக்கவில்லை என்பதோடு கல்பனா இன்னும் முழித்திருக்கவில்லை என்பதும் சேர்ந்து அவனை தவறாய் எதுவும் நினைக்கவிடவில்லை.

"அய்யயோ! அண்ணா நான் போய் அம்மாவை கூட்டிட்டு வார்றேன்" என்று ஓடிய சூர்யா திரும்பி வரும்போது ஒரு படையையே அழைத்து வந்திருந்தாள்.

ஜானகியிடம் விஷயத்தை சொல்லி சூர்யா அழைத்துக் கொண்டு வரும் நேரம் "என் பொண்ணை காணும் யாராவது பார்த்திங்களா?" என மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தார் செல்லதுரை அங்கிருப்பவர்களிடம்.

அப்படி தான் ஜானகி சூர்யாவோடு கல்பனா குடும்பமும் அந்த அறைக்கு வந்தது. அதுவரையுமே கல்பனாவை எழுப்பியிருக்கவோ அங்கிருந்து சென்றிருக்கவோ இல்லை யுவா.

அனைவரும் வந்து நிற்க "ம்மா! இந்த பொண்ணு எப்படி..?" என யுவா கேட்கும் நேரம்,

"பார்த்தியா யா உன் பொண்ணை? இந்த கோலத்துல பார்க்கவா அவளை கூட்டிட்டு வரணும்னு ஒத்த காலுல நின்ன?" என வசந்தா ஏதும் அறியாதவராய் அங்கிருந்த சபையில் பேச்சை ஆரம்பிக்க, ஜீவி யுவாவிற்கும் சூர்யாவிற்கும் அந்த பேச்சு புரியவே இல்லை.

ஆனால் புரிந்த ஜானகி கோபமாய் அவர் பக்கம் திரும்ப, "இருங்க அண்ணி! என்னனு கேட்போம்" என்று பானுமதி சொல்ல,

"இப்படி ஒருத்தன் கூட தனியா இருக்கும் போது இவகிட்ட என்னத்த கேட்க?" என்று அவர் சொல்ல, யுவா அவர் பேச்சை புரிந்து கொண்ட நேரம் ஜானகி சண்டைக்கு தயாரான நேரம் சத்தம் அதிகமானதில் விழிக்க தொடங்கினாள் கல்பனா.

விழித்தவள் ஒன்றும் புரியாமல் வசந்தா அருகே செல்ல, "எங்க டி வர்ற? இவ்வளவு நேரம் தேடின எங்களை என்னனு நினச்ச?" என்று அவர் மீண்டும் கல்பனாவை திட்ட, எப்போதும் போல அவர் திட்டுவதை கேட்டு பாவமாய் நின்றாள் கல்பனா.

"ஏங்க! என்ன பேசறீங்க? நீங்க நினைக்குறது ஒன்னும் இங்க நடக்கல.. இங்க என்ன நடந்துச்சுன்னு பார்த்திங்களா? வாய்க்கு வந்தபடி பேசறீங்க? என் பையனை பத்தி எதாவது பேசுனீங்க...!" ஜானகி தன்மையாய் தான் பேசினார்.

ஆனால் வசந்தா விடவில்லை. அவர் பேசும் வார்த்தைகள் எல்லை கடக்க ஆரம்பித்தது.

பெரிதாய் இழுத்துவிட்டு அவளை இங்கேயே விட்டு செல்வது தான் வசந்தா எண்ணம். பேசும் அனைவரையும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பயமாய் பார்க்கும் கல்பனாவையும் அவள் அருகே யாரும் இல்லை என்பதையும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் யுவா.

"ஒரு நிமிஷம்" யுவா சத்தமாய் சொல்ல, வசந்தா உட்பட அனைவரும் அமைதியாகிய நேரம்

"நீ எப்படி என் ரூம்க்கு வந்த?" என்று கல்பனா முன் வந்து நின்றான் யுவா.

அனைவரின் பேச்சை வைத்து தான் தன்னால் இங்கே வாக்குவாதம் என்பதை புரிந்த கல்பனாவிற்கு, யுவா கேட்ட கேள்வியில் தான் இது அவன் அறை என்பதே தெரிய வந்தது.

அறையை சுற்றி கண்களை சுழல விட்டவள் "எனக்கு தெரியாது... நான் எங்க ரூம்னு..." முழுதாய் சொல்லமால் அவள் அழ ஆரம்பிக்க,

"ஹேய் ஈஸி ஈஸி!" என்ற யுவா பேசும் போதே "லோ கிளாஸ் பீபுள்னாலே பிரச்சனை தான்" என ஆரம்பித்து வைத்தார் வேடிக்கை பார்க்க வந்தவர்.

இந்த பேச்சு புரியாமல் சிலரும் புரிந்து பலரும் என அனைவரும் அமைதியாய் அப்படியே நிற்க, இப்போது கூனி குறுகி போனது கல்பனா மட்டுமே!.

"ஜஸ்ட் ஸ்டாப் இட் ஆல்! நீங்க எல்லாம் என்ன மனுஷங்க? அந்த பொண்ணு அவங்க ரூம்னு நினச்சு இங்கே வந்து தூங்கியிருக்கு.. ஒன்னுமே இல்லாத விஷயத்தை என்ன பேசுறீங்க நீங்க?" வசந்தாவை பற்றி தெரியாமல் அவருக்கும் அங்கிருக்கும் அனைவர்க்கும் புரியவைக்க யுவா சொல்ல,

"டேய் யுவா! கிளம்பு போலாம்!" ஜானகி அந்த இடத்தை விட்டு போனால் போதும் என்கின்ற நிலைமைக்கு வந்து விட்டார்.

அவர் அப்படி சொல்லியது தான் தாமதம் "இங்கே பாரு யா! நீ மட்டும் வர்றதுனா வா! இவளையும் கூட்டிட்டு தான் வருவேன்னு சொன்னின்னா அவ கூடவே நீயும் எங்கேயாவது போய்டு!" என்ற வசந்தா

"என் கண்ணு முன்னாடி வந்துடாத டி" என கல்பனாவை பார்த்துவிட்டு செல்ல, அவர் பின்னே மொத்த குடும்பமும் சென்றது செல்லதுரையையும் சேர்த்து.

அதற்குள் யுவா பேகை எடுத்திருந்த ஜானகி அவன் கைப்பிடித்து இழுத்து செல்ல கல்பனாவை பார்த்தபடியே சென்றான் யுவா.

ஆளுக்கொரு புறமாய் இரு குடும்பங்களும் செல்ல கேட்பாரின்றி கண்ணீரோடு நின்றாள் கல்பனா தனியாய்.

ஆசை தொடரும்...


 
Top