Aathirai
Active member
Episode-1
மலரே மௌனமா.. மௌனமே வேதமா....
மலர்கள் பேசுமா.. பேசினால் ஓயுமா.. அன்பே...
மலரே மௌனமா.. மௌனமே வேதமா....
மலர்கள் பேசுமா.. பேசினால் ஓயுமா.. அன்பே...
அழகான எம்.ஜி.எம் கடற்கரை உல்லாசவிடுதி.. அந்த மெல்லிசை மாலை நேரத்தில், அனைவரையும் கடற்கரைக் காற்றுடன் சேர்த்து வருடிக்கொண்டிருந்தது.. ஆங்காங்கே கேட்கும் சிரிப்பு சத்தங்கள், சின்ன பிள்ளைகளின் விளையாட்டுகள், உணவகத்தில் இரவு உணவைத் தயாரிக்கும் மும்முரம் போன்ற பலவற்றைக் காண முடிந்தது..
இதையெல்லாம் கவனிக்கத் தவறாமல் தன் மௌனத்தைக் கலைத்த அந்த மெல்லிசையைக் கேட்டு தன் அழகிய விழிகளை மேலே உயர்த்திப் பார்த்தாள் அஞ்சலி என்கிற அஞ்சலி தேவி..
கடற்கரைக்கு மிகவும் அருகில் இருக்கும் அந்த இடத்தில் வெகு நேரமாய் ஒருவருக்காக காத்துக்கொண்டிருந்தாள் அவள்.. ஏனோ அந்த மெல்லிசை தனக்காக யாரோ ஒலிக்கவிட்டதைப் போலொரு உணர்வில் முன்னும், பின்னும் பார்த்தாள். அதற்குள் அவளது அலைபேசி மணி அழைத்தது. ஒரு புன்னகையை இதழில் சிந்த, அதன் இணைப்பை அழுத்தி தன் காதில் வைத்தாள்.
“ஹலோ.. சொல்லு மைதிலி.. எங்க இருக்க? நான் உங்களுக்காகத்தான் ரொம்ப நேரமா காத்திட்டிருக்கேன். எப்போ வருவீங்க.?” என்றாள் அஞ்சலி..
“ம்ம்.. கலெக்டர் அம்மா ரொம்ப நேரமா வெயிட் பண்ணறிங்களா? இன்னும் கொஞ்ச நேரம் தான், வந்துடுவோம். இந்த அருண் ரொம்ப லேட் பண்ணிட்டான் பா. அதான், பொறுமையா இரு. எங்காவது எங்கள அடிச்சிடப் போறிங்க.” என்றாள் மைதிலி கிண்டலாக..
“ம்ஹீம்.. அஸிஸ்டண்ட் கமிஷனர்ஸ யாராவது அடிக்க முடியுமா பா.. ஒன்னும் பிரச்சனை இல்ல. வாங்க.” என்று அலைபேசி இணைப்பை துண்டித்தாள்.
ஆம்.. அவள் ஒரு ஆட்சியர். அதுவும் இப்பொழுது தான். இனிமேல் தான் அந்த பதவியை ஏற்க போகிறாள். காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆட்சியராக பொறுப்பேற்க இருக்கிறாள். அது போலவே அவள் தோழி மைதிலி, கடலூர் மாவட்ட உதவி ஆணையராக பொறுப்பேற்க இருக்கிறாள். அருண், நாகை மாவட்ட துணை ஆணையர்.
அந்த விழா கடந்த வெள்ளிக்கிழமை தான் நடந்து முடிந்தது. அதை ஒரு நிமிடம் அசை போட்டாள் அஞ்சலி..
புதுதில்லி ராஷ்ட்ரபதி பவன்.. அந்த வருடம் யுபிஎஸ்சி தேர்வில் முதல் தேர்ச்சி பெற்ற அனைவருக்குமான பதவியேற்பு விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவிகள் வழங்க உயர் அதிகாரிகள் அனைவரும் அங்கே கூடியிருந்தனர்.
அங்கேதான் அஞ்சலியும்,மைதிலியும் மற்றும் அவர்கள் நண்பன் அருண் அனைவரும் இருந்தனர். அஞ்சலி சந்தோஷக் கடலில் மூழ்கி இருந்தாள். பின்னே அத்தனை கஷ்டத்திலும் படித்து இந்த அளவிற்கு வந்திருக்கிறாள் என்றால் சந்தோஷம் இல்லாமலா இருக்கும்.
அனைத்து பத்திரிக்கை மற்றும் செய்தி தொலைக்காட்சிகளிலும் இவர்களது செய்திதான் முதலாக வந்தது. தமிழ்நாட்டில்அஞ்சலி 4ம் இடத்தில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாள். மைதிலியும் 8ம் இடம், ஆனாலும் அவளுக்கு பிடித்த ஐபிஎஸ் பதவியையே அவள் தேர்ந்தெடுத்தாள்.
அருண் 12-ஆம் இடத்தை பிடித்திருந்தான். அவனும் ஐபிஎஸ் பதவியை தேர்ந்தெடுத்தான். பதவியும், வாழ்த்துக்களும் அவர்களை மூழ்கடிக்க சந்தோஷத்தில் திக்குமுக்காடினர்.
“இப்ப நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. வாழ்க்கையே போயிடுச்சுன்னு நெனச்சப்ப, உங்கள மாதிரி சில நல்லவங்களால தான், நான் இவ்வளவு தூரம் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். உங்க உதவி இல்லன்னா நான் என்ன ஆயிருப்பேன்னு நெனச்சு பார்க்கவே முடியல.. உங்க ரெண்டு பேருக்கும் நான் என்னைக்கும் கடமை பட்டிருக்கேன். ரொம்ப நன்றி பா..” என்று கண்களில் ஆன்ந்தகண்ணீர் பொங்க அவர்கள் இருவருக்கும் நன்றி கூறினாள் அஞ்சலி.
“ஏய் ரொம்ப எமோஷனல் ஆகாத அஞ்சலி.. கொஞ்சம் மீதிய விட்டு வை பா.. உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்..” என்று புதிர் போட்டாள் மைதிலி..
எதுவும் புரியாமல் தன் புருவத்தை சுருக்கி அவளைப் பார்த்தாள் அஞ்சலி.. அருணும், மைதிலியும் அவளைப் பார்த்து ரகசியமாய் சிரித்தனர்..
“உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லவா? நீ இந்த இடத்துக்கு வந்ததுக்கு காரணம் நாங்க இல்ல.. ஒரு முக்கியமான ஒருத்தர்.. அது யாருன்னு எங்களுக்குத் தெரியும்.. ஆனா, இப்போ வரைக்கும் உனக்கு தெரிய வேண்டாம்னு அவங்க சொன்னதாலதான் உன்கிட்ட சொல்லல.. ஆனா, இப்போ அவங்க உன்ன மீட் பண்ணனும்னு நினைக்கிறாங்க. கம்மிங் சண்டே நம்ம மீட் பண்ணலாம் ஓகேவா?” என்றாள் மைதிலி..
“ஏய், என்ன மைதிலி நீ ஏதேதோ சொல்ற.. அப்படி யாரு எனக்கு உதவி செஞ்சா?? அது யாரு.? ஏன் என்கிட்ட இவ்வளவு நாளா சொல்லாம இருந்தீங்க?” என்றாள் அஞ்சலி சிறிய குழப்பத்துடன்.
“சும்மா ஒரு சஸ்பென்ஸ் தான் அஞ்சலி.. நீ கண்டிப்பா சந்தோஷப்படுவே யாருன்னு தெரிஞ்சா” என்றான் அருண்.
“ஹூம்ம்.. ரெண்டு பேரும் ப்ளான் பண்ணி என்கிட்ட சொல்லாம இருந்து இருக்கீங்க. இவ்வளவு வருஷமா ஏன் சொல்லாம விட்டீங்க.?”என்றாள் அஞ்சலி சற்று கோபத்துடன்.
“ஏய்.. சும்மாதான் பா.. ஒரு சஸ்பென்ஸ்.. டோன்ட் வொரி, கண்டிப்பா இந்த சண்டே நாம அவங்கள மீட் பண்ண போறோம்?” என்றாள் மைதிலி..
அதற்க்காகத்தான் இன்று அவள் அங்கே வந்திருந்தாள்.. அன்று நடந்ததை திரும்பவும் நினைத்தவாறு அமர்ந்து இருந்தாள் அஞ்சலி. எவ்வளவு நேரம் தான் அங்கேயே அமர்ந்து இருப்பது கொஞ்சம் போரடிக்கத்தான் செய்தது. சற்றுநேரம் கடற்கரை மணலில் சென்று அமரலாம் என்று அங்கே சென்று அமர்ந்தாள். கொஞ்சம் மணலை எடுத்து தன் கைகளில் தூவி விளையாடிக்கொண்டிருந்தாள்.
கடல் அலை அவள் கால்களை நனைக்கவில்லை என்றாலும் அதை ரசித்தவாறு இருந்தாள். கொஞ்சம் எழுந்துபோய் கடல் அலைகளில் கால்களை நனைக்கலாம் என்று தோன்றியது. ஆனால் கால்களை நனைத்த பின்பு வந்தால் மணல் வேறு கால்களில் ஒட்டிக் கொள்ளுமே, அதனால் அமைதியாக அங்கேயே இருந்தாள்.
அவள் மனதும் அந்த அலையைப் போலவே, அலைபாய்ந்து கொண்டிருந்தது.. வாழ்க்கை ஒருவரை எப்படியெல்லாம் புரட்டிப் போடும் என்பதை அவள் சில வருடங்களிலேயே தெரிந்து கொண்டிருந்தாள்..
அவளின் கடந்த கால வாழ்க்கை பல விஷயங்களை அவளுக்கு கற்றுத்தந்திருந்தது. எவ்வளவு சுயநலமான உலகம், எப்படியெல்லாம் ஏமாற்றும், எப்படியெல்லாம் பாடம் கற்றுத்தரும், அதே போல் எதிர்நீச்சல் போடாவிட்டால் எத்தகைய சூழ்நிலையையும் எவராலும் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பதையும் அவள் நன்றாகவே உணர்ந்திருந்தாள்..
இப்படிப்பட்ட வாழ்க்கையில் அவளுக்கென்று ஆதரவு தந்த இரு ஜீவன்கள் மைதிலியும், அருணும் மட்டுமே.. அதுவும் அவர்களின் லட்சியப் பாதையும் ஒன்றாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது..
இதையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தவள் மனதில் தன்னை யாரோ ஒளிந்துகொண்டு பார்த்தால் எப்படி இருக்கும், அது போல் ஒரு உணர்வு. உடனே பின்புறம் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆனால், அங்கே சிலர் விளையாடிக்கொண்டிருப்பதை மட்டுமே பார்க்க முடிந்தது. இன்னமும் மைதிலியும், அருணும் வருவதாகத் தெரியவில்லை.. திரும்பவும் கடலையே நோக்கினாள்.
நேரமும் போய்க்கொண்டே இருந்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டவும் ஆரம்பித்தது. ஆனால், ஏனோ அங்கிருந்து எழுவதற்கு அவளுக்கு மனமில்லை. அப்படியே தன் பழைய கால நினைவுகளுக்குள் மூழ்கினாள்.
(தொடரும்...)
Last edited: