Aathirai
Active member
Episode 10
திரும்பி தன்னைப் பார்த்துவிட்டுச் சென்றவனைப் பார்த்த அஞ்சலி, மைதிலியின் கையைப் பிடித்து இழுத்துக் கேட்டாள். “மைதிலி, நானும் வந்ததில இருந்து பார்க்கறேன், எதுக்கு ஜீவா இப்படிப் பார்க்கறாங்க.?” என்றாள் அவனைப் பார்த்துக்கொண்டே.
“ஓ அதுவா, அவனுக்கு சைக்காலஜி கொஞ்சம் தெரியும். அதனால, தன் கூட பேசறவங்க யார்.? எப்படிப்பட்டவங்க.? இதெல்லாம் பேசின கொஞ்ச நேரத்திலேயே கண்டுபுடிச்சுடுவான். அதோட, உன்னப் பத்தி கதை எழுதுறான்ல. ஸோ, உன்னுடைய முக, உடல் பாவனை அப்பறம் பேச்சு எல்லாமே இந்நேரம் கண்டிப்பா நோட் பண்ணி வைச்சிருப்பான். அதான், அவன் உன்ன அப்படிப் பார்த்திருப்பான். நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத. என்ன.?” என்றாள் மைதிலி கூலாக.
அவள் அப்படிச் சொன்னாலும் ஏனோ மனம் அதை ஏற்க மறுத்தது. அப்படியே பேசிக்கொண்டே உணவருந்தும் இடம் நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
“அது சரி, இவங்க உன்னோட அத்தை பையன்னு சொல்ற.? அப்போ உனக்கு முறைப் பையன் தானே.? கல்யாணம் பண்ணிக்கப் போறவங்களா.?” என்ற அஞ்சலியை ஒரு நிமிடம் பார்த்த மைதிலி தொடர்ந்தாள்.
“ஹூம்ம்.. அத்தை பையன்னா கண்டிப்பா கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா என்ன.? ஜீவா எனக்கு கிட்டத்தட்ட அண்ணன் மாதிரி. சின்ன வயசுல இருந்தே நாங்க அப்படித்தான் வளர்ந்தோம். அதனால, இதுவரைக்கும் அப்படி ஒரு எண்ணம் தோணல. இது எல்லாத்துக்கும் மேல உனக்குத் தெரியுமே அஞ்சலி, நான் என்னோட மாமாவத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு. அப்பறம் என்ன உனக்கு சந்தேகம்.?” என்றாள் மைதிலி.
ஆம், அவள் அஞ்சலியிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறாள். அவள் தன் தாய் மாமா, பிரபாகரனைத் தான் திருமணம் செய்யப் போகிறாள் என்று. அப்பா இல்லாத மைதிலி, அவள் தம்பி மற்றும் தன் அக்காவை அவர் தான் இதுவரை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அவர்களுக்காக திருமணம் என்னும் ஒரு பந்தத்தையே தியாகம் செய்தவர். வருபவள் இந்தப் பொறுப்பை தான் சுமப்பதை ஏதேனும் செய்துவிட்டால், என்ன செய்வது என்ற பயத்தில் அந்த எண்ணத்தையே துறந்துவிட்டார். அந்தத் தியாகம் தான் மைதிலி மனதில் அவர் மேல் இருந்த மரியாதையை, காதலாக மாற்றியது.
அவருக்காகவே தான் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவளை விடப் பத்து வயது மூத்தவர் என்ற காரணத்தால் அவர் மறுத்தார். ஆனால், இவளோ விடவில்லை. அவள் லட்சியத்தை அடைந்த பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட, அவளும் முழு மூச்சுடன் ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் படித்தாள்.
இப்போது அவள் லட்சியமும் நிறைவேற, எப்படியாவது தன் மாமாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று போராடி வருகிறாள். தான் இத்தனை தூரம் வளந்ததே தன் மாமாவின் தயவில் தான் என அருணிடமும், அஞ்சலியிடமும் அவள் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே தான் இருப்பாள்.
“சரி, உங்க மாமா என்னதான் சொல்றாரு.. உன்னக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாரா.?” என்றாள் அஞ்சலி.
“ஹூம்ம்.. எங்க மாமாவா, அவ்வளவு சீக்கிரம் அவர சம்மதிக்க வைக்க முடியாது. இன்னும் நாங்க அவர் கிட்ட பேசிட்டேதான் இருக்கோம். பிடியே கொடுக்க மாட்டிங்கறாரு. என் வயசென்ன, உன் வயசென்ன.? அப்படின்னு கேட்டாரு. அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லன்னு சொன்னேன். சரி, முதல்ல படிச்சு, பெரிய ஆளா ஆகு, எல்லாம் அப்பறம் பாக்கலாம்னு சொன்னாரு. இப்போ, நீ ஐ.பி.எஸ் படிச்சிட்டு சாதரண விவசாயம் பார்க்கற என்னப் போய் எப்படி கல்யாணம் பண்ணிக்குவன்னு கேட்கறாரு. இதிலென்ன இருக்கு, விவசாயம் பார்க்கறதென்ன அவ்வளவு ஈஸியான விஷயமா.? எவ்வளவு கஷ்டம். சொல்லப்போனா, அதுக்காகப் பெருமைப்படணும். சோறு முக்கியம் தான, அப்பறம் என்னன்னு கேட்டா, அதுக்கும் ஒரு பதில சொல்லி எஸ்கேப் ஆகறார். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. எங்களுக்காக எல்லாமே செய்யற அவருக்கு இதுக்கும் மேல என்ன கைமாறு பண்ண முடியும் சொல்லு.?” என்று வருத்தத்துடன் கூறினாள் மைதிலி.
அவள் வருத்தம் நியாயமானதே. தன்னை விடப் பத்து வயது மூத்தவர் என்றாலும், அவர் மேல் அவளுக்கு இருக்கும் அன்பைப் பார்க்கும் போது, அஞ்சலிக்குத் தன் அம்மா, அப்பாவின் மேல் கொண்ட காதல் தான் நினைவுக்கு வந்தது. அது எத்தனை ஆழமானதோ, அதே அளவுக்கு மைதிலியின் அன்பும் ஆழமானது.
பேசிக்கொண்டே வந்தவர்கள், உணவருந்தும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே அருணும், ஜீவாவும் தங்கள் கையில் இருக்கும் தட்டு போக, இருவருக்கும் ஆளுக்கு ஒரு தட்டைத் தந்தனர். அது பஃபே சிஸ்டம் என்பதால் தங்களுக்கு விருப்பமான உணவைத் தேடி எடுக்கச் சென்றனர்.
அஞ்சலி எதை எடுக்கச் செல்கிறாளோ அதையே, ஜீவாவும் எடுத்தான். அவள் எடுத்துவிட்டு கரண்டியை வைத்த அடுத்த நிமிடம் அவனும் அதையே எடுத்துக்கொண்டிருந்தான். அவளுக்கு என்னடா இது என்றே தோன்றியது. ஒரு வேளை இதைக்கூட அவன் குறிப்பு எடுத்துக்கொள்கிறானோ.? என்று நினைத்தாள். ஆனால், அவனிடம் எதுவும் கேட்கவில்லை.
ஒரு வழியாக எடுத்து முடித்துவிட்டு, இருவரும் டேபிள் இருக்கும் இடம் நோக்கி சென்றனர். அவர்களுக்கு முன்னரே அருணும், மைதிலியும் டேபிளில் சென்று அமர்ந்திருந்தனர். இவர்கள் இருவரும் ஜோடியாக நடந்து வருவதைக் கண்ட, அவர்கள் இருவரும் எதையோ காதில் கிசுகிசுத்தபடி இவர்களைப் பார்த்து பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அதை அஞ்சலி பார்த்துவிட்டு முகம் சுருக்கினாள்.
“ஏய்.. என்ன.? ரெண்டு பேரும் ரகசியமா பேசி சிரிச்சுட்டு இருக்கிங்க.? அதுவும், என்னப் பார்த்து.” என்று கேட்டுக்கொண்டே சின்னதாக கோபத்தில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி.
“இல்ல மா. உன்ன மட்டும் இல்ல. ஜீவாவையும் சேர்த்து தான்.” என்றான் அருண் அப்பொழுதும் சிரித்துக்கொண்டே. ஜீவாவிடம் எதுவும் பதிலில்லை, அமைதியாகவே வந்து அமர்ந்தான். அவனைப் பார்த்துக்கொண்டே, என்ன என்பதைப் போல் பார்த்தாள் அஞ்சலி.
“அது ஒண்ணுமில்ல அஞ்சலி. நீங்க அங்கிருந்து வரும் போது உங்க ரெண்டு பேரையும் ஜோடியா பார்த்தோமா.? பார்க்க லவ்வர்ஸ் மாதிரியே இருந்தது. அதான், அருணும் நானும் சொல்லி சிரிச்சுட்டு இருந்தோம்.” என்றாள் மைதிலி.
அவள் அப்படிச் சொன்னதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அஞ்சலிக்கு ஒரு மாறி ஆனது. ஜீவாவோ தன் வலக்கையை டேபிளில் வைத்திருந்தவன், அந்தப் பக்கமாக திரும்பி தன் வாயிடம் வைத்து அவர்கள் அறியவில்லை என நினைத்து சிரித்தான். அதை அஞ்சலி பார்த்துவிட்டாள். மைதிலியை அவன் அறியாவண்ணம் ஒரு கிள்ளு கிள்ளினாள்.
“ஸ்.. ஆஆஆ...” என்று மெதுவாக அலறினாள் மைதிலி..
“கொன்னுடுவேன் உங்கள..” என்று மெதுவாக ஜீவாவிற்கு கேட்காதவண்ணம், தன் கையில் இருக்கும் ஃபோர்க்கை வைத்து மிரட்டினாள் அஞ்சலி.
அதை ஜீவா பார்த்ததும், தலையை குனிந்து ஃபோர்க்கை வைத்துவிட்டு, சமாளித்தவாறே ஸ்பூனை எடுத்து தன் தட்டை நோண்டிக்கொண்டிருந்தாள்.
“ஏங்க. நீங்க இப்போ கலெக்டர், இதுக்கெல்லாம் போய் டென்ஷன் ஆகறிங்க. அவங்க சும்மா கிண்டல் பண்றாங்க. அதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதிங்க.” என்றான் ஜீவா கூலாக.
அவள் எதுவும் பேசவில்லை. மௌனமாகவே இருந்தாள். அதைப் பார்த்த அருண், “அஞ்சலி உனக்கு ஒண்ணு தெரியுமா.? ஜீவா ஒரு பொண்ண ரொம்ப சின்சியரா லவ் பண்ணிட்டு இருக்கான். அதனால, நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாத. சரியா.?” என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் அவளுக்கு ஏதோ ஒரு மாதிரி ஆனது. ஆனால், அவள் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. “டேய்.. நீ வேற.. சும்மா இருடா.” என்று அருணை அதட்டினான் ஜீவா.
அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். அருணின் தட்டிலோ ஏகப்பட்ட உணவுகள். ரொம்ப ரசித்து, ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அதைப் பார்த்து மூவரும் சிரித்தனர்.
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து, ஐஸ்கிரீம் மற்றும் டெசர்ட் ஐட்டங்களை ஒரு பதம் பார்த்துக்கொண்டிருந்தனர். சாப்பிட, சாப்பிடவே, “சரி, எனக்கு ஹெல்ப் பண்ணவங்களப் பத்தி இதுவரைக்கும் எதுவுமே சொல்லாம இருக்கீங்க.? ஏன் இப்போ வர முடியாதுன்னு சொல்றாங்க.? மிட்நைட் 12 மணிக்கு தான் மீட் பண்ணனுமா.? அந்த அளவுக்கு ரொம்ப பிஸியானவங்களா.? அவங்க ஜென்னா, லேடியா.?” என்று அருணையும், மைதிலியையும் பார்த்து கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள்.
அவள் அதைக் கேட்டதும், அருணும், மைதிலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்தனர். அதைப் பார்த்த அஞ்சலி, “இப்போ நான் என்ன கேட்டேன்னு ரெண்டு பேரும் இப்படி திருடன் மாதிரி முழிக்கறிங்க.?” என்றாள்.
அதைக் கேட்டு ஜீவா சிரித்துவிட்டான். அஞ்சலியோ அவனை முறைத்தாள். ஜீவா அதை அறிந்தவனாய், “இல்ல. நான் வேணும்னு சிரிக்கல. போலீஸப் பார்த்து திருடன்னு சொன்னீங்கல்ல, அதான் சிரிப்பு வந்துடுச்சு. ஏய்.. கலெக்டர் கேள்வி கேக்கறாங்கல்ல பதில சொல்லுங்க.” என்றான் இருவரையும் பார்த்து.
இப்போது, அவர்கள் இருவரும் இவனை முறைத்தனர். ஒருவழியாக சுதாரித்துக்கொண்டே மைதிலி, “அஞ்சலி, அது அவங்க சர்பிரைஸ்னு சொல்லிருக்காங்க. அதனால தான், உன்கிட்ட எதுவும் சொல்லாம இருக்கோம். உனக்கென்ன பிரச்சனை.? அதான் உனக்கு கம்பெனி குடுக்க ஆள கூட்டிட்டு வந்தாச்சுல்ல. நீ பாட்டுக்கு உன் கைதைய சொல்லிட்டிரு. அவங்க வந்ததும் பாக்கலாம்.” என்றாள்.
ஒரு பார்வை பார்த்த அஞ்சலி, “எப்படியோ, அது, இதுன்னு சொல்லி என்ன சமாளிக்கற. ஹூம்ம்.. இருக்கட்டும். நான் கதை சொல்லிட்டிருப்பேன் சரி, அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டிருப்பீங்க.?” என்றாள்.
“ஹே.. அஞ்சலி, நாளைக்கு என்ன டே.? பிப்ரவரி 14, வேலண்டைன்ஸ் டே. அதனால, இந்த ரெசார்ட் ஃபுல்லா பார்ட்டி, செலிப்ரேஷன்னு விடிய, விடிய ஜாலி தான். அதெல்லாம் போய் ஒரு ரௌண்ட் பாத்தாலே டைம் போயிடும். ஸோ, நீ உன் கதைய சொல்லி முடிக்கற வரைக்கும் நானும், அருணும் ரெசார்ட் ஃபுல்லா சுத்தலாம்னு இருக்கோம்.” என்றாள் உற்சாகத்தில்.
அவள் கூறியதும் தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஆம், அடுத்த நாள் காதலர்கள் தினம் என்று. எதையோ ஆழமாக யோசித்தவளை, ஜீவா பார்த்துக்கொண்டே இருந்தான். அதை, திடீரென்று கவனித்தவள் சட்டென நிலைமைக்கு வந்தாள். ஆனால், ஜீவா விடவில்லை.
“ஏங்க. என்னாச்சு.? திடீர்னு ரொம்ப யோசிச்சீங்க. ஏதாவது பிராப்ளமா.?” என்றான்.
சுதாரித்தவள், “இல்ல. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.” என்று சமாளிக்க முயன்றாள். அதை அறிந்தவளாய் மைதிலி, “அது ஒண்ணுமில்ல ஜீவா, அவளுக்கு அவளோட ஃபர்ஸ்ட் லவ் நியாபகம் வந்திருக்கும். என்ன சரிதான அஞ்சலி.” என்று அவளைப் பார்த்துக் கேட்க, அஞ்சலி மௌனமாகவே இருந்தாள்.
“என்னங்க அப்படியா.? வெரி இண்ட்ரெஸ்டிங்க். கண்டிப்பா நீங்க அதப் பத்தி சொல்லணும். அத வைச்சு நான் இன்னொரு கதை கூட எழுதி முடிச்சிடுவேன்.” என்றான் ஜீவா.
“டேய்.. உன் புத்தி இருக்கே. அவளே எவ்ளோ ஃபீல் பண்றா. நீ என்னடான்னா.” என்று அதட்டினாள் மைதிலி.
“சரி அஞ்சலி. நீ போய் ஜீவாக்கு உன்னோட காவியக் கதைய சொல்லிட்டிரு. நாங்க போய் அப்படியே ஒரு ரௌண்ட் போயிட்டு வரோம்.” என்றான் அருண் கிண்டலாக.
“ஓகே, அஞ்சலி.. பை பை.. டேய், ஜீவா அவள பத்திரமா பாத்துக்கோ. கதை சொல்லி முடிச்சதும், போன் பண்ணு நாங்க வந்துடறோம்.” என்று சொல்லிவிட்டு ஜீவாவிடம் ஏதோ கையசைத்துவிட்டுச் சென்றாள் அருணுடன்.
அய்யோ கடவுளே. இவனுடன் இவர்கள் என்னை தனியாக விட்டுச் செல்கிறார்களே. ஏற்கனவே பல பார்வைகள் பார்ப்பவன், இன்னும் தனியாக இருக்கும் போது என்னென்ன செய்வானோ, என நினைத்த மறு நிமிடம், ஜீவா இவளைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.
(தொடரும்...)
Last edited: