கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 12

Aathirai

Active member
Episode 12

அஞ்சலி எப்படியோ கதிரேசனிடம் சொல்லாமல் வந்துவிட்டாலும். மனது சதா அதைப் பற்றியே தான் நினைத்துக் கொண்டிருந்தது. தோழிகளிடம் லேட்டாக வந்ததற்க்குக் காரணம் ஒன்றைச் சொல்லிக்கொண்டு தென்னை மரத்தடியில் அமர்ந்தாள். அப்போது தான் அவள் அப்பா அவளுக்கு அன்று உரைத்த விஷயங்கள் திரும்பவும் நியாபகம் வந்தது. அதை மனதில் கொண்டு படிப்பதில் கவனம் செலுத்தலானாள்.

மகேஸ்வரி பரபரப்பாக வீட்டுக்கும், வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். வாசல் கேட் வழியே எட்டி, எட்டிப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தவாறே அஞ்சலி வீட்டிற்கு அப்பொழுதுதான் வந்துகொண்டிருந்தாள். வரும் போதே, மகேஸ்வரி இப்படி எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள் அஞ்சலி.

“ஏம்மா.. வாசல்லயே நின்னு எட்டிப் பார்த்துட்டிருக்க. என்னாச்சு.?” என்றாள் அவளின் பதட்டத்தைப் பார்த்து.

“நீ வா. முதல்ல. உனக்காகத்தான் இவ்ளோ நேரம் காத்திட்டிருந்தேன்.” என்று அவள் சைக்கிளை விட்டு இறங்கியதும் அவசரமாக அவள் கையைப் பிடித்துக்கொண்டே வீட்டிற்கு உள்ளே சென்றாள்.

என்னவாயிற்றோ தெரியலையே, என்ற பதட்டத்துடனேயே அவளுடன் சென்றாள் அஞ்சலி. அங்கே சென்றதும் கதவைச் சாத்தியவள். அவள் ஸ்கூல் பேகை வாங்கினாள். அப்போது அஞ்சலியின் பயம் இன்னும் அதிகமானது. ஏனென்றால் அதில் கதிரேசன் கொடுத்த பரிசு வேறு இருந்தது. அம்மா அதைப் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்றிருந்தது அவளுக்கு.

“அம்மா.. என்னன்னு சொல்லு மா., எதுக்கு என் பேக்க வாங்கிப் பார்க்கற.?” என்றாள்.

மகேஸ்வரியிடம் இருந்து பதிலில்லை. அவள் அஞ்சலியின் பேக்கில் மும்முரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள். அஞ்சலி எதிர்பார்த்ததைப் போலவே கடைசியில் அந்தப் பரிசுப் பொருளை எடுத்து விட்டாள். எடுத்தவள் அஞ்சலியைப் பார்த்து, “இது என்ன அஞ்சலி. இத என்கிட்ட இருந்து மறைக்கணும்னு நெனச்சியா.? சொல்லு.” என்று சற்று கோபமாகவே கேட்டாள்.

அஞ்சலிக்கு அழுகையே வந்து விட்டது. மௌனமாகவே இருந்தாள். தலையைக் குனிந்துகொண்டு இருந்தவளின், தாடையைப் பிடித்து நிமிர்த்தினாள் மகேஸ்வரி. “இங்க பாரு. எதுக்கு இப்போ அழற.? கேட்டதுக்கு பதில் சொல்லு.” என்றாள்.

“இல்ல மா. அத கதிர் மாமா தான் கொடுத்தாங்க.” என்றவள், அன்று காலை நடந்த அனைத்தையும் மகேஸ்வரியிடம் சொன்னாள்.

அதை எதிர்பார்த்தவளாக மகேஸ்வரி, “எனக்கு இது முன்னாடியே தெரியும். ஆனா, நீயா சொல்லணும்னு தான் எதிர்பார்த்தேன்.” என்றவளை குழப்பத்துடன் பார்த்தாள் அஞ்சலி.

“நான் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ அங்க கதிர் இருந்தான். இன்னைக்கு வேலைக்குப் போகலையான்னு கேட்டதுக்கு, லீவ்ன்னு சொன்னான். அப்பறம் என்னை வீட்டுக்கு அவன் தான் கொண்டு வந்து விட்டான்.” என்று மகேஸ்வரி சொன்னதும் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ஏனென்றால், கதிரேசனும் சரி, சதாசிவமும் சரி, அவ்வளவு சீக்கிரம் அவர்கள் வீட்டிற்கு வரமாட்டார்கள். ஆனால், இன்றோ கதிரேசன், மகேஸ்வரியை வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறான் என்பதால் ஆச்சர்யப்பட்டாள்.

“அப்போ, என்கிட்ட கொஞ்சம் பேசணும்னு சொன்னான்.” என்று கூற ஆரம்பித்தாள் மகேஸ்வரி.

பேச வேண்டும் என்று சொன்னவனை உள்ளே அழைத்தாள் மகேஸ்வரி. தயக்கத்துடனே உள்ளே வந்தவன், அவள் கொண்டு வந்து தந்த நீரைக் குடித்துவிட்டு ஆரம்பித்தான்.

“அத்தை, மாமா எப்போ வருவார்.? என்ன ஷிப்ட்டு?” என்றான். ஏனென்றால் எங்கே பேசப் பேச அவர் வந்து விடுவாரோ என்ற பவயம் அவனுக்கு.

“மாமா, வரதுக்கு எப்பவும் 8 மணி ஆகும் கதிரு. இப்போ பகல் ஷிப்டுக்குத்தான் போயிட்டு வரார். எப்பவாவது ஒரு டைம் தான் நைட் ஷிப்டுக்கு போவார்.” என்ற மகேஸ்வரிக்கு அவன் சம்பந்தமில்லாமல் பேசுவதாய்த் தோன்றியது.

“அத்தை, நான் உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும். ஆனா, எப்படி சொல்றதுன்னு தான் தெரியல. என் வயசுக்கு இதெல்லாம் உங்க்கிட்ட பேசலாமான்னு கூட தெரியல. ஆனா, எனக்கு வேற வழியும் இல்ல. அதான்.” என்று இழுத்தான் கதிரேசன்.

“நீ என்னன்னு சொன்னா தான கதிரு தெரியும். சொல்லு.” என்றாள் மகேஸ்வரி.

“அத்தை எனக்கு அஞ்சலியப் புடிச்சிருக்கு. அவள விரும்பறேன். இன்னைக்கு காதலர் தினம்னு என் விருப்பத்தை அஞ்சலிகிட்ட சொல்லலாம்னு போனேன். ஆசையா ஒரு சின்னதா பரிசுப்பொருள் வாங்கி அவகிட்ட குடுத்து அதோட என் விருப்பத்தையும் சொன்னேன். ஆனா, அவ எதுவுமே பேசல. என் விருப்பத்தையும் ஏத்துக்கல. பரிசையும் வாங்க மறுத்துட்டா. ஆனா, எனக்குத் தெரியும் அவளுக்கும் என்னைப் பிடிக்கும்னு. அவ, அதை வெளிப்படையா சொல்ல மாட்டிங்கறா. எதுவா இருந்தாலும் அம்மா, அப்பா எடுக்கற முடிவுன்னு சொல்லிட்டா. அதே மாதிரி, நான் குடுத்த பரிசுப் பொருள நான் ரொம்ப வற்புறுத்திய பிறகு தான் வாங்கிக்கிட்டா.” என்று அவன் கூறியதும் மகேஸ்வரி புருவம் சுருக்கி கண்களை அகல விரித்து அவனைப் பார்த்தாள்.

“நீங்க தப்பா நினைக்காதிங்க அத்தை. எனக்கு அவள சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். அது இப்போ காதலா மாறிடுச்சு. இந்த விஷயத்த உங்களால தான் புரிஞ்சுக்க முடியும்னு தோணுச்சு. ஏன்னா, நீங்களும் மாமாவ விரும்பித்தானே கல்யாணம் செய்துக்கிட்டிங்க.? அந்த உணர்வு எப்படி இருக்கும்னு உங்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்போ நீங்க தான் சொல்லணும். மாமாகிட்ட இதப்பத்தி பேசிட்டு ஒரு முடிவெடுங்க. கண்டிப்பா நான் அஞ்சலிய நல்லா பாத்துக்குவேன். நீங்க அத நினைச்சு ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். அஞ்சலிய ரொம்ப நல்லா வளர்த்திருக்கிங்க. அவ உங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப பாசமும், மரியாதையும் வைச்சிருக்கா. இந்த வயசிலயே எந்த மாதிரி முடிவுகள் எடுக்கணும்னு ஒரு தெளிவு அவகிட்ட இருக்கு. அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவ மேல இன்னும் எனக்கு அன்பு அதிகமாயிடுச்சு.” என்று அவன் சொல்லி முடித்தான்.

மகேஸ்வரி அதுவரை பொறுமையாகக் கேட்டவள், “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல கதிரு. அஞ்சலியப் பத்தி நீ சொல்லும் போது, அவள நினைச்சு எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனா, இது ஒத்துவருமான்னு தான் தெரியல.” என்றாள்.

“அத்தை நீங்களும் எல்லாரோட சம்மதத்தோட தான மாமாவ, காதல் திருமணம் செஞ்சிங்க. அப்பறம் ஏன் ஒத்துவராதுன்னு சொல்றிங்க.?” என்றான்.

“அதெல்லாம் தனிக் கதை கதிரு.. அப்போ எனக்கு முடிவெடுக்கற தெளிவும், அதுக்கான வயசும் இருந்துச்சு. உனக்கென்ன இப்போ 21 வயசு. அவளுக்கு இப்போதான் 15 வயசு தான் ஆச்சு. இன்னும் ஸ்கூல் கூட முடிக்கல. கல்யாணம் பண்றதுக்கும் வயசுன்னு ஒண்ணு இருக்குல்ல?” என்றாள்.

“அத்தை. நான் ஒண்ணும் இப்போவே அஞ்சலியக் கல்யாணம் பண்ணிக் குடுங்கன்னு சொல்லல. பேசி வைச்சுட்டிங்கன்னா போதும். அதே மாதிரி, அஞ்சலி எனக்குத்தான்னு எல்லாருக்கும் தெரிஞ்சா போதும். அதுக்காகத் தான் சொல்றேன்.” என்றான்.

“ஹூம்ம்.. நீ இப்படி சொல்லும் போது, எனக்கு வேற ஒரு விஷயம் தான் மனசுல தோணுது. கண்டிப்பா அண்ணே இதுக்கு ஒத்துக்க மாட்டார். அவரப் பத்தி தெரிஞ்சிருந்தா, நீ இப்படி ஒரு முடிவெடுத்திருக்க மாட்ட.” என்றாள் மகேஸ்வரி.

“என்ன அத்தை, அப்பாவப் பத்தி நீங்களே இப்படி சொல்றிங்க. அப்பறம் எப்படி உங்களுக்கு மட்டும் உங்க விருப்பத்த ஏத்துக்கிட்டு கல்யாணம் பண்ணி வைச்சார்.?” என்றான் குழப்பத்துடன்.

“ஆனா, உன் விஷயத்துலயும், அம்சா விஷயத்துலயும் அவர் அப்படிப் பண்ண மாட்டார். என்னக் கேட்டா, இந்த விஷயத்த நீ இதோட விட்ரு. இதுக்கும் மேல நீ ஆசைய வளர்த்துக்காத.” என்றாள் தீர்க்கமாக.

“இல்ல அத்தை, அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல. தன்னோட தங்கச்சி பொண்ண அவர் ஏத்துக்க மாட்டாரா.? நீங்களா எல்லாத்தையும் முடிவு பண்ணாதிங்க. அவர் கண்டிப்பா, சம்மதிப்பார். இல்லன்னா, அம்மா, பாட்டி, தாத்தா எல்லாரும் அவர சம்மதிக்க வைப்பாங்க.” என்று அவனும் தீர்க்கமாகச் சொன்னான்.

அதைக் கேட்டு மகேஸ்வரி, ஒரு மாறியாக சிரித்தாள். அதைக் கண்டதும் அவனுக்கு என்னவோ போல் ஆனது. சட்டென எழுந்தான். “நான் வரேன் அத்தை.” என்று சொல்லிவிட்டு உடனே கிளம்பிவிட்டான்.

என நடந்த அனைத்தையும், அஞ்சலியிடம் சொன்னாள் மகேஸ்வரி. அனைத்தையும் அஞ்சலி கேட்டு அதிர்ச்சியானாள். தான் அம்மா, அப்பாவிடம் பேசச் சொன்னதை எண்ணித்தான் அவன் மகேஸ்வரியிடம் பேசியிருக்க வேண்டும் எனத் தோன்றியது.

“இங்க பாரு அஞ்சலி. உனக்கு கதிர புடிச்சிருக்குன்னா, அதுல தப்பில்ல. ஏன்னா, அவன் நல்ல பையன் தான். ஆனா, உங்க மாமா இருக்காரே, அவர நினைச்சு தான் நான் பயப்படறேன். அவரப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எந்த ஒரு லாபமும் இல்லாம அவர் எதையும் செய்ய மாட்டார். எனக்கு உங்க அப்பாவக் கல்யாணம் பண்ணி வைச்சாருன்னா, எனக்காக பிற்காலத்துல அதிகமா எந்த செலவும் பண்ணத் தேவையில்ல. எதையாவது கேட்கவும் பெரியவங்க இல்ல. உங்க அப்பாவும் எதுவும் கேட்க மாட்டார். அதெல்லாம் யோசிச்சு தான் என் விருப்பத்துக்கு இணங்க என்னைக் கல்யாணம் பண்ணி வைச்சார். இதுவரைக்கும் உங்க அப்பாகிட்ட கூட இதெல்லாம் நான் சொன்னதில்ல. என்னால யாரையுமே விட்டுக்கொடுக்க முடியாது. உன்கிட்ட இதெல்லாம் ஏன் சொல்றேன்னு தெரியுமா.? நீ யார்கிட்டயும் இதை சொல்லமாட்டேங்கிற நம்பிக்கைல தான்.” என்றாள் மகேஸ்வரி.

“இல்ல மா. நான் எதுவும், யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். அதே மாதிரி, உங்க ரெண்டு பேரோட விருப்பம் இல்லாம எதுவும் செய்ய மாட்டேன். எனக்கு நீங்க ரெண்டு பேரும் தான் ரொம்ப முக்கியம். நீங்க எனக்காக எது செஞ்சாலும் எனக்கு சந்தோஷம். உங்க ரெண்டு பேரோட பெயர் கெடற மாதிரி என்னைக்குமே நான் நடந்துக்க மாட்டேன்.” என்று திரும்பவும் கண்கலங்கினாள் அஞ்சலி.

“அய்யோ என் தங்கமே, எதுக்கு இப்போ மறுபடியும் அழற. நீ உரசிப் பார்க்க முடியாத சுத்தத் தங்கம். உன்னப் போய் சந்தேகப்படுவனா.?” என்று அவளைக் கட்டிக்கொண்டே அவளின் கன்னங்களில் வழிந்த நீரைத் துடைத்துவிட்டாள் மகேஸ்வரி.

“உனக்கு ஒண்ணு தெரியுமா.? கதிரு உன்னப்பத்தி சொல்லும் போது எனக்கு அவ்ளோ சந்தோஷமாவும், பெருமையாவும் இருந்திச்சு. இப்போ சொல்றேன், வாழ்க்கைல நடக்கறது எதுவா இருந்தாலும் அதை ஏத்துக்கோ. உனக்கானது எதுவுமே உன்ன சேராம போகாது. சரியா. இப்போதைக்கு நீ நல்லா படிச்சு, அப்பா சொன்ன மாதிரி ஒரு நல்ல நிலைமைக்கு வரணும். என்ன.?” என்றாள்.

“கண்டிப்பா அம்மா. அப்பா சொன்னத மட்டுமில்ல. நீங்க சொன்னதையும் நான் ஏத்துப்பேன். ஒரு நல்ல நிலைமைக்கு வருவேன்.” என்றாள் அவள் அன்னையை அணைத்துக்கொண்டே.

அன்று இரவு ஜானகியும், அஞ்சலியும் தூங்கிவிட்டார்கள் என்று தெரிந்த பின்பே, மகேஸ்வரி, கணேசனிடம் அன்று நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினாள். கணேசனுக்கு ஒருபுறம் அஞ்சலியை நினைத்து சந்தோஷமாக இருந்தது. மறுபுறம் தன் அத்தானை நினைத்து கொஞ்சம் பயமாக இருந்தது.

“என்னங்க.. நான் சொல்லிட்டே இருக்கேன். நீங்க எதுவுமே சொல்லாம ஏதோ யோசிச்சுட்டே இருக்கிங்க.?” என்றாள் மகேஸ்வரி.

“இல்லமா, நம்ம அஞ்சலிய நினைச்சு சந்தோஷப்படறதா, இல்ல அத்தானை நினைச்சு பயப்படறதான்னே தெரியல. இந்த விஷயம் மட்டும் அவர் காதுக்கு போச்சு, அவர் கண்டிப்பா கதிர் மேல கோபப்படுவார்.” என்று அவர் சொன்னதை, “ஆமாங்க.” என்று மகேஸ்வரியும் ஆமோதித்தாள்.

“கதிரு நல்ல பையன் தான். ஆனா, அத்தான நினைச்சு தான் நம்ம யோசிக்க வேண்டியதா இருக்கு. பாக்கலாம் மகேஸூ, எனக்கு மட்டும் எங்க அக்கா பையன, என் பொண்ணுக்கு கட்டி வைக்கணும்னு ஆசை இருக்காதா.? ஆனா, அவ தலைல என்ன எழுதிருக்கோ தெரியலையே.? நடக்கறது நடக்கட்டும்.” என்றார் கணேசன். சிறிது நேரம் இருவரும் அப்படியே பேசிய பின்னரே தூங்கச் சென்றனர்.

இவர்கள் பேசிய அனைத்தையும் ஜானகி கேட்டபடி தான் படுத்திருந்தாள் என்பதை அவர்கள் இருவரும் அறியவில்லை. அதைக் கேட்டவள், மனதில் பலவற்றை நினைத்து வெம்பிக் கொண்டிருந்தாள்.

(தொடரும்...)































 
Top