Aathirai
Active member
Episode 13
அன்று ஞாயிற்றுக்கிழமை, ஜானகி அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு பள்ளிக்குச் செல்ல தயாரானாள். (எதற்க்காக.? என்று தானே பார்க்கிறீர்கள்.) அன்று அவளுக்கு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள். (என்னது அப்படியா.? அய்யய்யோ என்று மனதிற்குள் நீங்கள் நினைப்பது புரிகிறது.)
அதே போலத்தான், அஞ்சலி, மகேஸ்வரி மற்றும் கணேசனும் இருந்தனர். அன்று நடந்த சம்பவத்திலிருந்து அவள் யாரிடமும் அவ்வளவாக பேசுவதில்லை. கேட்ட கேள்விக்கு பதில். அதற்கு மேல் எதுவும் பேச மாட்டாள்.
படிப்பு மட்டுமே போதும் என்று நினைத்துவிட்டாள் போலும். சதா புத்தகம் கையுமாகவே இருப்பாள். ஒருபுறம் அவர்களுக்கு இவளுக்கு படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தை நினைத்து சந்தோஷமாக இருந்தாலும், மறுபுறம் அவள் நடந்து கொள்ளும் விதம் தான் மிகவும் சங்கடப்படுத்தும்.
ஏதாவது கோபம் என்றால், இருந்த இடத்தில் உள்ள பொருளையெல்லாம் தூக்கிப் போடுவாள். எதை எதையோ இழுத்துப் பேசுவாள். மகேஸ்வரி அவளை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. ஆனால், அஞ்சலியும், கணேசனுமோ அவளிடம் மன்றாடுவர். ஜானகியோ பிடிகொடுக்க மாட்டாள். மகேஸ்வரி இவர்களைத் திட்டுவாள். அப்படித்தான் இத்தனை நாட்களும் நகர்ந்தன.
இன்று என்னாகப் போகிறதோ என்ற பயம் ஜானகியை விட, அவர்களுக்குத் தான் இருந்தது. அவள் சிறிது நேரத்தில் கிளம்பி விட்டிருந்தாள். மூவருக்கும் மிகவும் பதட்டமானது. கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தனர்.
பக்கத்து வீட்டு டெலிபோன் சத்தம் கேட்டது. சிறிது நேரத்திலேயே அந்த வீட்டுப் பொடியன் வந்து கணேசனுக்கு போன் வந்திருப்பதாகச் சொல்லி அழைத்துப் போனான். என்னவாக இருக்கும் என்று மகேஸ்வரியும், அஞ்சலியும் விழித்தனர்.
சிறிது நேரத்தில், கணேசன் முகம் முழுக்க சந்தோஷத்துடன் ஓடி வந்தார். அவர் வருவதைக் கண்டதும், அவர்கள் இருவரும் வாசலுக்கு வந்தனர்.
“என்ன்ங்க யாரு போன்ல. ஒரே சந்தோஷமா இருக்கீங்க.? என்ன விஷயம்” என்றாள் மகேஸ்வரி.
“ஸ்கூல்ல இருந்து தான் போன். என்னோட நண்பன், அதான் தமிழ் வாத்தியார் அவன் தான் பேசினான். ஏதாவது ஒரு அவசரத் தேவைக்கு உதவுமேன்னு, அவன் கிட்ட பக்கத்து வீட்டு போன் நம்பர் குடுத்து வைச்சிருந்தேன்.” என்றவரைப் பார்த்தவள், “சரி, விஷயம் என்னன்னு சொல்லுங்க.” என்றாள்.
மகேஸ்வரியைப் தன் இரு கைகளால் பிடித்துக் கொண்டே, “மகேஸூ, நம்ம ஜானகி தான் ஸ்கூல்லயே முதல் மார்க்காம். 1200-க்கு 1137 மார்க் எடுத்திருக்கா. ரெண்டு பாடத்துல முழு மார்க் எடுத்திருக்கா. அவ இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைச்சிடுச்சு.” என்றார்.
மகேஸ்வரிக்கு அப்பொழுதுதான் நிம்மதியாய் இருந்தது. இல்லையென்றால் வீடு ரெண்டாகி விடுமே என்ற எண்ணமே அவளுக்கு முதலில் தோன்றியது. கடவுளுக்கு நன்றி சொன்னாள்.
“ஹை.. சூப்பர் பா.. அக்கா எவ்ளோ நல்ல மார்க் எடுத்திருக்கா. நாம எல்லாரும் ஸ்கூல் போலாம் பா. அக்கா ரொம்ப சந்தோஷப்படுவா.” என்று குழந்தை போல் துள்ளிக் குதித்துச் சொன்னாள் அஞ்சலி.
“கண்டிப்பா. போகலாம் மா. கிளம்புங்க. போகும் போது வழியில ஏதாவது ஒரு இனிப்பு வாங்கிட்டு போலாம். ஆங். அவளுக்குப் புடிச்ச லட்டு வாங்கிக்கலாம்.” என்றவாறே உற்சாகத்தில் கிளம்பினார்கள்.
ஆனால், மகேஸ்வரிக்கு அங்கு செல்வதில் விருப்பமில்லை. எப்படி இருந்தாலும், ஜானகி தாங்கள் செல்வதை நினைத்து ஒன்றும், சந்தோஷப்படப் போவதில்லை. அவள் எப்படி நடந்து கொள்வாள் எனக் கற்பனையிலேயே ஒரு முன்னோட்டம் தெரிந்தது மகேஸ்வரிக்கு. ஏதோ, இவர்கள் விருப்பத்திற்காக மட்டுமே கிளம்பினாள்.
பள்ளியை மூவரும் அடைந்ததும், ஜானகி எங்கே இருப்பாள் எனத் தேடினர். அவள் பள்ளி முதல்வர் அறையில் இருப்பதாய் அங்கே உள்ள பணியாளர் ஒருவர் சொல்ல, அஞ்சலி அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கே சென்றாள்.
பள்ளி முதல்வர் அறையில் அனைத்து ஆசிரியர்களும் கூடி இருந்தனர். ஜானகியை அனைவரும் பாராட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களைக் கண்டு கொண்ட தமிழ் வாத்தியாரான கணேசனின் நண்பர், அவரைக் கையோடு அழைத்துக்கொண்டு சென்று பள்ளி முதல்வர் முன்பு நிறுத்தினார். அப்போது தான் ஜானகி அவர்களை கவனித்தாள்.
அவர்களைக் கண்டதும், சந்தோஷத்தில் ஓடிப் போய் நான் முதல் மதிப்பெண் வாங்கி விட்டேன் எனச் சொல்லி, கட்டி அணைத்திருக்க வேண்டும் தான். ஆனால், அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவள் ஜானகி ஆயிற்றே. அப்படிச் செய்து விட்டால், தான் இத்தனை நாள் மிடுக்காக இருந்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமே. அதனால், பேசாமலே நின்றாள்.
“சார்.. இவர் தான் ஜானகியோட அப்பா, கணேசன். அது, அவளோட அம்மா, தங்கை. அந்தப் பொண்ணும் நம்ம ஸ்கூல்ல தான் படிக்குது.” என்று அறிமுகப்படுத்தினார்.
“ஓ.. அப்படியா.! ரொம்ப சந்தோஷம். உங்க பொண்ணு தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். உங்க பொண்ண நினைச்சு நீங்க ரொம்ப பெருமைப்படணும். ரெண்டு சப்ஜெக்ட்ல செண்டம். நல்லா ஹார்ட் வொர்க் பண்ணிருக்கா.” என்று அவர்களிடம் அவளைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார்.
ஆனால், அவளோ அவர்களை ஏளனப் பார்வை பார்த்தாள். அதை, மகேஸ்வரி ஏற்கனவே முன்னோட்டமாக நினைத்திருந்ததால் அவள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒப்புக்காக நின்று கொண்டிருந்தாள்.
“ஆமாங்க சார். எங்களுக்கும், ரொம்ப பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு. எங்க பொண்ணு இவ்வளவு மார்க் வாங்கினதுக்கு உங்கள மாதிரி நல்ல ஆசிரியர்கள் அவளுக்கு நல்லபடியா சொல்லிக் கொடுத்ததால தான். உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி.” என்று அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார் கணேசன்.
“சும்மா சொல்லக் கூடாது, ஜானகியும் நல்லா ஹார்ட் வொர்க் பண்ணி படிச்சிருக்கா. அதனால தான் இந்த அளவுக்கு மார்க் வாங்க முடிஞ்சுது.” என்று அங்கிருந்த ஒரு ஆசிரியை சொன்னார்.
“ஆமாங்க டீச்சர். அவ எப்பவும் புத்தகம் கையுமாவே தான் இருப்பா. ராப் பகலா படிச்சா. அதான், இப்போ பலன் கிடைச்சிடுச்சு.” என்றார் கணேசன் திரும்பவும்.
அதே சந்தோஷத்தில் தான் வாங்கி வந்திருந்த லட்டுவை அவளுக்கு ஊட்டி விடச் சென்றார். ஆனால், ஜானகியோ அதைத் தடுப்பதைப் போல் தன் கையால் வாங்கிக்கொண்டாள். அவள் அப்படிச் செய்வாள் என எதிர்பார்க்காத கணேசனுக்கோ ஒரு மாதிரி ஆனது. ஆனால், அதைக் காட்டிக்கொள்ளாமல் நின்றார்.
அஞ்சலியும் தான் லட்டுவை அக்காவுக்கு ஊட்டி விடவே எண்ணினாள். ஆனால், அப்பாவையே அவள் மதிக்கவில்லை எனும் போது, தான் எம்மாத்திரம் என்று அமைதியாக இருந்து விட்டாள்.
இதையெல்லாம் எதிர்பார்த்தவளாக மகேஸ்வரி எதையும் பொருட்படுத்தாமல் நின்றது, ஜானகிக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியது. வேண்டுமென்றே அவர்களை அவமானப்படுத்தும் விதமாக, அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தன் ஆசிரியை ஒருவரிடம் பேசிக்கொண்டு நின்றாள்.
அதற்கு மேல் அங்கே நிற்பது சரியில்லை என்று அவர்கள் கிளம்பினார்கள். அந்த அறையை விட்டு வெளியே வரும் போது, அங்கே வராண்டாவில் அம்சவேணி நின்றுகொண்டிருந்தாள்.
இவர்களைப் பார்த்ததும் ஓடி வந்தாள். “அத்த, மாமா, அஞ்சலி எல்லாரும் எப்போ வந்தீங்க.?” என்றாள் உற்சாகத்துடன்.
“நாங்க இப்போ கொஞ்சம் முன்னாடி தான் விஷயம் கேள்விப்பட்டு இங்கே வந்தோம்.” என்றார் கணேசன்.
“ஆமா, நம்ம ஜானுதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். எனக்கே ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. கடவுளே, அவள மாதிரி எல்லாம் படிக்கவே முடியாது மாமா.” என்றவள் முகத்தில், அவளே அந்த மார்க்கை வாங்கியது போல் ஒரு பூரிப்பு.
“சரி நீ எவ்ளோ மார்க் அம்சா.?” என்றாள் மகேஸ்வரி.
“நான் என்ன, 983 மார்க் தான் அத்த. ஜானு அளவுக்கு இல்ல.” என்றாள்.
“இதுவும் நல்ல மார்க் தான் அக்கா. வாழ்த்துக்கள்.” என்றாள் அஞ்சலி.
என்ன நினைத்தாளோ மகேஸ்வரி, கணேசனின் கையில் இருந்த லட்டு பாக்கெட்டில் இருந்து ஒரு லட்டுவை எடுத்து, அம்சாவின் வாயில் ஊட்டி விட்டாள். அஞ்சலியும், அவளுக்கு ஊட்டி விட்டாள்.
அப்போதுதான், முதல்வர் அறையில் இருந்து வெளியே வந்த ஜானகி அதைப் பார்த்தாள். அவளுக்கு அப்படியே பற்றிக்கொண்டு வந்தது. எரிச்சலுடன் நின்றாள். அம்சாவுக்கோ மிகவும் சந்தோஷமானது.
“ரொம்ப தேங்க்ஸ் அத்த. நீங்க தான் எனக்கு முதல்ல ஸ்வீட் கொடுத்திருக்கிங்க. வீட்ல எல்லாரும் என்ன சொல்வாங்கன்னு தெரியல. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா படிச்சு, இன்னும் கொஞ்சம் நல்ல மார்க் எடுத்திருக்கலாம். ஆனா, எப்படி இருந்தாலும் அப்பா என்ன இதுக்கு மேல படிக்க வைக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. அதனால தான் கொஞ்சம் அசால்ட்டா விட்டுட்டேன்.” என்றாள் அம்சவேணி.
அம்சாவை நினைத்து சற்று கஷ்டமாக இருந்தது அவர்களுக்கு. அப்போது தான் ஜானகி அவர்களுக்கு அருகில் வந்தாள். “எங்க டீச்சர் உங்க கிட்ட பேசணும்னு சொன்னாங்க. அங்க வெயிட் பண்றாங்க.” என்று சொன்னவள், அவர்கள் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் சென்றாள். அம்சாவையுமே அவள் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்குத் தான் சங்கடமாக இருந்தது.
அவளுக்கும், ஜானகியைப் பற்றி தெரியும் என்பதால் அவள் எதையும் பெரிதுபடுத்தவில்லை. “சரி, நான் கிளம்பறேன் மாமா, அத்தை. வீட்ல இன்னும் காணோம்னு பாத்திட்டிருப்பாங்க.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
“உங்க பொண்ண தலைல தூக்கி வைச்சுட்டு ஆடுனிங்களே, அவ கொஞ்சமாவது யாரையாவது மதிக்கறாளா.?” என்று கணேசனின் காதோரம் முனகிக்கொண்டே வந்தாள் மகேஸ்வரி. கணேசனிடம் பதிலில்லை. மௌனமாகவே வந்தார்.
ஜானகி சொன்ன ஆசிரியையிடம் சென்றார்கள், “வணக்கம் டீச்சர். நீங்க ஏதோ பேசணும்னு சொன்னதா ஜானகி சொன்னா. சொல்லுங்க டீச்சர். என்ன விஷயம்.?” என்றார் கணேசன் பணிவுடன்.
“ஆமா, சார். உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல விஷயம் சொல்லத்தான் கூப்பிட்டேன். ஜானகியோட மார்க்குக்கு கவர்மெண்ட் டீச்சர் ட்ரெயினிங் இன்ஸ்டியூசன்ல கண்டிப்பா சீட் கிடைக்கும். அவ, அததான் படிக்கவும் விரும்பறா. உங்க குடும்பம் கஷ்டப்படற குடும்பம்னு ஜானகி சொல்லிருக்கா. அதான், நான் ஒரு ஸ்பான்சர ட்ரை பண்ணேன். அதாவது ஆதரவளர்னு சொல்வாங்க. இப்போ அவ நல்ல மார்க், அதுவும் ஸ்கூல் ஃபர்ஸ்ட்னால, ஒரு வாய்ப்பு வந்திருக்கு. அவள மேல படிக்கவைக்க ஒருத்தர் ஆதரவாளரா(ஸ்பான்சர்) இருக்க விருப்பப்படறாங்க.” என்று அவர் சொன்னதும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நீங்க ஒண்ணும் பயப்படற மாதிரி எல்லாம் கிடையாது. அவள பத்திரமா காலேஸ்ல ஜாயின் பண்ணி விடறது, அப்பறம் மீதி என்ன செலவு ஆகுமோ அதெல்லாம் அவங்களே ஏத்துப்பாங்க. இது மாதிரி நிறைய மாணவர்கள் அவங்க தயவாள தான் படிச்சிட்டு இப்போ ஒரு நல்ல நிலைமைல இருக்காங்க. அதனால நீங்க யோசிக்கறதுக்கு இதுல ஒண்ணும் இல்ல.” என்றார்.
“சரி, டீச்சர். நீங்க இவ்ளோ தூரம் சொல்றதால தான் அவள அனுமதிக்கறோம். நீங்களே என்ன பண்ணனும்னு சொல்லுங்க. அப்படியே பண்ணலாம். அப்பறம் ஜானகி மேல அக்கறை எடுத்து நீங்க இவ்ளோ தூரம் பண்றதுக்கு ரொம்ப நன்றி.” என்றார் கணேசன்.
“அதெல்லாம் பரவால்லைங்க. ஏதோ என்னால முடிஞ்ச உதவிய பண்றேன். ரொம்ப சந்தோஷம். நான் கூட என்ன சொல்வீங்களோன்னு பயந்தேன். நல்ல வேளையா ஒத்துகிட்டிங்க.” என்று சிரித்துக்கொண்டே பேசியவர் அஞ்சலியைப் பார்த்தார்.
“நீ டென்த் தானே.? உனக்கு இன்னும் ரெண்டு வாரத்தில் ரிசல்ட் வந்துடும். நீயும் உங்க அக்கா மாதிரி மார்க் வாங்கிடுவியா.?” என்றார் அறியாமல்.
“ம்ம்.. வாங்குவேன் டீச்சர்.” என்றாள் புன்னகையுடன். அதுவரை சந்தோஷமாய் நின்று கொண்டிருந்த ஜானகியின் மனதில், ஒரு கேள்வி எழுந்தது. இவள் என்னுடைய 10-ம் வகுப்பு மார்க்கை விட அதிக மதிப்பெண் வாங்கிவிடுவாளோ.? என்ற பயம் அவளை ஆட்கொண்டது.
ஒருபுறம் தான் பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்றாலும், அதை நினைத்து சந்தோஷப்பட முடியாமல், அடுத்த வாரம் வர இருக்கும் அஞ்சலியின் தேர்வு முடிவை நினைத்து கவலைகொண்டாள். அன்று இரவு அவளால் தூங்கவே முடியவில்லை. நிம்மதியாய் உறங்கும் அஞ்சலியைக் கண்டு வெறுப்பானாள்.
(தொடரும்...)