Aathirai
Active member
அத்தியாயம் 14
ஜானகியின் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது, அதே போல் அவளை எப்படிப் பத்திரமாக வேறொரு இடத்தில் தங்க வைப்பது.? போன்ற எண்ணங்களே அன்று முழுவதும் அஞ்சலியின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
என்னென்ன வழி கிடைக்கும் என்று யோசித்தவள், இந்த விஷயத்தைப் பற்றி முதலில் கலெக்டரிடம் பேச வேண்டும் என்று நினைத்தாள். அவரின் அறைக்குச் சென்றாள்.
எம்.தணிகாசலம் ஐ.ஏ.எஸ். வயது 55. நல்ல மனிதர். நிறைய ட்ரான்ஸ்ஃபர்களை வாங்கிய பெருமை இவரையே சேரும். எந்த ஒரு அநியாயங்களையும் தான் இருக்கும் இடத்தில் நடக்கக் கூடாது என்பதை லட்சியமாகக் கொண்டவர். தனக்கு ஒதுக்கியிருக்கும் துறை மட்டுமல்லாது, மீதி உள்ள துறைகளையும் அலசி ஆராய்வார். அதில், ஏதேனும் நியாயங்களுக்குப் புறம்பாய் இருந்தால், அந்தத் துறையில் இருக்கும் அதிகாரிகள்(சப்-கலெக்டர்) அவருக்கு ஆதாரத்துடன் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அனைவரைக் காட்டிலும், அஞ்சலியே நிறைய பாராட்டுக்களை அவரிடம் வாங்கியுள்ளாள். அதனால், சில பேருக்கு அவள் மேல் சிறிது பொறாமை கூட உண்டு. அவளது பேச்சிற்க்கு என்றுமே ஒரு மரியாதை உண்டு அந்த அலுவலகத்தில்.
“ஸார்.. மே ஐ கமின்.?” என்று அவரின் அனுமதியை வாங்கிய பிறகே உள்ளே சென்றாள்.
அவர் தலையை நிமிர்ந்து பார்த்தவறாக, “யெஸ். கமின் அஞ்சலி” என்றார் புன்னகைத்தவாறே.
“ஸார் குட் மார்னிங். உங்க பெர்மிஷனோட, உங்கள டிஸ்டர்ப் பண்ணலன்னா ஒரு விஷயத்தைப் பத்தி உங்ககிட்ட பேசணும்.” என்றாள் அஞ்சலி அவரின் அனுமதியை எதிர்நோக்கியவாறே.
“யா. நோ பிராப்ளம் அஞ்சலி. யூ கேரி ஆன்.” என்றார்.
“தேங்க் யூ சோ மச் ஸார்.” என்றபடி தொடர ஆரம்பித்தாள்.
“ஸார். உங்களுக்கு ஒரு விஷயத்தை தெரியப்படுத்தணும்னு நினைக்கிறேன். வேலூர்ல ஒரு குவாரி கவர்மெண்ட்டோட பெர்மிஷன் இல்லாம நடந்துட்டிருக்கு. எப்படி இது கவர்மென்டுக்கு தெரியாமப் போச்சுன்னு தெரியல. இது தொடர்பா நாம ஏதாவது ஏக்ஷன் எடுக்க முடியுமா ஸார்.?” என்றாள் அவரின் பதிலை எதிர்பார்த்தவாறே.
“ம்ம். ஆதாரம் இருந்தா கண்டிப்பா நம்மால ஆக்ஷன் எடுக்க முடியும். ஆனா, ஒரு விஷயம் நாம இருக்கறது காஞ்சிபுரம் டிஸ்டிரிக்ட். நீங்க சொல்றது வேலூர் டிஸ்டிரிக்ட். சோ, அந்த டிஸ்டிரிக்ட் ஆஃபீஸ காண்டாக்ட் பண்ணிட்டு அவங்க பெர்மிஷனோட பண்ண முடியும். டேரக்டா நம்மால ஆக்ஷன் எடுக்க முடியாது.” என்றார் தணிகாசலம்.
“ஓ. அப்படியா ஸார். அப்போ நாம அந்த கலெக்டர் ஆஃபீஸ்ல பேசிப் பார்க்கலாமே ஸார்.” என்றாள்.
“ஆங்.. ஓகே. பார்க்கலாம். ஆனா, முதல்ல என்ன ஆதாரம் வைச்சிருக்கீங்க.?” என்றார்.
“ஆதாரம், என்னுடைய சிஸ்டருக்குத் தான் தெரியும் ஸார். அவ மூலமா தான் எனக்கு எல்லா விவரங்களும் தெரிய வந்தது. அவளுடைய ஹஸ்பெண்ட்ட கொன்னுட்டாங்க ஸார். அந்தக் குவாரியப் பத்தின விவரம் எல்லாமே அவர் தான் ஆதாரமா எங்கயோ வைச்சிருந்தார். அது அக்காக்கு மட்டும் தான் தெரியும். ஆனா, அவ இப்போ வெளில வர முடியாத நிலைமைல இருக்கா. பரமசிவனோட ஆளுங்க துரத்துறாங்க.” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
“அஞ்சலி ஸ்டாப். ஏதோ பேர் சொன்னீங்களே. ரிப்பீட் இட்.” என்றார்.
“அதுதான் ஸார். அந்த வேலூர் எம்.எல்.ஏ கனகவேலோட பையன் பரமசிவன். அவன் தான் ஸார் அந்தக் குவாரிய வைச்சிருக்கான்.” என்று அவள் சொன்னதும், தணிகாசலத்தின் கண்கள் பெரிதாயின.
“அஞ்சலி. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.? நான் இங்க ட்ரான்ஸ்ஃபர் ஆகறதுக்கு முன்னாடி, வேலூர்ல தான் கலெக்டரா இருந்தேன். என்னை ட்ரான்ஸ்ஃபர் பண்ணதே அந்தப் பரமசிவன் தான். அவன் நினைச்சா எதையும் செய்வான். நியாயமா இருக்கறவங்களையே அவனுக்குப் பிடிக்காது. அவனோட விஷயங்கள்ல எங்க நான் தலையிடுவேனோன்னு தான், என்னை இங்க ட்ரான்ஸ்ஃபர் பண்ணினான். இதுவே வேற யாராவதா இருந்தா, இந்நேரம் கொன்னிருப்பான். ஏதோ என் நல்ல நேரம் உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிட்டிருக்கேன்.” என்று அவர் பயம் கலந்த சிரிப்பை உதிர்த்தார்.
“நீங்க அவனப் பத்தி இன்னும் சரியா தெரியாம பேசிட்டிருக்கீங்க. அவனுக்கு இல்லீகலா வேலூர்ல மட்டுமில்ல, கிருஷணகிரி, ஓசூர் னு நிறைய இடங்கள்ல குவாரிகள் இருக்கு. ஆனா, எந்த கலெக்டரும் அதை ஏக்ஷன் எடுக்க முடியல. எடுத்தா, இவன் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுவான், இல்லை கொன்னுடுவான். நீங்க கேள்விப்பட்டீங்களான்னு தெரியல. இதே மாதிரி, போன மாசம் அவனோட குவாரிய சீல் வைக்க ட்ரைப் பண்ண போலீஸ் இண்ஸ்பெக்டர அதே குவாரிலயே வைச்சு சுட்டுக் கொன்னான். ஆனா, இது எந்தப் பத்திரிக்கை, டிவி நியூஸ்ல வரல. அந்த அளவுக்கு அவனுக்கு அரசியல் செல்வாக்கு ரொம்ப அதிகம். ஆளுங்கட்சி அவன் கூட இருக்கறதனால இன்னும் அவனுக்கு பலம் அதிகமாயிடுச்சு. அவன நம்மால ஒன்னும் பண்ண முடியாது. அவன் தான் சிவனாச்சே. என்ன பண்றது..?” என்று சொல்லி முடித்தார்.
“ஸார் என்ன சொல்றீங்க. நீங்க எவ்வளவு நியாயமா பேசுவீங்கன்னு நினைச்சேன். ஆனா, நீங்களே அவன ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்றீங்களே.? இதுக்கு என்னதான் வழி.?” என்று அஞ்சலி கேட்க,
அவரோ சைகையால் தன் இரு கைகளையும் தூக்கி மேலே தலையைத் தூக்கி சொன்னார். “கடவுள் தான் இதற்க்கு தீர்வு கண்டுபிடிக்கணும்.” என்றார்.
“சரி ஸார். அந்தக் கடவுள் ஒரு தூதுவர அனுப்பியிருக்காருன்னு நினைச்சுக்கோங்க. அதனால, நான் அந்தத் தூதுவரா இருந்து இந்த விஷயத்த ஹேண்டில் பண்ணனும்னு நினைக்கிறேன்.” என்றாள் அஞ்சலி மனதில் ஒரு உறுதியுடன்.
“இங்க பாரும்மா, இந்த விஷயம் ரொம்ப சீரியஸானது. நீங்க சொல்ற மாதிரி கடவுளோட தூதுவரா ஆனாலும், அவரைக் கூட அவன் துவம்சம் செய்துவிடுகிற ஆளு. நீங்க அவனோட ஒரு சின்ன விஷயத்துல தலையிடுறீங்கன்னு தெரிஞ்சா போதும், உங்களப் பத்தின மொத்த டீடெய்லும் அவனுக்குப் போய் சேர்ந்திடும். அதுக்கப்பறம் அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு நீங்க ஒவ்வொரு நாளும் பயந்து நடுங்கற மாதிரி பண்ணிடுவான். தினம் தினம் உங்கள சாகடிப்பான். சொல்ல முடியாத அளவுக்கு உங்களுக்கு வேதனைய உண்டு பண்ணுவான்.” என்று அவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்க.
“அதெப்படி ஸார், இதெல்லாம் உங்களுக்கு இத்தனை விஷயங்கள் அவனைப் பத்தித் தெரிஞ்சிருக்கு.?” என்றாள் ஆச்சர்யத்துடன்.
“நான் மட்டுமில்ல, இந்த தமிழ்நாடே அவனப் பத்தி தெரிஞ்சு வைச்சிருக்கும். அதே மாதிரி அவனுக்கு எல்லா இடத்திலயும் ஆளுங்க இருக்காங்க. இன்னும் உங்களுக்கு புரியும்படியா சொல்லணும்னா, நம்ம கலெக்டர் ஆஃபீஸ்லயே அவனுக்கு ஆளுங்க இருக்காங்க. ஏன், நம்ம இப்போ அவனப் பத்தி பேசிட்டு இருக்கறதப் பத்தி அவனுக்கு கண்டிப்பா இன்ஃபர்மேஷன் போகும். சோ, நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.” என்று அவரும் மிரட்டினார்.
ஒரு நிமிடம் யோசித்தவள், “ஸார் நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா.?” என்றாள்.
“யா ஸ்யூர். சொல்லுங்க.” என்றார் தணிகாசலம்.
“எனக்கு வேலூர் டிஸ்ட்ரிக்ட் சப்-கலெக்டரா சார்ஜ் எடுக்க பெர்மிஷன் வேணும். அதுக்கு, நான் வேலூர்க்கு ட்ரான்ஸஃபர் ஆகணும். எனக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வாங்கித் தர முடியுமா.?” என்றாள் அஞ்சலி.
அதிர்ச்சியான தணிகாசலம், “அஞ்சலி நீங்க தெரிஞ்சுதான் பேசறீங்களா.? நான் இந்த விஷயத்தை இதோட விட்ருங்கன்னு சொல்லிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா வேலூர்க்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்குமான்னு கேட்கறீங்க.? ரொம்பக் கஷ்டம் மா. நீங்க பெரிய ரிஸ்க் எடுக்க நினைக்கறீங்க.” என்றார்.
“இல்ல ஸார். நான் நல்லா யோசிச்சு தான் கேட்கறேன். எனக்கு இன்னொரு ஹெல்ப்பும் வேணும் ஸார். எங்க அக்கா வேலூர்ல கவர்மெண்ட் டீச்சரா வொர்க் பண்ணிட்டிருந்தா, இப்போ அவளால அங்க போக முடியாத நிலைமை. அதனால எந்த ஒரு அறிவிப்பும் இல்லாம அவளுக்கு திருப்பத்தூர் கவர்மெண்ட் ஸ்கூல்ல ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வேணும்.” என்றாள்.
“இப்போ கேக்கறீங்களே, அதை என்னால அரேஞ்ச் பண்ண முடியும். ஆனா, உங்களோட ட்ரான்ஸ்ஃபர் பத்தி நீங்க நிறைய யோசிக்கணும் அஞ்சலி.” என்றார் தணிகாசலம்.
“இல்ல ஸார். நான் ஸ்ட்ராங்கா தான் இருக்கேன். எனக்கு வேலூர்க்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வேணும்.” என்றாள்.
அதன் பிறகு இதைப் பற்றி அவர் அவளிடம் பேச விரும்பவில்லை. “சரி, நான் நாளைக்கு உங்களுக்கு ஃபைனலா சொல்றேன். நீங்க போலாம்.” என்றார்.
“ஓகே ஸார். தேங்க் யூ.” என்றபடி விடைபெற்று வெளியே வந்தவள் யாரோ அங்கிருந்து அவசரமாகச் செல்வதைப் பார்த்தாள். யாரென்று அவளால் கண்டுபிடிக்க முடியாதபடி அவன் மறைந்து விட்டான்.
அனைவரும் சொல்வதைப் போல், அவன் மிக மோசமானவன் என்றாலும், அவனை எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அஞ்சலியின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இருப்பது ஒரு வாழ்க்கை, அதை எதிர்கொண்டு போராடித்தான் வாழ்ந்தாக வேண்டும்.
பரமசிவனைப் போல் எத்தனையோ பேர் இந்த உலகில் தோன்றியிருக்கலாம். ஆனால், அது போல் சர்வாதிகாரம் செய்து மாண்டு போனவர்களே அதிகம். தெய்வம் நின்று கொல்லும் என்பதே உண்மை. இவனுக்கு ஒரு முடிவு தன்னால் வர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஆணி அடித்தாற் போல் பதித்து வைத்தாள்.
அவளின் அறைக்கு சென்று அமர்ந்ததும், அவளுக்கு இனியனின் ஞாபகம் வந்தது. “கடவுளே, இனியைக் கேட்காமல் இப்படியொரு முடிவை தான் எடுத்தது சரியா.? தவறா.? புரியவில்லை. அவன் இதைக் கேட்டால் என்ன சொல்வானோ.? கண்டிப்பாக திட்டு விழும். அதற்க்குத் தயாராக இருக்க வேண்டும்.” என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.
அன்று அலுவலகம் முடிந்து வீடு வந்து சேர்கையில், ஜானகி அவர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவள் நேரே அவளிடம் வந்தாள்.
“அக்கா, நீ என்ன பண்ணிட்டிருக்க.? உன்னை யாரு இதெல்லாம் பண்ண சொல்றது.?” என்றாள்.
“பரவால்ல, இருக்கட்டும் அஞ்சலி. உங்களுக்காக மட்டுமில்ல, மனசுக்குள்ளயே ஓடிட்டிருக்க விஷயத்தை மறக்கவாவது ஏதேனும் செய்யணும்னு தோணுச்சு. அதனால தான், சும்மா இருக்காம இதெல்லாம் செய்யறேன்.” என்றாள் ஜானகி.
ஒரு காலத்தில் மிடுக்கோடு சுற்றித் திரிந்தவளை அப்படிப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அவளுக்கு ஏன் இந்த நிலைமை.? என்று நினைக்கும் போது திரும்பவும் அந்த பரமசிவன் ஞாபகம் வந்தது.
“அக்கா, ஒரு நிமிஷம் இங்க வா. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” என்றபடி அவளை அவசரமாய் அழைத்து வந்து ஷோஃபாவில் அமர வைத்தாள்.
“ஏய். ஏன் இப்படி அவசரப்படற.? சொல்லு.” என்றாள் ஜானகி.
“அக்கா, உனக்கு நம்ம ஸ்கூல்லயே ட்ரான்ஸ்ஃபர் கிடைக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். கலெக்டர் ஸார் கிட்டப் பேசினேன். அவர் கண்டிப்பா ஹெல்ப் பண்ணறேன்னு சொல்லியிருக்கார்.” என்றதும், ஜானகி கண்ணீருடன், அவளைக் கட்டிக்கொண்டாள்.
அக்காவின் இந்த புதிய அணைப்பை இப்போது தான் இரண்டு நாளாய் அனுபவிக்கிறாள் அஞ்சலி.
“அப்பறம், இன்னொரு முக்கியமான விஷயம். நானும், வேலூருக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்டிருக்கேன்.” என்றதும்,
ஜானகியின் கண்கள் அகல விரிந்தன. “என்ன சொல்ற நீ.? உனக்குப் பைத்தியமா.?” என்றாள்.
“அது தெரியாது கா. ஆனா, உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவனோட, நேருக்கு நேரா மோதணும்னு முடிவு பண்ணிட்டேன். அவனுக்கு சரியான தண்டனைய வாங்கிக் கொடுக்காம விடமாட்டேன்.” என்று வீராப்பாகப் பேசிக்கொண்டிருந்தவளை கோபமாகப் பார்த்தாள் ஜானகி.
“அஞ்சலி, தயவுசெய்து இந்த முடிவ நீ விட்டுடு. உன்னோட இந்த முடிவுக்கு நான் தான் காரணம்னா நான் கிளம்பறேன். எங்கயாவது போயிடறேன். நீயாவது நல்லா இருக்கணும். என்னால நீ இழந்தது போதும். இதுக்கு மேலயும் நீ உன்னையே இழக்கக் கூடாது. உனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு. ஒரு நல்ல கணவர் உனக்குக் கிடைச்சிருக்கார். அதையெல்லாம் யோசிக்காம, நீ எதுக்கு இந்த முடிவ எடுத்த.? இனியன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா.? அவர் என்ன நினைப்பார்.? என்னால எந்தப் பிரச்சினையும் வேண்டாம். நான் போறேன்.” என்றபடி விருட்டென்று எழுந்து அவள் இருந்த அறைக்குச் சென்றவள், கையில் அவள் கொண்டு வந்த பேகை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். திடீரென்று அவள் அப்படிச் செய்ததும் அஞ்சலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
“அக்கா, ப்ளீஸ் எங்க போற.? நில்லு. நீ இப்போ எங்கயும் போக முடியாது. அது உனக்கு சேஃப் இல்ல. நான் எதுக்கு அந்த முடிவ எடுத்தேன்னு தெரிஞ்சுக்காம பேசாத.” என்றாள் அவள் முடிவை நியாயப்படுத்தும் விதமாக.
“நீ செஞ்சது ரொம்பத் தப்பு அஞ்சலி. நீ இனியன் கிட்ட ஏன் கேட்கல.?” என்று திரும்ப ஜானகி கேட்க, அஞ்சலியிடம் பதிலில்லை.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, அங்கே வந்து நின்றான் இனியன். இருவருக்குள்ளும் ஒரு பயம். அதைக் கண்டுபிடித்தவன் புருவத்தை சுருக்கியவாறே, “அஞ்சலி உள்ள வா..” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றான்.
அஞ்சலி என்னாகுமோ என்ற கவலையில் உள்ளே செல்ல, ஜானகிக்குத்தான் அதிக பயம் தொற்றிக்கொண்டது.
(தொடரும்...)
Last edited: