கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 14

Aathirai

Active member
Episode 14

அன்று காலை கிட்டத்தட்ட சூரியன் உதித்து வெகு நேரம் ஆகியிருந்தது. எப்பொழுதும் படிப்பதற்க்காக அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழும் ஜானகி, அன்று ஏனோ படுக்கையை விட்டு எழாமல் அப்படியே புரண்டு, புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

முதலெல்லாம் படிக்க வேண்டும் என்ற எண்ணமே அவளைத் தூங்க விடாது. இப்பொழுது எந்த பயமும் இல்லை என்பதால், அப்படியே சிறிது நேரம் படுத்திருந்தாள். அருகே அஞ்சலியைக் காணவில்லை. எங்கே போயிருப்பாள், மிஞ்சினால் அம்மா ஏதும் வேலை சொன்னால் அதைச் செய்யத்தான் போயிருப்பாள், என்ற நினைப்பில் எழுந்து அப்படியே வெளியே வந்தாள்.

மகேஸ்வரி அடுக்கலையில் சமையல் செய்யும் சத்தம் கேட்டது. வேறு யாரும் வீட்டில் இருப்பதாய்த் தெரியவில்லை. சரி என்று செல்ஃபில் இருந்து, துணியை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து வரும் போது, அவள் அறையில் காலை உணவு தட்டில் மூடி வைத்தபடி காத்திருந்தது.

அன்று நடந்த பிரச்சினைக்கு பிறகு, அவர்களோடு அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தையே கைவிட்டாள். கணேசனும், அஞ்சலியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தனர். அதனால் தான், மகேஸ்வரி இது போல் செய்ய ஆரம்பித்தார். அவளுக்கு இப்படித்தான் மூன்று வேளை உணவும் வழங்கப்படுகிறது.

வழக்கம் போல் தலை வாரிக்கொண்டு, பொட்டு வைத்து விட்டு வந்து தட்டைத் திறந்தாள். 4 இட்லிகளும், தக்காளிச் சட்னியும் இருந்தது. அதைக் கண்டதும் சலித்துக் கொண்டே எடுத்து வந்து வெளித் திண்ணையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.

பக்கத்து வீட்டில் போன் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அதே பொடியன் வந்து, “அக்கா, உங்க வீட்டுக்குத்தான் போன். உங்க ஸ்கூல்ல இருந்து பேசறாங்க.” என்று சொன்னதும், அவள் புருவத்தை சுருக்கி யோசித்தாள்.

“எதுக்கு ஸ்கூல்ல இருந்து கூப்பிடறாங்க.?” என்ற கேள்விக்குறியுடனேயே அவர்கள் வீட்டுக்கு சென்று போனை எடுத்து பேசினாள். பேசியவள் அதிர்ச்சியில் உறைந்தாள். கோபத்தின் உச்சிக்கே சென்றவள் போல் ஆனாள். எதுவும் பேச முடியாமல் அப்படியே போனை வைத்துவிட்டாள். அந்த வீட்டில் இருப்பவர்கள் கேட்டதைக் கூட பொருட்படுத்தாமல் வீட்டிற்க்கு வந்தாள்.

பக்கத்து வீட்டில் இருந்த பையன் வந்து சொல்லும் போதே மகேஸ்வரி ஜானகி போவதை எட்டிப் பார்த்தாள். திரும்பவும் வந்தவள், அதிர்ச்சியில் இருப்பதைப் பார்த்ததும் என்னவோ என்று பதறினாள். “ஏய். யாருடி போன்ல.? ஏன் இப்படி அதிர்ச்சியா உட்கார்ந்திருக்க.? என்னன்னு தான் சொல்லேன்.” என்றாள் அவளை இடித்தபடி.

“ஸ்கூல்ல இருந்து நம்மள வரச் சொல்றாங்க.” என்று ஒரு தகவலை மட்டுமே தந்தாள். வேறு என்ன விவரம் என்று சொல்லவே இல்லை. இவளை நம்பினால் ஒன்றும் செய்ய முடியாது என்று கருதியவள், அவசர அவசரமாக பள்ளிக்குக் கிளம்பிச்சென்றாள் மகேஸ்வரி.

மகேஸ்வரி பள்ளிக்குச் சென்ற போது, பள்ளி எங்கும் ஒரே பரபரப்பு. அன்று வரை காணாத கூட்டமாக இருந்தது. அவள் உள்ளே செல்ல முயன்றபோது “மகேஸூ..” என்ற குரல் கேட்டு திரும்பினாள். கணேசன் அவசரமாக வந்துகொண்டிருந்தார்.

“நீங்களும் வந்திட்டிங்களா.? உங்களுக்கு யாரு தகவல் சொன்னாங்க.?” என்றாள்.

“என் நண்பன் தான். வேற யாரு.? அதோ அங்கே நிக்கறான் பாரு.” என்றபடியே அங்கே சென்றனர்.

அவர் சொன்னதைப் போலவே, அவர் அங்கே கூட்டமாக இருந்த இடத்தில் இருந்து கையைக் காட்டி வரச் சொன்னார் அவர்களை. அவர்களும் அங்கே சென்று கொண்டிருக்க, அவரோ பள்ளி முதல்வரிடம் ஏதோ பேசினார்.

அவர்கள் சென்றதும், பள்ளி முதல்வர், “வணக்கம் வாங்க. நீங்க மறுபடியும் பெருமைப்படற மாதிரி உங்க ரெண்டாவது பொண்ணும் ஒரு விஷயம் பண்ணிருக்கா.” என்றார் புதிருடன்.

“சார், என்ன.?” என்றார் கணேசன்.

“உங்க பொண்ணு டென்த் ரிசல்ட்ல 500க்கு 489 மார்க் எடுத்து நம்ம மாவட்டத்திலேயே முதல்ல வந்திருக்கா. அதோட ஸ்டேட் ரிசல்ட்ல நாலாவது இடம். மூணு சப்ஜெக்ட்ல செண்டம். இதுவரைக்கும் யாருமே இந்த ஸ்கூல்ல இந்த மார்க் வாங்கினதில்ல, உங்க பொண்ணு தான் வாங்கிருக்கா. எங்க ஸ்கூலுக்கு பெருமையைத் தேடித் தந்திருக்கா. பத்திரிக்கை, டிவின்னு ஒரே அமர்க்களம் தான். இதுவரைக்கும் இந்த ஸ்கூல் இதெல்லாம் பார்த்ததில்லை.” என்றார் வாய் நிறைய புன்னகையுடன்.

அவர் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல அவர்களுக்கு ஆச்சர்யமாகவும், அதே சமயம் அஞ்சலியை நினைத்து பெருமையாகவும் இருந்தது. அவர் சொல்லி முடிக்கும் போது ஆனந்தக்கண்ணீரே வந்து விட்டது. மகேஸ்வரி அவளை திருஷ்டி சுத்தி, உச்சி முகர்ந்தாள். கணேசன் அவளை ஆரத் தழுவிக்கொண்டார்.

“ரொம்ப சந்தோஷம்டா மா. எங்க எல்லாருக்கு ரொம்ப பெரிய பெருமையத் தேடிக் கொடுத்திட்ட. எங்களுக்கு விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, இனிப்பு ஏதும் வாங்கி வந்திருப்போம்.” என்றார் கணேசன்.

“அதனால என்னங்க, இந்தாங்க ஸ்வீட். அஞ்சலிக்கு ஊட்டி விடுங்க.” என்றார் பள்ளி முதல்வர். அதை வாங்கி இருவரும் அவளுக்கு ஊட்டி விட்டனர்.

“எங்க முதல் பொண்ணு ஜானகியக் காணோம்.?” என்று ஒரு ஆசிரியர் கேட்க, “இல்ல, அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான் அவ வரல.” என்று சமாளித்தாள் மகேஸ்வரி.

“சரி, நீங்க வரணும்னு தான் நாங்க டிவி, பத்திரிக்கை எல்லார்கிட்டயும் வெயிட் பண்ண சொன்னோம். வாங்க அவங்களப் பார்க்கலாம்.” என்றபடி அவர்களை அழைத்தார்.

அவர் எப்போது அழைப்பார் என காத்திருந்தவர்களைப் போல் அனைவரும் ஓடி வந்து அஞ்சலியையும், அவரது பெற்றோரையும் சூழ்ந்து கொண்டனர். அனைவரும் கேட்ட கேள்விகள் அனைத்தும் கிட்டத்தட்ட, “இந்த மதிப்பெண் பெற என்ன முயற்சி எடுத்தீர்கள், யாரெல்லாம் உதவி செய்தார்கள்” என ஒரே மாதிரி தான் இருந்தது.

“நான் நல்லா கான்செண்ட்ரேட் பண்ணி படிச்சேன். எனக்கு என்னோட அம்மா, அப்பா, டீச்சர்ஸ் எல்லாருமே ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க. இல்லன்னா நான் இந்தளவுக்கு மார்க் எடுத்திருக்க முடியாது.” என்றாள்.

அவளின் பதிலில் அனைவருமே சந்தோஷமடைந்தனர். அப்படியே பேசிக்கொண்டுவிட்டு மூவரும் கிளம்பினர். வரும் போது இனிப்பையும் கொஞ்சம் வாங்கிக்கொண்டனர். அவர்கள் வரும் போது ஜானகி வாசலில் இல்லை. ஆனால், வீடு அப்படியே திறந்திருந்தது. உள்ளே எதும் இருப்பாள் என நினைத்தார்கள்.

கணேசன் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சென்று விஷயத்தைச் சொல்லி இனிப்பை கொடுத்துவிட்டு வரச் சென்றார். அஞ்சலியும், மகேஸ்வரியும் உள்ளே சென்று பார்த்த போது அவள் வீட்டிற்கு உள்ளேயும் இல்லை. எங்கே சென்றிருப்பாள் எனப் பார்த்த போது, அவள் கிணத்தடியில் இருந்தாள்.

ஏதோ கப்பல் மூழ்கியதைப் போல கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு, எதையோ யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் ஜானகி. மகேஸ்வரி அவளைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அஞ்சலி அவளிடம் சென்றாள்.

அருகில் சென்றவள், “அக்கா. ஏன் கா, இங்க வந்து உட்கார்ந்திருக்க.? ஏன் ஸ்கூலுக்கு வரல.? நீயும் வருவன்னு எதிர்பார்த்தேன் தெரியுமா.? இந்தாக்கா, ஸ்வீட் எடுத்துக்கோ.” என்றாள் வெள்ளந்தியாக.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எதுக்கு.? நீ தான் டிஸ்டிரிக்ட் ஃபர்ஸ்ட் வந்துட்டியே.? அதனால, அங்க நீ பந்தா பண்ணிட்டு இருப்ப. என்னையெல்லாம் மதிப்பியா.? எனக்கு எதுக்கு அதெல்லாம். உன் ஸ்வீட்ட நீயே வைச்சுக்கோ.” என்று அவளிடம் நீட்டியதை அவள் பக்கமே தள்ளினாள்.

“ஏன்கா, இப்படியெல்லாம் பேசற.? நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்.. நீயும் வந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். ஒண்ணு தெரியுமா.? நான் என்னதான் டென்த்ல இந்த மார்க் வாங்கிருந்தாலும், நீ +2 ல மார்க் வாங்கினத கம்பேர் பண்ணும் போது கம்மி தான். அதுல வாங்கிறது தான் பெரிய விஷயம்.” என்றாள்.

“ஹூம்ம். என்ன.? என்னை சமாதானப்படுத்த ட்ரைப் பண்றியா.? நீ சொன்னாலும், சொல்லாட்டியும் அது தான் உண்மை. அதனால ரொம்ப ஆடாத.” என்றாள் திரும்பவும் திமிராக. அஞ்சலிக்கோ இதற்கு மேல் என்ன பேசி இவளை திருப்திப்படுத்துவது என்று யோசித்தாள்.

அடுக்கலையில் இருந்த மகேஸ்வரி, “அஞ்சலி, நீ என்ன சொன்னாலும் மேடம் ஒத்துக்க மாட்டாங்க. நாம பாட்டி வீட்டுக்கு போகணும். நேரத்த வீணடிக்காம கிளம்பு. விஷயம் கேள்விப்பட்டா, அவங்களாவது ரொம்ப சந்தோஷப்படுவாங்க.” என்றாள் ஜானகியைக் குத்திக்காட்டியவாறே.

அவளை முறைத்த ஜானகி இவளிடம் திரும்பி, “போங்க மேடம், அதான் கூப்பிடறாங்கல்ல. போய் ஊருக்கே தண்டோரா போட்டுட்டு வாங்க” என்றபடி திரும்பவும் அங்கேயே, உட்கார்ந்து விட்டாள்.

கணேசன் வந்ததும், அவரிடம் சொல்லி விட்டு அவர்கள் மணிமேகலை வீட்டிற்கு கிளம்பினர். அங்கே சென்றதும், இவர்கள் உள்ளே வருவதைப் பார்த்த மணிமேகலை, “ஏய்.. அஞ்சலி வா வா. வா மகேஸூ. அத்த, மாமா, அம்சா, யாரு வந்திருக்கா பாருங்க.” என்று உற்சாகத்துடன் உள்ளே வரவேற்றாள்.

கொல்லைப்புறம் இருந்த முருகப்பனும், தெய்வானையும் மணிமேகலையின் குரல் கேட்டு உள்ளே வந்தனர். அம்சாவும் அறையில் இருந்து வெளியே வந்தாள். “ஏய். அஞ்சலி, அத்த, வாங்க.” என்றாள் அவளும் உற்சாகத்துடன்.

“அடடே. என்ன ஒரு அதிசயம், அஞ்சலியும் வந்திருக்கா.” என்றபடியே வந்தார் முருகப்பன். அவர்கள் வந்ததும், அவர்கள் காலில் போய் விழுந்த அஞ்சலி. “என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா, பாட்டி.” என்றாள்.

“என்னமா, புதுசா எங்ககிட்ட ஆசிர்வாதமெல்லாம் வாங்கற.? இன்னைக்கு உன்னுடைய பிறந்தநாளா என்ன.?” என்றார்கள் இருவரும்.

“இல்லப்பா, ஒரு சந்தோஷமான விஷயம். அஞ்சலிக்கு இன்னைகு ரிசல்ட் வந்துடுச்சு. அவ 500க்கு 489 மார்க் எடுத்து, இந்த மாவட்டத்திலேயே முதல்ல வந்திருக்கா. மாநில அளவுல நாலாவது இடம். ஸ்கூல்ல எல்லா பத்திரிக்கை, டிவி ன்னு ஒரே அமர்க்களம் தான்.” என்றாள் மகேஸ்வரி.

அவள் சொன்னதும், அனைவரும் அவளைப் பிடித்துக் கொண்டனர். மிகவும் சந்தோஷப்பட்டனர். “ஹே.. சூப்பர் அஞ்சலி. ஜானு தான் படிப்புல புலின்னு நெனச்சேன். நீ சிங்கம் போலவே.!” என்று பாராட்டினாள் அம்சவேணி.

மணிமேகலை தன் கைகளைக் கொண்டு அவளை திருஷ்டி சுற்றி தன் தலையின் இருபுறமும் வைத்து சொடக்கெடுத்தார். “அப்பா, எவ்வளவு சொடக்கு பாரேன் மகேஸூ. ஊர் கண்ணே இவ மேல தான் இருந்திருக்கும்.” என்றபடி அவளை உச்சி முகர்ந்தார்.

உள்ளே சென்ற தெய்வானை, சாமி அறையில் இருக்கும் பூஜைத் தட்டுடன் வந்து, திருநீற்றை அஞ்சலியின் நெற்றியில் இட்டார். குடும்பமே அவளைக் கொண்டாடியது. உடனே, அவளுக்கு இனிப்பு செய்ய உள்ளே ஓடினாள் மணிமேகலை.

உள்ளே மணிமேகலை செல்லும் போது, மகேஸ்வரியும் சென்றாள். “அண்ணி, உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்.” என்றாள்.

“சொல்லு மகேஸூ.” என்றாள் வேலையை கவனித்துக்கொண்டே, “அன்னைக்கு, கதிரு ஒரு விஷயம் சொன்னான். எனக்கு அது ஒத்து வருமான்னு தெரியல.”

“ம்ம்.. எல்லாம் தெரியும். அவன் அஞ்சலிய விரும்பறான். அதானே.” என்றார் சிரித்தபடி.

“என்ன அண்ணி, உங்களுக்கு முன்னாடியே தெரியுமா.? கதிர் உங்ககிட்ட சொல்லிட்டானா.?" என்றாள்.

“என்கிட்ட மட்டுமில்ல, உங்க அண்ணனத் தவிர மீதி எல்லார்கிட்டயும் சொல்லிட்டான்.” என்றாள்.

மகேஸ்வரி வாயடைத்துப் போய் பார்த்தாள். “எப்படி அண்ணி.?” என்றாள் ஆச்சர்யத்துடன்.

“என்ன எப்படி.? இதுல என்ன ஆச்சர்யம் வேண்டிக் கெடக்கு. நீயே சொன்னியாம், அவன் ஆம்பளப் பையன் சொல்ல மாட்டானா.?” என்றபடியே உள்ளே வந்தார் தெய்வானை.

அவரைப் பார்த்ததும் அமைதியாயினர் இருவரும். “ஏன், என்னாச்சு.? அப்படியே அமைதியாயிட்டிங்க. எனக்கும் தெரியும் தானே. அப்பறம் என்ன.? என்னோட பேரனும், பேத்தியும் சேர்ந்தா எங்களுக்கு சந்தோஷம் தான். நாங்க ஒண்ணும் மறுப்பு சொல்லப் போறதில்ல. ஆனா, உங்க அண்ணன் தான் என்ன சொல்வான்னு தெரியல.” என்றார் தெய்வானை.

“எனக்கோ, அவங்க அப்பாக்கோ ஆசை இல்லாம இல்ல மா. எனக்கும் அண்ண என்ன சொல்வாரோன்னு தான் பயம்” என்றாள் மகேஸ்வரி.

“அதெல்லாம் ஒரு பயமும் வேண்டாம். சதாகிட்ட நான் பேசறேன். என்ன மீறி அவன் என்ன பேசுவான். எப்படி இருந்தாலும் அஞ்சலி நம்ம வீட்டுப் பொண்ணு தான, அதனால அவன் கண்டிப்பா ஒத்துக்குவான்.” என்றபடியே முருகப்பனும் வந்தார்.

“முதல்ல அஞ்சலி படிப்ப முடிக்கட்டும், அடுத்து காலேஜ் போய் டிகிரி படிக்கணும்னு சொல்றா. அதனால, அப்பறம் எல்லாம் பார்க்கலாம் பா.” என்றாள் மகேஸ்வரி.

“ஆமாம் மாமா. நம்ம மகேஸூ சொல்றதும் சரிதான். அவ இன்னும் சின்ன பொண்ணு தானே. அவனுக்கும் இன்னும் வயசு இருக்கு. இப்போதைக்கு முதல்ல அம்சாவுக்கு கல்யாணம் ஆகட்டும். அப்பறம் ஜானகிக்கு. அதுக்கப்பறம் இவங்க கல்யாணத்த பார்த்துக்கலாம். இப்போதைக்கு ஒண்ணும் அவசரமில்ல.” என்றாள் மணிமேகலை.

“ஆமா, நீ சொல்றதும் சரிதான். கொஞ்ச நாள் கழிச்சு பாக்கலாம்.” என்றனர் முருகப்பனும், தெய்வானையும்.

எந்த ஒரு உறுதியும் இல்லாமல், இவர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று மகேஸ்வரிக்கு புரியவில்லை.

இவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, அஞ்சலியும், அம்சாவும் ஒருவரை ஒருவர் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சு செவியில் விழ அம்சா, “எங்க அண்ணன, என்ன பண்ண அஞ்சலி. எப்போப் பார்த்தாலும் உன்னப் பத்தியே தான் பேசிட்டிருக்கு. உன் மேல அவ்ளோ லவ். தெரியுமா.?” அஞ்சலியை இடித்தபடி கிண்டல் செய்தாள்.

“அக்கா. சும்மா இருங்க.” என்றபடி வெட்கப்பட்டாள் அஞ்சலி. அப்போது தான் முதல் முறையாக கதிரேசனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது அஞ்சலிக்கு. சிறிது நேரம் பேசி விட்டு, மணிமேகலை செய்து கொடுத்த இனிப்பையும் எடுத்துக்கொண்டு, இருவரும் கிளம்பினர்.

அவர்கள் வெளியே வர, கதிரேசன் சரியாக உள்ளே கேட்டினுள் நுழைந்தான். அஞ்சலிக்கு ஒரே சந்தோஷம். ஆனால், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அஞ்சலியைப் பார்த்ததும், அவன் முகத்தில் ஒரு பிரகாசம். ஆனால், பின்னால் வரும் மகேஸ்வரியைப் பார்த்ததும் அப்படியே அந்த பிரகாசம் போனது. அதை மகேஸ்வரியும் கண்டுவிட்டாள். இருந்தாலும் எப்படி பேசாமல் இருப்பது என்று கதிரேசனே ஆரம்பித்தான். “வாங்க அத்த, வா அஞ்சலி. மாமா, ஜானு நல்லா இருக்காங்களா.?” என்றான்.

“ஆங். நல்லா இருக்காங்க. நீ நல்லா இருக்கியா கதிரு.?” என்றாள் அவளும். பின்னாலேயே மணிமேகலை வந்து விஷயத்தை சொல்ல, “அப்படியா அஞ்சலி. ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள். எல்லாருக்கும் பெருமையத் தேடித் தந்திருக்க. இதே மாதிரி இன்னும் மேல படி” என்றான்.

அவளும் தலையசைத்தாள். ஆனால், எதுவும் பேசவில்லை. இருவரும் அவனிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினர். அவர்கள் வீதியில் செல்லும் போது கதிரேசன், அஞ்சலியையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கடைசியாக ஒரு முறை திரும்பிப் பார்க்க மாட்டாளா என நினைத்தான்.

வீதி முனை வரை சென்றவள், கடைசியாக அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகையுடன், தலையை ஆட்டி விட்டுச் சென்றாள். அந்தப் பார்வைக்காகவும், புன்னகைக்காகவும் தான் இத்தனை நாள் கதிரேசன் ஏங்கிக் கொண்டிருந்தான். அது எப்படியோ இன்று நடந்து விட்டது என மனதிற்குள் சந்தோஷப்பட்டான்.

(தொடரும்...)
 
Top