கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 15

Aathirai

Active member
Episode 15

அஞ்சலியின் கனவிலும், நினைவிலும் இப்போது கதிரேசனே இருந்தான். தான் எந்த ஒரு பதிலை சொல்லாவிட்டாலும், தன்னை இதுவரை அவன் தொந்தரவு செய்ததில்லை. அதே போல், குடும்பத்தார் அனைவரிடமும் சொல்லி சம்மதம் பெற்றதால் அவன் மேல் அவளுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டது.

அதன் பிறகு தான் அவளுக்கு பிரியமே ஏற்பட்டது. ஆனால், அதை இன்னும் முழுமையாக காதலா, இல்லை இந்த வயதில் ஏற்படும் ஒரு வித உணர்வா.? என்று அவள் தெரியாமல் தவித்தாள். கடவுளே இதை தீர்மானிக்கட்டும் என்று இருந்தாள். இருந்தாலும், அவனைப் பற்றிய எண்ணங்கள் அவளுக்கு வந்துகொண்டே தான் இருந்தது.

சில நிகழ்வுகள் பூமி வேகமாக சுற்றினால் எப்படி இருக்கும்.? அது போல் நடந்தது. ஜானகிக்கு அவள் நினைத்ததைப் போல் ராணிப்பேட்டை அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடம் கிடைத்தது.

ஆசிரியை வந்து விஷயத்தைச் சொன்ன போது, “ரொம்ப சந்தோஷம் டீச்சர். ஆனா, அவ எங்கள விட்டு, ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கப் போறத நினைச்சா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அங்க யாரையும் அவளுக்குத் தெரியாது. தனியா அவ என்ன பண்ணுவான்னு கொஞ்சம் பயமா இருக்கு.” என்றார் கணேசன் ஜானகியைப் பார்த்துக்கொண்டே.

ஜானகியோ அவரை முறைத்தாள், “ஆமா, நான் இந்த வீட்ல இவங்க கூட அப்படியே கொஞ்சிக் குலாவிட்டிருந்தேன். இப்போ அப்படியே பிரிஞ்சி போகப் போறேன். ஹூம்ம். போதும் டா சாமி. இந்த வீட்ட விட்டு போனா போதும்.” என்று மனதிற்குள் நினைத்தாள்.

“சார். அந்த ட்ரெயினிங் இன்ஸ்டியூட்ல சீட் கிடைக்கறது ரொம்ப கஷ்டம். ஜானு ரொம்ப லக்கி. அவளுக்கு ஈஸியா கிடைச்சிடுச்சி. நீங்க எதப் பத்தியும் கவலப்படாதீங்க. நான் அவளோட ஸ்பான்ஸர் கிட்ட பேசி எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டேன். அவள காலேஜ்ல சேர்க்கும் போது நீங்க பேரண்ட்ஸ்ங்கற முறைல அவ கூட வந்தா போதும்.” என்று நம்பிக்கை வார்த்தை உதிர்த்தார்.

அவளுக்கு தேவையானதைச் செய்ய அவளின் ஆசிரியை மூலம் ஒரு ஆதரவாளர் முன் வந்து அனைத்தையும் செய்தார். அவளைக் கல்லூரியில் சேர்ப்பதற்க்காக மட்டுமே கணேசன் அவளோடு சென்றார். வீட்டில் இருந்து கிளம்பும் போது கூட அவளுக்கு அனைவரையும் விட்டுச் செல்கிறோம் என்று எந்தவிதமான கவலையும் இல்லை. கிளம்பினால் போதும் என்று கிளம்பி விட்டாள்.

அவளை அங்கே சேர்த்து விட்டு வரும் போது, மனதே இல்லாமல் வந்தார் கணேசன். வீட்டிற்கு வந்தவர் கிட்டத்தட்ட அழுதே விட்டார். மகேஸ்வரியும், அஞ்சலியும் சேர்ந்து அவரை சமாதானப்படுத்தினர். இரண்டு நாட்கள் கழித்தே சிறிது சமாதானம் ஆனார்.

அஞ்சலியும் பதினொன்றாம் வகுப்பில், தான் எடுத்த மார்க்கிற்கு சம்பந்தமே இல்லாத வரலாறு பாடத்தை எடுத்து படித்துக்கொண்டிருந்தாள். அனைத்து ஆசிரியர்களும் அவளிடம் பேசிப் பார்த்தனர். “நீ ஏன் முதல் குரூப் எடுக்கக்கூடாது. அதை எடுத்தால், டாக்டராகவோ, அல்லது எஞ்சினியராகவோ ஆக முடியும்” என்றெல்லாம் அவளிடம் சொன்னார்கள்.

ஆனால், அவளோ தான் கலெக்டர் ஆக வேண்டும் என்றால் என்ன பாடம் படிக்க வேண்டும் என்ற தேடலில் இறங்கி, அதற்கு வரலாறு மிகவும் உதவியாக இருக்கும் எனத் தெரிந்தே அந்த குரூப்பில் சேர்ந்திருந்தாள். அது மிகவும் எளிதானதாகவே தெரிந்தது அவளுக்கு. அந்த வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே ஜானகி வந்திருப்பாள். அப்போதும், பழைய படியே தான் நடந்து கொண்டிருந்தாள். அப்படியே ஒரு வருடம் போனதே தெரியவில்லை.

எப்படியோ ஒரு வழியாக அம்சாவுக்கு, பெரிய இடத்து சம்பந்தத்தை பிடித்து விட்டார் சதாசிவம். நல்ல வசதியான குடும்பம். இரண்டு பையன்கள். தலைமுறையே உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்திருந்தனர். இரு மகன்களுமே, ஓரளவிற்கு படித்து விட்டு அவர்களது பிஸினஸையே கவனித்துக் கொண்டனர். இப்போது முதல் மகனிற்குத் தான் அம்சாவை பேசி முடித்துள்ளனர்.

அவர்களுக்கு வசதி குறைவானாலும், நல்ல குடும்பத்துப் பெண்ணாக வேண்டும் என்று எதிர்பார்த்தனர். பல இடங்களில் பார்த்தும் எந்தப் பெண்ணையும் பிடிக்காமல் போகவே, கடைசியில் அம்சாவை பிடித்துப் போனது மாப்பிள்ளைக்கு. சதாசிவத்துக்கு கை, கால் பிடிபடவில்லை. ஏற்கனவே மனிதரைக் கையில் பிடிக்க முடியாது. இப்போது பெரிய இடத்து சம்பந்தியாகப் போவதால், இன்னும் மிடுக்காகத்தான் திரிந்தார்.

மாப்பிள்ளை பார்க்கும் படலம், இரு வீட்டார் சாப்பிடும் முறை மற்றும் அனைத்து விஷயங்களுக்கும் மிகவும் முக்கியமானவர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்று முன்னரே வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி வைத்திருந்தார் சதாசிவம். செலவு அதிகமாகுமே என்ற எண்ணத்திலேயே அவர் அப்படிச் செய்தார்.

இதற்கும், கல்யாண செலவுகள் அனைத்தும் மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக்கொண்டும் அவர் செலவில் அதிக கவனமுடன் இருந்தார். சொல்லப்போனால், கணேசனை எந்த விஷயத்திலும் சேர்க்க அவர் மனம் ஒப்பவில்லை. மணிமேகலையின் கட்டாயத்தினால் மட்டுமே, அவர் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். தன் கூடப்பிறந்த தங்கை தானே என்று கூட மகேஸ்வரியை அவர் மதிக்கவில்லை.

திருமணப் பத்திரிக்கை வைக்கப் போன போது, அவர்கள் அனைவருக்கும் துணிகள் எடுத்து வைக்க வேண்டும் என்று மணிமேகலை, சதாசிவத்திடம் சண்டை போட்டு, அவரிடம் திட்டு வாங்கிக்கொண்டே சென்றார்.

முறையாக, தேங்காய், பழம், இனிப்புகள், துணிமணிகள், வெற்றிலை, பாக்கு மற்றும் பத்திரிக்கை அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாலத்தட்டில் வைத்து அவர்கள் இருவரிடமும் கொடுத்தார் மணிமேகலை. சதாசிவம் ஏதோ பெயருக்கென்று அருகில் நின்றார்.

“எதுக்கு கா, தேவையில்லாத செலவு. எங்களுக்கெல்லாம் கண்டிப்பா, துணி எடுத்துக் குடுக்கணுமா.?” என்றார் கணேசன்.

“அப்படி இல்லடா தம்பி. கல்யாணம் வந்தா, உங்க எல்லாருக்கும் கண்டிப்பா துணி எடுக்கணும்னு நாங்க எல்லாருமே முன்னாடியே முடிவு பண்ணி வைச்சிருந்தோம். உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறோம்.? இதுல என்ன இருக்கு.” என்றாள் மணிமேகலை.

“இருந்தாலும் வீண் செலவு எதுக்கு அண்ணி.? அதான் சொல்றோம். கல்யாணத்துக்கு இன்னும் செலவு இருக்கே.” என்றாள் மகேஸ்வரி.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீங்க எல்லாரும் முன்னாடியே வரணும். ஜானகியையும், அஞ்சலியையும் லீவு போட்டுட்டு வரச் சொல்லு. சரியா.” என்று மணிமேகலை சந்தோஷமாக சொல்லிக்கொண்டிருக்க, சதாசிவமோ எதுவுமே சொல்லாமல் நின்றார். அவர்ளுக்கு சங்கடமாக இருந்தது. அதைப் பார்த்த மணிமேகலை,

“ஏங்க. சொல்லுங்க. நீங்க பாட்டுக்கு பேசாம நிக்கறிங்க.” என்று அவரை இடித்தாள். அவளை முறைத்த சதாசிவம், “ஆங்.. வந்துடுங்க.” என்று கடனுக்காக சொன்னார்.

அத்தான் இப்படித்தான் என்பதால் கணேசன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், மகேஸ்வரிக்கோ பெரிய மனவருத்தமாக இருந்தது. வெளியே வந்து மணிமேகலையை திட்டினார். “அவங்களுக்கு இவ்வளவு பண்ணனும்னு சொன்னியே, என் பொண்ணுக்கு உன் தம்பி பெருசா என்ன பண்ணிறப் போறான். எப்படி இருந்தாலும் அவன் ஒண்ணும் பண்ணப் போறதில்ல. வந்து சும்மா நிக்கறதுக்கு எதுக்கு இவ்வளவு செலவு. என் பணத்த தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் செலவு பண்ற. கல்யாணம் நல்லபடியா முடியட்டும்னு பார்க்கறேன். அப்பறம் இருக்கு உனக்கு.,” என்று மிரட்டிக்கொண்டிருந்தார்.

அவர்களை வழியனுப்ப அவர்கள் அறியாமல் பின்னே வந்த மகேஸ்வரி, சதாசிவம் பேசிய அனைத்தையும் கேட்டு விட்டாள். அவளால் அழுகையை அடக்க முடியாமல் அழுதாள். அப்போதே ஒரு முடிவுக்கு வந்தாள்.

கல்யாண நாள் நெருங்கி விட்டது. ஜானகி இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்து வந்திருந்தாள். அதுவே, அதிசயம் என்று இருந்தது அவர்களுக்கு. அவளுக்கு புடவையும், அஞ்சலிக்கு தாவணி செட்டும் எடுத்திருந்தனர்.

மகேஸ்வரி, அவ்வளவு பெரிதாக எந்த ஒரு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. சற்று ஒதுங்கியே நின்றாள். ஆனால், கணேசனோ தன் மகளின் கல்யாணம் போல எண்ணி வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, அவர்கள் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதுதான் சாக்கு என்று, சதாசிவம் ஒரு வேலைக்காரனைப் போல் அவரை நடத்தினார்.

அதைப் பார்த்த மகேஸ்வரி, “ஏங்க, நீங்க ஏன் போய் அதெல்லாம் பண்றிங்க. அண்ண உங்கள எப்படி அவமானப்படுத்தறார். என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியல. தயவு செய்து நீங்க ஒதுங்கியே இருங்க.” என்றாள் அழுகையை அடக்கியவாறே.

கணேசனும் சரி என்று அமைதியாகவே இருந்தார். கல்யாண பரபரப்பில் அவர்களை யாரும் கவனிக்கவில்லை. இரவு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பச்சை வண்ண பட்டுப்புடவையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் அம்சா. மாப்பிள்ளையும் அவள் புடவைக்கு ஏற்றார் போல் உடையணிந்திருந்தார்.

ஒருபுறம் ஆர்கெஸ்ட்ராவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். மற்றொருபுறம் இரவு உணவு அறுசுவை ஏற்பாடுகள் என மாப்பிள்ளை வீட்டார் அனைத்தையும் தடபுடலாக செய்திருந்தனர். சதாசிவம் அனைத்தையும் ஏதோ தானே ஏற்பாடு செய்ததைப் போல் பந்தாவாக சொல்லிக்கொண்டிருந்தார்.

வரவேற்பில் மாப்பிள்ளை, பெண்ணை மட்டுமே பார்க்க வருவார்கள் என்றால், அன்று மேடையில் நின்ற இன்னொரு இருவர் அவர்களையும் சேர்த்து பார்க்க வைத்தனர். அது, ஜானகியும், அஞ்சலியும் தான். இருவரும் அம்சாவின் அருகிலேயே நின்றுகொண்டு வருபவர்களின் பரிசு மற்றும் மொய் கவரை வாங்கி வைத்த வண்ணம் இருந்தனர்.

ஜானகி, கத்தரிப்பூ நிற புடவையில் அழகு மயிலாய் நின்றாள். அந்தப் புடவை அவளது அழகை மேலும் மெருகேற்றிக் காட்டியது. கொஞ்சம் அழகு, நிறைய திமிரில் மிளிர்ந்தாள்.

ஜானகி அப்படி என்றால், அஞ்சலியோ கருநீல நிற பட்டு தாவணி, பாவாடையில் அழகு தேவதை போல் பார்ப்பவர் அனைவரையும் ஈர்க்கும் விதமாக அங்கே நின்று கொண்டிருந்தாள். மேடை ஏறும் அனைவர் கண்களும் அவர்களை பார்க்காமல் செல்லவில்லை. சிலர் அவர்கள் யார் என்று விசாரிக்கவும் செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க, கதிரேசனுக்கும், அஞ்சலிக்கும் காதல் கண்ணாமூச்சி ஆட்டமாய் இருந்தது அந்த நிகழ்வு. கதிரேசன் வந்திருந்த அனைத்து நண்பர்களிடம், “அதோ அங்கே நிக்கறாளே, அவதான் என் ஆளு.” என்று சைகையால் அஞ்சலியைக் காட்டினான்.

அனைவரும், “டேய். சூப்பர் மச்சான். செம்ம போ. அவங்க அக்காவும் அழகா தானே இருக்கா. அப்பறம் ஏன்டா அந்த சின்ன பொண்ண புடிச்ச.?” என்றனர்.

“டேய்.. அவளப் பத்தி தெரிஞ்சா நீங்க இப்படி பேச மாட்டிங்க. அவ சரியான திமிர் புடிச்சவ. யாரையும் மதிக்க மாட்டா. ஆனா, என் ஆளு அப்படி இல்ல. அதனால தான் டா.” என்றான் அவளைப் பார்த்துக்கொண்டே.

அஞ்சலியை பார்ப்பதற்க்காகவே, வேண்டுமென்றே அடிக்கடி மேடை ஏறினான் கதிரேசன். மாப்பிள்ளை அருகில் அவ்வப்போது போய் பேசிக்கொண்டே அவளை சைட் அடித்தான். அது, அஞ்சலிக்கு தெரிந்தாலும், அதை அவள் எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் அதை ரசித்த வண்ணம் சிரித்தாள். அவன், கீழே ஏதேனும் வேலையாக போகும் போதும், வரும் போதும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

எப்படியாவது அவளைத் தனியே சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தான். வரவேற்பு முடிந்து மாப்பிள்ளை, பெண் என அனைவரும் சாப்பிடச் செல்ல, கூடவே ஜானகியும் செல்ல, அஞ்சலி அனைத்து பரிசுப் பொருளையும் ரூமில் வைத்துவிட்டு வருவதாய் சொல்லி விட்டு சென்றாள்.

இது தான் தருணம் என எண்ணிய கதிரேசன், சரியாக அவள் போன ரூமிற்கு சென்றான். உள்ளே ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் அனைத்தையும் எடுத்து ஒரே பக்கமாக வைத்துக்கொண்டிருந்தாள். இவன் அவள் பின்னாலேயே நின்றான்.

யோரோ தன் பின்னால் நிற்பதைப் போன்று இருப்பதை உணர்ந்தவள் திடீரென்று திரும்ப, அவன் கால் தடுக்கி விழப் போனவள் இடுப்பைப் பற்றி தாங்கிப் பிடித்தான் கதிரேசன். எதிர்பாராமல் நடந்த நிகழ்வில், இருவர் கண்களும் ஒன்றை ஒன்று பறிமாறிக்கொண்டன.

சுதாரித்தவள் அவன் கைகளில் இருந்து விடுபட்டு, விலகினாள். வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க, அதை அவனிடம் காட்ட முடியாமல் ஓட நினைத்தவளின் கைகளை பிடித்து இழுத்தான் கதிரேசன்.

அவளோ, “மாமா, ப்ளீஸ். விடுங்க. நான் போகணும். யாராவது வந்துடுவாங்க.” என்றாள். அவனோ, அவளை விடுவதாய் இல்லை. அவன் கைகளோடு, அவள் கைகள் போராடிக்கொண்டிருந்தது.

அப்போது, திடீரென்று பாத்ரூம் கதவைத் திறந்தபடி வெளியே வந்தார் சதாசிவம். அதை, இருவரும் எதிர்பார்க்கவில்லை. கதிரேசன் அவள் கைகளை ஒரு வழியாக விட்டான். அஞ்சலியோ விட்டால் போதும் என்று பயத்திலேயே ஓடினாள்.

ஓடி வெளியே வந்தவள், ஜானகி நின்றுகொண்டிருந்த்து தெரியாமல் அவளை இடித்து விட்டாள். அதன் பிறகு தான் அவளைப் பார்த்தாள். அவளை முறைத்தே சாகடிப்பதைப் போல் பார்த்தாள் ஜானகி. அஞ்சலிக்கு ஏற்கனவே இருந்த பயம் இப்போது இன்னும் அதிகமானது. என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள் சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

மறுபுறம் உள்ளே சதாசிவம் கதிரேசனை கண்களால் எரித்து விடுவதைப் போல் பார்த்தார். அவனது அருகில் வந்தவர், “இது தான் நீ கல்யாண வேலையைப் பார்க்கற லட்சணமா.? போ.. போய் வேற வேலை இருந்தா பாரு.” என்று அவனிடம் கோபத்தை வெளிக்காட்டாமல் பேசி அனுப்பினார்.

அவனுக்கோ ஆச்சர்யம் தான். இந்நேரம் கன்னத்தில் ஒரு அறையாவது விழுந்திருக்க வேண்டும். ஆனால், ஏனோ சதாசிவம் எதுவும் பேசாமல் அவனை அப்படியே அனுப்பிவிட்டார். ஆனால், அதன் உள் அர்த்தம் என்னவென்று தெரியாமலேயே அவன் சென்றான். சதாசிவம் எரியும் நெருப்பில் நின்று கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தார்.

(தொடரும்...)
 
Top