Aathirai
Active member
Episode 18
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு, அது மாணவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான ஒன்று. அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை முடிவு செய்யப் போவது அதுதான். ஆனால், அது அஞ்சலியின் வாழ்க்கையைத் தீர்மானிக்குமா என்றால், அவளுக்கு அது சந்தேகம் தான்.
அவள் அப்படித்தான் அந்தப் பொதுத்தேர்வை எழுதியிருந்தாள். கதிரேசனின் நினைவில் இருந்து இன்னும் அவளால் முழுதாக மீள முடியவில்லை. அம்மாவும், அப்பாவும் உரைத்த வார்த்தைகள் தான் அவளிடம் கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையைக் காப்பாற்றியது தேர்வில்.
இந்த நான்கு மாதங்களில் பல மாற்றங்கள். அவளைக் கடந்து புயல் வேகத்தில் நடந்திருந்தது. (ஒவ்வொரு மாதமும் நடந்ததைப் பார்ப்போமா.?)
முதலில், பொதுத்தேர்வில் அஞ்சலி எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்கள் எடுக்கவில்லை. 1200க்கு 985 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தாள். பள்ளியில் அனைவருக்கு அதிர்ச்சி. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வீடு வந்து சேர்ந்தாள்.
பத்தாம் வகுப்பில் ராணியாக மகுடம் சூட்டப்பட்டவள், இன்று அடிமட்ட நிலைக்குத் தள்ளப்பட்டாள். தான் கண்ட கனவெல்லாம் இவன் ஒருவனால் பாழாகிப் போனதை எண்ணி வேதனை கொண்டாள். ஒரு நிலையிலேயே இல்லை அவள்.
“அம்மா, அப்பா, என்ன மன்னிச்சிடுங்க. என்னால இந்த தடவை நல்ல மார்க் எடுக்க முடியல. என் மனசு ஒரு நிலையில இல்ல. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.?” என்று அழுதாள்.
“பரவால்ல அஞ்சலி. உன்னோட வேதனை என்னன்னு எங்களால புரிஞ்சுக்க முடியுது. இப்போ நீ மார்க் கம்மியா எடுத்துட்ட தான். ஆனா, இதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நீ நினைக்காத. நீ இன்னும் படிக்கணும். உனக்குன்னு ஒரு லட்சியத்த வைச்சுக்கோ. அதுல உன் கவனத்த செலுத்து. அப்பறம் பாரு, மத்ததெல்லாமே உனக்கு கால் தூசியாத் தெரியும்.” என்றாள் மகேஸ்வரி.
“ஆமா அஞ்சலி மா. நீ கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு மாறணும். இன்னும் மேல படிக்கணும். பெரிய ஆளா வரணும். அது தான் எங்களுக்கு வேணும். சரியா.?” என்றார் கணேசன்.
அவள் மனதளவில் படும் வேதனைக்கு மருந்தாக, மகேஸ்வரியும், கணேசனும் அவளுக்கு ஆறுதலாக இருந்தனர்.
அடுத்து இரண்டாவது, கதிரேசனின் திருமணம். பிரம்மாண்டமாக நடந்தேறிய கதிரேசனின் திருமணத்தை அந்த ஊரே ஒரு வாரமாகப் பேசியது. அவனுக்கு வீடு, புதிய கார், மற்றும் ஏற்கனவே சொன்னது போல் ஒரு மில்லையும் அவனுக்கென்று கொடுத்து விட்டார்கள்.
ஒரே நாளில் ராஜாவாகிவிட்ட்தைப் போல் உணர்ந்தான் கதிரேசன். இதெல்லாம் அஞ்சலியைக் கல்யாணம் செய்திருந்தால் நடந்திருக்குமா.? நிச்சயம் இல்லை. அப்பா அன்று சொன்னதை யோசிக்காமல் விட்டிருந்தால், இதெல்லாம் தன் வசம் வந்திருக்குமா.? என்று அவர் சொன்னதை ஒருமுறை நினைத்துப் பார்த்தான்.
“இதோ, பாரு உனக்கு நான் நல்லது தான் பண்ணுவேன். காதல் பண்ணா, காசு வருமா.? நீ இன்னும் வேலைக்கே போயிட்டிருந்தா எப்போ சம்பாதிச்சு அவளக் கல்யாணம் பண்ணி, எப்போ முன்னேறுவ.? ஏதோ என் தங்கச்சியும், தங்கச்சி புருஷனும், கொஞ்சம் வசதியானவங்க, பொண்ணுங்களுக்கு எல்லாத்தையும் பண்ணுவாங்கன்னா கூட, நான் சரின்னு ஒத்துக்குவேன். ஆனா, அவங்க நிலைமை இந்த ஊருக்கே தெரியும். அவளும் இப்போ தான் ஸ்கூல் படிச்சிட்டு இருக்கா. அவ படிச்சு என்ன கலெக்டராவா ஆகப் போறா.? மிஞ்சி மிஞ்சிப் போனா ஏதாவது ஒரு டிகிரி படிச்சிட்டு, சொற்ப சம்பளத்துக்கு வேலைக்கு போய்ச் சேருவா. அவ்ளோதான். ஆனா, இந்த சம்பந்தத்த நீ ஒத்துக்கிட்டா, உன் வாழ்க்கை ஒரே நாள்ல ராஜா மாதிரி ஆயிடும். ரொம்ப சந்தோஷமா, யாரோட தயவும் இல்லாம, எந்தக் கவலையும் இல்லாம, முதலாளியா வாழலாம். எல்லாம் செய்யறதுக்கு அந்தப் பொண்ணு வீட்டுல ரெடியா இருக்காங்க. உன் சம்மதம் தான் முக்கியம். இனி நீ தான் யோசிச்சு முடிவெடுக்கணும்.”
இதுவே அந்த வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான் அவன் மனதைக் கலைத்தது. அவன் காதலை உதறச் செய்தது. அவனை ஒரு வாராமாய் தூங்க விடாமல் யோசிக்க வைத்தது.
தான் சம்மதிக்காமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்.? இன்னும் அதே பழைய மில்லில் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். முதலாளியிடம் கை நீட்டி சம்பளம் வாங்குவதோடு மட்டும் அல்லாமல், அவரிடம் பல நேரங்கள் திட்டும் வாங்க நேரிடும்.
ஆனால், இப்போதோ இங்கு “நானே ராஜா, நானே மந்திரி” என்று மனதிற்குள் தம்பட்டம் அடித்துக்கொண்டான். ஹூம்ம்.. ஆசை யாரைத்தான் விட்டது.
அஞ்சலி உடல்நிலை சரியில்லை என்று சொல்லி திருமணத்திற்கே போகவில்லை. அவனது முகத்தைப் பார்க்கவே அவளுக்கு ஏனோ மனமில்லை. ஜானகிக்கு அப்போது தேர்வு நேரம். அதனால், அவளும் வரவில்லை. வேறு வழியில்லாமல் தான், மகேஸ்வரியும், கணேசனும் சென்றனர்.
அங்கே மணிமேகலையைத் தவிர, அனைவரும் வெகு இயல்பாகத் தான் இருந்தனர். கதிரேசன் மிகவும் சந்தோஷமாக இருந்ததைப் பார்த்தவர்கள், இவனை நினைத்தா, தங்கள் மகள் நிதமும் வேதனைப்படுகிறாள் என்று தோன்றியது. ஒரு சின்ன குற்ற உணர்ச்சியைக் கூட அவன் வெளிப்படுத்தவில்லை. அவை எல்லாவற்றையும் அந்த திருமண ஆடம்பரம் அடக்கியது.
அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து அங்கே நடந்த அனைத்தையும் சொன்ன போது, அவளுக்குப் பேச்சே வரவில்லை. “அது எப்படி ஒரு சின்ன வருத்தம் கூட இல்லாமல் இருக்க முடியும்.? என்ன மனிதனோ.? இவனுக்காகவா, நான் தினம் தினம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.? எத்தனை முறை அழுதிருப்பேன்.? தப்பு செய்த அவனே அங்கே சிரித்துக் கொண்டிருக்கும் போது, நான் ஏன் அழ வேண்டும்.? போதும். இதற்கு மேல் இதை நினைத்து வருந்தக் கூடாது. நான் பழைய அஞ்சலியாக மாற வேண்டும்.” என்று மனதினுள் நினைத்தாள் அந்த நிமிடம்.
அதுவரை எந்த கல்லூரியிலும், அவள் எந்த ஒரு படிப்பிற்கும் விண்ணப்பிக்கவில்லை. அடுத்த நாளே, தனது வகுப்பு ஆசிரியையிடம் கேட்டு எந்தந்த கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொண்டு அந்த கல்லூரிக்குச் சென்று விண்ணப்பித்தாள்.
கடைசியில் அவளுக்கு வேலூர் அரசு கலைக் கல்லூரியில், வரலாறு படிப்பிற்கு இடம் கிடைத்தது. ஏதாவது ஒரு கல்லூரியில் படித்தால் போதும் என்று இருந்தவளுக்கு, அரசு கல்லூரியிலேயே இடம் கிடைத்தது பெரிய சந்தோஷத்தைத் தந்தது. கல்லூரிக்குச் செல்வதே, தனது லட்சியத்தின் முதல் படி என நினைத்தாள் அஞ்சலி.
முதலில் செல்லும் போதே, அந்த கல்லூரியில் தான் மைதிலி அறிமுகமானாள். அவளும் அதே வரலாறு படிக்கப் போகிறாள் என்றதும் மனம் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது. ஏனென்றால், மைதிலி வேலூரில் இருப்பவள். அஞ்சலிக்கு வேலூர் புதிது, அதே போல் கல்லூரியில் அனைவரும் புதிதாக இருப்பார்கள் என்பதால் சற்று பயந்தாள்.
அதே போல், தனது ஆசிரியையின் தோழி பூர்ணிமா என்பவர், அங்கு கல்லூரியின் விரிவுரையாளராக இருப்பதாக கேள்விப்பட்டு, அவரிடம் கொஞ்சம் பேசிப் பழகினாள். அவரும், எந்த உதவியானாலும் கேட்கச் சொல்லி மிக எளிமையாகப் பழக அவளுக்கு அங்கே, இருவர் மட்டுமே தெரிந்தவரானார்கள்.
தினமும் கல்லூரிக்குச் செல்ல எந்த பேருந்தில் பயணம் செய்வது முதல் கொண்டு, அவள் பார்த்து வைத்திருந்தாள். ஆனால், தினமும் நான்கு மணி நேரப் பயணம் போவதற்கும், வருவதற்கும்.
“அஞ்சலி, எப்படி நீ தினமும் இத்தனை மணி நேரம் பயணம் செஞ்சு வருவ.? அதுக்கே ரொம்ப சோர்ந்து போயிடுவ.” என்று கவலை கொண்டாள் மகேஸ்வரி.
“ஆமா, அஞ்சலி மா. அதனால, ஹாஸ்டல்ல வேணும்னா சேர்ந்துக்கறயா.? தினமும் போக, வரவே உன் உடம்பு கெட்டுரும்.” என்றார் கணேசன்.
அப்பா, அம்மாவின் அக்கறையை எண்ணி புன்னகைத்தவள், “இல்ல பா, எனக்கு இதுல ஒரு பிரச்சினையும் இல்ல. அந்த நேரத்த நான் படிக்கறதுக்காக யூஸ் பண்ணிக்கறேன். வீட்டுக்கு வந்து நல்லா படுத்து தூங்குனா, சரியாகிடும். அதுவும் இல்லாம, ஹாஸ்டல்லாம் போனா, செலவாகும் பா. எங்க உங்களுக்கு செலவு வைச்சிடுவனோன்னு வருத்தப்பட்டேன். நல்ல வேலையா, இந்த காலேஜ்ல சீட் கிடைச்சிடுச்சு. ஃபீஸ்சும் கம்மி. அதனால தான்.”
“அஞ்சலி, காசு செலவாகும்னு எல்லாம் நீ ரொம்ப கஷ்டப்படாத. அது எப்படியும் பாத்துக்கலாம். சொல்லு இப்போ கூட ஹாஸ்ட்டல்ல சேர்த்து விடறேன்.” என்றார் கணேசன்.
“அப்பா, அதெல்லாம் வேண்டாம் பா. எனக்கு உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு இருக்க முடியாது. தினமும் அம்மா கையால சாப்டுட்டு, நல்லா தான இருக்கேன். ஆனா, அங்க ஹாஸ்டல் போனா, நல்லா இருக்குமான்னு தெரியாது பா. எதுவும் வேணாம் சரியா. இதுல, எனக்கு எந்தக் கஷ்டமும் இல்ல.” என்று அவர்கள் மேல் உள்ள பாசத்தை வெளிப்படுத்தினாள் அஞ்சலி.
தினமும், காலை 7 மணிக்கு கிளம்பி விடுவாள், அதே போல் வருவதற்கு மாலை 7 மணி ஆகி விடும். அஞ்சலி கல்லூரி சென்ற புதிதில், பலரிடமும் பேசத் தயங்குவாள். மைதிலியும், பூர்ணிமா மேடமும் தான் அவளுக்கு பக்க பலமாக இருந்தனர்.
மைதிலி சற்று முறைத்தாலே அனைவரும் ஓடி விட வேண்டும். பின்னே, அவள் தான் போலீஸாக வேண்டும் என்பதை முழு மூச்சாகக் கொண்டவளாயிற்றே. அதற்கு முழுத் தகுதியானவளாக இருக்க வேண்டும் அல்லவா.? உடல் பலத்தோடு, மன பலமும் வேண்டும் என்று ஒட்டு மொத்த தைரியத்தையும் ஒன்றாகச் சேர்த்தவள். அவளோடு இருக்கும் போது, அஞ்சலிக்குத் தனி தைரியமே பிறக்கும்.
மூன்றாவது, ஜானகி படிப்பு முடிந்த கையோடு, அடுத்த கட்டத்துக்கு தயாரானாள். அவளுக்கு அவளுடைய ஸ்பான்ஸர் மூலமாகவே, வேலூரில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தது. அது மிகப் பெரிய விஷயம் என்று ஊரில் உள்ள அனைவரும் பேசிக்கொண்டனர்.
தன் மகளுக்கு அரசு வேலை கிடைத்தை மிகப் பெருமையாக எண்ணினார் கணேசன். ஆனால், ஜானகி எப்பொழுதும் போல தான் இருந்தாள். இப்போது அவள் நினைத்ததைப் போல் அரசு உத்தியோகம் கிடைத்து விட்டதால், அவளின் ஆட்டம் இன்னும் அதிகமானது.
அவளிடமும் கணேசன் கேட்டார். “என்ன ஜானு மா, நீயும் பஸ்ல போய்க்கிறயா அஞ்சலி கூட.?”
அவளோ, “என்னாலல்லாம் டெய்லியும் அவ்ளோ தூரம் போயிட்டு வர முடியாது. நான் என் ஃப்ரெண்டோட சேர்ந்து, லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கிக்கறேன். நான் அவ கிட்ட சொல்லிட்டேன். நானே போய் சேர்ந்துக்குவேன். நீங்க ஒண்ணும் கூட வரணும்னு அவசியம் இல்ல.” என்று எடுத்தெரிந்து பேசினாள்.
இதை மகேஸ்வரி எதிர்பார்த்தாள். அவள் பேசுவதைக் கேட்டு, கணேசனை எதுவும் பேச வேண்டாம் என்று சைகை செய்தாள். அவரும் அமைதியாக இருந்து விட்டார்.
அவள் அங்கேயே சேர்ந்து விட்டாள். அஞ்சலி, தினமும் பேருந்தில் கல்லூரிக்குச் சென்று வந்தாள். அப்படியே ஒரு மாதமானது.
ஒரு நாள், கணேசனைச் சந்தித்த கல்யாண புரோக்கர், ஜானகிக்கு ஒரு வரன் கேட்பதாகச் சொல்ல, அவர் யார் என்று விசாரித்தார். அவர்கள் ஒரு வகையில் அம்சாவின் உறவினர் என்றும், அவள் கல்யாணத்தில் ஜானகியைப் பார்த்து பிடித்துப் போனதாகவும், படித்துக்கொண்டிருந்ததால் அப்போதைக்கு விட்டுவிட்டார்கள் என்றும், இப்போது ஆர்வத்துடன் இருப்பதாக அறிந்தார்.
ஓரளவு வசதியானவர்கள், அதிகமாக எதையும் எதிர்பார்க்கவில்லை. திருமணத்திற்கு சம்மதித்தால் போதும் என்று சொல்ல, தன் மகளுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்து விட்டதாக எண்ணி அவர் சந்தோஷப்பட்டார். அவளிடம் பேச நினைத்து அவளை அந்த வாரம் வீட்டிற்கு வரச் சொன்னார் கணேசன்.
விஷயத்தைச் சொன்னதும் அதிர்ந்தவள், “என்னக் கேக்காம எதுக்கு நீங்க சம்மதம் சொன்னிங்க.?” என்றாள் கோபத்தில்.
“இல்ல, ஜானு மா. நான் விசாரிச்சுட்டேன். ரொம்ப நல்ல குடும்பம். அம்சாக்கு அமைஞ்ச மாதிரியே கொஞ்சம் வசதியானவங்க. நீ கல்யாணத்துக்கு அப்பறம் வேலைக்கு போகணும்னாலும் உன்னோட இஷ்டம்னு சொல்லிட்டாங்க. உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.” என்றார் கணேசன் அவளைச் சமாதானம் செய்ய முயன்றவாறே.
அவரை ஒரு பார்வை பார்த்தவள், “என்னால முடியாது. நான் ஒருத்தர விரும்பறேன். அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன். அதனால, நீங்க சொல்ற மாப்பிள்ளைய எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது.” என்றாள் பட்டென்று.
அவர்கள் மூவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். “ஏய். என்னடி சொல்ற.? யாருடி அது.?” என்றாள் மகேஸ்வரி.
“நான் டீச்சர் ட்ரெயினிங் போயிட்டிருந்த காலேஜ்ல, அவர் லெக்ச்சர்ரா இருந்தார். ரெண்டு பேரும் பேசிப் பழகுனதுல புடிச்சிருச்சு. அவருக்கு அப்பா, அம்மா யாரும் இல்ல. ஒரு சித்தி மட்டும் இருக்காங்க. ஆனா, அவர் தனியா தான் இருக்கார். பெரிசா குடும்பம் கிடையாது. ஆனா, வாழ்க்கை வாழறதுக்கு என்ன வேணுமோ அது அவர்கிட்ட இருக்கு. எனக்கு அது போதும்.” என்று வசன்ங்களாய்ப் பேசினாள்.
“என்னது, குடும்பமே இல்லையா.? அவன நம்பி எப்படி நீ போய் இருப்ப. நாளைக்கு நல்லது, கெட்டதெல்லாம் உனக்கு யார் சொல்லித் தருவா.?” என்றாள் மகேஸ்வரி ஆவேசமாக.
“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல. யார் தொல்லையும் இல்லாம, நாங்க சந்தோஷமா இருப்போம்.” என்றாள் ஜானகி.
அதுவரை பொறுமையாய் இருந்த கணேசன், “என்ன, குடும்பம்ங்கிறது உனக்கு தொல்லையா.? உனக்கு அதோட மதிப்பு தெரியுமா.? எந்த பாசமும், பந்தமும் இல்லாம எப்படி உன்னால வாழ முடியும். ஏற்கனவே உனக்கு அதோட அருமை புரியல. இந்த மாதிரி, குடும்பமே இல்லாத ஒருத்தன நீ கல்யாணம் பண்ணா, உறவுகளோட மதிப்பே உனக்குத் தெரியாம போயிடும். அதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்.” என்றார் முதன் முறையாக ஜானகியிடம் கோபத்தில்.
“உங்க சம்மதம் யார் கேட்டா.? நான் எனக்குப் புடிச்ச வாழ்க்கைய வாழணும்னு நெனைக்கறேன். உங்கள நினைச்சு நான் என் எதிர்காலத்த பாழாக்கிக்க மாட்டேன்.” என்றாள் விடாப்பிடியாக.
“அப்போ, எங்கள நீ மறந்துடு. நீ எங்க போய் சந்தோஷமா இருக்கணுமோ, இரு. உன்ன யாரும் தடுக்கப் போறதில்ல.” என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றார் கணேசன்.
அதைக் கேட்டதும், அவள் நிற்கவில்லை. உடனே, கிளம்ப ஆயத்தமானாள். துணி, மணிகளையெல்லாம் எடுத்து வைத்தாள். அஞ்சலி, ஜானகியிடம் மன்றாடினாள். அவளைத் தள்ளிவிட்டவள், கிளம்பியும் விட்டாள். மகேஸ்வரியோ, கணேசனிடம் சென்று சமாதானமாகப் பேசிப் பார்த்தாள். அவரும் பிடிகொடுக்கவில்லை. ஒரே நாளில் எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது.
(தொடரும்...)