கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 3

Aathirai

Active member
Episode 3

அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர், எதுவும் பேசாமல் அவரது அறைக்குச் சென்றார். தெய்வானை பேச முற்பட்டபோது, முருகப்பன் அவரைப் பிடித்து இழுத்து அமைதியாக இருக்குமாறு சொன்னார். தெய்வானை கோபத்துடனேயே உள்ளே சென்றார்.

“மணி.. காபி கொண்டா..” உள்ளே சதாசிவத்தின் குரல்.. மணிமேகலை உடனே பறந்தார்..

அவர் காபியுடன் உள்ளே செல்லும் போது, சதாசிவம் கை, கால்களை அலம்பி லுங்கிக்கு மாறி இருந்தார்.. பயத்துடன் நின்றிருந்த மணிமேகலையிடம் காபியை வாங்கி ஒரு முடக்கு குடித்தவர், “ம்ம்.. சொல்லு.. என்னாச்சு? நான் வரதுக்கு முன்னாடி என்னமோ நடந்துருக்கு.. என்ன பிரச்சினை? ஏன் மகேஸூம், அம்மாவும் அழுதுட்டிருந்தாங்க.? அப்பா முகமும் சரியில்ல..” என்று கேட்டார்.

அவர் இதைக் கேட்பார் என மணிமேகலைக்குத் தெரியும்.. ஆனால், அதை எப்படி அவரிடம் சொல்வது எனத் தயங்கி நின்றார்..“அது வந்துங்க.. அது... நம்ம மகேஸூ..” என்று இழுத்தவரை, ஒரு முறை முறைத்தார் சதாசிவம்..

இதற்கு மேல் தன் கையில் எதுவும் இல்லை என நடந்த அனைத்தையும் அவரிடம் கூறினார் மணிமேகலை.. அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர், காபியை முழுதும் குடித்துவிட்டு மகேஸ்வரியை அழைத்தார்..

என்னாகுமோ என்ற பயத்துடனே அவரிடம் சென்றாள் மகேஸ்வரி.. “அண்ணா..” என்றாள்..

“உனக்கு கணேசன, புடிச்சுருக்கா..?” என்றார். ஆனால், மகேஸ்வரி எதுவும் பேசாமல் தலையை குனிந்தவாறே நின்றாள்.

“சொல்லுமா.. உன்னத்தான் கேட்கறேன்.. பதிலே பேசாம நிக்கற??” என்றார் சற்று அதட்டலாக..

மணிமேகலை அவரை கைகளால் இடித்தாள்.. “கேட்கறார் இல்ல.. சொல்லு..” என்றார்..

“ஆமா, அண்ணா.. உங்க கல்யாணத்துல இருந்தே அவர எனக்கு மரியாதை நிமித்தமா பிடிக்கும்.. ரொம்ப எதார்த்தமான, வெள்ளந்தியான மனுஷன்.. அக்கா மேல அளவு கடந்த பாசம், அக்கறை, எந்த ஒரு பொம்பளையையும் இதுவரைக்கும் ஏறெடுத்தும் பார்த்ததில்ல.. இதவிட ஒரு ஆம்பளைக்கு என்ன லட்சணம் வேணும் அண்ணா.. அதனால தான் அவர நான் நேசிக்க ஆரம்பிச்சேன்..” என்றாள்..

ஒரு நிமிடம் யோசித்தவர்.. “நீ சொல்றதெல்லாம் சரிதான்.. அவன் ரொம்ப நல்லவன். ம்ம்ம்... சரி விடு.. நீ ஆசப்பட்டுட்ட.. அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்..” என்றார் தடாலடியாக..

மகேஸ்வரிக்கும், மணிமேகலைக்கும் அதிர்ச்சியாய் இருந்தது.. ஏனென்றால் அவர்கள் எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்று.. எப்படியோ சம்மதம் தெரிவித்ததே போதும் என்று நினைத்தனர் இருவரும்..

இவர் இப்படி ஒரு முடிவெடுப்பார் என பெற்றோர் எதிர்பார்க்கவில்லை.. “டேய் சதா.. என்னடா.. உன் தங்கச்சிய அந்த ஒண்ணும் இல்லாத வெட்டிப்பயலுக்கு கட்டிவைக்கப் போறியா..” என்று ஆவேசமாகக் கேட்டார் தெய்வானை..

“அம்மா.. அவனுக்குப் பணம் தான் இல்ல.. நல்ல குணம் இருக்கு.. மகேஸ கண்டிப்பா நல்லபடியா பாத்துக்குவான்.. நீ ஒண்ணும் பயப்படாத..” என்று ஒரே பேச்சில் தெய்வானை வாயை அடக்கினார்..

இதில் ஒரு உள்நோக்கம் இருந்தது.. ஏனென்றால், சதாசிவம் எதைச் செய்தாலும் அவருக்கு சாதகமானதையே செய்வார்.. இதில் அவர் திட்டமே வேறு.

தங்கைக்கு எப்படியும் சீர், சாமான்கள், அதுபோக பெண் வீட்டாருக்கு அது, இதுவென்று செலவு உச்சம் தொடும். இதுவே, கணேசனுக்கு பெண் கொடுத்தால் அவ்வளவாக எதுவும் செய்ய வேண்டியது இல்லை என்ற எண்ணத்தில்தான் அவர் சம்மதம் தெரிவித்தார்.. இது அவரைத் தவிர வேறொருவருக்கும் தெரியாது.. பெற்றோர் இருவரும் வேறு வழி தெரியாமல், அரை மனதுடனே சம்மதித்தனர்..

இதைக் கேள்விப்பட்ட கணேசனுக்கோ பெரிய ஆச்சர்யம்.. தன்னையும் ஒரு பெண் விரும்புகின்றாள் என்பதை நம்ப முடியாமல் இருந்தார்.. மணிமேகலை தான் அதை தெளிவுபடுத்தினார்..

அவர் மகேஸ்வரியிடம் தனியாகப் பேசினார்.. “மகேஸூ.. அக்கா என்னென்னமோ சொல்றாங்க.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. நீ, உண்மையாலுமே என்னை விரும்பறியா..?” என்றார் மகேஸ்வரியிடம் சந்தேகத்துடன்..

“ஆமா, அது உண்மைதான்.. எனக்கு உங்கள முதலில் இருந்தே பிடிக்கும்.. ஒரு தடவை நீங்க எங்க வீட்டுக்கு வந்திருந்திங்க. அப்போ, என்ன ரோட்ல யாரோ கிண்டல் பண்ணாங்கன்னு சொல்லி வீட்ல சொன்னப்ப, எல்லாரும் என்னைத்தான் திட்னாங்க.. ஆனா, நீங்க மட்டும் தான் மகேஸூ மேல எந்த தப்பும் இருக்காது. எவனோ ரோட்ல போறவன் சொன்னதுக்கு அவ என்ன பண்ணுவா? இதுல அவ தப்பு என்ன இருக்குன்னு கேட்டிங்க. அப்போவே என் மேல எவ்வளவு நம்பிக்கை உங்களுக்கு.. அதிலிருந்தே உங்கள நான் கவனிக்க ஆரம்பிச்சேன், நீங்க நடந்துக்கற விதம் என்னை ரொம்ப ஈர்க்க ஆரம்பிச்சது.. அதுக்கப்பறம் உங்கள ரொம்ப விரும்பவும் ஆரம்பிச்சுட்டேன்..” என்று வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க தான் அவர் மீது கொண்டிருந்த நேசத்தை வெளிப்படுத்தினாள் மகேஸ்வரி..

அப்போதிருந்தே மகேஸ்வரியின் மீது அவருக்கு ஒரு பற்று ஏற்பட்டது.. தன் அக்காவின் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருந்தாரோ, அதே அளவுக்கு அன்பு மகேஸ்வரியின் மீது வந்தது.. அவரை கடைசி வரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மிகப்பெரிய எண்ணம் அவருக்கு ஏற்பட்டது..

எப்படியோ ஒருவழியாக கணேசனுக்கும், மகேஸ்வரிக்கும் திருமணம் இனிதே நடந்தது.. மகேஸ்வரியும், கணேசனுக்கு ஒரு நல்ல மனைவியாக நடந்து கொண்டாள். அவரின் சம்பளம் குறைவுதான் என்றாலும் அதை வைத்து நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தனர்.

அவர்களின் அழகான வாழ்க்கைக்கு கிடைத்தவர்கள் தான் ஜானகி தேவியும், அஞ்சலி தேவியும். கணேசன் இவர்கள் இருவருக்கும் பெயர் வைத்த கதையே தனிதான்.

முதலில் பெண் குழந்தை பிறந்த போது மிகவும் சந்தோஷப்பட்டார். ஏனென்றால் அவரின் அம்மாவே அவருக்கு வந்து பிறந்ததாக எண்ணினார் அவர். அதனால், அம்மாவின் நினைவாக ஜானகிதேவி என்று அவர் பெயரையே சூட்டினார்.

அதன் பிறகு, இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த போது அவர் எதுவும் கவலை கொள்ளவில்லை. தன் இரண்டாம் மகளுக்கு அப்போதைய நடிகையான அஞ்சலி தேவியின் பெயரை சூட்டினார். அஞ்சலி தேவியின் நடிப்பு மற்றும் நடனம் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் சிறிய வயதிலிருந்து அவருடைய படங்களை விரும்பிப் பார்ப்பார். அதனால்தான் அவளுக்கு அந்தப் பெயரை சூட்டினார்.

இவையெல்லாம் மகேஸ்வரியும், மணிமேகலையும் கதை, கதையாக ஜானகிக்கும், அஞ்சலிக்கும் கூறியவை.. அஞ்சலிக்கு அவர்களின் காதல் கதை மிகவும் பிடிக்கும்.. அடிக்கடி தன் அம்மாவை சொல்ல சொல்லிக் கேட்பாள்.. அப்போதெல்லாம் கணேசன் அவர்களுக்கு ஒரு கதாநாயகனைப் போல் தெரிவார்.. அதே போல் தன் வாழ்விலும் ஒருவன் வந்தால் எப்படி இருக்கும் என அவள் யோசித்ததுண்டு.. இவை எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலியின் செல்போன் சிணுங்கியது..

நினைவு திரும்பியவள், அதை எடுத்தாள்.. மைதிலி தான் அழைத்தாள்.. “சொல்லு மைதிலி.. கிளம்பியாச்சா, இல்லையா மா??” என்றாள்..

“ஓ.. சாரி அஞ்சலி.. எப்படியோ கிளம்பிட்டோம்.. ஆனா, இங்க ஓ.எம்.ஆர் ரோட்ல பயங்கர ட்ராபிக் மா. அதில சிக்கிட்டோம்.. அதான், எதுக்கும் உனக்கு போன் பண்ணி சொல்லலாம்னு கூப்பிட்டேன்.. ஏற்கனவே லேட்.. எங்கே நீ பொறுமை இழந்து கிளம்பிடப் போறியோன்னு கூப்பிட்டேன்.” என்று கடகடவென ஒப்பித்தாள் மைதிலி..

“ஹூம்ம்.. அப்போ, எனக்குத் தெரிஞ்சு நீங்க ரெண்டு பேரும் டின்னர்க்கு தான் வருவீங்கன்னு நெனைக்கறேன்..” என்று சற்று சலித்துக்கொண்டாள் அஞ்சலி..

“ஹே.. எப்படி மா, கரெக்டா கண்டுபிடிச்ச..? கலெக்டர் அம்மான்னா சும்மாவா..?” என்று ஐஸ் வைத்தாள் மைதிலி..

“ஓ.. அப்போ பிளான் பண்ணிதான் எல்லாத்தையும் பண்றிங்க..” என்றாள் செல்ல கோபத்தில்..

“ஹே.. பாரு, பாரு.. அப்படியெல்லாம் இல்ல மா. அல்ரெடி டேபிள் புக் பண்ணியாச்சு.. சோ, அதனால அப்படி சொன்னேன்.. இந்த அருண் இருக்கானே, நைட் டின்னர் ஃபுல் கட்டு கட்டணும்னு மதியம் சாப்பிடக்கூட இல்ல.. தெரியுமா..” என்றாள் மைதிலி அருணை கிண்டல் செய்தவாறு..

இதைக் கேட்ட அருண் அவள் தலையில் செல்லமாய் தட்டினான்.. அதைக்கேட்டதும் அஞ்சலி எதிர்முனையில் சிரித்தாள்..

“சரி.. சரி.. எப்படியோ ரெண்டு பேரும் சீக்கிரம் வந்து சேருங்க.. ரொம்ப போர் அடிக்குது பா..” என்று சிணுங்கினாள் அஞ்சலி..

“ஓகே.. ஓகே மா.. ஃபைன்.. பை.. பை..” என்று தொடர்பை துண்டித்தாள் மைதிலி..

அவள் பேசி முடித்து பார்க்கும் போது கிட்டத்தட்ட இருட்டியே விட்டது.. மணி 7-ஐக் கடந்திருந்தது.. அதைக்கூட கவனிக்காமல் அவள் இருந்ததுதான் ஆச்சர்யம்.. எவ்வளவு நேரம் தான் இப்படி காத்துக்கொண்டே இருப்பது.. “ஹூம்ம்..” என சலித்துக்கொண்ட அவள் மனதில் அப்போது ஒரு பாடல் தான் நினைவுக்கு வந்தது..

“காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதடி..

பூத்திருந்து, பூத்திருந்து பூவிழி நோகுதடி..”

அஞ்சலிக்கு திக்கென்றது.. இது என்ன மாயம் நான் மனதில் நினைத்த பாடல் அங்கே பாடிக்கொண்டிருந்தது.. அப்போதும் அப்படித்தான் தனக்காகவே ஒலிக்கவிட்டதைப் போல் ஒரு பாடல்..

யாரோ தன்னை கவனிப்பதைப் போலவே அப்போதும் உணர்ந்தாள்.. அதற்குமேல் அங்கே உட்கார மனமில்லாமல் எழுந்து வேறு பக்கமாக செல்ல எண்ணினாள்..

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்தாள்.. அங்கே ஒரு தனி இருக்கையில் அமர்ந்து குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.. அப்போது சிறிய வயதில் அக்கா மற்றும் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடிய ஞாபகம் வந்தது.. தன் சிறிய வயது ஞாபகத்தை திரும்பவும் நினைவு கூர்ந்தாள்..

(தொடரும்...)
 
Top