Aathirai
Active member
Episode 4
ஜானகியும், அஞ்சலியும் பெரியவர்களாக வளரவளர படிப்பிலும், அறிவிலும் மற்றும் அழகிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம் தான்.. இருவரும் அங்கே இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தனர்.
மணிமேகலை, சதாசிவத்திற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். மகன் கதிரேசன், பத்தாவது வரை படித்துவிட்டு அதன் பிறகு, சரியாக படிப்பு வராத காரணத்தினால் சதாசிவத்திற்கு தெரிந்தவர் மில்லில் வேலைக்குச் சென்று வந்தான். மகள் அம்சவேணி, ஜானகியின் வயதுதான் அவளுக்கும். அதே பள்ளியில் தான் அவளும் படித்து வந்தாள்.
ஜானகி சற்று மிடுக்காகப் பேசுவாள்.. அவளது பாட்டி இப்படித்தான் இருப்பார், பேசுவார் என மணிமேகலையிடமும், கணேசனிடமும் எப்பொழுதோ அவர் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறார்கள்.. அதை அவள் மூலமாக நேரில் கண்டனர் இருவரும்..
அதனால், அவரது அம்மாவே பேசுவதாக எண்ணி அவளை எதுவும் சொல்லாமலேயே விட்டுவிடுவார்.. மகேஸ்வரி ஏதும் திட்டினால் கூட, “அம்மாவை எதுவும் சொல்லாதே..” என்று அதட்டுவார்..
உடனே மகேஸ்வரி, “ஆமா, ஆமா, எப்போ பாரு இப்படியே சொல்லி அவளக் கெடுத்து வைச்சிருக்கீங்க.. உங்களால தான் அவ இப்படி இருக்கா..” என கோபப்படுவாள்..
மகேஸ்வரிக்கு மாமியார் இல்லாத குறையை அவள் தீர்த்து வைப்பதாய் அனைவரும் கேலி செய்வர்.. அதனால், சற்று அகம்பாவமும் சேர்ந்தே இருந்தது ஜானகிக்கு.. தன்னை யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற திமிரில் ஊறி இருந்தாள்..
ஆனால், அஞ்சலியோ அவளின் எதிர்பதம். மற்றவர் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்து பேசுவாள்.. கணேசனின் குணம் அப்படியே அவளுக்கு.. வெள்ளந்தியான குணம், அவளை எவ்வளவு வேண்டுமென்றாலும் ஏமாற்றலாம்..
வீட்டில் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதில் அதிக பலன் உள்ளது மற்றும் பிடித்தது என அனைத்துமே ஜானகியிடம் தான் இருக்கும்.. அஞ்சலி பொதுவாக எல்லாவற்றையும் ஜானகிக்காக விட்டுக்கொடுத்துவிடுவாள்..
சில சமயம் அவள் அஞ்சலியிடம் தட்டிப்பறித்ததும் உண்டு.. பள்ளியில் கூட எவரேனும் உதவி என்று சொன்னால் போதும், முன் நின்று அவர்களுக்கு அனைத்தையும் செய்வாள் அஞ்சலி.. ஆனால், ஜானகி எவரையும் கண்டுகொள்ளமாட்டாள்..
படிப்பில் எந்த சந்தேகம் இருந்தாலும் வகுப்புக்கே பாடம் எடுப்பாள் அஞ்சலி.. ஜானகியோ, தான் மட்டுமே முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தெரிந்தால் கூட தெரியாது என நழுவி விடுவாள்..
பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் கூட அஞ்சலியிடமே அதிகம் ஒட்டிக்கொள்வர். அவர்கள் ஜானகியிடம் சண்டை போடுவதே அதிகமாக இருக்கும்.. அவர்களோடு விளையாடும் போது அஞ்சலி சந்தோஷமாக இருப்பாள். அதைப் பார்க்கும் போது ஜானகிக்கு, அஞ்சலியின் மேல் பொறாமையாக இருக்கும்..
என்னதான் தனக்கு அனைத்தும் கிடைத்தாலும், அவளைப் போல் சந்தோஷமாக இருக்க முடியவில்லையே என ஏக்கம் கொள்வாள்.. இதற்கிடையில் அவள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தாள்.. எப்படியாவது, பள்ளியில் முதல் மாணவியாக வர வேண்டும் என்று கனவில் இருந்தாள்..
படிப்பு, படிப்பு என முழு மூச்சாக இருந்தாள்.. அன்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணி இருக்கும்.. அஞ்சலியின் அலறும் சத்தம் கேட்டு, மகேஸ்வரியும், ஜானகியும் ஓடி வந்தனர்.. அவள் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.. என்னவாயிற்றோ என பதறினர்..
மகேஸ்வரி, ஜானகியிடம் அவளை பாத்ரூமிற்கு அழைத்துச் சென்று என்னவென்று பார்க்குமாறு கூறினார்.. அவளும் அழைத்துச் சென்று பார்த்தாள்.. அப்போதுதான் அது தெரிந்தது..
“அம்மா.. அம்மா..” என அழைத்தாள் ஜானகி..
பதறியபடி மனதில் ஒரு சந்தேகத்துடனேயே அங்கே ஓடினார்.. “என்னாச்சுடி.. என்ன.??”
“ஒண்ணும் பயப்படாத.. உன் சின்ன மக வயசுக்கு வந்துட்டா.. அவ்ளோதான்..” என்றாள் ஜானகி வயதானவள் தொனையில்..
“ஏய்.. உன்ன..” என்று அவளை கை ஓங்கிய மகேஸ்வரியிடம், கையை தள்ளி விட்டாள் ஜானகி.. அவள் பேச்சையும், செயலையும் சட்டை செய்யாமல் ஒருவித சந்தோஷத்தில் அஞ்சலியைப் பார்த்தாள்.. அவளோ அம்மாவின் முகத்தையே பார்க்க முடியாமல் வெட்கப்பட்டாள்.. 13 வயதில் பருவமடைந்திருந்தாள் அஞ்சலி..
“அடி என் ராஜாத்தி.. ரொம்ப சந்தோஷம்..” என்றவாறு ஜானகியிடம் அவளைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கூறினாள்.. அப்போதே அனைவரும் வீட்டில் கூடி விட்டனர்..
அப்போது தான் பணி முடிந்து வீடு திரும்பிய கணேசன், வீட்டில் கூட்டம் கூடியதைப் பார்த்து பதட்டமானார்.. ஓடி வந்த மகேஸ்வரி விஷயத்தைக் கூறினாள்.. கணேசனும் மிகவும் சந்தோஷப்பட்டார்.. அப்பொழுதே இருவரும் அக்கம், பக்கத்தினரிடம் கூறிவிட்டு, அவர் அக்கா வீட்டுக்கு கிளம்பினர்.
விஷயம் கேள்விப்பட்டதும் மணிமேகலை மற்றும் அனைவரும் மிகவும் சந்தோஷமடைந்தனர்.. ஆனால், அப்போது சதாசிவம் வீட்டில் இல்லை..
“அக்கா.. எங்க மாமாவக் காணோம்..” என்றார் கணேசன்..
“அது.. மாமா, மெட்ராஸ்க்கு வேலை விஷயமா போயிருக்காருடா தம்பி.. இந்த நேரம் பார்த்து அவர் இல்லாம போயிட்டாரு..” என்று வருத்தப்பட்டாள் மணிமேகலை..
“அண்ணா எப்போ வருவார் அண்ணி..? ஏன்னா, இன்னைக்கு ராத்திரி 9 மணிக்கு மேல குடிசை கட்ட நேரம் நல்லா இருக்குன்னு பக்கத்து வீட்டு பாட்டி சொன்னாங்க.. தாய்மாமா இல்லாம எப்படி..? ஜானகிக்கு அண்ணாதானே எல்லா முறையும் செஞ்சாரு.. அதே மாதிரி அஞ்சலிக்கும் செய்யணும் இல்ல..” என்றாள் மகேஸ்வரி..
“தெரியலயே மா.. அவர் எப்போ வருவார்னு சொல்லிட்டு போகல.. வேலை முடிஞ்சதும் வந்துடுவேன்னு மட்டும் தான் சொன்னார்.. அவர தொடர்பு கொள்ளனும்னா கூட முடியாது.. அவரே போன் பண்ணறேன்னு தான் சொன்னார்.. என்ன நம்பர்ல இருந்து கூப்பிடுவார்னு தெரியாது.. அவரா கூப்பிடும் போதுதான் சொல்ல முடியும்..” என்றாள் மணிமேகலை..
கணேசனும், மகேஸ்வரியும் செய்வதறியாது திகைத்தனர்.. அப்பொழுதுதான் தெய்வானை கூறினாள்.. “சதா இல்லன்னா என்ன, நம்ம கதிரு இருக்கான் தான.. அவன் முறைப்பையன்.. தாராளமா குடிசை கட்டலாம்.. இப்போதைக்கு சதாவ பாத்துட்டிருந்தா முடியாது.. அதனால, இப்படித்தான் பண்ணியாகனும்..” என்றாள்..
“ஆமா, அத்தை.. நீங்க சொல்றதும் சரிதான்.. இப்போதைக்கு அப்படியே பண்ணுவோம்.. நாம கிளம்பலாம்.. அஞ்சலிக்கு நான் தான தண்ணி ஊத்தணும்.. நேரம் ஆகுது.. ஏய்.. அம்சா.. வா.. தேவையான பொருள் எல்லாம் எடுக்க கொஞ்சம் உதவி செய்..” என்று அவசரப்படுத்தினாள் மணிமேகலை..
தெய்வானையும், முருகப்பனும் முன்னே செல்ல ஆயத்தமாயினர்.. சிறிது நேரத்திற்கெல்லாம் அஞ்சலிக்கு அவள் அத்தை மணிமேகலை சடங்கு நீர் ஊற்ற, அத்தை முறை பெரியவர்களும் அவளுக்கு தண்ணீர் ஊற்றினர்..
குடிசை கட்ட தென்னை ஓலை கீற்றுகள் வாங்கி வந்தனர்.. கதிரேசனுக்கு செய்ய வேண்டிய முறைகளை செய்து குடிசை கட்ட வைத்தனர்.. குடிசை கட்டும் போது அவன் கைகள் நடுங்கின.. அப்போது அவனுக்கு வயது 17..
“ஆங்.. மாப்பிள்ளை குடிசை கட்டியாச்சு.. பொண்ண கூட்டிட்டு வாங்க.. டேய்.. மாப்ள.. குடிசை கட்டுனா போதுமா.. உங்க பொண்ணையும் கட்டி குடுங்க மாமான்னு கேளு..” என்றார் உறவினர் ஒருவர்.. அதைக் கேட்டதும் கதிரேசன் வெட்கத்தில் தலை குனிந்து சிரித்தான்..
“அதோட சீர், செனத்தியெல்லாம் என்னென்ன வேணும்னு கேட்டுக்கோ.. அப்பறம் பேச்சு மாறிரப் போறாங்க..” என்றார் மற்றோருவர்.. அனைவரும் இவர்கள் உரையாடலைக் கேட்டு ஆங்காங்கே சிரித்துக் கொண்டிருந்தனர்..
“ம்ம்.. ஆமாமா.. எங்க பொண்ண கட்டிக்கணும்னா, சீர் கொண்டுவந்து கொடுத்துதான் கட்டிட்டு போகணும்..” என்றார் சித்தி முறை பெண் ஒருவர்.. இவை எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ஜானகிக்கோ எரிச்சலானது.. சப்புக் கொட்டினாள்..
ஒருவழியாக அஞ்சலியை அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.. அப்போதுதான், கதிரேசன் அவளைப் பார்த்தான்.. அவனால் நம்ப முடியவில்லை.. இது அஞ்சலி தானா.. நேற்று வரை பாவாடை சட்டையில் பார்த்த போது சின்னப் பெண்ணாகத் தெரிந்தவள், இப்போது தாவணியில் அழகு மயிலாகத் தெரிந்தாள்.. அந்த அத்தை சொல்லியது போல் இவளை சீர் கொண்டு வந்துதான் ஒருவன் கட்டிச் செல்ல வேண்டும் என நினைத்தான்.. கண்கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..
அவன் அப்படிப் பார்த்ததும் என்னவோ போல் ஆனது அஞ்சலிக்கு.. அனைவர் பார்வையை எதிர்கொள்வதை விட, கதிரேசனின் பார்வையை எதிர்கொள்வது சற்று சிரமமாகவே இருந்தது.. வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தது.. சிவந்த மேனி இன்னும் சிவப்பானது..
“ஏன் கதிர் மாமா என்னை இப்படிப் பார்க்கிறான்.. எனக்கு கூச்சமா இருக்கு.. அய்யோ கடவுளே என்னக் காப்பாத்து..” என்று மனதுக்குள் நினைத்தவாறு கடவுளை வேண்டினாள்.. அது கடவுளின் செவியில் விழுந்ததோ, என்னவோ அப்போது கதிரேசனை எவரோ அழைத்தார்.. அவன் அங்கிருந்து நகர மனமில்லாமல் சென்றான்..
அப்போது தான் மனது சற்று நிம்மதி அடைந்தது அஞ்சலிக்கு.. அவளுக்கு அப்படி என்றால், ஜானகியோ மனதில் வெம்பிக் கொண்டிருந்தாள்.. இது அவளின் பொதுத் தேர்வு படிப்புக்காக அளிக்கப்பட்ட விடுமுறை.. இந்த விடுமுறையிலா இவள் வயதுக்கு வர வேண்டும்.. தான் இந்த இடையூறுகளில் எப்படி படிப்பில் கவனம் செலுத்த முடியும்.. இதனால், இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டிற்கு எவரேனும் வந்து செல்வார்களே, இந்த லட்சணத்தில் தான் என்ன செய்வது? எப்படி படிப்பது? என்று மனதில் புழுங்கிக்கொண்டிருந்தாள்..
இரண்டொரு நாட்களில் திரும்பி வந்த சதாசிவம் விஷயம் கேள்விப்பட்டதும் சற்று கோபப்பட்டார்.. தான் இல்லாமல் அனைத்தையும் செய்து விட்டார்களே என்பதை அவரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.. அனைவரையும் வசை பாடினார்.. கதிரேசனுக்கு இருமடங்காக விழுந்தது..
“நாங்க எவ்வளவோ முயற்சி செஞ்சும் உங்கள தொடர்புகொள்ள முடியலங்க.. அதான் வேறு வழியில்லாம எல்லா சடங்கையும் நாங்களே செய்ய வேண்டியதா போயிடுச்சு..” என்று மணிமேகலை சமாதானம் சொன்னார்..
அவர் வந்துவிட்டதை அறிந்து கணேசனும், மகேஸ்வரியும் ஓடோடி வந்தனர்.. வந்தவர்களிடம் தன் திமிரை சற்று அதிகமாகவே காட்டினார் சதாசிவம்.. இருவரும் சமாதானம் சொன்னாலும் அவர் மனது ஏனோ ஏற்கவில்லை.. பெயருக்காக அவர்கள் வீட்டுக்கு வந்து சென்றார்.. அவ்வளவுதான்.. அனைவருக்கும் பெருத்த சங்கடமாகிவிட்டது.. நாளடைவில் அனைத்தும் சரியாகிவிடும் என்று விட்டுவிட்டனர்..
எப்படியோ அடித்துப் பிடித்து பொதுத்தேர்வை எழுதினாள் ஜானகி.. எல்லா பரீட்சையையும் எழுதி முடித்தாளே தவிர அவளுக்கு திருப்தியாகவில்லை.. காலாண்டு, அரையாண்டு பரீட்சையையே அவ்வளவு கவனமுடன் எழுதுவாள்.. அப்படி இருக்கும் போது இந்த பொதுத்தேர்வு அவளை கவலை கொள்ளச் செய்தது..
எதிர்பார்த்ததை விட அவளால் சரியாக தேர்வை எழுத முடியவில்லை.. அவளை விட குறைவான மதிப்பெண்கள் பெறும் மாணவ,மாணவிகள் கூட மிக சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து பயம் கொண்டாள்.. இன்னும் இரண்டு மாதத்தில் வெளிவரப் போகும் தேர்வு முடிவுக்காக காத்திருந்தாள் ஜானகி..
(தொடரும்...)