கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 5

Aathirai

Active member
Episode 5

அன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் என முன்னரே தெரிந்திருந்ததால், முன்னதாகவே 8 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டாள் ஜானகி.. அவள் பரபரப்பாக இருந்ததை வீட்டில் உள்ள அனைவரும் கவனிக்காமல் இல்லை.. ஆனால், அவள் படிப்பில் கெட்டிக்காரி என்பதால் கண்டிப்பாக நல்ல மதிப்பெண்களையே எடுப்பாள் என நம்பினர்..

காலை 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தாள் ஜானகி.. வரும் போதே சைக்கிளை அவசர அவசரமாக கீழே போட்டு விட்டு நெடுநெடுவென உள்ளே வந்தாள்.. அவள் வருவதைக் கண்ட மகேஸ்வரியும், அஞ்சலியும் ஆசையுடன் அவளிடம் வந்தனர்.

வந்தவள் என்னவோ போல் இருப்பதைப் பார்த்த இருவரும் என்னவாயிற்றோ என பதறினர்.. “ஏய்.. என்னாச்சுடி..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றார் மகேஸ்வரி..

சொன்னவரைப் பார்த்து ஒரு முறை முறைத்தாள் ஜானகி.. கண்கள் முழுதும் கோவத்தில் சிவந்திருந்தது.. “அக்கா.. ரிசல்ட் என்னாச்சு.? நீ நெனச்ச மாதிரியே மார்க் வந்திருக்கா..?” என வெள்ளந்தியாகக் கேட்ட அஞ்சலியைப் பார்த்து எரித்து விடுவதைப் போல் பார்த்தாள்..

“ஏய்.. ஏன்டி இப்படி முறைக்கற.? என்னதான் ஆச்சு? சொல்லித் தொலையேன்..” என்று கடுப்பானாள் மகேஸ்வரி..

“ம்ம்.. என்னாச்சா..?? எல்லாம் போச்சு.. இதோ இங்க எதுவுமே தெரியாத மாதிரி நிக்கறாளே இவளால தான் என்னோட கனவு, ஆசை எல்லாமே போச்சு..” என்று அஞ்சலியைப் பார்த்து கோபத்துடன் சீறினாள்..

இருவரும், என்னவென்று தெரியாமல் குழம்பி நின்றனர்.. “அக்கா.. என்னக்கா சொல்ற..? நான் என்ன பண்ணேன்..?” என்று பதறினாள் அஞ்சலி..

“ஆமா, உனக்கு ஒண்ணுமே தெரியாது.. சின்ன குழந்த.. பண்றதெல்லாம் பண்ணிட்டு.. உன்னால தான் நான் இதுவரைக்கும் எல்லாத்தையுமே இழந்துட்டேன்.. நீ இல்லாம இருந்திருந்தா எனக்கு எந்த பிரச்சினையே இருந்திருக்காது..” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பொறிந்து தள்ளினாள் ஜானகி..

“ஏய்.. நிறுத்துடி.. நானும் பார்க்கறேன், வந்ததிலிருந்து சும்மா அவளத் திட்டிட்டு இருக்க.. என்னனு சொல்லப் போறியா இல்லையா..?” என்றாள் மகேஸ்வரி..

“நான் எவ்வளவு மாசமா இந்த எக்ஸாம்க்காக கஷ்டப்பட்டு படிச்சிருப்பேன்.. கடைசி நிமிஷத்துல இவ வயசுக்கு வந்து எல்லா காரியத்தையும் கெடுத்துட்டா.. எல்லாம் இவளப் பார்க்க வரேன்னு என் படிப்பை கெடுத்துட்டாங்க.. எப்படியாவது ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரணும்னு நெனச்சேன்.. ஆனா, என்ன விட கம்மியா மார்க் வாங்குறவ இன்னைக்கு ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்டா.. அவ, 478 மார்க்.. நான் வெறும் 460 மார்க் தான்.. கிளாஸ் ஃபர்ஸ்ட் கூட இல்ல.. நான் தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவேன்னு பெருமையா சொல்லிட்டு இருந்த டீச்சர்ஸ் கூட யாருமே என்ன கண்டுக்கல.. எனக்கு எவ்வளவு அவமானமா போச்சு தெரியுமா..? எல்லாம் இவளால வந்தது..” என்று மீண்டும் அவளைத் திட்டினாள் ஜானகி.

“அக்கா.. 460 மார்க்கா.. ரொம்ப நல்ல மார்க் தானே கா.. நீ ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரலன்னா என்ன..? அதனால நீ நல்லா படிக்கறவ இல்லன்னு ஆயிடுமா..?” என்று கேள்வி கேட்டாள் அஞ்சலி.. கேட்டவளை முறைத்தாள் ஜானகி..

“ஆமா, ரொம்ப நல்ல மார்க்.. உனக்கென்ன நான் எந்த அளவுக்கு எதிர்பார்த்தேன்னு எனக்குத் தானே தெரியும்.. எல்லாம் உன்னால வந்தது.. எல்லாத்துக்கும் நீ தான் காரணம்..” என்றாள் தடாலடியாக..

“ஏய்.. நல்ல மார்க் தானேடி எடுத்திருக்க.. அப்பறம் என்ன உனக்கு..? எதிலுமே திருப்தியாக மாட்டியா..? அவ வயசுக்கு வந்த்தையெல்லாம் காரணம் சொல்ற.. இது அநியாயமா தெரியல..?” என்றாள் மகேஸ்வரி..

“ம்ம்.. என்னையே சொல்லு.. நீங்க எனக்குப் பண்ணதுதான் அநியாயம்.. எல்லாம் என் நேரம்.. உங்களுக்கு மகளா வந்து பிறந்தது தான் நான் பண்ண பாவம்.. இதே வேற வீட்ல பிறந்திருந்தா என்னை எல்லாரும் தூக்கி வைச்சு கொண்டாடிருப்பாங்க..” என்று சம்பந்தமே இல்லாமல் வாதாடினாள் ஜானகி..

“ஏய்.. ஏதோ பேசணும்னு பேசாத.. இப்போ மட்டும் என்னாச்சு.. உன்னை ஏதாச்சும் சொன்னோமா..?? நீ தான் தையத்தக்கான்னு குதிச்சிட்டிருக்க.. இதெல்லாம் உங்க அப்பா கேட்டார்னா எவ்வளவு வருத்தப்படுவார் தெரியுமா.? அவர் உன்ன தன்னோட அம்மாவா நினைக்கறார்.. ஆனா, நீ இவ்ளோ மோசமானவன்னு தெரியாம போச்சு.. எல்லாம் அவர் குடுக்கற இடம்.. அவர தான் சொல்லணும்.. ஒரு பேச்சு எதிர்த்து பேசின அன்னைக்கே அதட்டியிருந்தா நீ இந்தப் பேச்செல்லாம் பேசுவயா.?” என்றாள் மகேஸ்வரி கோபம் குறையாமல்..

“ஓ.. அப்போ என்ன அடிமை மாதிரி இருக்கணும்னு சொல்றியா..? யார் என்ன சொன்னாலும் காதில வாங்கிக்காம, எதுவும் பேசாம இருந்தா தான் மதிப்பா..? கேள்வி கேட்டா தப்பு இல்ல..” என்று ஆவேசமாக பேசியவளின் கையைப் பிடித்து இழுத்த மகேஸ்வரி,

“ஏய்.. இதுக்கும் மேல பேசின, உனக்கு மரியாதை இல்ல.. கம்முன்னு அக்கடான்னு போய் உட்காரு.. நீயும் ஆச்சு, உன் மார்க்கும் ஆச்சு.. என்னமோ பண்ணித் தொலை..” என்று சற்று கோபத்தில் தள்ளிவிட்டுச் சென்றார்..

“என்னையேன் அக்கடான்னு உட்கார சொல்ற.. நான் அப்படித்தான் பேசுவேன்.. என்னை யாரலும் அடக்க முடியாது..” என்று பேசிக்கொண்டே இருந்தாள் ஜானகி..

“அக்கா.. ப்ளீஸ் கா.. கோபப்படாதே கா.. நீ இப்ப சந்தோஷமா இருக்கணும்.. ஆனா, ஏன் இவ்ளோ கோபப்படறே.. டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரலன்னா, நீ நல்லா படிக்கறவ இல்லன்னு ஆயிடுமா..?? ப்ளஸ் டூ ல கண்டிப்பா நீ தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவ.. நீ வேணும்னா பாரேன்..” என்று அவளை சமாதானம் செய்ய முயன்றாள் அஞ்சலி..

அவளைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட ஜானகி, “அம்மா.. தாயே.. நீ இப்போ பண்ணதே போதும்.. இதுல ப்ளஸ் டூக்கு வேற போயிட்ட.. உன் வேலை என்னவோ அத மட்டும் பாரு.. நீ எனக்கு ஒண்ணும் சர்டிபிகேட் குடுக்க வேண்டாம்..” என்று முகத்தில் அறைந்தால் போல் பேசியவளிடம் இனி பேசி பயணில்லை என அமைதியானாள் அஞ்சலி..

“அஞ்சலி.. நீ எதுவும் சொல்லாத.. நமக்கு பொல்லாத நேரம்.. ஏதோ பேய் பிடிச்சு ஆட்டுது.. பேசி ஒண்ணும் பிரயோஜனம் இல்ல.. விட்டுட்டு போ.. எதையுமே காதில வாங்கிக்காத..” என்றாள் மகேஸ்வரி குத்தல் மொழியில்..

“ஓ.. அப்போ நான் பேயா.. உங்கள பிடிச்சு ஆட்டுறேனா..? எவ்வளவு நாளா மனசில இப்படியெல்லாம் நெனச்சுட்டு இருந்தீங்க..?” என திரும்பவும் ஆரம்பித்தாள் ஜானகி..

“ஏய்.. இன்னைக்குத் தாண்டி எல்லாமே புரிஞ்சுது.. இவ்ளோ நாளா தெரியாம போச்சு எங்களுக்கு.. நீ எப்படிப்பட்டவன்னு..” என்றாள் மகேஸ்வரி எரிச்சலாக..

“நானும் தான் உங்களப் புரிஞ்சுக்கிட்டேன்.. இந்த வீட்ல என்னோட இடம் என்னன்னு.. எனக்கு என்ன மரியாத இருக்கு இங்க..? மரியாத இல்லாத இடத்துல தான் இவ்ளோ நாளா இருந்திருக்கேன்..” என்று வார்த்தைகளைக் கொட்டினாள்..

“ஏய்.. இவ்ளோ நாளா உன் மேல இருந்த மரியாதைய இன்னைக்கு நீ கெடுத்துட்ட.. இதுக்கும் மேல நீ சொல்றதெல்லாம் கேட்டுட்டு நாங்க பொறுமையா இருக்க முடியாது..” என்ற மகேஸ்வரியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் அஞ்சலி..

“ம்ம்... போதும் மா.. ப்ளீஸ் நீங்களாவது விடுங்களேன்..” என்றாள் அஞ்சலி..

“ஆமா, இந்த வீட்ல நான் பொறுமையா இருந்தது தான் அதிகம்.. சும்மா பேச வந்துட்டாங்க..” என்றாள் திரும்பவும்..

“ஏய்... ஒவ்வொரு வீட்ல போய் பாரு.. அதெல்லாம் பார்க்கும் போது நீ ராணி மாதிரி தான் இந்த வீட்ல இருந்திருக்கேன்னு புரியும்..” என்று உள்ளே இருந்துகொண்டே பேசினாள் மகேஸ்வரி.

“மா.. ப்ளீஸ்.. விடுங்க.. இதுக்கும் மேல எதுவும் பேசாதீங்க..” என்று திரும்பவும் கெஞ்சினாள் அஞ்சலி..

“என்னை ஏண்டி அடக்கற.. உங்கக்காவ சொல்லு.. அவ வாய மொதல்ல மூட சொல்லு..” என்று அஞ்சலியை அதட்டினாள்..

“நான் எதுக்கு வாய மூடனும்.. நான் அப்படித்தான் பேசுவேன்..” என்று எதிர் பதில் கொடுத்தாள் ஜானகி..

அக்காவும் விட மாட்டாள், அம்மாவும் விட மாட்டாள்.. இதற்கும் மேல் தான் ஒன்றும் செய்ய முடியாது என்று தன்னைத் தானே நொந்துகொண்டாள் அஞ்சலி.. அப்பா இன்று முன்னதாகவே வருவதாக சொன்னதை நினைத்தவள், அவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.. அவர் இதையெல்லாம் கேட்டால் எவ்வளவு வருத்தப்படுவார் என்று நினைத்து கவலை கொண்டாள்..

அப்போது தான் வேலையிலிருந்து சீக்கிரம் வந்தார் கணேசன்.. உள்ளே வரும் போதே ஜானகியின் வசை பாட்டை கேட்டபடியே வந்தார்.. ஜானகி பின்புறம் கிணத்தடியில் இருந்தாள்.. ஆனாலும், அவள் சத்தம் வாசல் வரை கேட்டது..

என்னவாயிற்றோ என்று அஞ்சலியைப் பார்த்தார்.. அழுது, அழுது அவள் கன்னங்கள் சிவந்து இருந்தன.. “ஏய் அஞ்சலி மா.. என்னாச்சு டா..? ஏன் இப்படி அழுதுட்டிருக்க..? எதுக்கு ஜானகி கத்திட்டு இருக்கா.?” என்றார் பதட்டத்துடன்..

அவள் எதுவும் சொல்வதாய் இல்லை.. அடுக்கலையில் இருந்த மகேஸ்வரி தான் அவர் வந்ததும், வராததுமாக ஓடி வந்து நடந்த அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்..

கணேசனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. எப்படி ஜானகி இந்த அளவு பேசினாள் என்று புரியவில்லை.. அவள் இருந்த கிணத்தடி நோக்கி சென்றார்.. அவரைப் பார்த்த்தும் முகத்தை வேறு புறமாக திருப்பிக்கொண்டாள் ஜானகி..

“ஜானு மா.. என்னாச்சு டா..? அம்மா சொன்னா, நீ நல்ல மார்க் தானே எடுத்திருக்க.. அப்பறம் என்னடாமா..? ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தா தான் உன்ன எல்லாரும் மதிப்பாங்களா என்ன.? நீ எப்பவும் படிப்புல கெட்டிக்காரி தானேடா மா..” என்று தன் கெஞ்சல் மொழியில் சமாதானம் செய்ய முயன்றவரை ஒரு பார்வை பார்த்தாள் ஜானகி..

அவள் பார்த்த பார்வையிலேயே ஒரு மாதிரி ஆனது அவருக்கு.. “உங்களுக்கு என்ன தெரியும் படிப்பப் பத்தி.? தினமும் நான் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு படிக்கிறேன்னு தெரியுமா.? ஒரு நாளாவது அதப் பாத்திருந்தீங்கன்னா, நான் பேசறதுல உள்ள நியாயம் என்னனு தெரியும்.. அதெல்லாம் தெரியாமயே சும்மா என்ன சமாதானம் செய்யணும்னு பேசாதீங்க..” என்றாள் பட்டென்று..

அவளின் இந்த பதிலிலேயே அதிர்ந்தார் கணேசன்.. “அப்படியெல்லாம் இல்லடாமா..” என்று அவள் கைகளைப் பற்ற வந்தவரை, கைகளாலேயே உதறிவிட்டாள்.. “போதும் பா.. நீங்க எல்லாரும் இதுவரைக்கும் பண்ணதே போதும்.. என்னால முடியல.. நான் இப்படிதான், என் மனசு ஆறுற வரைக்கும் பொலம்பிக்கிட்டே இருப்பேன்.. உங்களுக்கென்ன அதப்பத்தி..? போங்க, உங்களுக்கு ஏதும் வேலை இருந்தா பாருங்க.. அம்மா, எப்படி என்னை ஏதும் கண்டுக்கறாங்களா..? அதே மாதிரியே நீங்களும் இருங்க.. என்ன கொஞ்ச நேரம் தனியா விடுங்க..” என்று திரும்பிக் கொண்டாள் ஜானகி..

அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்று கணேசன் மனதே இல்லாமல் எழுந்தார்.. அவள் பேசியதை அடுக்கலையில் இருந்தே கேட்டுக்கொண்டிருந்த மகேஸ்வரி அவளை அடித்துவிடும் நோக்கத்தில் வந்தார்.. வந்தவரை அப்படியே இழுத்துக்கொண்டு போனார் கணேசன்..

“ஏங்க.. இப்போ கூட நீங்க அவளை கண்டிக்க மாட்டிங்களா..? அவ இப்படியெல்லாம் பேச கூடாதுங்க.. எங்கள விடுங்க.. உங்கள கூட மதிக்க மாட்டிங்கறா.. ரொம்ப தப்புங்க..” என்றாள் மகேஸ்வரி அழுகையுடன்..

“இல்ல. மகேஸூ.. விடு.. அவ அப்படித்தான்.. என்ன பண்றது..?” என்றார் சலித்துக்கொண்டே..

“இப்போ கூட அவளை விட்டுக்கொடுக்க மனமில்லை உங்களுக்கு.. நீங்க மட்டும் மாறவே மாட்டிங்க..” என்று கோபித்துக்கொண்டே உள்ளே சென்றாள் மகேஸ்வரி.. அஞ்சலியோ “ஏன் பா..” என்பதைப் போல் பார்த்தாள்..

அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. தான் தான் அவளை கண்டிக்காமல் விட்டுவிட்டோமா என்ற குற்ற உணர்ச்சியில் அமர்ந்திருந்தார்.. இன்னும், அவள் குரல் உயர ஒலித்துக்கொண்டே தான் இருந்ததே தவிர நிறுத்திய பாடில்லை.. மனமுடைந்தவர், யோசித்துக்கொண்டே அப்படியே எழுந்து வெளியே சென்றார்.. அவர், செல்வதையே கலங்கிய விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சலி..

(தொடரும்...)





 
Top