கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 6

Aathirai

Active member
Episode-6

புயலடித்து ஓய்ந்தது போல் சிறிது நேரம் அமைதி நிலவியது வீட்டில்.. வாசலில் யாரோ வரும் சத்தம். அஞ்சலி எழுந்து எட்டிப் பார்த்தாள்.. அங்கே மணிமேகலையும், அம்சவேணியும் முகத்தில் சந்தோஷம் பொங்க கையில் ஒரு தூக்குபோசி சகிதமாக உள்ளே வந்தனர்..

“வாங்க அத்தை.. எப்படி இருக்கீங்க..? வாங்க அம்சா கா..” அஞ்சலி சமாளித்தவாறே அவர்களை வரவேற்றாள்..

“ஏ.. அஞ்சலி மா.. எப்படி இருக்கடா..? ஹூம்ம்.. பெரிய பொண்ணு ஆனதும், இன்னும் அழகா தெரியற.. மகேஸ திருஷ்டி சுத்தி போட சொல்லணும்..” என்றாள் மணிமேகலை அவளை உச்சி முகர்ந்தபடி..

மணிமேகலை அப்படிக் கூறியதும் இந்நிலையில் எப்படி தன் உணர்ச்சியை வெளிக்காட்டுவது என்று தெரியாமல் முகத்தை கீழே பார்த்தவாறு புன்னகைத்தாள் அஞ்சலி..

“அடடே.. வெக்கப்படறியா..? சரி,சரி.. எங்க மகேஸு, ஜானுவெல்லாம் காணோம்..” என்று தன் கண்களால் வீடு முழுதும் நோட்டமிட்டார் அவர்..

“வாங்க அண்ணி, வா அம்சா.. எப்படி இருக்கீங்க.?” என்றபடி அப்போது தான் உள்ளே இருந்து வெளியே வந்தாள் மகேஸ்வரி. அவள் சோகமாயிருந்தது மணிமேகலைக்கு தெரிந்தது.

“என்ன ஆச்சு மகேஸு.? ஏன் இப்படி இருக்க.? உடம்புக்கு ஏதாவது சரி இல்லையா.?” என்று அக்கறையுடன் கேட்டாள் மணிமேகலை.

“இல்லை அண்ணி நான் நல்லா தான் இருக்கேன்.” என்று பெயருக்கு சொன்னாள் மகேஸ்வரி.

“ஆனா பாத்தா அப்படி தெரியலையே மகேஸு.. உன் முகமே ஏதோ சொல்லுது..” என்று சந்தேகத்துடன் கேட்டாள் மணிமேகலை.

“ஆமா எங்க ஜானுவ காணோம். அம்சா சொன்னா அவ நல்ல மார்க் எடுத்து இருக்கான்னு. ரொம்ப சந்தோஷம். நம்ம அம்சா கூட எப்படியோ நானுறுக்கு மேல மார்க் வாங்கிட்டா. நாங்க ரொம்ப பயந்து போயிட்டோம் தெரியுமா.” என்று மணிமேகலை சொன்னதும்,

“அப்படியா அம்சா..” என்றாள் மகேஸ்வரி.

“ஆமா அத்த 410 மார்க்.” என்றாள் அம்சவேணி முகம் முழுக்க சந்தோஷத்துடன்.. அவள் அப்படிக் கூறியதும் மகேஸ்வரியும், அஞ்சலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. அந்த சந்தோஷம் ஜானகியிடம் இல்லையே என ஏக்கப்பட்டனர்..

“எப்படியோ எங்க வயித்துல பால வார்த்துட்டா. இல்லன்னா உங்க அண்ணன் கிட்ட என்னால பேசவே முடியாது. வீடே ரெண்டாகிடும். உனக்குத் தெரியாததா.?” என்றாள் மணிமேகலை சற்று பெருமூச்சை விட்டவாறே..

“ரொம்ப சந்தோஷம் அண்ணி. நல்ல மார்க் எடுத்திருக்க அம்சா.” என்றாள் மகேஸ்வரி.

“அக்கா வாழ்த்துக்கள். நல்ல மார்க் எடுத்திருக்கீங்க..” என்று தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தாள் அஞ்சலி.

“அந்த சந்தோசத்தை கொண்டாடனும் இல்ல, அதனாலதான் கேசரிய கொஞ்சமா கிளறி எடுத்துட்டு வந்தேன். இந்தா புடி..” என்று மகேஸ்வரியின் கையில் திணித்தார் மணிமேகலை.

“அதெல்லாம் சரி ஜானு எங்க ரொம்ப நேரமா காணோம்.? நானும் வந்ததிலிருந்து பாக்கறேன். எங்க இருக்கா.? அம்சா மார்க்குக்கு நான் கேசரி தான் குடுத்தேன்.. ஜானு மார்க்குக்கு நீங்க கேக் தான் வெட்டணும்..” என்று மணிமேகலை சொல்லி வாயை மூடவில்லை அவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தபடி வந்தாள் ஜானகி.

“ஏ.. ஜானு மா எப்படிடா இருக்க.? வாழ்த்துக்கள்.. ரொம்ப நல்ல மார்க் எடுத்து இருக்க.. அம்சா சொன்னா.. எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம் தெரியுமா.? நம்ம குடும்பத்துல இந்த அளவுக்கு யாருமே மார்க் வாங்கினதே இல்லை. நீ தான் முதல்ல வாங்கி இருக்க. அதுவே ரொம்ப பெரிய சந்தோஷம்..” என்று மணிமேகலை அவள் கைகளைப் பற்றியவாறே பேசிக்கொண்டிருக்க..

ஜானகியோ வந்தவர்களை வாங்க என்று கூட அழைக்கவில்லை. மணிமேகலை பேசிய எதையும் சட்டை செய்யாமல், அவளிடம் இருந்து தன் கைகளை வலுக்கட்டாயமாக விடுவித்துக்கொண்டு அவள் பாட்டுக்கு மிதிவண்டி சாவியை எடுத்தவள் வெளியே கிளம்பிவிட்டாள்.

மகேஸு தான், “ஏய் ஜானகி. நில்லு டி. எங்க போற.? அத்தை உன்கிட்ட பேசிட்டே இருக்காங்க இல்ல.? நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்.?” என்று கத்திக்கொண்டே வெளியே சென்றாள்.

ஆனால், அவள் அதை எதையுமே சட்டை செய்யாமல் கிளம்பிவிட்டாள். அனைவருக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. மகேஸ்வரிக்கும், அஞ்சலிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. உள்ளே வந்ததும் மகேஸ்வரி நடந்த அனைத்தையும் சொன்னாள்.

அவர்கள் இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.. “இது என்ன அநியாயம் மகேஸூ..? இப்படியெல்லாமா இந்தப் பொண்ணு பேசுவா.? சத்தியமா இத நான் ஜானகியிடம் எதிர்பார்க்கவே இல்ல.. அஞ்சலி வயசுக்கு வந்ததுக்கும், அவ படிப்புக்கும் என்ன சம்பந்தம்.? இதுக்கும் அவ நல்ல மார்க்கு தான் எடுத்திருக்கா. அப்பறம் என்ன.?”

“அதையேதான் அண்ணி நாங்களும் சொன்னோம். ஆனாலும், எதையுமே ஒத்துக்க மாட்டேங்குறா..” என்று வருத்தத்துடன் சொன்னாள் மகேஸ்வரி.

“ஆனா, ஸ்கூல்ல இருக்கும்போதே ஒரு மாதிரிதான் இருந்தா அத்தை. நான் கவனிச்சேன். எல்லாரும் வாழ்த்துக்கள் சொன்னப்ப, அவ யார்கிட்டயும் சரியா பேச கூட இல்ல. இப்பதான் தெரியுது என்னன்னு.” என்று தன் பங்குக்கு பேசினாள் அம்சவேணி.

“இந்தப் பொண்ண அடக்கிறது ரொம்ப கஷ்டம் மகேஸூ.. நீயும், தம்பியும் என்ன பண்ணுவீங்களோ தெரியல..”

“இதெல்லாம் கூட பரவாயில்லை அத்தை.. அப்பாவையுமே அவ மதிக்கலை. எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி பண்ணினார் தெரியுமா.? பாவம் அப்பா, ரொம்ப மனசு கஷ்டமாகி வெளியே கிளம்பி போயிட்டார்.” என்று வருத்தத்துடன் சொன்னாள் அஞ்சலி.

“அவன் என்ன பண்ணுவான் பாவம். ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருப்பான். இவதான் அவனுக்கு அம்மாவாச்சே.. எதுவுமே பேசிருக்கமாட்டான்..” என்று தன் தம்பியின் மன உணர்வை புரிந்தவளாக பேசினாள் மணிமேகலை.

“இதுக்குத்தான் அண்ணி, நான் எப்பவும் சொல்லுவேன். அவள கொஞ்சம் கண்டியுங்க. ரொம்ப திமிரா பேசறா, நடந்துக்கறான்னு.. ஆனா, பாருங்க அவரு என்னைத்தான் அடக்கப் பார்ப்பாரு.. இன்னைக்கு என்னாச்சு, பார்த்தீங்கல்ல.? இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்..?” என்று புலம்பினாள் மகேஸ்வரி..

“சரி விடு மகேஸூ.. அவள எப்படியாவது சரி பண்ணிடலாம்..” என்று வேறு வழியில்லாமல் ஆறுதலுக்காக சொன்னாள் மணிமேகலை..

அப்படியே வெகுநேரமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் நால்வரும். அதன்பிறகு மணிமேகலையும், அம்சாவும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள். ஆனால், அஞ்சலியும், மகேஸ்வரியும் எதுவும் செய்யப் பிடிக்காமல் அப்படியே அமர்ந்திருந்தனர். அவர்கள் கொண்டுவந்த கேசரி அப்படியே இருந்தது.

மணிமேகலையும், அம்சாவும் வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாக அங்கே நடந்தவற்றையெல்லாம் கதை கதையாக தெய்வானையிடமும், முருகப்பனிடமும் கூறிக் கொண்டிருந்தனர்.

“என்னடி இது கூத்தா இருக்கு.? அவ வயசுக்கு வந்தது ஒரு குத்தமா.? நம்ம ஜானகி இப்படியெல்லாமா பேசுறா.?” என்று நம்ப முடியாமல் கேட்டார் தெய்வானை.

“ஆமா அத்தை.. நான் கூட முதல்ல நம்பல. ஆனா, நாங்க போனப்பவே அவ அப்படித்தான் நடந்துக்கிட்டா.. ஒரு வார்த்தை கூட பேசல.” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் மணிமேகலை.

“ஏதோ கொஞ்சம் வாயாடி பொண்ணு, கொஞ்சம் திமிரா பேசுவானு மட்டும் தான் நினைச்சேன்.. ஆனா, இந்த அளவுக்கு பேசுவானு நான் நினைக்கவே இல்ல. சிறுசு வாயில்லா பூச்சி உன் தம்பி மாதிரியே அதான் எதுவுமே பேசாம இருந்திருக்கா.” என்றார் தெய்வானை.

“இருந்தாலும் ஜானகி இந்தளவுக்கு நடந்துக்கிட்டது ரொம்ப தப்புமா. அவள கொஞ்சம் அடக்கித்தான் வைக்கணும். நாளைக்கு ஒரு குடும்பத்துக்கு வாழப்போற பொண்ணு இப்படியா இருப்பா.? எல்லாரும் என்ன சொல்வாங்க.?” என்றார் முருகப்பன்.

இவர்கள் உரையாடல் ஒருபுறமிருக்க, அப்போதுதான் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த கதிரேசனும் இதைக் கேட்டு அதிர்ச்சியானான்..

“எனக்குத் தெரியும் மா. அந்த ஜானகி எப்பவுமே இப்படித்தான். ரொம்ப திமிர் புடிச்சவ. அவள எல்லாம் என்னைக்கும் நம்பவே கூடாது. அவ எதுக்கும் துணிஞ்சவ. பாவம் மாமாவும், அத்தையும் ரொம்ப மனசு கஷ்டப்பட்டு இருப்பாங்க இல்ல. அஞ்சலி என்ன பண்ணுவா பாவம்.? அவளப் போய் இந்த மாதிரி பேச எப்படி மனசு வருது இவளுக்கு..” என்று வருத்தப்பட்டவன் மனதில் அப்பொழுதே அஞ்சலியை பார்க்க வேண்டும் போல் இருந்தது. தன் கைகளால் அவள் முகத்தைப் பற்றி ஆறுதல் சொல்ல வேண்டும் போல் தோன்றியது.

கதிரேசனுக்கு முதலில் இருந்தே ஜானகியை அவ்வளவாக பிடிக்காது. அவளுடைய திமிரான பேச்சும், அவள் நடந்துகொள்ளும் விதமும் அவனுக்கு எரிச்சலையே தரும். ஆனால், அஞ்சலியை முதலில் இருந்தே பிடிக்கும். அவள் வயதுக்கு வந்த பிறகு அவள் மேல் இருந்த பிரியம் இப்போது காதலாக மாறிவிட்டது.

அவன் அதை நினைத்துக்கொண்டிருக்கையில், மணிமேகலை மற்றொரு விதத்தில் கவலை கொண்டாள். எப்படியாவது தன் தம்பி மகளை கதிரேசனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கற்பனை கோட்டை கட்டி வைத்திருந்தார்.

ஆனால், அவனே அப்படிக் கூறிய பிறகு அவன் மனதில் கண்டிப்பாக ஜானகி இருக்க மாட்டாள் என்று மணிமேகலைக்கு ஆணித்தரமாக தோன்றியது. ஆகவே, அந்த ஆசையை அன்றே மனதோடு புதைத்துவிட்டார்.

மாலை 5 மணி ஆகியுமே ஜானகி வீடு திரும்பாத்தால் சற்று கவலையுடன் வாசலுக்கு அவ்வப்போது சென்று சென்று பார்த்துக்கொண்டிருந்தாள் மகேஸ்வரி.. அஞ்சலியும் அம்மாவின் கவலையை மனதில் கொண்டவளாக சென்று பார்த்தாள்..

மணி 6 ஐக் கடந்தது.. வாசலில் சைக்கிள் நிறுத்தும் சத்தம். இருவரும் ஓடி வந்து எட்டிப் பார்த்தனர்.. ஜானகி முகம் முழுக்க வியர்வையுடன் உள்ளே வந்துகொண்டிருந்தாள்..

வந்தவளை மகேஸ்வரி தடுத்து நிறுத்தினாள்.. “ஏய்.. எங்கடி போன..? எவ்வளவு நேரமா வாசலுக்கு வந்து பாத்துட்டு இருக்கோம் தெரியுமா.? கொஞ்சமாது பயம் இருக்கா உனக்கு..?” என்றவளை தள்ளியவள்.

“என்ன விடு.. நான் எங்க போனா உங்களுக்கு என்ன.? போனா போதும்னு தான இருப்பீங்க.. அப்பறம் என்ன அக்கறை வேண்டிக் கெடக்கு..” என்று திரும்பவும் எரிந்து விழுந்தாள் ஜானகி..

இடையில் அஞ்சலி செய்வதறியாது நின்றுகொண்டிருந்தாள்..

“ஏய்.. கொஞ்சமாவது மனசாட்சியோட பேசு.. நீ வெளில போகும் போது நான் வாசல் வரைக்கும் வந்து உன்ன கூப்பிடல.? எவ்வளவு திமிரா போன. சரி, எங்கள விடு. அத்தையும், அம்சாவும் வந்தாங்களே, நீ நல்ல மார்க் வாங்கிருக்கன்னு எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க.? அவங்கள கொஞ்சமாவது மதிச்சியா.? அவங்க உன்ன என்ன நெனச்சிருப்பாங்க.? உனக்கு எதப்பத்தியும் கவலை இல்ல. அப்படித்தான.?” என்று அவளைப் பிடித்துக் கேட்டாள் மகேஸ்வரி..

“ஆமா.. எனக்கு எதப்பத்தியும் கவலை இல்ல.. யார் வேணா என்ன வேணும்னா நெனச்சுட்டு போகட்டும். தயவுசெய்து என்கிட்ட யாரும் பேசவே பேசாதிங்க.. என்ன தனியா விடுங்க..” என்று அவள் கைகளை உதறித்தள்ளிவிட்டு உள்ளே சென்றாள் ஜானகி..

தள்ளிய மகேஸ்வரியை தாங்கிப் பிடித்த அஞ்சலி, “அம்மா.. இதுக்கும் மேல அக்காகிட்ட எதுவும் பேச வேண்டாம். எல்லாமே சீக்கிரம் சரியாகிடும்.. சரியா.. நீ வா.” என்று அவளை ஆறுதல்படுத்தி உள்ளே அழைத்துச்சென்றாள்..

அம்மாவுக்கு சமாதானம் சொன்னாலும், தன் மனதை அவளால் ஆறுதல்படுத்த முடியவில்லை அஞ்சலிக்கு.. எப்போது அவளது அப்பா வருவார் என்று வாசலையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அஞ்சலி..

(தொடரும்...)







 
Top