கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 7

Aathirai

Active member
Episode 7

தன் தந்தையின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அஞ்சலி அப்படியே தன்னை மறந்து கதவிலேயே சாய்ந்த வண்ணம் தூங்கினாள். அதைப் பார்த்த மகேஸ்வரி, ஒரு தலையனையை அவள் அருகில் வைத்து அவளை அப்படியே படுக்க வைத்து அவள் கேசத்தை கோதி விட்டாள்..

வெள்ளந்தியான அவளின் முகத்தைப் பார்த்தவள், இந்த வயதிலேயே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அவளின் பக்குவத்தை நினைத்து பெருமிதம் கொண்டாள். அதே சமயம், இவளின் ஒரு சதவிகித பாசமோ, அன்போ, மரியாதையோ ஏன் மூத்தவளுக்கு இல்லாமல் போனது என ஏங்கினாள்..

பின்னாளில் ஜானகியை நம்பி இவளை எப்படி விடுவது.? தங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் தான் ஒன்றாகவும், உறுதுணையாகவும், குடும்ப உறவுகளோடு கலந்து கொள்ளவும் வேண்டும். அஞ்சலி மேல் எப்பொழுதும் அந்த நம்பிக்கை உண்டு.

ஆனால், ஜானகி மேல் அந்த நம்பிக்கை இன்று அடியோடு போய்விட்டது. அவள் சுயநலவாதி. தன் தேவைக்காக எதையும் செய்வாள். அவள் வாழ்க்கை மட்டுமே அவளுக்கு முக்கியம் என இப்பொழுதே நினைத்துவிட்டாள் போலும்.

எவரோ என்னவோ செய்யட்டும், தனக்கு அதனால் என்ன என்று எண்ணிக்கொண்டு, அனைவரின் நிம்மதியையும் பாழாக்கிவிட்டு உள்ளே அவள் உறங்கிக் கொண்டிருந்ததை எண்ணி வேதனையுற்றாள் மகேஸ்வரி.

அவளைப் பற்றிய யோசனையில் அஞ்சலியின் அருகில் அமர்ந்திருந்தவள் காலடி சத்தம் கேட்டு திரும்பினாள். கணேசன் அப்பொழுது தான் வந்தார். மகேஸ்வரி என்ன நினைத்தாளோ, அவர் வந்ததும் போய் அவர் மார்பினில் சாய்ந்து அழுதாள்..

அவள் நிலையை உணர்ந்தவர், “ஏய்.. மகேஸூ.. என்னமா.. இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கியா.? விடு, போகப் போக எல்லாமே சரியாகிடும். நம்ம கையில என்ன இருக்கு.?” என்றவர் தன் மார்பில் சாய்ந்தவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தினார்.

“இங்க பாரு மகேஸூ, நீ இதுக்காகவெல்லாம் கலங்கக் கூடாது. நான் தப்பு பண்ணிட்டேன் தான். நீ சொல்லும்போதே நான் அவளை கண்டிச்சிருக்கணும். இப்போ தான் அதை நினைச்சு வருத்தப்படறேன். ஆனா, என்னால ஒண்ணும் பண்ண முடியல. இருந்தாலும், எப்படியும் அவள மாத்திடுவோம்னு நம்பிக்கை இருக்கு.” என்றவரின் கைகளை விடுவித்து சிரித்தாள் மகேஸ்வரி..

அவளின் சிரிப்பில் இருந்த அர்த்தத்தை உணர்ந்தவர்,“என்ன மகேஸூ, நீ ஏன் இப்படி விரக்தியா சிரிக்கற.?” என்றார்.

“இல்லங்க. எனக்கு அந்த நம்பிக்கையே இல்ல. அவ மாற மாட்டா. எனக்குத் தெரியும்.” என்று விரக்தியுடன் சொன்னாள்.

“நீயே இப்படி சொன்னா எப்படி மா.? அவ நம்ம பொண்ணு தான. நாம எப்படியும் சரி பண்ணிடலாம்.” என்றவரை ஒரு நிமிடம் ஆழமாகப் பார்த்தாள் மகேஸ்வரி.

“ஏன் மகேஸூ, அப்படிப் பார்க்கற.? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.?” என்றார் கேள்விக்குறியுடன்.

“உங்களுக்கு இன்னும் அவளைப் பத்தி முழுசா தெரியலங்க. இவ்வளவு நாளா அவ பண்ணத விட, இன்னைக்கு பண்ணதுல தான் அவளோட முழுமையான முகம் தெரிஞ்சது. அவ எல்லாம் கடைசி வரைக்கும் மாறுவான்னு எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்ல. நாம எதுக்கு இன்னொரு குழந்தையை பெத்துக்கிட்டோம்.? நமக்குப் பின்னாடி அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா, ஒத்துமையா இருப்பாங்கன்னு தான.? ஆனா, அதுக்கு அர்த்தமே இல்லாம போச்சுங்க.. அதெல்லாம் நடக்கவே நடக்காது. அஞ்சலி தான் ரொம்ப பாவம்.” என்று தன் ஒட்டுமொத்த வருத்தத்தையும் அவரிடம் கூறினாள்.

“சரி, சரி விடு மகேஸூ.. எல்லாத்தையும் நீயே கற்பனை பண்ணிட்டு சும்மா அதையே நெனச்சு அழாதே. சரி எல்லாரும் சாப்பிட்டீங்களா, இல்லையா.?” என்று அக்கறையுடன் கேட்டார்.

“ஹூம்ம்.. இல்லைங்க சாப்பிடவே தோணலங்க. அதோ, அந்த பிடிவாதக்காரினால எல்லாரும் காலைல சாப்பிட்டது தான். மதியம் கூட எதுவுமே செய்யல. அண்ணி தான் கேசரி கொண்டு வந்தாங்க. அதுகூட அப்படியே தான் இருக்கு.” என்றாள்.

“என்ன.. அக்கா வந்தாங்களா.?” என்று உற்சாகமாகக் கேட்டார்.

“ம்ம்.. ஆமாங்க.. அம்சா 410 மார்க் எடுத்திருக்கா.. அந்த சந்தோஷத்துல நமக்கு கேசரி செஞ்சு கொண்டுவந்திருந்தாங்க.. அவங்க முகம் முழுக்க எவ்வளவு சந்தோஷம் தெரியுமா.? ஜானு மார்க் கேட்டுட்டு கூட அவ்வளவு சந்தோஷப்பட்டாங்க. நம்ம குடும்பத்துல யாருமே வாங்காத மார்க் வாங்கிருக்கான்னு. ஆனா, இங்க அப்படியே தலைகீழ். ஹூம்ம்.. அவள விட அதிகமா மார்க் வாங்கியுமே திருப்தி இல்ல. நம்ம என்ன பண்ண முடியும். எல்லாம் தலையெழுத்து..” என்று நொந்துகொண்டாள்.

“சரி, அக்காகிட்டயாவது ஜானு நல்லா பேசினாளா.?” என்றார் ஆர்வத்துடன்.

“ம்ஹூம்.. அவங்க பாட்டுக்கு சந்தோஷத்துல அவ கையப் பிடிச்சு பேசிட்டிருந்தாங்க. அவங்க கைய எடுத்துவிட்டுட்டு, சைக்கிள் சாவி எடுத்துட்டு வெளிய போய்ட்டாங்க. எனக்கு எவ்வளவு சங்கடமா போச்சு தெரியுமா.? அவங்க என்ன நெனச்சிருப்பாங்க.? அதுக்கப்பறம் நான் எதை மறைக்க முடியும். நடந்த எல்லாத்தையும் சொன்னேன். அவங்களும் ரொம்ப வருத்தப்பட்டாங்க.” என்றாள்.

“என்ன.. அக்காகிட்ட கூட ஜானுமா அப்படிதான் நடந்துக்கிட்டாளா.? ஏன் அப்படிப் பண்ணா.? நான் இந்தளவுக்கு எதிர்பார்க்கல..” என்று ஒரு நிமிடம் சற்று எரிச்சலானார்.

அதுவரை கணேசன் கோபப்பட்டோ, எரிச்சலுற்றோ மகேஸ்வரி இத்தனை வருடங்கள் பார்த்ததே இல்லை. எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அவர் அதை எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்பாரே தவிர, எப்பொழுதும் கோபப்பட்டு அதை குலைக்க மாட்டார்.

மகேஸ்வரியே கோபப்பட்டாலும், அவளை ஏதாவது பேசி சமாதானம் செய்து விடுவார். அதனால், வீட்டில் இதுவரை அவர்களுக்கிடையே சண்டை கூட இருந்ததில்லை. அத்தனை தெளிவானவர். அவரையே எரிச்சல்பட வைத்துவிட்டாள் ஜானகி.

நிலைமையை உணர்ந்தவளாய் மகேஸ்வரி, “சரி விடுங்க.. நீங்க சாப்பிட்டிங்களா.? நீங்களும் அப்போ போனவர் தானே. ஏதாவது செய்து எடுத்து வரட்டா.?” என்று அந்தப் பேச்சை மாற்றினாள்.

“இல்ல வேணாம் மகேஸூ.. நான் என்னோட நண்பன் வீட்லயே சாப்பிட்டேன். இப்போ அங்கிருந்து தான் நேரா வரேன். நல்ல சாப்பாடு.. அதுவும் தோட்டத்துக்கு நடுவுல.” என்று அவரும் வேறு பேச்சுக்கு மாறினார்.

“ஓ.. அப்படியா.. ம்ம்.. பரவாயில்லயே.. நீங்க மட்டும் எங்கள விட்டுட்டு சாப்டுட்டிங்க..?” என்றாள் மகேஸ்வரி செல்லக் கோபத்தில்.

“ஏ.. இல்ல மகேஸூ.. நானே ஏதோ கால் போன போக்கில போயிட்டிருந்தேன். அப்போ என்னோட வாத்தியார் நண்பனப் பார்த்தேன். அவனும் பள்ளிக்கூடத்துல இருந்து வந்துட்டிருந்தான். நாங்க பார்க்கறதே ரொம்ப அபூர்வம். அவ்ளோதான், என்ன விடாம புடிச்சுட்டான். என் முக அழக பார்த்ததுமே ஏதோ பிரச்சினைனு புரிஞ்சுக்கிட்டான்.. கையோட அவன் பைக்ல என்ன அவன் வீட்டுக்கு கூட்டிட்டே போயிட்டான்.” என்றார் உற்சாகம் பொங்க.

“ஓ.. ஆமா, ஆமா.. அடிக்கடி உங்க நண்பன் டீச்சரா இருக்கார்ன்னு சொல்லுவீங்களே அவருதானா.? பரவாயில்லையே, உங்க பிரச்சினைய புரிஞ்சுக்கிற அளவுக்கு இருக்காருன்னா, பெரிய விஷயம்.” என்று ஆச்சர்யப்பட்டாள்.

“ம்ம்.. அவனே தான். நம்ம புள்ளைங்க படிக்கற ஸ்கூல்ல தான் தமிழ் வாத்தியாரா இருக்கான். அவன் ரொம்ப வற்புறுத்தியதாலதான் போனேன். “ஏன் இப்படி இருக்க.? என்ன ஆச்சுன்னு கேட்டான்.” நான் இருந்த நிலைமைல போனதுமே என் மனசுல இருக்கறதெல்லாம் கொட்டினேன். அவனும் அவனால முடிஞ்ச ஆறுதல் வார்த்தைகளை சொன்னான். அதுக்கப்பறம் தான் கொஞ்சம் மனசு லேசா இருந்துச்சு..” என்றார்.

“ம்ம்.. பரவாயில்லங்க.. ரொம்ப நல்ல மனுஷன் தான். சொல்லாமயே உங்க மனநிலை என்னன்னு புரிஞ்சு வைச்சிருக்கார்.” என்றாள்.

“ம்ம்.. ஆமா மகேஸூ.. பள்ளிக்கூட்த்தில படிக்கும் போதே அவன் தான் எனக்கு எல்லா விதத்திலயும் உதவியா இருப்பான். நான் படிப்ப பாதியில விட்டப்ப, என்னை விட அவன் தான் ரொம்ப வருத்தப்பட்டான். அடிக்கடி சொல்லிட்டே இருப்பான், “நீ மட்டும் படிச்சிருந்தா, ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருப்ப. இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கமாட்டன்னு.” என்ன பண்றது என்னோட தலையெழுத்து, அதை யாரால மாத்த முடியும்.” என்று சற்று வருத்தப்பட்டார்.

“இப்போ வருத்தப்பட்டு என்னங்க பண்றது.?” என்றாள் மகேஸ்வரி.

“ஆமாமா., இப்போ ஒண்ணும் பண்ண முடியாது தான். ஆனா, அவன் கிட்ட பேசினதுல கொஞ்சம் பரவாயில்லன்னு தோணுச்சு. அப்படியே பேசிக்கிட்டே வீட்டுக்கு பக்கத்துல இருக்கற அவன் தோட்டத்துக்கு கூட்டிட்டு போனான். சுத்தியும் தென்ன மரக் காத்து அப்படியே சொர்க்கத்துல இருக்கற மாதிரி இருந்தது தெரியுமா.?” என்று உற்சாகமாக சொல்லிக்கொண்டிருந்தவரை ரசித்துக்கொண்டே “ம்ம்.. அப்பறம்..” என்று கேட்டாள் மகேஸ்வரி.

“அப்பறம் என்ன.? எல்லாருக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கத்தானே செய்யும். அவன் அவனோட பிரச்சினைகளை சொல்ல ஆரம்பிச்சான். அவனுக்கு ரெண்டு ஆம்பள பசங்க. பெரியவன் பரவால. ஏதோ ஓரளவுக்கு படிக்கிறானாம். இப்போ பிளஸ் 2 படிக்கிறதா சொன்னான். ஓரளவுக்கு அவங்க பேச்சக் கேட்டு நடந்துக்குறானாம்.. சின்னவன் தான் கொஞ்சம் சரியில்ல.. பசங்களோட சேர்ந்து எங்கெங்கயோ போறானாம், வரானாம். அவங்க ரெண்டு பேரையும் சரியா மதிக்கறதில்லை, எந்தப் பேச்சையுமே கேட்கறதில்லை போல.. கொஞ்சம் திமிராதான் நடந்துக்கிறான்னு சொல்லி அவனும் வருத்தப்பட்டான்..” என்றார்.

“சரி தான்.. வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சும்மாவா சொல்றாங்க. எல்லார் வீட்லயும் இந்த மாதிரி ஒன்னு, ரெண்டு இருக்கும் போல.” என்றாள் மகேஸ்வரி சலிப்புடன்.

“ஆமா, மகேஸூ.. அப்படியே பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல. சரி கிளம்பலாம்னு இருந்தேன், அவன் சாப்டுட்டு தான் போகணும்னு ஒரே அடம். அப்பறம் பார்த்தா, அவங்க வீட்ல சமைச்சு எடுத்துட்டே வந்துட்டாங்க. எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து தோட்டத்துலயே சாப்பிட்டோம். ரொம்ப நல்லா இருந்தது அந்த அனுபவம்.” என்று சொல்லி முடித்தார்..

“சரிங்க.. நீங்க சாப்பிட்டிங்கல்ல அதுவே போதும்.. போய் தூங்கலாம் வாங்க..” என்றாள் மகேஸ்வரி.

“மகேஸூ.. நான் மட்டும் தான் சாப்பிட்டிருக்கேன்.. நீயும், புள்ளைங்களும் இன்னும் சாப்பிடலயே.. இங்க வா. இப்படி உட்காரு..” என்று அவளை உட்கார வைத்தவர் அடுக்கலைக்கு சென்றார்.

“வீட்ல வாழைப்பழம் இருக்கா.?” என்று அங்கிருந்து குரல் கொடுத்தார்.

“இதோ, இங்க கயிறுல இருக்கு பாருங்க.. என்னங்க பண்ணப் போறீங்க.?” என்றாள்.

உள்ளே இருந்து தன் அக்காள் செய்து எடுத்து வந்த கேசரியுடன் வந்தவர், அங்கே கயிறில் மாட்டி வைத்திருந்த வாழைப்பழங்களையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வந்தார்.

“ம்ம்.. இந்தா.. கேசரி கொஞ்சம், வாழைப்பழம் கொஞ்சம்..” என்று இரண்டையும் சேர்த்து மகேஸ்வரிக்கு ஊட்டிவிட்டார்.

அதுவரை அதுபோல் ஒரு இனிப்பை சாப்பிடாத மகேஸ்வரிக்கு அது பிடித்துப்போனது. அதுவும், அதில் கணேசனுடைய அன்பு நிறைந்திருந்ததால், அது மேலும் சுவையாகத் தெரிந்தது அவளுக்கு.

நீண்ட நாள் கழித்து அவர்கள் அன்பை ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொண்ட தருணமாக அமைந்தது அந்த இரவு. ஆனால், அதைப் பிடிக்காத இரு விழிகளோ, அந்த ஜன்னல் வழியே இதை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.

(தொடரும்...)
 
Top