கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 8

Aathirai

Active member
Episode 8

அஞ்சலியின் கையைப் பற்றி இருந்தார் கணேசன். திடீரென ஒரு பெரிய ஆள், பார்ப்பதற்கு ரௌடியைப் போல் இருந்தான். வந்த வேகத்தில், கணேசனின் கையைப் பிடித்து, விடாப்பிடியாக இழுத்துக்கொண்டு போனான். அஞ்சலி “அப்பா... அப்பா..” என்று கதறினாள்..

மகேஸ்வரி ஓடி வந்தாள், அவளையும் அதே போல் அவள் கண் முன்னே இழுத்துக்கொண்டு சென்றான். திரும்பவும் கதறினாள், “அம்மா.. அம்மா... நீயும் எங்க போற.. ஏய் அவங்கள விடு..” என்றவள் அதிர்ச்சியானாள்..

அவன் பின்னே ஜானகி நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்.. அது ஆணவச் சிரிப்பு, கேலிச் சிரிப்பு.. அவளைப் பார்க்கவே கோரமாகத் தெரிந்தாள். அஞ்சலியை நோக்கி வந்தாள்.. வந்தவள் அவளை பளாரென கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.. அஞ்சலி வீரென.., “அம்ம்ம்ம்ம்மா...” என்று அலறியபடி எழுந்தாள்..

என்னவோ, ஏதோ என பதறியபடி ஓடி வந்தனர் கணேசனும், மகேஸ்வரியும். “என்னாச்சு, அஞ்சலி மா..?” என்றவர்கள் அவள் உடல் முழுக்க வியர்வையால் நனைந்திருந்ததைப் பார்த்தனர்..

ஓடிப் போய் ஒரு துண்டை எடுத்து வந்தாள் மகேஸ்வரி. “ஏ அஞ்சலி மா.. என்னாச்சு டா. ஏன் உடம்பெல்லாம் இப்படி வேர்த்துக் கொட்டுது..?” என்று பதட்டத்துடன் கேட்டார் கணேசன்.

அதற்குள் மகேஸ்வரி தான் கொண்டு வந்த துண்டினால் அஞ்சலியின் தேகத்தைத் துடைத்து விட்டாள்.. “ஏதாவது கெட்ட கனவு கண்டையா அஞ்சலி.? பாரு, எப்படி உடம்பெல்லாம் எப்படி வேர்த்திருக்குன்னு.” என்று அக்கறையுடன் துடைத்துக் கொண்டே கேட்டாள்.

“ஆஆமாமா.. ரொம்ப மோசமான கனவு.. உங்க ரெண்டு பேரையும் யாரோ என்கிட்ட இருந்து பிரிச்சு கொண்டு போகிற மாதிரி ஒரு கனவு. அய்யோ.. இப்படி ஒரு கனவ நான் இதுவரைக்கும் கண்டதில்ல..” என்று பதட்டம் குறையாமலே சொன்னாள் அஞ்சலி..

“ஒண்ணும் இல்லடா மா.. சரியா போய்டும்.. பயப்படாதே..” என்று சொன்ன கணேசன், நேராக சென்று சாமி படத்திற்கு கீழே உள்ள திறுநீறைக் கொண்டு வந்து அவள் நெற்றியில் வைத்தார்..

“எப்பவும் இல்லாம, இன்னைக்கு கதவு பக்கத்திலேயே தூங்கிட்ட. சரின்னு நானும் எழுப்ப மனசில்லாம அங்கேயே தலகாணி வைச்சு படுக்க வைச்சுட்டேன். இடம் மாறினதால கூட அப்படி கனவு வந்திருக்கும். சரி எழுந்து வா..” என்று அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு கூட்டிச் சென்றனர்.

அங்கே சென்றவள், “அம்மா.. பசிக்குது..” என்றாள்..

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “அம்மா.. திடீர்னு ரொம்பப் பசிக்குது.. ஏதாச்சும் இருக்கா..?” என்றாள் அஞ்சலி பாவமாக..

“ஹூம்ம்.. இவ்ளோ நேரம் உங்கப்பா கொடுத்த புதுவித இனிப்ப தான் நான் சாப்பிட்டு இருந்தேன். நீ கத்தற சத்தம் கேட்டு தான் ஓடி வந்தோம்..” என்றாள் மகேஸ்வரி..

“அப்படியா..? அது என்ன புதுசா இனிப்பு.. அப்பா ஏதும் கடைல இருந்து வாங்கி வந்திங்களா.?” என்றாள் அஞ்சலி.

“ம்ம்.. ஆமாமா.. ஆனா, இது வெளில இருக்க கடை இல்ல, என்னோட கடை.” என்றார் புதிருடன்.

புரியாமல் தன் அம்மாவைப் பார்த்து விழித்தாள் அஞ்சலி. மகேஸ்வரி சிரித்தாள்.. அதற்குள், மகேஸ்வரிக்கு ஊட்டி விட்டதைப் போல், அவர் அஞ்சலிக்கும் ஊட்டிவிட்டார்.

அவளும் அதை சாப்பிட்டு விட்டு, “அப்பா.. இது என்ன புதுவிதமான இனிப்பு.? கேசரி அத்தை செஞ்சது தானே.? அதோட பழமும் சேர்ந்து தந்தது ரொம்ப நல்லா இருக்கு. இத எங்கேயிருந்து அப்பா கத்துக்கிட்டீங்க.?” என்றாள் அஞ்சலி.

அவள் சொன்னதும் சிரித்தவர், “அதுவா அஞ்சலி மா.. நான் சின்ன பையனா இருக்கும்போது, என் அக்காதான என்ன வளர்த்தாங்க. அதனால, அக்கா எது செஞ்சாலும் எனக்குப் பிடிக்கும். அக்கா, கேசரி அடிக்கடி செய்வாங்க. ஒரு நாள் இதே மாதிரி கேசரி பண்ணப்போ, வீட்டுக்கு வந்த சொந்தக்கார மாமா வாழைப்பழம் இருக்கான்னு அக்கவைக் கேட்டு எடுத்து வரச் சொன்னார். நான் எப்படி ரெண்டையும் கலந்து கொடுத்தேன், அதே மாதிரி கலந்து எனக்கும், அக்காவுக்கு சாப்பிடக் கொடுத்தார்.. அப்போ தான் எங்களுக்கும் அது பிடிச்சது.” என்று அந்த வரலாற்றை சொல்லி முடித்தார் கணேசன்..

“ஓ.. அப்படியா அப்பா.. ஆனா, இத்தனை வருஷத்துல, இதுமாதிரி நீங்க சாப்பிட்டு நாங்க பார்த்ததில்லையே.?” என்றாள்.

“அதுவா மா.. உங்கம்மாக்கு அவ்வளவா கேசரி பண்ண வராது. வேற ஏதும் இனிப்பு கூட செய்வா.. ஆனா, இந்தக் கேசரி மட்டும் அண்ணி செய்யற மாதிரி வரமாட்டிங்குதுன்னு சொல்வா.. அவ பண்ணாததால, நான் சாப்பிட்டு நீங்க பார்க்க வாய்ப்பில்லை தான்.” என்றார் ஒரு கேலிச்சிரிப்புடன்.

மகேஸ்வரி செல்லமாக முறைத்தார். “ம்ம்.. ஆமா, அஞ்சலி.. எனக்கே இது இன்னைக்கு தான் தெரிஞ்சது.. இவ்ளோ நேரம் உங்கப்பாதான் எனக்கும் ஊட்டிவிட்டுட்டு இருந்தார். நீ வந்ததும் என்னை மறந்துட்டார்..” என்றாள் அவரைப் பார்த்தவாறே..

“ஏய்.. அப்படி இல்ல மகேஸூ.. புள்ள பசிக்குதுன்னு சொல்லும் போது எப்படி சும்மா இருக்கறது.? அதான் அவளுக்கு ஊட்டிவிட்டேன்.. சரி வா, வா, இந்தா உனக்கும் ஒரு வாய்..” என்று அவளிடம் கை நீட்டினார்.. அதை வாங்கிக் கொண்டாள் மகேஸ்வரி.. இருவருக்கும் மாறி, மாறி ஊட்டி விட்டார்.

“சரி.. அப்பா.. நீங்க சாப்பிடலையா.?” என்றாள் அஞ்சலி.

“ஐயோ.. அஞ்சலி மா.. நீ வேற, உங்கப்பா தோட்டத்து விருந்தில்ல சாப்டுட்டு வந்திருக்காரு. அந்தக் கதை உனக்குத் தெரியாதில்ல.?” என்றாள் மகேஸ்வரி சிரிப்புடன் அவரைப் பார்த்தவாறே.

“என்ன தோட்டத்து விருந்து.? எனக்கு ஒண்ணும் புரியலையே.?” என்றாள் அஞ்சலி குழப்பத்துடன்.

“அது அஞ்சலி மா.. நான் இன்னைக்கு என் நண்பன பார்த்தேன்.” என ஆரம்பித்து மகேஸ்வரியிடம் கூறிய அனைத்தையும் அஞ்சலியிடம் கூறினார் கணேசன்.

“ஓ.. தமிழ் வாத்தியார் வீட்லயா.? சூப்பர் அப்பா.. ரொம்ப நல்லா இருந்திருக்கும் இல்ல.?” என்று பூரிப்புடன் அஞ்சலி கேட்டது குழந்தைத்தனமாக இருந்தது அவருக்கு. “ம்ம்.. ஆமா டா..” என்று கூறினார்.. கொஞ்ச நேரமாக, அவர்களுக்கு ஊட்டி விட்டதோடு சிரிப்பு, பேச்சு என சந்தோஷமாக இருந்தனர்.

கணேசன் எதையோ நினைத்தவர், “ஹூம்ம்.. இந்த இனிப்பை நான் இன்னைக்கு ஜானுமாக்கு தான் முதல்ல கொடுத்திருக்கணும், அவளும் நம்மோடு சேர்ந்து இது மாதிரி சந்தோஷமா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.?” என்று ஜானுவை நினைத்து ஆதங்கப்பட்டார்..

மகேஸ்வரியும், அஞ்சலியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். “விடுங்க, இன்னைக்கு கொடுப்பனை இல்ல அவளுக்கு..” என்று சலித்துக் கொண்டாள் மகேஸ்வரி.

அவர் அவள் படுத்திருந்த அறையின் ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தார் கணேசன். மனது கேட்காமல், அங்கே சென்றவர், ஜானகிக்கு அருகில் போய் அமர்ந்துகொண்டு தன் மனதில் எதையோ நினைத்தவர், அவள் தலையை வருடிவிட்டார்.

அதை மகேஸ்வரி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். எத்தனை நடந்தாலும் கணேசனால், ஜானகியை விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை என்றே தோன்றியது அவளுக்கு. பெருமூச்சொன்றை விட்டபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

இரவு 10 மணி ஆகி இருந்தது. கணேசன் கயிற்றுக் கட்டிலை எடுத்துக் கொண்டு கிணத்தடிக்குச் சென்றார். அதைப் பார்த்த மகேஸ்வரி, “ஏங்க. என்ன ஆச்சு.? எதுக்கு கட்டில அங்க எடுத்துட்டு போறீங்க.?” என்றாள்.

“இல்ல மகேஸூ.. இன்னைக்கு ஒரு நாள் இங்க படுத்துக்கலாம்னு தோணுச்சு. அதான். நீ தூங்கு சரியா.” என்றார்.

அவர் அங்கே சென்று தென்னை மரத்தடியில் கட்டிலைப் போட்டு தலையனையை வைத்து அப்பாடா என்று படுத்தார்.. கிணத்தடி, தென்னை மரக் காற்று, பௌர்ணமி நிலவு என்று அந்த இரவு ரம்மியமாகத் தெரிந்தது அவருக்கு.

“அப்பா..” என்ற குரல் கேட்டு படுத்திருந்தவர், திரும்பினார்.

“அஞ்சலி மா.. என்னடா.. நீ போய் தூங்கல.?” என்றார்.

“ஏனோ, அந்த கெட்ட கனவு வந்ததுல இருந்து போய் படுத்து தூங்கவே பயமா இருக்கு பா..” என்றாள் அஞ்சலி.

“ஏ அஞ்சலி மா.. இங்க வா.. இப்படி உட்காரு.” என்று அவளை கட்டிலில் உட்கார வைத்தவர், தானும் எழுந்துகொண்டார்.

“இன்னும் அதையே நெனச்சுட்டு இருக்கே.? நீ அதை மறந்துடு. இந்த மாதிரி கனவெல்லாம் அப்பப்போ வந்து போகும். அதெல்லாம் பெருசா எடுத்துக்காதே. நாம வேற ஏதாவது பேசலாம். அப்போ உன்னோட மனசு அந்த விஷயத்த மறந்துடும். சரியா.?” என்றார்.

அவளும் அதை ஆமோதித்தவாறே புன்னகை சிந்த, “ம்ம்.. சரி பா..” என்றாள்.

“சரி.. இப்போ நீ எட்டாவது முடிச்சு ஒன்பதாம் வகுப்பு போகப் போற. அடுத்து ஒரு வருஷம் தான். அதுக்குள்ள, 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதணும். அதுக்கப்பறம் என்ன படிக்கலாம்னு உனக்கு ஏதேனும் யோசனை இருக்கா.? இல்ல இதுதான் படிக்கணும்னு முடிவு பண்ணிருக்கியா.?” என்று கேள்வி கேட்டார்..

“என்னாச்சு பா உங்களுக்கு.? திடீர்னு படிப்பப் பத்தியெல்லாம் விசாரிக்கரிங்க.?” என்றாள் கேள்விக்குறியுடன்.

“ஏன் அஞ்சலி மா.. நான் அதப் பத்தி கேட்கக் கூடாதா என்ன.?” என்றார்.

“இல்ல பா.. பொதுவா, நாங்க நல்ல மார்க் வாங்கும் போது கூட, சந்தோஷம் இதே மாதிரி படிங்கன்னு சொல்லிட்டு போயிடுவீங்க. இதுவரைக்குமே, எனக்குத் தெரிஞ்சு படிப்பப் பத்தி வீட்ல வேற ஏதும் பேசினதும் கிடையாது. அதான், எனக்கு சந்தேகமா இருக்கு..” என்றாள் அஞ்சலி.

அவள் கூறியதை நினைத்து சிரித்தவர், “உண்மை தான் அஞ்சலி மா. படிப்புக்கும், எனக்கும் வெகு தூரம். ஆனா, நீயும், ஜானுமாவும் நல்லா படிக்கறத நெனச்சி ரொம்ப சந்தோஷப்பட்டிருக்கேன். அதனால, அத பெரிய விஷயமா எடுத்துட்டது கூட கிடையாது. ஆனா, இன்னைக்குத்தான் அது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிஞ்சுக்கிட்டேன்.” என்று யோசனையுடன் அவர் சொல்வதைப் பார்த்து கேள்விக்குறியுடன் பார்த்தாள் அஞ்சலி.

“ஜானு மா, இன்னைக்கு என்கிட்ட என்ன கேட்டா தெரியுமா.? படிப்பப் பத்தி உங்களுக்கென்ன தெரியும்னு.? அதக் கேட்டதும் தான் எனக்கு புத்தியில உரைச்சது. அப்போ தான் நாம படிக்காம தப்பு பண்ணிட்டோமோன்னு தோணுச்சு. அதெல்லாம் எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா.?” என்று வருத்தப்பட்டார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியானவள், “ஏன் பா.. அக்கா அப்படியெல்லாமா கேட்டா.?” என்றாள்.

“ஹூம்ம்.. ஆமா. என்னோட சூழ்நிலையால அப்போ நான் படிப்ப விட்டுட்டு வேலைக்கு சேர்ந்தேன். இன்னைக்குப் பார்த்தேனே என் நண்பன், அதான் உங்க ஸ்கூல் தமிழ் வாத்தியார், அவன் தான் சின்ன வயசில இருந்தே சொல்வான். நீ படிச்சிருக்கலாம். படிச்சிருந்தா நீ இவ்ளோ கஷ்டப்படமாட்ட, தேவையில்லாம பாதியில விட்டுட்டேன்னு இப்பவும் ரொம்ப வருத்தப்படுவான்.” என்றார் விரக்தியாக..

“அத விடுமா.. அதப் பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் கிடையாது. இனி நீங்க ரெண்டு பேரும் எப்படி ஒரு நல்ல நிலைமைக்கு வருவீங்கங்கறது தான் முக்கியம். ஜானுமா ஒரு தடவ பேச்சு வாக்கில யாரோ என்னவாகப் போறன்னு கேட்டப்போ, “கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் ஆகணும். அதுதான் எந்த பிரச்சினையும் இல்லாத வேலை”ன்னு சொன்னா. அப்போவே அவ ரொம்ப தெளிவா முடிவெடுத்துட்டு சொன்னவ. அது மாதிரி நீயும் ஏதும் முடிவு பண்ணி வெச்சிருக்கியான்னு தான் உன்ன கேக்கறேன்.” என்றார்.

“ம்ஹூம்.. இல்லப்பா.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கூட டாக்டர் ஆகணும், இஞ்சினியர் ஆகணும்னு அடிக்கடி சொல்வாங்க. ஆனா, என்னால இதுவா ஆகணும், இந்தப் படிப்பு தான் படிக்கணும்னு எந்த ஒரு யோசனையும் இல்ல பா..” என்று அறியாமல் சொன்னாள் அஞ்சலி..

“சரி டா மா. ஏதோ, இந்த அப்பாக்கு தெரிஞ்சத சொல்றேன். பொண்ணுங்கள எதுக்கு படிக்க வைச்சுட்டு, கல்யாணம் பண்ணி போகப் போறவ தானேனு எப்பவும் பொண்ணுகள அப்படியே சொல்லி சொல்லி வீட்டுக்குள்ளயே முடக்கி வைச்சுட்டாங்க. ஆனா, நீங்கல்லாம் அப்படி இல்லாம, எந்த ஒரு படிப்ப படிச்சாலும் கண்டிப்பா வேலைக்குப் போகணும்.. அப்போதான் உன்னுடைய சுயத்தில் நீ நிற்க முடியும். அதே மாதிரி, எந்த வேலைக்குப் போனாலும் உன்னால முடிஞ்ச உதவிய நாலு பேருக்கு செய். அப்பறம், நீ வெறும் பணம் மட்டும் சம்பாதிக்காம அதோட மதிப்பு, மரியாதை, அன்பு, எல்லாத்தையும் சேர்த்து சம்பாதிக்கணும். அதுதான் உண்மையான சந்தோஷம். கொடுக்கற வேலை சின்னதோ, பெரிசோ, அதை ரொம்ப ஆத்மார்த்தமா பண்ணனும். அதுவும் முக்கியம். இன்னும் ரொம்ப முக்கியமான விஷயம், உன்னால மத்தவங்க என்னைக்குமே கஷ்டப்படக் கூடாது, நீ உதவி செய்யலன்னா கூட பரவால்ல. சரியா..” என்று கணேசன் தன் மனதில் உள்ளவற்றையெல்லாம் கூறினார்.

அதைக் கேட்ட அஞ்சலிக்கு அப்போது தான் சற்று தெளிவு வந்தது. “கண்டிப்பா, நீங்க சொன்ன மாதிரி இது எல்லாத்தையுமே சம்பாதிக்கிற மாதிரி ஒரு படிப்ப நான் படிக்கிறேன் பா.” என்றாள் அஞ்சலி.

“அந்த மாதிரி நீ வளர்ந்து நிக்கும் போது, அதப் பார்த்து முதல்ல சந்தோஷப்படற ஆள் நானாதான் இருப்பேன்.” என்று கூறியவர் அவளைத் தட்டிக்கொடுத்தார்.

அன்று அப்பா, தென்னை மரத்தடியில் உரைத்த வார்த்தைகள், புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானோதயம் கிடைத்ததைப் போல் இருந்தது அவளுக்கு.. நினைவுகளில் இருந்து மீண்டாலும், அந்த வார்த்தைகள் அவளுக்கு வேதமாகும். இதோ, இப்போது அப்படி ஒரு நல்ல நிலையில்தான் வளர்ந்து நிற்கிறாள்..

ஆனால், அந்த சந்தோஷத்தைப் பார்க்கவோ, பகிர்ந்து கொள்ளவோ அவர் இப்போது இல்லையே என்று நினைக்கும் போது அஞ்சலியால் ஏனோ அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.. யாரேனும் பார்த்து விடுவார்களோ என்று, கீழே குனிந்து கண்களைத் துடைத்தாள். குனிந்து நிமிர்ந்தவளின் கண்களை மறு நிமிடமே யாரோ தன் கரங்களால் மூடினர்..

(தொடரும்...)



 
Top