கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 10

Aathirai

Active member
அத்தியாயம் 10

ஒரு இருட்டான மின் மோட்டார் பழுது பார்க்கும் அறை. அதில் பல இடங்களில் சிதறிக் கிடக்கும் ஆணிகள், இரும்புத் துண்டுகள். பழைய துருப்பிடித்த மோட்டார்கள் என குப்பை அண்டிக் கிடந்த அறையில் இருந்து,

“அம்மா.. அம்மா.. என்னால முடியல டா.. என்ன விட்டுடுங்க.. ஏண்டா இப்படிப் பண்றீங்க.? என்னடா நான் பாவம் பண்ணேன்.. தண்ணி.. தண்ணி...” என்று நீண்ட நாட்களாக எதுவும் சாப்பிடாமல், தண்ணீரும் இல்லாமல் இருக்கும் போது எப்படி நம் தொண்டை வறண்டு, குரல் கம்மி மயக்க நிலையில் இருக்குமோ, அந்த நிலையிலேயே புலம்பிக் கொண்டே இருந்தது அந்தக் குரல்.

“தண்ணி... தண்ணி...” என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்த குரலைக் கேட்டு எரிச்சலுடன் அவன் முன்னே வந்து நின்றது அந்த உருவம்.

“ஏண்டா. நீ எவ்வளவு தைரியம் இருந்தா எங்க அண்ணனையே காட்டிக் கொடுக்க நினைச்சிருப்ப.? உனக்கு நல்லா வேணும். ஒழுங்கா அண்ண பேச்சக் கேட்டு இருந்திருந்தா உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது இல்ல.? நல்லா அனுபவி. ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காது.” என்றபடி அவனிடம் பேசிக்கொண்டு நின்றவன் மணி.

கண்கள் எல்லாம் சொருகிய மயக்க நிலையில் யார் பேசுகிறார்கள் என்று புரியாமலேயே கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தான் அவன். சுத்தமாக அசையக் கூட முடியாத நிலையில் அவ்வப்போது இவர்களின் வசங்களையும் கேட்க வேண்டிய நிலையில் இருந்தான். தான் எப்பொழுது யாருக்கு தீங்கு செய்தோம் என்று நினைத்தபடி அப்படியே சாய்ந்து மயங்கினான்.

“டேய்.. இங்க பாரு திவா, இப்போவே செத்துடுவான் போல. அண்ண வந்துதான் இவனப் போடுவாருன்னு நினைச்சேன். இவன் என்னடான்னா அதுவரைக்கும் தாங்க மாட்டான் போலவே.” என்று தன் தாடியை தடவியபடி பேசிக்கொண்டு நின்றான் மணி.

“எங்க அந்தத் தண்ணிய எடு.” என்றபடி திவா கைகளை நீட்ட தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தந்தான் மணி.


மயங்கிக் கிடந்தவனின் முகத்தில் இரண்டு முறை தண்ணீரைப் பீச்சியடித்தான் திவா. “டேய்.. இங்க பாரு. இங்க பாருன்னு சொல்றேன்ல.” என்றபடி அவன் கன்னத்தைத் தட்டிக்கொண்டே அவனை நினைவுக்கு கொண்டுவர முயற்ச்சித்தான் திவா. ம்ஹூம்ம் பலனில்லை.

“என்னடா மணி, நீ சொன்ன மாதிரி இவன் அண்ண கையால சாகறதுக்கு வாய்ப்பே இல்ல போல. சரி, விடு பாக்கலாம்.” என்றபடி மீண்டும் தான் இயக்கிக் கொண்டிருந்த கம்ப்யூட்டரை மீண்டும் இயக்க ஆரபித்தான் திவா.

திவா என்கிற திவாகர். திறமையானவன். ஆனால், இவர்களோடு சேர்ந்து விட்ட காரணத்தால் அவனின் திறமை கெட்ட விஷயங்களுக்காக மட்டுமே உபயோகமானது. அக்கவுண்ட்ஸ் பார்ப்பதில் அவனை மிஞ்ச ஆளே இல்லை என்று சொல்லலாம். ஆனால், அதையும் குறுக்கு வழியில் கணக்கு காட்டாமல் இருக்க இவனை வைத்து அவற்றை உபயோகப்படுத்துகிறார்கள்.

அவன் இவர்களுடன் சேர்ந்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆகி உள்ளது. ஆனால், மிக நம்பிக்கையானவனாக மாறி விட்டான் அவன். அவனிடம் எந்த ஒரு அறிவுரையும் கேட்காமல் இங்கு எதுவும் நடப்பதில்லை.

நான்கு மாதங்களில் எப்படி இவ்வளவு பெயர் இவனுக்கு உருவானது என்று நினைத்தால், அதற்க்கு ஒரு சம்பவமே காரணம். அதற்க்கு முன், இன்னொரு முக்கியமான நபரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு விசுவாசியாக இவர்கள் அனைவரும் இருப்பது பரமசிவனிடம்.

எம்.எல்.ஏ கனகவேலின் மகன் பரமசிவன். என்ன, முருகனின் பெயர் அப்பனுக்கு. சிவனின் பெயர் பிள்ளைக்கு என்று நினைக்கலாம். ஆனால், இங்கே நிலைமையும் அப்படித்தான். சிவன் என்ன நினைக்கிறாரோ அதையே செய்வார். ஆனால், இந்த சிவனோ தான் என்ன நினைத்தாலும் அதை எப்படியும் கொன்றாவது செய்து முடிப்பான். அப்படிப்பட்டவனுக்கு அவன் அப்பாவை விட அரசியல் செல்வாக்கு அதிகம்.

அவனை வைத்தே அவன் அப்பாவிற்க்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்கப்பட்டது. அந்த முறை வேலூர் தொகுதியில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியின் சார்பாக நின்று ஜெயித்தார் கனகவேல். காரணம் பரமசிவன். அவனின் செல்வாக்கே அவருக்கு அந்தப் பதவியைத் தந்தது. மகனால், கிடைத்த பதவி என்பதால் அவன் எதைச் சொன்னாலும் அதற்க்கு மறுபேச்சு எதுவும் சொல்லாமல் செய்து முடிப்பார் கனகவேல்.

குடும்பத்திலும் சரி, வெளியேயும் சரி. அவனுக்கு செல்வாக்கு, மரியாதை மிக அதிகம். சிவனின் அழிக்கும் தொழிலை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவன். பாவம், புண்ணியம் என்று எதுவும் அவனது அகராதியில் கிடையாது.

அவனுக்குத் தேவை என்றால் எல்லாவற்றையும் செய்து அவனுடன் வைத்துக் கொள்வான். அவனுக்குத் தேவை இல்லை எனத் தெரிந்தால், அடுத்த நொடியே அவர்களை அழித்து விடுவான். இவனால், வாழ்ந்தவர்களை விட, அழிந்தவர்களே அதிகம்.

அதே போல், பெண்களை சிறிதும் மதிக்க மாட்டான். அவனுக்குத் தேவை என்றால் அவனுக்கு சந்தோஷம் தர வேண்டும், தேவை இல்லாத நேரங்களில் ஒதுக்கி வைத்து விடுவான். பொண்டாட்டி என்று சொல்லிக் கொண்டு இவனோடு குடித்தனம் நடத்தியவர்கள் மூன்று பேர். ஆனால், ஒருவருடன் கூட இவன் ஒழுக்கமாக வாழ்ந்ததில்லை.

குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒருவர் என்று மூன்று பேர் இருந்தாலும், தந்தை இவன் தான் என்று தெரியாமலேயே வளர்ந்து கொண்டிருக்கின்றனர். ஒருத்தியுடனும் ஒழுக்கமாக வாழ முடியாத காரணத்தால், கண்ணுக்கு லட்சணமாகத் தெரிந்தால் போதும், யார் என்ன என்று கூடப் பார்க்காமல் அவர்களை வேட்டையாடத் துடிக்கும் காமுகன்.

இவனிடம் மாட்டிக் கொண்ட பெண்கள் ஏராளம். ஆனால், சீசனுக்கு ஏற்றார் போல் அவனுடைய மனநிலையும் மாறிவிடும். விசுவாசிகள் ஏராளம். அவன் குடும்பங்களுக்கு இவன் தாராளப் பிரபு. அனைத்தையும் செய்வான். ஆனால், அவனுக்குத் தேவை உள்ளவரை மட்டுமே.

ஒரு முறை திவாகர் வேலைக்கு சேர்ந்திருந்த புதிதில் லாரியில் செல்லும் சரக்கைப் பிடிக்க போலீஸூக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது தெரியாத பரமசிவன் அவன் ஆட்களிடம் கவனமாக கொண்டு சென்று உரிய இடத்தில் சேர்க்கும்படி கட்டளையிட்டிருந்தான்.

ஆனால், போலீஸூக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அதனை சுற்றி வளைத்தனர். தப்பான சரக்கை கொண்டு செல்வதாக கேஸைப் போட முயன்றவர்களிடம் அவன் சரியான முறையில் இதை வணிகம் செய்துள்ளதாக கணக்கு வழக்குகளை சரி செய்து சென்று ஆதரமாகக் காண்பித்து அவனை அந்த வழக்கிலிருந்து காப்பாற்றினான் திவாகர்.

அப்போதிலிருந்து அனைத்து கணக்கு, வழக்குகளையும் அவனிடமே ஒப்படைத்தான் பரமசிவன். அதில் எத்தனை கணக்குகள் முறையற்றதோ, அதை அனைத்தையும் முறையானவையாக மாற்றினான் திவாகர். அதே போல், அவனின் அனைத்து விஷயங்களையும் அவனிடம் கலந்துரையாடி விட்டே அவன் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தான். அவனுடைய தீவிர விசுவாசி ஆனான் திவாகர்.

மூன்று மாதங்களிலேயே, புதிய பைக் ஒன்றை வாங்கி பரிசளித்தான் பரமசிவன். அழுதே விட்டான் திவாகர். அந்த ஒரு உணர்வை தான் எதிர்பார்த்தான் பரமசிவன். இதோ, இப்போது இங்கே அடைத்து வைத்திருப்பவனையும் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டே இன்னும் எதுவும் செய்யாமல் உயிரோடு விட்டு வைத்திருக்கிறான்.

அவர்கள் எதிர்பார்ப்பை இவன் பூர்த்தி செய்யாவிட்டால் அவனின் உயிர் அவனிடம் இருக்காது. தண்ணீர், சாப்பாடு எதுவும் இல்லாமல் திவாவின் அறிவுரையில் இவனை அடைத்து வைத்துள்ளனர் இங்கு. ஆனால், மயக்க நிலையில் எங்கு செத்து விடுவானோ என்று திவாவும், அவனிடம் வந்ததில் இருந்து அன்போடு பழகும் மணியும் செய்வதறியாது திகைத்தனர்.

“இப்போ என்ன பண்றது திவா.? இது இன்னும் எவ்வளவு நேரம் தாங்கும்னு தெரியலையே.?” என்று மணி மண்டையைச் சொறிய.

“பேசாம, அண்ணனுக்கு போன் பண்ணிடுவோம்.” என்றபடி திவா அவனது அலைபேசியில் பரமசிவனின் எண்ணை அழுத்த எதிர்முனையில் ரிங் போனது.


“நான் ராஜா.. நான் ராஜா.. எப்போதும் நான் ராஜா..

நான் ராஜா.. நான் ராஜா.. எங்கேயும் நான் ராஜா...”

என்று அலைபேசி மணி ஒலிக்க, அந்தப் பாடல் ஏதோ தனக்கென்றே எழுதப்பட்டதாக உணர்ந்தவாறு, கோமேதகமும் தங்கமும் மின்னும் விரல்களால் கையை தாளம் போட்டுக்கொண்டே கெத்தாக அமர்ந்தவாறு பாடலை ரசித்துக் கொண்டு இருந்தவனிடம்,

“அண்ண, பாட்ட ரசிச்சது போதும் ணே.. போன எடுங்க” என்று வண்டியை ஓட்டிக் கொண்டே அவனை உலுக்கினான் அவனின் டிரைவர் நம்பி.

“டேய். எனக்கே எழுதுன பாட்டு மாதிரி இருக்குன்னு தான் இதை ரிங் டோனா வைச்சு கேட்டுட்டிருக்கேன். அது உனக்கு பொறுக்கலையா டா.” என்று அவனின் தலையைத் தட்டியவாறே, போனை எடுத்தான் பரமசிவன்.

“சொல்றா திவா. என்னங்கறான் அவன்.? ஒத்து வருவானா, மாட்டானா.?” என்று தன் ஒரு கையில் போனையும், மறு கையை கெத்தாக பின் மண்டையில் வைத்தவாறே கேட்டான் பரமசிவன்.

“அண்ண, அவன் மயங்கிட்டான். பேச்சு, மூச்சில்லாம கிடக்கறான் ண. என்ன பண்றது.?” என்றான் திவா.

“ஒலிஞ்சது இம்சை. விடு. அவன மூட்டை கட்டி இருட்டுனதும் நம்ம குவாரில தூக்கிப் போட்டுடு. இவனோட சேர்ந்து மொத்தம் 20 பேர். ரௌண்டா முடிஞ்சது கணக்கு.” என்றான் கூலாக.

“அண்ண, அப்போ ஆதாரம் எப்படி கிடைக்கும்.? அது எங்க இருக்குன்னு இன்னும் தெரியலையே.?” என்றான் திவா.

“எங்கடா போயிடப் போகுது.? மிஞ்சி மிஞ்சிப் போனா அவன் பொண்டாட்டிகிட்ட குடுத்து வைச்சிருப்பான். அவ்ளோதான். வேற எங்கயும் குடுத்து வைக்கிற அளவுக்கு அவன் ஒன்னும் புத்திசாலி கிடையாது. விடு பாத்துக்கலாம். நீ சொன்னேன்னு தான் அவன இவ்ளோ நாள் வைச்சிருந்தேன். இல்லன்னா எப்போவே அவன் செத்திருப்பான். சரி விடு, அவன் விதி இன்னைக்கு தான் எழுதி வைச்சிருக்கு போல, செத்துத் தொலையட்டும்.” என்றான் பரமசிவன்.

“சரி ண. நான் பாத்துக்கறேன்.” என்றபடி போனை வைத்தான் திவா.

“டேய். வா அண்ண இவன என்ன பண்ணனும்னு சொல்லிருக்கார். அதே மாதிரி பண்ணிடுவோம்.” என்று திவா சொல்ல, மணி தலையை ஆட்டிக் கொண்டே மயங்கியவனின் கட்டை அவிழ்க்கச் சென்றனர். மயங்கி இருந்தவனிடம் சுத்தமாக மூச்சே இல்லை. அவனை எடுத்து ஒரு சாக்கு மூட்டையில் கட்டினர்.

எடுத்துக் கொண்டு பரமசிவனின் ஜீப்பில் இருவரும் சென்றனர். போகும் போது, பரமசிவனிடம் இருந்து திரும்பவும் திவாவிற்க்கு அழைப்பு வந்தது.

“ஆங். சொல்லு ண.. அப்படியா. சரி. அப்படியே பண்ணிடறேன்.” என்று சொன்னவன் குவாரிக்கு செல்லாமல் நேராக டவுனுக்கு செல்லும் வழியில் சென்றான்.

“டேய். என்னாச்சு திவா.? ஏன் குவாரிக்குப் போகாம, டவுனுக்குப் போற.?” என்றான் மணி.

“இல்ல, ப்ளான் சேஞ்ச் ஆயிடுச்சு.” என்றபடியே ஜீப்பை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தான் திவா. நேராக டவுன் உள்ளே சென்று அந்த வீதியினுள் நுழைந்தான். அந்த வீட்டின் கேட்டை மெல்லமாகத் திறந்தவர்கள், அந்த மூட்டையை கொண்டு சென்று வீட்டின் முன் போட்டு விட்டு, அந்த வீட்டின் காலிங்க் பெல்லை அழுத்தியவர்கள், விருட்டென்று வந்து ஜீப்பை எடுத்துக் கொண்டு பறந்தனர்.

காலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே வந்த பெண் முகத்தில் ஒரு அதிர்ச்சி. தன் வீட்டு முன் எதற்க்கு மூட்டை போல் உள்ளது. வெளியே உள்ள லைட்டைப் போட்டவள் மேலும் அதிர்ச்சியானாள். அந்த மூட்டையில் ரத்தக் கறை படிந்திருந்தது.

உள்ளுக்குள் பயம் எழ, கைகள் நடுக்கமெடுக்க அந்த மூட்டையின் முடிச்சை அவிழ்க்க ஆரம்பித்தாள். அவள் அவிழ்த்ததும் அந்த மூட்டையில் இருந்தவன் அப்படியே விழ, அவளின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தன.

“ஐயோ.. என்னங்க.. என்னாச்சு உங்களுக்கு.? என்னைப் பாருங்க.” என்று அவனை மடியில் ஏந்தியவாறு கன்னத்தை தட்டித் தட்டி எழுப்பியபடி கதறி அழுதாள்.

அவளின் அழுகுரலைக் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள், கதவைத் திறந்து கொண்டு வந்து பார்த்ததும் அதிர்ச்சியாயினர்.

“ஏம்ம்மா.. ஜானகி என்னாச்சு.? உன் வீட்டுக்காரர் தானே.? யார் இப்படிப் பண்ணிருக்காங்க.?” என்று எதிர்த்த வீட்டுக்காரர் கேட்டார்.

ஆம், அவள் ஜானகி தேவி. அந்த மூட்டையில் இருந்தவன் செல்வம்.

“தெரியலையே. காலிங் பெல் அடிச்ச சத்தம் கேட்டுச்சு. வந்து பார்த்தா இந்த மூட்டைல இவர் பொணமா கிடக்கறார். இப்போ நான் என்ன பண்ணுவேன்.?” என்று கதறி அழுதபடியே இருந்தாள் ஜானகி.

அடுத்த சில மணி நேரத்திலேயே போலீஸ் அங்கு வந்துவிட்டது. செல்வத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜானகியை தனியாக விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இனி ஜானகி என்ன செய்வாள்.?

(தொடரும்...)
 
Last edited:
Top