Aathirai
Active member
அத்தியாயம் 11
தேனிலவு முடிந்து வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இப்போது இருவரும் ஒன்றாக காஞ்சிபுரத்தில் இருந்து அவரவர் பணிக்கு சென்றனர். அவ்வப்போது முடியும் போது திருப்பத்தூர் சென்று வீட்டில் உள்ளவர்களை பார்த்து விட்டு வருவர். அஞ்சலியால் முடிந்த வரை திலகாவை திருப்திப்படுத்த முயன்றாள்.
ஆனால், திலகாவோ அவளை சட்டையே செய்யவில்லை. இருந்தாலும், அஞ்சலி பொறுமையாகவே எதையும் கையாண்டாள். கூடவே, மாலதி அவளைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லிக்கொண்டே இருந்ததால், அவளின் குணத்தைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பே கிடைக்காமல் போனது திலகாவிற்கு.
இருந்தாலும், இருவரும் காஞ்சிபுரத்தில் ஒன்றாக இருக்கும் போது, சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போனது. இனியனின் குறும்புத்தனம், அவனின் செல்லமான கொஞ்சல்கள், கெஞ்சல்கள் எல்லாவற்றையும் பார்க்கும் போது இத்தனை நாட்கள் கடவுள் ஏன் இந்த சந்தோஷத்தைத் தனக்கு தராமல் போனார் என்று தோன்றும் அஞ்சலிக்கு.
பள்ளியில் படிக்கும் போது தான் பார்த்த இனியனா இவன்.? என்கிற அளவுக்கு தனக்கு மட்டுமே இப்படியொரு அன்பையும், காதலையும் காட்டும் காதலனாய், கணவனாய் இனியன் கிடைத்ததற்க்கு தான் முன் ஜென்மத்தில் ஏதோ ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக்கொள்வாள். எப்படியோ நல்லபடியாக திருமணம் முடிந்து, அவனுடன் இருக்கும் இந்த பொன்னான நாட்களை ரசித்துக் கொண்டே அவளது கடமையையும் செய்து வந்தாள்.
ஒரு நாள் இரவு அனைத்து விளக்குகளும் அணைந்திருக்க, வீதி முழுக்க கும்மிருட்டு. எப்படியாவது இவர்களிடமிருந்து தப்பித்தாக வேண்டும் என்று நினைத்து, உடல் முழுக்க வியர்வையில் நனைந்திருக்க, பயத்தில் ஓடி வந்துகொண்டிருந்தாள் அந்தப் பெண்.
அவள் ஓடி வந்த திசையிலேயே இருவர் அவளைத் துரத்திக் கொண்டு வந்தனர். அவர்கள் வந்துவிட்டதை அறிந்தவள், அங்கே இருந்த குப்பைத்தொட்டி அருகே மறைந்து கொண்டாள். அந்த இட்த்தில் இருந்த சாலை விளக்கு எரியாமல் போனதுதான் அவளின் அதிர்ஷ்டம்.
இருட்டில் அங்குமிங்கும் அவளைத் தேடி அலைந்தவர்கள் ஒரு கட்டத்தில் மிகவும் களைப்படைந்தனர். “என்னடா இது, அவள இவ்ளோ தூரம் கண்டுபிடிச்சு ஃபாலோ பண்ணியும் எங்கயோ எஸ்கேப் ஆயிட்டா. இப்போ என்னடா பண்றது. தொண்டை தண்ணி வத்திப் போச்சு.” என்றான் ஒருவன் மூச்சு வாங்க.
“டேய். எனக்கும் தான் முடியல. மூச்சு வாங்குது. ஆனா, என்ன பண்றது.? எப்படியாவது தேடிப் பிடிச்சே ஆகணும். இல்லன்னா நம்ம தொண்டையை பிடிச்சு தொங்க விட்டுடுவாரு டா அண்ணன்.” என்று பயத்தில் சொன்னான் இன்னொருவன்.
“இந்த இருட்டுல அவள எப்படிப் போய் தேடுறது.? அவங்களுக்கென்ன ஈஸியா சொல்லிடுவாங்க. கஷ்டப்பட்டு தேடி, ஓடி பிடிச்சுக் கொடுக்கறது நாம் தானே. எவ்ளோ எனர்ஜி வேஸ்ட் ஆகுது. அதெல்லாம் அவங்களுக்குத் தெரியுமா.?” என்றான் அவன்.
“டேய். என்னடா பேசற.? அவளத் தேடிப் பிடிக்கலன்னா நம்ம உயிரே போயிடும்னு சொல்லிட்டிருக்கேன். நீ என்னடான்னா நாம படற கஷ்டத்தப் பத்தி பேசிட்டிருக்க. உயிர் முக்கியமா.? இல்ல கஷ்டப்படக் கூடாதுங்கறது முக்கியமா.?” என்றான் இவன்.
“உயிர் தாண்டா முக்கியம்.” என்று அவன் சொல்ல,
“அப்போ வா, வாயை மூடிட்டு தேடு.” என்று சொன்னபடி, “வா அந்தப்பக்கமா போய் தேடலாம்.” என்று அவனை அழைத்துக்கொண்டு ஓடினான்.
இவையெல்லாவற்றையும், வாயைப் பொத்தியவாறே மூச்சை அடக்கியபடி கேட்டுக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். அவர்கள் போனது உறுதியான பின்னரே, அந்த இருட்டில் தன் கையில் இருந்த அட்ரெஸைப் படிக்க முடிகிறதா என்று பார்த்தாள்.
ம்ஹூம்ம். முடியவில்லை. எப்படியாவது வெளிச்சத்திற்க்கு சென்றால் தான் அந்த அட்ரெஸைப் படிக்க முடியும். அவள் வேறு எங்காவது சென்று அவர்கள் திருப்பியும் வந்துவிட்டால் என்ன செய்வது.? யோசித்துக்கொண்டே செய்வதறியாது ஒளிந்திருந்தாள்.
அஞ்சலி அன்று இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்தாள். சப்பாத்தியும், கூடவே உருளைக்கிழங்கு குருமாவும் செய்து கொண்டிருந்தாள். இவை இரண்டுமே இனியனுக்கு பிடித்தமானவை. தினமும், அவனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு இரவு விதம், விதமாக சமைத்துக் கொடுப்பாள்.
உணவுகளில் உப்பும், காரமும் மட்டுமல்லாமல் தன் காதலையும் அள்ளித் தெளித்ததனாலோ என்னவோ, அவனுக்கு அவள் செய்யும் ஒவ்வொரு உணவும் அருமையாகவும், ருசியாகவும் இருந்தது. அதை சாப்பிட்டு முடித்த பின் அவளது கன்னத்தில் முத்த மழை பொழிவான்.
“சூப்பரா இருந்தது டி செல்லம்.” என்று பாராட்டு மழையில் அவளை நனைப்பான். அவன் அப்படிச் செய்யும் போதும், சொல்லும் போதும் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விடுவாள் அஞ்சலி. அதற்க்காகவே பார்த்துப் பார்த்து அவனுக்கு அனைத்தையும் செய்து கொடுப்பாள்.
காலை மற்றும் மதிய வேளை அவர்களுக்கு மிக முக்கியமான நேரம் என்பதால் அந்த நேரங்களில் சமைத்துத் தர ஒரு வயதான சமையற்கார அம்மாவை ஏற்பாடு செய்திருந்தாள் அஞ்சலி. இரவு உணவு மட்டும் அவள் பொறுப்பு.
சில சமயம் இனியனும் வந்து காய்கறிகளை நறுக்கிக் கொடுப்பது, வெங்காயம் அறிந்து கொடுப்பது என்று சின்ன, சின்ன வேலைகளை செய்து கொடுப்பான். கூடவே, சில சில்மிஷ வேலைகளையும் செய்வான். அவன் செய்வதை தொல்லையாக அவனிடம் காட்டிவிட்டு, உள்ளுக்குள் ரசிப்பாள்.
அன்று இரவு பணி முடிந்து லேட்டாகவே வந்தான் இனியன். உள்ளே நுழையும் போதே குருமாவின் வாசனை மூக்கைத் துளைக்க, எப்போதும் வந்ததும் பாத்ரூமிற்கு செல்பவன், நேராக சமையல் கட்டில் நுழைந்தான். அஞ்சலி சப்பாத்திகளை தேய்த்தெடுப்பதில் மும்முரமாக இருந்தாள்.
மெதுவாக பூனை போல் நுழைந்தவன், அவள் அறியாமல் பின்னாலிருந்து அவளை அப்படியே தூக்கினான். அவன் திடீரென்று இப்படிச் செய்வான் என்று அறியாதவள், சத்தம் போட்டாள். அவளை அப்படியே இறக்கிவிட்டு வாயைப் பொத்தியவன், வெளியே காலிங் பெல் சத்தம் கேட்க, அவளை முறைத்துவிட்டுச் சென்றான்.
கதவைத் திறந்தால், வாட்ச்மேன் நின்றிருந்தார். “சார் மேடம் கத்துன சௌண்ட் கேட்டுச்சு. அதனால தான் என்னமோன்னு ஓடி வந்தேன்.” என்றார்.
“அதுவா, உங்க மேடம் கலெக்டர்ன்னு தான் பேரு, ஆனா, ஒரு எலி கால்ல நுழைஞ்சு ஓடுனதுக்கு கத்தறாங்க. வேற ஒண்ணும் இல்ல.” என்றான் இனியன்.
அவரோ, “சரி சார். பார்த்து நான் வேணும்னா எலிய அடிச்சு விரட்டுட்டுமா.?” என்றார் வெள்ளந்தியாக.
“அய்யோ. வேண்டாம் கோபால் அண்ணா, அத நானே பாத்துக்கறேன்.” என்றான்.
அவரோ, இவன் சொல்வதை நம்பலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தில் மண்டையை சொறிந்தபடியே சென்றார்.
அவன் வேகமாக கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தான். அதுவரை எதுவும் நடக்காததைப் போல் அவள் இருந்ததைப் பார்த்ததும், “ஏய்.. எதுக்கு இப்போ கத்துன.? சும்மா வந்து தூக்கினதுக்கு எதுக்கு அப்படிக் கத்தற.? பாரு வாட்ச்மேன் வந்து கேட்டுட்டு போற அளவுக்கு கத்தியிருக்க.?” என்றான் ஆவேசமாக.
“ஆமா, நீ இப்படியா வந்து திடீர்னு தூக்குவ.? அது உன்னோட தப்பு. யாரா இருந்தாலும், கத்த தான் செய்வாங்க. அதுக்கு எதுக்கு என்னத் திட்டற.?” என்றாள் அவளும்.
“ஹூம்ம்.. பொண்டாட்டிய ஆசையா தூக்கினா என்ன தப்பு.? சொல்லு. அவனவன் இப்படியெல்லாம் பண்ண மாட்டிங்கறாங்கன்னு எத்தனை பொண்ணுக ஏங்கறாங்க தெரியுமா.? நீ என்னடான்னா என்னையே தப்பு சொல்ற.?” என்றான் எரிச்சலுடன்.
அவன் எரிச்சலாக நிற்பதைப் பார்த்தவள், மெல்ல அவன் அருகே வந்தாள். அவன் கன்னத்தில் கை வைத்து, “ஸாரி. இனிமேல் கத்த மாட்டேன். சரியா. நீ டென்ஷனாகாத.” என்று கொஞ்சலாகப் பார்க்க, அவளின் குழந்தைத்தனமான பேச்சில் கிறங்கிப் போனான். அப்பொழுதே அவள் மேல் இருந்த எரிச்சல் காணாமல் போனது.
அவளை அப்படியே அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பில் சொக்கிப்போனாள் அஞ்சலி. “சரி, ரொமான்ஸ் பண்ணதெல்லாம் போதும், இப்போ போய் குளிச்சிட்டு வா.” என்றபடியே அவனது யூனிஃபார்ம் பட்டனைக் கழட்டினாள்.
அவனோ, அவளை ரசித்துக்கொண்டே நின்றபடி, “ஏய். நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. தூங்கும் போது பாரு உன்னை என்ன பண்ணப் போறேன்னு.” என்றான்.
அவன் முகத்தில் வழியும் காதலை ரசித்தவாறே, “நாளைக்கு நான் சீக்கிரம் ட்யூட்டிக்குப் போகணும். நான் நல்லா தூங்கணும். என்னால முடியாது. ப்ளீஸ் இன்னைக்கு என்னை விட்டுடு. சரியா.?” என்றாள்.
“அதெல்லாம் தெரியாது. நீ எதையும் சொல்லி எஸ்கேப் ஆக முடியாது. எனக்கு வேணும்னா வேணும். அவ்ளோதான்.” என்றான் விடாப்பிடியாக.
“சரி, சரி அதெல்லாம் தூங்கப் போகும் போது பாக்கலாம். இப்போ போய் குளிச்சிட்டு வா.” என்றபடி அவனை திரும்பச் சொல்லி தள்ளிவிட்டாள். சிரித்துக்கொண்டே சென்றான் டவலை எடுத்துக்கொண்டு.
டேபிளில் தயாரான சப்பாத்திகளை, ஹாட்பாக்ஸில் போட்டு எடுத்து வந்தாள். கூடவே, செய்திருந்த குருமா மற்றும் ப்ளேட்களையும் எடுத்து வந்து தயாராக வைத்திருந்தாள் அஞ்சலி.
அவன் குளித்து முடித்து தயாராக வந்தான். இருவரும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். இரண்டு வாய் சாப்பிட்ட உடனேயே, “ம்ம்ம்ம்... செமயா இருக்கு டி செல்லம். எங்கிருந்து இதெல்லாம் கத்துக்கிட்ட.?” என்று பாராட்டியபடியே ரசித்து சாப்பிட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், சிறிது குரல் தழுதழுக்க, “எங்கம்மா கிட்ட இருந்து” என்றாள். சொன்னவள் கண்களில் சிறிது கண்ணீர் எட்டிப் பார்த்தது.
இனியன் அதை கவனித்து விட்டான். “ஏய்.. ஸாரி டி செல்லம். நான் எதுவும் வேணும்னே கேட்கல. ஏதாவது புக்லயோ, அல்லது யூ ட்யூப்லயோ பார்த்து செஞ்சிருப்பன்னு நினைச்சேன். சும்மா, கேசுவலா தான் கேட்டேன். ஆனா, நீ ஃபீல் பண்ணுவன்னு தெரியல. அழாத டி செல்லம்.” என்றபடி அவளைப் போய் நின்றபடியே மார்பினில் சாய்த்துக்கொண்டான்.
“உனக்கு நான் இருக்கேன் இல்ல. அம்மா, அப்பா உன் கூடவே தான் இருக்காங்க. அதனால, நீ எப்பவும் ஃபீல் பண்ணக் கூடாது.” என்றான்.
“இல்ல, நான் அப்பா, அம்மாவ நினைச்சு மட்டும் ஃபீல் பண்ணல.” என்றாள்.
“அப்பறம் யாரை நினைச்சு சொல்ற.?” என்றான் அவள் முகத்தைப் பார்த்தபடி.
சில நொடிகள் மௌனமாய் இருந்தவள், அதன் பிறகு சொன்னாள். “எங்க அக்காவ நினைச்சு.”
“உங்க அக்காவா.? ஆனா, அவங்க தான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தினாங்கன்னு சொன்னியே.?” என்றான்.
“அது என்னமோ நிஜம் தான். ஆனா, ஒவ்வொரு டைமும் சப்பாத்தி சாப்பிடும் போது எனக்கு அவ ஞாபகம் வராம இருக்காது. அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும், அம்மா செய்யற சப்பாத்தியும், உருளைக்கிழங்கு குருமாவும் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். நான் அவளுக்காக, ஒரு சப்பாத்தி கம்மியா சாப்பிடுவேன்.” என்றாள்.
“ஏன், சப்பாத்தி தீர்ந்து போயிடுமா.?” என்றான் குறும்புடன்.
“ஏய்.. உன்ன...” என்று அவனைக் கிள்ளியவள், “அவ சாப்பிடணும்னு தான். அவளுக்குப் பிடிக்குமே. அதான். அம்மா, அளவா தான் செய்வாங்க.” என்றாள்.
அவள் சொல்லும் போது தான், எத்தனை கஷ்டத்தில் அவள் வளர்ந்திருக்கிறாள் என்று தோன்றியது. அவள் அதை நினைத்து கவலைப்படக் கூடாது என்று நினைத்தவன், சாப்பிட்டு முடித்ததும் அவளை அழைத்தான்.
“சரி விடு ஃபீல் பண்ணாத. என்ன பண்ண முடியும். இப்படி ஒரு தங்கச்சிய விட்டுட்டோமேன்னு அவங்க தான் ஃபீல் பண்ணனும். நீ ஏன் ஃபீல் பண்ற.?” என்றான் அவள் தோள்களைப் பிடித்து அணைத்தவாறே.
“அவள மாதிரி என்னால யோசிக்க முடியல இனி. என்ன பண்றது, நான் அப்படித்தான்.” என்றவளையே பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள் அஞ்சலி.
“எதுக்கு இப்படிப் பார்க்கற.? நீ என்ன சொன்னாலும், இன்னைக்கு எதுவும் நடக்காது. ஓகே வா.” என்றாள்.
“நான் கேட்டு நீ ஓகே சொல்லாம போயிடுவியா.? அப்படிப் பண்ண நான் உன்னை ரேப் பண்ணிடுவேன்.” என்றான் விளையாட்டாக.
“அடப்பாவி, கட்டுன பொண்டாட்டியவே ரேப் பண்ணுவியா.? நீ அப்படிப் பண்ண, எனக்குத் தெரிஞ்ச போலீஸ்கிட்ட சொல்லி உன்னை உள்ள தள்ளிடுவேன்.” என்று விளையாட்டாக மிரட்டினாள் அவளும்.
“எவன் அவன்.? என்ன மீறி அவன் என்ன பண்ண முடியும்.?”
“ம்ம். எனக்காக என்ன வேணாலும் செய்வாரு. அஸிஸ்டண்ட் கமிஷனர் இனியன். தெரியுமா.? நீ ஏதாவது பண்ண, அவர் உன்னை உண்டு, இல்லன்னு ஆக்கிடுவார்.” என்றாள் திரும்பவும் சிரித்துக்கொண்டே.
“ஓ.. அந்த மடையனா.? அவனெல்லாம் ஒரு ஆளு. சரி பார்க்கலாம். அவன் என்ன பண்றான்னு.?” என்றபடி அவளைப் பிடிக்க வந்தான். அவன் கையில் சிக்காமல் அவள் வீட்டிற்குள்ளேயே ஓடினாள்.
அப்போது திரும்பவும், காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. இனியன் சலித்துக்கொண்டே, “நீ இருக்கியே, பாரு திரும்பவும் அந்த வாட்ச்மேன் வந்துட்டார்.” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
“அப்பா, என்னைக் காப்பாத்த அவர் வந்துட்டார்” என்று ஓடியபடி சிரித்துக்கொண்டே போய் கதவைத் திறந்தாள் அஞ்சலி.
அவள் கதவைத் திறந்த போது வெளியே நின்றிருந்தது ஒரு பெண். அவள், “அஞ்சலி.. என்னைக் காப்பாத்து..” என்று அழுதுகொண்டே உள்ளே வந்து அஞ்சலியைக் கட்டிக் கொண்டாள்.
அவளைப் பார்த்ததும் அதிர்ச்சியானாள் அஞ்சலி. அவள் கண்களை அவளால் நம்பமுடியவில்லை. முன்னர் தான் யாரை நினைத்து கவலைப்பட்டாளோ அவளே வந்து அவளைப் பிடித்திருந்தாள். ஆம், அந்தப்பெண் ஜானகியே தான். யார் இவள் அஞ்சலியை வந்து உரிமையுடன் பிடித்திருப்பவள் என்ற கேள்விக்குறியுடன் பார்த்துக்கொண்டிருந்தான் இனியன்.
(தொடரும்...)