கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 12

Aathirai

Active member
அத்தியாயம் 12

அக்கா தான் நிஜமாலுமே என்னைத் தேடி வந்திருக்கிறாளா என்று நம்பவே அஞ்சலிக்கு சில நிமிடங்கள் ஆனது. முதலில் அவளை உட்கார வைத்தவள், தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினாள்.

“என்னாச்சு கா. உன்னை எவ்ளோ வருஷம் கழிச்சு பார்க்கறேன். ஆனா, நீ இப்படி உயிர கையில புடிச்சிட்டு ஓடி வந்திருக்க. என்னாச்சு.? யார் உன்னை துரத்துறாங்க.” என்று கேட்டாள் அஞ்சலி.

கூடவே இனியனும் வந்து அமர்ந்தான். ஜானகி அவர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் திராணியற்றவளாய் அமர்ந்திருந்தாள். கண்களில் கண்ணீர் மட்டும் கரகரவென்று வழிந்து கொண்டே இருந்தது. சிறிய வயதில் எதற்க்குமே அவ்வளவு எளிதில் கண் கலங்கியது இல்லை ஜானகி. ஒரு மிடுக்காக இருப்பவள் முகத்தில் கண்ணீருக்கே இடமிருக்காது.

ஆனால், இப்போது அவளைப் பார்க்கும் போது நிஜமாய் அவள் தானா என்றே சந்தேகிக்கத் தோன்றும். அழுது, அழுது கண்கள் முழுக்க வீங்கிப் போய் இருந்தது. இன்னும் அழுதுகொண்டே தான் இருந்தாள்.

“இங்க பாரு கா. நீ இப்படி அழுதுட்டே இருந்தா உனக்கு என்னாச்சு, நீ ஏன் இப்படி இருக்கன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்.? ப்ளீஸ் சொல்லு. என்னாச்சு.?” என்று திரும்பவும் கேட்டாள் அஞ்சலி.

அதன் பிறகுதான் ஜானகி சொல்லவே ஆரம்பித்தாள். “என்னோட ஹஸ்பெண்ட் செல்வம் முன்னாடி வொர்க் பன்ணிட்டிருந்த வேலூர் காலேஜ்ல ஏதோ ஒரு பிரச்சினைல, ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டார்ன்னு சொல்லி காலேஜ விட்டு டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. வேற எங்கயுமே போய் வேலை பார்க்க முடியாத அளவுக்கு பண்ணிட்டாங்க. ஆனா, அதுல செல்வத்தோட தப்பு எதுவும் இல்ல. அந்தப் பொண்ண எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்திட்டார்ன்னு சொல்லி, அந்தப் பொண்ணு வேணும்னே அந்த மாதிரி பண்ணி வேலைய விட்டே அனுப்பற மாதிரி பண்ணிட்டா.” என்றாள்.

“நிஜமாலுமே மாமா மேல எந்தத் தப்பும் இல்லைன்னா, அவர் அதை நிரூபிச்சிருக்கலாமே.” என்றாள் அஞ்சலி.

“ஹூம்ம்.. அதெல்லாம் வேலைக்கே ஆகல. என்ன சொல்லியும் யாரும் நம்பல. ஆனா, எனக்குத் தெரியும் என் செல்வத்தப் பத்தி, அவரு எந்தப் பொண்ணையும் தப்பா நினைச்சது கூட இல்ல. அப்படி இருக்கும் போது எப்படி தப்பா நடந்துக்க முடியும்.? அதை இப்போ வரைக்கும் என்னால ஏத்துக்க முடியல. ரொம்ப நாளா எந்த வேலையும் கிடைக்காம வீட்ல தான் இருந்தார். ஒரு நாள் திடீர்னு, எனக்கு குவாரில வேலை கிடைச்சிருக்கு. அக்கவுண்ட்ஸ் செக்ஷன்ல வேலைன்னு சொன்னார். சரி பரவால்ல எந்த வேலையுமே கிடைக்காம இருந்ததுக்கு, இந்த வேலையாவது கிடைச்சுதேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். ஆனா, போகப் போக அது சரியான வேலை இல்லன்னு அப்பறம் தான் தோணுச்சு. ஒரு சில சமயம் அவர் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருப்பார். காலேஜ்ல வொர்க் பண்ணும் போது கூட இந்த மாதிரி இருந்தது இல்ல. ஒரு நாள் என்னாச்சுன்னு கேட்டப்போ அவர் சொன்ன விஷயங்கள் தான் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.” என்று ஒரு நிமிடம் நிறுத்தினாள்.

“குவாரில என்ன நடந்த்து.? சொல்லு கா.” என்றாள் அஞ்சலி. இனியனும் அவள் சொல்லும் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.

“குவாரில நிறைய கொலைகள் நடக்குமாம். அவர் கண் முன்னாடியே எத்தனையோ பேர கொன்னு குவாரில இருக்கற ஏரில தூக்கிப் போட்டிருக்காங்களாம். இது எல்லாத்தையும் விட அந்தக் குவாரியே கவர்மெண்ட்க்கு தெரியாம இல்லீகலா நடத்திட்டு இருக்கறதா சொன்னாரு. அது தான் மிகப்பெரிய அதிர்ச்சி. எப்படி கவர்மெண்ட்டுக்குத் தெரியாம இல்லீகலா நடத்த முடியும்னு கேட்டேன். அது எம்.எல்.ஏ கனகவேல் பையன் பரமசிவனோடதுன்னு சொன்னார்.” என்று ஜானகி சொல்லிக்கொண்டிருக்க, இனியன் அதிர்ச்சியானான்.

“அக்கா, நீங்க என்ன பேர் சொன்னீங்க.? பரமசிவனா.?” என்றான் இனியன் அழுத்தமாக.

“ஆமா, பரமசிவன் தான். அவனோட குவாரிதான் அது. ரொம்ப அரசியல் செல்வாக்கு உள்ளவன். அவன மீறி வேலூர்ல எதுவும் நடக்காது. அதே மாதிரி அக்கவுண்ட்ஸ் கணக்கெல்லாம் அவனுக்கு தகுந்த மாதிரி மாத்தி குடுக்க சொல்வானாம். நிறைய கணக்கு கவர்மெண்ட்டுக்கு தெரியாமயே மடக்கிடுவானாம். இவருக்கு அதுல உடன்பாடு இல்ல. இப்படி ஒரு நேர்மையில்லாத, தப்பான வேலைக்கு போய் சேர்ந்துட்டோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டார். அதுக்கப்பறம் அந்த வேலைய விட்டுடறேன். வேற ஏதும் பார்த்துக்கலாம்னு சொன்னார். நானும், உங்க விருப்பப்படியே பண்ணுங்கன்னு சொன்னேன். அப்போ, வேலைய விட்டுடறேன்னு சொல்லிட்டு போனவர், அதுக்கப்பறம் அவசரமா எனக்கு போன் பண்ணி ஒரு விஷயத்த மட்டும் சொல்லிட்டு வேற எதையுமே பேசாம போன வைச்சுட்டார். அதுதான் அவர் என்கிட்ட கடைசியா பேசினது. அதுக்கப்பறம் நான் நான்..” என்று அவள் அழுக ஆரம்பித்தாள்.

“அக்கா, மாமாக்கு என்னாச்சு.? சொல்லு.?” என்று அவள் ஜானகியைப் பிடித்துக்கொண்டு கேட்க, “அவர ஒரு சாக்கு மூட்டைல கட்டி பொணமா என்னோட வீட்டு வாசல்ல வந்து போட்டாங்க. அதுல ரத்தக்கறையோட, உடம்பெல்லாம் காயத்தோட, பேச்சு, மூச்சில்லாம கிடந்தாரு. என்னால அதைப் பார்க்கவே முடியல. ஓன்னு கதறி அழுதேன். இப்பவும், என்னோட செல்வத்த கொன்னுட்டாங்கன்னு என்னால நம்ப முடியல.” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.

“என்னக்கா சொல்ற.? மாமாவ கொன்னுட்டாங்களா.?” என்ற அதிர்ச்சியில் அஞ்சலியும் அவளை சாய்த்துக்கொண்டு அழுதாள்.

“என்னால நம்ப முடியல கா. மாமாக்கு இப்படி ஒரு நிலைமையா.? உன்னை என்னால இப்படிப் பார்க்கவே முடியல.” என்று அழுதாள்.

“அஞ்சலி, அவங்களே அந்த மனவருத்தத்துல இருக்காங்க. நீயும் அவங்களோட சேர்ந்து அழுதா, அவங்களுக்கு யாரு ஆறுதல் சொல்லுவா.? முதல்ல நீ அழாம இரு.” என்று இனியன் சொல்ல, அழுகையை நிறுத்தியவள்,

“அக்கா, இங்க பாரு. நீ அழாத. மாமாவோட சாவுக்கு யார் காரணமோ அவங்கள நாங்க தண்டிக்கிறோம். கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை உண்டு.” என்றாள் அஞ்சலி ஒரு உறுதியுடன்.

“இல்ல, அஞ்சலி. நீ நினைக்கிறது தப்பு. அவன் அவ்ளோ சாதாரணமான ஆளு இல்ல. அவன் ரொம்ப அரசியல் செல்வாக்கு இருக்கறவன். அவன அவ்ளோ சீக்கிரம் நீ தண்டிக்க முடியாது.” என்றான் இனியன்.

அஞ்சலி ஆச்சர்யாமாகப் பார்த்தாள், “உனக்கு எப்படித் தெரியும் இனி.?” என்றாள்.

“நான் இப்போ கொஞ்ச நாளா டீல் பண்ற எல்லா கேஸ்லயும், அவன் ஏதோ ஒரு வகைல இன்வால்வ் ஆயிருக்கான். அவன் ரொம்ப டேஞ்சரான ஆளு. அவன நீ சாதாரணமா எடை போடாத. அவனுக்கு தேவையில்லாத எதுவும் இந்த உலகத்துல இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவன். ஒரு பூச்சிய நசுக்கற மாதிரி நசுக்கிட்டுப் போயிடுவான்.” என்று சற்று அவனைப் பற்றி மிரட்டலாகவே சொன்னான் இனியன்.

“அவன் ஒண்ணும் கடவுள் இல்லையே. அவன எதுவுமே பண்ண முடியாதுன்னு நீ எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற.? என்னைக்கு இருந்தாலும், அவனும் செத்து தான் போகணும். அவனும் சாதாரண மனுஷன் தான். இந்த மாதிரி உருவான பல ஆட்கள் இன்னைக்கு ஆளே தெரியாம அழிஞ்சி போயிருக்காங்க. அதனால, அவனுக்கெல்லாம் நாம பயப்படக் கூடாது.” என்றாள் நெஞ்சில் ஒருவித துணிவோடு.

“இல்ல அஞ்சலி. அவர் சொன்னதும் சரிதான். அவன நீ அவ்ளோ ஈசியா நினைக்காத. இப்போ என்னோட நிலைமை என்னாச்சுன்னு பார்த்தியா.? நீங்க அவன்கிட்ட ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும்.” என்று எச்சரித்தாள் ஜானகி.

“சரி கா. நீ எப்படி என்னைத் தேடி வந்த.? நான் இங்கதான் இருக்கேன்னு உனக்கு எப்படித் தெரியும்.?” என்றாள் அஞ்சலி.

“ஒரு நாள் நீ சப்-கலெக்டரா பதவியேத்திருக்கன்னு கேள்விப்பட்டேன். அப்பறம், இவர நீ கல்யாணம் பண்ணிட்டன்னு நம்ம ஊரு கோயிலுக்கு வந்தப்போ, நம்ம பக்கத்து வீட்டு பாட்டி சொன்னாங்க. காஞ்சிபுரத்துல தான் இருக்கீங்கன்னும் கேள்விப்பட்டேன். உன்னை திரும்பவும் பார்க்கணும்னு நான் நினைச்சதில்ல. ஆனா, விதி என்னோட வாழ்க்கைல ரொம்ப விளையாடிடுச்சு. அது உன்கிட்டயே வரவைச்சிடுச்சு.” என்றாள்.

“சரி, உன்னை யார் துரத்துனது.? உன்னை ஏன் துரத்தணும்.?” என்றாள் திரும்பவும் கேள்வியுடன்.

“வேற யாரு, அந்த பரமசிவனோட ஆட்கள் தான். அவரோட போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட் வந்ததும், என்னை விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போறதா சொல்லி அவனோட கஸ்டடிக்கு கூட்டிட்டு போனாங்க. அவர் ஏதோ ஆதாரத்தை இவங்ககிட்ட இருந்து எடுத்துட்டதா சொன்னாங்க. அதை எங்க வைச்சிருக்கான்னு சொல்லுன்னு அவன் என்னை மிரட்டினான். அப்போ தான் அவர் என்கிட்ட கடைசியா சொன்னது ஞாபகம் வந்துச்சு. ஆனா, நான் அப்படி எதுவும் எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டேன். ஆனா, அவங்க என்னை நம்பல. அதுக்கப்பறம் என்னை விட்டுட்டாலும், என்னை எங்க போனாலும் சில ஆளுங்கள விட்டு ஃபாலோ பண்ண வைச்சான். அத விட மோசம். அவன் அன்னைக்கு வீட்டுக்கே வந்துட்டான். நீ தான் தனியா இருக்கயே, என் பொண்டாட்டி கூட நான் இல்ல. தனியா தான் இருக்கேன். நான் வேணும்னா உன்னை வைச்சுக்கறேன். என் கூட வான்னு என்னை அசிங்கப்படுத்திட்டான்.” என்று அழுதாள்.

அஞ்சலிக்கு கோபம் பொங்கியது. ஜானகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பவும் சொன்னாள். “எனக்கு அழகான பொண்ணுங்கள விட, இப்போ உன்னை மாதிரி கல்யாணம் ஆனாலும், தனியா இருக்க பொம்பளைங்களத்தான் புடிக்குது. நீ இன்னும் அழகா தான் இருக்கே. வான்னு என் கையப் புடிச்சு இழுத்தான். நான் அவன அடிச்சிட்டேன். என்னை அப்போதைக்கு சிரிச்சிட்டே விட்டுட்டான். ஆனா, அதுக்கப்பறம் தான் ரொம்ப டார்ச்சர் பண்ணான். எங்க போனாலும், அவங்க ஆளுகள விட்டு ஏதாவது எனக்கு பிரச்சினை உண்டு பண்ற மாதிரி செஞ்சான். என்னால, வெளிய கடைக்கு கூட போக முடியல. ஸ்கூல்ல போனா, அங்கயும் வந்துடுவானுங்க. என்னால இருக்கவே முடியல. பேசாம செத்து போயிடலாமான்னு தோணும். இன்னைக்கு தான் ஒரு முடிவெடுத்து உன்னைப் பார்க்கலாம்னு நினைச்சு வீட்ட விட்டு கிளம்பினேன். ஆனா, வழக்கம் போல என்னை அவனுங்க ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. வேலூர்ல இருந்து காஞ்சிபுரம் பஸ் ஏறி வர வரைக்கும் ஃபாலோ பண்ணாங்க. பஸ் ஸ்டேண்ட்ல இருந்து வர வழி முழுக்க கூப்டுட்டே வந்தாங்க. உங்களோட அட்ரஸைக் கூட என்னால அந்த இருட்டுல பார்க்க முடியல. ஒரு கட்டத்துல நான் ஓட ஆரம்பிச்சேன். அவனுங்களும் விடாம துரத்துனாங்க. எப்படியோ கஷ்டப்பட்டு அலைஞ்சு, திரிஞ்சு உன் வீட்டுக்கு வந்துட்டேன் அஞ்சலி.” என்று மூச்சிறைக்க தான் அவளைத் தேடி வந்த கதையை சொல்லி முடித்தாள் ஜானகி.

நீங்க எல்லாரும் என்கூட இருந்தப்போ எனக்கு அருமை தெரியல. நீங்க தூரமா போனதுக்கப்பறம் தான், எனக்கு எல்லாமே புரிஞ்சது. நிஜமா இப்போ நான் அனுபவிக்கிற எல்லா கஷ்டங்களும் நான் உனக்கும், அம்மா, அப்பாக்கும் மனசளவுல கொடுத்த வேதனைதான் காரணம். எனக்கு எல்லாமே வேணும்.” என்று தலையை அடித்துக்கொண்டாள்.

“ஏய். அக்கா. போதும். அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. ஏதோ அப்போ நீ அப்படி இருந்த. ஆனா, இப்போ நடக்கறதுக்கு நீ காரணம் இல்ல. நீயே உன்ன ப்ளேம் பண்ணிக்காத. விடு. அவனுக்கு என்ன ஒரு திமிரிருந்தா உன்னை வைச்சுக்கறேன்னு சொல்லிருப்பான். பொம்பளைங்கள இந்த மாதிரி பார்க்கறவனுங்க அழிஞ்ச கதை இவனுக்கு இன்னும் தெரியல. அவன நாங்க பார்த்துக்கறோம். நீ நாளைக்கு இனியனோட கமிஷனர் ஆஃபீஸூக்குப் போய் ஒரு கம்ப்ளைண்ட் குடு. அதே மாதிரி நான் என்ன ஆக்‌ஷன் எடுக்க முடியுமோ பார்க்கறேன்.” என்றாள் அஞ்சலி.

“என்ன இனி, நீ எதுவுமே பேச மாட்டிங்கற.? ஏதாவது சொல்லு.” என்றாள்.

“அதெல்லாம் இருக்கட்டும். அக்கா மொதல்ல சாப்பிட்டாங்களா, இல்லையான்னு பார்க்க மாட்டியா.? கொஞ்சம் முன்னாடி தான சொல்லிட்டிருந்த. அக்காக்கு சப்பாத்தி சுட்டு கொடு போ.” என்றான்.

“ஆங். ஆமா கா. நீ போய் கொஞ்சம் முகம், கை காலெல்லாம் கழுவிட்டு வா. நான் உனக்கு டிபன் எடுத்து வைக்கறேன். முதல்ல சாப்பிடு.” என்றபடி அவளுக்கு பாத்ரூமைக் காட்டிவிட்டு அவளுக்கு சப்பாத்திகளைப் போடச் சென்றாள் அஞ்சலி.

ஒரு பக்கம், இனியன் அவளிடம் மாற்றிப் பேசி சமாதானத்திற்கு சொல்லி விட்டாலும், அவனுக்கு பரமசிவன் இனி என்ன செய்வானோ.? என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. இனி, பரமசிவனின் ஆட்டத்தை இருவரும் பார்க்கத்தான் வேண்டும்.



(தொடரும்...)
 
Last edited:
Top