Aathirai
Active member
அத்தியாயம் 16
கண் விழித்த போது மணி 7.30 ஐக் கடந்திருந்ததை அறிந்து அதிர்ந்து எழுந்தாள் அஞ்சலி. “என்ன செய்வேன்.? இத்தனை நேரமாகவா தூங்கியிருக்கிறேன். அதுவும் உட்கார்ந்த நிலையில் தானே இருந்தேன். எப்போது தலையணையில் படுத்து உறங்கினேன்.? இந்த இனி எங்கே சென்றான்.?” என்று நினைத்தவாறே எழுந்து பாத்ரூமில் பார்த்தாள். அங்கே இல்லை அவன்.
ஒருவேளை இன்று சீக்கிரமே கிளம்பி விட்டானோ.? எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டான். தன் மேல் அத்தனை கோபமாய் உள்ளானோ.? ஹூம்ம்.. என்ன இருந்தாலும், தான் அப்படிச் செய்தது தவறு தான் என்று மனம் உறுத்தியது. அவன் இப்படிச் செய்திருந்தால், தான் மன்னிப்பேனா.? அது போல் தானே அவனுக்கும். கடவுளே கருணை காட்டு.
என்றபடியே வெளியே வந்தவள், ஷோஃபாவில் ஜானகி அவள் கொண்டு வந்திருந்த பையோடு அமர்ந்திருந்தாள். இவள் எப்போது வெளியே வருவாள் என்று காத்திருந்திருக்கிறாள் போலும், அவள் வந்ததும் எழுந்தாள்.
“அக்கா, நீ என்ன பேக் கையுமா எங்க கிளம்பிட்ட.? அவரப் பார்த்தியா.?” என்றாள் அஞ்சலி.
“அவர் முன்னாடியே கிளம்பிப் போயிட்டார். நான் கிளம்பறேன் அஞ்சலி.” என்று கிளம்ப எத்தனித்தவளைத் தடுத்தவாறே கேட்டாள் அவள்.
“எங்க கிளம்பிட்ட கா.? நான் தான் நீ இங்கயே இருன்னு சொன்னேன்ல. எங்க போவ.? அந்த பரமசிவன் ஆளுக உன்னைப் பார்த்தா பிரச்சினை ஆயிடும்.” என்றாள்.
“ஆனா, நான் வந்ததுல இருந்து உனக்குப் பிரச்சினையா இருக்கு. அதுக்கு நான் அவன் கிட்டயே மாட்டி செத்தாலும் பரவால்ல.” என்று கொஞ்சம் கோபமாகப் பேசினாள்.
“அக்கா, இப்போ யார் அப்படின்னு சொன்னா.? அதுக்கு நான் தான் காரணம். உன் மேல எந்தத் தப்பும் இல்ல. இப்போ தான் ரெண்டு நாளா உன்னை வேற அக்காவா பார்க்கறேன். திரும்பவும் பழைய அக்காவா மாறிடாதே. நீயும் இல்லன்னா அவ்ளோதான்.” என்றாள்.
“அப்போ, இனியன் வேண்டாமா உனக்கு.? நான் மட்டும் போதுமா.? சொல்லு.” என்றாள் ஜானகி.
“அக்கா. நான் அப்படி சொல்லல. அப்பா, அம்மாவும் இல்ல. நீயாவது எனக்கு இருக்கணும்னு நினைச்சேன். அதுக்குத் தான் அப்படி சொன்னேன்.” என்றாள் அஞ்சலி.
“இல்ல அஞ்சலி. இப்போ உனக்கு இனியன் தான் முக்கியம். நாங்க எல்லாருமே அப்பறம் தான். அத முதல்ல நீ புரிஞ்சுக்கோ. கூட வாழற வாழ்க்கைத்துணை இல்லைன்னா அது எவ்வளவு கொடுமையா இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். அம்மாவும் இதே வலிய அனுபவிச்சாங்க. இப்போ நான் அனுபவிக்கிறேன். எங்க நிலைமை உனக்கு வரக் கூடாது. ஒழுங்கா கிடைச்ச நல்ல வாழ்க்கைய வாழப் பாரு. எனக்காக நீ உன் வாழ்க்கைய கெடுத்துக்காத. அதனால தான் நான் கிளம்பறேன்.” என்றாள்.
“சரி கா. கிளம்பி எங்க போவ.? நீ அவன் கிட்ட மாட்டிக்கிட்டா நான் என்ன பண்றது சொல்லு.? அதுக்குத்தான் நான் இனியன் கிட்ட கூட சொல்லாம ட்ரான்ஸ்ஃபர்க்கு அப்ளை பண்ணேனா.? நீயும் நிம்மதியா இருக்கணும்னு நினைச்சேன். அதுவும் இல்லாம அவன் தப்பானவன் தானே, அவன தண்டிக்கனும்னு நான் நினைக்கறத ஏன் தப்புன்னு நீங்க நினைக்கறீங்க.? அதுதான் எனக்குப் புரியல.” என்றாள் அஞ்சலி.
“அஞ்சலி. அது உனக்கு ஒத்து வராத ஒரு வேலை. நீ யார வேணும்னாலும் தண்டிக்கலாம், தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். ஆனா, இவன நீ எதுவுமே பண்ண முடியாது. அந்த அளவுக்கு இவன் ரொம்ப டேஞ்சரான ஆளுங்கறதால தான் நாங்க எல்லாரும் இவ்ளோ தூரம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கோம். ஆனா, நீ புரிஞ்சுக்க மாட்டிங்கற.” என்றாள் ஜானகி.
“சரி கா. நான் பண்ணது தப்பு தான். இனிமேல் நான் இந்த விஷயத்த விட்டுடறேன். நான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரக் கூட வாபஸ் வாங்கிடறேன். சரியா. இப்போவாது நீ இங்கயே இரு.” என்று கெஞ்சினாள்.
“இல்ல, அஞ்சலி. நான் இங்க இருக்க ஒரு மாதிரியா இருக்கு. நான் நம்ம ஊருக்கே போயிடறேன். அங்க கண்டிப்பா நான் சேஃபா தான் இருப்பேன். அதனால தான் நானும் கிளம்பறேன்.” என்றாள் ஜானகி.
“சரி, இரு நானே உன்னைக் கூட்டிட்டு போறேன். நீ தனியாப் போனா, கண்டிப்பா அவங்க கண்ணுல பட்டுடுவ.” என்று அவளை அப்போதைக்கு சமாதானம் செய்து இருக்கச் சொன்னவள், குளித்து முடித்து ரெடியாகி ஹாலுக்கு வந்தாள்.
“நானே என்னோட ஆஃபீஸ் கார்ல உன்னைக் கொண்டு போய்விடச் சொல்றேன். நீயா அவசரப்பட்டுப் போகாத. ப்ளீஸ்..” என்றாள்.
“சரி..” என்று தலையை ஆட்டியவள் அவளுடன் சென்றாள் ஜானகி. இருவரும் அவளின் அலுவலக வண்டியில் கிளம்பினர். அதில் அவள் மட்டுமே இருப்பதாய் தான் அனைவருக்கும் தெரியும் என்பதால் எவருக்கும் சந்தேகம் வருவதற்க்கான வாய்ப்புகள் இல்லை.
அவள் கலெக்டர் ஆஃபீஸ் சென்றதும், அங்கே அவளைக் கொண்டு போய் விடுவதற்க்கு ஆஃபீஸில் உள்ள மற்றொரு வண்டியை ஏற்பாடு செய்து திருப்பத்தூருக்கு அனுப்பி வைத்தாள். அந்த டிரைவர் நன்றாகப் பழக்கமானவர், நம்பிக்கையானவர் என்பதாலேயே ஜானகியை அவரோடு அனுப்பி வைத்தாள்.
அதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று அஞ்சலி நினைத்தது தான் தவறு. அங்கே இதையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் உடனே தன் செல்போனை எடுத்து டயல் செய்தான். எதிர்முனை அடித்துக் கொண்டே இருந்த சில நொடிகளுக்குப் பிறகே எடுக்கப்பட்டது.
“சொல்லுடா.. என்ன மேட்டரு..?” என்று எதிர்முனையில் ஒருவன் கேட்க,
“அண்ண இருக்காரா.? அவர்கிட்ட பேசணும்.” என்றான்.
“அண்ண அவன் உங்ககிட்ட ஏதோ பேசணுமாம்.” என்று நீட்டினான்.
“ம்ம். சொல்லுடா.. என்ன விஷயம்.?” என்றான் அவன் கெத்தாக காலை எடுத்து மேலே வைத்தவாறு.
“அண்ண, அந்த சப்-கலெக்டர் அவ அக்காவ ஒரு கார்ல ஏத்தி அனுப்பிட்டா. எங்க அனுப்பினான்னு தெரியல. நீங்க பாத்துக்கோங்க.” என்றான்.
“அத விட்றா. அது ஒரு சப்ப கேஸூ. இனி நமக்கு அவ உதவ மாட்டா. புதுசா வந்திருக்காளே, அந்த சப்-கலெக்டர். அவ தான் இனி என் டார்கெட்டே. அதுக்கான ஏற்பாட்டையும் நான் ஏற்கனவே பண்ணியாச்சு. நீ ஒண்ணும் கவலப்படாத. போன வை. வேற ஏதாச்சும் இண்ட்ரஸ்டிங்கான விஷயம்னா போன் பண்ணு. சரியா..” என்றபடி வில்லத்தனமான சிரிப்பை உதிர்த்தபடி போனை வைத்து சுழட்டிக்கொண்டிருந்தான் பரமசிவன்.
கலெக்டர் அலுவலகத்தில் வேறு வேலையாக இருந்த அஞ்சலியை கலெக்டர் அழைப்பதாய் தகவல் வர, அங்கே சென்றாள். மனதில் ஒருவித குழப்பம். அவர் ட்ரான்ஸ்ஃபர் கிடையாது என்று சொல்லிவிட்டால் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஒருவேளை கிடைத்திருந்தால் என்ன செய்வது.? என்ற குழப்பத்துடனேயே சென்றாள்.
“எக்ஸ்கியூஸ் மீ சார்.” என்று அவரின் அனுமதியுடன் உள்ளே நுழைந்தாள் அஞ்சலி. அவள் தலையை மட்டுமே ஆட்டினார். அவர் முகத்தில் ஒருவித கவலை ரேகைகளை அவளால் பார்க்க முடிந்தது.
“சார் கூப்பிட்டீங்கன்னு சொன்னாங்க. ஏன் சார் ரொம்ப டல்லா இருக்கீங்க.?” என்று கேட்டு விட்டாள்.
அவர் ஒரு கவரை எடுத்து நீட்டினார். “இந்தாங்க.” என்றார். அதை வாங்கி பிரித்துப் பார்த்தவளுக்கு சந்தோஷம். “ரொம்ப நன்றி சார். அக்காவுக்கு இவ்ளோ சீக்கிரம் ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை. ரொம்ப சந்தோஷம்.” என்று அவள் சிரித்தாலும், அவர் முகத்தில் மட்டும் எந்த வித சலனமும் இல்லை.
“இந்தாங்க. இதுவும் உங்களுடையது தான்.” என்று இன்னொரு கவரையும் நீட்டினார்.
அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள். அவள் கேட்ட அதே ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வேலூருக்கு. எதை மனதில் நினைத்து பயந்துகொண்டே வந்தாளோ, அது நிஜமாகிவிட்டது. வேண்டாம் என்று சொல்ல நினைத்தவளுக்கு இப்போது என்ன சொல்வது என்று குழப்பமாய் இருந்தது.
வேண்டாம் என்று சொல்லி விடலாமா.? அவர் என்ன நினைப்பார்.? ஆனால், மற்றொரு பக்கம் இனியனை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அந்த பயம் முன்னரே இருந்திருந்தால் பரவாயில்லை. இப்பொழுது நினைத்து என்ன பயன்.? இனி என்ன செய்வது.? யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தவளை கலெக்டர் தணிகாசலம் பார்த்தார்.
“என்ன அஞ்சலி. இப்போ சந்தோஷமா.? ஒரே நேரத்துல நீங்க கேட்ட இரண்டு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர்ஸ் உங்க கைல இருக்கு. நெக்ஸ்ட் வீக் நீங்க ஜாயின் பண்ணனும். இது என்னால தான் கிடைச்சதுன்னு நீங்க நினைச்சிட்டிருப்பீங்க. ஆனா, அது உண்மையில்ல. இது சாத்தியப்படாத விஷயம். ஆனா, அதை சாத்தியப்படுத்தறது அந்தப் பரமசிவனால தான் முடியும்.” என்று அவர் சொல்ல, அதிர்ந்தாள் அஞ்சலி.
“நான் தான் அன்னைக்கே சொன்னேனே அஞ்சலி. அவன சாதாரணமா எடை போடாதீங்க. நீங்க நேத்து தான் கேட்டீங்க. ஆனா, இன்னைக்கு எனக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லி ஆர்டர் வந்திருக்குன்னா, அப்போ அவனுடைய காதுகளுக்கு அந்த நியூஸ் போயிருச்சுன்னு தானே அர்த்தம். அவனுக்கு உங்களப் பத்தின எல்லா இன்ஃபர்மேஷனுமே நேத்தே போயிருக்கும். அவன் ரொம்ப ஃபாஸ்ட். நீங்க இனிமேல் என்ன பண்ணப் போறீங்கன்னு நினச்சாதான் கவலையா இருக்கு.” என்று வருத்தப்பட்டார்.
முதலில் அமைதியாய் இருந்தவள், ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “சார். விடுங்க. நான் தானே விரும்பிக் கேட்டேன். அது கிடைச்சிருக்கு. இதுல நீங்க கவலைப்படறதுக்கு என்ன இருக்கு.? நான் கண்டிப்பா இத ஹேண்டில் பண்ணிக்கறேன் சார். நான் பார்த்துக்கறேன். எனிவே. தேங்க் யூ சோ மச் சார்.” என்றபடி அவரிடமிருந்து விடைபெற்றாள்.
வரும் போது இரண்டு கவர்களையும் வைத்துக்கொண்டே யோசித்துக்கொண்டே வந்தவளின் எண்ணங்கள் முழுவதும் இப்போது இனியன் மட்டுமே இருந்தான். அவனிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வது.
நேற்றே அப்படிக் கோபப்பட்டானே, இன்றோ இது நடந்தே விட்டது என்றால், அவனின் கோபம் இன்னும் தலைக்கே ஏறிவிடும் என்று தோன்றியது. வேறு வழியில்லை. சமாளித்துதான் ஆக வேண்டும் என்று நினைத்தபடியே தன் அறையின் இருக்கையில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி.
(தொடரும்...)
Last edited: