Aathirai
Active member
அத்தியாயம் 17
ஒரு வித படபடப்பும், குழப்பமும் மனதில் ஓட என்ன செய்வதென்று தெரியாமல், கிடைத்த ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரையே கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சலி.
திருப்பித் திருப்பி அதை வைத்து வாசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். கடைசியாக கலெக்டர் சார் சொன்னதைப் போல் சற்று கவனமாகத் தான் இருந்தாக வேண்டும் என்று தோன்றியது.
அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தவளின் அலைபேசி மணி அடிக்க, பதட்டத்துடன் எடுத்துப் பார்த்தவள் ஒரு சிறு புன்னகையை உதிர்த்தவாறே, “ஹலோ.. சொல்லு மைதிலி.” என்றாள்.
“எப்படி இருக்க அஞ்சலி.? ரொம்ப நாளாச்சு உன் குரலைக் கேட்டு.” என்று அக்கறையாய்க் கேட்டாள் மைதிலி.
“நல்லா இருக்கேன் மைது. நீ எப்படி இருக்க.? உனக்கு வொர்க் எப்படிப் போகுது.? நீ தான் கடலூரையே கலக்கிட்டு இருக்கன்னு கேள்விப்பட்டேன்.” என்றாள்.
“ஹூம்ம்.. நான் கடலூரைக் கலக்கறது இருக்கட்டும். கலெக்டர் அம்மா அடுத்து வேலூரைப் போய் கலக்கப் போறீங்களாமே.? நிஜமா.?” என்றாள் ஒரு கேள்வியுடன்.
“இனி உனக்கு போன பண்ணானா.?” என்றாள்.
“ஏய்.. அவன் உனக்கு ஹஸ்பெண்ட் டி. நீ என்னடான்னா அவன், இவங்கிற.?” என்றாள்.
“ப்ச்ச்.. பேச்ச மாத்தாத. மரியாதையெல்லாம் மனசுல இருக்கு. நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு. இனி போன் பண்ணானா.?” என்றாள் அஞ்சலி.
“அவன் ஒன்னும் போன் பண்ணி உன்னைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ணல. நான் தான் எதேச்சையா ஒரு கேஸ் விஷயமா இனியனுக்குக் கூப்பிட்டேன். அப்போதான் ஒரு மாதிரியாவே பேசினான். ரொம்ப ஃபோர்ஸ் பண்ணிக் கேட்டப்போ தான் நடந்த விஷயத்த சொன்னான் .” என்றாள் மைதிலி.
“ஆமா, நேத்து நைட்ல இருந்து ஒரே கோபம். நான் தான் ஏதோ அவசரத்துல ட்ரான்ஸ்ஃபர் கேட்டுட்டேன். அதுக்கு ஏன் இவன் இப்படிப் பண்றான்னு தெரியல.” என்றாள் அஞ்சலி சலித்துக்கொண்டே..
“நீ பண்ண வேலைக்கு நானா இருந்தா ஓங்கி ரெண்டு அறை அறைஞ்சிருப்பேன். அவனா இருக்கறதால பேசாம இருக்கான். அதை நினைச்சு நீ சந்தோஷப்படு.” என்ற மைதிலியின் பேச்சைக் கேட்டு கண்களை அகல விரித்தாள் அஞ்சலி.
“ஏன் மைது.? நீ கூட என்னைத் திட்டற.?” என்றாள் பாவமாக.
“ஆமா, நீ அப்படித்தான் பண்ணிருக்க. சும்மா கிடந்த சனியன எடுத்து பனியன்ல போட்ட கதையாத்தான் இருக்கு இப்போ நீ பண்ணிருக்க விஷயம்.” என்றாள்.
“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்.?” என்றாள்.
“என்ன பண்ணல நீ.? அந்தப் பரமசிவனப் பத்தி உனக்குத் தெரியாத பல விஷயங்கள நாங்க எத்தனை வருஷமா பார்த்துட்டிருக்கோம் தெரியுமா.? சொல்லப்போனா, எங்க ஊரு வேலூர். நானே சொல்றேன். அவன் ரொம்ப மோசமானவன். அவனுக்கு ஈவு, இரக்கமெல்லாம் பார்க்கத் தெரியாது. அவன் ஒருத்தர டார்கெட் பண்ணிட்டா அவங்க உயிரோட இருக்கறது கொஞ்ச நாளைக்குத்தான். உன்னோட ஒவ்வொரு அசைவையும் அவன் நோட் பண்ணிட்டு இருப்பான். நீ என்ன பண்ணப் போறன்னு நினைச்சா எனக்கே பயம்மா இருக்கு அஞ்சலி. தேவையில்லாம நீ தலையிட்டத நினைச்சுத் தான் இனியன் உன் மேல கோபமா இருக்கான். அவனோட கோபத்துல நியாயம் இருக்கு.” என்றாள் மைதிலி.
“இல்ல மைது, அவன் என் அக்காவோட வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிட்டான். அதுவும், அவள ரொம்பத் தப்பா பேசிருக்கான். அந்த மாதிரி உன்னை யாராவது பேசினா உனக்குக் கோபம் வராதா.?” என்றாள்.
“எனக்குக் கோபம் வரது இருக்கட்டும். அதைக் கேட்டு உங்க அக்கா என்ன பண்ணாங்க.? நீயே சொல்லிருக்க, உங்க அக்கா எப்படிப் பட்டவங்கன்னு.? அவ்ளோ மோசமா இருந்தவங்களே இப்போ அவனோட பேச்சுக்கு அடங்கி உன்கிட்ட வந்திருக்காங்கன்னா, அவன் எந்த அளவுக்கு மோசமானவன்னு நீதான் தெரிஞ்சுக்கணும். உனக்கு இப்போ புரியாது. அவன் இன்னும் என்னென்னவெல்லாம் பண்ணப் போறானோன்னு நினைச்சாத்தான் கவலையா இருக்கு.” என்றாள் மைதிலி
“மைது. எப்படி சொல்றது.? நான் கேட்ட ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துடுச்சு. நேத்து தான் இதைப் பத்தி கலெக்டர் சார்கிட்ட பேசினேன். ஆனா, அதுக்குள்ள எப்படி இது நடந்துச்சுன்னு ஆச்சர்யமா இருந்துச்சு.” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க,
இடையில் மைதிலி, “அது பரமசிவனோட வேலை தான். அவன் தான் உனக்கு அத வாங்கிக் கொடுத்திருக்கான். அவனால தான் இவ்வளவு சீக்கிரமா அதைப் பண்ண முடியும். இதுலயே நீ அவனப் பத்தி தெரிஞ்சுக்கோ. அவன் உன்னை டார்கெட் பண்ணிட்டான் அஞ்சலி. அது மட்டும் தெரியுது. நீ என்ன பண்ணுவியோ தெரியல.? எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு. சரியா.? எதுவா இருந்தாலும், இனியன் கிட்ட சொல்லிட்டு பண்ணு. அவன் கூடவே இரு. அதுதான் உனக்குப் பாதுகாப்பு. என்ன.?” என்று எச்சரித்தாள் மைதிலி.
“ஆனா, நான் அடுத்த வாரமே அங்க போயாகணும். இனி இங்க தான் இருப்பான். என்ன பண்றது.?” என்றாள் அவளிடம்.
“ம்ம்ம்.. இப்போ வந்து என்கிட்ட கேளு. இதை மொதல்லயே யோசிச்சிருக்கணும். இனியன் நைட் வந்து உன்கிட்ட சொல்வான் கேட்டுக்கோ. பை..” என்று சொல்லி கடுப்பில் போனை வைத்துவிட்டாள் மைதிலி.
அஞ்சலிக்கு என்னவோ போல் இருந்தது. “அவன் உன்னை டார்கெட் பண்ணிட்டான் அஞ்சலி” என்று மைதிலி சொன்ன வார்த்தைகள் மட்டுமே அவள் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன.
இந்தப் பிரச்சினையை சமாளிப்பது அப்பறம் இருக்கட்டும். இன்று இரவு இனியனை எப்படி சமாளிப்பது.? என்றுதான் அவளின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். இனியனின் ஜீப் சத்தம் கேட்டதும் வெளியே ஓடி வந்தாள். அவனோ இவளைக் கண்டுகொள்ளாமல் ஏதோ ஒரு கவரைத் தூக்கிக்கொண்டு நேரே உள்ளே சென்றான்.
“ஹூம்ம்ம்.. ரொம்பத் தான் பிகு பண்றான்..” என்று நினைத்தபடியே அவன் பின்னலேயே வந்து கதவைச் சாத்தினாள். ஓடிப் போய் அவனை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று அவள் நினைத்த போது, அவனோ உள்ளே சென்று அறையின் கதவைத் தாளிட்டுக் கொண்டான்.
“ச்சே.. ஏன் தான் இவன் இப்படிப் பண்றான்.? கடவுளே..” என்று நொந்து கொண்டாள்.
மீண்டும் போய் கிச்சனில் சமைக்கச் சென்று விட்டாள். எல்லாம் தயாரானதும் அதைக் கொண்டு வந்து மேசை மேல் வைத்தாள். அவன் எப்போது கதவைத் திறப்பான் என்று காத்திருந்தாள். ரூமையே பார்த்துக்கொண்டிருந்தவள், அவன் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டவுடன் ஓடிப் போய் அவன் மார்பில் சாய்ந்து கட்டிக்கொண்டாள்.
இதை எதிர்பார்க்காதவன், “ஏய்.. விடு அஞ்சலி. ப்ளீஸ் விடு..” என்று அவளின் கைகளை விடுவிக்க முயல, அவளோ இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தாள் அவனை. இந்த முறை அவளின் உடும்புப் பிடியில் அவன்.
ஒரு புறம் அவளின் செயலை நினைத்து அவனுக்கு சந்தோஷமாக இருந்தாலும், மற்றொரு புறம் அவள் மேல் இன்னும் கோபம் இருக்கத்தான் செய்தது. அவள் பிடித்திருப்பதைச் சேர்த்து அவளை அப்படியே அணைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான். ஆனால், கோபம் வந்து முன்னே நின்று வேண்டாம், வேண்டாம் என்று சொன்னது.
“இப்போ, விடப்போறியா இல்லையா.?” என்று அவளை தள்ள முயன்று பொய்க்கோபத்தைக் காட்டினான்.
“ம்ஹூம்ம்ம்.. விடமாட்டேன். நீ பேசறேன்னு சொல்லு. அப்போதான் விடுவேன்.. சொல்லு..” என்று விடாப்பிடியாய் நின்று கொண்டிருந்தவளை தள்ள முயன்று தோற்றுப் போனான் இனியன்.
“சரி.. விடு.. நான் பேசறேன்..” என்றான்.
“இல்ல.. என் மேல ப்ராமிஸ் பண்ணு. அப்போதான் நம்புவேன்.” என்றாள் இன்னும் அவனை விடாமல் பிடித்துக்கொண்டே.
“அப்படியெல்லாம் ப்ராமிஸ் பண்ண மாட்டேன். அது எனக்குப் புடிக்காத விஷயம். நான் சொல்லிட்டேன் இல்ல. நம்ப மாட்டியா.? விடு..” என்று கொஞ்சம் வேகத்தில் அவளைத் தள்ளி விட,
விழப் போனவளை “ஏய்ய்.. ஏய்...” என்று தாங்கிப் பிடித்தான். அவளோ சிரித்தபடி அவனை அப்படியே பிடித்து முத்தமிட்டாள். அதுவரை அவள் மேல் இருந்த கோபம் எல்லாம் எங்கே போனது என்றே தெரியாதபடி அவன் புன்னகைக்க, தொடர்ந்து முத்த மழையைப் பொழிந்தாள் அவள்.
இப்போது தான் அவனின் முகம் பழையபடி எப்பொழுதும் போல இருந்தது. நேற்று இரவிலிருந்து உர்ரென்று இருந்த அவன் முகத்தைக் காணச் சகிக்கவில்லை. இப்பொழுது தான் கொஞ்சம் மனது லேசானது அஞ்சலிக்கு. ஒரு வழியாக சமாதானம் ஆகிவிட்டான் என்று சந்தோஷப்பட்டாள்.
“ம்ம்.. சமாதானமாகிட்டேன்னு ரொம்ப சந்தோஷப்படாத. அப்படி, இப்படி ரொமான்ஸ் பண்ணி என்னை சமாதானப்படுத்திட்ட. ஆனா, உன்னை அடிச்சு, துவைக்கற அளவுக்கு கோபம் இருந்துச்சு.” என்றான்.
“சரி விடு. அதான் சாரி சொல்லிட்டேன் இல்ல. உன்னை சமாதானப்படுத்த என்னென்னவெல்லாம் பண்ணிருக்கேன். இதுவரைக்கும் லைஃப்ல யாரையும் இந்த அளவுக்கு சமாதானப்படுத்த நான் ட்ரைப் பண்ணதே இல்ல. நீதான் ஃபர்ஸ்ட் தெரியுமா.?” என்றாள்.
“ஓ.. எல்லாரையும், இப்படி தான் ஹக் பண்ணி, கிஸ் பண்ணி சமாதானப்படுத்துவியா.?” என்றான் நக்கலாக.
“ஏய்.. ச்சீ.. வாய மூடு. நான் அப்படியா சொன்னேன். பொதுவா சொன்னேன். உன்னை மட்டும் தான் இந்த மாதிரி சமாதானப்படுத்த முடியும்.” என்று வெட்கத்துடன் சிரித்தாள்.
“ஓ..ஓ.. வெட்கம் வந்துடுச்சு.. சரி, சரி அதெல்லாம் ஓரங்கட்டு. நான் ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட சொல்லணும்.” என்றான் அவளைப் பிடித்துக்கொண்டே.
இவனென்ன நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தேனோ, அதை சொல்கிறானே.? என்று அவனைப் புரியாமல் பார்த்தாள்.
“நீ கேட்ட விஷயம் இப்போ எனக்கு நடந்துடுச்சு.” என்றான்.
“என்ன விஷயம் நடந்துச்சு.?” என்று புருவத்தை சுருக்கிக் கேட்டாள்.
“ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சிருக்கு எனக்கு.” என்றான் அவன்.
“என்ன சொல்ற.? ட்ரான்ஸ்ஃபரா எதுக்கு.?” என்றாள்.
அவன் நேற்று இரவு நடந்ததை விவரித்தான். “அய்யோ.. மினிஸ்டர் பையனையே அடிச்சிட்டியா.? யாருன்னு தெரியாம அடிச்சதுக்கு ட்ரான்ஸ்ஃபரா.?” என்றாள் கண்களை அகல விரித்துக்கொண்டே..
“ம்ம்ம்..” என்று தலையாட்டினான்.
“எந்த ஊருக்கு ட்ரான்ஸஃபர் பண்ணிருக்காங்க.?” என்று தனது அடுத்த கேள்வியைக் கேட்க,
“அந்த மினிஸ்டரோட கோபம் எப்படி இருக்கும்னு அவர் ட்ரான்ஸஃபர் பண்ணதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன். அவர் அந்தப் பரமசிவன்கிட்டயே என்னை அனுப்பி வைச்சுட்டார்.” என்றான்.
“எனக்குப் புரியல இனி.” என்றாள்.
“இதுகூடத் தெரியாம எப்படி அஞ்சலி நீ ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ண.?” என்றான்.
“ப்ச்ச்.. விளையாடாத சொல்லு..” என்றாள்.
“நீ ரொம்ப ஆசையா கேட்டியே வேலூர். அதே ஊர் தான்.” என்றான்.
“என்னது.? வேலூருக்கா.?” என்று அதிர்ந்தவளை,
“ஏய்.. என்னாச்சு.? அதுக்கேன் நீ இப்படி அதிர்ச்சியாகற.?” என்றான்.
“அதே ஊருக்கு தான் நானும் வரப் போறேன் இனி. எனக்கும் ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துடுச்சு.” என்றாள்.
“ஏய்.. விளையாடாத. அதுக்குள்ள எப்படி உனக்கு கிடைச்சது.?” என்றான் இனியன்.
“உனக்கு எப்படி இவ்ளோ சீக்கிரம் கிடைச்சுதோ, அதே மாதிரி தான் எனக்கும். அந்தப் பரமசிவன் தான் அதைப் பண்ணான்னு கலெக்டர் சார் சொன்னாரு இனி.” என்றாள்.
அதைக் கேட்டு யோசித்தவன், “ரொம்ப அருமை. இனிமேல் தான் நாம ரெண்டு பேரும் ஜாக்கிரதையா இருக்கணும். அவன் நம்மள டார்கெட் பண்ணிட்டான். இனிமேல் என்ன நடக்குமோ தெரியாது.? ஆனா, நான் உனக்கு உறுதுணையா இருப்பேன். சரியா.? அதுக்குத்தான் கடவுளா பார்த்து உன்கூட என்னையும் அனுப்பி வைக்கறார்ன்னு நினைக்கிறேன்.” என்றபடி அவளை அணைத்துக்கொண்டான்.
அவனது அணைப்பில் பாதுகாப்பாய் உணர்ந்தாலும், ஏதோ ஒன்று மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. இனியனை ஏன் அவன் டார்கெட் செய்ய வேண்டும் என்று.? அதற்க்கான விடையுடன் இனி வேலூருக்கு பயணம் செய்யவிருக்கிறார்கள் இனியனும், அஞ்சலியும்...
(தொடரும்...)
Last edited: