Aathirai
Active member
அத்தியாயம் 19
அடுத்த நாள் இருவரும் சொன்னது போலவே, காலை 6 மணிக்கெல்லாம் குலதெய்வம் கோவிலுக்குக் கிளம்பி விட்டனர். திலகாவுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. இருந்தாலும் கிளம்பி அவர்கள் நிற்கும் போது,
“சரி, கோவிலுக்குப் போயிட்டு நேரா இங்க வீட்டுக்கு வந்துட்டு, அப்பறமா அவங்க வீட்டுக்குப் போயிட்டு வாங்க.” என்று மட்டும் சொன்னார்.
இது சொன்னதே பெரிய விஷயம் என்று எண்ணியவர்கள், “சரி மா. வீட்டுக்கு வந்துட்டு, டிபன் சாப்டுட்டு அப்பறமா அங்க போய்க்கிறோம்.” என்றான் இனியன்.
“ஆமா, அத்தை. நாங்க அப்படியே பண்றோம்.” என்றாள் அஞ்சலியும்.
அதற்க்குத் திலகா தலையை மட்டும் ஆட்டிவிட்டு உள்ளே சென்றார். அவர்களின் குலதெய்வம் கோவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 40 நிமிட பயணத்தில், 20 கி.மீ தொலைவில், ஜோலார்பேட்டை தாண்டிச் சென்றால், தேக்குப்பட்டு என்னும் இடத்தில் வீற்றிருக்கும் புத்து மாரியம்மன்.
சுயம்பு வடிவாய், நாகர் சிலை மற்றும் புற்றின் கீழே வீற்றிருக்கும் அந்த மாரியம்மனை தரிசித்தால், அனைத்து பிரச்சினைகளும் நீங்கி அனைவருக்கும் நல்லதே நடக்கும். அதே போல் அங்குள்ள புற்றின் மஞ்சள், பக்தர்களின் அனைத்து விதமான நோய்களை நீக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது.
இனியனே சென்று சில வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அஞ்சலி செல்வது இதுவே முதல் முறை. இருவரும் அங்கே 7 மணிக்கெல்லாம் சென்று சேர்ந்து விட்டனர். இருவரும் இறங்கி கை, கால்களை கழுவி விட்டு, கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்கள் அடங்கிய அர்ச்சனைத் தட்டை எடுத்துக்கொண்டு சென்றனர்.
அங்கே உள்ள பூசாரி நன்றாக இனியன் குடும்பத்திற்க்கு பழக்கமானவர் என்பதால், அவர்கள் வந்ததுமே அடையாளம் கண்டுபிடித்துவிட்டு அவர்களுக்கு அர்ச்சனை செய்து, அனைத்து பிரசாதங்களையும் வழங்கினார்.
மாரியம்மனை மனமார தரிசித்தனர். அஞ்சலி தன் மனதில் உள்ள குழப்பங்களையெல்லாம் அந்த அம்மனிடம் கொட்டித் தீர்த்தாள். அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. கண்ணைத் திறந்து அவள் பார்த்தபோது அம்மனின் தலையில் வைத்திருந்த பூ கீழே விழுந்தது. அம்மனின் அருளை நினைத்து பூரிப்பானாள். கண்டிப்பாக அனைத்தும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.
கிட்டத்தட்ட அரைமணி நேர தரிசனம் தான். முழுமையான, நிறைவான தரிசனத்தைக் கண்டு விட்டு இருவரும் கிளம்பினர். வழியில் செல்லும் போது, இனியன் அஞ்சலியிடம் கேட்டான்.
“என்னாச்சு அஞ்சலி.? ரொம்ப மனமுருகி வேண்டிக்கிட்டு இருந்த, அழுத மாதிரியும் தெரிஞ்சது.” என்றான்.
“ஆமா, இனி ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, மனசுக்குள்ள ஏதோ ஒண்ணு என்னைப் போட்டு அழுத்திட்டே இருந்தது. எல்லாத்தையும் கடவுள்கிட்ட சொல்லும் போது, ஆட்டோமேட்டிக்கா என்னையும் மீறி கண்ணீர் வந்துடுச்சு. இனி நடக்கப் போற எல்லாத்தையும் கடவுளே பார்த்துக்கட்டும்னு அந்த அம்மன் மேலயே பாரத்தைப் போட்டுட்டு வந்துட்டேன்.” என்றபடி அவனது கைகளைப் பிடித்தாள்.
வண்டியை ஓட்டிக்கொண்டே இருந்தவன், தன் கைகளைப் பிடித்த அவளது கையை எடுத்து, தன் நெஞ்சோடு அணைத்தவாறே முத்தமிட்டான். அவனின் காதல் எத்தனை ஆழமானது என்று அந்த ஒரு நிமிடம் உணர்ந்தாள் அவள்.
அப்படியே பேசிக்கொண்டே அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர். அதற்க்குள், திலகா காலை உணவைத் தயார் செய்திருந்தார். இனியனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.
எப்பொழுதும், இதுபோல் தனக்குப் பிடிக்காத ஒன்றை அவர்கள் செய்ய நேர்ந்தால், வேண்டுமென்றே சிலவற்றை செய்வது திலகாவின் பழக்கம். ஆனால், இன்றோ அவர்கள் வரும் போது, அனைத்தையும் தயார் செய்திருந்தது ஆச்சர்யத்தை அளித்தது.
நடராஜனுக்குக் கூட காத்திருக்காமல், “இனியா, வந்து சாப்பிடுங்க ரெண்டு பேரும். அவங்க வீட்டுக்குப் போகணும் இல்ல.?” என்று அழைத்தவரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர் அனைவரும். முக்கியமாக மாலதி.
அவர்கள் இருவரும் நேரமாகவே சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர். அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு வந்தார்கள் நடராஜனும், திலகாவும். அவர்கள் கிளம்பியதும், திலகா சமையல் கட்டுக்குள் நுழைந்தார்.
“என்ன தான் ஆச்சு இந்த அத்தைக்கு.? அவங்கள அந்த வீட்டுக்குப் போக வேண்டாம்னு தான சொல்லிட்டு இருந்தாங்க. திடீர்னு எப்படி இப்போ போயிட்டு வாங்கன்னு அனுப்பியே வைச்சுட்டாங்க.? இதுல என்னவோ இருக்கு. நம்மள மீறி எதுவோ ஒண்ணு நடந்திருக்கு. இல்லைன்னா இப்படியெல்லாம் நடக்காது. மாலதி நம்ம கை மீறி எல்லாம் போகுது. இதை என்னன்னு கேட்டு சரி பண்ணனும்.” என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டே சமையலறையில் இருந்த திலகாவிடம் சென்றாள்.
“என்ன அத்தை, உபசரிப்பெல்லாம் பலமா இருக்கு. நேத்து தான் அவங்கள அந்த வீட்டுக்குப் போகவேண்டாம்னு சொன்னீங்க. இப்போ என்னாச்சு திடீர்னு, அவங்கள இவ்வளவு சீக்கிரமா போயிட்டு வரச் சொல்லி அனுப்பி வைச்சுட்டீங்க.?” என்றாள் மாலதி.
“இதுல என்ன இருக்கு.? எல்லார் வீட்டுக்கும் போன மாதிரி அவங்க வீட்டுக்கும் போறதுல என்ன தப்பு.? அவங்க முன்னாடியே சொல்லிட்டுத் தான போனாங்க. அதே மாதிரி, நேத்தும் போன் பண்ணி ஒரு வார்த்தை மரியாதைக்கு சொல்லி அனுமதியெல்லாம் கேட்டாங்க. அவங்க அவ்வளவு தூரம் சொன்னதுக்கப்பறமும் நாம அனுப்பாம இருந்தா அது நல்லா இருக்காது. அதனால தான் நேரமாவே கோவிலுக்குப் போயிட்டு வந்ததும், கிளம்பச் சொன்னேன்.” என்றார் திலகா.
அவரது திடீர் முடிவை எதிர்பார்க்காத மாலதி, “அத்தை.. என்ன திடீர்னு இப்படியெல்லாம் பேசறீங்க.? உங்களுக்கு ஏன் புரிய மாட்டிங்குது.? நீங்க இப்படியெல்லாம் பண்ணா அதுக்கப்பறம் அவளும் சரி, அவங்க குடும்பத்திலும் சரி யாருமே உங்கள மதிக்க மாட்டாங்க.” என்றாள்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல மாலதி. உன்னோட வீட்டுக்கும், உனக்கும் என்ன செஞ்சேனோ, அதையே தான் அவளுக்கும் பண்ணனும்னு நினைக்கிறேன். நீ சொல்ற மாதிரி அவ படிச்ச பொண்ணு தான், கலெக்டர்ன்னு பெரிய பதவில இருக்கறவ தான். ஆனா, ஒருமுறை கூட அந்த விஷயத்த எனக்கு ஞாபகப்படுத்தினதோ, நீ சொன்ன மாதிரி ரொம்ப திமிரா இதுவரைக்கும் நடந்துக்கிட்டதோ கிடையாது. இதெல்லாம் இத்தனை நாளா நான் பார்த்த விஷயங்கள். யாரையுமே பார்க்கறத வைச்சு மட்டுமே எடை போடக் கூடாதுன்னு நான் இப்போ முழுசா புரிஞ்சுக்கிட்டேன். அதனால, நீயும் எல்லாத்தையும் புரிஞ்சு நடந்துக்கோ.” என்று திலகா பேசி முடிக்க, மாலதியின் முகத்தில் ஈயாடவில்லை.
அவரிடம் அதற்க்கு மேல் எதுவும் பேசிப் பயனில்லை என்று தோன்றியது. என்ன சொல்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள்.
“சூப்பர் திலகா.. சூப்பர்..” என்று கைகளைத் தட்டியபடியே உள்ளே வந்தார் நடராஜன்.
“இப்போ தான் நீ உண்மை என்னன்னு புரிஞ்சு பேசிருக்க. இவ்ளோ நாள் சில பேர் கொடுத்த அறிவில்லாத அறிவுரையால நீ சாவி குடுத்து ஆடுற பொம்மையா இருந்த. இப்போ தான், தெளிவான மனுஷியா மாறியிருக்க. இனிமேலும், யார் என்ன சொன்னாலும், அது உண்மையா, பொய்யான்னு தெரிஞ்சுட்டு, புரிஞ்சுட்டு நடந்துக்கோ. இனிமேல் நான் எதுவும் உனக்கு சொல்லிப் புரிய வேண்டியது இல்ல.” என்று சொன்னார் மாலதியை ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டே.
அவர் தன்னைத்தான் சொல்கிறார் என்று மாலதிக்கு நன்றாகவே புரிந்தது. இதற்க்கு மேல் அங்கே இருக்கக் கூடாது என்று அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மணிமேகலையின் வீட்டில் இருந்தனர் இருவரும். அவர்கள் வரப் போகிறார்கள் என்றதுமே, மணிமேகலையும், தெய்வானையும், நேரமே எழுந்து பலகாரங்கள் செய்து, அவர்கள் வரும் போது, அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று அனைத்து வேலைகளையும் செய்து முடித்திருந்தனர்.
அவர்கள் வந்ததும், இருவருக்கும் குடிக்க, இளநீர் பாயசம் செய்திருந்தார் மணிமேகலை. அதைக் குடித்ததும், “ரொம்ப நல்லா இருக்கு மா. எப்படி செய்யறீங்க இது.?” என்றான் இனியன்.
“அதெல்லாம் அத்தையோட ரகசியம். அத்தைக்கு ஸ்வீட் எல்லாமே சூப்பரா வரும். தனி டேஸ்ட் இருக்கும். நாங்க அப்போவெல்லாம் வரோம்னு தெரிஞ்சா இது மாதிரி ஏதாவது ஸ்பெஷல்லா செய்வாங்க. அதுவும் இந்த இளநீர் பாயாசம் என்னோட ஃபேவரைட் அதனால தான் அத்தை இன்னைக்கு இதே பண்ணிருக்காங்க.” என்றாள் அஞ்சலி.
அவள் சொல்லும் போதே அவளுடைய சந்தோஷம் தெரிந்தது. அதை ரசித்துக் கொண்டிருந்தான் இனியன்.
“சரி அத்தை வந்ததுமே கேட்கணும்னு நினைச்சேன். மாமா எங்க.? அன்னைக்கு ரிஷப்ஷனுக்கும் நீங்க மூணு பேர் மட்டும் தான் வந்தீங்க. மாமாவப் பார்த்தே ரொம்ப வருஷம் ஆச்சு. நாங்க கிளம்பறதுக்குள்ள மாமா வந்துடுவாரா அத்தை.?” என்று அஞ்சலி கேட்டதுமே, அவர்கள் மூவருக்கும் மிகவும் சங்கடமாகிப் போனது. அவருக்கு அஞ்சலியைப் பிடிக்காவிட்டாலும், அஞ்சலி சதாசிவத்தை மரியாதை நிமித்தமாக எப்பொழுதும் மதிக்கிறாள் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.
“மாமா, முக்கியமான வேலையா வெளிய போயிருக்காரு டா. கண்டிப்பா உங்களப் பார்க்க வந்திடறேன்னு சொல்லிருக்கார்.” என்றாள் மணிமேகலை.
அப்போதைக்கு அதுமட்டும் தான் சொல்ல முடிந்தது அவரால். அதன் பிறகு, வேலை விஷயங்களைப் பற்றி முருகப்பன், இனியனிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அவனும் அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் மணிமேகலையும், தெய்வானையும் மதிய விருந்தை ஆரம்பிக்க அடுக்களைக்குள் நுழைய, அஞ்சலியும் அவர்களுக்குத் துணையாக உள்ளே நுழைந்தாள். அவளை வேண்டாமென்று இருவரும் தடுத்தாலும், அவளாகவே காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள்.
மணிமேகலை அப்போதே கேட்டார். “ஜானகி இங்கயே வந்துட்டா அஞ்சலி. அன்னைக்குத்தான் இங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனா. பார்க்கவே ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. பழைய ஜானகியே இல்லை. ரொம்ப மாறிட்டா. என்னதான் அவ தப்பே பண்ணிருந்தாலும், கடவுள் இப்படி ஒரு சோதனைய அவளுக்குக் கொடுத்திருக்கக் கூடாது.” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அஞ்சலி நடந்த உண்மை இவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று நினைத்தாள். அதே போல், இவர்களுக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்றும் நினைத்தாள்.
“விதவையா, அவள இந்தச் சின்ன வயசுலயே பார்த்தது ரொம்பக் கொடுமையா இருந்துச்சு தெரியுமா.? தாங்காம உங்க அத்தையும், நானும் அழுதுட்டோம்.” என்று கண்களில் கண்ணீர் சிந்தினார் தெய்வானை.
“எல்லாத்தையும் சொன்னா, அஞ்சலி இல்லன்னா இன்னைக்கு நான் உயிரோட இருக்க முடியாதுன்னு. அந்த வார்த்தையைக் கேட்கும் போது எப்படி இருந்தது தெரியுமா.? இப்போவாவது அவளுக்கு உன்னோட அருமை புரிஞ்சதேன்னு நினைச்சோம். இங்க வீட்டுக்கே வரலாமேன்னு சொன்னோம். அவ அதுக்கு, நான் வளர்ந்த வீட்லயே இருக்கலாம்னு தோணுது அத்தை. அதனால, அங்கயே இருக்கேன்னு சொல்லிட்டா. அப்பப்போ நானும் போய் ஒரு தடவை பார்த்துட்டு வந்துடுவேன். பாவம் அவ தனியா இருக்கறத நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன பண்றது எல்லாம் அவளோட நேரம்.” என்று புலம்பினார் மணிமேகலை.
அஞ்சலிக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அமைதியாகவே நின்றிருந்தாள். கண்களில் மட்டும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த மணிமேகலை,
“ஏய். அஞ்சலி மா. எதுக்கு இப்போ அழற.? நாங்க வேற சும்மா இருக்காம உன்கிட்ட இதெல்லாம் சொல்லி உன்னையும் அழ வைச்சுட்டோம்.” என்றார்.
“பரவால்ல அத்தை. விடுங்க. நமக்குள்ள தான இதெல்லாம் பேசிக்க முடியும். மத்தவங்ககிட்ட இதெல்லாம் சொல்லத்தான் முடியுமா.? சொன்னா, அவங்களுக்கு நம்மளோட வலிதான் தெரியுமா.?” என்றாள் விரக்தியாக.
“சரியா சொன்ன கண்ணு. விடு எல்லாமே சரியாயிடும். எல்லாம் நேரம், காலம் தான்.” என்றார் தெய்வானை.
அவளும் அதை ஆமோதிப்பதாய் தலையாட்டினாள். பிறகு, எதையோ யோசித்தவளாய், “சரி அத்தை கேட்கணும்னு நினைச்சேன். அம்சா அக்காவுக்கு ரெண்டு குழந்தைங்க. அப்பறம் கதிர் மாமாவுக்கு எத்தனை குழந்தைங்க.? அவங்க இன்னும் ஆரணியிலேயே தான் இருக்காங்களா.?” என்று அடுக்கடுக்காய் கேள்வி கேட்டாள்.
அவள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மணிமேகலையும், தெய்வானையும் திணறிக்கொண்டிருந்தனர்.
“அத்தை, பாட்டி நான் உங்ககிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன். ஏன், நீங்க எதுவுமே சொல்ல மாட்டிங்கறீங்க.?” என்று திரும்பவும் கேள்வி கேட்டாள்.
அவர்கள் இருவருக்கும் அழுகையை அடக்க முடியவில்லை. அழுதுகொண்டு நின்றிருந்தவர்களை பதறியபடி பார்த்தாள் அஞ்சலி. அதற்க்கான காரணம் என்ன.? என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை.
(தொடரும்...)
Last edited: