கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 21

Aathirai

Active member
அத்தியாயம் 21

கதிரேசன் அவர்களைப் பார்த்துவிட்டதைப் பார்த்த அஞ்சலிக்கு ஒரு மாதிரியாக இருந்தது. கதிரேசனைத் தொடர்ந்து சதாசிவமும் உள்ளே வந்தார். அவரும் அவர்கள் இருவரைப் பார்த்ததும் கொஞ்சம் சங்கடமாக நினைத்தார்.

அஞ்சலியோ அந்த சங்கடத்தைத் தீர்க்கும் வகையில், “மாமா, எப்படி இருக்கீங்க.?” என்று பேசி சமாளித்தாள்.

அவரும் வேறு வழியில்லாமல், “நான் நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்க.? மாப்ள எப்படி இருக்கீங்க.?” என்று இனியனிடமும் கேட்க,

அஞ்சலிக்கு ஏற்பட்ட ஆச்சர்யத்தை யாராலும் வர்ணிக்க முடியாது. ஏனென்றால், தனக்கு விவரம் தெரிந்தவரை சதாசிவம் எப்பொழுதும் இது போல் பணிவாகவோ, மரியாதையுடனோ அவர்கள் யாரிடமும் பேசியது கிடையாது.

ஆனால், வாழ்வில் முதன்முறை இதுபோல் அதுவும், தங்களிடம் பேசுவது கண்டு சற்று ஆச்சர்யமாகவும், அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது.

“நல்லா இருக்கேங்க. நீங்க ரெண்டு பேரும் நலம்தானே.?” என்று இனியன் கேட்க இருவரும் தலையாட்டினர்.

அதற்க்குள் வெளியே நின்றபடி பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து வெளியே வந்தார் மணிமேகலை.

“ஏங்க. ஏன் வெளியே நின்னு பேசிட்டிருக்கீங்க. உள்ள வாங்க. அவங்க ரெண்டு பேரும் வந்து விருந்தே சாப்பிட்டாச்சு. நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ தாமதமா வரீங்க.” என்றபடியே உள்ளே வந்தவர், அவர்கள் இருவருக்கும் தண்ணீர் எடுத்து வர சமையலறைக்கு ஓடினார்.

மணிமேகலை எடுத்து வந்த தண்ணீரைக் குடித்தவர்கள் அவர்களுக்கு ஒரு சிறு புன்னகை ஒன்றை உதிர்த்தபடி அமர்ந்தனர்.

“தம்பி, இதுதான் என்னோட பையன் கதிரேசன்.” என்று மணிமேகலை சொல்ல, அவன் புரிந்தவனாக அவனைப் பார்த்துவிட்டு உடனே அஞ்சலியைப் பார்த்தான்.

அவள் எதுவும் பேசமுடியாமல் மௌனமாய் நின்று கொண்டிருந்தாள். “ம்ம்.. தெரியும் மா. அஞ்சலி என்கிட்ட எல்லாரைப் பத்தியும் ஏற்கனவே சொல்லிருக்கா. ஆனா, இப்போதான் இவர நேர்ல பார்க்கறேன். ஹலோ, நான் இனியன்.” என்று பரஸ்பர மரியாதையுடன் அவன் கை நீட்ட, கதிரேசனுக்கு குற்ற உணர்ச்சியில் வார்த்தைகள் மட்டுமல்ல, கை, கால்கள் கூட செயலிழந்தது போல் இருந்தது.

கஷ்டப்பட்டு அவனிடம் தன் கையைக் கொடுத்து சிரித்தான். “சரி நாங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சு. அப்படியே கிளம்பளாம்னு இருக்கோம். நீங்க எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க. அப்பறம் நெக்ஸ்ட் வீக் நாங்க வேலூர் போயிடுவோம். அதுக்கப்பறம் நீங்க எல்லாரும் அங்கயும் வரணும்.” என்று இனியன் சொல்ல,

“இருங்க மாப்ள, அதுக்குள்ள கிளம்பறேன்னு சொல்றீங்க.?” என்று சதாசிவம் சொல்ல,

“இல்ல, கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வீட்டுக்கு போக ரொம்ப நேரம் ஆயிடும். அப்பறம் நாளைக்கு ஒரு நாள் தான். சண்டே கிளம்பணும். அதனால தான்.” என்று சொல்ல, அதற்க்கு மேல் அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று விட்டு விட்டனர்.

“சரி அஞ்சலி மா. உடம்பைப் பார்த்துக்கோ. கலெக்டர்ன்னா வேலைப்பளு ரொம்ப அதிகமா இருக்கும்னு சொல்வாங்க. அதுக்காக வேலைய மட்டுமே பார்த்துட்டு இருக்காத. தம்பியையும் பார்த்துக்கோ. நீங்களும் தான் தம்பி. போலீஸோட வேலை அதுக்கும் மேல இருக்குமே. பார்த்து ரெண்டு பேரும் பத்திரமா இருங்க.” என்று அக்கறையுடன் சொன்னார் மணிமேகலை.

“கண்டிப்பா மா. நீங்க சொல்றது உண்மை தான். ஏதோ இந்த ஒரு வாரம் தான் எங்களுக்குக் கிடைச்சிருக்கிற ஒரு வாய்ப்பு. இனி நாங்க டியூட்டில ஜாயின் பண்ணிட்டா நாங்க ரெண்டு பேரும் பேசிக்கக் கூட நேரம் இருக்காது.” என்று சொல்லி சிரிக்க,

அந்தச் சிரிப்பில் அவர்கள் இருவரும் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று அப்போதுதான் அவர்கள் நினைத்தார்கள்.

“சரி, அப்பப்போ போன் பண்ணுங்க.” என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தனர். அதுவரைக்குமே கதிரேசனுக்கு பேச வாயே வரவில்லை. குற்ற உணர்ச்சி அவனை முழுமையாய் கட்டிப் போட்டு விட்டது.

இப்போது யோசித்து என்ன பயன்.? லாபத்தை மட்டுமே யோசித்து செயல்படும் மனங்களுக்கு, உணர்வு என்றால் என்ன.? என்பதை ஒரு கட்டத்தில் ஆண்டவன் உணர வைத்து விடுகிறார்.

இருவரும் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது, அஞ்சலி அமைதியாய் வர, இனியன் ஒரு பெரிய ஆலமர நிழலில் வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.

“என்னாச்சு இனி.? ஏன் வண்டியை ஓரமா நிறுத்திட்ட.?” என்றாள்.

“நீ ஏன் அமைதியாவே வர.? என்னாச்சு.? கதிர பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமா இருக்கா.?” என்று கேட்டான்.

அவன் கேட்டதும், அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வேறு எங்கோ பார்த்தபடி நின்றாள்.

“ஏய்.. நான் ஒன்னும் தப்பா கேட்கல. எனக்கு உன்னோட ஃபீலிங்க்ஸ புரிஞ்சுக்க முடியும். என்னதான் இருந்தாலும் ஃபர்ஸ்ட் லவ் இல்ல.?” என்றதும் அஞ்சலி அவனைப் பார்த்தாள்.

“இனி, ஒரு விஷயம் சொல்லவா.? லவ்ன்னா ரெண்டு பேருடைய மனசும், மனசும் ஒத்துப் போகணும். ஆனா, ஒருத்தருடைய ஃபீலிங்க்ஸ புரிஞ்சுக்காம அதைக் காயப்படுத்தின மனச நாம ஏன் நினைக்கணும்னு எப்பவோ அதை தூக்கிப் போட்டுட்டேன். அதோட வலி கூட எனக்கு இல்லாத அளவுக்கு நீ என்னைக் காதலிக்க இருக்கும் போது, அதை நினைச்சுப் பார்க்கறதுக்குக் கூட எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்ல. அப்படி இருக்கும் போது நான் ஏன் அதை நினைக்கப் போறேன்.?” என்றாள்.

“அதெல்லாம் சரி. அப்பறம் ஏன் நீ ஒரு மாதிரியா இருக்க.?” என்றான் புரியாமல்.

அப்போதுதான் கதிரேசனுக்கு நடந்ததைச் சொன்னாள்.

“ஹூம்ம்.. பாத்தியா அஞ்சலி. கடவுள் அவருக்கு சரியான தண்டனையக் குடுத்துட்டார். நீ வேணாம்னு போனார். இப்போ, வாழ்க்கையவே தொலைச்சுட்டு நிக்கறார். நாம என்ன பண்ண முடியும்.?” என்றான்.

“அப்படி யோசிச்சு என்னால விட முடியல இனி. அக்கா எனக்கு எத்தனையோ கஷ்டத்தக் குடுத்திருக்கா. ஆனா, அவள அன்னைக்கு அந்த நிலைமைல பார்த்தப்போ, என்னால அதை ஏத்துக்கவே முடியல. அதே மாதிரி தான் கதிர் மாமாவும். அவர் ஒரு கட்டத்துல எனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார் தான். ஆனா, அவர் அப்படிப் பண்ணலன்னா நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்டியே. அப்படி யோசிச்சா, அவர் அப்போ எனக்கு நல்லதுதான் பண்ணிருக்கார்ன்னு தோணுது.” என்றாள் அஞ்சலி.

“ஹூம்ம். இதுதான் நீ. உன்னால எப்பவும், யாருக்கும் கெட்டது யோசிக்க முடியாது. ஆனா, எல்லாருமே அப்படி யோசிக்கறதில்ல அஞ்சலி. அதுக்காக நீ உன் மனசைப் போட்டு குழப்பிக்காத. நமக்குக் கிடைச்சிருக்கறதே இந்த ஒரு வாரம். இதுலயும் இந்த வீண் சோகம் தேவையா.? எல்லாம் சரியாகிடும்னு உன் மனசுல ஒரு நம்பிக்கைய விதைச்சுக்கோ. அந்தக் கடவுள் மேல பாரத்தைப் போடு. அவரே எல்லாத்தையும் பார்த்துப்பார். நான் அப்படித்தான் இதுவரைக்கும் ஃபாலோ பண்ணிட்டு வரேன். இது எனக்கு எங்கப்பா சொல்லிக் கொடுத்தது. அந்த நம்பிக்கைல தான் நீயும் எனக்குக் கிடைச்ச.” என்று சொன்னவாறே, அவளது முகத்தைத் திருப்பினான்.

அவள் கண்களில் கிட்டத்தட்ட கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது. அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்.

“ஏய்.. லூஸா நீ.? எதுக்கு இப்போ அழற.? அழாத. நான் இருக்கேன்.” என்றான் இனியன்.

“நாம அக்காவை ஒரு தடவை பார்த்துட்டுப் போலாமா இனி.? அவ ஸ்கூல்ல தான் இருப்பா.” என்றாள்.

“சரி விடு, நம்ம ஸ்கூலுக்குத் தான.? நாமளும் போய் எத்தனை வருஷம் ஆச்சு.? அப்பாவும் அங்க தான் இருப்பார். போகலாம் வா.” என்று சொன்னவன் வண்டியைக் கிளப்ப, இருவரும் அவர்களின் பள்ளிக்குச் சென்றனர்.

அவர்கள் சென்றதும், பள்ளி இப்போது சற்று மாறுதலடைந்து இருப்பதைக் காண முடிந்தது. பள்ளி முழுவதும் புதிதாக பெயிண்ட் அடித்து பார்க்கவே நன்றாக இருந்தது. சுவர்கள் எங்கும், நிறைய தலைவர்கள் படங்களும், சில வாக்கியங்கள் அடங்கிய படங்களையும் காண முடிந்தது.

“அஞ்சலி இது நம்ம ஸ்கூல் தானா.? என்னால நம்பவே முடியல.” என்றான் இனியன்.

“ம்ம். ஆமா, இனி. எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு. ரொம்ப மாறியிருக்கு. ஆனா, நல்லாவும் இருக்கு.” என்றாள் அஞ்சலி.

அங்கிருந்த வாட்ச்மேன் இவர்களைப் பார்த்ததும் சந்தேகத்துடன் வந்தார். “சார், நீங்க யாரு.? எதுக்கு இந்நேரத்துக்கு ஸ்கூலுக்கு வந்திருக்கீங்க.?” என்று வழக்கமாக தன் சந்தேகக் கேள்வியைக் கேட்டார்.

“தாத்தா, என்னை அடையாளம் தெரியலையா.? நான் தான் தமிழ் வாத்தியார் நடராஜன் சாரோட வாலுப்பையன்.” என்றான் இனியன்.

அவன் சொன்னதும் தான் அவருக்கு சற்றே ஞாபகம் வர, “அடடே, இனியன் தம்பியா.? எவ்வளவு நல்லா வளர்ந்துட்டீங்க. அப்பா சொன்னார், நீங்க ஏதோ பெரிய போலீஸாயிட்டீங்கன்னு. வாழ்த்துக்கள் தம்பி. ஆமா, இது யாரு.? உங்க மனைவியா.?” என்றார் அவர்.

“தாத்தா இது யாருன்னு தெரியலையா.? அஞ்சலி தேவின்னு ஒரு பொண்ணு, பத்தாவது படிக்கும் போது மாவட்டத்துலயே முதல் மார்க் எடுத்துச்சே., ஞாபகம் இருக்கா.?” என்று அவருக்கு ஞாபகப்படுத்த,

“அட ஆமா தம்பி.” என்று சொல்ல,

“அது இந்தப் பொண்ணுதான். இப்போ பெரிய கலெக்டர் ஆயிட்டா. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.” என்றான்.

“ஓ.! அப்படியா சந்தோஷம் தம்பி. நல்லது நல்லது. இந்தப் பள்ளிக்கூடத்துல படிச்சு, நீங்கள்லாம் ஒரு நல்ல நிலைமைல இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. அதுதான் இந்தப் பள்ளிக்குப் பெருமை.” என்றார் சந்தோஷமாக.

“சரிங்க தாத்தா. அப்பா உள்ள இருக்காரா.?” என்றான் இனியன்.

“இருக்காரு. இன்னும் பழைய டீச்சர்க எல்லாருமே இருக்காங்க. போய்ப் பாருங்க.” என்று சொல்லி அவர்களை உள்ளே அனுப்பினார்.

உள்ளே செல்லும் போதே அவர்களுக்கு அந்தப் பழைய ஞாபகங்கள் தன்னைப் போல் வர ஆரம்பித்தன. தங்கள் வகுப்பை பள்ளி வளாகத்திலிருந்தே காண முடிந்தது.

கிட்டத்தட்ட இருவரும் ஆறாம் வகுப்பிலிருந்து ஒரே வகுப்பில் தான் படித்தனர் என்றாலும், அஞ்சலி இனியனைப் பார்த்த அளவு கூட, இனியன் அவளைக் கண்டிருக்க மாட்டான்.

“ஹூம்ம்.. நம்மோட பழைய கிளாஸெல்லாம் பார்க்கும் போது, திரும்பவும் அங்கயே போயிடலாம்ன்னு தோணுது அஞ்சலி. அதெல்லாம் ரொம்ப சந்தோஷமான நாட்கள் இல்ல.?” என்றான் இனியன்.

“ம்ம். ஆமா இனி. அப்போவெல்லாம் நீ பண்ற சேட்டை இருக்கே. அதோட சேர்த்து அந்தத் திமிர் இருக்கே. ஹூம்ம்.. உன்னைத் திட்டாத ஆளே இல்ல. என்னையும் சேர்த்து தான்.” என்றாள் அஞ்சலி.

“ஏன்.? நான் என்ன பண்ணேன்.?” என்று முழித்தான் அவன்.

“ம்ம்ம்.. பண்றதெல்லாம் பண்ணிட்டு எதுவுமே தெரியாத மாதிரி கேக்கற.? ஒரு டைம் நீயும், உன் சேட்டை ஃப்ரெண்ட்ஸூம் சேர்ந்து விளையாடும் போது, நம்ம கிளாஸ் பொண்ணு, என் ஃப்ரெண்ட் கோகிலாவத் தள்ளி விடல.? அதுக்கு அவ சண்டை போட்டான்னு, அவள எப்படியெல்லாம் பேசி, கிண்டல் பண்ணி அவள அழவே வைச்சிட்டீங்க. அந்த நாள் எனக்குக் கூட கோவம் வந்துச்சு. அவ்ளோ அநியாயம் பண்ணீங்கடா நீங்க.” என்றாள்.

“அப்படியெல்லாம் பண்ணோமா.? எனக்கு ஞாபகமே இல்லையே.?” என்றான் யோசித்தவாறு.

“உனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்.? இப்போ, அவளுக்கு போன் பண்ணிக் கேட்டா கூட அந்த நாள் நடந்ததை அப்படியே அச்சு பிசிராம சொல்லுவா தெரியுமா.?” என்றாள்.

“ஓ..” என்று சாதாரணமாக சொன்னான் அவன்.

“அப்பறம், ஒரு நாள் நம்ம கிளாஸ் பொண்ணு நர்மதா உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணாலே அதாவது ஞாபகம் இருக்கா.?” என்றதும், சற்று நினைவு திரும்பியவனாய் சிரித்தான் இனியன்.

“ஹூம்ம். எவ்ளோ அழகான பொண்ணு. நம்ம கிட்ட ப்ரப்போஸ் பண்ணிருக்கேன்னு கொஞ்சம் கூட உனக்கு அவளைப் பார்த்து பாவமாத் தெரியல. எப்படியெல்லாம் திட்டி அவமானப்படுத்தின. பாவம் அவ, அதனாலயே டி.சி வாங்கிட்டு வேற ஸ்கூலுக்குப் போயிட்டா.” என்றாள்.

“அவ ப்ரப்போஸ் பண்ணா, அதுக்கு நான் என்ன பண்றது.? எனக்கு அப்போ ஏனோ பொண்ணுங்களப் பார்த்தாலே அலர்ஜி. பிடிக்காது. இவ வந்து ப்ரப்போஸ் பண்ணதால பசங்க எல்லாரும் என்னைக் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்கன்னு தான், அப்படித் திட்டி அனுப்பிட்டேன். ஆனா, அதுக்கப்பறம் கொஞ்சம் ஃபீல் பண்ணேன். அது எப்போ தெரியுமா.? உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கப்பறம்.” என்றான்.

அவன் அந்த வார்த்தைகளைச் சொன்னதும், அவன் கண்களையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் அஞ்சலி. அவனும், அவளை பள்ளி நாட்களில் பார்த்த நினைவுடனேயே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஒரு நிமிடம் இருவரின் கண்களும் காதலைப் பரிமாறிக்கொண்டிருந்த வேளை,

“ஸ்கூல்ல இருந்துட்டு ரொமான்ஸ் எல்லாம் பண்ணக்கூடாது பா.. சின்னப் பசங்க பார்த்தா என்னாகறது.?” என்று ஒரு குரல் சொல்ல, அது வந்த திசையில் பார்த்தனர் இருவரும்.

(தொடரும்...)
 
Last edited:
Top